8 சூம்பிய ஹம்மாதின் கை
القاه حماد بيوم حصر *اذ ما مشى لجمعة فى نهر
فقال شلت كفه فى قبره *فقام يدعو الله مولى النعم
مع ما يؤمن خمسة من قبرا *فى الالف حتى صححت فابتدرا
اصحابه اذ اخبروا ذالخبرا *فطالبوا تحقيقه بالحشم
فاشهد المولى بذاكم يوسفا *وعبد رحمان به قد كشفا
فاستعفروا مما جنوه اسفا *وذاك فضل المصطفى ذى العلم
ஜ?ம்ஆவுக்காக அப்துல் காதிர் நடந்து சென்ற போது அவரது ஆசியர் ஹம்மாத் அவரை நதியில் தள்ளினார். இதனால் மண்ணறையில் ஹம்மாதின் கை சூம்பிவிட்டது. இதைக் கண்ட அப்துல் காதிர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம் பேர் இதற்கு ஆமீன் கூறினார்கள். இதை அப்துல் காதிர் மக்களிடம் கூறியவுடன் ஹம்மாதின் சீடர்கள், இதை நிரூபிக்க வேண்டும் என்று அப்துல் காதிரிடம் கேட்டனர். அல்லாஹ் யூசுஃபுக்கும், அப்துர் ரஹ்மானுக்கும் இந்தக் காட்சியைக் காட்டினான். தங்கள் தவறுக்காக ஹம்மாதின் சீடர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள்.
இது முஹ்யித்தீன் மவ்லிதில் காணப்படும் இந்த வரிகளின் கருத்து. இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக மவ்லித் புத்தகத்தில் இடம் பெறும ஹிகாயத் என்னும் பகுதியையும் பார்த்துவிட்டு இந்தக் கதையில் வரும் அபத்தங்களை ஆராய்வோம்.
ஒரு நாள் நீண்ட நேரம் அப்துல் காதிர் வெயிலில் நின்றார். அவருக்குப் பின் ஏராளமான வணக்கசாலிகள் நின்றனர். நீண்ட நேரம் நின்றுவிட்டுப் பின்னர் சந்தோஷத்துடன் அவர் திரும்பியதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜும்ஆத் தொழச் சென்றேன். நதியோரத்தை நாங்கள் அடைந்த போது என்னை அவர் நதியில் தள்ளினார். அப்போது நான் அல்லாஹ்வின் பெயரால் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுகிறேன் என்றேன். நதியிலிருந்து வெளியேறி அவர்களைத் தொடர்ந்தேன். அவரது சீடர்கள் என்னைப் பழித்தனர். அவர் அதைத் தடுத்தார். இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டவராக அவரை நான் கண்டேன். எனினும் அவரது வலது கை சூம்பியிருந்தது. ஏன் இப்படி என்று நான் கேட்டேன். அதற்கவர் இந்தக் கையால் தான் உம்மைத் தள்ளினேன். இதை நீர் மன்னிக்கக் கூடாதா? இதை நல்லபடியாக மாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யக் கூடாதா? என்று கேட்டார். நான் அல்லாஹ்விடம் கேட்டேன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து எழுந்து ஆமீன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் கையை நல்லபடியாக மாற்றி விட்டான். அந்தக் கையால் அவர் என்னிடம் முஸாபஹாச் செய்தார் எனக் கூறினார். இந்தச் செய்தி பரவியதும் ஹம்மாதின் சீடர்கள் இதை நிரூபிக்குமாறு வற்புறுத்தத் திரண்டனர். பெரும் கூட்டமாக அவரிடம் வந்தனர். அவர்களில் எவருக்குமே பேச இயலவில்லை. அவர்கள் வந்த நோக்கத்தை அப்துல் காதிரே கூறலானார். சிறந்த இருவரைத் தேர்வு செய்யுங்கள். அவர்கள் வாயிலாக இந்த உண்மை நிரூபணமாகும் என்றும் கூறினார். அவர்கள் யூசுஃப், அப்துர் ரஹ்மான் ஆகிய இரு பெரியார்களைத் தேர்வு செய்தனர். இதை ஒரு வாரத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று அப்துல் காதிரிடம் கூறினார்கள். அதற்கு அவர் நீங்கள் இவ்விடத்தை விட்டு எழுவதற்கு முன் இது நிரூபணமாகும் என்றார். சற்று நேரம் சென்றதும் யூசுஃப் எனும் பெரியார் ஓடோடி வந்தார். ஹம்மாதை அல்லாஹ் எனக்குத் தெளிவாகக் காட்டினான். யூசுஃபே நீ அப்துல் காதரின் மதரஸாவுக்கு உடனே செல். அங்குள்ளவர்களிடம் கூறு என்று ஹம்மாத் என்னிடம் கூறினார் என்றார். பிறகு அப்துர் ரஹ்மான் கைசேதப்பட்டவராக வந்து யூசுஃப் கூறியது போலவே கூறினார். அனைவரும் பாவமன்னிப்புக் கேட்டனர்.
இந்தக் கதையில் உள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அபத்தம் 1
ஜூம்ஆ தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத். இறை நேசர்கள் இது போன்ற சுன்னத்துக்களை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர் குளிக்காமலே ஜூம்ஆவுக்குச் சென்றிருக்கிறார். ஹம்மாத் அவரைப் பிடித்துத் தள்ளிய போது தான் ஜூம்ஆவின் குளிப்பை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமலே சென்றிருப்பார். இதிலிருந்து அப்துல் காதிர் சுன்னத்தைப் பேணாதவர் என்று தெரிகின்றது.
ஒரு வணக்கத்தைச் செய்ய வேண்டுமானால் ஈடுபாட்டுடனும், விருப்பத்துடனும் செய்ய வேண்டும். வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டு செய்தால் அது வணக்கத்தை நிறைவேற்றியதாக ஆகாது. இந்த அடிப்படை விஷயம் கூட அப்துல் காதிருக்குத் தெரியவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.
அபத்தம் 2
கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரை அப்துல் காதிர் சந்தித்து உரையாடியதாக இந்தக் கதை கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு போன்ற நிலையில் நடக்கவில்லை. மாறாக நேருக்கு நேர் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல் காதிரும் ஹம்மாதும் ஒருவரை மற்றவர் முஸாபஹா செய்தார்கள் என்றும் இந்தக் கதை கூறுகின்றது. உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன் நேருக்கு நேராகச் சந்திப்பது நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 39.45)
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்! என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(அல்குர்ஆன் 23.99, 100)
இறந்தவர்களுக்கும் இவ்வுலகில் வாழ்வோருக்குமிடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவரை அப்துல் காதிர் ஜீலானி நேருக்கு நேராகச் சந்தித்ததும், அவருடன் உரையாடியதும், முஸாபஹா செய்ததும் பச்சைப் பொய் என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
இந்தக் கதையில் ஹம்மாத் என்பவரின் கை சூம்பியிருந்ததைத் தவிர மற்றபடி அவர் நல்ல நிலையில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. நல்ல மனிதர்கள் கப்ரில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். அந்த விளக்கத்துக்கு மாற்றமாக இந்தக் கதை அமைந்திருக்கின்றது.
பின்னர் நல்லடியாரின் மண்ணறை விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும். பின்பு அவரை நோக்கி உறங்குவீராக எனக் கூறப்படும். நான் எனது குடும்பத்தினரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து உம்மை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள். இது நபியவர்கள் தந்த விளக்கம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி
நல்லடியார்கள் உறக்க நிலையில் உள்ளனர். யாராலும் அவர்களை எழுப்ப முடியாது. மறுமை நாளில் இறைவனால் அவர்கள் எழுப்பப்படும் வரையிலும் அவர்கள் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. அப்துல் காதிர், ஹம்மாத் என்பவரை நேருக்கு நேர் சந்தித்தாகக் கூறுவது பொய் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.
அபத்தம் 3
ஐயாயிரம் அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீன் கூறியதாகவும் இந்தக் கதை கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற மேற்கண்ட ஹதீஸுக்கு இது முராணாக உள்ளது.
இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.
(அல்குர்ஆன் 30:52)
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.
(அல்குர்ஆன் 35:22)
இறந்தவரைக் கேட்கச் செய்ய நபியாலும் முடியாது என்ற குர்ஆனின் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக உள்ளது.
அபத்தம் 4
இந்தச் செய்தியை நம்ப மறுத்த ஹம்மாதின் சீடர்களுக்கு அப்துல் காதிர் இதை நிரூபித்த விதமும் ஏற்கத்தக்கதாக இல்லை.
இந்த இடத்தை விட்டு நீங்கள் எழுவதற்கு முன் நிரூபிக்கிறேன் என்று கூறியது மறைவான ஞானம் அவருக்கு உள்ளது என்று கூறுகின்றது. மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை முன்னர் நாம் நிரூபித்தோம்.
ஹம்மாத் என்பவர் யூசுஃபுக்கும் அப்துர் ரஹ்மானுக்கும் காட்சி தந்ததாகக் கூறுவதும் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளுக்கு முரணாக உள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்துல் காதிர் இவ்வாறு கூறியிருந்தால் அவரது காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் இது பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது. இது போல் புனையப்பட்ட மற்றொரு கதையைப் பார்ப்போம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்