"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

காய்ச்சலுக்கு இடமாற்றம்

 முஹ்யித்தீன் மவ்லிதில் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கடவுளாகச் சித்தக்கப்பட்டுள்ளார் என்பதைப் பின்வரும் வரிகளிலும் காணலாம்.

6 காய்ச்சலுக்கு இடமாற்றம்

رأى بفج سقيما *منه ابتغى أن يقيما

لما غدا مستقيما *ناداه أن يا قوامي

إني لدين الرشاد *أحييتني كي ينادي

لكم به كل نادي *يا محيي الدين حامي

தமது மகனுக்குக் காய்ச்சல் வந்திருப்பதாக ஒருவர் அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்டார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி உன் மகனின் காதில் நீ எப்போது இவனிடம் வந்தாய்? காய்ச்சலே நீ ஹில்லா என்னும் ஊருக்குச் சென்று விடு! தீங்கிழைக்காதே! இலட்சியத்தை நீ அடைந்து கொள்வாய். (காய்ச்சலுக்கு என்ன இலட்சியம் இருக்கிறதோ?) என்று அப்துல் காதிர் ஜீலானி கூறியதாகக் கூறு என்றார்கள்.

இந்தக் கவிதை வரிகளுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

وحكي ان ابا المعالى اتى الشيخ رضي الله عنه وقال ان ابني لم تفارقه الحمى منذ خمسة عشر شهرا فقال قل في اذنه متى اصرعته يا ام ملدم يقول لك الشيخ ارتحلي الى الحلة كرها وقسرا ففعل ما امر به فلم تعد اليه بعد ثم جاء الخبر ان اهل الحلة وهم الروافض يحمون كثيرا سرا وجهرا


அபுல் மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து என் மகனுக்குப் பதினைந்து மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது என்றார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் காய்ச்சலே நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும் ஊருக்குச் சென்று விடு என்று உன் மகனுடைய காதில் கூறு என்றார்கள். அவர் கட்டளையிடப்பட்டவாறு செய்தார். அதன் பின் அவனுக்குக் காய்ச்சல் ஒரு சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது.

காய்ச்சல் பதினைந்து மாத காலம் நீடிக்குமா? என்ற கேள்வியை விட்டு விடுவோம். மார்க்க அடிப்படையில் இந்தக் கதை நம்பத்தக்கது தானா?

இந்தக் கதையில் அப்துல் காதிர் ஜீலானி நோய் தீர்க்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும், நோயை வழங்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும், காய்ச்சல் என்ற நோயுடன் அப்துல் காதிர் ஜீலானி பேசியதாகவும் கூறப்படுகிறது.

நோய்களை வழங்குபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இந்த அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த உரிமையையும் வழங்கவில்லை. இது இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை. இதைத் திருக்குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் அறியலாம்.

நான் நோயுற்றால் எனக்கு நோய் நிவாரணம் வழங்குபவன் இறைவன் என்று இப்றாஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.

(அல்குர்ஆன் 26.80)

இந்த அப்துல் காதிர் ஜீலானியை விடப் பல கோடி மடங்கு சிறந்தவர்களான இப்றாஹீம் நபியவர்கள் அந்த அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்கிறார்கள். இவரோ நோய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

(அல்குர்ஆன் 57.22)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:107)

இந்த வசனங்களை நிராகரிக்கும் வகையில் இந்தக் கதை அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரில் பலர் நோய்வாய்ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நோயைப் பார்த்துப் பேசி வேறு ஊருக்குப் அனுப்பவில்லை.

ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கூட நோய்வாய்ப்பட்டார்கள்.

மனிதர்களின் இறைவா! இந்தத் துன்பத்தை நீக்கு! இறைவா நீ நிவாரணம் அளிப்பாயாக! உனது நிவாரணம் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று துஆச் செய்யுமாறு தான் அந்தச் சந்தர்ப்பங்களில் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டனர்.

(புகாரி 5675, 5742, 5743, 5744, 5750)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத அதிகாரம் அப்துல் காதிருக்கு வழங்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகிறது.

அந்தச் சிறுவனிடம் இருந்த காய்ச்சலை நீக்கியதோடு இவர் நிற்கவில்லை. ஹில்லா என்று ஊருக்கு அந்தக் காய்ச்சலைத் திருப்பி விட்டாராம். கடுகளவு இஸ்லாமிய அறிவு உள்ளவன் கூட இதை நம்ப முடியாது.

உஹத் போர்க்களத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்ட போது அவர்கள் கோபமுற்று, நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசிய கூட்டத்தினர் எப்படி வெற்றி பெறுவர் என்று கூறினார்கள். உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்கும் இல்லை (அல்குர்ஆன் 3.128) என்ற வசனம் இறங்கியது.

(முஸ்லிம் 3346)

எப்படி இவர்கள் வெற்றியடைய முடியும்? என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இவ்வாறு கூறுகின்ற அதிகாரம் கூட நபியவர்களுக்கு இல்லை என்று இறைவன் பிரகடனம் செய்கிறான். அப்துல் காதிர் ஜீலானியோ ஹில்லா என்ற ஊர்வாசிகளை நோக்கிக் காய்ச்சலை அனுப்பி வைத்தாராம்.

அப்துல் காதிர் ஜீலானியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் மேலானவராக அல்லாஹ்வுக்குச் சமமானவராகக் காட்டும் இந்தக் கதையை உண்மையான முஸ்லிம் எழுதியிருப்பானா? அல்லது அன்னியர்களின் சதித் திட்டத்தில் இந்தக் கதை உருவாக்கப்பட்டதா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் இந்தக் கதையை மவ்லிது என்ற பெயரால் ஓதி வருவது நன்மையைப் பெற்றுத் தருமா? அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தருமா? என்றும் சிந்தித்துப் பாருங்கள்.

தொடரும் ..........
(
p j எழுதிய 'முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு' நூலிலிருந்து )



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்