"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

பள்ளியா ? திடலா ?

பெருநாள் தொழுகை பள்ளியிலா அல்லது திடலிலா ? நபி ஸல் அவர்கள் பெருநாள் தொழுகையை திடலில் (திறந்தவெளியில்) தொழுபவர்களாக இருந்தார்கள் . (புஹாரி : 304,956 முஸ்லிம் :2090 )

பின்பு வந்த அல் குலபாவூர் ராஷிதீன்களாகிய அபூபக்ர் , உமர் , உத்மான் , அலி (ரலியல்லாஹு அன்ஹும் ) ஆகியோரும் நபியவர்களின் நடைமுறையையே கடைப்பிடித்தார்கள் .
அதேபோன்று மதீனா , கூபா , பஸ்ரா , யேமன் , ஷாம் , எகிப்து, போன்ற பகுதிகளிலும் நபியவர்களின் ஸுன்னஹ்வையே நடைமுறைப் படுத்தினார்கள் .
 ஆனால் , ஹிஜ்ரி 204 ல் மரணித்த இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் , பள்ளியே , பெருநாள் தொழுகை நடாத்தும் அடிப்படை இடம் என வாதிக்கின்றார்கள் , அதாவது , பள்ளியில் இடவசதியிருந்தால் , அங்கே தொழவேண்டும் . அங்கே இடவசதி இல்லாவிட்டால் , திடலில் தொழலாம் என்று கூறுகின்றார்கள் . இவ்வாதத்துக்கு . "மக்காவில் வாழ்ந்த முன்னோர்கள் , மக்கா பள்ளியிலேயே பெருநாள் தொழுகையைத் தொழுதார்கள் " என்பதை ஆதாரமாக முன்வைக்கின்றார்கள் .(அல் உம்மு 1/234)

ஸுன்னாவைப் புறக்கணித்துவிட்டு , முன்னோர்களின் நடைமுறைக்கு முன்னுரிமை வழங்குவது ஆச்சரியமான விடயமாகும் . ஷாபி அவர்களே , நபி அவர்களைத்தொட்டும் ஸஹீஹான ஹதீஸ் வந்தால் , ஏன் , எப்படி எனக் கேள்வி எழுப்பக்கூடாது என்று கூறியுள்ளார்கள் .( ஆதாபுஷ் ஷாபி : இப்னு அபீ ஹாதிம்: பக்கம் : 150 )
ஆனால் , இங்கு அதற்கு முரணாக நடந்துள்ளார்கள் . தனது ஆசான் இமாம் மாலிக் அவர்கள் , மதீனா நகரின் முன்னோர்களை ஆதாரமாகக் கொண்டபோது , அதை ஷாபி அவர்கள் மறுத்தார்கள் .(அல் ரிஸாலா : பந்தி :1557)
ஆனால் இங்கே மக்கா முன்னோர்களின் நடைமுறைக்கு முன்னுரிமை கொடுக்கின்றார்கள் . இதுவும் முரண்பாட்டைச் சித்தரிக்கின்றது . அடுத்ததாக, இமாம் ஷாபி அவர்கள் முன்னோர்களின் செயலுக்கு இரண்டு காரணங்களை முன்வைக்கின்றார்கள் . அவைகளை , மறுப்புடன் கீழே தருகின்றோம் .
(1) //// மக்காப் பள்ளி, பூமியில் சிறந்த இடம் ,அதனால் முன்னோர்கள் இயன்றவரை தொழுகைகளை அங்கே தொழுவதையே விரும்பினார்கள் . ////

(மறுப்பு)
இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல . நபியவர்கள் தனது பள்ளியில் தொழுகைக்கு ஆயிரம் மடங்கு நன்மை இருந்தும் , பெருநாள் தொழுகையை திடலில் தொழுதார்கள் .(புஹாரி :1190 , முஸ்லிம் : 3441 )
மேலும் ஸுன்னத்தான தொழுகைகள், பள்ளியை விட வீடுகளில் தொழுவதே சிறந்தது என நபியவர்கள் கூறியுள்ளார்கள் . ( (புஹாரி : 731 , முஸ்லிம் : 1861 )
எனவே , பள்ளியின் சிறப்பைக் காட்டி , திடல் தொழுகையை விடமுடியாது .

(2) ////// மக்கா , மிகவும் இடம் நெருக்கடியான நிலம் . குடியிருப்புப் பகுதிக்கு அப்பால் , பெரிய பரந்த பகுதி கிடையாது . எனவேதான் முன்னோர்கள் மக்கா பள்ளியில் தொழுதார்கள் .///
 (மறுப்பு ) இக்காரணம் ஏற்கத்தக்கது . ஏவல்கள் என்பவை, சக்திக்கு உட்பட்டவாறே நிறைவேற்றப்படுகின்றன . எனவே ஷாபி அவர்கள் , " பெருநாள் தொழுகை , திடலில் தொழப்படவேண்டும் , ஒரு ஊரில் திடல் இல்லை என்றால் பள்ளியில் தொழலாம் " என்று கூறியிருக்கவேண்டும் . ஆனால் அவர்களோ பள்ளியை அடிப்படையாக்கி , திடலை இரண்டாந்தரத்துக்கு தள்ளிவிட்டார்கள் . இங்கேதான் அவர்களின் தவறு இழைத்துள்ளார்கள் .
ரிழ்வி முப்தி , ஹாஷிம் சூரி(!) ஆகியோர் சமைத்த பத்வாவில் , " நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மஸ்ஜிதில் இடவசதி போதாமை காரணமாகவே முற்றவெளிக்குச் சென்றார்கள் என்று ஸுனன் அல்-பைஹகீ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றை இக்கருத்துக்கு வலுவாக எடுத்துக் கொள்ளலாம் " எனக் கூறியுள்ளார்கள் .

இது இவர்களின் ஹதீஸ் கலை பற்றிய அறிவின்மையையே காட்டுகின்றது . இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் அப்தில் அஸீஸ் பின் அப்திர் ரஹ்மான் என்ற மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் காணப்படுகிறார் . அவரைப் பற்றி இமாம் புஹாரி அவர்கள் " மிகவும் முரண்பாடான ஹதீகளை அறிவிப்பவர்"منكر الحديث எனவும் , இமாம் நஸாயி : ஹதீஸில் ஒதுக்கப்பட்டவர் متروك الحديث" எனவும் கூறியுள்ளனர் .

ரிழ்வி முப்தி , ஹாஷிம் சூரி ஆகிய இருவரும் , பள்ளியில் தொழுவது சிறந்தது என பத்வா வழங்கிவிட்டு , திடலில் பெருநாள் தொழுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
இது இவர்களின் அறியாமையைக் காட்டுகின்றதா ? அல்லது அல்லாஹ்வை மறந்து , மனிதர்களை திருப்திப்படுத்தும் இக்லாஸ் இல்லாத தன்மையைக் காட்டுகின்றதா ?! இவ்விருவரும் ஸுன்னாஹ்வுக்கு விரோதமான வேறு பத்வாக்களையும் வெளியிட்டுள்ளார்கள் , அவைகளை , இன்ஷா அல்லாஹ் சந்தர்ப்பம் வரும்போது தெளிவுபடுத்துவோம் .
அல்லாஹ் சத்தியத்தைக் காட்டி , அதன்பிரகாரம் நடந்துகொள்ள அனுகூளமளிப்பானாக
( கலாநிதி அஹ்மத் அஷ்ரப் )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்