'இறந்தவர்கள் செவியேற்பார்கள்' என்ற பிழையான கருத்தை சமூகத்தில் கூறி வருபவர்கள், தங்கள் கூற்றிற்கு முன்வைக்கும் ஆதாரங்களை தொடராக நாம் பார்த்து வருகிறோம்;. அவர்கள் முன்வைக்கும் ஏனைய ஆதாரங்களையும், அவற்றிற்கான தக்க பதில்களையும் இந்தத் தொடரில் நோக்குவோம்.
வழிகேடர்களின் ஐந்தாவது ஆதாரம்:
அபுல்காஸிமுடைய உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீதாணையாக மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார். சமாதானம் செய்வார். குரோதத்தை அகற்றுவார். பொருளாதாரம் அவருக்கு முன்னால் எடுத்துக் காட்டப்படும். (ஆனால்) அவற்றை அவர் ஒப்புக் கொள்ளமாட்டார். எனது மண்ணறையின் அருகே நின்று அவர், 'முஹம்மதே!' என அழைப்பாராயின் அவருக்கு நான் பதில் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுறைரா(ரழி) நூல்: முஸ்னத் அபீ யஃலா 6584
இதிலிருந்து இவர்கள் முன்வைக்கும் வாதம்
////'இறந்தவர்கள் கேட்க மாட்டார்கள்' என்பது இஸ்லாமிய அடிப்படையாயின், ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? எனவே இந்த ஹதீஸிலிருந்து 'இறந்தவர்கள் செவியுறுவார்கள்' என்பது தெரிகின்றது.//////
எமது பதில்: மேற்குறித்த ஹதீஸின் ஆரம்ப பகுதி ஆதாரபூர்வமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 'எனது மண்ணறையின் அருகே நின்று அவர் முஹம்மதே! என அழைப்பாராயின் அவருக்கு நான் பதில் அளிப்பேன்' என்ற பகுதி பலவீனமானதாகும். அபூஹுறைரா(ரழி) அவர்களிடமிருந்து பல மாணவர்கள் ஹதீஸை அறிவிப்பு செய்கின்றனர். அவர்களில் எவருமே கூறாத ஒரு தகவலையே அபூஹுறைராவின் மாணவர்களில் ஒருவரான ஸயீத் அல் மக்புரி என்பவர் அறிவிப்பு செய்கின்றார். இவர் மரணிப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் மூளை குழம்பியவராக மாறிவிட்டார் என்ற விமர்சனமும் ஹதீஸ்கலை வல்லுனர்களுக்கிடையே உண்டு. அபூஹுறைராவிடமிருந்து இவரை விட நம்பகத்தன்மையிலும், மனனத்தன்மையிலும் சிறந்தவர்கள் இவர் அறிவித்த தகவலை அறிவிக்கவில்லை. இவர் அறிவித்திருப்பதும் மரணித்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்ற இஸ்லாமிய அடிப்படைகளுக்கு எதிராகவே அமையப் பெற்றுள்ளது. நாம் ஏலவே சுட்டிக்காட்டிய அல்குர்ஆனின் 27:80வது வசனம் கூட 'இறந்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள்' என்பதை அழுத்தம் திருத்தமாக உறுதி செய்கின்றது.
எனவே குறித்த ஆதாரம் பலவீனமானதாக இருப்பதால் இவர்களது வாதம் சேற்றில் நாட்டப்பட்ட கம்பு போன்று ஆகிவிடுகின்றது. இதுவே இவர்களின் இந்த ஆதாரத்திற்கான எமது பதிலாகும்.
******************************************************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்