"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

திடலில் தான் பெருநாள் தொழுகையா?

நமது சமூகத்தில் பெரும்பாலும் பெருநாள் தொழுகைகள் பள்ளிவாசல்களில் தான் வருடா வருடம் நடந்தேறுகிறது. உயிரிலும் மேலாக நபியை நேசிக்கிறோம் என்று சொல்பவர்கள், “தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளை நபியவர்களின் வாழ்க்கை வழிமுறை” என்று கூறுபவர்கள், “வேற்றுமையில் ஒற்றுமை” பேசுபவர்கள் “நபியவர்கள் பெருநாள் தொழுதது பள்ளியிலா? திடலிலா?” என்பதை சிந்திக்க மறந்து விட்டனர்.

உலமாக்களின் சங்கமாவது இது பற்றி சிந்தித்ததுண்டா? நபி வழியை வலியுறுத்தி பள்ளிவாசல்களுக்கு கடிதங்கள் அனுப்பியதுண்டா?

எது நபி வழி?

நபியவர்கள் பெருநாள் தொழுகையை திடலில் தொழுததற்குத் தான் ஆதாரம் உண்டு. பள்ளியில் தொழுததாக எந்த ஆதாரமும் கிடையாது.

பின்வரும் ஹதீஸ்களைக் கவனியுங்கள்:

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள்… ஸஹீஹ{ல் புஹாரி – 956

நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப் பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி(ஸல்) தொழுவார்கள். ஸஹீஹ{ல் புஹாரி – 973 

நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தைவிட்டு விலகியிருப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி). ஸஹீஹ{ல் புஹாரி – 974

உலமாக்களே! பள்ளி நிர்வாகிகளே!!

இந்த ஹதீஸ்களைப் பார்த்து விட்டு இன்னும் ஏன் தாமதிக்கின்றீர்கள்?? நபியைப் பின்பற்றுவதில் தயக்கமா?? அல்லது இவ்வளவு காலம் நீங்கள் சொல்லி வந்தது பிழையாகி விட்டதே என்ற வெட்கமா??
அசத்தியத்தில் உள்ளவர்களில் பலர் நபிக்கும் மார்க்கத்தை கற்றுக் கொடுக்க முற்படுவது தான் கவலைக்குரிய விடயம்..

அசத்தியவாதிகளின் கூற்று:

நபியின் காலத்தில் பள்ளிவாசலில் இடம் போதாது.. அதனால் தான் நபியவர்கள் திடலில் தொழுவித்தார்கள்..”
இன்றும் அசத்தியத்தில் உள்ள உலமாக்கள் மனோ இச்சையின் அடிப்படையில் இதைப் பேசித் தான் தப்பி விடுகின்றனர்..

இக்கூற்று சரியானதா?

“பள்ளிவாசலில் இடம் போதாது” என்பதனால் தான் நபியவர்கள் திடலை நாடினார்கள் என்று உங்களுக்கு சொன்னவர் யார்? அது தான் காரணம் என்று நபி சொன்னாரா? அல்லது நபியின் காலத்தில் வாழ்ந்த யாராவது சொன்னார்களா?

நபியின் பெயரால், மார்க்கத்தின் பெயரால் நாமாக கற்பனை செய்து இது தான் காரணம் என்று கூறுவது பெரும் குற்றம் இல்லையா? நபியை அவமதிக்கும் செயல் இல்லையா?
“பள்ளியில் இடம் போதாது” என்பது தான் காரணம் என்பதற்கு பலவீனமான ஹதீஸ்களில் கூட ஆதாரம் கிடையாது.

யார் என் மீது பொய் சொல்கிறாரோ அவரது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்” என்ற நபியின் எச்சரிக்கையை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

நபியின் காலத்தில், பெருநாள் தொழுகைக்கு பள்ளியில் இடம் போதாது என்றிருந்தால் ஜும்ஆ தொழுகைக்கு மட்டும் எப்படி பள்ளியில் இடம் போதுமாக ஆனது?? ஏனெனில் நபியின் காலத்தில் பெருநாள் தொழுகைக்கு கூடுகின்ற மக்களின் தொகைக்கும் ஜும்ஆ தொழுகைக்கு கூடுகின்ற மக்களின் தொகைக்கும் எந்த வித்தியாசமும் இருக்கவில்லையே! பெண்களும் ஜும்ஆவுக்கு சென்றார்களே!!

திடலின் முக்கியத்துவம்

ஒரு தொழுகை தொழுதால் ஆயிரம் தொழுகை தொழுத நன்மை கிடைக்கும் பாக்கியம் மஸ்ஜிதுந் நபவிக்கு உண்டு. அப்படியிருந்தும் அந்தப் பள்ளியை விட்டு விட்டு மக்களை நபிகளார் திடலுக்கு அழைத்தார்கள் என்றால் பெருநாள் தொழுகையை திடலில் தான் தொழ வேண்டும் என்பதன் முக்கியத்துவம் இங்கு உணர்த்தப்படுகின்றது என்பதை விளங்கலாம்.

எனவே, எது நபி வழியோ அது மட்டுமே நேர்வழி. அதுவே சுவனத்தின் வழி. அதையே நாமும் பின்பற்றுவோம்.

குறிப்பு: மழை பெய்தால் விதிவிலக்கு உண்டு


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்