கவிதைக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மவ்லிது என்பது கவிதையாக உள்ளதால் அதை ஓதக் கூடாது என்று மவ்லிது மறுப்பாளர்கள் கூறவில்லை.
மாறாக வேறு பல காரணங்களின் அடிப்படையில் தான் அதை மறுக்கின்றனர்.
ஆனால் மவ்லிது ஆதரவாளாகள், மக்களை திசை திருப்பும் எண்ணத்தில் இஸ்லாம் சில கவிதைகளுக்கு வழங்கியுள்ள அனுமதியை அதற்குரிய ஆதாரங்களை எடுத்து வைத்து, நபி(ஸல்) அவர்களே கவிதையை அங்கீகரித்துள்ளனர்” என்பதால் தாராளமாக மவ்லிது ஓதலாம் என்கின்றனர்.
“கவிதை” என்ற காரணத்துக்காக மவ்லிதை நாம் மறுக்கவில்லை. வேறு பல காரணங்களுக்காகவே மவ்லிது மறுக்கப்படுகின்றது. மறுப்பத்குரிய காரணங்கள் இருக்குமானால், வசனமாக இருந்தாலும் நாம் மறுப்போம். எனவே கவிதைக்கு இஸ்லாம் வழங்கியுள்ள அனுமதியை, இன்றைய மவ்லூதுகளை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்துவது பொருந்தாததாகும்.
அதை விரிவாகப் பார்ப்பதற்கு முன், கவிதை பற்றி இஸ்லாத்தின் நிலையைத் தெரிந்து கொள்வது பிரச்சனையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவும்.
கவிதையும், கவிஞர்களும்
கவிஞர்களை வழி கெட்டவர்கள் தான் பின்பற்றுகின்றார்கள். “நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகின்றனர்”. என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை (செய்ததாக) கூறுகின்றனர். (அல்குர்ஆன் 26 : 224, 225, 226)
இந்தத் திருக்குர்ஆன் வசனம் “கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் இல்லை, அவர்கள் பொய்கள் பல கூறுபவர்கள்” என்று நமக்குத் தெளிவு படுத்துகின்றது.
“உள்ளங்களில் ஒருவனின் உள்ளத்தில் கவிதை நிரம்பியிருப்பதை விட, அவனது உள்ளத்தில் ‘சீழ்’ நிரம்பி இருப்பது மேலானது” என்பது நபிமொழி
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, தாரமீ
நபி(ஸல்) அவர்களுடன் ‘அர்ஜ்’ என்ற ஊருக்கு நாங்கள் சென்று கொண்டிருந்த போது, கவிதை இயற்றிக் கொண்டு ஒரு கவிஞர் தென்பட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்! உங்களில் ஒருவரது உள்ளம் கவிதையால் நிரம்பி இருப்பதை விட ‘சீழ்’ நிரம்பி இருப்பது மேலானது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயிதுல் குத்ரீ (ரழி) நூல் : முஸ்லிம்
மேற்கூறிய திருக்குர்ஆன் வசனமும், இரு நபி மொழிகளும், கவிஞர்களையும், கவிதைகளையும் கடுமையாகக் கண்டனம் செய்கின்றன. இதிலிருந்து கவிதையை இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை என்று தெரிகின்றது. எனினும் இந்தக் கண்டனம் எல்லாக் கவிஞர்களுக்கும், எல்லாக் கவிதைகளுக்கும் பொருந்தாது. அதற்குரிய ஆதாரங்களைப் அடுத்து பார்ப்போம்.
கவிதைக்கு அனுமதியும், கவிஞர்களுக்கு அங்கீகாரமும்
அல்லாஹ் தன் திருமறையில் கவிஞர்களைக் கண்டித்து விட்டு அதிலிருந்து சிலருக்கு விலக்கமளிக்கிறான். அந்தச் சிலர் கண்டனத்திற்கு உரியவர்கள் அல்லர் என்பதையும் தெளிவுபடுத்துகிறான். நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய வசனத்திற்கு அடுத்த வசனங்களில் பின்வருமாறு கூறுகிறான்.
“எவர் விசுவாசம் கொண்டு, நற்கருமங்களைச் செய்து, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்து, (பிறர் நிந்தனையால்) பாதிக்கப்பட்ட பின்னர் (தம் கவிதையால்) பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் மேற்கூறிய கண்டனத்திற்குரியவர்கள்) (அல்குர்ஆன் 26 :227)
இந்தத் திருவசனத்தில் “பிறரைக் கவிதையால் வசைபாடுவதை முதலில் நாம் துவக்கக் கூடாது. நியாயமில்லாமல் கவிதையால் நாம் அர்ச்சிக்கப்படும் போது, கவிதையால் அவர்களை அர்ச்சிக்கலாம்” என்று வல்ல இறைவன் அனுமதிக்கின்றான்.
இந்த அடிப்படையிலேயே நபி(ஸல்) அவர்கள் பல கவிஞர்களை அங்கீகாரம் செய்தனர்.
நபி(ஸல்) அவர்கள், ஹஸ்ஸான் (ரழி) அவர்களை நோக்கி, (கவிதையால்) “இந்தக் காபிர்கள் மீது வசைபாடு! உன்னுடன் ஜிப்ரில்(அலை) இருக்கிறார்கள்” என்றார்கள்.அறிவிப்பவர் ” பரா இப்னு ஆஸிப் (ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
ஹஸ்ஸான் (ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (குரைஷிக் காபிர்களை வசை பாட அனுமதி கேட்ட போது, நபி(ஸல்) அவர்கள் ‘என் குலத்தைப் பற்று எப்படி (வசைபாடுவாய்?) என்று கேட்டார்கள், அதற்கு ஹஸ்ஸான்(ரழி) அவர்கள் “குழைத்த மாவிலிருந்து மயிர் நீக்கப்படுவது போல், (அவ்வளவு பக்குவமாக) உங்கள் குலத்தைச் சேர்ந்த அவர்களை வசைபாடும் போது அவர்களை விட்டும் நான் உங்களை நீக்கி விடுவேன்” என்றார்கள்.அறிவிப்பவர் : அன்னை ஆயிஷத(ரழி) நூல் : புகாரி
ஹஸ்ஸான்(ரழி) அவர்கள் பள்ளிவாசலில் கவிதை இயற்றிப் படிக்கும்போது, உமர்(ரழி) அவர்கள் அவரைக் கண்டிக்கும் விதமாகப் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் (ரழி) அவர்கள் அருகே இருந்த அபூஹுரைரா(ரழி) அவர்களை நோக்கி, “ஹஸ்ஸான்! அல்லாஹ்வின் தூதர் சார்பாக (இவர்களுக்கு) நீர் பதில் கொடுப்பீராக! யா அல்லாஹ்! இவரை ஜிப்ரீல் மூலம் வலுப்படுத்துவாயாக!” என்று நபி(ஸல்) அவர்கள் (என்னைப்பற்றி புகழ்ந்து) கூறியதை நீ செவியேற்றதுண்டா? என்ற கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா(ரழி) அவர்கள் “ஆம்” என்றனர்.அறிவிப்பவர் : ஹஸ்ஸான்(ரழி) நூல் : புகாரி
நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸானுக்காக பள்ளிவாசலில் ஒரு மேடையை ஏற்படுத்தி இருந்தனர். அதில் நின்ற வண்ணம் நபி(ஸல்) அவர்கள் மீது எவர் வசை பாடினாரோ, அவரை ஹஸ்ஸான்(ரழி) வசைபாடுவார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதருக்காக இவர் பதிலடி கொடுக்கும் போது, ஹஸ்ஸானுடன் ஜிப்ரில்(அலை) இருப்பார்கள்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவூது.
நபி(ஸல்) அவர்களை மக்கத்துக் காபிர்கள் – கவிஞர்கள் – தரக்குறைவான வார்த்தைகளால் வசை பாடியபோது, இழி மொழிகளால் அவர்களை அர்ச்சனை செய்த போது ஹஸ்ஸான் (ரழி) போன்ற கவிஞர்கள் மூலம் காபிர்களுக்கு பதில் சொல்ல வைத்தார்கள். அவர்கள் மீது கூறப்பட்ட அவதூறுகளையும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தையும் துடைத்தெறியச் செய்தார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில் களங்கத்தை துடைத்தெறிவதற்காக, கவிதை இயற்றலாம் என்று தெரிவாகின்றது.
கருத்துள்ள கவிதைகள்
சிலரை வசைபாடும் விதத்தில் கவிதை இயற்றுவதென்றால், முதலில் நாம் துவக்கக் கூடாது. எவ்வித நியாயமின்றி நம் மீது களங்கம் சுமத்தப்பட்டால் அதற்கு அதே கவிதையால் பதில் தரலாம் என்பதைக் கண்டோம்.
இன்னும் சில கவிதைகளுக்குப் பொதுவாக அனுமதி உண்டு என்பதையும் ஹதீஸ்கள் நமக்கு உணர்த்துகின்றன. அல்லாஹ்வின் வல்லமையைப் பறைசாற்றும் கவிதைகள் – இஸ்லாமியக் கடமைகளில் ஆர்வமூட்டும் கவிதைகள், இஸ்லாம் தடை செய்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்ளத் தூண்டும் கவிதைகள், இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணில்லாத – கருத்தாழ மிக்க கவிதைகள் ஆகியவற்றுக்கு பொதுவாக அனுமதி உண்டு.
“நாங்கள் இந்த உலகில் வாழும் காலமெல்லாம் (இஸ்லாத்தை நிலை நாட்டிட) போர் புரிவதாக முஹம்மதிடம் உறுதிமொழி கொடுத்தவர்கள்” என்ற பொருள்பட அன்ஸார்கள் ஒரு போர்க் களத்தில் கவிதை பாடினார்கள். (இதைச் செவியுற்ற) நபி(ஸல்) அவர்கள் “இறைவா! மறு உலக வாழ்வைத் தவிர வேறு வாழ்வு கிடையாது. அன்ஸார்களையும், முஹாஜிர்களையும் நீ சங்கைப்படுத்துவாயாக” என்று கூறினார்கள்அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல் : புகாரி.
இறைவனுக்காக தியாகம் செய்வதை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ள இந்தக் கவிதையை நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் செய்துள்ளதை நாம் காண்கிறோம்.
ஆமிர் இப்னுல் அக்வஃ என்ற நபித் தோழர் ஒரு கவிஞராக இருந்தார். ஒரு போர்க்களத்தில், அல்லாஹ்விடம் துஆ செய்யும் கருத்துக்களடங்கிய சில கவிதைகளைப் பாடினார். அதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “இவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக” என்று அவருக்காக துஆ செய்தனர். (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர் : சலமா இப்னுனனனல் அக்வஃ(ரழி) நூல் : புகாரி
இந்த ஹதீஸ் இறைவனிடம் துஆ செய்யும் விதமாக அமைந்துள்ளது . இதையும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளனர். நல்ல கருத்துள்ள கவிதையையும் நபி(ஸல்) அவர்கள் ரசித்துள்ளனர். இஸ்லாமியர் இயற்றிய கவிதைகளை மட்டுமின்றி, காபிர்கள் இயற்றிய கவிதைகளையும் கூட ரசித்துள்ளனர்.
மாற்றாரின் கவிதைகள்
நான் நபி(ஸல்) அவர்களின் வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் “உமையா இப்னு அபிஸ்ஸல்த் (இவர் காபிராக இருந்தவர்) என்பவரின் கவிதைகளில் ஏதேனும் உனக்குத் தெரியுமா? என்று கேட்டனர். நான் “ஆம்! தெரியும் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “எனக்குப் பாடிக்காட்டு!” என்றவுடன் நான் ஒரு கவிதை வரியைக் கூறினேன், “இன்னும் பாடு” என்றனர். மேலும் ஒரு வரியைப்பாடினேன். “இன்னும் பாடு!” என்று அவர்கள் மறுபடியும் கேட்டார்கள். இப்படியே நூறு வரிகளை நான் பாடிக் காட்டினேன்.அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷரீத் (ரழி) நூல் : முஸ்லிம்
இவ்வாறு நான் பாடிக்காட்டிய போது, “(உமையா என்ற) அந்தக் கவிஞர் தனது கவிதையின் கருத்தில் இஸ்லாத்தை நெருங்கி விட்டார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷரீத்(ரழி) நூல் : முஸ்லிம்
“உமையாவின் கவிதை ஈமான் கொண்டுள்ளது. அவரது கல்பு (இதயம்) காபிராக உள்ளது” என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : பத்ஹுல் பாரி, அல்பிதாயா வன்னிஹாயா
இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணில்லாத வகையில் மாற்று மதத்தவர்களால் இயற்றப்பட்ட பாடல்களையும். எடுத்துச் சொல்லலாம்; கேட்கலாம் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களால் இயற்றப்பட்டு, முஸ்லிம்களால் பாடப்பட்டால் அது இஸ்லாமியப் பாட்டு என்று நம்மவர்களில் பலர் தவறாகக் கருதுகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணாக அமைந்திருந்தாலும் கூட அவை இஸ்லாமிய பாடல்கள் என்று கருதப்படுகின்றன. கவிதையின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே, இஸ்லாம் கவிதைகளை அங்கீகரிக்கவோ மறுக்கவோ செய்கின்றது. இயற்றுகின்ற, பாடுகின்ற ஆட்களைப் பொறுத்தல்ல. நம்மவரின் கவிதைகள் “நமனை விரட்ட நாகூரில் மருந்து விற்பதாக” கூறினால் “அது இஸ்லாமியக் கவிதை ஆகி விடாது” ஒரு காபிரின் கவிதையில் இஸ்லாமிய போதனைகள் இருக்குமானால், அதை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது, என்ற உண்மையைத் தான் மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு விளக்குகின்றன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மீலாதும் மவ்லிதும் எனும் வீடியோ உறைய காண இங்கே கிளிக் செய்யவும்
மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார் என அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார் என அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
ஃபாத்திமியீன்களின் ஆட்சி காலத்தில் தான் மௌலூது ஆரம்பிக்கப்பட்டதா அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்
முஹைய்யத்தீன் மெளலூதின் சின்ன துஆ காண இங்கே கிளிக் செய்யவும்
அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்
மீலாது விழாவின் பரினாம வளர்ச்சி காண இங்கே கிளிக் செய்யவும்
நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா? பதிலை காண இங்கே கிளிக் செய்யவும்
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02 காண இங்கே கிளிக் செய்யவும்
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02 காண இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்