எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!!
அவ்லியாக்களின் திரை கிழிகிறது. அறிவுலகம் வெட்கித் தலைகுனிகிறது.
அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள் !
அவ்லியாக்களின்
பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும்
அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம். குருட்டுத்தனமான பக்தியால்
விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம்
அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) என கொண்டாடி வருகிறார்கள் தெரியுமா?
1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !
2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !
3. பச்சைத் தலைப்பாகை,நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!
4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!
5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!
6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!
7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)
8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீதுகொடுப்பவர் அவ்லியா!
9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!
10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !
11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!
12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக
நடிப்போர் அவ்லியாக்கள்!
இவர்கள்
பெயரை உச்சரித்துக் கொண்டு சில போலிப்பேர்வழிகள் ஆங்காங்கே கடற்கரையில்,
வாய்க்கால் ஓரங்களில், காடுகளில், மேடுகளில், பாலைப் பெருவெளிகளில்
கல்லறைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே இருப்பவர் ‘அவ்லியா’ எனக் கூறி
கட்டுக்கதைகளையும், கனவுக்காட்சிகளையும் அரங்கேற்றி மக்களை நம்ப வைத்து
போலிச்சாமியார்;களையும் மிஞ்சுமளவுக்கு போடும் ஆட்டங்கள் அப்பப்பா சொல்லவே
வாய் கூசுகிறது.
மனிதப்புனிதர்கள், மகான்கள், மெய் நிலை கண்ட
ஞானிகள் எனச் சித்தரிக்கப்படுவோரின் பெயர்களைப் பார்த்தாலே இவர்கள் யார்?
இவர்களின் வண்டவாளங்கள் என்ன என்பது தெரிந்து விடும்.
அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்!
1. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)
2. கட்டி மஸ்தான் (பொறையார் )
3. சட்டி மஸ்தான் (பொதக்குடி)
4. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)
5. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)
6. குரங்கு மஸ்தான். தஞ்சை
7. அனுமான் அவ்லியா தஞ்சை
8. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை
9. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை
10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)
11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )
12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)
13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)
14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )
15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)
16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)
17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை
18. பச்சை அவ்லியா நெல்லை
19. பக்கீர் மஸ்தான். நெல்லை
20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)
21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)
22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)
23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)
24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)
25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)
26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)
27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)
28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)
29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)
30. ஸந்தூக் அவ்லியா திருவை)
31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)
32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)
33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)
34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)
35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை,
36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)
39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)
40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)
41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)
42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)
43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)
44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)
45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)
46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)
47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள்
பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)
48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால் பாளையம்)
49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)
50. காட்டப்பா அவ்லியா ”
51. புளியடி அவ்லியா ”
52. காட்டானை அவ்லியா (வேதாளை)
53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)
அப்பப்பா அவ்லியாக்களில் தான் எத்தனை எத்தனை ரகங்கள்! எத்தனை எத்தனை வகைகள்!
இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?
இவர்கள் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்கள் ? எப்போது இறந்தார்கள் ?
இங்கே எதற்கு வந்தார்கள் ? இவர்கள் மக்களுக்காக செய்த சேவைகள் என்னென்ன?
மார்க்கத்திற்காக என்ன தியாகம் செய்தார்கள் ?சமுதாயம் அடைந்த பயன்கள் என்ன ?
இவர்கள் செய்த சாதனைகள் என்ன ?
இவர்கள் குர்ஆன் நபிவழியில் வாழ்ந்தவர்களா?
என மக்களைக் கேட்டால் மக்கள் திருதிரு என்று முழிக்கிறார்கள்.
இவர்கள்
யார்? எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் முகவரி என்ன? என்பதையெல்லாம்
தெரியாமல் கூடு,கொடி, உரூஸ், சந்தனக்கூடு என கண்மூடித்தனமாக இந்த போலிகள்
பெயரால் ஆண்டுதோறும் விழாக்கள் எடுத்து அமர்க்களப்படுத்துகிறார்கள்.
இந்த
விஞ்ஞான யுகத்தில் வாழும் அறிவு ஜீவிகளான நாம் இந்தப் போலி மஸ்தான்கள்,
அவ்லியாக்களை நம்பலாமா? இநதப்போலிகளுக்கு நாம் பலியாகலாமா? நம்பி மோசம்
போகலாமா ? உரூஸ்கள், கந்தூரிகள், யானை ஊர்வலங்கள் என நடத்தலாமா? என நாம்
சற்று சிந்தித்தாலே இவையெல்லாம் போலியானவை., மார்க்கத்திற்கு எதிரானவை என
நாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.
அப்படியானால் மக்களை
ஏமாற்றும் சாய்பாபாக்கள், சந்திர பாபாக்கள், பிரேமானாந்தக்கள், ஜான்கள்,
ஆனந்த ராஜ்கள் பின்னால் செல்லும் மக்களுக்கும் நமக்கும் என்ன தான்
வேற்றுமை? திருப்பதிக்கும்,திருச்செந்தூருக்கும், வேளாங் கண்ணிக்கும்
செல்லும் பக்தர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்?
இஸ்லாத்தை
பின்பற்றும் முஸ்லிம்களே! அறிவுக்கேற்ற மார்க்க்கமாக உலகே
ஒப்புக்கொண்டிருக்கும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட போலித்தனங்களை,
பேதைத்தனங்களை அனுமதிக்கலாமா? பின்பற்றலாமா ? சற்று சிந்தித்துப்
பாருங்கள்.
மதத்தின் பெயரால் ஏமாற்றும் கபோதிகளின் களியாட்டங்கள்
நாளிதழ், வார இதழ், மாத இதழ், தொலைக்காட்சிகள்,இன்டெர்நெட் போன்றவற்றில்
அம்பலப்படுத்தும் போலித்தனங்களை நாள் தோறும் கண்டு வருகிறோமே! இன்னுமா இந்த
அறியாமை ? இந்த மாயையிலிருந்து விடுபடவேண்டாமா? என உங்கள் மனதைக்
கேட்டுப்பாருங்கள்.
இதோ பாருங்கள் !
நம் மக்களின் அறியாமையை !
யானைக்கு ஒரு தர்ஹா!
குதிரைக்கு ஒரு தர்ஹா!!
கழுதைக்கு ஒரு தர்ஹா!!!
கழிப்பறைக்கு ஒரு தர்ஹா!!!!
வியப்பாக இருக்கிறதா ?
ஆம். இவையெல்லாம் உண்மை தான்!
நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் ‘மைதீன் பிச்சை’ யென்ற யானைக்கு தர்ஹாகட்டிவழி படுகிறார்கள். பாக்கியம் பெற்ற யானை!
கன்னியா
குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் முஹ்யித்தீன் பள்ளிவாசல் எதிரிலுள்ள
கப்ருஸ்தானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கப்ரடி அவ்லியாவின்
பக்கத்து கப்ரு, அவர் பயணம் செய்த குதிரையின் சமாதி! இதற்கும் ஆண்டு தோறும்
விழாக்கள் எடுக்கின்றனர். கொடுத்து வைத்த குதிரை!
திருநெல்வேலி
பேட்டையிலிருந்து சேரன்மாதேவி செல்லும் வழியில் ஓரிடத்தில பெயர் தெரியாத
அவ்லியா ஒருவர் கழுதையில் பயணம் செய்து வந்தார். திடீரென்று ஒருநாள் அது
இறந்து விடவே அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள். இன்று அதற்கும் வழிபாடு
நடக்கிறது. அதிர்ஷ்டக்காரக் கழுதை!
கேரளாவில் கொல்லம் முல்லக்கல்
அருகே ஒருகழிப்பிடம் (டாய்லெட் கட்டிடம்) இருக்கிறது. அது இன்று ஒரு
தர்ஹாவாக ஆராதனை செய்யப்பட்டுவருகிறது. அங்கே சென்ற கப்ரு பக்தரான ஆலிம்
பேராசிரியர் ஒருவர் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து தானும் சென்று
தமது பங்காக ஸியாரத்தை மிகவும் பயபக்தியோடு முடித்துக்கொண்டு திரும்பினார்.
பின்னர் அது பற்றி விசாரித்த போது தான் அது அவ்லியாவின் கப்ரல்ல. அது
மக்கள் செல்லும் ஒரு பொதுக் கழிப்பறை எனத் தெரிய வந்தது. தரிசனத்துக்குரிய
தர்ஹா!
என்னே மக்களின் மதியீனம்.
இதில் படித்தவர்களும்
பலியாகிறார்களே! புரிதாபமாக இருக்கிறது. பக்திப்போதையில் எதையுமே
விசாரிக்காமல் கண்மூடித்தனமாக செய்யும் வழிபாடுகளின் இலட்சணத்தைப்
பார்த்தீர்களா?
விண்ணுயர அவ்லியாவின் கப்ருஸ்தான்!
கன்னியாகுமரி
மாவட்டம் திருவிதாங்கோட்டில் உலகிலேயே ஒரு வித்தியாசமான கப்ருஉள்ளது. அது
மேற்கூரையை முட்டும் வண்ணம் மிகஉயரமாகக் கட்டப்பட்டுள்ளது. ஏன் இந்த
கப்ருமட்டும் இவ்வளவு உயரமாகக் கட்டப்பட்டுள்ளது என அதன் ஆதீன கர்;த்தாவான
மக்காமு இலப்பையிடம் 1958-ம் ஆண்டு நாம் கேட்டபோது ‘இது மறுமை நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும். இது வளர்ந்துகொண்டேஇருக்கும்.வளர்ந்து வளர்ந்து
விண்ணை முட்டும் போது கியாமத் நாள்-மறுமை நாள்- வந்துவிடும் என்றார்.
அவர்
காலமான பிறகு அவரது மகனார் தந்தையின் பதவிக்கு வந்தார். அவரிடம் இது பற்றி
விசாரித்தபோது “அப்படி மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.அதுபற்றி எனக்கு
ஒன்றும் தெரியாது” எனக் கூறிவிட்டார். இப்போது அவரது பேரரைக் கேட்டால்
“இதுவெல்லாம் போலியான செய்திகள்” என விளக்கமளித்தார். ஆதீன கர்த்தாக்களான
அவரது குடும்பத்தாரே இந்தப் பொய்ச் செய்திகளை நம்பமுடியவில்லை. இருந்தும்
பொய்களைப் பரப்பி மக்களை வழி கெடுத்து வருகின்றனர்.
வியாபாரி அவ்லியா
அவரே மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ். இவர் யார் ? எந்த ஊர் ? எப்போது
பிறந்தார்?
என்பது தெரியவில்லை. வியாபாராத்திற்காக வந்தவர் அந்த ஊரிலே இறந்து
விட்டார். நல்ல மனிதராகத் தெரிந்ததால் அவரை அடக்கம் செய்து பெரிதாக கப்ரும்
கட்டிவிட்டார்கள். பின்னர் அவரை ஒரு மகானாகச் சித்தரித்து “மெய்நிலை கண்ட
ஞானி மஹான் மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ்வாக” விளம்பரப்படுத்தி இன்று ஆண்டு
தோறும் விமரிசையாக விழா நடத்தி வருகிறார்கள் அந்த ஊர் மக்கள்.
மோதீனார் அவ்லியா
இவர்
தான் மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்! திருவிதாங்கோடு அஞ்சு வன்னம் ஜும்மா
பள்ளியில் அடக்கமாயிருக்கும் இவர் அந்தப்பள்ளி வாசலில் மோதீனாராக பணியாற்றி
வந்தவர். அங்கே அவ்லியா இல்லாத குறையை போக்க வழி தேடிக்கொண்டிருந்த ஊர்
மக்களுக்கு,”இது நமக்குக் கிடைத்த மிகப் பெரும் பேறு” எனக் கருதி சாதாரண
நூருத்தீன் மோதீனாராக இருந்த இவரை “மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்” என
விளம்பரப்படுத்தி இன்று அவருக்கும் கோலாகலமாக ஆண்டு தோறும் விழா நடைபெற்று
வருகிறது.
பாறையை தாங்கி நிற்கும் ராட்சஸ அவ்லியா
சிரியாவிலிருந்து
படகேறி வந்த இவரும் இவரது சீடர்களும் திருச்சி வந்து அங்குள்ள மலைமீது
தவம் செய்து வந்தனர்.அப்போது சில பூதங்கள் ஒன்று திரண்டு இவர்கள் மீது ஒரு
பாறையைத்தள்ள இவர்கள் தம் தவவலிமையால் அது தம்மீது விழாது செய்தனர்.
அப்பாறை இப்போதும் சாய்ந்த நிலையிலேயே இருக்கிறது. அது தம்மீது விழாது
இவர்கள் தம் பாதங்களை ஊன்றி நின்றபோது இவர்களின் பாதங்கள் பதிந்த
அடையாளமும், பாறையின் மீது இவர்களின் கை பதிந்த அடையாளமும் இப்பொழுதும்
இருக்கின்றன என அவர்களது பக்தர்கள் கூறி வருகின்றனர். திருச்சி நத்ஹர்ஷh
வலியைப்பற்றிச் சொல்லப்படும் இந்த கதையை நம்ப முடிகிறதா ? அனுமான் கதை தான்
இது!
புலியாக வந்து காப்பாற்றும் நடமாடும் அவ்லியா
நெல்லை
மாவட்டம் பொட்டல் புதூருக்கு மேற்கே ஏழு கல் தொலைவில் 1800 அடி உயரத்தில்
கோதரிசா மலை உள்ளது. இங்கு கோதரிசா என்ற அவ்லியா வாழ்ந்து மறைந்தார்.
அவரின் நடமாட்டம் இப்பொழுதும் இருக்கிறதென்றும் புலிமீது இவர் இவர்ந்து
வருவதைச் சிலர் பார்த்திருப்பதாகவும், சிலர் அவருடன்
உரையாடியிருப்பதாகவும், எவருக்கேனும் வன விலங்குகளால் ஆபத்து நேரும்போது
இவர் காட்சி அளித்துக் காப்பாற்றுவதாகவும் கூறப்படுகிறது. கிள்று (அலை)மீது
கட்டிவிடப்பட்ட கதை தான் இது.
ஐவேளையிலும் ஆடுபோல் கத்தும் அவ்லியா
துருக்கி
நாட்டைச் சேர்ந்த கோயுன் பாபா என்ற அவ்லிய வாய்பேசுவது இல்லை. ஐந்து வேளை
தொழுகைகளின் போது ஆடு கத்துவது போன்று கத்துவார். இதன் காரணமாக இவருக்கு
இப்பெயர் ஏற்பட்டது எனக்கூறும் மக்கள், எப்படித்தான் வாய் பேசாமல்
ஆட்டைப்போன்று கத்தும் ஊமையரை ஆன்மீக ஞானம் பெற்ற அவ்லியா என ஏற்க மனம்
வந்ததோ ?
காடு மலைகளில் தாவி தவமிருந்த அவ்லியா
கருவிலே
ஞானியான மோன குரு மஸ்தான் ஏழு வயதிலேயே வாயை மூடியதால்”ஊமைப்பிள்ளை” என்று
அழைக்கப்பட்டார்.இளம் வயதிலேயே துறவறத்தை மேற் கொண்ட இவர் நாற்பது நாட்கள்
கல்வத்தில் (தனித்திருந்து இறை தியானத்தில)ஈடு பட்டிருந்தனர். பின்னர்
சிகக்ந்தர் மலையிலும், பீரான் மலையிலும், மலேயாவிலுள்ள கொடிமலையிலும்,
இலங்கையிலுள்ள ஆதம் மலையிலும், தஃப்தர் ஜெய்லானியிலும் தவமிருந்தார்.
பின்னர் சாமி நாதன் செட்டியாரும், சுப்ரமண்யம் செட்டியாரும் இவருக்கு
தொண்டியின் கடற்கரை அருகில் கடடிக் கொடுத்த மடத்தில் அமர்ந்து அருளுரை
வழங்கினார்.இவர் யாரிடமும் பேசுவதில்லை. எப்போதும் மௌனமாகவே இருப்பார்.
பின்னர் எப்படித்தான் அருளுரை வழங்கினாரோ? அவரைப்பற்றிய மோனகுரு மஸ்தான்
சாகிபு பாடலில் இந்தச்செய்தி இடம் பெற்றிருக்கிறது.
பறக்கும் அவ்லியாக்கள்!
விமானங்களோ விண்கலங்களோ பறக்கும் தட்டுகளோ இல்லாமல் மனிதர்கள் பறக்கும் அதியத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
பல்கு
நாடு ஈன்ற மாபெரும் இறை நேசர் எனப்போற்றப்படும் அஹ்மது இப்னு கஸ்ரவிய்யா
அவர்களுக்கு 1000 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். இவர்களது வரலாறறில்
இவர்கள் அத்தனை பேரும் ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் போது
நடந்து செல்வதில்லையாம். பறந்தே செல்வார்களாம!
இதைப்போன்றே ஹஸன்
பஸரீ (ரஹ்) அவர்கள் தண்ணீரிலே தொழுகை விரிப்பை (முஸல்லாவை) விரித்து தொழுது
கொண்டிருந்தார்களாம். இதைப்பார்த்துக் கொண்டிருந்த இறை நேசச்செல்வி ராபியா
பஸரிய்யா அவர்கள், இதற்குப் போட்டியாக” இவ்வளவு தானா உங்களின் வல்லமை!”
நான் விண்ணிலே தொழப்போகிறேன்’ என முஸல்லாவை வானத்தை நோக்கி வீசியெறிந்து
விட்டு அதில் தாவிச்சென்று தொழுது கொண்டிருந்தார்களாம். இப்படியெல்லாம்
சாகஸங்கள் செய்ய இந்த அவ்லியாக்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது?
விளம்பரமே இல்லாது இலைமறைகாயாக வாழ்ந்த இந்த இறையடியார்களை மார்க்கத்தின்
பெயரால் இப்படித்தான் புகழவேண்டுமா? இவ்வாறு தான் பெருமைப் படுத்த
வேண்டுமா? கப்ஸாக்களை அள்ளி வீசவேண்டுமா? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
மிதக்கும் மஹான்கள்!!!
மஹான்
அஹ்மது கஸ்ரவிய்யாவின் மாணவர்கள் தண்ணீரிலே நடந்து செல்வார்களாம். இவ்வாறு
பல அவ்லியாக்கள் தண்ணீரிலே நடந்ததாகவும் மிதந்ததாகவும் பலரைப்பற்றியும்
பொய்க் கதைகளை வாய் கூசாமல் அள்ளி வீசுகிறார்கள்.எழுதுகிறார்கள்.
இதற்கெல்லாம் மறுமையில் விசாரணைகள் இல்லையா?
இலங்கையில ஒளிவீசும் அவ்லியா
இலங்கையில்
தஃப்தர் ஜெய்லானி என்றொரு இடம் மலை முகட்டில் உள்ளது. அங்கே உள்ள
துவாரத்தில் பார்த்தால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானின் ஒளி
வீசிக்கொண்டு இருப்பதாக ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று
பார்த்து வருகின்றனர். இந்த அதிசயத்தை 1978ல் நாமும் பார்த்து வர மாணவர்
குழுவுடன் சென்றோம்.அந்த இடத்தை பார்வையிட்டபோது துவாரம் செல்லும்
அடிவாரத்தில் சூரியனின் ஒளிபட்டு அங்கே வெளிச்சம் தெரிகிறது.இதை வைத்து
அவ்லியாவின் ஒளி வீசுகிறது என கதை கட்டிவிட்டார்கள். இந்த ஒளி பகலில்
மட்டும் தான் தெரியும். இரவில் தெரிவதில்லை.இதிலிருந்தே அவ்லியாவின் ஒளி
இல்லை எனடபதை எந்த பாமரனும் புரிந்து கொள்ளலாம். முஹ்யித்தீன் அப்துல்
காதிர் ஜீலானி இலங்கைக்கு வந்ததாக வரலாறே கிடையாது. ஏன் இந்தியாவுக்கக் கூட
அவர்கள் வந்ததில்லை.
இந்த கதையைப்பார்க்கும் போது கடலூர் வள்ளலாரின
நினைவு தான் வருகிறது. கடலூரில் வள்ளலாரின் ஜோதி அதிகாலை 4.30 மணிக்குத்
தெரியும் என்று மக்கள் திரளாகச் சென்று பார்த்துவருவார்கள். இதைப்பற்றி தீர
விசாரித்தபோது அங்கே ரயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நமது
சகோததரர் சொன்ன செய்தி நம்மை சிரிக்க வைத்தது.
அங்கே ஒவ்வொரு
நாளும் சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கிப்போகும் இரயில் அதிகாலையில்
கடலூர் வழியாகச் செல்லும்.கடலூரை கடந்து செல்லும் ரயில் அங்கே உள்ள வளைவில்
திரும்பும்போது அதன் விளக்கொளி சிலநிமிடங்கள் ஊருக்குள் வீசும்.
அதைப்பார்த்து வள்ளலாரின் ஒளி வீசுவதாக வள்ளலார் பக்தர்கள் கட்டி விட்ட கதை
இது என்று அவர் சொன்னபோது வாய்வெடிக்ச் சிரித்தோம்.
காலடியில் கஃபத்துல்லாஹ்!
பல்லாயிரம்
மைல்களைத் தாண்டி கண நேரத்தில் மக்கா வந்து தொழும் அவ்லியாக்களைப்
பார்த்திருக்கிறீர்களா ? ஒருமுறை ‘பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் அவர்கள்
பள்ளிவாசல் வந்து தொழுவதில்லை’ என மக்கள் ஸதகத்துல்லாஹ் அப்பாவிடம் புகார்
கூறினார்கள். அதை நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக அவர்களின்
வீட்டைத்தேடி வந்த அப்பா அவர்கள், பீரப்பாவின் நலன் விசாரித்த பிறகு வந்த
விசயத்தை கேட்டேவிட்டார்கள். அப்போது பீரப்பா அவர்கள் ‘நான் மக்கள்
நடமாடும் பள்ளிவாசல்களில் தொழுவதில்லை.எப்போதும் மக்கா சென்று
கஃபத்துல்லாஹ்வில் தொழுவது தான் வழக்கம் என்று கூறியதும், அது எவ்வாறு
சாத்தியப்படும்? என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள் ஸதகத்துல்லாஹ் அப்பா
அவர்கள். அதைக் கேட்ட பீரப்பா அவர்கள் ‘இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன
இருக்கிறது? என்று கேட்டுவிட்டு ‘இதோ பாருங்கள்! என்று தாம் நெசவு
நெய்துகொண்டிருந்த குழியிலிருந்து தமது காலை அகற்றினார்கள். அங்கே பாதம்
இருந்த இடத்தில் கஃபத்துல்லாஹ் தெரிந்ததாம். அதில் பீரப்பா பக்தியோடு
தொழுது கொண்டிருந்தார்களாம். இந்தப் பொய்க் கதையை அறிவுலகில் வாழும்
உங்களால் நம்ப முடிகிறதா?
கஃபாவுக்குப் பறக்கும் அவ்லியா
காயல்பட்டணம்
தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் ஒவ்வொரு வக்துக்கும் கஃபத்துல்லாஹ்வுக்குச்
சென்று தொழுது வருவார்களாம். அதற்காக வைத்திருக்கும் ஒருமரப்பெட்டியில் ஏறி
அமர்ந்ததும் அது கஃபாவுக்குப் பறந்து சென்று திரும்பி வந்து விடுமாம்.
அந்த மரப்பெட்டி இன்றும் அவர்கள் நினைவாக அங்கே தொங்கிக் கொண்டிருக்கும்
வேடிக்கையைப் பார்க்கலாம்.
குடலைக்கழுவும் அவ்லியா!
ஒருமுறை
ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்கள் காட்டுபாவா சாஹிப் மலை முகட்டில் நடந்து
போய்க் கொண்டிருந்தார்களாம். அங்கே ஒரு நீரோடையில் பீரப்பா அவர்கள்
குளித்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் தமது குடலை காறி உமிழ்ந்து
துவைத்துக் கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள்? எனக்கேட்டார்கள் அப்பா அவர்கள். உடனே பீரப்பா அதை
மீண்டும் விழுங்கிவிட்டு ‘ துவைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்’. என
பதில் சொன்னார்களாம். இவையெல்லாம் நடக்கக்கூடிய காரியங்களா?
கயிறில்தொங்கும் அவ்லியா
கன்னியாகுமரி
மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1950களில் மக்கட்டி இலப்பை என்று ஒரு மஹான்
இருந்தார்.அவர் பல வேடிக்கைகளை செய்வதுண்டாம். ஒரு நாள் ஒரு கடைக்குச்
சென்று வாழைப்பழம் கேட்டிருக்கிறார். கடைக்காரர் இல்லையென்று
விரட்டிவிட்டார். மறுநாள் காலையில் கடையைத்திறந்தபோது இந்த அவ்லியா
பழக்குலை கட்டியிருந்த கயிற்றில் கழுத்தைக்கட்டி தொங்கிக் கிடந்தாராம்.
திடுக்கிட்ட கடைக்காரர் உடனே காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததும் அவர்கள்
விரைந்து வந்தனர். பிரேத விசாரணைக்காக உடலை பரிசோதனைக்குக் கொண்டு செல்ல
கயிற்றை அறுத்தபோது ‘ இங்கேயும் தூங்க விடமாட்டீர்களா? தொல்லை
தருகிறீர்களே! என்று சலித்துக்கொண்டு அங்கிருந்து மாயமாக மறைந்து
விட்டாராம்.
புறா,வண்டு,ஈ,ஓலையிடம் பேசும் வித்தக அவ்லியா!
கி.பி
1268 ல் வாழ்ந்த கீழக்கரை பல்லாக்கு வலியுல்லாஹ்வைப்பற்றி ஏராளமான கதைகள்
சொல்லப்படுகின்றன. இவர் ஒரு மஜ்துர்ப். தன்னிலை மாறும் போது உணர்வற்று
வாயில் வந்த படி உளறுவார். அப்போது இவர்களுக்கு தொழுகை கடமையில்லையாம்.
புறா,வண்டு,
ஈ, ஓலை ஆகியவை பேசும் பேச்சை அறியும் ஆற்றலை இறைவன் இவர்களுக்கு
வழங்கியிருந்தானாம். ஒரு தடவை இவர்கள் ஒரு புறாவைச் சுட்டிக்காட்டி ‘இது
என்னை காத்தமுல் வலி (வலிமார்களுக்கெல்லாம் இறுதி வலி) என்று கூறுகின்றது
என்றார்;. மற்றொரு தடைவ ஒரு வண்டைச் சுட்டிகாட்டி இது என்னை ‘ ஸையிதுல்
ஆலிம்’ ( அறிஞர்களின் தலைவர்’ என்று கூறுகின்றது என்றார்.
வேறொரு
தடவை தம் உடல் மீது வீற்றிருந்த இரு ஈக்களை சுட்டிக்காட்டி ‘ இதில் ஒன்று
பல்லாக்குத் தம்பி ஒரு முஃமின்’ என்று கூறுகின்றது. முற்றொன்று பல்லாக்குத்
தம்பி ஒரு வலியென்று கூறுகின்றது என்றாராம்.
நபி ஸுலைமான் (அலை)
அவர்களுக்கு மட்டுமே பறவை இனங்களின் மொழியை அறியும் ஆற்றல்
வழங்கப்பட்டிருப்தாக திருக்குர்ஆனின் 27:16 வசனம் கூறுகிறது.ஆனால் இந்த
மகானோ தனக்கே எல்லாம் வழங்கப்டிருப்பதாகக் கூறுகிறார்.தன்னிலை மறந்து
உளறும் இவரது கூற்றை எப்படி நம்புவது ? அதுவும் தொழுகையே இல்லாத இவர்
எப்படி அல்லாஹ்வின் அருளைப்பெற்று பறவை,வண்டு,ஈ போன்றவற்றின் மொழிகளை
அறிந்திருக்கும் ஆற்றலைப் பெற்றார். இது சாத்தியம் உண்டுமா என ஆராய்ந்தாலே
இவரைப் பற்றிக் கூறப்படும் கதைகள் பொய்யானவை என்பது நமக்குப் புரிய வரும்.
40, 60, 80 அடி நீளத்தில் அவ்லியாக்கள்.
தஞ்சை
மாவட்டம் முத்துப்பேட்டையில் அடங்கப்பெற்றிருக்கும் செய்கு தாவூது வலி
யார் , எங்கிருந்து எப்பொழுது இங்கு அடக்கமானார் என்று எவருக்கும்
தெரியாது.இவரின் அடக்கவிடம் 40 ழுழம் நீளமுள்ளதாக இருக்கிறது. இவர் சுமார்
700 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து பல சித்து வேலைகள் செய்து
அடங்கப்பெற்றார் என்றும் அது கால வெள்ளத்தால அழிந்து விட்டதென்றும் பின்னர்
200 ஆண்டுகளுக்குப்பின் கருப்பையாக் கோனார் தம் தரிசு நிலத்தை உழவே ஏரின்
கொழுமுனை இவரின உடலைத் தாக்கி இரத்தம் பீருட்டு வந்ததென்றும், அவரும்
கண்ணொளி இழந்தார் என்றும் அன்றிரவு, அவரின் கனவில் இவர் தோன்றி ‘ தம் பெயர்
iஷகு தாவூத் என்பதாகவும் தாம் அங்கே அடங்கப் பெற்றிருப்பதாகவும்
அண்மையிலுள்ள நாச்சி குளத்துக்குச் சென்று அங்குள்ள பீர்கான், ஹமீது கான்
இருவரையும் அவ்விடம் அழைத்துவரின் அவர் கண்ணொளி மீளப்பெறுவார் என்று
கூறியதாகவும் அவ்விரு பெரியார்களின் கனவிலும் இம்மகான் தோன்றி
தம்மைப்பற்றியும் கோனார் வருவது பற்றியும் எடுத்துரைத்து மறைந்ததாகவும்,
அவ்வாறே கோனார் செய்யவே கண்ணொளி மீளப்பெற்றார். அந்த நன்றிகடனாகவே ஐந்தரை
வேலி நிலத்தை மானியமாக வழங்கி அதன் மீதே 40 அடி தர்கா எழுப்பியதாகவும் கதை
போகிறது.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளர்கள், சித்த
சுவாதீனமற்றவர்கள், சூனியம் வைக்கப்பட்டவர்கள், மகப்பேறில்லாதவர்கள் இங்கு
வந்து தங்கிச் செல்கின்றனர்.அவர்களின் கனவில் இம்மகான் தோன்றி அவர்களின்
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், கனவில் நோயாளர்களுக்கு அறுவை சிகிட்சை
செய்வதாகவும் , அவர்களுக்குத்துணையாக ஒரு பர்லாங் தொலைவில காஷ்மீரிலிருந்து
வந்து அடங்கப் பெற்றுள்ள ‘பாத்திமா நாச்சியார்’ நர்ஸாக நின்று
உதவுவதாகவும் கதை கூறப்படுகிறது.
அவ்லியாவின் சித்து வித்தைகளும்
அந்நிய மங்கையான ‘காஷ்மீர் கன்னி’ இரவிலே வந்து இவருக்கு உதவும் கற்பனைக்
கதைகளையும் இன்னும் நம்பிக் கொண்டு ஈமானை அடகு வைக்கும் மக்களின் அறியாமையை
என்னென்பது ?
இவருக்கு போட்டியாக கொடிக்கால் பாளையத்தில் ஜஹான்ஷா
அவ்லியாவின் அடக்கவிடம் 60 அடி நீளமுள்ளது என்றும் அங்குள்ள மக்கள்
நம்புகின்றனர்.
இன்னும் ஒரு படி மேல் சென்று ஓமான் நாட்டில்
ஸலாலாவில் ஸாலிஹ் என்ற பெரியாரின் கப்றை 80 அடி நீளத்தில் கட்டி இவர் 80
அடி உயரமுள்ளவர் எனக்கூறி வருவது இதை விட வேடிக்கையாக இல்லையா ?
ஐயாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த
(மகாமு இப்றாஹீம்) கல்லைப்பற்றி திருமறை திருக்குர்ஆன், ‘அல்லாஹ்வின
அத்தாட்சியாக’ வர்ணிக்கும் தடயத்தை புனித ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஆண்டுதோறும்
தம் கண்களாலேயே கண்டு வருகின்றனர். அந்தக் கல் அடையாளத்தைப் பார்க்கும்
போது இப்றாஹீம் நபி சுமார் ஏழு அடி உயரமுடையோராகவே இருந்திருப்பார்கள் என
நம்மால் கணிக்க முடிகிறது. இவ்வாறிருக்க 700 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த
மனிதர்கள் 40,60,80 அடி உயரமுடையவர்களாக இருந்திருக்க முடியும் என்பதை நம்ப
முடிகிறதா? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? இன்றைய அறிவுலகம் இதை
ஏற்றுக் கொள்ளுமா ? இவ்வாறு பிதற்றுவோரைப் பைத்தியக்காரர்கள் என உலகம்
நகைக்காதா ?
காற்றாடி அவ்லியா
1975 ஆம் ஆண்டுகளில் கன்னியா
குமரி மாவட்டம் ஆளுரில் ஒரு அதிசயம் நடைபெற்றது. அங்கிருந்த கப்ரு ஒன்றில்
கப்ரைப் போர்த்தியிருக்கும் துணி காற்றில் வேகமாக ஆடிக் கொண்டிருந்தது.
இதைக் கண்ட சுற்று வட்டார மக்களும், பள்ளிவாசல் இமாம்களும், ஹஸ்ரத்
மார்களும் கப்ரு ஆடிக் கொண்டிருக்கும் அதிசயத்தைக்காண படையெடுத்துச்
சென்றனர்.
பின்னர் தான் வேடிக்கை காட்ட அந்த ஊரிலுள்ள விஷமம் நிறைந்த
சில இளைஞர்கள் ‘ இதை வியாபாரமாக்க துணிக்குள்ளே சிறிய மின் விசிறி ஒன்றை
பொருத்தி மூடிவிட்டனர். சற்றுத் தொலைவில் யாரும் பார்க்காத வண்ணம்
மின்விசிறிக்கு மின்சார இணைப்பைக் கொடுத்து இயக்கிக் கொண்டிருப்பது
தெரியவந்தது.
மின்விசிறியினால் துணி ஆடிக்கொண்டிருந்ததால்
‘அவ்லியாவே ஆடிக்கொண்டிருப்பதாக’ வதந்திகள் பரவின. காற்றாடி அவ்லியாவைப்
பார்க்க பக்தர்களும், பக்தைகளும் திரள ஆரம்பித்தனர். இந்த ஒரு மாத
காலத்தில் நேர்ச்சைகளும், உண்டியல் பணங்களும் குவியத்தொடங்கின. திட்டமிட்ட
வசூலைப் பெற்றதும் அந்தப் போலிகள் அங்கிருந்து தலை மறைவாகிவிட்டனர். மக்களை
ஏமாற்ற எத்தனையோ வழிகள் ! வியாபார வித்தைகள் !! மக்கள் ஏமாற ஏமாற
புதுப்புது அவ்லியாக்கள் திடீர் பிள்ளையாரைப் போல் திடீர் திடீரென
முளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹயாத் அவ்லியாக்கள்
கன்னியாகுமரி
மாவட்டம் கோட்டார், திட்டுவிளையில் இரு கப்றுகளை ‘ஹயாத் அவ்லியா’ என்று
கூறுகின்றனர். இவர்களை மண் தோண்டிப் புதைத்தபிறகு மீண்டும் வேறு வழியாக
வெளியேறிவிடுவதால் இவர்கள் ‘ஹயாத் அவ்லியா’ உயிருள்ள அவ்லியா என
அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மட்டும் உயிரோடிருந்து மற்றவர்களெல்லாம்
செத்த அவ்லியாக்கள் என சொல்ல வருகிறார்களா? இவையெல்லாம் சாத்தியப்படுமா?
என்பதைக்கூட சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?
படகிலே மையித்தாக மிதந்து வந்த குளச்சல் அவ்லியா
கன்னியாகுமரி
மாவட்டம் குளச்சலில் முன்பொரு காலம் ஒரு படகு மிதந்து வந்ததாம். அதை
கிறித்தவர்கள் பிடிப்பதற்காக சென்றபோது அது ஓடிவிட்டதாம். பின்னர்
இந்துக்கள் பிடிப்பதற்காக ஓடினார்களாம். படகு பிடிதரவில்லை. இறுதியாக
முஸ்லிம்கள் பிடிப்பதற்குச் சென்ற போது அது அருகே வந்ததாம். பின்னர் அந்த
படகைத் திறந்து பார்த்தபோது அதனுள் ஒரு கடிதம் இருப்பது தெரியவந்தது. அதை
படித்த போது ‘ நான் இன்னார்! என்னை குளச்சலில் இந்த கடற்கரை அருகில்
அடக்கம் செய்யவேண்டும்’ என எழுதப்பட்டிருந்தது.
இதை 1974 ல்
குளச்சல் வந்த பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் அவர்களிடம் ஊர்
தலைவர் சொன்ன தகவலை எழுதிக்கொடுத்தேன். பின்னர் சென்னை வந்தபோது கடற்கரை
பகுதிகளான நாகப்பட்டினம்,அதிராம்பட்டணம் போன்ற நான்கு ஊர்களிலிருந்தும்
இதைப்போன்ற செய்திகள் வந்திருந்தன. அப்போது தான் புரிந்தது இதில் எந்த
உண்மையும் இல்லை.யாரோ கடற்கரை பகுதிகளில் பயானில் கப்ஸா
விட்டிருக்கிறார்கள். நம்பவே முடியவில்லை.
‘மையித் படகு’
மக்களைத்தேடி ஓடி வருமா ? அதை நம்பவேண்டுமாம்! அவரது பெயர், முகவரி. எந்த
ஊர்? எப்போது பிறந்தார்? எப்போது இறந்தார்? ஊருக்கு என்ன செய்தார்? என்ற
எந்த விதமான நம்பகரமான தகவலுமில்லை. ஊர் மக்கள் முதலில் ‘வப்பூசன்’ எனப்
பெயர் சொன்னார்கள்.பின்னர் ‘வாப்பு ஹுஸைன்’ என்று சொல்லத்தொடங்கினார்கள்.
அவ்லியாவுக்கு கூட்டம் சேரச் சேர இப்போது செய்கு பாபுல் ஹுஸைன் அவ்லியா
(ரலி)’ என கிரேடு உயர்த்தி பெயர் பலகையும் தொங்க விட்டிருக்கிறார்கள்.
மக்கள் சாரை சாரையாக இப்போது படையெடுத்து வரத் தொடங்கிவிட்டார்கள்.
இவ்வளவு
காலமாக இல்லாதிருந்த இந்த ஊரில் இப்போது மவ்லிது,கந்தூரி, நேர்ச்சை, விழா
என திடீரென்று எப்படி முளைத்தது? இப்போது ஆண்டுதோறும் இங்கு பெரிய விழாவே
நடத்தப்படுகிறது.மக்கள் மூட்டை மூட்டையாக அரிசி,மசாலா,பழவகைகளைக் கொண்டு
கொட்டுகிறார்கள். ஆடு, கோழிகள் என இன்னொரு பக்கம் குவிகிறது. சில்லரையாக
சிறிது விளம்பிவிட்டு மொத்தமாக வேறு பக்கம் பதுக்கப்படுகிறது.
இந்தப்
போலித்தனங்கள் ஊர் மக்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் தெரிந்தும்
அவ்லியாவின் மீது கொண்ட பக்தி இவர்களின் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது.
இவர்களெல்லாம் கண்டுகொள்ளாமல் மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.
சுனாமி
வந்தபோது இன்னொரு புரளியையும் கிளப்பிவிட்டார்கள் இந்த கப்ரு
ஆராதனைக்காரர்கள். சுனாமி வந்த போது கப்றைச் சுற்றிலும் வெள்ளம் புரண்டு
வந்து அனைத்தையும் அழித்துவிட்டதாம். ஆனால் கப்றின் மீது
விரிக்கப்பட்டிருந்த பட்டுத்துணி மட்டும் நனையவில்லையாம். எல்லாம் அழிந்த
பின்னர் கப்ரின் மீது ஒரு புதிய பட்டுத்துணியை விரித்துவிட்டு அவ்லியாவின்
பட்டுத்துணி மட்டும் நனையவில்லை. அது அப்படியே தான் இருந்தது என
கிளப்பிவிட்டார்கள் புதிய புரளியை! பாருங்கள் அவ்லியாவின் கராமத்தை!
மறுபிறவி எடுத்த கமுதி அவ்லியா!
இப்போது
ஆங்காங்கே சில கம்பங்களைக்கட்டி நாகூர் தர்ஹா கொடி, அஜ்மீர் நாதா கொடி!
கவ்துல் அஃலம் கொடி என எழுதி சற்று உயரமான கொடிகளில் கம்பங்களை நாட்டி
சென்னை மண்ணடி , புதுப்பேட்டை, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் காணிக்கை
உண்டியல்களைக் காணலாம். அது போல சில ஊர்களில் நாகூர் தர்ஹா போன்ற ஒரு
கப்ரைக்கட்டி இங்கும் நாகூர் அவ்லியா அடக்கமாயிருக்கிறார்கள் என்று
கூறுவார்கள்.
இவ்வாறு போலியாக எழுப்பப்பட்ட ஒரு கட்டடம் கமுதியில்
காணப்படுகிறது. நாகூர் நாயகம் எங்கள் ஊரிலும் வந்து மீண்டும் அடக்கமாகி
இருக்கிறார்கள் என்று அந்த ஊர் மக்களே சொல்லும் போது தலையை
முட்டிக்கொள்ளலாம் போலிறிருக்கிறது. இது போல் பொட்டல் புதூரிலும் முஹ்த்தீன
அப்துல் காதிர் (ரஹ்) பெயரில் ஒரு கப்றை கட்டிவைத்திருக்கிறார்கள்.அவர்கள்
இந்தியாவுக்கு வந்ததாகவே எந்த ஆதாரமுமில்லை. போலி சமாதிகள் எப்படி
உருவாகிறது? மக்களின் கற்பனை வளத்தைப் பாருங்கள்.
இன்றும் நடமாடும் அவ்லியா
தூத்துக்குடி
மாவட்டத்தைச் சார்ந்த காயல் ஜலீல் மைதீன் என்னும் நடமாடும் அவ்லியா தம்
சீடப்பெண்ணுக்கு ஆண்மகவு தான் பிறக்கும் என்று தமது ஞானக் கண்களால் அறிந்து
ஆரூடம் கூறியிருக்கிறார். அதை நம்பியிருந்த அந்தப் பெண்ணுக்கு பெண்
குழந்தை பிறந்திருப்பதை ஏமாற்றத்தோடு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார்.
உடனே அந்த அவ்லியா அது பெண் குழந்தை இல்லை.ஆண்குழந்தை தான்! நான் வந்து
நிரூபித்துக்காட்டுவதாகக் கூறி அந்த ஊருக்குப் பயணம் போயிருக்கிறார்
நடமாடும் அந்த அவ்லியா. அங்கு சென்ற அவ்லியா சில மந்திரங்களை ஓதிவிட்டு
‘இப்போது பாருங்கள்! இது பெண்குழந்தையல்ல. ஆண்குழந்தை தான். உங்கள்
கண்களுக்கு பெண் குழந்தையாகத் தெரிந்திருக்கிறது என்று கூறியதும் அந்தக்
குடும்பமே வியந்து போனதாம். அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லையாம்’
என்று அந்த அவ்லியாவே ஒரு மேடையில் பேசியிருக்கிறார். இதை நம்புவதற்கும்
ஒரு கூட்டமிருக்கிறது. பாருங்கள் இந்த அறியாமையை.
அவ்லியாவின் ஆசி பெற டிஸ்கோ நடன நிகழ்ச்சிகள்.
திருவாரூர்
மாவட்டம் திட்டச்சேரி மன்சூர் அவ்லியாவின் வருடாந்தர விழாவை
வெகுவிமரிசையாக நடத்துவார்கள் அந்த ஊர் அவ்லியா பக்தர்கள்.நாகூரைப் போன்று
உரூஸ் நடத்த நம்மிடம் அவ்லியாக்கள் இல்லையே என்று தேடிக்
கண்டுபிடிக்கப்பட்ட அவலியா தான் மகான் மன்சூர் அவ்லியா. அப்படி ஒரு மனிதர்
அந்த ஊரில் வாழ்ந்ததாக வரலாறே இல்லையாம். இன்று இந்த அவ்லியா பெயரில்
அர்ச்சனைகள்!ஆராதனைகள்! ஆடல் பாடல்கள்! அமர்க்களமாக நடைபெறுகிறது.
1977ல்
அந்த ஊருக்குச் சென்றபோது நம்மை வரவேற்றதே அந்த அவ்லியாவின் உரூஸ்
விளம்பரம் தான்! அது தான் கிளைமேக்ஸ்! அந்த விளம்பர அழைப்பிதழ் வாசகங்கள்
என்ன தெரியுமா ?
மன்சூர் அவ்லியாவின் ஆசி பெற..,
வெண்ணிற ஆடை நிர்மலாவின் நடன நிகழ்ச்சி காண வாரீர்!
இந்த விளம்பர நோட்டீஸைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டோம்.
சமுதாயம் எங்கே சென்றுவிட்டது பர்hத்தீர்களா?
அவ்லியாவின் மாண்பைப்பெற திரைப்படங்கள்!கரக ஆட்டங்கள்!
சோலியக்குடி
என்னும் முத்துவடுகநாத பட்டணம் செய்யது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின்
56-வது ஆண்டு சந்தனக்கூடுவிழா! ஹிஜ்ரி 1403 ஜமாதுல் அவ்வல பிறை 19 (4.3.83)
வெள்ளி பினனேரம் சனி இரவு சந்தனக்கூடு விழா அதிவிமரிசையாக நடைபெறும்.
அன்று இரவு 10 மணியளவில் இரண்டு திரைப்படங்கள்
இலவசமாகக் காண்பிக்கப்படும். (பெண்களுக்கு தனி இடம் உண்டு)
அன்று இரவு 7 மணியளவில் கரக ஆட்டமும் உண்டு.
இப்படிக்கு தர்ஹா கமிட்டியார், சோலியக்குடி எம்.வி.பட்டணம்.
அவ்லியாவின்
ஆசியைப் பெற இத்தனை அம்சங்களும் இடம் பெறவேண்டுமாம். எப்படி அவ்லியாவின்
மீது நம்பிக்கையை வளர்த்துவைத்திருக்கிறார்கள் பாருங்கள். அவ்லியாவுக்கும்,
திரைப்படத்துக்கும், கரக ஆட்டத்துக்கும் என்ன தொடர்போ? எப்படிப்பட்ட
சம்மந்தத்தைப் பிணைத்து வைத்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்தாலே
மார்க்கத்தை எந்த இலட்சணத்தில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது
புரியவரும்.
அவ்லியாவின் ஆசிபெறும் சிவப்பு விளக்குக் கன்னியர்!
இதயமே
வெடித்து விடும் போலிருந்தது அந்த ஆபாசக் காட்சியைக் கண்டதும்! வேறு
எங்கும் அல்ல. சுல்தானுல் ஆரிபீன் நாகூர் நாயகத்தின் தர்கா வளாகத்தில்
தான்! 1960ல் நாகூரில் என்ன நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள சாபு
குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் ஆசிரியரின் தம்பி என்னை வளாகத்தின் உள்ளே
நடக்கும் ஆபாசங்களை விவரித்து வந்தார். அங்கே வடிவமைக்கப்பட்ட சில
டென்டுகளின் முன் அரை நிர்வாணத்தில் தங்ளை அலங்கரித்துக்கொண்டு நிற்கும்
இளம் குமரிகள் சிலர் அங்கே நின்று கொண்டிருந்தனர். திடுக்கிட்டவனாக
இவர்கள் யார்? எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் ? எனக்
கேட்டபோது வாடிக்கையாயர்களை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்
என்றார் அந்த நண்பர். அவ்லியா கண்டு கொள்ளாமல் அனுமதிக்கிறாரே ! இவருக்கு
இந்த அசிங்கத்தை தடுப்பதற்கோ இந்த வேசிகளை அழிப்பதற்கோ சக்தியில்லையா ?
எனக்கேட்டபோது இது இங்கே சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது என்றாரே
பர்க்கலாம். அன்றுதான் அவ்லியாவுக்கு ஆக்கவோ அழிக்கவோ சக்தியில்லை என்ற
முடிவுக்கு வந்தேன்.
அவ்லியாவின் ஆசியை வழங்கும் குடிமக்கள்.
குடிமக்கள் என்றதும் நாட்டு மக்கள் என நினைத்து விடாதீர்கள்!
இந்த
புண்ணியவான்கள் யார் தெரியுமா? முத்துப்பேட்டை செய்கு தாவூது
வலியுல்லாஹ்வின் ஆதீன கர்த்தாக்கள.இவர்கள் இரவு வேளையில் அவலியாவின்
(கப்ரின்)அருகிலேயே அமர்ந்து கொண்டு பரோட்டா,விஸ்கி போன்ற மது வகைகளை
அருந்திக்கொண்டிருந்ததை அந்த ஊரைச்சார்ந்த ”யாகூப் சார்” என்னும் ஆசிரியர்
என்னிடம் காட்டி ”இதோ பாருங்கள் அவ்லியாவின் அருள் பெற்ற புரோகிதர்கள்”
என்று அவர்களது வண்டவாளங்களை விவரித்தார். நீங்கள் நம்பும் இந்த
அவ்லிக்களுக்கு தன் பக்கத்திலே நடக்கும் அக்கிரமங்களை , லீலைகளை
கண்டிக்கும் ஆற்றல் இல்லையல்லவா? இவர்கள் எங்கே உங்களது வேண்டுகோளை ஏற்று
உங்களுக்கு அருள் புரியப்போகிறார்கள்?
இதனால் தான் “அல்லாஹ்வையன்றி
நன்மையோ தீமையோ செய்ய இயலாத இவர்களை நீங்கள்
அழைத்துப்பிரார்த்திக்காதீர்கள்” ( 10:106)என இறைவன் கடுமையாக
எச்சரிக்கிறான்.
அவ்லியாவின் அருளைப்பெற யானை,தேர் ஊர்வலங்கள்!
மேளதாளங்கள்!! வாண வெடிகள்!!
அவ்லியாவுக்கும்
யானைக்கும் என்ன சம்பந்தமோ? அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில் உண்ண
உணவுக்கும் உடுத்த உடைக்கும் வழியில்லாது, தங்குவதற்கு போக்கிடமில்லாது
பரதேசிகளாக அலைந்து திரிந்தபோது ஏறிட்டுப் பார்க்க நாதியில்லை. இப்போது
மட்டும் இந்த அவ்லியாக்கள் மீது இவ்வளவு பக்தியா? பாசமா?
இந்த அவ்லியாக்கள் பெயரால் இத்தனை அர்ச்சனைகளா ? ஆர்பாட்டங்களா? மேள தாளங்களா ? யானை ஊர் வலங்களா?
ஆயிரக்கணக்கில்
வீடு தோறும் வசூல் செய்து பல இலட்சங்களை செலவு செய்து ஊரே
அமர்க்களப்படுத்துகிறார்களே! யானையின் மீது பவனிவர, கொடியைப்பிடித்து
முன்வரிசையில் நிற்க ஊர் பிமுகர்களிடையே போட்டா போட்டி! அடிதடிகள்! நானா ?
நீயா ? என்ற வீராப்புகள்! கைகலப்புக்குப்பின்னரே ஒருவழி பிறக்கும். யார்
ஆதீனத்துக்கு அதிகம் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே கொடியைப்பிடித்துவர
அதிக வாய்ப்பு!
இதில் பல ஆயிரங்கள் புரளும். பின்னர் கேட்கவா
வேணடும்? ஊர்வலத்தில் உலா வரும் அந்த மாண்புக்குரிய பக்தருக்கு
ஜரிகைத்துணியால் தலைப்பாகை கட்டி, கிரீடம் அணிவித்து, பூமாலை சகிதமாக
ஊர்வலமாக அழைத்துவரும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக்காண தெருவெல்லாம்
தோரணங்களோடு ஆண்கள், பெண்கள், சிறுவர்,சிறியவர், குழந்தைகள்,கிழடுகள்
சகிதமாக கட்டிடங்கள், கூரைகள், மரக்கொப்புகள்; என உயரமான இடங்களில் ஏறி
நின்று பார்க்க வரிந்து கொண்டு போட்டியிடும் காட்சிகள் உலகக் கோப்பையைத்
தட்டிச் செலல்லப்போகும் ஒரு அதிசயத்தைப் பார்ப்பது போலிருக்கும்.
இவையெல்லாம்
எங்கு நடைபெறுகின்றது எனக் கேட்கிறீர்களா ? கன்னியாகுமரி மாவட்டம்
திட்டுவிளை, தக்கலை, கோட்டார் போன்ற ஊர்களிலும், திருநெல்வேலி மாவட்டம்
பொட்டல் புதூர் போன்ற புற நகரங்களிலும், நாகூர், காரைக்கால், திருச்சி
போன்ற பெருநகரங்களிலும் இன்றும் வீம்புக்காக நடத்தப்பட்டு வருவதைப் போய்
பார்த்து வாருங்கள்.
அப்போது தான் அறிவுக்கேற்ற மார்க்கத்தைப்
பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் முஸ்லிம்களின் இலட்சணங்கள் புரியும். இந்த
போலி முஸ்லிம் பெயர்தாங்கிகள் இந்த அறிவியல் யுகத்திலும் எங்கே சென்று
கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.
சமுதாயமே! இன்னுமா இந்த அறியாமை ?
எவ்வளவு
காலத்துக்குத்தான் இப்படியே வாழ்வது? சமுதாயமே கொஞ்சம் சிந்தித்துபார்!
அதள பாதாளத்துக்குச் செல்லும் நம் சமுதாயத்தைக் கட்டிக் காக்க வேண்டாமா?
இவற்றிற்கெல்லாம் மறுமையில் கேள்வி கணக்குகள் கிடையாதா? அல்லாஹ்வின்
முன்னிலையில் என்ன பதில் சொல்வது? என்பதை ஒரு கணம் ஆராய்ந்து பார்!
இதற்கெல்லாம்
துணை போகும் ஆதீன கர்த்தாக்கள், செய்குமார்கள், ஆலிம்சாக்கள், ஊர் ஜமாஅத்
தலைவர்கள், முக்கியப்பிரமுகர்கள் எல்லாம் இதற்குச் சமாதி கட்ட
முன்வரக்கூடாதா? இந்த அறியாமையிலிருந்து நம் சமுதாயத்தைக் காத்து உலக
அரங்கில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கத் துணை புரியக்கூடாதா? ஏனைய
சமுதாயங்களெல்லாம் அறிவிலும்,திறமையிலும், கல்வியிலும், பொருளாதாரத்திலும்
ஓங்கி நிற்கும்போது இவற்றிற்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழ்வேண்டிய நாம்
தாழ்ந்து நிற்கலாமா ? தலை குனியலாமா? தலை நமிர்ந்து நிற்க வேண்டாமா?
அல்லாஹ்வை அஞ்சும் நேரம் இன்னும் வரவில்லையா?
இன்னும் ஒரு சுனாமி வரவேண்டுமா?
அல்லாஹ் தன்மானமுள்ள நம்மைப்பார்த்துக் கேட்கிறான் :-
விசுவாசம் கொண்ட மக்களுக்கு இறைவனுடைய போதனைகளைக் கேட்டும் இன்னும் அவனை அஞ்ச வேண்டிய நேரம் வரவில்லையா ? (அல்குர்ஆன் :57:16)
மக்களைக் காக்கும் கடவுள் அவதாரங்கள்!
கடவுளில்
தான் எத்தனை எத்னை வகைகளை ரகம் ரகமாக வகைப்படுத்தியள்ளனர். ஊருக்கொரு
கடவுள்! ஆளுக்கொரு கடவுள் என்ற நிலை வந்து விட்டது. இவைகள் என்ன என்று
பாருங்கள்.
முருகன் துணை ! அம்மன் துணை! அனுமான் துணை! பராசக்தி
துணை! என்ற நம்பிக்கை வாசகங்கள் இந்துக்களிடம் பரவலாகக் காணலாம்.
இதைக்காப்பியடித்த முஸ்லிம் பெயர் தாங்கிகள் தங்களுக்கும் இப்படிப்பட்ட
கடவுள் அவதாரத் துணைகள் தேவைப்படுகின்றன என்று கருதி அவர்களும் இதுபோன்ற
வாசகங்களை எழுதிவைத்திருக்கும் வேதனையைப் பாருங்கள்.
முகைதீன் ஆண்டவர் துணை!
காதர் அவ்லியா துணை!
யா கவுஸ் துணை!
ஷhஹுல் ஹமீது நாயகம் துணை!
செய்யிதலி பாத்திமா துணை!
சிக்கந்தர் அவ்லியா துணை!
ஏர்வாடி அவ்லியா துணை!
பீரான்மலை அவ்லியா துணை!
பாதுஷா நாயகம் துணை!
நாகூர் ஆண்டவர் துணை!
சுல்தான் அலாவுத்தீன் அவ்வியா துணை!
நத்கர் ஒலியுல்லாஹ் துணை!
பாசிப்பட்டணம் அவ்லியா துணை!
பீமா அம்மாள் துணை!
முஸாபர் அவ்லியா துணை!
இவையெல்லாம் என்ன தெரியுமா? மதுரையிலுள்ள ரிக்சாக்கள், லாரிகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்.
இப்படியெல்லாம்
இறைவனது படைப்புகளிடம் துணை தேடலாமா? உதவி தேடலாமா ? இஸ்லாம் இதை
அனுமதிக்கிறதா? இவையெல்லாம் ‘ இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கும் கொடிய
‘ஷிர்க்’ என்னும் மிகப்பெரிய பாவமாகும். இதற்கு மன்னிப்பே கிடையாது.
நிரந்தர நரகமே இதற்குரிய தண்டனையாகும். சுவர்க்கம் ஹராமாகிவிடும்.’ என்பதை
வான்மறை அல் குர்ஆன் (4:48,5:72,46:5,31:13, 26:213) வசனங்கள்
எச்சரிக்கின்றன.
இறைமறை அல்குர்ஆன் கூறுகிறது
1.அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள் 72:18,
2.அல்லாஹ்வைத்தவிர்த்து நன்மையோ தீமையோ செய்ய முடியாதவற்றை அழைக்காதீர்கள 40:14,
நீங்கள் உங்கள் தேவைகளுக்காக என்னையே அழையுங்கள். நான் உங்களு(டைய பிரார்த்தனைகளு)க்குப் பதிலளிப்பேன் 40:60,
3.உதவி என்பது வல்லமையும் ஞானமுடையோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிரவேறு (எவரிடமிருந்தும்)இல்லை 3:26,
4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே உதவி தேடுகிறோம் 1:5
என்ற இறைமறை வசனங்களும் ‘உதவி வேண்டுமாயின் அல்லாஹ்விடமே கேட்டுப் பெறுங்கள்’ (திர்மிதி) போன்ற நபிமொழிகளும்
மனிதனின்
எவ்வகை தேவையானாலும், எவ்வகை உதவியானாலும் இறைவனிடமே கேட்கவேண்டும்.
அவனைத்தவிர வேறு எவரிடமும் உதவியை தேடவே கூடாது. அவ்வாறு கேட்டால் அவன்
இறைவனுக்கு இணைவைத்த பாவியாகி விடுவான். இறைவனே அனைத்துக்கும் துணை
புரிபவன் என்பது முஸ்லிம்களின் அசைக்க முடியாத ஈமானிய நம்பிக்கையாகும்.
இன்று இந்த நம்பிக்கையிலிருந்து தடம் புரண்டு முஸ்லிம்கள் எங்கோ
சென்றுவிட்டார்கள். யார் யாரிடமோ உதவி தேடுகிறார்கள். இறைவன் நம்மைக்
காப்பானாக! நவூதுபில்லாஹ்.
அவ்லியாக்கள் யார்? அவர்களின் இலக்கணம் என்ன?
அவ்லியாக்களின்
இலக்கணத்தை இறைமறை பின்வருமாறு கூறுகிறது:-அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த
பயமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் இறைவனை
நம்புவார்கள்.(அவனை) அஞ்சுவோராகவும் இருப்பார்கள். (அல்குர்ஆன்-10:62,63)
அவர்கள்
1) இறைவனைத்தவிர எவருக்கும் பயப்படமாட்டார்கள்.
2. எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்
3) இறைவனை உறுதியாக நம்புவார்கள்
4. உள்ளும் புறமும் இறைவனைஅஞ்சுபவர்களாக (தக்வா உடையவர்களாக) இருப்பார்கள்.
இந்த
பண்புகளில் ஒருவர் உண்மையாகவும் உறுதியாகவும் இறைவனை நம்புகிறாரா? இறைவனை
அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் ஈமான், தக்வா என்னும்
இருதன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும்.
இறைவனைத்தவிர எவரும் இதனை அறிந்து கொள்ள முடியாது. எனவே யார் “இறை நேசர்”
என்பதை எவரும் அறிந்து கொள்ள முடியாது.
மேலும் அவலியாவுக்குரிய இலக்கணத்தைப் பாருங்கள்:-
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் “வலி என்பவர் 1. அல் ஆலிமு பில்லாஹ்-
இறைவனைப்பற்றி அறிந்தவராக இருப்பார்.2. அல்முவாளிபு அலா தாஅத்திஹி- அவனது
கட்டளைகளை சரியாகக் கடைபிடிப்பவராக இருப்பார்.3. அல்முக்லிசு ஃபீ இபாததிஹி
-அவனை வணங்கி வழிபடுவதில் பரிசுத்தமானவராக இருப்பார்” என
விளக்கமிளிக்கிறார்கள்.
இமாம் சவ்கானீ (ரஹ்) அவர்கள் ” இறைவேதத்தை
முற்றிலும் கடைபிடிப்வராகவும், பெருமானார(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியைப்
வாழ்வின் அனைத்து அமசங்களிலும் பின்பற்றுபவராகவும் இருப்பவரே இறைநேசராக
இருக்கமுடியும் எனக் கூறுகிறார்கள்.
இவ்வாறிருக்க, நாம் எவ்வாறு
ஒருவரை “வலி” என்றும் “மகான்” என்றும் சான்றிதழ் வழங்க முடியும்? இன்று
நாம் அவ்லியாக்கள் எனக்கூறிடு்ம் எவரைப்பற்றியும் எதையும் நாம்
அறிந்திருக்கவில்லை. அவர்களின் அகவாழ்வைப்றியோ புறவாழ்வைப்பற்றியோ
எதுவும் நமக்குத்தெரியாது.
இறைவனை உள்ளும் புறமும் அஞ்சி வாழ்ந்த அவனது
அடியார்களைப்பற்றிக்
குறிப்பிடும் போது,
” அவர்களை
அல்லாஹ்வும் பொரிந்துக்கொண்டான். அவர்களும் அவனைப்
பொரிந்திக்கொண்டார்கள்” (அல்குர்ஆன் 98:8) என இறை மறை
குறிப்பிடுகின்றது. இதன்படி இறை நேசர்கள் என நாம் கூறுவோர் இறைவனைப்
பொரிந்திக் கொண்டிருக்கலாம். ஆனால் இறைவன் அவர்களைப் பொரிந்திக்
கொண்டானா இல்லையா என்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும் ? இறைவனோ
இறை தூதரோ அறிவிக்காத ஒரு செய்தியை நாம் எவ்வாறு நம்ப முடியும? எனவே
எவரையும் நாமாக வலி என்றோ அவ்லியா என்றோ கூறவே முடியாது. அவ்வாறு ஒருவர்
தன்னை அவ்லியா என்று கூறினால் அவர் பொய்யராகவே கருதப்படுவார்.
(வலி
என்றால் இறை நேசர், அவ்லியா என்றால் இறைநேசர்கள் என்பது பொருளாகும்.
ஒருமைக்கும் பன்மைக்கும் வேறு பாடு தெரியாமல் அவ்லியா என்றே மக்கள்
கூறுகின்றனர். எனவே வழக்குப்படியே நாம் அவ்லியா என்ற பன்மைச்சொல்லையே
பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைக் கவனத்திற் கொள்க!)
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!!
--nagoreflash.blogspot.com--