"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும்

இஸ்லாம் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு பணிக்கின்ற மார்க்கமாகும். அதற்காகவே மனித, மற்றும் ஜின் இனத்தினர் படைக்கப்பட்டுள்ளனர், உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கை யிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னு கஸீர்).

இந்தக்காலமும் கடந்து, அக்கால மக்களும் மரணித்த பின்னால் அவர்களின் வழித்தோன்றல்களாக வந்த மனிதர்கள் அவர்களிலுள்ள ‘வத்து’ ‘சுவா’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ போன்ற நல்லடியார்களின் உருவங்களை தீட்டி தமது தேவைகளை நிறைவேற்றும் கடவுள்களாக எண்ணி வணங்கி, வழிபட எப்போது ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அதிலிருந்து அம்மக்களைத்தடுத்து நிறுத்துவதற்காக உலகில் முதல் தூதரான நூஹ் (அலை) அவர்கள் இப்பூமியில் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இவ்வாறு மனிதர்கள் ஒவ்வொரு காலத்திலும் தத்தமது கற்பனைகளில் உதிக்கின்றவற்றை தாமாக வணங்கி, வழிபட தலைப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வானவர்களை யும், மற்றும் சிலர் நபிமார்களையும், நல்லடியார் களையும், வேறு சிலர் ஜின்களையும், இன்னும் சிலர் மாட்டையும் வணங்கி வந்தனர்.
மக்கா வாழ் காஃபிர்கள் , அல்லாஹ்தான் இவ்வுலகைப் படைத்தவன், வானங்களில் இருந்து மழை பொழி விப்பவன், அதிலிருந்து உணவளிப்பவன் என்று ஏற்றுக் கொண்டாலும் தமது வணக்க வழிபாடுகளில் அல்லா ஹ்வுக்கு இணைகற்பித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை காஃபிர்களே! எனக் கூறி அழைக்கின்றான்.

தல்கீன் ஓதலாமா ?

ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு ஜனாஸாவை விளித்து மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை சொல்லிக் கொடுப்பதற்கு “தல்கீன்” ஓதுதல் என்று சொல்லப்படும்.
அறபுமொழியிலுள்ள ஓதலும், அதன் மொழி பெயர்ப்பும் பின்னால் வரும்.
என்ற இச்சொல்லுக்கு சொல்லிக் கொடுத்தல் என்ற பொருள் வரும்.

‘உன்னிடம் வானவர்கள் வருவார்கள்.
உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு!
உன் மார்க்கம் எது எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு’
என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன்.

ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இப்படி தல்கீன் என்ற பெயரில், ஜனாஸாவை விளித்து உம்மிடம் கப்றில் வந்து கேள்வி கேட்கும் மலக்குகளிடம் இவ்வாறு, இவ்வாறெல்லாம் விடை சொல் என்று பாடம் நடத்துவது போல் சொல்லிக் சொல்லிக் கொடுத்து,
அது இறந்தவருக்குக் கேட்டு,
அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால்,,,,, இதை விட உச்ச கட்ட மடமை வேறு என்ன இருக்க முடியும்
??

இது போன்ற மூடத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.
அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி) ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்’ என்று கூறுவார்கள்.அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி). நூல்: அபூ தாவூத் 2894, ஹாகிம் 1/370 பைஹகீ 4/56

எனவே மய்யித்திற்குச் சொல்லிக் கொடுக்கும் தல்கீனை ஒழித்துக்கட்டி அல்லாஹ்விடம் அவர் நல்ல முறையில் பதில் சொல்ல அனைவரும் துஆச் செய்ய வேண்டும்.

அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுப்பானா ?

வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும் அதற்கான பதில்களையும் அறிந்து கொள்வோம்.
வாதம் 6
 'அல்லாஹ்வை அதிகமாக நேசித்ததால் அந்த அடியாரின் பார்வையாகவும், செவிப்புலனாகவும் கரமாகவும், காலாகவும் அல்லாஹ் ஆகிவிடுகிறான்' (ஹதீது குத்ஸி புகாரி)

 அதாவது திக்ரின் மூலம் தன்னை இறைவன் அளவில் சேர்த்த அவ்லியாக்களின் மூலம் இறைவனின் சக்தி வெளிப்படுகிறது. இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் தலமாக மாறி விடுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் ஸ்தலத்தில் கேட்பது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் கேட்பதுதான்.
பதில் 6
இறைநேசர்கள் என்போர் திக்ர் அதிகமதிகம் செய்து இறைவன் அளவில் சேர்ந்து விட்டார்களாம். அதனால் அவர்கள் இப்போது மனிதர்கள் இல்லையாம் அல்லாஹ்தானாம்.

அல்லாஹ்விடமிருந்து வெளிப்படும் அத்தனையும் அந்த அவ்லியாவிடமிருந்தும் வெளிப்படுமாம். அதனால் அவரிடம் நாம் துஆ செய்யலாமாம்.

இவர்கள் செய்யும் இருட்டு திக்ர், குருட்டு திக்ர், பாட்டு திக்ர், கைகோர்த்து டான்ஸ் ஆடும் திக்ர், சினிமா பாடல் பாடும் திக்ர் என்று அதிகமாக திக்ர் செய்வதால் அல்லாஹ் ஆகிவிடுவார்களாம்.

அல்லாஹ் தான் இவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளிப்படும் ஸ்தலமாக மாறிவிடுகிறார்கள் என்றால் ஒருவரையாவது அப்படி காட்ட முடியுமா?
அல்லாஹ்வின் சக்தி எல்லாம் வெளிப்பட வேண்டாம். அற்ப மனிதர்களின் சக்தியாவாது வெளிப்படுமா?

உயிருள்ள மனிதனிடம் பேசினால் பதிலளிக்கிறான்.
திக்ரின் மூலம் அல்லாஹ்வை தஞ்சமடைந்த இறந்து போன இறைநேசர்களின் ஸ்தலங்களில் அவர்களை அழைத்தால் அவர்கள் பதிலளிப்பார்களா?
மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பின்பு மனித சக்தியே வெளிப்பட வக்கில்லை; இங்கு அல்லாஹ்வின் சக்தி வெளிப்படுமாம்.
இவர்கள் குறிப்பிடும் செய்திக்கு என்ன விளக்கம் என்பது பிஜே அவர்கள் தமது தர்ஜூமா விளக்க குறிப்பில் விளக்கியுள்ளார்கள்.
அதையே இதற்குப் பதிலாக தருகிறோம்.

யார் உபரியான வணக்கத்தின் மூலம் என்னை நெருங்கி விட்டாரோ அவரை நான் விரும்புவேன். நான் அவரை விரும்பிவிட்டால் அவர் கேட்கும் காதாக, அவர் பார்க்கும் கண்ணாக, அவர் பிடிக்கும் கையாக, அவர் நடக்கும் காலாக நான் ஆவேன் (புகாரீ 6502) என்று அல்லாஹ் கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஹதீஸ்களையும் இவர்கள் தமது வழிகேட்டுக்குச் சான்றாகக் காட்டுகிறார்கள்.
"பார்த்தீர்களா? அவ்லியாக்கள் வேறு! அல்லாஹ் வேறு அல்ல. அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுத்துள்ளான்'' என்று கூறி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.
அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறைநேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்திருந்தால் இப்படி உளற மாட்டார்கள்.

பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். "இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்" என்று கூறினால் நேரடிப் பொருளில் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். "ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்" என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.
இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
"நான் பசியாக இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்தபோது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்தபோது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?'' என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் "நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?'' என்று கேட்பான், அதற்கு இறைவன் "ஒரு ஏழை பசி என்று கேட்டபோது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்'' என்று கூறுவான்.
(பார்க்க: முஸ்லிம் 5021)

அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டலாமா?  
இந்தச் செய்தியை எப்படி புரிந்து கொள்கிறார்களோ அப்படியே (புகாரீ 6502) செய்தியையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே அல்லாஹ் மட்டுமே பிரார்த்திக்கப்பட தகுதி படைத்தவன்.
அவனை மட்டுமே வணங்குவோம் அவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்வோம்
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! அல்குர்ஆன் 72 18

(ஏகஇறைவனை) மறுப்போர் வெறுத்தபோதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!
அல்குர்ஆன்  40 14

அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைத்து பிரார்த்தனை செய்வோருக்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்ற இறைவாக்கு ஒரு போதும் பொய்யாகாது என்பதை மீண்டும் நினைவு கூர்கிறோம்.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள். அல்குர்ஆன் 23 117