"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நபிமார்களின் உடல்களை மண் தின்பதில்லையே!

இந்த அறிவிலிகள் எதை ஆதாரமாகக் குறிப்பிடுவது என்ற அடிப்படை அறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
காரணம், நபிமார்களின் உடல்களை மண் தின்றுவிடாது என்பதைத் தங்கள் கருத்துக்கு அதாவது நபிகள் நாயகம் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தங்கள் அபத்தக் கருத்திற்கு ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபிமார்களின் உடல்களை பூமி தின்று விடாது என்பது உண்மையே. நபியவர்கள் இதை விளக்கியுள்ளார்கள்.
உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள். அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும். அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும். எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ், நூல்: நஸாயீ 1357

நபிமார்களின் உடல்களை பூமி தின்றுவிடாது என்பதால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று பொருளாகாது.
நபிமார்களின் உடல்களை பூமி தின்றுவிடாத வகையில் அல்லாஹ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளான் என்பதைத் தான் இதிலிருந்து விளங்க முடிகிறதே தவிர நபிமார்கள் உயிருடன் உள்ளார்கள் என ஒரு போதும் விளங்க முடியாது. அறிவுடையோர் அவ்வாறு விளங்க மாட்டார்கள்.
பிர்அவ்னின் உடலை அல்லாஹ் பாதுகாத்துள்ளான் என்று முஸ்லிம் சமூகம் நம்புகிறது. இது குறித்த சரியான விளக்கத்தை இந்த இணைப்பில் காணலாம்.
https://onlinepj.com/217

மக்களின் நம்பிக்கை பிரகாரம் பிர்அவ்ன் உடல் பாதுகாக்கப் பட்டுள்ளது என்பதால் பிர்அவ்ன் உயிருடன் வாழ்ந்து வருகிறான் என்று பொருளாகுமா?

இரசாயனக் கலவைகள் மூலம் இன்றைக்குப் பல உடல்கள் அழியாத படி பாதுகாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் அனைவரும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றா அர்த்தம்?

அரசின் சார்பில் எத்தனையோ உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றாகி விடுமா?

அப்படி ஒரு வாதம் வைத்தால் அது மூளையுள்ளவர்களின் கருத்தாக இருக்க முடியுமா?

ஓர் உடல் அழியாத வகையில் பாதுகாக்கப்படுகிறது என்றால் உடல் (ஜடம்) பாதுகாக்கப்படுகிறது என்று தான் ஆகுமே தவிர உயிருடன் அவர் வாழ்கிறார் என்று ஒரு போதும் ஆகாது.
எனவே இவர்களின் இந்த வாதமும் சரியானதாக இல்லை.

ஒருவர் உயிருடன் இருந்தால் அவரை மண் சாப்பிடுவதில்லை. அவர் உயிருடன் இருப்பதே அவரை மண் சாப்பிடுவதில் இருந்து தடுத்து விடும். உலகில் 700 கோடி மக்கள் வாழ்கிறோம். இவர்களில் யாரையாவது மண் தின்றுள்ளதா? உயிருடன் இருப்பவனை மண் சாப்பிடாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் இந்தக் கேள்வியே எழாது. ஏனென்றால் உயிருடன் இருப்பவரை மண் சாப்பிடாதல்லவா?
அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் தான் அவர்களின் உடலை மண் சாப்பிடுமா என்ற கேள்வியே பிறக்கிறது. இதற்கு,  நபிமார்கள் இறந்து விட்டாலும் அவர்களது உடலை மண் சாப்பிடாது  என்ற கருத்தில் நபிகள் நாயகம் பதிலளிக்கிறார்கள். எனவே இது நபிமார்கள் உயிருடன் இல்லை என்பதற்குத்தான் ஆதாரமாக அமைந்துள்ளது.

ஏகத்துவம் டிசம்பர் 2015

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்