10 கொள்ளையர்கள் மீது மிதியடிகளை வீசித் தாக்கியவர்
رمى بقبقابيه من قد نهبا *حتى ينال المال من قد سلبا
منهم فادوا ما عليهم وجبا *بالنذر معهما بايدى الخدم
முஹ்யித்தின் மவ்லிதில் காணப்படும் நச்சுக் கருத்து இது. இதன் பொருள் வருமாறு.
கொள்ளையடித்த பொருட்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கொள்ளையர்கள் மீது மரக்கட்டையலான தமது இரு மிதியடிகளை அப்துல் காதிர் ஜிலானி வீசினார்கள். அந்த மக்கள் அந்த மிதியடிகளுடன் நேர்ச்சை செய்த காணிக்கைகளையும் கொண்டு வந்து பணிவுடன் அப்துல் காதிர் ஜிலானியிடம் சமர்ப்பித்தார்கள்.
இந்த நச்சுக் கருத்துக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் பகுதியில் கூறப்படுவதையும் பார்த்துவிட்டு இதிலுள்ள அபத்தங்களை ஆராய்வோம்.
பின்னர் அரபியரல்லாத ஒரு கூட்டத்தினர் அப்துல் காதிர் ஜீலானிக்காக நேர்ச்சை செய்த தங்கம் மற்றும் ஆடைகளுடன் வந்தனர். அவர்களிடம் அந்த மிதியடியும் இருந்தது. அவர்களிடம் இந்த மிதியடி உங்களுக்கு எப்படிக் கிடைத்து? என்று நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள் நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது கிராமப்புறத்திலுள்ள கொள்ளையர்கள் தங்களின் இரு தலைவர்களுடன் வந்து எங்களைத் தாக்கினார்கள். எங்களில் பலரைக் கொன்று விட்டு எங்களிடமிருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர். அப்துல் காதிர் ஜீலானிக்காக நாம் நேர்ச்சை செய்யலாமே என்று இரண்டு வார்த்தைகளைத் தான் நாங்கள் கூறினோம். சொல்லி முடிப்பதற்குள் கடுமையான இரண்டு சப்தங்களைக் கேட்டோம். அவர்களில் ஒருவன் இங்கே வாருங்கள். நம் மீது இறங்கிய வேதனையைப் பாருங்கள் என்றான் நாங்கள் பார்த்த போது அவர்களின் இரு தலைவர்களும் பிணமாகக் கிடந்தனர். ஒவ்வொருவருக்கு அருகிலும் ஒரு மிதியடி கிடந்தது. என்று விளக்கினார்கள். இதை அப்துல் ஹக் என்பார் கூறுகிறார்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைக் கடுகளவு அறிந்தவன் கூட ஜீரணிக்க முடியாத இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய இந்தக் கதையைத் தான் மவ்லிது என்ற பெயரால் பக்தியுடன் முஸ்லிம்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் ஓதி வருகின்றனர்.
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள். (அல்குர்ஆன் 27.62)
நெருக்கடியான நேரத்தில் உதவி செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமுண்டா என்று இறைவன் கேட்கிறான். இதோ நானிருக்கிறேன் என அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக இந்தக் கதை கூறுகிறது.
அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள் (அல்குர்ஆன் 76.7)
அல்லாஹ்வுக்கு வழிபடும் வகையில் யாரேனும் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விதமாக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றக் கூடாது என்பது நபிமொழி.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),நூல்: புகாரி 6700, 6696
அல்லாஹ்வுக்கு மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் கூறுகிறது. இறைவன் தனக்காக எவற்றைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறானோ அவை அனைத்தும் வணக்கங்களாகும். வணக்கங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற அடிப்படைக் கொள்கைக்கு இது முரணானதாகும்.
இந்த வசனமும் இந்த நபிமொழியும் இஸ்லாத்தின் அடிப்படையும் அந்தக் கூட்டத்தினருக்கும் தெரியவில்லை. அப்துல் காதிருக்கும் தெரியவில்லை. ஈமானை இழந்த அந்த மக்களைக் கண்டித்துத் திருத்த வேண்டிய அப்துல் காதிர் அதை அங்கிகரிக்கிறார். தமக்கு இறைத் தன்மை இருப்பது போல் நடந்திருக்கிறார் என்று இந்தக் கதை கூறுகிறது.
காலமெல்லாம் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிச்சயம் இப்படி நடந்திருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரால் வயிறு வளர்க்க எண்ணியவர்களால் இட்டுக் கட்டப்பட்டதே இந்தக் கதை.
அப்துல் காதிர் ஜீலானியைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு நானே கடவுள் என்று வாதிட்ட பிர்அவ்னைப் போல் அப்துல் காதிரை இந்தக் கதை மூலம் சித்தரிக்கின்றனர்.
நபித்தோழர்கள் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானார்கள். அவர்களில் யாரும் நபியவர்களுக்காக நேர்ச்சை செய்ததில்லை. தந்திரமாகப் பல நபித்தோழர்களை அழைத்துச் சென்று எதிரிகள் வெட்டிக் கொன்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மிதியடிகளை எறிந்து அவர்களைக் கொல்லவில்லை.
நபியவர்களையே எத்தனையோ சந்தர்ப்பங்களில் அடித்தனர், உதைத்தனர், இரத்தம் சிந்தச் செய்தனர். அப்போதெல்லாம் மிதியடியை ஏவிவிட்டு அந்தத் துன்பத்திலிருந்து அவர்கள் தம்மைக் காத்துக் கொண்டதில்லை. இந்தத் துன்பங்களைச் சகித்துக் கொண்டார்கள். அல்லது அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். ஆனால் அப்துல் காதிரோ எல்லா அதிகாரமும் தம் கையில் உள்ளது போல் நடந்திருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா? சிந்தியுங்கள்.
அப்துல் காதிர் ஜீலானியை இன்று ஏராளமான முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அகிலமெல்லாம் அவரை அறிந்து வைத்திருக்கவில்லை. அவரது ஊராரும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் மட்டுமே அவரை அறிந்திருந்தார்கள். அவரும் அவரது புகழும் அரபுப் பிரதேசத்தைத் தாண்டியதில்லை. உலகமெங்கும் ஒருவரது புகழ் பரவும் அளவுக்கு எந்த நவீன பிரச்சார சாதனங்களும் அன்று இருந்ததில்லை. அரபியரல்லாத கூட்டத்தினர் நேர்ச்சை செய்தார்கள் என்று இந்தக் கதையில் கூறப்படுவது பொய் என்பதை இதிலிருந்தும் அறியலாம்.
மேலும் கொள்ளையரைக் கொன்ற மிதியடி அப்துல் காதிருடையது தான் என்று அரபியரல்லாத அந்தக் கூட்டத்தினருக்கு எப்படித் தெரிந்தது?
இப்படி ஒரு நிகழ்ச்சி உண்மையிலேயே நடந்திருந்ததாக வைத்துக் கொள்வோம். அப்படி நடந்திருந்தால் அதுவே இந்த மவ்லிதைத் தீயிலிட்டுக் கொளுத்தப் போதுமான காரணமாகும். இஸ்லாத்துக்கும், குர்ஆனுக்கும் மாற்றமாக ஒருவர் நடந்தால் அவர் இறைநேசராக முடியாது. இறை நேசரல்லாத ஒருவரைப் புகழ்ந்து பாடுவது பெருங்குற்றமாகும்.
இந்தக் கதை உண்மையாக இருந்தால் அப்துல் காதிர் ஜீலானி தம்மைக் கடவுளாக எண்ணியதால் மவ்லிதை ஒழித்துக் கட்ட வேண்டும். இந்தக் கதை பொய்யாக இருந்தால் நல்லடியார் மீது அவதுறு சுமத்துவதால் மவ்லிதை ஒழித்தாக வேண்டும். எப்படிப் பார்த்தாலும் ஒழிக்கப்பட வேண்டிய இந்த அபத்தத்தைப் படிக்கலாமா? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்