"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

அவுலியாக்களின் அற்புதங்கள்

உயிருடன் இருப்பது மட்டும் பிரார்த்தனை செய்வதற்குரிய தகுதியாகுமா?

ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக அவரிடம் போய்ப் பிள்ளையைக் கேட்க முடியுமா? மழையைக் கேட்க முடியுமா? உயிரோடு இருப்பதால் பிரார்த்திக்கின்றோம் என்றால் பிரார்த்திப்பவர்களும் உயிருடன் தானே உள்ளனர்?
ஈஸா நபி உண்மையாகவே உயிருடன் உள்ளார். மலக்குகள் உயிருடன் உள்ளனர். ஈஸா நபியைப் பிரார்த்திப்பவர்களைக் காஃபிர்கள் எனக் கூறுவோர் தங்கள் செயலை எப்படி நியாயப்படுத்த முடியும்?

அவ்லியாக்களின் அற்புதங்கள்!

நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு ‘மகான்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள்; எனவே அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்கலாம்; பிரார்த்திக்கலாம்’ என்று சிலர் வாதிடுகின்றனர்.
அற்புதங்கள் பற்றி அவர்களுக்கு முழுமையான விளக்கமில்லாத காரணத்தால் தான் இத்தகைய வாதத்தை முன் வைக்கின்றனர்.
‘அவ்லியாக்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள்’ என்ற இந்த நம்பிக்கை தான் தர்கா வழிபாட்டுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

அற்புதங்கள் அல்லாஹ்வின் கையில்

நபிமார்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அற்புதங்கள் நிகழ்த்தியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே அதை மறுப்பவர் குர்ஆனை மறுத்தவராவார்.
ஆனால் நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 13:38
உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.
(அல்குர்ஆன் 40:78)
‘நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 14:11)
அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.
‘இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்’ என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) ‘என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 17:90-93)
மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள்.
மனிதன் என்றும் இறைவனின் தூதர் என்றும் வாதிடும் என்னிடம் இறைவனிடம் கேட்பதை எப்படிக் கேட்க முடியும்? என்ற கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலில் அடங்கியுள்ளது.
அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். அவன் நாடும் போது மனிதர்கள் மூலம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும்.
அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்