அவ்லியா என்ற வார்த்தை வலீ என்பதன் பன்மையாகும். வலீ என்றால் பொறுப்பாளன், அதிகாரி, எஜமான், நேசன் என்று பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. நாம் இங்கே பார்ப்பது, அல்லாஹ்வின் நேசன் என்ற பொருளில் அமைந்த வலியுல்லாஹ்வைத் தான்.
ஒருவர், அல்லாஹ்வின் நேசர் ஆக வேண்டுமென்றால் அதற்காக அவர் தன்னை ஆன்மீகப் பாதையில் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஒரு நான்கு வழிச் சாலை. ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிபத் என்பது அந்த நான்கு வழிச் சாலைகளுக்குப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆன்மீக உலகத்தில் நுழைந்தவர் ஐம்புலன்களை அடக்கி ஆள வேண்டும். அவர் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் பட்டை தீட்டிக் கொள்ளவும் இறைநேசராகப் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் ஓர் ஆன்மீக ஆசானிடம் பாடம் கற்க வேண்டும். தனது ஆசான் சொல்கின்ற கட்டளைக்கு மறு வார்த்தை பேசாமல் அப்படியே கட்டுப்படவேண்டும். அதற்காக ஒரு பைஅத், அதாவது ஓர் உடன்படிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பைஅத்திற்கு பின் ஷைகு என்ற அந்த ஆசானிடம் அப்படியே ஒர் மய்யித்தாக ஆகி விடவேண்டும். அதாவது குளிப்பாட்டப்படும் ஒரு மய்யித் ஏன், எதற்கு என்று கேட்காதோ அது போன்று அவர் தன்னை ஒரு செத்த சவமாக்கி அவரிடம் சரணாகதியாகி விடவேண்டும்.
இன்ன வீட்டில், இன்ன பெண்ணிடம் போய் நீ விபச்சாரம் செய் என்று ஷரீஅத்திற்கு மாற்றமாகச் சொன்னாலும் அவருக்குக் கட்டுப்பட்டு, அந்த கட்டளையை நிறைவேற்ற வேண்டும். ஷைக் விபச்சாரமும் செய்யச் சொல்வாரா? என்று விழிப்புருவங்கள் வியப்புக்குறியில் விசாலமாக விரியலாம். வியக்காதீர்கள். மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்.
ஷைக் அனுப்பி வைத்த சீடர் விபச்சாரத்திற்கு என்று சென்றாலும் வீட்டில் சீடர் கண்டதும் கட்டியணைத்ததும் அனுபவித்ததும் கொண்ட மனைவி தான் என்ற விபரம் பின்னர் தான் தெரிய வந்தது. இதற்குத் தான் ஷைகின் சொல்லுக்கு வினா எழுப்பாது, ஷரீஅத்திற்கு மாற்றமாயிற்றே என்று சிந்திக்காமல் விழுந்தடித்து நம்ப வேண்டும்.
ஷரீஅத்திற்கு மாற்றமாக ஷைக் சொன்ன விஷயத்தைச் சரி தான் என்று நிறுவவும் நிரூபிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். அல்குர்ஆன் 10:62,63
இறைநேசனாக ஆவதற்கு அல்லாஹ் இரண்டே இரண்டே அளவுகோல்களை மட்டுமே சொல்கின்றான். ஒன்று ஈமான் கொள்ள வேண்டும். இன்னொன்று அவனை அஞ்ச வேண்டும். இந்த இரண்டுமிருந்தால் அவர் இறைநேசராக ஆகிவிடலாம்.
அவ்லியா ஆவதற்குக் கடமையான வணக்கங்களை தாண்டி உபரியான அமல்களை தனக்காகச் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் இந்த ஹதீஸ் குதூஸிய்யில் சொல்கின்றான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அல்குர்ஆன் 2:165
ஈமான் கொண்டவர்கள் தன்னை அதிகம் நேசிப்பார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுவதற்கு ஏற்ப நாம் அல்லாஹ்வை அதிகம் நேசிக்கும் விதமாக, அதிகமான அளவில் கடமையான வணக்கங்களைத் தாண்டி உபரியான வணக்கங்களைச் செய்ய ஆயத்தமாக வேண்டும். இதன் மூலம் அல்லாஹ்வை நேசிப்பதற்கு ஒரு தனிவழி, ஓர் இருட்டு வழி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்று கடமையான வணக்கங்களின் பட்டியல் உள்ளது. அதில் நாம் முதலில் தொழுகையிலிருந்து உபரியான வணக்கங்களை துவக்குவோம். அதிலும் குறிப்பாக, கடமையான தொழுகைகளை பள்ளிவாசல் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்