அல்லாஹ்வுக்கென்று தனித் தோற்றம் உள்ளது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். புனிதத் தோற்றமுடைய அந்த அல்லாஹ்வை இவ்வுலகில் பார்க்கலாம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
தங்கள் வாதத்துக்கு திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து சில ஆதாரங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர். அவர்கள் முன் வைக்கும் ஆதாரங்கள் இதோ:
நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்க வில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். (அல்குர்ஆன் 53:1,2)
மேலே நாம் அடிக் கோடிட்டுக் காட்டியிருக்கும் வார்த்தைகள் ஹுவ என்ற சுட்டுப் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் அதற்கு அல்லாஹ் என்றும் பொருள் கொள்ளலாம். ஜிப்ரீல் என்றும் பொருள் கொள்ளலாம்.
"நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள்' என்ற கருத்துடையவர்கள், இந்த இடத்தில் "அவரை' என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக "அவனை' அதாவது அல்லாஹ்வை என்று மொழி பெயர்க்கின்றனர்.
"மற்றொரு முறையும் ஸித்ரத்துல் முன்(த்)தஹா அருகில் அவனைக் கண்டார்'' என்று இந்த வசனத்தில் கூறப்படுவதால் "முதல் தடவை பார்த்தது இந்த உலகத்தில் தான்; எனவே இதன் படி இந்த உலகத்தில் அல்லாஹ்வைப் பார்க்கலாம்'' என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த அடிப்படையில் இவ்வசனம் அவர்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
இந்த வசனத்திற்கு அவ்வாறு பொருள் கொள்ள இடமிருக்கின்றது என்பதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் இவ்வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்றால் தான் இவ்வாறு பொருள் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் அளித்து விட்டால் இவ்வாறு பொருள் செய்ய முடியாது. நபி (ஸல்) அவர்கள் "அவரை' என்ற பதத்திற்கு "ஜிப்ரீல்' என்று விளக்கம் அறித்துள்ளார்கள்.
நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) "அபூ ஆயிஷாவே! மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்'' என்று கூறினார்கள். அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்'' என்று சொன்னார்கள். சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் உடனே எழுந்து (நேராக) அமர்ந்து, "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கொள்ளுங்கள்! அவசரப்படாதீர்கள்! வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ், "திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்'' (81:23) என்றும் "அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்'' (53:13) என்றும் கூறவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.
இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப் பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது'' என்று கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (6:103) அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? "வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (42:51) (பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்) அறிவிப்பவர்: மஸ்ரூக் நூல்: முஸ்லிம் 287
இந்த ஹதீஸில், "அவரைக் கண்டார்' என்பது ஜிப்ரீலைக் கண்டதைத் தான் குறிக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கமளிக்கின்றார்கள். எனவே மேற்கண்ட வசனத்திற்கு அல்லாஹ்வைக் கண்டார்கள் என்று நாம் பொருள் கொள்ள முடியாது.
அல்லாஹ்வை இந்த உலகத்தில் பார்க்க முடியும் என்று கூறுபவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம் திர்மிதீயில் இடம் பெறும் செய்தியாகும்.
"முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய போது "அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான் என்று அல்லாஹ் கூறவில்லையா?'' என்று நான் கேட்டேன். "நாசமாய்ப் போக! அ(வனைக் கண்கள் பார்க்காது என்ப)து அவன் தனது இயற்கையான ஒளியில் காட்சி தரும் போது தான்'' என்று கூறி விட்டு "இரண்டு முறை அவனை (அல்லாஹ்வை) அவர்களுக்குக் காட்டப்பட்டது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இக்ரிமா நூல்: திர்மிதீ 3201
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் இரண்டு தடவை என்பது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தான். ஆனால், தாம் இரண்டு தடவை பார்த்தது ஜிப்ரீலைத் தான் என்று நபி (ஸல்) அவர்களே தெளிவு படுத்திய பிறகு இந்த விளக்கம் முற்றிலும் வலுவிழந்து போகின்றது. அதனால் இந்த இரண்டாவது ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை.
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை உள்ளத்தால் பார்த்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 284
(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை (53:11), நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:13) ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது உள்ளத்தால் பார்த்தார்கள் அறிவிப்பவர்: அபுல் ஆலியா நூல்: முஸ்லிம் 285, திர்மிதீ 3203
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என்ற கருத்து ஏற்கும் வகையில் இல்லை. பார்வை என்பது கண்கள் சம்பந்தப்பட்டதாகும். இதை உள்ளத்துடன் தொடர்பு படுத்துவது பொருத்தமான ஒன்றாகத் தோன்றவில்லை.
மேலும் இக்கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாகத் தான் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 53:13 வசனத்தின் விளக்கமாகத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைக் கூறுகிறார்கள். ஆனால் அவ்வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.
"நபி (ஸல்) அவர்கள் கண்டதாகக் கூறப்படுவது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான்'' என நபி (ஸல்) அவர்களே விளக்கியுள்ளதால் இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் ஏற்புடையதல்ல. எனவே இந்த சாராரின் மூன்றாவது ஆதாரமும் அடிபட்டுப் போகின்றது.
தூதரிடம் தோழர் கண்ட பேட்டி நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்களா? என்ற பிரச்சனை நபித்தோழர்களுக்கு மத்தியிலும் சுற்றி வந்திருக்கின்றது. அதனால் இது குறித்து அபூதர் (ரலி) அவர்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமே பேட்டி கண்டு விடுகின்றார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு "அவன் ஒளியாயிற்றே நான் எப்படிப் பார்க்க முடியும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூற்கள்: முஸ்லிம் 291, திர்மிதீ 3204
அல்லாஹ்வைப் பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அவன் ஒளியாயிற்றே என்று காரணம் காட்டி மறுத்து விடுகின்றார்கள். இதே காரணத்தை நபி (ஸல்) அவர்கள் மற்றொரு இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை:
1. வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.
2. அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.
3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது.
4. (மனிதன்) பகலில் செய்த செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது.
5. ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில், நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: முஸ்லிம் 293
இவ்வுலகில் படைப்பினங்களால் அல்லாஹ்வை ஏன் பார்க்க முடியாது என்ற காரணத்தை நபி (ஸல்) அவர்கள் இங்கு விளக்குகின்றார்கள்.
மூஸா நபி அல்லாஹ்வைப் பார்த்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் கூறும் இந்தக் காரணத்தினால் தான் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைக் காண இயலாமல் ஆனார்கள்.
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார். (அல்குர்ஆன்7:143)
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் "உன்னை நான் பார்க்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்த போது "என்னை நீர் பார்க்கவே முடியாது'' என்று இறைவன் பதிலளித்துள்ளான். அல்லாஹ் மலைக்கு காட்சியளித்த போது நபி மூஸா (அலை) அவர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று அவனது பேரொளி மலைகளைத் தூள் தூளாக்கி விட்டது. ஒளி அலைகளைத் தாங்காத விழித்திரை உண்மையில் அத்தகைய ஒளி வெள்ளத்தைத் தாங்கும் ஆற்றல் கண்களுக்கு இல்லை என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது.
பூமியைத் தினம் தினம் எத்தனையோ துகள்களும், வெளிச்சங்களும், அலைகளும், கதிர்களும் தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள், எக்ஸ் ரேக்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலட், இன்ஃப்ரா ரெட், ரேடியோ அலைகள், டெலிவிஷன், ரேடார் போன்ற கதிர்கள் முதல் தூர, தூர நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வரும் கதிரியக்க வெள்ளங்கள் வரை அனைத்தும் நாம் தெருவில் செல்லும் போதும் வீட்டில் தூங்கும் போதும் எப்போதும் நம்மைத் தாக்குகின்றன.
இத்தனை அலைகளில் நாம் பார்ப்பது ஒரு சிறிய, மிகச் சிறிய ஜன்னல் மட்டுமே. ஒளி என்பது 375லிருந்து 775 நானோ மீட்டர் அலை நீளம் மட்டுமே. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் நூறு கோடி பாகம். மற்றபடி நம்மைச் சுற்றியுள்ள அத்தனை அலைகளையும் நம் கண்களும் மூளையும் வடி கட்டி விடுகின்றன. அது மட்டுமில்லை. இந்த ஒளி அலைகளிலேயே மூளையும் நரம்புகளும் இன்னும் ஃபில்டர் செய்து விடுகின்றன. நமக்கு உயிர் வாழத் தேவைப்பட்ட காட்சிகளை மட்டுமே நாம் பார்க்கிறோம். பூமியின் மேல் விழும் மற்ற அலைகளை நாம் பார்க்க முடிந்தால் குழப்பத்தில் செத்துப் போய் விடுவோம். அதற்குத் தான் இந்த ஜன்னல். இது மனிதனின் பார்வைத் திறன் பற்றி அறிவியல் கூறும் ஆய்வாகும். இந்த உலகில் வல்ல அல்லாஹ்வை, அவனது பேரொளியைக் காண முடியாது என்பதை அறிவியல் உலகின் இந்த ஆய்வும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM OCT 2005
எம். ஷம்சுல்லுஹா
Merkur Futur Adjustable Safety Razor - Sears
ReplyDeleteMerkur 출장마사지 Futur Adjustable 토토 사이트 Safety Razor is 출장안마 the perfect balance of performance, safety, and comfort. Made in Solingen, Germany, this razor has https://septcasino.com/review/merit-casino/ a ventureberg.com/ perfect balance of