"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு - 02

ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02-
                                                                     தொடர்: 1 இற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் 
ஆதம் நபி கண்ட ஐந்து பெயர்கள்

மவ்லிதுகள் அனைத்தும் ஷியாக்களின் வழியில் அமைந்தவையாகும். காரணம், ஷியாக்கள் தங்கள் இமாம்களை அல்லாஹ்வின் இடத்தில் கொண்டு போய் வைப்பார்கள்.

அத்துடன் அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும் துணிந்து பொய் சொல்பவர்கள். அந்த வேலையை ஹுஸைன் மவ்லிதை ஆக்கியவர் நன்கு, தங்கு தடையின்றி செய்திருக்கின்றார்.

அதற்கு எடுத்துக்காட்டாக ஹுஸைன் மவ்லிதில் ஆறாவது ஹிகாயத்தாக (சம்பவமாக) இடம்பெற்றுள்ள ஒரு செய்தியைப் பார்ப்போம்.

அல்குர்ஆன் 2:37 வசனம் தொடர்பாக சிறப்புமிகு தலைவர் ஜாஃபர் சாதிக் அறிவிக்கின்றார்.

சுவனத்தின் வீட்டிற்குள் ஆதமும் ஹவ்வாவும் அமர்ந்திருந்தனர். அவ்விருவரிடமும் ஜிப்ரீல் வருகையளித்து, தங்கம் வெள்ளியினால் கட்டப்பட்ட கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் ஓரங்கள் பச்சை மரகதத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்து. கோட்டைக்குள் சிகப்பு மாணிக்கத்தால் அமைந்த கட்டில் கிடந்தது.

அந்தக் கட்டில் மீது ஒளியினால் அமைந்த மாடம் இருந்தது. அதில் ஃபாத்திமாவின் தோற்றம் காட்சியளித்தது. அவரது தலையில் கிரீடம் இருந்தது. இரு காதுகளிலும் இரண்டு வெண்முத்து வளையங்கள் தொங்கின. கழுத்தை ஒளி மின்னுகின்ற ஒரு மாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

ஃபாத்திமாவின் ஒளியைப் பார்த்து ஹவ்வா (அலை) ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். ஹவ்வாவின் அழகை மறக்கின்ற அளவுக்கு ஆதம் (அலை) அந்த ஆச்சரியத்தில் அமிழ்ந்து போனார்.
இது என்ன உருவம்? என்று ஆதம் கேட்டார்.

அந்த உருவம் ஃபாத்திமா! கிரீடம் அவரது தந்தை முஹம்மது (ஸல்) அவர்கள். கழுத்து மாலை அவரது கணவர் அலீ (ரலி). இரு காது வளையங்கள் ஹஸன், ஹுஸைன் ஆகிய அவரது செல்வங்கள் என்று கூறிவிட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையை உயர்த்தி மாடத்தை ஏறிட்டுப் பார்த்தார்கள். அதில் ஐந்து பெயர்கள் ஒளியினால் பொறிக்கப்பட்டிருந்தன.

(அல்லாஹ்வாகிய) நான் மஹ்மூத் - புகழப்படக்கூடியவன்; இவர் முஹம்மது - புகழப்படக்கூடியவர்.

நான் அஃலா - மிக உயர்ந்தவன்; இவர் அலீ - உயர்வானவர்.

நான் ஃபாத்திர் - முன்மாதிரியின்றி படைப்பவன்; இவர் ஃபாத்திமா

நான் அல்முஹ்ஸின் - நன்மை செய்பவன்; இவர் ஹஸன் - நன்மை.

என்னிடம் இஹ்ஸான் - நன்மை உள்ளது; இவர் ஹுஸைன் - சிறிய நன்மை

இந்த ஐந்து பேர் தான் அந்த மாடத்தில் ஒளி சிந்தும் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளார்கள்.

அப்போது ஜிப்ரீல், "ஆதமே! இந்தப் பெயர்களை நீங்கள் மனனம் செய்து கொள்ளுங்கள். இவை உங்களுக்குத் தேவைப்படும்'' என்று சொன்னார்கள்.

ஆதம் (அலை) பூமியில் இறங்கியதும் முன்னூறு ஆண்டுகள் அழுது தீர்த்தார்கள். அதன் பிறகு இந்தப் பெயர்களைக் குறிப்பிட்டு, "யா அல்லாஹ்! முஹம்மது, அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன். யா மஹ்மூத்! யா அலீ! யா ஃபாத்திர்! யா முஹ்ஸின்! இஹ்ஸானைக் கையில் வைத்திருப்போனே! என்னை மன்னித்துவிடு! என்னுடைய பாவமன்னிப்பை நீ ஏற்றுக் கொள்'' என்று ஆதம் (அலை) பிரார்த்தனை செய்தார்கள்.

உடனே அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களிடம், "உன்னுடைய சந்ததிகளுக்கும் சேர்த்து நீ மன்னிப்புக் கோரியிருந்தால் நான் அவர்களுக்கும் சேர்த்து மன்னித்திருப்பேன்'' என்று வஹீ அறிவித்தான்.

இவ்வாறு ஹுஸைன் மவ்லிதின் ஹிகாயத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சுன்னத் வல்ஜமாஅத்தினர் எனப்படுவோர் பக்கா ஷியாக்கள் தான் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் இந்தச் செய்தியை மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்டவை) என்ற நூலில் பதிவு செய்து, இதன் தொடரில் இடம்பெற்றிருக்கும் பலவீனமான அறிவிப்பாளர்களின் முகத்திரையைக் கிழித்தெறிகின்றார்கள். இதுபோல் இமாம் சுயூத்தி அவர்கள், அல் லஆலில் மஸ்னூஆ (போலி முத்துக்கள்) என்ற நூலிலும், இமாம் இப்னு இராக் அவர்கள் தன்ஸீஹுஷ் ஷரீஅத் (பொய்யான செய்திகளை விட்டும் ஷரீஅத்தைத் தூய்மைப்படுத்துதல்) என்ற நூலிலும் இந்த போலிச் செய்தியை அம்பலப்படுத்துகின்றார்கள்.

இந்தக் கேடுகெட்ட செய்திக்கு அறிவிப்பாளர் வரிசை வேறு! இதில் ஹஸன் பின் அலீ அஸ்கரிய்யு இடம் பெறுகின்றார். ஷியாக்களுக்கு 12 இமாம்கள் உள்ளனர். அவர்களில் இவர் இறுதியானவர். இவருடன் 12 இமாம்களின் வரிசை நிறைவுபெறுகின்றது.

இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இங்குதான் ஹதீஸ் கலை அறிஞர்களின் வேலைப்பாட்டை எண்ணி அதிசயிக்க வேண்டியுள்ளது. ஹுஸைன் மவ்லிதில் வந்திருக்கும் இந்த ஹதீஸை அறிஞர்கள் அடையாளம் காட்டியிருப்பார்களா என்ற ஐயத்துடன் இதை ஆய்வு செய்தால் இது தொடர்பான பொய்ச் சரக்குகளையும் அதைப் பற்றி அறிஞர்களின் ஆய்வுப் பார்வையையும் நம்மால் பார்க்க முடிகின்றது.

சுன்னத் ஜமாஅத்தினர் சுத்த ஷியாக்களே!

ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள் இந்தச் செய்தி, "அஸ்ஸய்யித் ஜஃபர் சாதிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்' என்று துவங்குகின்றது. ஜஃபர் சாதிக் என்பவர் ஷியாக்களின் இமாம்களில் ஆறாவது இமாம் ஆவார். இவர்களுக்கெல்லாம் இமாம் என்ற பெயர்; அதற்கு ரலியல்லாஹு அன்ஹு என்ற துஆ வேறு!

இந்த ஜஃபர் சாதிக்கின் பெயரில் தான் ரஜப் மாதத்தில் பூரியான் பாத்திஹா என்ற பூஜை, 'மவ்லானா' 'மவ்லவி' 'பாகவி' 'மிஸ்பாஹி'களால் நடத்தப்படுகின்றது. சுன்னத் வல்ஜமாஅத் என்று தம்பட்டம் அடிக்கின்ற இந்த ஐயாக்கள் சுத்த ஷியாக்கள் தான் என்பதை இந்த ஹுஸைன் மவ்லிதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஷியாக்களின் ஆறாவது இமாமை மதிப்பவர்கள் அவரது ஹதீஸ ஏற்பவர்கள் எப்படி சரியான முஸ்லிமாக இருக்க முடியும்?

இதை வருடாவருடம் முஹர்ரம் மாதத்தில் பயபக்தியுடன் படிக்கின்றார்கள் என்றால் இவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட இந்தப் பொய்ச் சரக்கு தான் இந்த மவ்லிது கிதாபில் ஜஃபர் சாதிக்கின் பெயரால் விற்கப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நூல்: புகாரி 110

இந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்திருந்தும், அவர்கள் மீது திட்டமிட்டு இப்படிப் பொய் சொல்கிறார்கள் என்றால் இவர்கள் நரகத்திற்குச் செல்வதற்குத் தங்களை பயிற்சியும் பக்குவமும் படுத்திக் கொண்டார்கள் என்பது தான் இதன் பொருளாகும். அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

ஷியாக்கள் நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வதில் எந்த வஞ்சமும் செய்ய மாட்டார்கள்; எந்த தயவு தாட்சண்யமும் காட்ட மாட்டார்கள்.

அதுபோன்று இந்தப் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரும் நபி (ஸல்) அவர்கள் மீது பொய்களைச் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

இதுவரை இந்த ஹதீஸ் முழுவதும் இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதை அறிவிப்பாளர் ரீதியாகப் பார்த்தோம். இனி இந்தப் பொய்ச் செய்தியின் உள்ளே புகுந்து, இது எப்படி குர்ஆன், ஹதீஸை விட்டும் முரண்படுகின்றது என்பதை உரசிப் பார்ப்போம்.

ஜிப்ரீலை இழிவுபடுத்துதல்

ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்லாஹ் தனது திருமறையில் உயர்த்திப் பேசுகின்றான்; சிறப்பித்துக் கூறுகின்றான்.

எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார். அல்குர்ஆன் 26:193-195

(அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்.  வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர். அல்குர்ஆன் 81:20, 21

இத்தகைய சிறப்புக்குரிய ஜிப்ரீலை, நபி (ஸல்) அவர்களின் குடும்பச் செயலாளர் போன்று இந்தச் சம்பவம் சித்தரித்துக் காட்டுகின்றது. இந்த வகையில் இது மலக்குகளை இழிவாகப் பேசுகின்ற இழிசெயலாகும்.

சுவனத்தின் சொந்தங்கள்

சுவனம் முழுவதையும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்திற்காக அல்லாஹ் பட்டா போட்டுக் கொடுத்துவிட்டதாக இந்தச் செய்தி சித்தரிக்கின்றது. சுவனம் என்பது யார் அமல் செய்கின்றார்களோ அவர்களை அதற்கு வாரிசாக்கி விடுகின்றான். இதைப் பின்வரும் வசனங்கள் உணர்த்துகின்றன.

"உங்கள் செயல்களின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுவே'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.  அல்குர்ஆன் 7:43

இதுவே நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட சொர்க்கம்.  அல்குர்ஆன் 43:72

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) பிலால் (ரலி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில் சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்'' என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "நான் இரவு பகல் எந்த நேரத்தில் அங்கசுத்தி (உளூ) செய்தாலும் அந்த அங்க சுத்திக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்'' என்று கூறினார்கள்.  நூல்: புகாரி 1149

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதருக்கு இம்மாபெரிய மகத்துவத்தைக் கொடுப்பதற்குக் காரணம் அவர் செய்த அமல் தான். இந்த அடிப்படையில் சுவனம் என்பது அமல் செய்தவர்களுக்குரியதாகும். நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் நம்பிக்கை கொண்டு, நல்லமல் செய்தால் அவர்கள் சுவனத்தின் சொந்தக்காரர்கள். இல்லையென்றால் இந்தப் பாக்கியத்தை இழந்துவிடுவார்கள். இதுதான் அல்லாஹ்வின் நியதி!

இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களின் மகளாகப் பிறந்ததால் அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தைப் பட்டா போட்டுக் கொடுத்துவிட்டதாக ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள்ள இந்தச் செய்தி சித்தரிக்கின்றது. இந்த அடிப்படையில் குர்ஆன், ஹதீஸின் நிலைப்பாட்டிற்கு முரணாக இது அமைந்துள்ளது.  

ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு-                                                                                                                                                                                                                       தொடர்: 3       
ஆதம் நபியை அவமதிக்கும் மவ்லிது
கடந்த இதழில், ஹுஸைன் மவ்லிது ஜிப்ரயீல் (அலை) அவர்களை அவமதிப்பதையும், அலட்சியமாக ஆக்கியதையும் பார்த்தோம். இந்தத் தொடரில் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை இந்த மவ்லிது அவமரியாதை செய்வதைப் பார்ப்போம்.
தமிழக முஸ்லிம்கள் வேதமாக நினைக்கும் சுப்ஹான மவ்லிதின் துவக்கத்தில் ஆதம் நபி அவர்களின் படைப்பு சம்பவம் இடம்பெறுகின்றது.
ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு, கண்களைத் திறந்ததும் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் "லாயிலாஹ இல்லல்லாஹூ'' என்பதுடன் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்'' என்றும் எழுதப்பட்டிருந்ததாம். "இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்?'' என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் "அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்ட போது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது நினைவுக்கு வந்ததாம். "இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.

இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக்கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.( விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் )
(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்2:37)
இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று இந்த வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் பின்வரும் வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது.
"எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர். (அல்குர்ஆன் 7:23)
ஆதம் (அலை) அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்திப் பாவமன்னிப்புக் கேட்டர்கள் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. அதற்கு முரணாகவும் இச்செய்தி அமைந்துள்ளது. இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு இது மற்றொரு காரணம்.
இதைக் கூறி இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது இறைவன் மன்னிப்பான் என்பதையும் இந்த வசனம் கூறுவதிலிருந்து, ஆதம் (அலை) முஹம்மது நபியின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதாக சுப்ஹான மவ்லிதில் இடம்பெற்ற செய்தி கட்டுக்கதை என்பதை அறியலாம்.
எல்லா மவ்லிதுக் கிதாபுகளுமே பொய் மூட்டைகள் தான் என்பதற்கு இந்தக் கதை ஓர் எடுத்துக்காட்டாகும்.
சுப்ஹான மவ்லிதில் இந்தக் கதையை இப்படிப் பொருத்திவிட்டு, அதே மவ்லிதின் பிற்பகுதியில் இடம்பெறும் ஹுஸைன் மவ்லிதில் இந்தக் கதையை சற்று மாற்றம் செய்து பொருத்தியிருக்கிறார்கள்.
முஹம்மது நபியை வஸீலாவாக, ஒரு சாதனமாகப் பயன்படுத்தி மன்னிப்பு கேட்பது போன்ற மூலக் கருவில் இந்தக் கதை ஒன்றிணைந்தாலும் அதன் உள்ளடக்கத்தில் முற்றிலும் வேறுபடுகின்றது.
ஆதமும் ஹவ்வாவும் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்கும் போது ஜிப்ரயீல் (அலை) அவ்விருவரையும் தங்கம், வெள்ளியினால் கட்டப்பட்ட ஒரு கோட்டைக்கு அழைத்துச் சென்றார்கள் என்ற கதையைக் கடந்த இதழில் கண்டோம். அதில் ஆதம் நபி செய்த பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.
ஆதம் (அலை) பூமியில் இறங்கியதும் முன்னூறு ஆண்டுகள் அழுது தீர்த்தார்கள். அதன் பிறகு இந்தப் பெயர்களைக் குறிப்பிட்டு, "யா அல்லாஹ்! முஹம்மது, அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன். யா மஹ்மூத்! யா அலீ! யா ஃபாத்திர்! யா முஹ்ஸின்! இஹ்ஸானைக் கையில் வைத்திருப்போனே! என்னை மன்னித்துவிடு! என்னுடைய பாவமன்னிப்பை நீ ஏற்றுக் கொள்'' என்று ஆதம் (அலை) பிரார்த்தனை செய்தார்கள்.
சுப்ஹான மவ்லிதில் "இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று ஆதம் நபி பிரார்த்தனை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஹுஸைன் மவ்லிதில் மேற்கண்ட ஐந்து பெயர்களையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டில் எது உண்மை?
மேலும் இந்தக் கதையில் மேற்கண்ட ஐந்து பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பது ஆதம் நபிக்கு ரொம்பவும் முக்கியமல்லவா? அதனால் அந்தப் பெயர்களையும் அதற்கான விளக்கத்தையும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தாமே முன்வந்து கற்றுக் கொடுத்தார் என்று கூறப்படுகின்றது. ஆனால் சுப்ஹான மவ்லிதில் அல்லாஹ்வும் ஆதமும் நேரடியாகப் பேசிக் கொண்டதாக வருகின்றது? இந்த முரண்பாடுகளெல்லாம் மேற்கண்ட கதை கடைந்தெடுத்த பொய் என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.

சுப்ஹானல் அஸீஸில் கஃப்பார் என்று துவங்கி, இந்த மவ்லிதுக் கிதாபு அவ்வளவு பொய்களை அடித்து விடுகின்றது. அது அளந்துவிட்ட பொய்களில் ஒரே மூலக் கருவைக் கொண்டு, உள்ளே முரண்பட்ட செய்திகளை இடத்திற்குத் தக்கபடி மாற்றம் செய்து, இரு இடங்களில் இரண்டு விதமாகப் பதிவு செய்யப்பட்ட இந்தப் பொய் முக்கியமானதாகும்.

இதை ஓர் எடுத்துக்காட்டாகவே இங்கு குறிப்பிடுகின்றோம். முக்கியமாக ஹுஸைன் மவ்லிதுக் கதையில் நாம் பார்க்க வேண்டிய விஷயம், ஆதம் (அலை) அவர்கள் இங்கு மட்டரகமாக மதிக்கப்படுவதைத்  தான்.
ஆதம் இல்லையேல் ஐவரும் இல்லை
சுப்ஹான மவ்லிதிலாவது ஆதம் நபியவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருட்டால் துஆச் செய்ததாக வருகின்றது. அவ்வாறு கேட்பது குர்ஆன் வசனத்திற்கு மாற்றமானது என்பதைக் கண்டோம். ஆனால் இதையாவது ஓரளவு சகித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. ஹுஸைன் மவ்லிதில் உள்ள கதையைச் சகிக்கவே முடியவில்லை.
காரணம், நபி (ஸல்) அவர்களுடன் சேர்த்து, அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவரின் பொருட்டால் ஆதம் நபி பிரார்த்தனை செய்ததாகச் சொல்கின்றார்கள்.
ஆதம் (அலை) அவர்களின் அந்தஸ்து என்ன? அவர்களது தரம் என்ன? ஆதம் நபி இல்லையென்றால் இந்த ஐவரும் இல்லை. அனைத்து மனித சமுதாயமும் இல்லை. அப்படிப்பட்ட அந்த மனிதகுல மூலவரை, முதல்வரை அவரது சந்ததியில் உள்ள பிள்ளைகள் பொருட்டால் பாவமன்னிப்பு கேட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் கொள்ளைப்புற வழியாக வந்த கள்ள ஷியாக்களின் வேலையைத் தவிர்த்து இது வேறு யாருடைய வேலையாக இருக்க முடியும்?
ஆதம் நபியின் அருஞ்சிறப்புகள்
ஷியாக்களும், அவர்களது வாரிசுகளும் உருவாக்கிய மவ்லிது தான் இந்த மட்டரகமான கதையை அடித்து விட்டிருக்கின்றது. ஆதம் நபியைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது, மலக்குகளையே திகைக்க வைத்த அற்புதத் திறனை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான் என்று கூறுகின்றது.
அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான். "நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர். "ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, "வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' என (இறைவன்) கேட்டான்.அல்குர்ஆன் 2:31-33
இப்படிப்பட்ட அபாரமான, அலாதியான அறிவாற்றல் கொண்ட ஆரம்ப மனிதரைத் தான் ஐவர் குழுவின் பொருட்டால் பாவமன்னிப்புக் கேட்க வைத்திருக்கின்றனர்.
ஆதம் (அலை) பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறுகின்ற செய்திகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை இப்போது பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெliயில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களை பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), "நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள். மக்கள் சிலர், "உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)'' என்று கூறுவார்கள். ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, "ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்ட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்திரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று கேட்பார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "(நான் செய்த தவறின் காரணத்தால்) என் இறைவன் என் மீது (கடும்) கோபம் கொண்டான். அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. அதற்குப் பிறகும் அதைப் போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3340

அவர்கள் செய்த பாவம் மரத்தை நெருங்கியது மட்டும் தான். அதுவும் அவனது விதியின் அடிப்படையில் அமைந்ததாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்கüடம் வாதிட்டார்கள். அப்போது உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெüயேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள்தாமே!'' என்று மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்கüடம் கேட்டார்கள். (பதிலுக்கு) ஆதம் (அலை) அவர்கள் "மூசா! தன் தூதுச் செய்திகளை (மக்கüடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள் தாமே? என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் "எழுதிவிட்ட' அல்லது "விதித்துவிட்ட' ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறீர்கள்'' என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆதம் (அலை) அவர்கள் (தமது இந்த பதிலால்) மூசா (அலை) அவர்களைத் தோற்கடித்து விட்டர்கள்'' என்று சொன்னார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4738
ஆதம் நபி செய்த அந்தப் பாவத்திற்காகக் கூட அவர்களைப் பழிக்க முடியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாக்கி விட்டது.
இப்படிப்பட்ட சிறந்த நபியைத் தான் இந்த ஷியா வர்க்கம் கொச்சைப்படுத்துகின்றது.
இந்த ஷியாக்களுடைய வேலையே தாங்கள் கடவுளாகக் கொண்டாடும் முஹம்மத் (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகியோரைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அவ்வாறு தூக்கிப் பிடிக்கும் போது, மலக்குகள், நபிமார்களைக் காலில் போட்டு மிதித்தாலும் கவலைப்பட மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த ஐவர் மீது அவர்களுக்கு அளவு கடந்த வெறியூட்டப்பட்டுள்ளது.
ஐந்து கடவுளர்களும் அத்வைதக் கொள்கையும்
இந்தப் பாவிகள், மவ்லிதைப் பாடுகின்ற மவ்லவிகள், லெப்பைகள் அனைவரும் பஞ்சா என்ற ஐந்து கடவுள் கொள்கையை, அல்லாஹ் இணை வைப்பிலிருந்து பாதுகாத்துள்ள சுவனபதியிலிருந்தே துவக்குகின்றார்கள். அத்துடன் நில்லாமல் இதில் அத்வைதக் கொள்கையை எவ்வித சங்கடமும் இல்லாமல் சந்தோஷமாக நுழைக்கின்றனர்.
(அல்லாஹ்வாகிய) நான் மஹ்மூத் - புகழப்படக்கூடியவன்; இவர் முஹம்மது - புகழப்படக்கூடியவர்.
நான் அஃலா - மிக உயர்ந்தவன்; இவர் அலீ - உயர்வானவர்.
நான் ஃபாத்திர் - முன்மாதிரியின்றி படைப்பவன்; இவர் ஃபாத்திமா
நான் அல்முஹ்ஸின் - நன்மை செய்பவன்; இவர் ஹஸன் - நன்மை.
என்னிடம் இஹ்ஸான் - நன்மை உள்ளது; இவர் ஹுஸைன் - சிறிய நன்மை

இந்த ஐவரின் பெயரையும் அல்லாஹ்வுடைய பெயர்களுடன் பின்னிப் பிணைப்பதில் இந்த ஷியாக்கள் சரியான சதி வேலையைக் கையாள்கிறார்கள். அதாவது அல்லாஹ்வும் இந்த ஐவர் குழுவும் ஒன்று என்ற கேடுகெட்ட சித்தாந்தத்தைப் புகுத்துகின்றார்கள்.
மஹ்மூத் என்றால் புகழப்படக்கூடியவன் என்று பொருள். இதை அல்லாஹ்வுடைய பெயராக ஆக்குகின்றார்கள். முஹம்மது என்றாலும் அதே பொருள் தான். ஆனால் அது நபி (ஸல்) அவர்களின் பெயராகும். இதன் வேர்ச்சொல் ஹம்து என்பதாகும். இதிலிருந்து தான் மஹ்மூத், முஹம்மது என்ற வார்த்தைகள் பிறந்துள்ளன. அதாவது அல்லாஹ்வும் முஹம்மதும் ஒரே ஆள் தான் என்று வாதிக்கின்றனர்.
இதேபோல் அஃலா என்றால் மிக உயர்ந்தவன் என்று பொருள். இதை அல்லாஹ்வின் பெயராக ஆக்குகின்றார்கள். அலீ என்றால் உயர்ந்தவர். இதை அலீயின் பெயராக ஆக்குகின்றார்கள். இதன் வேர்ச்சொல் உலுவ்வுன் என்பதாகும். இதிலிருந்து தான் அஃலா, அலீ என்ற வார்த்தைகள் பிறந்துள்ளன. இதன் மூலம் அல்லாஹ்வும் அலீயும் ஒரே ஆள் என்று வாதிக்கின்றனர்.
அல்முஹ்ஸின் என்ற அல்லாஹ்வின் பெயரைக் கூறுகின்றார்கள். ஹஸன் என்பது ஹஸன் (ரலி) அவர்களின் பெயர். ஆக, அல்லாஹ்வும் ஹஸனும் ஒன்று என்ற கருத்தைத் திணிக்கிறார்கள்.
ஹுஸைனுக்கு மட்டும் அல்லாஹ்வுடைய பெயராகக் கொண்டு வரவில்லை. அப்படி ஒரு வார்த்தை இல்லை. அதனால் என்னிடம் ஒரு நன்மை உள்ளது என்று முடிச்சுப் போட்டு, அல்லாஹ்வையும் ஹுஸைனையும் ஒன்றாக்குகின்றனர்.
முஹ்ஸின், ஹஸன், ஹுஸைன் ஆகிய மூன்றுமே ஹுஸ்னுன் என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவையாகும். அவற்றையெல்லாம் குயுக்தியாக பொருத்தியவர்கள், ஃபாத்திமா என்ற வார்த்தையை மட்டும் அல்லாஹ்வுடைய எந்தப் பெயருடனும் பொருத்த முடியவில்லை. அதனால் ஃபாத்திர் என்ற அல்லாஹ்வுடைய பெயருடன் பொருத்துகின்றார்கள்.
ஃபாத்திமா என்ற பெயருக்கு ஏதுவாக ஃபாதிம் என்று தான் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களால் அவ்வாறு கொண்டு வரமுடியவில்லை. ஃபத்ம் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த ஃபாத்திமா என்ற வார்த்தைக்குப் பொருள், பால்குடியை மறக்கடித்தல் என்பதாகும்.

ஆனால் ஃபாத்திர் என்ற வார்த்தை, ஃபத்ரு - பிளத்தல், படைத்தல் என்ற மூல வார்த்தையிலிருந்து பிறந்ததாகும். இங்குதான் அவர்களால் முடிச்சுப் போட முடியவில்லை. இவ்விரண்டும் வெவ்வேறு வார்த்தைகளாகும். இதனால் இவர்களது சதி வேலை வெளிச்சத்திற்கு வந்து விட்டது. அத்வைதக் கொள்கை என்ற அபத்தம் அம்பலத்திற்கு வந்து விட்டது.
அல்லாஹ்வும் அடியார்களும் ஒன்று தான்; காணும் பொருள் எல்லாம் கடவுள் தான் என்பது அத்வைதக் கொள்கையாகும். இந்தக் கொள்கையை இஸ்லாமியக் கொள்கை என்ற பெயரில் சின்னஞ்சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குப் போதிக்கப்படுகின்றது. வீட்டில் உள்ள தாய்மார்கள், "அல்லாஹ் தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்' என்று பிள்ளைகளுக்குப் போதிக்கின்றனர். இது ஷியாக் கொள்கையின் வெளிப்பாடு தான். எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் இந்தக் கொள்கையைத் தகர்த்தெறிகிறான்.
அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5)

அவன் வானத்திற்கு மேல் இருப்பதாகப் பின்வரும் வசனம் தெரிவிக்கின்றது.
வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். (அல்குர்ஆன் 67:16)

அல்லாஹ், தூணிலோ துரும்பிலோ இல்லை என்று திருக்குர்ஆன் அடித்துச் சொல்கின்றது. எந்த மனிதருடனும், அடியானுடனும் அவன் ஒன்றாகக் கலக்கவோ, ஒருங்கிணையவோ மாட்டான். ஆனால் ஷியாக்களோ, அடியார்களான முஹம்மத் (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவரையும் அல்லாஹ்வையும் ஒன்றாக்குகின்ற விஷ வேலையைச் செய்கின்றனர். இந்தக் கேடுகெட்ட கொள்கை தான் ஹுஸைன் மவ்லிது என்ற பெயரில் பாடப்படுகின்றது.
அல்லாஹ்வின் மீது அப்பட்டமான பொய்
அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களிடம், "(இந்த வார்த்தைகளின் மூலம்) உன்னுடைய சந்ததிகளுக்கும் சேர்த்து நீ மன்னிப்புக் கோரியிருந்தால் நான் அவர்களுக்கும் சேர்த்து மன்னித்திருப்பேன்'' என்று வஹீ அறிவித்தான்.
இவ்வாறு இந்த மவ்லிது கூறுகின்றது. ஆதம் நபிக்கு இந்தச் செய்தியை அல்லாஹ் வஹீ அறிவித்திருந்தால் அதை ஆதம் நபியே கூறியிருக்க வேண்டும். அது திருக்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்விரண்டிலும் அது வரவில்லை எனும் போது இது பொய்யான செய்தியாகும்.
ஆதமை நோக்கி அல்லாஹ் சொல்வதாக இப்படி ஒரு பொய்யைக் கூறுகின்றார்கள். உண்மையில் இது அல்லாஹ்வின் மீது சொல்கின்ற அப்பட்டமான பொய்யாகும். இதற்கு அல்லாஹ் கடுமையான தண்டனையை அளிக்கின்றான். இதைப் பின்வரும் வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் "எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், "அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!'' (அல்குர்ஆன் 6:93)

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். "இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்'' என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது. (அல்குர்ஆன் 11:18)
அல்லாஹ்வின் சாபத்தையும் இந்த அநியாயக்காரர்களுக்கு எதிரான சாட்சியத்தையும் இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. இப்படிப்பட்ட தண்டனையையும் இறைச் சாபத்தையும் பெற்றுத் தருகின்ற ஹுஸைன் மவ்லிதைத் தான் மவ்லவிகள், லெப்பைமார்கள் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
 ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு                                                                                                                                                                                                தொடர்: 4     
ஜிப்ரயீலை இழிவுபடுத்தும் ஹுசைன் மவ்லிது

ஹுஸைன் மவ்லிது என்ற கிதாபு, பொய்யான ஹதீஸ்கள் மண்டிக் கிடக்கும் - ஷியாக்களின் போலிச் சரக்குகள் நிரம்பி வழியும் சவக்கிடங்கு என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு ஷியாக்களின் மறுபதிப்பாக இந்த மவ்லிதுக் கிதாபு அமைந்திருக்கின்றது. ஹதீஸ்கள் என்ற பெயரில் ஷியாக்களின் கதைகளை அளந்து விட்டிருக்கின்றாôர்கள். அவற்றை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு வருகிறோம்.
அந்த அடிப்படையில் இவ்விதழில் ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள்ள மேலும் சில பொய்யான ஹதீஸ்களைப் பார்ப்போம்.
இமாம் ஸஃபவிய்யி அறிவிக்கின்றார்: (இமாம் என்று அடைமொழியிட்டிருக்கும் இவர் ஒரு ஷியா புறம்போக்கு என்பதை இந்தக் கதையைப் படித்தவுடன் அறிந்து கொள்ளலாம்.)
மற்றொரு தடவை ஜிப்ரயீல் சுவனத்திலிருந்து ஓர் ஆப்பிளைக் கொண்டு வந்து அதை நபி (ஸல்) அவர்களிடம் வைத்தார்கள். ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவரும் நபி (ஸல்) அவர்களின் அருகில் இருந்தனர். அவ்விருவருமே தங்களுக்குத் தான் ஆப்பிளைத் தரவேண்டும் என்று கேட்டனர். அப்போது ஜிப்ரயீல், "அவ்விருவரையும் மல்யுத்தம் செய்ய விடுங்கள். வெற்றி பெறுபவருக்கு ஆப்பிள் கிடைக்கும்'' என்று கூறினார். ஆனால் ஜிப்ரயீல் ஹுஸைனுடனும், நபி (ஸல்) அவர்கள் ஹஸனுடனும் இருந்தார்கள். அவ்விருவரில் எவரும் மற்றவரை வெற்றி கொள்ளவில்லை. உடனே ஜிப்ரயீல் சுவனத்திலிருந்து மற்றோர் ஆப்பிளைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இது தான் ஹதீஸ் என்ற பெயரில் ஹுஸைன் மவ்லிதில் அளந்து விடப்பட்டுள்ள அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு ஆகும். இந்தப் பொய்ச் செய்தி, ஹதீஸ் நூற்களில் எதிலும் இடம்பெறவில்லை. ஷியாக்களுடைய நூற்களில் மட்டும் தான் இடம்பெற்றுள்ளது.
ஜிப்ரயீல் (அலை) அவர்களின் முக்கியப் பணி அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது தான்.
"நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் உண்மையுடன் இறக்கினார்'' என்பதை (முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் 16:102
அல்குர்ஆனை இறக்குகின்ற ஆற்றல்மிகு ஜிப்ரயீலை, ஹஸன் ஹுஸைனுக்கு விளையாட்டுக் காட்டுவதற்கு ஆப்பிள் கொண்டு வருகின்ற அடிமைச் சேவகராக இந்த ஷியாக்கள் சித்தரிக்கின்றனர்.
ஸஃபவி என்ற அனாமதேயம், பொய் சொல்லும் ஷியா புளுகித் தள்ளியிருக்கின்றது. இது ஹதீஸ் என்ற பெயரில் ஹிகாயத் எனும் கதையாகவும், கவிதையாகவும் இடம்பெற்றிருக்கின்றது.
சாம்பிராணி போட்டு, சந்தனம் தெளித்து, ஊதுபத்தி கொளுத்தி இந்தக் கதைகளை வணக்கம் என்று நம்பி ஓதுகின்றார்கள் என்றால் இவர்கள் ஷியாக்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

ஹஸன், ஹுஸைனுக்காக ஏதோ மண்ணில் இருக்கும் பழத் தோட்டத்திலிருந்து ஆப்பிள் பழங்களைப் பறித்து வருவது போல் காட்டுகின்றனர். அல்லாஹ் தனது கட்டளைப்படியே ஜிப்ரயீல் இறங்குவதாகத் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை. (என்பதை இறைவன் கூறச் சொன்னதாக ஜிப்ரீல் கூறினார்.) அல்குர்ஆன் 19:64
ஹஸன், ஹுஸைன் விளையாடுகின்ற இந்த விளையாட்டை அல்லாஹ், ஜிப்ரயீல், முஹம்மது (ஸல்) ஆகியோர் வேலையில்லாமல் உட்கார்ந்து ரசிப்பது போன்று இந்த ஷியாக்காரன் குறிப்பிடுகின்றான்.
வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை. அல்குர்ஆன் 21:16, 17
இந்த வசனத்தில் விளையாடுவது தனது வேலையல்ல என்று அல்லாஹ் தெளிவாக அடித்துச் சொல்லிவிடுகின்றான்.

சுவனத்துக் கனி என்றால் சும்மாவா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொடர்ந்து பசியும் பட்டினியுமாகவே கிடந்திருக்கின்றார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்கüன் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 5416
அப்போதெல்லாம் ஆப்பிள் கொண்டு வராத ஜிப்ரயீல் (அலை) அவர்கள், இந்த விளையாட்டுக்காக ஆப்பிள் கொண்டு வந்தார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்?
சுவனத்தின் பழங்களைச் சாப்பிடுவது என்பது சாதாரணமான காரியமல்ல.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுதுகொண்டிருக்கையில் இதோ) இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின் வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் (தொழுது கொண்டிருக்கையில்) சொர்க்கத்தைக் கண்டேன். (அதிலிருந்து பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அது கிடைத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்(தப் பழத்திலிருந்)து புசித்திருப்பீர்கள். மேலும் நான் (தொழுது கொண்டிருக்கையில்) நரகம் எனக்குக் காட்டப்பட்டது. இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகüல் அதிகமாகப் பெண்களையே கண்டேன்'' என்று கூறினார்கள். (சுருக்கம்) அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1052
இந்த ஹதீஸ் சுவனத்துக் கனியின் பிரம்மாண்டத்தை எடுத்துச் சொல்கின்றது. சுவனத்தின் பழங்களை நபி (ஸல்) அவர்கள் உட்பட யாரும் இந்த உலகில் சாப்பிட்டதில்லை. சுவனத்தின் உணவு மறுமையில் தான் கிடைக்குமே தவிர இந்த உலகில் அல்ல! இதை யாரும் இவ்வுலகில் அனுபவிக்கவில்லை, சுவைக்கவுமில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்'' என்று அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் விரும்பினால், "அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்' என்னும் (32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3244
அப்பேற்பட்ட கனியை, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஏதோ ஹஸன், ஹுஸைனின் எடுபிடி போன்று சுவனத்திலிருந்து எடுத்து வந்ததாக இந்தப் பொய்யர்கள் அளக்கின்றார்கள். இவர்கள் தங்களது ஐந்து கடவுள்கள் மீது கொண்டுள்ள காதல், வெறியானது மலக்குகளின் மாபெரும் தலைவரான ஜிப்ரயீலின் மரியாதை, மதிப்பைத் தெரியாத அளவிற்குக் கண்ணை மறைக்கின்றது.
இவர்களுடைய மார்க்கம் முழுவதும் இந்த ஐந்து கடவுள் என்ற மையப்புள்ளியைக் கொண்டு தான் அமைந்திருக்கின்றது.
தமிழக ஆலிம்கள் இந்த மவ்லிதைப் பற்றி ஒருபோதும் கண்டுகொள்வது கிடையாது. கண்டிப்பதும் கிடையாது. மாறாக இவர்களும் அந்த சங்கீத சபையில் உட்கார்ந்து சங்கையாக ஓதுகின்றனர்.
இவர்கள் கால்வாசி, அரைவாசி ஷியாக்கள் கிடையாது. முழுமையான ஷியாக்கள் என்பதற்கு ஹுஸைன் மவ்லிது சரியான ஆவணமாக அமைந்துள்ளது.
தமிழக ஆலிம்களில் 99 சதவிகிதத்தினர் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் விஷயத்தில், எது சரியான ஹதீஸ்? எது பலவீனமான ஹதீஸ் என்று பிரித்துப் பார்க்காமல், நபி (ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே பொய் கூறினால் நரகமே தண்டனையாகக் கிடைக்கும் என்ற எச்சரிக்கையைப் பற்றிக் கடுகளவு கூட அச்சமில்லாமல் சகட்டுமேனிக்குத் தங்கள் சொற்பொழிவுகளில் நாவில் வருவதையெல்லாம் நபிமொழிகள் என்று அடித்து விடுகின்றனர். இதிலிருந்து இவர்கள் தங்களை ஷியாக்களின் மறுவடிவம் என்பதை ஒளிவு மறைவில்லாமல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.

இந்த அபத்தங்களைத் தாங்கிய ஹுஸைன் மவ்லிது கூறும் இன்னொரு கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் பாத்திமா (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! என்னிடமிருந்து ஹஸனும் ஹுஸைனும் காணாமல் போய்விட்டனர். அவர்கள் இருக்கும் இடம் எனக்குத் தெரியவில்லை'' என்று சொன்னார். உடனே ஜிப்ரயீல் (அலை) வந்து, "அவ்விருவரும் இன்ன இடத்தில் உள்ளனர். அவ்விருவரையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ் ஒரு மலக்கை நியமித்து விட்டான்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்விடத்திற்கு வந்து, அவ்விருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியவர்களாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஒருவரை தமது வலது புஜத்திலும், மற்றொருவரை தமது இடது புஜத்திலும் சுமந்து கொண்டு வந்தார்கள்.
அபூபக்ர் (ரலி), நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, ஒரு பையனை என்னிடத்தில் கொடுங்கள்; நான் சுமக்கிறேன் என்று வாங்கிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவ்விருவரின் வாகனம் சிறந்த வாகனமாக அமைந்துவிட்டது. இவ்விரு பயணிகளும் சிறந்த பயணிகளாகி விட்டனர்'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்குள் நுழைந்ததும், "முஸ்லிம் சமுதாயமே!  பாட்டனார், பாட்டியார் மக்களில் சிறந்த ஒருவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். தோழர்கள், ஆம் என்றனர். "ஹஸன், ஹுஸைனின் பாட்டனார் அல்லாஹ்வின் தூதர். அவ்விருவரின் பாட்டி கதீஜா'' என்று கூறினார்கள்.
இந்தச் செய்தியின் மையக் கருத்து ஹஸன் ஹுஸைன் காணாமல் போனது தான். இதை அச்சாணியாக வைத்துப் பல்வேறு விதத்தில் இந்தச் செய்தி பாதிவாகியுள்ளது. இந்தச் செய்தி தப்ரானியின் அல்முஃஜமுல் கபீரில் பின்வருமாறு இடம்பெறுகின்றது.
ஹஸன், ஹுஸைனைக் காணவில்லை என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து உம்மு ஐமன் (ரலி) முறையிடுகின்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ஹஸன் ஹுஸைனைத் தேடுங்கள் என்று கூறினார்கள். பலரும் பல்வேறு வழிகளில் தேடிப் போனார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் போன திசையில் சென்றேன். அவர்கள் மலையடிவாரத்திற்கு வந்தார்கள். ஹஸனும், ஹுஸைனும் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு நின்றிருந்தனர். அங்கே ஒரு பாம்பு (காவலுக்கு) நின்று கொண்டிருந்தது. அதன் வாயிலிருந்து நெருப்பு போன்று ஒரு பொருள் வெளியாகிக் கொண்டிருந்தது. அதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் விரைந்ததும் அது நபி (ஸல்) அவர்களிடம் உரையாடியது. பின்னர் ஒரு பொந்தில் நுழைந்து கொண்டது. நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் தமது தோள் புஜங்களில் சுமந்து கொண்டு வந்தார்கள்.
இது அல்முஃஜமுல் கபீரில் 109/3ல் இடம்பெற்றுள்ள செய்தியாகும்.
ஷைக் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள், இது கோளாறும், பலவீனமான அறிவிப்பாளர்களும் நிறைந்த தொடராகும். இதன் அறிவிப்பாளர் சிலர் ஷியாக்கள் ஆவர் என்கிறார்.
1. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறுகின்ற அல்ஹுஸைன் பின் முஹம்மத் அல் ஹன்னாத் என்பவருக்குரிய வாழ்க்கைக் குறிப்பே எனக்குக் கிடைக்கவில்லை.
2. அஹ்மத் பின் ருஷ்த் பின் குஸைம் அல்ஹிலாலி என்பவரை, இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சொல்லவில்லை. பொய்யான ஹதீஸை அடித்து விடுபவர் என்று ஹாபிழ் தஹபீ குறிப்பிடுகின்றார்.
3. ஸயீத் பின் குஸைம் - இவர் மேற்கண்ட இரண்டாம் அறிவிப்பாளரின் சிறிய தந்தை ஆவார். இவரைப் பற்றி இப்னு ஹஜர், "உண்மையாளர், ஷியா என்று குற்றம் சாட்டப்பட்டவர், தவறான செய்திகளைக் கொண்டவர்' என்று குறிப்பிடுகின்றார்.
4. முஸ்லிம் அல் மலாயீ - இவரைப் பற்றி தஹபீ அவர்கள், இவரை ஹதீஸ் துறையினர் கைகழுவி விட்டனர் என்று முக்னியில் குறிப்பிடுகின்றார்கள். ஹாபிழ் இப்னு ஹஜர் பலவீனமானவர் என்று குறிப்பிடுகின்றார்.
5. ஹப்பத்துல் அர்னீ - இவர் ஷியா வெறியர்களில் உள்ளவர். "பத்ருப் போரில் பங்கெடுத்த 80 நபித்தோழர்கள் ஸிஃப்பீன் போர்க்களத்தில் அலீ (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டார்கள்'' என்று புளுகியவர். இவ்வாறு ஹாபிழ் தஹபீ குறிப்பிடுகின்றார்க்ள்.
உண்மையாளர், தவறான செய்திகள் உள்ளவர், ஷியாவில் வெறியர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் தமது தக்ரீபில் குறிப்பிடுகின்றார்கள்.
இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று இப்னு மயீன் குறிப்பிடுகின்றார்கள்.
இது இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களைப் பற்றிய வண்டவாளங்கள் ஆகும். பக்கா ஷியா வெறியர்கள் புனைந்து தள்ளிய பொய்ச் சரக்கு தான் இந்த ஹதீஸாகும். இதைத் தான் ஹுஸைன் மவ்லிதில் இறக்குமதி செய்திருக்கின்றார்கள்.
இது சொல்ல வருகின்ற செய்தி என்ன?
ஹஸன், ஹுஸைன் புனிதமானவர்கள். அவர்களைப் பாதுகாப்பதற்கென்று தனி மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார். வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) வஹீ கொண்டு வரும் வேலையை விட்டுவிட்டு அவர்களைக் கண்காணிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். இப்படித் தான் ஷியா ஷைத்தான்கள் சித்தரிக்கின்றார்கள்.
அஹ்லுல் பைத் என்னும் இந்த ஐவரையும் கடவுளாக்குகின்ற கதையையும், கவிதையையும் படிப்பதை வணக்கமாக்கிய இந்த ஆலிம்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று முத்திரை குத்திக் கொள்வது இந்த நூற்றாண்டின் இணையற்ற கேலிக்கூத்தாகும். இவர்களின் ஷியா விஷத்தை இன்னும் தொடர்ந்து பார்ப்போம்.
                                                                                                                                                                    --- எம். ஷம்சுல்லுஹா --- (ஏகத்துவம் இதழ் )
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீலாதும் மவ்லிதும்  எனும் வீடியோ உறைய காண  இங்கே கிளிக் செய்யவும் 


மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார்  என அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
ஃபாத்திமியீன்களின் ஆட்சி காலத்தில் தான் மௌலூது ஆரம்பிக்கப்பட்டதா  அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்
முஹைய்யத்தீன் மெளலூதின்  சின்ன துஆ  காண இங்கே கிளிக் செய்யவும்
அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்
மீலாது விழாவின் பரினாம வளர்ச்சி காண  இங்கே கிளிக் செய்யவும்
நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா?  பதிலை காண இங்கே கிளிக் செய்யவும் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்