"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நபி (ஸல்) அவர்களை கஷ்பில் காணமுடியுமா?

கடந்த (2014) மார்ச் மாத மனாருல் ஹுதா இதழில் நபிகளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது தொடர்பாக ஒரு கேள்வி பதில் இடம் பெற்றிருந்தது.

அதில்,  நபிகளாரைக் கனவில் காணலாம். அது தொடர்பாக ஹதீஸ்கள் இருக்கிறது. ஆனால் நனவில் நபிகளாரைக் காண்பது தொடர்பாக நம்பகத்தனமான ஹதீஸ்கள் இல்லை. எனினும் நபிகளாரின் சுன்னத்துகளை அடிபிறழாமல் பின்பற்றும் அல்லாஹ்வின் நல்லடியார்களால் கஷ்பு எனும் அகப்பார்வை மூலம் நபிகளாரை மனித உருவத்தில் காணமுடியும்  என்று ஒரு அற்புதமான பதிலை மவ்லானா அளித்துள்ளார்.

நபிகளாரைக் கனவில் காண்பது தொடர்பாக ஹதீஸ் உள்ளது என்று பதிலளித்த மவ்லானா கஷ்பு என்ற அகஞானத்திற்கு ஆதாரம் இல்லை என்பதை வசதியாக மறைத்துக் கொண்டார்.
முதலில் நபிகளாரை நம்மால் கனவில் காண முடியுமா? என்பது பற்றி ஏற்கனவே நாம் அளித்த விளக்கத்தை பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், எனது (அபுல் காசிம்  எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். யார் என்னைக் கனவில் கண்டாரோ உண்மையில் அவர் என்னைத் தான் கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க முடியாது. என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கின்றாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி  6197
இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் நபிகள் நாயகத்தைக் கனவில் காண முடியும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.
இந்த நபிமொழியை இவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். இந்த நபிமொழியை எவ்வாறு விளங்குவது என்பதற்கு மற்றொரு நபிமொழி துணை செய்கிறது.
 என்னை யாராவது கனவில் கண்டால் விழித்தவுடன் என்னைக் காண்பார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6993

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவர்கள் கனவில் காண இயலும் என்பதை இந்த நபிமொழி விளக்குகிறது.
 என்னைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேரிலும் காண்பார்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிரோடு வாழும் போது மாத்திரம் தான் இது சாத்தியமாகும்.
அவர்கள் உயிரோடு இந்த உலகில் வாழும் போது ஒருவர் கனவில் அவர்களைக் கண்டால் விழித்தவுடன் அவர்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார் என்று இந்த நபிமொழி கூறுகிறது.
இன்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறினால் விழித்தவுடன் அவர் நேரிலும் அவர்களைக் காண வேண்டும். நகமும் சதையுமாக அவர்களை நேரில் காணவில்லையானால் அவர் கனவிலும் அவர்களைக் காணவில்லை என்பது உறுதி.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிறகு எந்த மனிதரும், எந்த மகானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்க்கவே இயலாது என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் இந்த நபிமொழி தெரிவிக்கிறது.
இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படும் ஒரு சந்தேகத்தையும் அதற்கான விளக்கத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
கனவில் ஒருவர் தோன்றி,  நான் தான் முஹம்மத் நபி என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நபிகள் நாயகத்தின் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்ற நபிமொழியின் அடிப்படையில் கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் வந்தார்கள் என்று கருதலாம் அல்லவா? என்பது தான் அந்தச் சந்தேகம்.
 நான் தான் முகம்மது நபி  என்று ஒருவர் கூறுவது போல் கனவு கண்டாலும் அது நபிகள் நாயகம் அல்ல. ஷைத்தான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தியுள்ளான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். ஷைத்தான் நபிகள் நாயகத்தின் வடிவத்தை எடுக்க மாட்டான் என்று தான் அந்த நபிமொழி உத்தரவாதம் தருகிறது. ஷைத்தான் தனக்கே உரிய வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று அந்த நபிமொழி கூறவில்லை.
 என் வடிவில் ஷைத்தான் வர மாட்டான்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். கனவில் ஒருவர் வந்தால் அவர் நபிகள் நாயகமா? இல்லையா? என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபிகள் நாயகத்தை நேரில் பார்த்தவராக இருக்க வேண்டும்.
நேரில் அவர்களை எந்த வடிவத்தில் பார்த்தாரோ அதே வடிவில் கனவிலும் வந்தால் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்று அவரால் அறிந்து கொள்ள இயலும்.
நபிகள் நாயகத்தின் வடிவத்தைக் காணாத ஒருவரால் இதை அறிந்து கொள்ள இயலாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தை எடுப்பதை விட்டும் தான் ஷைத்தான் தடுக்கப்பட்டுள்ளான்.
வேறு வடிவத்தில் வந்து, நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று எந்த நபிமொழியும் இல்லை.

நபிகள் நாயகத்தை ஏற்கனவே நேரடியாகக் கண்டவர் தான் கனவில் காண முடியும். அல்லது கனவில் கண்டவர் பின்னர் நேரில் காண முடியும் என்பதைத் தான் இரண்டு நபிமொழிகளும் கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு  நபிகள் நாயகத்தை இந்தப் பெரியார் கனவில் கண்டார், அந்த மகான் கண்டார்  என்றெல்லாம் கூறப்படுமானால் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்து கஷ்பு எனும் அகப்பார்வை மூலம் நபிகளாரை அவர்களது உருவத்தில் காண முடியும் என்று மௌலான அளித்திருந்த பதிலுக்கான விளக்கத்தையும் காண்போம்.
கஷ்பு எனும் அகப்பார்வை உண்டா?
திருக்குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரம் உண்டா? நிச்சயமாக இல்லை. சூபியாக்கள் என்ற வழிகேடர்களும் முரீது வியாபாரிகளும் கண்டுபிடித்த தத்துவமே கஷ்பு என்பது.

மற்றவர்களுக்கு இருப்பதைவிடக் கூடுதலான மரியாதையை மக்களிடமிருந்து பெறுவதற்காக, தங்களுக்கு அகப்பார்வை உண்டு என்று கூறி மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள்.
இறைவனுடன் வஹீ எனும் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களுக்குத்தான் இறைவன் புறத்திலிருந்து மற்றவர்களுக்குக் கிடைக்காத ஞானம் கிடைக்குமே தவிர மற்றவர்களுக்கு விசேஷ ஞானம் எதுவுமில்லை.
அப்படியிருக்க கஷ்பின் மூலம் நபிகளாரைக் காண முடியும் என்பது அடிமுட்டாள் தனமான மார்க்கத்திற்கு எதிரான கருத்தாகும்.

கஷ்பு எனும் அகப்பார்வை மூலம் நபிகளாரைக் கனவில் கண்டேன் என்று கூறுபவரிடம், உங்கள் வீட்டை எனக்குத் தாருங்கள்; நபிகளார் என்னுடைய கஷ்பில் தோன்றி உங்கள் வீட்டைத் தருமாறு கூறினார்கள் என்று சொன்னால் ஒப்புக் கொண்டு வீட்டைத் தந்து விடுவாரா?
நீங்கள் இத்தனை லட்சம் எனக்குத் தருமாறு உங்கள் தந்தை கஷ்பில் என்னிடம் கூறினார் என்று சம்பந்தமில்லாத, நம் தந்தையைக் காணாத ஒருவர் கூறினால் அதை உண்மை என நம்புவோமா?

தான் தொழாமல் இருந்து கொண்டு மக்கள் கேட்கும் போது, நான் கஷ்பில் தொழுதுவிட்டேன் என்று பதில் கூறுவதற்கும், கடன் தந்தவர் கடனை திருப்பிக் கேட்கும் போது, நான் கஷ்பில் கடனை அடைத்து விட்டேன் என்று பதிலளிப்பதற்கும் தான் இந்தப் போலி கஷ்பு எனும் தத்துவம் உதவும்.

எனவே, இது மக்களை முட்டாளாக்குவதற்காக சூபியாக்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு போலி தத்துவம் என்பதையும் இதற்குக் குர்ஆன் ஹதீஸில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.
பக்கா இணை வைப்பாளர்களான பரேலவிகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் ஓரளவாவது ஏகத்துவக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்ற கருத்து உண்டு.
ஆனால் கஷ்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நனவில், அதாவது இந்த உலகில் காண முடியும் என்ற கொள்கையைச் சொல்வதன் மூலம் பரேலவிகளை விட மோசமான கொள்கையில் இவர்கள் இருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

 (ஏகத்துவம்  மே 2014 )