"ஸலாத்துன் ஸலாமுன் ஹுமா ஸர்மதா'' என்று கவிதை வரி துவங்குவதற்கு முன்னால் ஓர் உரை, மவ்லிது கிதாபில் இடம் பெறுகின்றது.
அவரது அழகு வடிவெடுக்கும் நேரம் நெருங்கி - அவரது பூரண ஒளி பட்டு உலகம் பிரகாசிக்கவிருக்கும் வேளையில் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் பாரெங்கும் பரவியது. அன்னை ஆமினாவுக்கு ஓர் ஒளிக் கற்றை தோன்றியது. அதில் சிரியா, புஸ்ரா கோட்டை தெரிந்தது. கிஸ்ரா அரசவை மண்டபம் உடைந்து ஆடியது. சாவா என்ற ஏரி வற்றியது. பாரசீகர் தன் பற்றுதலுடன் வணங்கும் தெய்வமான பற்றி எரியும் நெருப்பு நூர்ந்து போனது. கடுகடுத்த அதன் புஜ பல பராக்கிரமசாலிகள் பணிந்து விட்டனர். அவர்களது பிறப்பு கண்டு பயந்து நடுங்கி சிலைகள் தலை கீழாகக் குப்புறக் கவிழ்ந்தன. இஸ்லாமிய மார்க்கத்தின் நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டன. மகிழ்ச்சியும், மலர்ச்சியும் பரவியது. எட்டு திக்குகளிலும் தேர்வு செய்யப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒளி பட்டு மின்னின.
இவ்வாறு ஒரு நீண்ட வர்ணனையை இந்த மவ்லிது வரிகள் தாங்கி நிற்கின்றன.
மவ்லிதுகளில் இடம் பெற்றுள்ள எத்தனையோ கட்டுக் கதைகளில் இதுவும் ஒன்று என நாம் இதை விட்டு விட முடியாது. ஏனெனில் ஆமினா அம்மையார் கண்ட ஒளி என்ற இந்தச் சம்பவத்தை மிகப் பெரிய அற்புதங்களில் ஒன்றாக மக்கள் நம்பி வருகின்றார்கள். ஆலிம்கள் இவற்றை வித விதமாக வர்ணித்து மேடைகளில் பேசி வருகின்றார்கள். இந்தக் கருத்தில் சில செய்திகளும் ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றுள்ளன.
சாதாரணமாகவே முஃஜிஸாத் எனும் அற்புதங்கள் விஷயத்தில் வரம்பு மீறும் நம் சமுதாயத்திற்கு இது போன்று சில செய்திகளும் ஆதாரமாகக் கிடைத்து விட்டால் அதை அவர்கள் ஈமான் கொள்வதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எனவே இந்த அளவுக்கு மக்களிடம் முக்கியத்துவம் பெற்றுள்ள செய்தியாக இருப்பதால் இதைப் பற்றி நாம் சற்று விரிவாக ஆராய வேண்டியுள்ளது.
ஆமினா கண்ட ஒளி சம்பவம் உண்மையா? என்று நாம் தேடிப் பார்க்கும் போது இது தொடர்பான செய்தி புகாரியின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரியில் நபித்துவத்தின் அடையாளங்கள் என்ற தலைப்பின் கீழ் இடம் பெறுவதைக் காண முடிகின்றது.
1. ஆமினா அம்மையார் சிரியாவின் புஸ்ரா ஒளியைப் பார்த்தது,
2. கிஸ்ரா அரசவை ஆட்டம் கண்டது,
3. சாவா ஏரி வற்றியது,
4. பாரசீக நெருப்பு அணைந்தது
ஆகிய நிகழ்வுகளை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் சில நூற்களில் பதிவாகியுள்ள சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி கொண்டு வருகின்றார்கள். அவற்றை இப்போது நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஆகிய நிகழ்வுகளை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் சில நூற்களில் பதிவாகியுள்ள சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி கொண்டு வருகின்றார்கள். அவற்றை இப்போது நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முதல் ஹதீஸ்.
"நான் நபி (ஸல்) அவர்களைப் பெறும் வேளையில் பிரசவ வேதனை ஏற்பட்ட போது, ஓர் காட்சியைக் கண்டேன். வானத்து நட்சத்திரங்கள் என் மேல் விழுந்து விடும் என்று நான் சொல்லும் அளவுக்குக் கீழே இறங்கக் கண்டேன். பிள்ளை பெற்றதும் என்னை நோக்கி வந்த ஒளியினால் நாங்கள் இருந்த வீடு பிரகாசித்தது. நான் காணும் பொருளெல்லாம் ஒளியாகவே காட்சியளித்தது'' என்று ஆமினா அம்மையார் எனது தாயாரிடம் கூறியதாக எனது தாயார் எனக்கு அறிவித்தார் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ் கூறுகின்றார். இந்தச் செய்தி தப்ரானியில் பதிவாகியுள்ளது.
இந்தச் செய்தியை ஹாபிழ் ஹைஸமீ அவர்கள் மஜ்மஉஸ் ஸவாயிதில் பதிவு செய்து விட்டு, இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல் அஸீஸ் பின் இம்ரான் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று குறிப்பிடுகின்றார்கள்.
இந்தச் செய்தியை இமாம் தப்ரானி அவர்கள் தமது அல்முஃஜமுல் கபீரில் 355, 457 ஆகிய எண்களில் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையிலும் அப்துல் அஸீஸ் பின் இம்ரான் என்பவர் தான் இடம் பெறுகின்றார்.
எனவே இந்தச் செய்தி சரியானதல்ல.
இரண்டாவது ஹதீஸ்.
நான் அல்லாஹ்வின் அடியான். நபிமார்களின் முத்திரையாவேன். (அப்போது) நிச்சயமாக ஆதம் தனது களி மண்ணுக்கிடையில் இருந்தார். இதைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கின்றேன். நான் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையும், ஈஸா (அலை) அவர்களின் நற்செய்தியும், என் தாய் கண்ட காட்சியும் ஆவேன். அவ்வாறு தான் நபிமார்களின் அன்னையர் காண்பார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரை அவர் பெற்ற போது ஓர் ஒளி அவருக்குப் பிரகாசித்தது. அதில் சிரியாவின் கோட்டைகள் தெரிந்தன.
அறிவிப்பவர் : இர்பாள் பின் சாரியா நூல்: அஹ்மத் 16525.
இந்த அறிவிப்பில் ஸயீத் பின் சுவைத் அல் கலபீ இடம் பெறுகின்றார். இவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள், "இவரிடமிருந்து முஆவியா பின் ஸாலிஹ் அறிவிக்கும் ஹதீஸ் சரியானதல்ல'' என்று குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: தஃஜீலுல் மன்ஃபஆ).
"ஸயீத் பின் சுவைத்தைத் தவிர மற்றவர்கள் சரியானவர்கள்'' என்று ஹைஸமீ அவர்கள், மஜ்மஉஸ் ஸவாயிதில் தெரிவிக்கின்றார்கள்.
இவருடைய ஹதீஸ் தொடரப் படலாகாது என்று இமாம் புகாரி குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: லிஸானுல் மீஸான்).
இவரைத் தவிர இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில், அப்துல் அஃலா பின் ஹிலால் அஸ்ஸுலமீ என்பவர் இடம் பெறுகின்றார்.
இவரைப் பற்றிய எந்த விபரமும் கிடைக்காததால் இவர் அறியப்படாதவர் என்று அல்இக்மால் எனும் நூலில் அதன் ஆசிரியர் குறிப்பிடுவதை நாம் காணலாம்.
இந்த ஹதீஸ் ஹாகிமில் 3566, இப்னு ஹிப்பானில் 6404, தப்ரானி அல்முஃஜமுல் கபீரில் 629, பைஹகீயின் ஷுஃபுல் ஈமானில் 1285 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.
இவை அனைத்திலும் பிரச்சனைக்குரிய இந்த இரு அறிவிப்பாளர்களும் இடம் பெறுகின்றார்கள். எனவே இந்த ஹதீசும் பலவீனமானதாகும். இதே ஹதீஸ் பஸ்ஸாரில் இடம் பெற்றுள்ளதாக ஹைஸமீ குறிப்பிட்டாலும் நாம் தேடிப் பார்த்த வரையில் முஸ்னத் பஸ்ஸாரில் இந்த ஹதீஸ் கிடைக்கவில்லை.
முன்றாவது ஹதீஸ்.
"அல்லாஹ்வின் நபியே! உங்களின் விஷயத்தின் துவக்கம் எப்படி?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, "நான் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையும், ஈஸாவின் நற்செய்தியுமாவேன். எனது தாயார் (நான் பிறக்கும் போது) ஒளி தோன்றக் கண்டார்கள். அந்த ஒளியின் வெளிச்சத்தில் சிரியாவின் கோட்டைகள் தெரிந்தன'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூ உமாமா நூல்: அஹ்மத் 21231.
இந்தத் தொடரில் ஃபரஜ் பின் பலாலா என்பவர் இடம் பெறுகின்றார். இவரைப் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ கூறுவதாக அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
இவர் சிரியாவாசிகள் வழியாக அறிவித்தால் பரவாயில்லை என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார். இந்த ஹதீஸை இவர் சிரியாவாசிகள் வழியாக அறிவித்திருந்தாலும் இவரைப் பற்றிய இப்னு ஹிப்பானின் விமர்சனம் மிகக் கடுமையானதாகும். அறிவிப்புத் தொடர்களை இவர் புரட்டி விடுவார். பலவீனமான ஹதீஸ்களின் செய்திகளை வெட்டி, சரியான தொடர்களில் ஒட்டி விடுவார். இவரை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற இப்னு ஹிப்பான் கூறுகின்றார். (நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்).
இந்த விமர்சனத்தை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஹதீஸ் கலையில் ஈடுபடுவோரிடம் இருக்கக்கூடாத மிகப் பெரிய பாதகமான வேலையாகும்.
எனவே மேற்கண்ட விமர்சனங்களின் அடிப்படையில் முஸ்னத் அஹ்மதில் இடம் பெறும் இந்த அறிவிப்பும் பலவீனமாகி விடுகின்றது.
நான்காவது ஹதீஸ்.
ஆமினா அம்மையார் ஒளியைக் கண்டது தொடர்பான செய்தி அப்துல் அஃலா பின் ஹிலால் சுலமி அல்லாத வழியில் அஹ்மதில் 16538வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.
ஆனால் அதில் மேலே நாம் விமர்சனம் செய்துள்ள ஸயீத் பின் சுவைத் இடம் பெறுகின்றார்.
அவரைத் தவிர அபூபக்ர் என்ற புகைர் பின் அப்துல்லாஹ் பின் அபீ மர்யம் அல்கஸானி என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகின்றார். அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா, அபூஹாத்தம், அபூசுர்ஆ, தாரகுத்னீ ஆகியோர் இவரைப் பலவீனமானவர் என்று கூறுகின்றார்கள். எனவே அஹ்மதின் இந்த ஹதீஸ் பலவீனமானதாகி விடுகின்றது.
ஐந்தாவது ஹதீஸ்.
அல்லாஹ்வின் தூதரே! உங்களைப் பற்றி எங்களிடம் தெரிவியுங்கள் என்று (நபித் தோழர்கள்) கேட்ட போது, எனது தந்தை இப்ராஹீமின் பிரார்த்தனை ஆவேன். ஈஸாவின் நற்செய்தியாவேன். எனது தாயார் என்னைச் சுமந்து கொண்டிருந்த போது அவரிடமிருந்து ஓர் ஒளி கிளம்பியது. அதற்காக புஸ்ரா பிரகாசித்தது என பதிலளித்தார்கள் என்று நபித்தோழர்களிடமிருந்து காலித் பின் மிஃதான் வழியாக அந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது.
இதே கருத்தைத் தாங்கிய ஹதீஸ் ஹாகிமில் (4173) இடம் பெறுகின்றது.
இந்த அறிவிப்பாளர் தொடரில் அஹ்மத் பின் அப்துல் ஜப்பார் என்பவர் இடம் பெறுகின்றார்.
நான் அவரிடமிருந்து ஹதீஸைப் பதிவு செய்தேன். அவர் மீது மக்களிடம் விமர்சனம் அதிகமாகி விட்டதால் அவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிப்பதை நிறுத்தி விட்டேன் என்று இப்னு அபீஹாத்தம் தெரிவிக்கின்றார். இவர் வலுவானவர் இல்லை என்று மதீன் தெரிவிக்கின்றார். இவர் வலுவானர் இல்லை. இவரை இப்னு அக்தா விட்டு விட்டார் என்று அபூ அஹ்மத் அல்ஹாகிம் தெரிவிக்கின்றார்.
(நூல்: தஹ்தீப் அத்தஹ்தீப்).
ஆறாவது ஹதீஸ்.
நபித் தோழர்களிடமிருந்து காலித் பின் மிஃதான் வழியாக, சவ்ர் பின் யஸீத் மூலம் இது போன்ற செய்தியை அறிவிப்பதாக இப்னு இஸ்ஹாக் அறிவிக்கின்றார் என ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இறுதியாகக் கொண்டு வருகின்றார்கள். அதில் சிரியாவில் உள்ள புஸ்ரா அவருக்காகப் பிரகாசித்தது என்று உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் இப்னு இஸ்ஹாக் என்பவர் "முதல்லிஸ்'' ஆவார். அதாவது அறிவிப்பாளரை மறைத்து விட்டு அறிவிப்பவர் ஆவார். இந்த ஹதீஸை இவர் அது போன்ற தரத்தில் அறிவித்திருப்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இப்படி ஆமினா அம்மையார் கண்ட ஒளி தொடர்பான ஹதீஸ்கள் அனைத்தும் குறைகள் உள்ளதாகவும், கோளாறுகள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளன.
கிஸ்ரா ஆட்டம் கண்டது, பாரசீக நெருப்பு அணைந்தது, சாவா ஏரி வற்றியது என மஃரிபத் ஸஹாபாவில் ஹாபிழ் இப்னு ஹஜர் கொண்டு வருகின்ற செய்திகளும், பிதாயா வந்நிஹாயாவில் ஹாபிழ் இப்னு கஸீர் கொண்டு வரும் செய்திகள் அனைத்தும் ஏற்கத் தக்கவையாக இல்லை. இதற்குக் காரணம், இந்தச் சம்பவம் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளதோ அங்கெல்லாம் இடம் பெறும் மக்ஸூம் பின் ஹானி அல் மக்சூமி என்பவர் தான். இவரை மையமாக வைத்துத் தான் இந்தச் சம்பவங்கள் அனைத்தும் பின்னப் பட்டிருக்கின்றன. இவர் நூற்றி ஐம்பது வருடங்கள் வாழ்ந்திருக்கின்றார்.
கிஸ்ராவின் அரசவை மண்டபம் ஆடியது. அதிலிருந்து 14 திண்டுகள் கீழே விழுந்தன. ஆயிரம் ஆண்டுகளாக அணையாத ஜோதி அணைந்து போனது. சாவா ஏரி வற்றிப் போனது. நீதிபதி ஒருவர் கண்ட கனவில், தள்ளாத ஒட்டகம் ஒன்று காற்றாய் பறக்கும் குதிரையை இழுத்துக் கொண்டு, ஒரு நொடியில் திஜ்ஜா நதியைத் தாண்டி சிரியாவின் பட்டி தொட்டிகளெல்லாம் பரந்து விரிந்து சென்றது. இந்நிகழ்வு காலையில் எழுந்த கிஸ்ராவின் கதியைக் கலக்கியது. இதற்குக் கிஸ்ரா மன்னன் விளக்கம் தேடிய போது ஆட்சி அரியாசனத்தின் அஸ்தமன அறிகுறியாக அரபுக் குலத்தில் ஒருவர் தோன்றப் போகின்றார் என்ற பதில் பண்டிதர்கள் மூலம் கிடைக்கின்றது.
இவ்வாறு பிதாயா வந்நிஹாயா விலும், இதை விட சுருக்கமாக இஸாபாவிலும் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் நபி (ஸல்) அவர்கள் பிறந்த போது நடந்த அற்புதம் என்று நூற்றி ஐம்பது ஆண்டு வாழ்ந்த மக்சூம் பின் ஹானி அல்மக்சூமி என்பவரால் அறிவிக்கப் படுகின்றது.
ஒரு வாதத்திற்கு இது ஆதாரப்பூர்வமான சம்பவம், இதன் அறிவிப்பாளர்கள் ஆதாரப் பூர்வமானவர்கள் என்று வைத்துக் கொண்டு நாம் பார்த்தாலும், சிந்தித்துப் பார்த்தால் இந்தச் செய்தி சரியானதல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் பிறக்கும் போது, அதாவது இந்த அதிசயம் நடக்கின்ற போது இவர் ஒரே சந்தர்ப்பத்தில் மக்காவிலும், சிரியாவிலும் இருந்திருக்க வேண்டும். அப்போது தான் இதை இவ்வாறு அறிவிக்க முடியும்.
இல்லாவிட்டால் அல்லாஹ் வஹீயின் மூலம் தனது தூதர் வழியாக அறிவித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட சம்பவத்தில் அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் இதை அறிவிக்கின்றார்களா? என்று பார்த்தால் இல்லை.
எனவே இது எந்த நூலில் அரங்கேறியிருந்தாலும் அது ஆதாரப்பூர்வமானது அல்ல! அறிவுப்பூர்வமானதல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இப்படிப் பழுது பட்ட, பாதுகாக்கப்படாத, ஐயத்திற்கும் ஆட்சேபணைக்கும் உரிய சம்பவம் தான் மவ்லிதின் ஹிகாயத்தாக இடம் பெற்றுள்ளது.
இதில் மவ்லிது ஆசிரியர்,
பாரசீகத்தின் கடுகடுத்த வீரர்கள் பணிந்தனர். அவர்களின் பிறப்பை ஒட்டிய பயத்தால் சிலைகள் தலைகீழாகக் கவிழ்ந்தன. இஸ்லாமிய மார்க்கத்திற்காக சின்னங்கள் நிலை நாட்டப்பட்டன என்று தனது பொய்க் கலவையையும் சேர்த்து இதன் ரசனையை மெருகூட்டி விடுகின்றார்.
யாநபி பைத்துக்கு முந்தி இடம் பெறும் உரையில்,
நபி (ஸல்) அவர்களை ஆமினா சுமந்த போது கடினத்தையோ, கஷ்டத்தையோ அவர் உணரவில்லை. எப்படி அவர் பிரசவ வேதனையை அனுபவிக்க இயலும்? அவர் வானத்திலும், பூமியிலும் சிறப்பு மிக்க ஒருவரையல்லவா கருவில் சுமந்திருக்கின்றார்? அவர்கள் வருகை நெருங்கிய போது அவரது ஒளியில் உலகம் பிரகாசிக்கவிருக்கும் நேரத்தில் பிரசவத்திற்குக் கொஞ்ச நேரமே எஞ்சியிருக்கையில், கண்கள் சிறிது உறக்கத்தைத் தழுவியதும் கனவில் ஒருவர் தோன்றினார். ஆமினாவே! மக்களில் சிறந்தவரை, நேரான வழியின் கதிரவனைச் சுமந்திருக்கின்றாய்! பிள்ளை பெற்றதும் முஹம்மத் என்று பெயர் வை என்று அவர் கூறினார்
என்று இந்தப் பொய் சம்பவம் அளக்கின்றது.
மேற்கண்ட இந்த உரைகளில் நபி (ஸல்) அவர்கள் பிறந்ததும், ஒரு பேரற்புதம் நடந்ததாக இந்தக் கதாசிரியர்கள் கூற வருகின்றார்கள்.
இப்படி ஒரு பேரற்புதம் நடந்திருந்தால் இது மக்கள் மனதில் நன்கு பதிவாகியிருக்கும். பிறந்த தினத்திலிருந்தே நபி (ஸல்) அவர்களை ஓர் அதிசயப் பிறவியாக மக்கள் பார்த்திருப்பார்கள். தன்னை ஓர் இறைத் தூதர் என்று மக்கள் மன்றத்தில் அவர்கள் பிரகடனப் படுத்தும் போது எதிர்ப்புப் பேரலைகளைச் சுமந்திருக்க மாட்டார்கள்.
அதிலும் குறிப்பாக இந்த அற்புதங்கள் நடந்திருந்தால் மற்றவர்களை விட அதிகமாக நபி (ஸல்) அவர்களது குடும்பத்தாருக்குத் தான் மிகவும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
தனது சகோதரர் அப்துல்லாஹ் வுக்கு முஹம்மத் என்ற குழந்தை பிறந்தது என்ற செய்தியைச் சொல்லி வந்த அடிமைப் பெண்ணை உரிமை விட்ட அபூலஹப் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியானதும் முதன் முதலில் மண்ணை அள்ளி வீசி எறிகின்றான்.
இந்த நிகழ்வெல்லாம் நிரூபிக்கும் செய்தி, முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறக்கும் போது எல்லோரையும் போன்று சாதாரணமாகப் பிறந்தார்கள் என்பது தான். வித்தியாசமாகப் பிறந்திருந்தால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரச்சாரப் பணி பிரச்சனையாக அமைந்திருக்காது.
பிரச்சாரமும் பிரச்சனையும்.
இன்னும் சொல்லப் போனால் நபி (ஸல்) அவர்களிடம் மக்கத்து காஃபிர்கள் எதிர்பார்த்தது அற்புதத்தைத் தான்.
"இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர். (அல்குர்ஆன் 25:7).
நபி (ஸல்) அவர்கள் அதிசயப் பிறவியாக இல்லாமல் மற்றவர்களைப் போல் மனிதத் தன்மையில் இருந்தது தான் மக்கத்து காஃபிர்கள் சத்தியத்திற்கு வருவதற்குத் தடைக் கல்லாக அமைந்திருந்தது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். கீழ்க்காணும் வசனமும் இதை உறுதி செய்கின்றது.
"மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?'' என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது. (அல்குர்ஆன் 17:94).
நபி (ஸல்) அவர்கள் பிறந்த போது வானத்து நட்சத்திரங்கள் மண்ணகத்திற்கு வந்து விடவில்லை; மண்ணகத்துப் பாலைவனம் சோலை வனமாக மாறி விடவில்லை என்பதை இந்த வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
அடுத்து, ஆமினாவின் பிரசவம் மிக இலகுவாக இருந்தது என்ற விபரமும் பொய்யை மூலதனமாகக் கொண்டது தான். ஏனெனில், உலகத்திலேயே மிக மிக அற்புதக் குழந்தையாகப் பிறந்தவர்கள் ஈஸா (அலை) அவர்கள். தந்தை இல்லாமல் மர்யமின் கருவில் அல்லாஹ் அவர்களை உருவாக் கினான். அவர்கள் பிறந்தவுடன் பேசவும் செய்கின்றார்கள். இத்தகைய அற்புதத் தூதரை மர்யம் (அலை) அவர்கள் பெற்றெடுக்கும் போது நடந்ததை அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.
பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 19:22,23).
தான் மரணித்திருக்கக் கூடாதா? என்று அன்னை மர்யம் (அலை) அவர்கள் புலம்பும் அளவுக்கு எல்லாப் பெண்களையும் போல் பிரசவ வேதனை வாட்டி எடுத்திருக்கின்றது என்று சொல்லும் போது மற்றவர்கள் இதில் விதிவிலக்கு பெறுகின்றார்கள் என்று கூற முடியாது. ஆக இதுவும் பித்தலாட்டமாகும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
எனவே நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் இப்படி இல்லாத பொல்லாத சம்பவங்களைச் சேர்ப்பது கொடிய நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்பதால் இந்தப் பொய்க் களஞ்சியமான சுப்ஹான மவ்லிதை ஓதி, சூடான நரகத்திற்குச் சென்று விடாமல் நம்மைக் காத்துக் கொள்வோமாக!
**************************************************
மேலும் விரிவாக தெரிந்துகொள்ள
அல்லாஹ்வின் ஒளியால் நபிகளார் படைக்கப்பட்டார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மீலாதும் மவ்லிதும் எனும் வீடியோ உறைய காண இங்கே கிளிக் செய்யவும்
மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார் என அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார் என அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
ஃபாத்திமியீன்களின் ஆட்சி காலத்தில் தான் மௌலூது ஆரம்பிக்கப்பட்டதா அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்
முஹைய்யத்தீன் மெளலூதின் சின்ன துஆ காண இங்கே கிளிக் செய்யவும்
அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்
மீலாது விழாவின் பரினாம வளர்ச்சி காண இங்கே கிளிக் செய்யவும்
நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா? பதிலை காண இங்கே கிளிக் செய்யவும்
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02 காண இங்கே கிளிக் செய்யவும்
மவ்லூத் மறுப்புக்கான காரணத்தை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
தூதரை எவ்வாறு மதிப்பது ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
ஹஸ்ஸான் ரலியின் கவிதை மௌலிதுக்கு ஆதாரமா காண இங்கே கிளிக் செய்யவும்
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02 காண இங்கே கிளிக் செய்யவும்
மவ்லூத் மறுப்புக்கான காரணத்தை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
தூதரை எவ்வாறு மதிப்பது ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
ஹஸ்ஸான் ரலியின் கவிதை மௌலிதுக்கு ஆதாரமா காண இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்