அருள்மிகு ரமலான் மாதம் இது! இந்த மாதம் முழுவதும் நோன்பு
நோற்பதன் மூலம் மக்கள் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர். இது உலகம் முழுவதும் இறைவன் செய்திருக்கின்ற சிறந்த ஏற்பாடாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரு மாத காலம் அல்லாஹ் நடத்துகின்ற அகில உலக திருக்குர்ஆன் மாநாடாகும்.
அப்படிப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் மார்க்கத்தின் காவலர்கள், மாநபியின் வாரிசுகள், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் என்று பறை சாற்றுகின்ற, ஆலிம்கள் என்று மார்தட்டுகின்ற இந்த மவ்லானா மவ்லவிகள் குர்ஆனுக்கு நேர் முரணான பாதையில் பயணம் செய்கின்றார்கள். இதைப் படம் பிடித்துக் காட்டுவ தற்காக இந்த ஆக்கம் ஏகத்துவ இதழில் அளிக்கப்படுகின்றது.
இவர்கள் தங்களை தீனைக் காக்கின்ற தூண்களாக சித்தரிக் கின்றார்கள். அதோடு நின்றால் பரவாயில்லை. கடவுள் கொள்கை முதல் இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்க வழிபாடு வரை உள்ள அனைத்து விஷயங்களிலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடக்கின்ற தவ்ஹீது ஜமாஅத்தினர் மீது வழி கெட்டவர்கள் என்ற முத்திரையைக் குத்தி, சத்தியத்தின் பக்கம் மக்கள் வருவதைத் தடுக்கலாம் என்று கருதுகின்றனர்.
அதனால் இவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்டுவது காலத்தின் கட்டாயமாகின்றது. அதிலும் குறிப்பாக குர்ஆன் பெயரைச் சொல்லி ஏமாற்றும் இவர்களை அந்தக் குர்ஆன் இறங்கிய இம்மாதத்தில் அடையாளம் காட்டுவது பொருத்தமாக அமையும் என்ற அடிப்படையில் இக்கட்டுரையை இடம் பெறச் செய்கிறோம்.
மத்ஹபுவாதிகள் ஒரு புறம் நம்மை ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று பொய்யாக விமர்சித்துக் கொண்டே பகிரங்கமாக எண்ணற்ற ஹதீஸ்களை அவர்கள் மறுத்துக் கொண்டிருக் கிறார்கள். அவற்றை நமது முந்தைய இதழ்களில் தனிக்கட்டுரையாக விளக்கி உள்ளோம். அதுமட்டுமின்றி அவர்கள் திருமறைக் குர்ஆனின் பல்வேறு வசனங்களையும் மறுக்கிறார்கள்.
வணக்க வழிபாடு மற்றும் கொள்கை தொடர்பாகக் குர்ஆன் கூறும் கணக்கற்ற போதனைகளைத் தெரிந்து கொண்டே, அதற்கு மாற்றமாக நடப்பதன் மூலம் குர்ஆனிய வசனங்களை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் என்னென்ன இறை வசனங்களை மறுக்கின்றார்கள் என்ற விபரத்தை முழுமையாகக் காண்போம்.
உரத்த சப்தமின்றி திக்ர்
திக்ர் எனும் இறைவனை நினைவு கூர்வது, மிகச் சிறந்த வணக்கமாகும். அவ்வணக்கத்தை அதிகமாகச் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துவதுடன் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தருகிறது.
உரத்த சப்தமின்றி, மெதுவாக, இரகசியமாக, பணிவுடன் இறைவனை திக்ர் செய்ய வேண்டும் என்பதே இறைவனை நினைவு கூரும் முறையாகும். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.
உமது இறைவனைக் காலை யிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!
திருக்குர்ஆன் 7:205
இந்த இறை வசனத்தை மறுக்கும் வகையில் மத்ஹபுவாதிகள் திக்ர் (?) செய்கிறார்களா? இல்லையா?
ராத்திபு என்றும் ஹல்கா என்றும் பல பெயர்கள் இட்டுக் கொண்டு திக்ர் மஜ்லிஸ் நடத்துகின்றார்கள். அதில் இறைவன் கூறும் இந்த ஒழுங்கைப் பேணுவதில்லை. மைக் செட் போட்டு, கூட்டமாக சப்தமிட்டு கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பணிவுடன் திக்ர் செய்யுமாறு இறைவசனம் கூறியிருக்க, இவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திக்ர் (?) செய்கிறார்கள்.
இவர்களது இந்தச் செயல் இறைவசனத்திற்கு எதிரானது என்பதை அறிந்து கொண்டும் தங்கள் முன்னோர்களைப் பின்பற்றும் விதமாகவும் மனோ இச்சையைப் பின்பற்றும் விதமாகவும் மேற்கண்ட இறை வசனத்தைப் பகிரங்கமாக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் அழகான பெயர்கள்
அவ்வாறு திக்ர் செய்யும் போது இன்னுமொரு பாவத்தையும் செய்கிறார்கள்.
இறைவனைப் போற்றிப் புகழ்வதாக இருந்தால் அல்லாஹ் தன்னை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள் ளானோ, என்னென்ன பெயர்களைச் சூட்டியுள்ளானோ அவற்றைச் சொல்லி இறைவனின் புகழ்பாடலாம்.
இறைத்தூதர் கற்றுத்தந்த பிரகாரம் இறைவனது பெருமைகளை எடுத்துக் கூறி இறைவனைப் பெருமைப் படுத்தலாம். அதை விடுத்து இவர்கள் செய்யும் ஈனச் செயல் என்ன தெரியுமா?
இறைவனை திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வின் அழகான பெயர்களைச் சுருக்கி, திரித்துக் கொண்டு இறைவனின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.
அல்லாஹூ என்பதை “ஹூஹூ’ “ஹூஹூ’ என்றும் “அஹ்’ என்றும் இறைவனின் பெயரைச் சிதைத்துக் கூறுகிறார்கள். இதுமட்டுமின்றி ஹக் தூ ஹக் என்றும் இன்னும் பல்வேறு அர்த்தம் இல்லா புது வார்த்தைகளை இவர்களாக உருவாக்கி திக்ர் என்ற பெயரில் செய்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இறையருள் நிறைந்த இந்த ரமலான் மாதத்திலும் கூட இறை சாபத்தைப் பெற்றுத்தரும் இக்காரியத்தில் ஈடுபடுகின்றனர்.
இவர்களது இந்தச் செயல் பின்வரும் வசனத்தை நேரடியாக மறுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 7:180
அல்லாஹ்வின் அழகான பெயர்களை சுருக்கிக் கூறி இந்த வசனத்தை மறுப்பதோடு இறைவனின் கடும் தண்டனைக்கும் ஆளாகிறார்கள் என்பதையும் தெளிவாக அறியலாம்.
எக்ஸ்பிரஸ் கிராஅத்
திருக்குர்ஆன் அருளப்பட்ட, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமலான் மாதத்திலும் கூட இவர்களது குர்ஆன் வசனங்களை மறுக்கும் போக்கு மாறுவதில்லை. மாறாக தொடரவே செய்கிறது.
குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக!
திருக்குர்ஆன் 73:4
திருக்குர்ஆன் வசனங்களை நிறுத்தி, நிதானமாக, திருத்தமாக ஓத வேண்டும் என்று இவ்வசனத்தின் வாயிலாக அல்லாஹ் கட்டளை இடுகிறான்.
எல்லா நிலையிலும் குர்ஆன் என்பது திருத்தமாக ஓதப்பட வேண்டும். குறிப்பாக தொழுகையில் மிக அழகான முறையில் ஓதப்பட வேண்டும்.
ஆனால் இவர்கள் ரமலானில் இரவுத் தொழுகையின் போது குர்ஆன் வசனங்களை என்ன பாடு படுத்துகிறார்கள்?
ரமலான் மாத இரவுத் தொழுகை யின் போது முழுக்குர்ஆனையும் ஓதி முடிக்க வேண்டும் என்று மார்க்கம் கூறாத சட்டத்தை இவர்களாக இயற்றிக் கொண்டு அதற்காக இவர்கள் செய்யும் காரியம் என்ன?
பிஸ்மில்லாஹிர் ,,,,,,, மாலிகி யவ்மி ,,,,,,,, வலழ் ழாள்ளீன்,,,,,
இவ்வாறு பாத்திஹா அத்தியா யத்தை ஓதும் போது மூன்றே மூன்று வார்த்தைகள் மட்டுமே மக்களுக்குப் புரியும். எவ்வளவு தான் கவனத்தைக் குவித்து கேட்டாலும் ஏனைய வார்த்தைகள் புரியாத வகையில் படுவேகமாகக் குர்ஆன் வசனங்களை ஓதுகிறார்கள்.
வேகம் என்றால் அப்படியொரு வேகம். ஒரு எழுத்துக்கூட தெளிவாக உச்சரிப்பதில்லை. 23 ரக்அத்களை 30 நிமிடத்தில் முடிக்கிறார்கள் என்றால் என்னவொரு வேகம் என்பதை கணித்துக் கொள்ளுங்கள்.
இதுதான் குர்ஆனைக் கண்ணியப் படுத்தும் செயலா?
குர்ஆனுக்கு போலியான மதிப்பளிப்பதில் இவர்களை விஞ்ச ஆளில்லை. குர்ஆனைத் தொட்டு முத்தமிடுவதென்ன? அதைத் தரையில் வைக்கக் கூடாது என்று கூறி உயரமான இடத்தில் வைப்பதென்ன? கால் படக்கூடாது, கை படக்கூடாது என இவ்வாறெல்லாம் வெற்று மரியாதைகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.
ஆனால் உண்மையில் குர்ஆனை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிப்பதில்லை.
குர்ஆனை மதிப்பது என்பது அதை அல்லாஹ் சொன்ன விதத்தில் நிறுத்தி நிதானமாக ஒதுவதிலும் குர்ஆன் கூறும் போதனைகளின் படி நடந்து கொள்வதிலும் தான் இருக்கின்றது. அந்த வகையில் இவர்கள் குர்ஆனை அவமதிக்கவே செய்கிறார்கள். நிதானமாக ஓத வேண்டும் என்று கூறும் வசனங்களை மறுக்கவே செய்கிறார்கள்.
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி
egathuvam/july-2015
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்