"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

கப்ரை முத்தமிடலாமா?

பெரும்பாலும் இணைவைப்புக் காரியங்கள் இறந்தவர்களின் பெயராலே அரங்கேற்றப்படுவதால் இவ்விஷயத்தில் இஸ்லாம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது.

கப்றுக்கு மேல் கட்டிடம் எழுப்பக்கூடாது. கப்றை பூசக்கூடாது. கப்றை உயரமாக்குவது கூடாது. புனிதம் கருதி கப்றுக்கு அருகில் அமரக்கூடாது. கப்றை நோக்கித் தொழக்கூடாது என்றெல்லாம் இஸ்லாம் தடை விதித்துள்ளது.

இஸ்லாம் கூறும் இந்த விதிமுறைகளை அனைவரும் சரியாக்க் கடைபிடித்தால் எந்தக் கப்றும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. சில நாட்களிலேயே கப்று இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இறந்தவர்களின் மண்ணறை இந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இஸ்லாம் மேற்கண்ட தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

கப்றை முத்தமிடுவதும் இஸ்லாம் தடைசெய்த செயலாகும். இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால் அந்த மண்ணுக்கு சக்தி இருப்பதாகவும் அது மகத்துவம் அடைந்திருப்பதாகவும் நம்புகிறார்கள். இதன் காரணத்தாலே இறந்தவர்களின் கப்றை முத்தமிடுகிறார்கள்.

எந்த ஒரு பொருளையும் அதில் உள்ள தன்மைகளைத் தாண்டி மறைமுகமான ஆற்றல் அதில் இருப்பதாக நம்புவது மூடநம்பிக்கையாகும்.

இணை வைப்பாளர்கள் தாத்துல் அன்வாத் என்ற மரத்தில் தங்கள் வாட்களைத் தொங்கவிட்டு அங்கே தங்குவார்கள். இவ்வாறு செய்வதால் போரில் வெற்றி கிடைக்கும் என்று நம்பினார்கள்.

இது போன்று ஒரு மரத்திற்கோ, ஒரு கல்லிற்கோ அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சக்தியில்லாத எந்தப் பொருளுக்கோ ஆற்றல் உண்டு என்று நாம் நம்பிவிடக் கூடாது என்று நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.


மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். இணை வைப்பாளர்களுக்கு ஒரு மரம் இருந்தது. (புனிதம் கருதி) அங்கே அவர்கள் தங்குவார்கள். அதில் தங்களது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். அதற்கு தாதுல் அன்வாத் என்று சொல்லப்படும். நாங்கள் பசுமையான பிரம்மாண்டமான ஒரு மரத்தைக் கடந்து சென்ற போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கும் ஒரு தாதுல் அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!
'' (7 : 138) என்று மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினர்கள் கேட்டதைப் போன்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக இவையெல்லாம் (நரகத்திற்கு அழைத்துச் செல்லும்) வழிகள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழியை ஒவ்வொன்றாக நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ வாகித் (ரலி) நூல் : அஹ்மத் (20892)
கப்றை சாதாரண மண்ணாகப் பார்ப்பவர்கள் அதை முத்தமிடமாட்டார்கள். அதில் மறைமுகமான புனிதம் இருப்பதாக நம்பும் மூடர்களே அதை முத்தமிடுவார்கள். இதை மேற்கண்ட ஹதீஸ் கண்டிக்கின்றது.

இஸ்லாத்தில் ஹஜருல் அஸ்வத் கல்லைத் தவிர வேறு எந்த கல்லையும் மண்ணையும் முத்தமிடுவதற்கு அனுமதியில்லை.  ஹஜருல் அஸ்வதைக் கூட அந்தக் கல்லில் சக்தி உள்ளது என்ற நம்பிக்கையில் முத்தமிடக்கூடாது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களை இப்படித்தான் உருவாக்கி இருந்தார்கள்.


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ جَاءَ إِلَى الْحَجَرِ الْأَسْوَدِ فَقَبَّلَهُ فَقَالَ إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لَا تَضُرُّ وَلَا تَنْفَعُ وَلَوْلَا أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ رواه البخاري1597


ஆபிஸ் பின் ரபீஆ கூறுகிறார் :

உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, "நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்மை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார்கள்.

புகாரி (1596)

தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்களா

நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் வஹீ - இறைச் செய்தியை அருள ஆரம்பித்து பின் சிறிது நாட்கள் வஹீ வராமல் இருந்த காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார்கள் என்ற கருத்தில் அமைந்த ஒரு செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை காத்தான்குடியில் உள்ள வழிகேடர் அப்துர் ரஊஃப் என்பவர் ஓர் உரையில் எடுத்துக்காட்டி பேசியிருந்தார்.
ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாத்திரமே குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இதை கூறிவருகிறோம். ஆனால் தங்களை தவ்ஹீது வாதிகளாக காட்டிக்கொள்ளும் அத்தனை போலி தவ்ஹீத் இயக்கங்களும் நபிகளாரை இழிவு படுத்தும் இச்செய்தியினை அப்துர் ரஊஃப் வழியிலேயே இதை ஆதாரபூர்வமான செய்தியாக ஏற்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவெனில் அப்துர் ரஊஃப் இந்த செய்தியை எடுத்துக் காட்டியவுடன் இச்செய்தி உண்மையில் புகாரியில் இடம்பெற்றுள்ளதா என்று கூட பார்க்காமல் சிலர் இது இவரினால் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறிவிட்டனர் . இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையையும், நபிகளாரின் பின்வரும் ஹதீதையும் உண்மைப் படுத்திவிட்டனர். இவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை வழங்குவானாக!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)  நூல்: அஹ்மத் 15478

இனி இச்செய்தி எவ்வாறு குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று பார்ப்போம்..

நீண்டதொரு செய்தியின் இறுதிப்பகுதியாகவே தற்கொலை பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும்வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், 'ஓதும்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்று அவருக்கு பதிலளித்தார்கள். 
(அப்போது நடந்த சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:) 
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு 'ஓதும்' என்றார். அப்போதும் 'நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே' என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு, 'ஓதும்' என்றார். அப்போதும், 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு 'படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்..' என்று தொடங்கும் (96 வது அத்தியாயத்தின்) வசனங்களை 'மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்' என்பது வரை (திருக்குர்ஆன் 96:1-5) ஓதினார். 
(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 
பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, 'எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்' என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டகன்றது. அப்போது, 'கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள். 
அப்போது கதீஜா(ரலி) அவர்கள், 'அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்' என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் 'வரக்கா'விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர். 
'வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார். 
அவரிடம் கதீஜா அவர்கள், 'என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் 'என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் '(நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்' என்று கூறிவிட்டு 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!' என்று கூறினார். 
இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் 'ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்' என்று பதிலளித்தார். 
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி, 'முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்' என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்
(புகாரி 6982) 

ஆரம்பமாக இறைச் செய்தி - வஹீ இறங்கியது தொடர்பான செய்தியின் கடைசிப்பகுதியாக இது அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக இந்தச் செய்தி கூறுகிறது. உலகுக்கு நேர்வழி காட்ட வந்த நபிகள் பெருமானார் அவர்கள் இது போன்ற காரியத்தில் கண்டிப்பாக ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இது தவறான செய்தியாகும். இதனை ஆதாரபூர்வமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. 

 அல்குர்ஆனுக்கு மாற்றமான கருத்து

புனித அல்குர்ஆனில் தற்கொலை செய்து கொள்வது, தம்மைத் தாமே அழித்துக்கொள்வது பெரும்பாவம் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

அப்படியிருக்கும்போது , குர்ஆன் பெரும்பாவம் என்று கூறும் ஒரு செயலை நபியவர்களே செய்ய எத்தனித்தார்கள் என்பது நபி மீது அபாண்டம் கூறுவதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பாக இப்படியான செயலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள் என்று முடிவெடுப்பதே ஒரு முஃமினின் பண்பாக இருக்க முடியும்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.(04:29,30)

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.( 2:195)

மேற்கண்ட வசனங்கள் தற்கொலை செய்வதை எச்சரிப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது.

தற்கொலை செய்வது பெரும்பாவம் அதில் யாரும் ஈடுபடக்கூடாது என்று இறைவனே கடுமையாக எச்சரிக்கும்போது மனது வெறுத்து நபியவர்களே தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

ஆதாரபூர்வமான மற்ற செய்திகளுக்கு மாற்றமானது.

நபியவர்கள் மன விரக்தியில் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் (புகாரி 6982) என்று மேற்கண்ட செய்தி கூறுகின்றது.

ஆனால் தற்கொலை நிரந்தர நரகத்துக்குரிய பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.   புகாரி : 5778

தற்கொலை செய்தவர், தற்கொலை செய்து கொண்ட முறையிலேயே மறுமையில் தண்டிக்கப்படுவார் என்பதற்கும் அவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார் என்பதற்கும் மேற்கண்ட செய்தி சான்றாக அமைந்துள்ளது.

ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகாரி 6982 வது இலக்க செய்தியோ நபியவர்களே தற்கொலைக்கு முயன்றதாக இடம்பெற்றுள்ளது.

அல்குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக நிரந்தர நரகத்தைப் பெற்றுத்தரக்கூடிய மிகப்பெரும்பாவமான தற்கொலைக்கு நபியவர்கள் முயன்றார்கள் என்று நம்புவது தவறு என்பதை மேற்கண்ட செய்தியும் நமக்கு உணர்த்துகின்றது.

ஆகவே, நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்ற செய்தியை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதே தெளிவான முடிவாகும்.

வஹீ- இறைச்செய்தியின் ஆரம்பம் பற்றிய முழுச் செய்தியும் மறுக்கத்தக்கதா?

நபி (ஸல்) அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்தார்கள் என்ற கருத்தில் புகாரி 6982 வது இலக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த செய்தி, நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும்.

இறைச் செய்தி - வஹியின் ஆரம்பம் தொடர்பாக அறிவிக்கப்படும் குறித்த செய்தியை முழுமையாக நாம் மறுக்கவில்லை. மாறாக தற்கொலைக்கு நபியவர்கள் முயன்றதாக இடம்பெற்றுள்ள பகுதியை மாத்திரமே மறுக்க வேண்டும் என்பதே நமது நிலையாகும்.

குறித்த செய்தியில் வஹீ - இறைச் செய்தியின் ஆரம்பம் பற்றிய முழுமையான தகவல்களை ஆயிஷா (ரலி) அவர்கள்தான் அறிவிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வஹீ - இறைச் செய்தியின் ஆரம்பம் பற்றி சொன்னவைகளை நபியிடமிருந்து ஆயிஷா (ரலி) அவர்களும், அவரிடமிருந்து உர்வா அவர்களும், உர்வாவிடமிருந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி அவர்களும் அறிவிக்கின்றார்கள்.

இப்னு ஷிஹாப் அவர்களிடமிருந்து பலர் இந்தச் செய்தியை அறிவிப்புச் செய்கின்றார்கள்.

இதில் மூன்றாவது அறிவிப்பாளரான இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி அவர்கள் வஹீ - இறைச் செய்தியின் ஆரம்பம் பற்றிய செய்திகளை அறிவித்த பின்னர் நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக இடம்பெறும் செய்தியையும் இணைத்துச் சொல்கின்றார்கள்.

தற்கொலை பற்றிய செய்தியை இணைத்துச்சொல்லும்போது குறித்த செய்தியை தனக்கு அறிவித்தவர் யார் என்ற தகவலை சொல்லாமலேய அறிவிக்கின்றார்.

"நமக்கு கிடைத்த தகவலின்படி" என்ற அவருடைய வாசக நடையிலிருந்தே இதனை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது.

மாத்திரமின்றி, இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ அவர்கள் குறித்த தகவலை தனக்குச் சொன்னவர் யார் ? தனக்கு சொன்னவருக்கு அறிவித்தவர் யார் ? போன்ற அறிவிப்பாளர் தொடர் விபரங்கள் இன்றி அறிவிப்பதினால் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்தச் செய்தி பலவீனமானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

வஹியின் ஆரம்பம் பற்றிய செய்திக்கும் நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற செய்திக்கும் எவ்விதச் சம்மந்தமும் இல்லை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள் முடிகின்றது.

ஆகவே, தற்கொலைக்கு நபியவர்கள் முயன்றார்கள் என்ற கருத்தில் இடம்பெற்றுள்ள பகுதியே அல்குர்ஆனுக்கு முரண் என்ற வகையில் மறுக்கப்படுகின்றதே தவிர முழுமையான ஹதீஸ் அல்ல என்பது தெளிவானது.

நன்றி : அழைப்பு மாத இதழ் (ஜுன்-ஜுலை 2015)