"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

பரேலவிஷத்தின் பயங்கரவாதம் இறைத்தூதர் இறக்கவில்லையாம்

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருப்பதாகவே பரேலவிகள் வாதிடுகின்றனர். அதற்கு அவர்கள் சில ஆதாரங்களையும் எடுத்து வைக்கின்றனர். அந்த வாதங்களுக்கான மறுப்பை நாம் பார்த்து வருகிறோம்.

நான்,  அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை  என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1147, 2013, 3569

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் அல்லர் என்று கூறி, அவர்களை அல்லாஹ்வின் அந்தஸ்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.
உண்மையில் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் ஏனைய மனிதர்களை விட வேறுபடுகின்றார்கள்; வித்தியாசப்படுகின்றார்கள். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதே சமயம், அவர்கள் அல்லாஹ்வின் அளவுக்கு உயர்ந்து விடுவார்களா? என்றால் அறவே கிடையாது.

இவ்வாறு நாம் சொல்கின்ற போது இந்த பரேலவிஷப் பேர்வழிகள்,  நாங்கள் நபியவர்களை அல்லாஹ்வின் அளவுக்கு உயர்த்தவில்லை  என்று வாயளவில் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களது வாதத்தின் பொருள் இதுதான்.
நாம் தூங்கினால் உளூ முறிந்துவிடும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தூங்கினால் உளூ முறியாது. அதாவது அவர்களுக்குத் தூக்கம் இல்லை. அதனால் அவர்களுக்கு உளூ முறிவதில்லை. எனவே அவர்கள் நம்மைப் போன்ற மனிதரல்ல என்பது தான் பரேலவிகளின் வாதம்.
இவர்களது பாஷையில், நம்மைப் போன்ற மனிதர் அல்ல என்று கூறிவிட்டாலே அது அல்லாஹ்வின் இடத்திற்கு உயர்த்தும் கருத்தில் தான் கூறுவார்கள். உண்மையில் அல்லாஹ்வுக்குத் தான் தூக்கம் என்பதே கிடையாது. இதைத் திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகின்றது.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.அல்குர்ஆன் 2:255 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் தூக்கம் என்பது இல்லை; எனவே அவர்கள் நம்மைப் போன்ற மனிதரல்ல, இறைவனைப் போன்ற, தூக்கம் இல்லாத நிலையில் உள்ளவர்கள் என்பது தான் பரேலவிகளின் கருத்து.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில், தமக்குத் தூக்கம் என்பதே இல்லை என்று கூறவில்லை.  எனது கண்கள் உறங்குகின்றன  என்று இவர்களது நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கின்றார்கள்.
இந்த ஹதீஸை மக்கள் தவறாக விளங்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் ஃபஜ்ர் தொழுகையின் நேரத்தைத் தாண்டி தூங்க வைத்து விடுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம்  இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!  என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் (கண் விழித்து) அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அளவு தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (படுத்து) உறங்கினார்கள். வைகறை நேரம் (ஃபஜ்ர்) நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை (கிழக்கு)த் திசையை முன்னோக்கியபடி தமது வாகன (ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்தபடியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள்  பிலால்!  என்றழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள்,  அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைத் தழுவிக்கொண்ட அதே (உறக்கம்) தான் என்னையும் தழுவிக் கொண்டது என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்)  ;உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள் என்று கூற, உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும்,  தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ்,  என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!  (20:14) என்று கூறுகின்றான்  என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1097
இந்த ஹதீஸில் பிலால் (ரலி) சொல்கின்ற இந்த வார்த்தை மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல்குர்ஆன் 39:42)
உறங்கும் போது எல்லா உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றி விடுகின்றான். காலையில் விழிக்கும் போது அவன் நாடினால் விட்டுவிடுகின்றான். இதுதான் நபி (ஸல்) அவர்களுக்கும், பிலால் (ரலி) அவர்களுக்கும் நடந்திருக்கின்றது. இதையே பிலால் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் சொல்லியும் காட்டுகின்றார்கள்.
அப்படியானால் பரேலவிகள் ஆதாரமாகக் காட்டும் புகாரி 1147 ஹதீஸிற்குரிய விளக்கம் என்ன?
நபி (ஸல்) அவர்கள் வஹீயின் தொடர்பில் உள்ளவர்கள். அவர்களுடைய உள்ளத்தில் எந்த நேரத்திலும் இறைச்செய்தி வந்து கொண்டே இருக்கும்.
நம்முடைய தூக்கத்தில் விளையாடுவது போன்று ஷைத்தான் அவர்களுடைய தூக்கத்தில் விளையாட முடியாது. நாம் தூங்கும் போது நம்முடைய கண்கள், உள்ளம் ஆகிய இரண்டும் சேர்ந்தே உறங்குகின்றன.
செல்போன்களை நாம் சுத்தமாக அணைத்துவிட்டால் அதில் எந்த அழைப்பும் செய்தியும் வருவதில்லை. இதைப் போன்று நம்முடைய உறக்கம் அமைந்துள்ளது.
ஆனால் செல்போனை முழுமையாக அணைத்து வைக்காமல் சைலண்ட் மோடில் போட்டுவிடும் போது, அதில் அழைப்புகள், செய்திகள் அனைத்தும் வந்து கொண்டே இருக்கும். இதுபோன்று நபி (ஸல்) அவர்கள் உறங்கினாலும் அவர்களுடைய உள்ளம் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றது.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். உள்ளம் உறங்காது; கண்கள் உறங்குகின்றன என்ற இந்தச் சிறப்பு நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்பல்ல. அனைத்து நபிமார்களுக்கும் உரிய சிறப்பாகும். இதை புகாரியில் இடம் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர் களுக்கு (மீண்டும்) வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்கல்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர்,  இவர்களில் அவர் யார்?  என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர்,  இவர்களில் சிறந்தவர் என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர்,  இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்  என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபி (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில்-(உறக்க நிலையில்)- அம்மூவரும் வந்த போது தான் அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்; அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத்தூதர்கள் இப்படித் தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களுடைய உள்ளங்கள் உறங்க மாட்டா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.நூல்: புகாரி 3570
அதனால் தான் நபிமார்களின் கனவுகளும் வஹீயாக அமைந்திருக்கின்றன. அவை இறைக் கட்டளைகளாகவும் முன்னறிவிப்புகளாகவும் அமைந்திருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக இப்ராஹீத் நபி அவர்களின் அவர்களின் கனவைக் கூறலாம்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது  என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு  என்று (இப்ராஹீம்) கேட்டார்.  என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்  என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.(அல்குர்ஆன் 37:102) 

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் காட்சிகளைக் காட்டிது தொடர்பான வசனங்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றிரண்டு வசனங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.(அல்குர்ஆன் 48:27) 

நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் மக்காவிற்குச் சென்று உம்ரா செய்வதை அல்லாஹ் கனவின் மூலமாகத் தான் முன்னறிவிப்புச் செய்கின்றான்.
(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்! அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண்பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.
அல்குர்ஆன் 8:43

நபி (ஸல்) அவர்களுக்கு பத்ருப் போர் வெற்றி பற்றிக் கூறி உளவியல்ரீதியான தைரியத்தை கனவின் மூலம் அளிக்கின்றான்.
இந்தக் கனவுகளில் ஷைத்தான் தன்னுடைய கலப்படத்தை ஒருபோதும் செய்ய முடியாது. ஏனெனில் வஹீ என்ற பாதுகாப்பு வளையத்திலும் வட்டத்திலும் உள்ள கனவாகும். ஆனால் நம்முடைய கனவுகளில் ஷைத்தான் விளையாடுவான்.
நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத ஒரு விஷயத்தை (கனவில்) கண்டால் (கண் விழிக்கும்போது) தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பி விட்டு, அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இப்படிச் செய்தால்) அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற் படுத்த முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கத்தாதா (ரலி) அவர்கள் சொன்னதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்,
நூல்: முஸ்லிம் 4213

கண்கள் உறங்குகின்றன; உள்ளம் உறங்கவில்லை என்ற ஹதீஸின் பொருள், நபி (ஸல்) அவர்கள் விழித்திருக்கும் போது எப்படி அவர்களது உள்ளம் பாதுகாப்பாக உள்ளதோ அதே போன்று உறங்கும்போதும் பாதுகாப்பாக உள்ளது. ஷைத்தான் மற்றவர்களிடம் உறக்கத்தில் குப்பை கூளங்களைக் கொட்டுவது போன்று நபிமார்களிடம் செய்ய முடியாது என்பதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது.
நபி (ஸல்) அவர்களது உள்ளம் விழிப்பில் இருப்பதால் அவர்களுக்கு உறக்கத்தில் உளூவை முறிக்கும் காரியங்கள் நிகழ்ந்தாலும் அது தெரிந்துவிடும். இதனால் அவர்களது உளூவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது தான் மேற்கண்ட ஹதீஸின் பொருளே தவிர, நபி (ஸல்) அவர்கள் மனிதத் தன்மையைத் தாண்டி, தூக்கம் மறதி போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட கடவுள் நிலையில் உள்ளவர்கள் என்று ஒருபோதும் விளங்க முடியாது.

பரேலவிகளின் இந்த வாதம் பைத்தியக்காரத்தனமான வாதமாகும். இவர்கள் எடுத்துக்காட்டியிருப்பது ஆதாரம் அல்ல, அபத்தமாகும்.

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற கருத்துக்கு இவர்கள் எடுத்து வைக்கும் பொருந்தாத ஆதாரங்களை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் பார்ப்போம்.
(ஏகத்துவம் 2014 ஏப்ரல்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்