///////சிலர் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கக் கூடாதென சொல்வதும் இந்த ஹதீஸைக் கொண்டு முறியடிக்கபடுகின்றது. ஏனெனில் ரஸுல் (صلى الله عليه وسلم ) அவர்கள் இங்கு நேரடியாகவே " யா உஹத் ! " (உஹதே ! ) என்றழைக்கின்றார்கள். அவ்விதம் " யா ரஸுலல்லாஹ் , யா வலிய்யல்லாஹ், யா முஹ்யத்தீன் " என்றழைப்பதில் எவ்வித குற்றமுமில்லை என்று இந்த ஹதீஸைக் கொண்டு இமாம்கள் ஆதாரம் எடுத்துள்ளார்கள்.//// ////
இப்படி போகிறது சமாதி வலிபாட்டினரின் வாதம் ..!!
இப்படி போகிறது சமாதி வலிபாட்டினரின் வாதம் ..!!
நமக்குத் தெரிந்து இப்படி ஒரு ஹதீஸ் முஸ்லிமில் இடம்பெறவில்லை. முஸ்லிமில், நபி (ஸல்) அவர்கள், உஹத் என்று அழைத்ததாக இல்லை. அதற்குப் பதிலாக ஹிரா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.
அதே சமயம் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "உஹுத்! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 3675, 3686
இதில் உஹதே (யா உஹத்) என்று இடம்பெறாமல், உஹத் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஒரு பேச்சுக்கு நபி (ஸல்) அவர்கள், உஹதே என்று அழைத்திருந்தாலும் உஹத் மலையிடம் உதவி கேட்டு அழைக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் கூறுகின்ற கருத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் உஹதே என்று கூப்பிட்டதால் நாம் முஹ்யித்தீனே என்று கூப்பிடலாம் என்று வாதிடுவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகும். இவர்களுக்குத் தலையில் மூளைக்குப் பதில் களிமண் தான் இருக்கின்றது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் உஹதை அழைத்ததாக ஆதாரம் காட்டும் இவர்கள் உஹதையே உதவிக்கு அழைக்கலாமே! அப்துல் காதிரை நபியவர்கள் அழைக்கவில்லை. உஹதைத் தான் அழைத்துள்ளார்கள். அப்படியானால் இருட்டில் அழைப்பதற்கு அப்துல் காதிரை விட உஹத் மலை மேலானதாகும் என்பது இவர்களின் வாதத்திலிருந்து புலப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் உஹதிடம் பேசியதால் உஹத் மலை செவியேற்கின்றது என்று இவர்கள் நம்புவதில்லை. ஆனால் செத்துப் போன முஹ்யித்தீன் செவியேற்பார் என்பதற்கு மட்டும் இதை ஆதாரமாகக் காட்டுவதிலிருந்து இவர்களின் புரட்டு வாதத்தைப் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) உஹதைக் குறிப்பிட்டுப் பேசுவது இலக்கியமாகச் சொல்லப்பட்டதாகும். தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு,,, என்று சொன்னால் தென்றல் காற்றுக்குக் கேட்கும் ஆற்றல் இருக்கின்றது என்று நம்பி யாரும் சொல்வதில்லை. அருள்மிகு ரமளானே வருக என்று கூறுகின்றனர். இதனால் நாம் சொல்வதை ரமளான் கேட்கிறது என்று அர்த்தமில்லை. இவ்வாறு பேச்சு வழக்கில் சொல்லப்படுவதைப் போன்று தான் நபி (ஸல்) அவர்கள் இங்கு உஹத் மலையிடம் பேசுகின்றார்கள்.
(ஏகத்துவம் டிசம்பர் 2012)
*********************************************************************************
*********************************************************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்