"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மௌலூதும் கேலியும் கிண்டலும்

சுப்ஹான மவ்லீதின் முதல் பாடலான "அஸ்ஸலாமு அலைக்கும்'' என்ற பாடலைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!
ஒருவருக்கு ஸலாம் கூறுவதாக இருந்தால் ஒன்றிரண்டு தடவை அல்லது மூன்று தடவைகள் கூறலாம். இது தான் ஹதீஸிலும் நடைமுறை வழக்கிலும் இருக்கிறது. மூன்று தடவைக்கு மேல் கூறினால் என்னாகும்? நீங்களே யோசியுங்கள். கேலியாகவும் நையாண்டியாகவும் ஆகி விடும். அப்படித் தான் அந்தப் பாடலும் அமைகிறது.
உதாரணமாக, ஒரு பள்ளியில் பணி புரியும் ஜிப்பா, தலைப்பாகை அணிந்த பேஷ் இமாமை நோக்கி, ஒருவரோ அல்லது பலரோ நின்று கொண்டு ராகம் போட்டு, "ஜிப்பா போட்ட இமாமே! ஸலாமலைக்கும். தலைப்பாகை கட்டிய இமாமே! ஸலாமலைக்கும். பள்ளியின் அழகான தாடியுள்ள ஆலிம்ஷாவே! ஸலாமலைக்கும்'' என்று அவர் எந்த கோலத்தில் இருக்கிறாரோ அதையெல்லாம் சொல்லி ஸலாம் ஸலாம் என்று சொன்னால் எப்படி இருக்கும்? நையாண்டியாக, கேலியாக இருக்குமல்லவா?

இவ்வாறு தானே மவ்லூத் பாடலிலும்  படிக்கிறார்கள். ஒருவரிடம் உள்ளதை உள்ளபடியே  சொல்லும் போது கூட, இவ்வாறு தொடர்ந்து கூறினால் கேலியாகத் தோன்றுவதோடு கோபமும் வேகமும் ஏற்படும். அதிலும் இல்லாததையும் பொல்லாததையும் கூறும் போது கேட்கவே வேண்டாம்.
இவ்வாறு நபியவர்களைப் பாôர்த்து சொல்லக் கூடாத, படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கு நபியவர்களை ஒப்பாக்கி, "அஸ்ஸலாமு அலைக யாமுப்ரிஸ் ஸகாமி'' (நோய் நீக்குபரே உமக்கு ஸலாம்)  "யாஜாலில் குரூப்'' (கஷ்டத்தைப் போக்குபவரே உமக்கு ஸலாம்) என்றெல்லாம் முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கிக் கூறுவதைப் பார்க்க முடிகிறது.

ஆனால் நபியவர்களோ தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்ற போது, அல்லாஹ்வை நோக்கி, "நீயே குணப்படுத்துபவன். உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் எதுவுமில்லை'' (ஹதீஸ் சுருக்கம் புகாரீ 5675) என்று கூறியிருக்க அதற்கு மாற்றமாக அபத்தமாகப் பாட்டு படிப்பது எப்படிப் புகழ்வதாக ஆக முடியும்?
அது போன்றே மரியாதைக்காக  நின்று ஓதும் மவ்லூத் பாடல்களில் யா குத்பா என்ற பாடலிலும்  நபி (ஸல்) அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. அநதப் பாடலின் வரிகள் இதோ:

ஸல்லல் இபாஹு மதா மல் கவ்சுல் அஃலமு காம்

அலா முஹம்ம தினில் ஆலீ லி கைரி மகாம் 

மகா ரட்சகர் என்ற பொருளைக் கொண்ட கவ்ஸுல் அ,ஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அருள் புரியட்டும் என்பதே இதன் கருத்து. 

நபியவர்களின் தரத்தையும் தகுதியையும் குறைக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது போன்று இந்தப் பாடல் இருக்கிறது.
நபி (ஸல்) அவர்களது புகழ் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அப்துல் காதிர் ஜீலானிக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் என்று கூறினால் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த மவ்லிதை எழுதியவர் திட்டமிட்டு பெருமானாரை இழிவு படுத்தியிருக்கின்றார். முஹம்மத் (ஸல்) அவர்களை விட முஹய்யித்தீனை உயர்வாக எழுதியிருக்கின்றார்.
இதுபோன்ற பாடலை வைத்துத் தான் நபியைப் புகழ்வதாக சிலர் கூறுகிறார்கள். இப்படிப் பாடுவது நபியவர்களை இழிவு படுத்துவதாகவே ஆகும்.
நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி கார்ட்டூன் வரைந்தவன் கரத்தை வெட்டு என்று கோஷம் எழுப்பிய நாம் இந்த மவ்லிதுகளைப் படித்து வரும் ஆலிம்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அறியாமல் செய்யும் தவறா?
சிலர், "அந்த மவ்லூத் வரிகள் எப்படி இருந்தாலும், எந்த எண்ணத்தில் எழுதப்பட்டாலும் நாங்கள் நல்ல எண்ணத்தில் தான் பாடுகிறோம். பெரியார்கள்  மீது கொண்ட பிரியத்தினால் தான்  ஓதி வருகிறோம். குற்றம் எங்கள் மீது கிடையாது'' என்று கூறுகிறார்கள். "இதை நன்கு தெரிந்த ஆலிம்கள் மீதும் அதை எழுதியவர்கள் மீதுமே சாரும். எங்களுக்கு ஏதும் இல்லை'' என்றும் கூறுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்கள் அவ்வாறு  கூறி தப்பி விட முடியாது.
ஏனெனில், "மவ்லிதுகள் கூடாது; இது போன்ற பாட்டு கவிதை என்பது இஸ்லாத்தில் ஆராதனையாகவோ வணக்கமாகவோ இல்லை; பாட்டுப் பாடி புண்ணியம் கருதி  நபிமார்களையோ, பெரியார்களையோ புகழ்வது பித்அத் (வழிகேடு); மேலும் அவ்வாறு செயல்படுவது மாற்றார்களின் கலாச்சாரம்; அதை விடுத்து அல்லாஹ்வும் அவன் தூதர் நபியவர்களும் காட்டிய முறையில் ஸலவாத் போன்ற வணக்க வழிபாடுகளை செயலாற்றுங்கள்'' என்று நல்லதை ஏவி, தீயதைத் தடுத்துக் கொண்டும், போதனை புரிந்து கொண்டும்  ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கின்றது.

இந்தக் கூட்டம் இருக்கும் காலமெல்லாம் இது போன்று சமாதானம் கூறி தட்டிக் கழிக்க முடியாது. "நாங்கள் நல்ல எண்ணத்தில் தான் செய்தோம். எண்ணமே வாழ்வு'' என்றெல்லாம் கூறிட முடியாது.
அல்லாஹ் தன் திருமறையில் மூமின்களே! என அழைத்த முதல் வசனம் இது தான். அது என்ன? இதோ:
நம்பிக்கை கொண்டோரே! ராஇனா  எனக் கூறாதீர்கள்! உன்ளுர்னா என்று கூறுங்கள்! செவிமடுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.(அல்குர்ஆன் 2:104)
"ராஇனா' என்ற சொல் இரண்டு அர்த்தங்களுடைய சொல்லாகும். "எங்களைக் கவனித்து வழி நடத்துங்கள்' என்பது ஒரு பொருள். "எங்களின் ஆடு மேய்க்கும் இடையரே' என்பது மற்றொரு பொருள்.
யூதர்களில் நயவஞ்சகர்கள் தம் மனதுக்குள் இரண்டாவது அர்த்தத்தை நினைத்துக் கொண்டு "ராஇனா' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறி அற்ப திருப்தியடைந்து கொண்டார்கள். முஸ்லிம்களோ முதல் அர்த்தத்தில் இதனைப் பயன்படுத்தி வந்தனர்.
எனவே தான் முதல் அர்த்தத்தை மட்டும் தரக்கூடிய "உன்ளுர்னா' என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பயன்படுத்துமாறு முஸ்லிம்களுக்குத் திருக்குர்ஆன் கட்டளையிட்டது.
முஸ்லிம்கள் நல்ல எண்ணத்தில் தான் கூறினார்கள் என்றாலும் "யூதர்கள் பயன்படுத்தியதை நீங்கள் பயன்படுத்தக் கூடாது'' என அல்லாஹ் தடுத்து விட்டான் என்றால் "நாங்கள் நல்ல எண்ணத்தில் தான் செய்கிறோம்'' எனக் கூறி, தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை எவரும் செய்தால் அது அதிகப் பிரசங்கித்தனமாகும்.
பெருமானாருக்கு மாறு செய்தால்...
நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவது அல்லாஹ்விற்குக் கட்டுப்படுவதற்குச் சமம். அவர்களுக்கு மாறு செய்வது அல்லாஹ்விற்கு மாறு செய்ததாக ஆகும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
"யார் எனக்கு கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்விற்குக் கட்டுப் பட்டு விட்டார். யார் எனக்கு மாறு செய்து விட்டாரோ அவர் அல்லாஹ்விற்கு மாறு செய்து விட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7137

இந்த உலகத்தில் நாம் நல்ல அமல்களைச் செய்வதன் நோக்கமும் இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதன் நோக்கமும் மறு உலக வாழ்வில் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பது தான். இதற்காகத் தான் சிரமப்பட்டு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறோம். நமது முக்கிய குறிக்கோளாக இருக்கக் கூடிய இந்த சொர்க்கம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்வதால் கிடைக்காமல் போய் விடுகிறது.
"என்னுடைய சமுதாயத்தில் (என்னை) மறுத்தவனைத் தவிர அனைவரும் சுவனம் செல்வார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! (உங்களை) யார் மறுப்பார்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எனக்கு யார் கட்டுப்படுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார். யார் எனக்கு மாறு செய்கிறாரோ அவர் (என்னை) மறுத்து விட்டார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7280

எனவே நாம் அவர்கள் கூறிய விஷயங்களுக்குக் கட்டுப்படாமலோ, அவர்கள் தடுத்த காரியங்களைச் செய்தோ அல்லது அவர்கள் காண்பித்துத் தராத செயல்களை உருவாக்கியோ நாம் நரகம் சென்று விடக் கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் இந்த எச்சரிக்கையைத் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.
அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு துன்பம் ஏற்படுவதையோ துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)
ஒருவரை நேசிக்கிறோம் என்றால் அந்த நேசத்திற்குரியவர் என்ன விரும்புகிறாரோ அதைத் தான் செய்ய வேண்டும். நாமாக நம் இஷ்டத்திற்கு  எதையும் செய்வது உண்மையான நேசமாக இருக்காது. அது போலிப் பிரியமாகத் தான் இருக்கும்.  இதனால் அல்லாஹ் தன் திருமறையில்
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப் பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன்3:31)
என்றைக்காவது ஒரு முறை பெருமானாரைக் கேலி செய்யும் டென்மார்க் போன்ற நாடுகளை எதிர்த்த நாம், வருடம் வருடம் நபி (ஸல்) அவர்களின் மதிப்பைக் குறைக்கும் இந்த மவ்லிதை எப்போது எதிர்க்கப் போகிறோம்? எப்போது மவ்லித் புத்தகங்கள் குப்பைத் தொட்டிகளுக்குச் செல்லும்? இனிமையான அந்த நாள் கூடிய சீக்கிரம் இறைவனின் கிருபையால் வரத் தான் போகிறது.
---------------------------------------------------------------------------------


மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார்  என அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகளை காண இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்