சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் இறந்தோர்களை வணங்கும் கூட்டத்தினர், சம்பந்தமில்லாத சில குர்ஆன் வசனங்களையும் பொய்யான தகவல்களையும் கொண்டு வந்து இறந்தவர்களிடம் உதவி கேட்கலாம் என்று கூசாமல் எழுதியுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் இவர்கள் ஆதாரங்களாக குறிப்பிடும் சிலவற்றிற்கு சரியான விளக்கத்தை அறிந்துகொள்வோம்.
ஐந்தாவது ஆதாரம்?
//// தூரத்தில் இருக்கும் ஒரு மனிதரை பல மைல்களுக்கு அப்பாலிருந்து அம்மனிதரின் பெயர் சொல்லி அழைப்பது கூடும். அவ்வாறு தான் சாரி என்பவர் மலையேறும் போது பல மைல்களுக்கு அப்பாலிருந்து யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்கள். உமர் (ரலி) அவர்களின் குரல் சாரியாவின் காதில் விழுந்தது என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது. ///
இது பலவீனமான செய்தியாகும். இந்தச் செய்தி அபூ நுஐம் உஸ்புஹானீ என்பவர் தொகுத்த தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலிலும் இமாம் பைஹகீ அவர்களின் அல்இஃதிகாத் எனும் நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப் போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, "சாரியாவே அந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல்'' எனக் கூறினார்கள். போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலி) அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்க தொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தை படைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன் பிறகு வெற்றி கிடைத்தது. இவ்வாறு மேற்கண்ட செய்தி கூறுகின்றது.
நூல்: தலாயிலுன் நுபுவ்வா 509
இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. இவையனைத்தும் பலவீனமாகவே உள்ளன. மேலுள்ள அறிவிப்பில் அய்யூப் பின் கூத் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
இமாம் புகாரி, நஸாயீ, அபூஹாதிம், ஹாகிம், அஹ்மது பின் ஹம்பள், தாரகுத்னீ, அபூதாவுத் மற்றும் பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 1, பக்கம்: 402
அம்ர் பின் ஹாரிஸ் என்ற நபித்தோழர் வழியாகவும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலில் 514வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில் அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களிடமிருந்து லைஸ் பின் சஅத் என்பவர் அறிவிக்கின்றார். லைஸ் நம்பகமானவர் என்றாலும் இவர் அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களைச் சந்திப்பதற்கு அறவே வாய்ப்பில்லை.
அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) ஹிஜ்ரீ 51ல் மரணிக்கின்றார். லைஸ் ஹிஜ்ரீ 175ல் மரணிக்கின்றார். அம்ர் (ரலி) அவர்களின் மரணத்துக்கும் லைஸ் அவர்களின் மரணத்துக்கும் இடையே 124 வருடங்கள் வித்தியாசம் உள்ளது. இவர் அம்ர் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. எனவே அம்ர் (ரலி) அவர்களுக்கும், லைஸ் அவர்களுக்கும் இடையே குறைந்தது ஒரு அறிவிப்பாளராவது விடுபட்டு இருப்பார். விடுபட்ட இந்த நபர் யார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? என்பதைப் பற்றி எந்த விபரமும் இல்லை. இதன் காரணத்தால் இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.
இந்தச் செய்தி முஹம்மது பின் அஜ்லான் என்பவர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தலாயிலுன் நுபுவ்வா என்ற நூலில் 512வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில் முஹம்மத் பின் அஜ்லான் என்ற நபர் இடம் பெற்றுள்ளார். இவரின் நினைவாற்றல் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். இமாம் ஹாகிம் உட்பட பலர் இவர் நினைவாற்றல் குறைவுடையவர் என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களைத் தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை. இவருடைய கருத்துக்கு ஏற்றவாறு நம்பகமானவர்கள் ஹதீஸ்களை அறிவித்திருந்தால் மட்டுமே இவருடைய செய்திகளைப் பதிவு செய்வார்கள்.
இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் ரீதியில் பலவீனமாக இருப்பதுடன் இதன் கருத்து குர்ஆனுடன் மோதும் வகையில் அமைந்துள்ளது.
மனிதப் பார்வை அடையாத வெகு தொலைவில் நடந்த நிகழ்வை உமர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என இந்தக் கதை கூறுகின்றது. இறைவனுக்கு மட்டும் உரிய மறைவான ஞானம் என்ற அம்சம் உமர் (ரலி) அவர்களிடமும் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கின்றது. இது இணை வைப்பாகும்.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். (அல்குர்ஆன் 6:59)
தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் "உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?'' என்று கேட்பான். "எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர்கள் கூறுவார்கள்.(அல்குர்ஆன் 5:109)
உமர் (ரலி) அவர்களுக்கு இதை இறைவன் அறிவித்துக் கொடுத்திருப்பான் என்று கூற முடியாது. ஏனென்றால் இறைவன் சில நேரங்களில் சில மறைவான விஷயங்களைத் தன் தூதர்களுக்கே கற்றுக் கொடுப்பான். இவ்வாறு இறைவன் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது கூட அதை அவர்கள் மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இறைவன் மறைமுகமான விஷயங்களை கற்றுக் கொடுக்க மாட்டான்.
அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான். அல்குர்ஆன் 72:26
எனவே உமர் (ரலி) அவர்கள் பல மைல் தூரத்துக்கு அப்பாலிருந்து அழைத்ததாக இடம் பெறும் செய்தி பலவீனமானதும் திருக்குர்ஆனுக்கு முரணானதுமாகும்.
(ஏகத்துவம் டிசம்பர் 2012)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்