"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

அடக்கத்தலத்தில் மண்ணை அதிமாக்கத்தடை!

 அடக்கத்தலத்தில் மண்ணை அதிமாக்கத்தடை!

ஒருவரை அடக்கம் செய்யும் போது குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை விட சிறிதளவும் அதிகமாக்கக் கூடாது என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

سنن النسائي2027 - أخبرنا هارون بن إسحاق قال حدثنا حفص عن بن جريج عن سليمان بن موسى وأبي الزبير عن جابر قال : نهى رسول الله صلى الله عليه و سلم أن يبني على القبر أو يزاد عليه أو يجصص زاد سليمان بن موسى أو يكتب عليه - قال الشيخ الألباني : صحيح

கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807

குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணைத் தவிர வேறு எதனையும் அதிகமாக்கக் கூடாது என்ற இந்தத் தடை ஒன்றே சமாதிகளைக் கட்டக் கூடாது என்பதற்குப் போதுமான ஆதாரமாகும்.

குழியில் இருந்து எடுத்த மண்ணை மீண்டும் போட்டு மூடினால் அடக்கத்தலம் சற்று உயரமாகிவிடும். இது தவறல்ல. மண்ணைத் தோண்டும் போது மண்ணுடைய இறுக்கம் குறைவதாலும், உடலை உள்ளே வைப்பதாலும் முன்பு இருந்ததை விட அந்த இடம் சற்று உயரமாக ஆனாலும் சில நாட்களில் மண் இறுகுவதாலும், உடல் மக்கிப்போவதாலும் ஏறக்குறைய தரைமட்டத்துக்கு வந்து விடும்.

குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை விட வேறு எதையும் அதிகமாக்கக் கூடாது என்றால் சிமிண்ட், சுண்ணாம்பு கொண்டு பூசுவதும் உயர்த்திக் கட்டுவதும் ஹராமான செயல் என்று இந்த ஹதீஸ் மூலம் நாம் அறியலாம்.

அதிகமாக்கக் கூடாது என்ற தடையில் பூசுவதும், கட்டுவதும் அடங்கும் என்ற போதிலும் இந்த சமுதாயம் வழிதவறி விடக்கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாகவும் தடை செய்து விட்டார்கள்.

சமாதி கட்டலாகாது என்பதில் கருத்து வேறுபாடில்லை

 சமாதி கட்டலாகாது என்பதில் கருத்து வேறுபாடில்லை

இறந்தவர்களின் அடக்கத்தலத்தில் வழிபாட்டுத்தலம் எழுப்புவதும், சமாதிகள் பூசப்பட்டுவதும் ஆரம்பகால முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. ஆரம்பகால முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் இதை ஏகமனதாகக் கண்டித்துள்ளனர். இது பிற்காலத்தில் உருவான தீய செயலாகும்.

இது குறித்து ஹிஜ்ரி 1200களில் வாழ்ந்த இமாம் ஷவ்கானி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

شرح الصدور بتحريم رفع القبور (ص: 8)فنقول: اعلم أنه قد اتفق الناس، سابقهم ولاحقهم، وأولهم وآخرهم من لدن الصحابة رضوان الله عنهم إلى هذا الوقت: أن رفع القبور والبناء عليها بدعة من البدع التي ثبت النهي عنها واشتد وعيد رسول الله لفاعلها، كما يأتي بيانه، ولم يخالف في ذلك أحد من المسلمين أجمعين، لكنه وقع للإمام يحي بن حمزة مقالة تدل على أنه يرى أنه لا بأس بالقباب والمشاهد على قبور الفضلاء، ولم يقل بذلك غيره، ولا روي عن أحد سواه، ومن ذكرها من المؤلفين في كتب الفقه من الزيدية فهو جري على قوله واقتداء به. ولم نجد القول بذلك ممن عاصره، أو تقدم عصره عليه لا من أهل البيت ولا من غيرهم.

சமாதிகளை உயர்த்துவதும், அதன் மேல் கட்டடம் கட்டுவதும் நபியவர்கள் எச்சரித்து கண்டித்த பித்அத்களில் ஒன்றாகும் என்பதில் நபித்தோழர்கள் காலம் முதல் இந்த நேரம் வரை முன்னோர்களும், பின்னோர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். இதில் முஸ்லிம்களில் ஒருவரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை. யஹ்யா பின் ஹம்ஸா என்ற அறிஞர் ஒருவர் மட்டுமே நல்லோர்களின் சமாதிகள் மீது மாடம் அமைப்பது தவறல்ல என்று கூறியுள்ளார். இவர் ஒருவரைத் தவிர மற்ற யாரும் இவ்வாறு சொல்லவில்லை. ஷியாக்களின் ஒரு பிரிவினராகிய ஜைதிய்யா கூட்டத்தினரின் நூல்களில் இவ்வாறு கூறப்பட்டாலும் அது யஹ்யா பின் ஹம்ஸா என்பவரைப் பின்பற்றிக் கூறப்பட்டதாகும். இந்த யஹ்யா பின் ஹம்ஸா காலத்தில் வாழ்ந்தவர்களிலும், இவருக்கு முன்னர் வாழ்ந்த காலத்திலும் ஒருவர் கூட சமாதிகள் கட்டப்படுவதை அனுமதிக்கவில்லை. இவருக்கு முன்னர் அஹ்லே பைத் எனும் நபியின் குடும்பத்தினரோ, மற்றவர்களோ இக்கருத்தைச் சொன்னதில்லை என்று இமாம் ஷவ்கானி கூறுகிறார்.

மேலும் யஹ்யா பின் ஹம்ஸா என்பவர் எந்த ஆதாரத்தினடிப்படையில் இவ்வாறு கூறுகிறார் என்றால் முஸ்லிம் பொதுமக்கள் நீண்ட காலமாக தர்காக்கள் கட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே அது அனுமதிக்கப்பட்டது என்கிறார். முஸ்லிம்கள் நீண்ட காலமாக ஒன்றைச் செய்து வந்தால் அது எப்படி மார்க்க ஆதாரமாகும்? மேலும் நபியவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ள ஒன்றை முஸ்லிம் பொதுமக்கள் நீண்டகாலம் செய்தால், நபியின் கருத்தைத் தூக்கி வீசிவிட்டு பொதுமக்களின் செயலை மார்க்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற யஹ்யா பின் ஹம்ஸாவின் வாதம் அறியாமையின் உச்சகட்டமாகும். இஸ்லாத்தில் அடிப்படையைத் தகர்த்து எறிவதாகும்.  நூல் : ஷரஹுஸ்ஸுதூர்

தர்காக்கள் கட்டுவதையும், சமாதிகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் யஹ்யா பின் ஹம்ஸா என்பவரைத் தவிர அனைத்து அறிஞர்களும் ஏகமனதாகக் கண்டிக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?

சில விஷயங்களில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு வந்தால் ஒவ்வொரு கருத்திலும் கனிசமான அறிஞர் பெருமக்கள் இருப்பார்கள். ஆனால் தர்காக்கள் கட்டக் கூடாது என்பதில் நல்லறிஞர்கள் அனைவரும் ஒரே கருத்தில் உள்ளனர். தர்காக்கள் கட்டக் கூடாது என்பதற்கும், சமாதிகளை உயர்த்தக் கூடாது என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாலும், தர்காக்கள் கட்டலாம் என்பதற்கு ஒரு ஆதாரம் கூட இல்லாததாலும் தான் இந்த விஷயத்தில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.

கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்

 கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்

ஒருவரை அடக்கம் செய்த பின் அந்த இடத்துக்குப் போய் ஸியாரத் செய்து துஆ செய்ய வேண்டும் என்று விரும்புவது முஸ்லிம்களின் இயல்பாக உள்ளது. அடக்கம் செய்து சில நாட்கள் இவ்வாறு விரும்புவார்கள். காலாகாலத்துக்கும் அவ்வாறு விரும்ப மாட்டார்கள். இதற்காகக் கப்ரைக் கட்டுவதோ, எழுதுவதோ கூடாது. மாறாக அந்த இடத்தில் ஒரு பாராங்கல்லைப் போட்டு வைத்து அடையாளம் காண அனுமதி உள்ளது.

حدثنا عبد الوهاب بن نجدة ثنا سعيد بن سالم ح وثنا يحيى بن الفضل السجستاني ثنا حاتم يعني ابن إسماعيل بمعناه عن كثير بن زيد المدني عن المطلب قال : لما مات عثمان بن مظعون أخرج بجنازته فدفن فأمر النبي صلى الله عليه و سلم رجلا أن يأتيه بحجر فلم يستطع حمله فقام إليها رسول الله صلى الله عليه و سلم وحسر عن ذراعيه قال كثير قال المطلب قال الذي يخبرني ذلك عن رسول الله صلى الله عليه و سلم قال كأني أنظر إلى بياض ذراعي رسول الله صلى الله عليه و سلم حين حسر عنهما ثم حملها فوضعها عند رأسه وقال " أتعلم بها قبر أخي وأدفن إليه من مات من أهلي " . قال الشيخ الألباني : حسن

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாறாங்கல்லை தூக்க முடியாமல் தூக்கி வந்து அவரது தலைமாட்டில் வைத்தார்கள். 'எனது சகோதரர் உஸ்மானின் கப்ரை நான் அடையாளம் கண்டு என் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் இவருக்கு அருகில் அடக்குவதற்காக இந்த அடையாளம்' என்றும் கூறினார்கள்.  நூல்: அபூ தாவூத் 2791

இது கப்ரைக் கட்டக் கூடாது என்பதற்கு மேலும் வலுவான சான்றாகவுள்ளது.

உஸ்மான் பின் மழ்வூன் அவர்களின் அடக்கத்தலத்தை அடையாளம் காண நபியவர்கள் விரும்பிய போதும், அந்த இடத்தில் ஒரு கல்லை எடுத்துப் போட்டார்களே தவிர நிரந்தரமாக இருக்கும் வகையில் சமாதியைக் கட்டவும் இல்லை. எழுதவும் இல்லை; கல்வெட்டு கூட வைக்கவில்லை. எனவே நாம் நினைக்கும் போது அப்புறப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பொருளை அடக்கத்தலத்தின் அருகில் அடையாளம் காண்பதற்காக வைத்தால் தவறில்லை.