"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன்

தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவனைப் போல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சூபிக் கொள்கையை கொண்டவர்கள் சொல்கிறார்கள். இதன் கருத்து நான் கடவுள் என்ற கொள்கையைப் போன்று உள்ளதே. இது போன்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் உண்டா?

பதில்

தன்னை அறிந்தவர் தன் நாயனை அறிந்தவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சில சூஃபியாக்கள் நபி (ஸல்) அவர்களின் மீது அவதூறு சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி கூட ஹதீஸ் நூற்களில் இடம்பெறவில்லை. இந்தக் கருத்தில் பலவீனமான ஹதீஸ் கூட ஹதீஸ் நூற்களில் இல்லை.

முஹ்யித்தீன் இப்னு அரபீ மற்றும் ஷஃரானி போன்ற சூபிக்கொள்கை அயோக்கியர்கள் தங்கள் நூற்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இப்படி ஒரு செய்தியை புனைந்து எழுதி வைத்துள்ளனர். இதற்கு அறிவிப்பாளர் தொடரையோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியைக் கேட்ட நபித்தோழரையோ யாராலும் காட்ட இயலாது. அந்த அளவுக்கு இது பொய்யான தகவல்.

நபியின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தெளிவபடுத்தும் விதமாக பிற்காலத்தில் இமாம் சஹாவீ, அஜ்லூனி போன்ற அறிஞர்கள் நூற்களைத் தொகுத்துள்ளனர். அதில் இது இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளனர்.

المصنوع في معرفة الحديث الموضوع (ص: 189)
349 - حَدِيثُ مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ قَالَ ابْنُ تَيْمِيَّةَ مَوْضُوعٌ


இமாம் இப்னு தைமியா அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார். இமாம் நவவீ அவர்களும் இப்படி ஒரு செய்தி இல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.

المقاصد الحسنة (ص: 657)
1149 - حديث: من عرف نفسه فقد عرف ربه، قال أبو المظفر ابن السمعاني: في الكلام على التحسين والتقبيح العقلي من القواطع أنه لا يعرف مرفوعا، وإنما يحكى عن يحيى بن معاذ الرازي يعني من قوله، وكذا قال النووي: إنه ليس بثابت،

இதன் கருத்தைக் கவனித்தால் இது மிகப்பெரிய உளறல் என்பதை அறியலாம். தன்னை அறிந்தவர் அல்லாஹ்வை அறிவார் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளான். மனிதனுக்கு அடுத்தவனைப் பற்றி தெரியாவிட்டாலும் தன்னை அறியாத எந்த மனிதனும் இருக்க மாட்டான். அப்படி ஒருவன் இருப்பான் என்றால் அவன் புத்தி சரியில்லாத பைத்தியமாகவே இருக்க வேண்டும்.

தனது நாட்டம், தேவை, பலவீனம், பலம் ஆகிய விசயங்களை அவனவன் அறிந்தவனாகவே இருக்கின்றான். என்றாலும் அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்கவில்லை. தன்னை அறிந்தால் அல்லாஹ்வை அறியலாம் என்றால் அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக குர்ஆன் ஏன் வர வேண்டும் ? அல்லாஹ்வைப் பற்றி சரியான கருத்தை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக நபிமார்கள் ஏன் வர வேண்டும் ?

குர்ஆனும் தேவையில்லை. நபியும் தேவையில்லை. நாமாக சுயமாகவே அல்லாஹ்வைப் பற்றி முழுமையாக அறிய முடியும் என்று இதன் மூலம் இந்த சூபியாக்கள் கூற வருகின்றனர். குர்ஆனையும் நபிவழியையும் ஓரங்கட்டுவதற்காகவே இப்படி ஒரு செய்தியை இட்டுக்கட்டியுள்ளனர்.

மேலும் அனல் ஹக் நான் தான் இறைவன் என்ற கேடுகேட்ட சிந்தாந்தத்தைக் கூறி காபிராகியவர்கள் இந்த சூபியாக்கள். மனிதன் கடவுளாக முடியும் என்பது இவர்களின் கொள்கை.

தன்னை அறிந்தால் இறைவனை அறியலாம் என்ற போலி தத்துவத்தின் மூலம் இந்த கேடுகெட்ட கொள்கையை சமுதாயத்தில் புகுத்த நினைக்கின்றனர்.

உன்னைப் பற்றி அறிந்தால் இறைவனை அறியலாம். ஏனென்றால் இறைவன் உனக்குள் இருக்கின்றான். நீயே இறைவனாக இருக்கும் போது வேறு இறைவனை எதற்குத் தேட வேண்டும்? என்ற நச்சுக்கருத்தையும் இந்த வாசகம் உள்ளடக்கியுள்ளது.

அல்லாஹ்விடமிருந்து நேரடியாக கஷ்பு என்ற ஞானத்தின் மூலம் எங்களுக்கு இந்த உண்மை புலப்பட்டது என்றும் இந்த சூபியாக்கள் உளறியுள்ளனர்.

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் இந்த சூபியாக்கள் விசயத்தில் சமுதாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பரேலவிஷத்தின் பயங்கரவாதம் இறைத்தூதர் இறக்கவில்லையாம்

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருப்பதாகவே பரேலவிகள் வாதிடுகின்றனர். அதற்கு அவர்கள் சில ஆதாரங்களையும் எடுத்து வைக்கின்றனர். அந்த வாதங்களுக்கான மறுப்பை நாம் பார்த்து வருகிறோம்.

நான்,  அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை  என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1147, 2013, 3569

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் அல்லர் என்று கூறி, அவர்களை அல்லாஹ்வின் அந்தஸ்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.
உண்மையில் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் ஏனைய மனிதர்களை விட வேறுபடுகின்றார்கள்; வித்தியாசப்படுகின்றார்கள். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதே சமயம், அவர்கள் அல்லாஹ்வின் அளவுக்கு உயர்ந்து விடுவார்களா? என்றால் அறவே கிடையாது.

இவ்வாறு நாம் சொல்கின்ற போது இந்த பரேலவிஷப் பேர்வழிகள்,  நாங்கள் நபியவர்களை அல்லாஹ்வின் அளவுக்கு உயர்த்தவில்லை  என்று வாயளவில் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களது வாதத்தின் பொருள் இதுதான்.
நாம் தூங்கினால் உளூ முறிந்துவிடும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தூங்கினால் உளூ முறியாது. அதாவது அவர்களுக்குத் தூக்கம் இல்லை. அதனால் அவர்களுக்கு உளூ முறிவதில்லை. எனவே அவர்கள் நம்மைப் போன்ற மனிதரல்ல என்பது தான் பரேலவிகளின் வாதம்.
இவர்களது பாஷையில், நம்மைப் போன்ற மனிதர் அல்ல என்று கூறிவிட்டாலே அது அல்லாஹ்வின் இடத்திற்கு உயர்த்தும் கருத்தில் தான் கூறுவார்கள். உண்மையில் அல்லாஹ்வுக்குத் தான் தூக்கம் என்பதே கிடையாது. இதைத் திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகின்றது.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.அல்குர்ஆன் 2:255 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் தூக்கம் என்பது இல்லை; எனவே அவர்கள் நம்மைப் போன்ற மனிதரல்ல, இறைவனைப் போன்ற, தூக்கம் இல்லாத நிலையில் உள்ளவர்கள் என்பது தான் பரேலவிகளின் கருத்து.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில், தமக்குத் தூக்கம் என்பதே இல்லை என்று கூறவில்லை.  எனது கண்கள் உறங்குகின்றன  என்று இவர்களது நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கின்றார்கள்.
இந்த ஹதீஸை மக்கள் தவறாக விளங்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் ஃபஜ்ர் தொழுகையின் நேரத்தைத் தாண்டி தூங்க வைத்து விடுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம்  இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!  என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் (கண் விழித்து) அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அளவு தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (படுத்து) உறங்கினார்கள். வைகறை நேரம் (ஃபஜ்ர்) நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை (கிழக்கு)த் திசையை முன்னோக்கியபடி தமது வாகன (ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்தபடியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள்  பிலால்!  என்றழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள்,  அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைத் தழுவிக்கொண்ட அதே (உறக்கம்) தான் என்னையும் தழுவிக் கொண்டது என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்)  ;உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள் என்று கூற, உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும்,  தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ்,  என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!  (20:14) என்று கூறுகின்றான்  என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1097
இந்த ஹதீஸில் பிலால் (ரலி) சொல்கின்ற இந்த வார்த்தை மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல்குர்ஆன் 39:42)
உறங்கும் போது எல்லா உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றி விடுகின்றான். காலையில் விழிக்கும் போது அவன் நாடினால் விட்டுவிடுகின்றான். இதுதான் நபி (ஸல்) அவர்களுக்கும், பிலால் (ரலி) அவர்களுக்கும் நடந்திருக்கின்றது. இதையே பிலால் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் சொல்லியும் காட்டுகின்றார்கள்.
அப்படியானால் பரேலவிகள் ஆதாரமாகக் காட்டும் புகாரி 1147 ஹதீஸிற்குரிய விளக்கம் என்ன?
நபி (ஸல்) அவர்கள் வஹீயின் தொடர்பில் உள்ளவர்கள். அவர்களுடைய உள்ளத்தில் எந்த நேரத்திலும் இறைச்செய்தி வந்து கொண்டே இருக்கும்.
நம்முடைய தூக்கத்தில் விளையாடுவது போன்று ஷைத்தான் அவர்களுடைய தூக்கத்தில் விளையாட முடியாது. நாம் தூங்கும் போது நம்முடைய கண்கள், உள்ளம் ஆகிய இரண்டும் சேர்ந்தே உறங்குகின்றன.
செல்போன்களை நாம் சுத்தமாக அணைத்துவிட்டால் அதில் எந்த அழைப்பும் செய்தியும் வருவதில்லை. இதைப் போன்று நம்முடைய உறக்கம் அமைந்துள்ளது.
ஆனால் செல்போனை முழுமையாக அணைத்து வைக்காமல் சைலண்ட் மோடில் போட்டுவிடும் போது, அதில் அழைப்புகள், செய்திகள் அனைத்தும் வந்து கொண்டே இருக்கும். இதுபோன்று நபி (ஸல்) அவர்கள் உறங்கினாலும் அவர்களுடைய உள்ளம் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றது.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். உள்ளம் உறங்காது; கண்கள் உறங்குகின்றன என்ற இந்தச் சிறப்பு நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்பல்ல. அனைத்து நபிமார்களுக்கும் உரிய சிறப்பாகும். இதை புகாரியில் இடம் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர் களுக்கு (மீண்டும்) வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்கல்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர்,  இவர்களில் அவர் யார்?  என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர்,  இவர்களில் சிறந்தவர் என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர்,  இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்  என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபி (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில்-(உறக்க நிலையில்)- அம்மூவரும் வந்த போது தான் அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்; அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத்தூதர்கள் இப்படித் தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களுடைய உள்ளங்கள் உறங்க மாட்டா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.நூல்: புகாரி 3570
அதனால் தான் நபிமார்களின் கனவுகளும் வஹீயாக அமைந்திருக்கின்றன. அவை இறைக் கட்டளைகளாகவும் முன்னறிவிப்புகளாகவும் அமைந்திருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக இப்ராஹீத் நபி அவர்களின் அவர்களின் கனவைக் கூறலாம்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது  என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு  என்று (இப்ராஹீம்) கேட்டார்.  என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்  என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.(அல்குர்ஆன் 37:102) 

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் காட்சிகளைக் காட்டிது தொடர்பான வசனங்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றிரண்டு வசனங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.(அல்குர்ஆன் 48:27) 

நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் மக்காவிற்குச் சென்று உம்ரா செய்வதை அல்லாஹ் கனவின் மூலமாகத் தான் முன்னறிவிப்புச் செய்கின்றான்.
(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்! அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண்பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.
அல்குர்ஆன் 8:43

நபி (ஸல்) அவர்களுக்கு பத்ருப் போர் வெற்றி பற்றிக் கூறி உளவியல்ரீதியான தைரியத்தை கனவின் மூலம் அளிக்கின்றான்.
இந்தக் கனவுகளில் ஷைத்தான் தன்னுடைய கலப்படத்தை ஒருபோதும் செய்ய முடியாது. ஏனெனில் வஹீ என்ற பாதுகாப்பு வளையத்திலும் வட்டத்திலும் உள்ள கனவாகும். ஆனால் நம்முடைய கனவுகளில் ஷைத்தான் விளையாடுவான்.
நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத ஒரு விஷயத்தை (கனவில்) கண்டால் (கண் விழிக்கும்போது) தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பி விட்டு, அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இப்படிச் செய்தால்) அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற் படுத்த முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கத்தாதா (ரலி) அவர்கள் சொன்னதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்,
நூல்: முஸ்லிம் 4213

கண்கள் உறங்குகின்றன; உள்ளம் உறங்கவில்லை என்ற ஹதீஸின் பொருள், நபி (ஸல்) அவர்கள் விழித்திருக்கும் போது எப்படி அவர்களது உள்ளம் பாதுகாப்பாக உள்ளதோ அதே போன்று உறங்கும்போதும் பாதுகாப்பாக உள்ளது. ஷைத்தான் மற்றவர்களிடம் உறக்கத்தில் குப்பை கூளங்களைக் கொட்டுவது போன்று நபிமார்களிடம் செய்ய முடியாது என்பதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது.
நபி (ஸல்) அவர்களது உள்ளம் விழிப்பில் இருப்பதால் அவர்களுக்கு உறக்கத்தில் உளூவை முறிக்கும் காரியங்கள் நிகழ்ந்தாலும் அது தெரிந்துவிடும். இதனால் அவர்களது உளூவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது தான் மேற்கண்ட ஹதீஸின் பொருளே தவிர, நபி (ஸல்) அவர்கள் மனிதத் தன்மையைத் தாண்டி, தூக்கம் மறதி போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட கடவுள் நிலையில் உள்ளவர்கள் என்று ஒருபோதும் விளங்க முடியாது.

பரேலவிகளின் இந்த வாதம் பைத்தியக்காரத்தனமான வாதமாகும். இவர்கள் எடுத்துக்காட்டியிருப்பது ஆதாரம் அல்ல, அபத்தமாகும்.

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற கருத்துக்கு இவர்கள் எடுத்து வைக்கும் பொருந்தாத ஆதாரங்களை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் பார்ப்போம்.
(ஏகத்துவம் 2014 ஏப்ரல்)

இறந்த பிறகு அற்புதம் செய்ய முடியுமா?

அற்புதங்கள் நபிமார்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மனிதர்களுக்கும் நடக்கும் என்பதற்குப் பல சான்றுகளைப் பார்த்தோம்.

நபிமார்கள் அல்லாத வேறு யாராவது நான் அற்புதங்கள் செய்யும் ஆற்றல் உள்ளவன் என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும். நபிமார்கள் கூட தாங்களாகவே அற்புதங்களைச் செய்ய  முடியாது. அல்லாஹ் நாடினால், நபிமார்கள் மூலமாக அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு அற்புதத்தையும் நான் இப்போது இந்த மாதிரியாக செய்து காட்டப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த அற்புதத்தைச் செய்கின்ற ஆற்றலை இறைவன் நபிமார்களுக்குத் தான் வழங்கியிருக்கிறான். அவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை.
மற்றபடி நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் உலக வாழ்க்கையில் சில அதிசயங்கள் நடக்கும். ஆனால் அந்த அதிசயங்களை அவர்கள் சொல்லி வைத்து செய்வது கிடையாது. அவர்கள் அறியாமலேயே அது நடக்கும். இவ்வாறு நடக்கப் போகின்றது என அவர்களுக்கே தெரியாது. இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.
அடுத்ததாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், இந்த அற்புதங்களெல்லாம் அவர்கள் உயிருடன் இருக்கும் போது தான் நிகழும்.
அற்புதங்களை நபிமார்கள் செய்வதாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு அவர்களிடமிருந்தே அவர்கள் அறியாமலே அல்லாஹ் வெளிப்படுத்துவதுகின்ற அற்புதங்களாக இருந்தாலும் சரி! இவை அனைத்துமே அவர்கள் உயிருடன் இருக்கும் போது தான் செய்ய முடியும். அவர்கள் மரணித்து விட்டால் அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடுகிறது.
ஆனால் நம் சமுதாய மக்கள், அவ்லியாக்கள் உயிருடன் இருக்கும் போதும், மரணித்த பிறகும் அவர்களிடமிருந்து அற்புதங்கள் நிகழும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, அவர்கள்  உயிருடன் இருக்கும் போது செய்த அற்புதங்களை விட இறந்த பின்னர் தான் அவர்களுக்கு  அதிகமாக அற்புதங்கள் செய்யும் ஆற்றல் பெற்றதாக நினைக்கிறார்கள். உயிருடன் இருக்கும் போது நாம் செய்வதை அறியாத அவ்லியாக்கள் இறந்த பிறகு நாம் செய்வதை மட்டுமல்ல, உலகில் எங்கு எது நடந்தாலும் அனைத்தையும் அறிகிறார் என்று நம்புகின்றனர்.
உயிருடன் இருக்கும் போது நபிமார்களைத் தவிர வேறு யாருக்கும் அற்புங்கள் செய்யும் ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை. அதே நேரத்தில் நபிமார்களாக இருந்தாலும் எந்தவொரு மனிதர்களாக இருந்தாலும் இறந்த பிறகு அற்புதங்கள் செய்ய முடியுமா? அல்லது அவர்களிடமிருந்து அற்புதங்கள் நிகழுமா என்றால் நிகழாது. அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபிமார்களாக இருந்தாலும் இறந்த பிறகு உலகத்தில் நடக்கக்கூடிய எதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்பதற்குக் குர்ஆனில் உள்ள பல வசனங்கள்  சான்றாக அமைகின்றன. அவற்றை நாம் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்.
(அல்குர்ஆன் 7.194)
அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்தையும் அறிந்தவன். உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் தங்களுடைய கோரிக்கையை வைத்தாலும் அவன் அத்தனை தேவைகளையும் ஒரு வினாடியில் நிறைவேற்றக் கூடியவன். அனைவரையும் அல்லாஹ் தான் படைத்தான். அவ்லியாக்கள் என்று இவர்கள் நினைக்கும் அவர்களையும் அல்லாஹ் தான் படைத்தான். அனைவரும் அவனது அடிமைகளே!
அவனல்லாத மற்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நமது தேவைகளை நிறைவேற்றுவது இரண்டாவது விஷயம். முதலில் நாம் அவர்களை அழைத்தால் அதைச் செவியேற்க கூட அவர்களுக்கு சக்தி இல்லை. அப்படியே செவியேற்றாலும் அதற்கு பதிலளிக்கவும் முடியாது என்று சொல்லிக் காட்டுகிறான்.
நாம் இவர்களிடத்தில் கேட்பது என்னவென்றால், தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சக்தி, ஆற்றல் இருக்கிறது என்று நீங்கள் வாதிப்பது உண்மையானால் அல்லாஹ் விடக்கூடிய இந்த அறைகூவலை ஏற்கத் தயாரா?
அவர்கள் செவியேற்பார்கள் என்றால் தர்காவிற்குச் சென்று அவர்களை அழையுங்கள்? அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கின்றார்களா என்று பார்ப்போம். நீங்கள் உங்களுக்குத் தேவையான ஏதாவது ஒரு பொருளை அவர்களிடத்தில் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு கப்ரில் இருந்து கொண்டே உங்களுடைய கையில் நீங்கள் கேட்ட பொருளை கொண்டு வந்து தரட்டும். இந்த மாதிரி உலகத்தில் எங்காவது யாருக்காவது நடந்திருக்கிறதா? என்று ஒரு செய்தியை நீங்கள் காட்ட முடியுமா?
இவ்வாறு செய்து காட்டி, நீங்கள் உண்மையாளர்கள், உங்களுடைய கடவுள்களும் உண்மையானது என்று நிருபிக்கத் தயாரா?
இதை நீங்கள்  ஒருபோதும் செய்து காட்ட முடியாது என்று அல்லாஹ் உறுதியாகக் கூறிவிட்டான்.
மேலும், இன்னொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்,

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் உங்களுக்கு என்ன பதிலளிக்கப்பட்டது? என்று கேட்பான். எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர்கள் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 5:109)
அல்லாஹ் ஒவ்வாரு சமுதாயத்திற்கும் அந்தந்த சமுதாயத்தில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து இறைச் செய்தியை எடுத்துச் சொல்லக் கூடிய தூதராக அனுப்புகிறான். அவ்வாறு அவர்கள் உயிருடன் வாழும் காலத்தில் யார் யார் தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள்? யார் யார் ஏற்றுக் கொள்ளவில்லை? கொள்கையை ஏற்றுக் கொண்ட மாதிரி நடித்தவர்கள் (முனாஃபிக்குள்) யார்? என்னென்ன துன்பங்கள் ஏற்பட்டது? அந்த துன்பங்களின் போது உறுதியாக இருந்தவர்கள் யார்? விரண்டோடி யவர்கள் யார்? இந்தக் கொள்கையை எதிர்த்த எதிரிகள் யார்? என்பதை தங்களது சக்திக்கு உட்பட்டு நபிமார்கள் அறிந்து வைத்திருந்தனர். சிலவற்றை அல்லாஹ்வே அறிவித்துக் கொடுத்தான்.
ஆனால் அந்த நபிமார்கள் இறந்த பிறகு இவற்றில் எந்த ஒன்றையும் அறிந்து வைத்திருக்கவில்லை. அந்த ஆற்றல் வழங்கப்படவில்லை. அல்லாஹ் மறுமை நாளில் அனைத்து நபிமார்களிடத்திலும் கேட்பது, நீங்கள் இறந்த பிறகு உங்களுடைய சமுதாய மக்களின் நிலை என்ன? என்பதுதான். அதற்கு அவர்கள், இறைவா! அதைப் பற்றிய அறிவு எங்களுக்கு கிடையாது. நாங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. யார் யார் கொள்கையில் இருந்தார்கள்? யார் கொள்கையை விட்டு வெளியேறினார்கள்? அல்லாஹ்வை மட்டும் வணங்கியவர்கள் யார்? சிலைகளை வணங்கியவர்கள் யார்? என்பதை நாங்கள் உயிருடன் இருக்கும் போது தான் அறிந்து வைத்திருந்தோம். இறந்த பிறகு அதை அறியக்கூடிய ஆற்றல் உனக்கு தான் இருக்கின்றது என்று சொல்லி விடுவார்கள்.
ஆக, நபிமார்களாகவே இருந்தாலும் அவர்கள் மரணித்து விட்டால் அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது. அதைத் தான் மேற்கண்ட வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
மேலும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (அல்குர்ஆன் 35:14)
அவ்லியாக்கள் என்ற பெயரில் சமாதிகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அத்தனையும் அறியக் கூடிய ஆற்றல், கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்றால், எதற்காக மறுமையில் இறைவனிடத்தில் அவர்கள் மறுக்க வேண்டும்?
நீங்கள் அவ்லியாக்களை (?) அழைத்ததை, அவர்களிடத்தில் பிரார்த்தித்ததை, கோரிக்கைகளை முன் வைத்ததை ஏன் மறுக்க வேண்டும்? அவர்களுக்கு ஆற்றல் உண்டு என்றால் அல்லாஹ்விடத்தில், "எனக்கும் உன்னைப் போன்ற ஆற்றல், வல்லமை இருக்கிறது. உன்னிடத்தில் அவர்கள் கேட்பதை நீ கொடுப்பது போன்று என்னாலும் கொடுக்க முடியும்  என்று சொல்லியிருக்க வேண்டியது தானே!
ஆனால், மேற்கண்ட வசனத்தில் "நான் யாரையும் என்னை வணங்குமாறு சொல்லவில்லை. என்னை அழைக்குமாறு, என்னிடத்தில் கோரிக்கைகளை முன் வைக்குமாறு சொல்லவில்லை. நாங்கள் அதனை மறுத்து விடுகின்றோம்  என்று அந்த அவ்லியாக்கள் சொல்லி விடுவதாக இறைவன் கூறிக் காட்டுகின்றான்.
அவர்கள் இறந்த பிறகு இந்த உலகத்தில் நடந்தது எதுவும் தெரியாது என்ற காரணத்தினால் தான் இந்த மக்கள் செய்த இணைவைப்புக் காரியங்களை அல்லாஹ்விடம் மறுத்து விடுகின்றார்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் m.i.s.c

உத்தம நபி உயிருடன் உள்ளார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்று கூறும் கப்ர் வணங்கிகள் தங்களது வாதத்திற்குச் சான்றாக பின்வரும் செய்தியைக் கூறுகின்றார்கள்.



2043 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ حَدَّثَنَا الْمُقْرِئُ حَدَّثَنَا حَيْوَةُ عَنْ أَبِى صَخْرٍ حُمَيْدِ بْنِ زِيَادٍ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَىَّ إِلاَّ رَدَّ اللَّهُ عَلَىَّ رُوحِى حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلاَمَ. رواه أبو داود


எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால் நான் அவருக்குப் பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு எனது ரூஹைத் திருப்புகிறான்; என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்தச் செய்தி அபூதாவூத் (2041), அஹ்மத் (10815), பைஹகியின் தஃவாதுல் கபீர் (178) உள்ளிட்ட நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் மீது ஸலாம் சொல்லும் போதெல்லாம் அவர்களுக்கு உயிர் திரும்ப வழங்கப்படுகிறது என்றால், உலகத்தில் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ்வின் தூதர் மீது யாரேனும் ஒருவர் ஸலாம் சொல்லிக் கொண்டு தான் இருப்பார். எனவே, அல்லாஹ்வுடைய தூதர் தனது கப்ரில் எப்பொழுதும் உயிரோடு தான் உள்ளார்கள் என்று கப்ர் வணங்கிகள் தங்களது வாதத்தை இந்த செய்தியைக் கொண்டு நிறுவுகிறார்கள்.
இச்செய்தியின் கருத்திலும் கோளாறு இருக்கிறது; அறிவிப்பாளர் தொடரிலும் குறை இருக்கிறது.
முதலில் அறிவிப்பாளர் தொடர் ரீதீயான குறையைப் பார்ப்போம்.
இந்தச் செய்தி நபியவர் களிடமிருந்து பின்வரும் அறிவிப் பாளர் தொடரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
1. அபூஹுரைரா (ரலி)
2. யஸீத் இப்னு அப்தில்லாஹ் பின் குஸைத்
3. அபூஸக்ர் ஹுமைத் பின் ஸியாத்
4. ஹயாத்
5. அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரீ
6. முஹம்மது பின் அவ்ஃப்
இவர்களில் அபூஹுரைரா (ரலி) நபித்தோழர் என்பதால் அவரைப் பற்றி ஆய்வு செய்யத் தேவையில்லை.
அவருக்கு அடுத்து வரக்கூடிய ஐந்து நபர்களில் அபூஸக்ர் ஹுமைத் பின் ஸியாத் என்பவரைத் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள்.
அபூஸக்ர் என்பவரைப் பற்றி இமாம்களின் விமர்சனம் நம்பக மானவர் என்றும் பலவீனமானவர் என்றும் இருவிதமாக வந்துள்ளது.
قال عَبد اللَّهِ بْن أَحْمَد بْن حنبل (1) : سئل أبي عَن أبي صخر، فَقَالَ: ليس به بأس. وَقَال عثمان بْن سَعِيد الدارمي (1) : سألت يحيى بْن مَعِين عَنْ حميد الخراط، فَقَالَ: ثقة ليس به بأس. وَقَال إسحاق بْن مَنْصُور (2) ، عَنْ يحيى بْن مَعِين: أَبُو صخر حميد بن زياد ضعيف. وَقَال أَحْمَد بْن سعد بْن أَبي مريم (3) ، عَن يحيى بن مَعِين: أَبُو صخر حميد بن زياد الخراط ضعيف الحديث. وَقَال النَّسَائي (3) : حميد بن صخر ضعيف.
تهذيب الكمال في أسماء الرجال (7/ 367)
இவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று இமாம் அஹ்மத் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவர் நம்பகமானவர். இவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், இவர் பலவீனமானவர் என்றும், இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்றும் (வேறுபட்ட விமர்சனங்களை) யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
(தஹ்தீபுல் கமால் 7/368)
ثم قال في موضع آخر (1) : حميد بن صخر سمعت ابن حماد يقول: حميد بن صخر يروي (2) عنه حاتم بن إسماعيل: ضعيف
تهذيب الكمال في أسماء الرجال (7/ 370)
இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹம்மாத் கூறியுள்ளார்(தஹ்தீபுல் கமால் 7/370)
وقال الدارقطنى : ثقة . وذكره ابن حبان فىالثقات .(تهذيب التهذيب)
இமாம் தாரகுத்னியும், இப்னு ஹிப்பானும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்கள்.
(தஹ்தீபுத் தஹ்தீப் 3/37)
وقال ابن عدى: هوعندي صالح الحديث، إنما أنكرعليه حديثا ;ثم إن ابن عدى ذكر حميد بن صخر في موضع آخر فضعفه .(ميزان الإعتدال)
இவர் என்னிடத்தில் ஹதீஸ் விஷயத்தில் நல்லவர். அவரிடத்தில் இரண்டு ஹதீஸ்களே மறுக்கப் பட்டுள்ளது என்று இப்னுஅதீ கூறியுள்ளார்.
பிறகு மற்றொரு இடத்தில் கூறும் போது அவர் பலவீனமானவர் என்று கூறினார். (மீஸானுல்இஃதிதால்3/612)
وهوالذي يروى عنه حاتم بن إسماعيل ويقول حميد بن صخر وإنما هو حميد بن زياد أبوصخر لا حميد بن صخر (الثقات لابن حبان)

ஹுமைத் பின் ஸியாத் (ஸியாதின் மகன் ஹுமைத்) என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஹாதிம் பின் இஸ்மாயீல் இவரது பெயரை ஹுமைத் பின் ஸக்ர் (ஸக்ருடைய மகன் ஹுமைத்) என்று கூறுகிறார். ஆனால் அவர் ஹுமைத் பின் ஸியாத் அபூ ஸக்ரு தான். ஹுமைத் பின் ஸக்ரு இல்லை என்று இப்னு ஹிப்பான் தனது ஸிக்காத் (6/189) எனும் நூலில் கூறியுள்ளார்.
هو أبو صخر من غير هاء في آخره واسمه حميد بن زياد وقيل حميد بن صخر وقيل حماد بن زياد ويقال له أبوالصخرالخراط صاحب العباءالمدني سكن مصر(شرح مسلم)
ஹுமைத் பின் ஸியாதுடைய பெயர் ஹுமைத் பின் ஸக்ர் என்றும், ஹம்மாத் பின் ஸியாத் என்றும் கூறப் பட்டுள்ளது.
(ஷரஹ் முஸ்லிம் 3/117)
حميد بن صخرالمدني يروي عنه حاتم بن إسماعيل قال أحمد ضعيف وقال النسائي ليس بالقوي (الضعفاء والمتروكين)

ஹுமைத் பின் ஸக்ர் என்பவர் பலவீனமானவர் என்று அஹ்மத் இமாம் கூறியுள்ளார்.
மேலும் இவர் பலமானவர் இல்லை என்று நஸாயீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அல்லுஅஃபா வல் மத்ரூகீன் 1/238)

மேற்கூறப்பட்ட விமர்சனங் களிலிருந்து ஹுமைத் பின் ஸியாதுடைய பெயரிலும் குழப்பம் இருக்கிறது. அவரைப் பற்றிய விமர்சனங்களிலும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

மேலும் இந்தச் செய்தியை இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.
இது போன்று கருத்து வேறுபாடுள்ள நபர் ஒரு செய்தியைத் தனித்து அறிவித்தால் அச்செய்தி முதன்மை ஆதாரமாக எடுக்கின்ற அளவுக்கு ஆதாரப்பூர்வமானதாகக் கொள்ள முடியாது.
இது அறிவிப்பு ரீதியாக உள்ள குறையாகும்.

இந்தச் செய்தியில் கருத்து ரீதீயில் உள்ள தவறு என்னவென்று பார்ப்பதற்கு முன்னால் ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த உலகத்தில் நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து மனிதர்களும் தங்களது இறப்பிற்குப் பின் பர்ஸக் எனும் திரைமறைவு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வாழ்க்கைக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அங்குள்ளவர்கள் இங்குள்ளவர்களை அறிய முடியாது. இங்குள்ளவர்கள் அங்குள்ளவர்களை அறிய முடியாது. இப்படிப்பட்ட மறைமுகமான வாழ்க்கையை இறைவன் இறந்து விட்ட அனைத்து மனிதர்களுக்கும் ஏற்படுத்தியிருக்கின்றான்.

முடிவில் அவர்களில் யாருக் கேனும் மரணம் வரும் போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்பு! என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்பிக்கப் படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. (அல்குர்ஆன் 23:100)

பர்ஸக் எனும் வாழ்க்கையில் அல்லாஹ்வுடைய தூதர் உட்பட அனைவரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
அப்படியிருக்க யாரேனும் ஸலாம் சொல்லும் போது நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ரூஹைத் திரும்ப வழங்குவதாக ஏன் இச்செய்தி கூற வேண்டும்?
பர்ஸக்கில் ஏற்கனவே உயிருடன் இருக்கின்ற அல்லாஹ்வுடைய தூதருக்கு இறைவன் மீண்டும் உயிரை வழங்குவதாக வருவது இந்த ஹதீஸில் உள்ள கருத்துப் பிழையாகும்.
இவ்வாறு முரண்படும் விதமாக அல்லாஹ்வுடைய தூதர் நிச்சயமாக கூற மாட்டார்கள்.
ஒரு வாதத்திற்கு இறைவன் ரூஹைத் திரும்ப வழங்குவதாக இச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது பர்ஸகில் இருப்பதைப் போன்ற ரூஹ் அல்ல. இவ்வுலகில் செயல்படுவதைப் போன்ற உயிர் நபியவர்களுடைய உடலுக்கு வழங்கப்படுகிறது என்று அவர்கள் கூறுவார்களேயானால்,
அல்லாஹ்வுடைய தூதர் நாம் சொல்லும் ஸலாமைச் செவியுற வேண்டும்.
செவியுற்றது மட்டுமல்லாமல் நமக்குப் பதில் ஸலாம் சொல்ல வேண்டும்.
அவர்கள் சொல்லும் ஸலாம் நமக்குக் கேட்க வேண்டும். இவ்வாறெல்லாம் நடைபெறுகின்றதா என்றால் இல்லை.
நபியவர்களுடைய உடலுக்கு இறைவன் ரூஹை திரும்ப வழங்கி விட்டான் என்றால் அவர்கள் மண்ணறையில் அடங்கியிருக்கத் தேவையில்லை சாதாரணமாக எழுந்து நடமாடலாம், இவ்வுலகில் இஸ்லாத்தின் பெயரால் மக்கள் செய்யும் அனாச்சாரங்களைத் தடுத்து நிறுத்தலாம்.
இவ்வாறு நடைபெறுகின்றதா? இல்லை.

இந்த அடிப்படைகளில் இச்செய்தி கருத்து முரண்பாடு மிக்கதாக இருக்கிறது. மேற்சொன்ன விதத்தில் அறிவிப்பாளர் ரீதியாகவும் விமர்சனம் உள்ளது.
எனவே இந்தச் செய்தி இவர்களின் கருத்திற்கு துளியும் ஆதாரமாகாது.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்பதற்கு எதிர் தரப்பினர் பின்வரும் செய்தியையும் சான்றாகச் சமர்ப்பிக்கின்றார்கள்.
பூமியில் சுற்றித்திரியும் வானவர் கள் அல்லாஹ்விற்கு இருக்கிறார்கள். அவர்கள் என் சமுதாயத்திடமிருந்து ஸலாமை எனக்கு எத்தி வைக்கின்றார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த செய்தி நஸாயீ(1282), அஹமத்(4320) உட்பட பல நூற்களில் இடம்பெற்றிருக்கும் ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
அல்லாஹ்வுடைய தூதரின் மீது மக்கள் சொல்லும் ஸலாமை வானவர்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார்கள் என்றால் அல்லாஹ் வுடைய தூதர் மண்ணறையில் உயிரோடு தானே இருக்கிறார்கள் என்று தங்களது வாதத்தை இந்தச் செய்தியைக் கொண்டு நிறுவுகிறார்கள்.
வானவர்கள் மக்களின் ஸலாமை நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று தான் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நாம் ஏற்கனவே சொன்னது போல் பர்ஸக்கில் அல்லாஹ்வுடைய தூதர் உட்பட அனைவரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
அங்கு வாழ்கின்ற அல்லாஹ் வுடைய தூதருக்கு மக்கள் சொல்லும் ஸலாமை வானவர்கள் எடுத்துச் சொல்வார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸின் கருத்து தருகிறது.
பர்ஸக்கில் ஷஹீத்கள் பறவை வடிவில் அல்லாஹ்வின் அர்ஷைச் சுற்றி வருவார்கள் என்று ஷஹீத்களுக்கு எப்படி ஓர் தனிச்சிறப்பை இறைவன் வழங்கியிருக்கின்றானோ, அதுபோன்று பர்ஸக்கில் வாழும் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய சமுதாயத்தின் ஸலாமை வானவர்கள் எடுத்துச் சொல்வது அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச் சிறப்பாகும்.
இவ்வாறு விளங்குவதுதான் எதார்த்தமானதாகும். இதைத்தான் இந்த ஹதீஸின் கருத்து தருகின்றதே தவிர இந்த உலகத்தில் கப்ரில் அல்லாஹ்வுடைய தூதர் உயிரோடு உள்ளார்கள் என்பதற்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.
எனவே, இந்தச் செய்தியும் அல்லாஹ்வுடைய தூதர் கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக ஆகாது என்பது நிருபனமாகி விட்டது.
மேலும், நபி (ஸல்) அவர்கள் கப்ரில் உயிருடன் உள்ளார்கள் என்று வாதிடுபவர்கள் பின்வரும் செய்தியை யும் ஆதாரமாகக் காண்பிக்கின்றார்கள்.
1925حَدَّثَنَا يُوسُف ُبْنُ مُوسَى ،قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْمَجِيد ِبْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادَ، عَنْ سُفْيَانَ، عَنْ عبْدِ اللهِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً سَيَّاحِينَ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلاَمَ قَالَ : وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : حَيَاتِي خَيْرٌ لَكُمْ تُحَدِّثُونَ وَنُحَدِّثُ لَكُمْ، وَوَفَاتِي خَيْرٌ لَكُمْ تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ، فَمَا رَأَيْتُ مِنَ خَيْرٍ حَمِدْتُ اللَّهَ عَلَيْهِ، وَمَا رَأَيْتُ مِنَ شَرٍّ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ. وَهَذَا الْحَدِيثُ آخِرُهُ لاَ نَعْلَمُهُ يُرْوَى عَنْ عَبْدِ اللهِ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ بِهَذَا الإِسْنَادِ.(مسند البزار)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

எனது வாழ்வு உங்களுக்கு நன்மையே. நீங்கள் உரையாடு கிறீர்கள். நானும் உங்களுடன் உரையாடுகிறேன். எனது மரணமும் உங்களுக்கு நன்மையே. உங்கள் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. அதில் நன்மையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். தீமையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்.

இச்செய்தி முஸ்னதுல் பஸ்ஸாரில் (1925) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியின் அறிவிப் பாளர்களில் ஒருவரான அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் என்பவர் பலவீனமானவராவார்.
وَقَال أبو حاتم (1) : ليس بالقوي، يكتب حديثه (2).وَقَال الدَّارَقُطنِيّ (3) : لا يحتج به، يعتبر به، (تهذيب الكمال 18/275)
இவர் பலமானவர் இல்லை என்று இமாம் அபூஹாதம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவர் ஆதாரமாக எடுக்கத் தகுந்தவர் இல்லை என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள்.(தஹ்தீபுல் கமால் 18/275).
منكرالحديث جدا، يقلب الاخبار ويروي المناكير عن المشاهير فاستحق الترك، (المجروحين 2/160)

இவர் ஹதீஸில் மிகவும் மறுக்கப்படக்கூடியவர், செய்திகளை மாற்றியறிவிப்பவர். மேலும் பிரபலமானவர்கள் வழியாக மறுக்கப் படும் செய்திகளை அறிவிப்பார். இன்னும் இவர் விடப்படுவதற்குத் தகுதியானவர் என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். (மஜ்ரூஹீன் 2/160)

எனவே, இந்தச் செய்தி இந்த அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் என்பவரால் பலவீனமடைகிறது.
இவரை ஒரு சிலர் நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும். இவரின் மீதும் குறையும் அதிகமாக சொல்லப்பட்டிருப்பதால், நிறையை விட குறை முற்படுத்தப்படும் என்ற ஹதீஸ்கலை விதியின் படி இந்தச் செய்தி பலவீனமடைகிறது.
நபி (ஸல்) அவர்கள் கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்பதற்குச் சரியான வலுவான எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்கள் சமர்பிக்கவில்லை. இறுதி நாள் வரை அவர்களால் சமர்ப்பிக்கவும் இயலாது

ஸபீர் அலீ எம்.ஐ.எஸ்.சி.

நாங்கள் கப்ருகளை வணங்கவில்லையே


'நாங்கள் கப்ருகளை வணங்கவில்லையே! எங்களை ஏன் ''கப்று வணங்கி'' என்று எங்களை திட்டுகிறீர்கள் என்று சிலர் கேட்கலாம்...!!! '''

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நல்லடியார்களின் வடிவத்தில் இருந்த உருவச்சிலைகளை வலம் வந்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்தி அதன் மூலம் அந்த நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்தனர். அதனால் அவர்களை சிலை வணங்கிகள் என்கிறோம்.

மாற்று மதத்தவர்கள் தங்களின் கடவுள் உருவத்தில் இருப்பதாக அவர்கள் கருதுகின்ற அந்த சிலைகளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அந்த தெய்வங்களை வணங்குவதால் அவர்களையும் சிலை வணங்கிகள் என்கிறோம்.

ஆனால் இறைநேசர்கள் அடக்கமாகியிருக்கும் கப்ருகளை
வலம் வந்து,
அதற்கு பூசி,
மெலுகி,
போர்வை போர்த்தி,
நெய் விளக்கு ஏற்றி,
சந்தனம் பூசி,
பத்தி கொழுத்தி,
பூமாலை அணிவித்து
அந்த சிலைகளை வணங்குவோர் என்னென்ன காரியங்களை அந்த சிலைகளுக்கு செய்கிறார்களோ அவையனைத்தையும் அந்த நல்லடியாரின் கப்றுகளுக்கு செய்பவரை கப்று வணங்கி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது....?

{அவர்கள் நிறுத்தி வைத்து செய்வதை நீங்கள் படுக்கப்போட்டு செய்கிறீர்கள் }

அல்லாஹ்தான் கடவுள் என்று நம்பியிருந்த மக்கா காபிர்களை பாருங்கள்
அல்லாஹ்விடம் நேரடியாக கேட்பதை விட்டு விட்டு அந்த நல்லடியார்களின் சிலைகளிடம் இவர்கள் கேட்ட காரணத்தால் அவர்களை அல்லாஹ் “முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்)” என்றான். அதே செயல்களையே செய்யும் தற்காலத்தவர்களை என்ன சொல்வது?
"
இன்றைய காலத்தில் கப்ருகளை தரிசிப்பதாக சொல்லிக் கொண்டு நபி வழியில் இல்லாத பல (நூதனங்களை) இணைவைப்புகளை செய்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

அவர்கள் செய்து வரும் இச்செயல்கள் அனைத்தும் அன்றைய காபிர்கள் செய்து வந்த சிலை வணக்கத்துடன் ஒத்துப்போகிறன என்பதை அவர்கள் கவணிக்க தவறியது மட்டுமல்லாமல் தங்களின் செயல்களை சரிகாணவும் முயற்சிக்கின்றனர்.

ஆனாலும் அவர்களுக்கு தங்களின் செயற்பாடுகளை நியாயப்டுத்திக் கொள்ள ஆதாரமும் எதுவும் கிடையாது என்பதை திருமறை இவ்வாறு சுட்டிக் காட்டுகிறது.
'' மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கி றானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.23:117

ஆகவே இச்செயலை செய்பவர்கள் தங்களின் செயல்களை நியாயப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தெளிவான விடயமாகும்.

அவர்கள் தங்களுடைய வணக்கங்களை முழுமையாக அல்லாஹ் அல்லாதவர்களுக்காக செய்து விட்டு அந்த இணைவைப்பை இணைவைப்பு என்று சொல்லமாட்டார்கள் ஏனெனில் இணை வைப்பானது ஹராம் என்பது அவர்களுக்குத் தெரியும்,
அல்லாஹ் அல்லாதவற்றை இலாஹ் கடவுள் என்று சொல்லமாட்டார்கள் ஏனெனில் அல்லாஹ் மாத்திரமே கடவுள் என்பது அவர்களுக்கு தெரியும் அவர்களுடைய செயல்களை (இபாதத்) வணக்கம் என்று சொல்லமாட்டார்கள் காரணம் வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே என்பதும் அவர்களுக்கு தெரியும்.

அவ்வாறு சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் இணை வைப்பாளர்களே அல்லாஹ் அல்லாதவற்றையே வணங்குகிறார்கள், அல்லாஹ்வோடு வேறு கடவுள்களை ஆக்கிக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
ஆக (கப்ர் வணங்கிகளான) நீங்கள் (அந்த விடயங்களின்) கருத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு அதன் வார்தைகளை விட்டு விட்டீர்கள் முன்னைய இணை வைப்பாளர்களுக்கும் உங்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை பின்வருமாறு விளங்கிக் கொள்ளலாம்.

அன்றைய இணை வைப்பாளர்கள் உங்களைப் போல் அல்லாமல் அவர்கள் வணங்கி வந்தவைகளை தங்களின் கடவுள் என்றார்கள், தங்களின் செயற்பாடுகளை (இபாதத்) வணக்கம் என்றும் தெளிவாக சொன்னார்கள்.

நீங்களோ: அல்லாஹ் அல்லாது அழைப்பவர்களை இறை நேசர்கள் மற்றும் தலைவர்கள் மகான்கள் என்றும் உங்களின் வணக்கங்களை வசீலா என்றும் சொல்கிறீர்கள்.

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான். கருத்தில் ஒன்றுபட்டு சொற்களில் வேறுபட்டிருக்கின்றீர்கள்.

தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்த நீங்கள் என்னதான் சொல்லிக் கொண்டாலும் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியத்;தில் உள்ளீர்கள்.

1- அவர்கள் தங்களின் தெய்வங்களுக்காக அறுத்துப்பழியிடவில் லையா ? அது போலவே
நீங்களும் உங்களின் வலிமார்களுக்காக அறுத்துப்பழியிடுகிறீர்கள்.

2- அவர்கள் அந்த தெய்வங்களை 'யா உஸ்ஸா'' '' யா ஹுபல்'' '' யா அல் லாத்'' என்ற பெயர் கொண்டு அழைக்கவில்லையா ? அது போல
நீங்களும் உங்களின் வலிமார்களை 'யா தாஜ்'' ''யா ஜெயிலானி'' என்று அழைக்கிறீர்கள்

3- இவைகள் வணக்கமாகவும் துஆவாகவும் இல்லையா?
வணக்கமும் துஆக்களும் இறைவனுக்கு மாத்திரம் உள்ளதல்லவா அதனை அவனையன்றி உள்ளவர்களுக்கு செலுத்துவது ஷிர்க் அல்லவா ?
நிச்சயமாக அவ்வாறுதான் அவை ஷிர்க்கான விடயங்களாகவே உள்ளன, அவை இரண்டிற்க்கும் எவ்வித வேறுபாகளும் இல்லை

4- அவ்வாறிருக்க ஒன்றை ஷிர்க் என்றும் மற்றுமொன்றை வணக்கம் (ஷிர்க் இல்லை) என்றும் சொல்வதன் காரணம் என்ன?

சிந்திப்பீர்களாக அல்லாஹ் உங்களுக்கும் அனைவருக்கும் மார்க்கத்தில் நல்ல தெளிவைத்தருவானாக!

மௌலூதை கண்ணியப்படித்தியவர் இஸ்லாத்தை உயிர்பித்தவரா

1980 களுக்கு முன்னால் தமிழ்பேசும் முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி மவ்லிது எனும் இணைவைப்பு பாடலை பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.
அப்போது சுடர் விட்ட ஏகத்துவ தொடர் பிரச்சாரத்தின் விளைவால் இந்த பித்தலாட்டங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மவ்லிது என்பது அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் காட்டித்தந்த வணக்கம் அல்ல. அது இஸ்லாத்தை அழித்தொழிக்கும் இணைவைப்பு பாடல் என்பதை மக்கள் அறிந்துக் கொண்டனர். அதிலிருந்து விலகத் தொடங்கினர்
மவ்லிது வியாபாரம் சரிந்தது.

தற்போது, விழிப்புடன் இருக்கும் மக்களிடத்தில் மவ்லிதின் மகத்துவத்தை(?) கொண்டு சேர்க்க பல முயற்சிகளை கையாண்டு வருகின்றனர்.
அதில், ஒன்று ஸஹாபாக்களின் பெயராலும், முந்தைய அறிஞர்களின் பெயராலும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்களிடத்தில் உண்மை போல் கொண்டு செல்கின்றனர்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக யார் ஒரு திர்ஹத்தை செலவிடுகிறாரோ அவர் சுவனத்தில் எனது தோழராக இருப்பார் என்று அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

யார் நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை கன்னியப்படுத்துகிறாரோ அவரே இஸ்லாத்தை உயிர்ப்பித்தவர் ஆவார் என்று உமர்(ரலி) கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக
யார் ஒரு திர்ஹத்தை செலவிடுகிறாரோ அவர் பத்ரு மற்றும் ஹுனைன் யுத்தங்களில் கலந்துக் கொண்டவர் போலாவார் என உஸ்மான்(ரலி) கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை கன்னியப்படுத்தியவரும், அது ஒதப்படுவதற்கு காரணமாக திகழ்ந்தவரும் ஈமானுடனே மரணிப்பார். மேலும் விசாரணை எதுவுமின்றி சுவனத்தில் நுழைவார் என்று அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறு நான்கு கலீஃபாக்கள் மவ்லிதை பற்றி கூறிவிட்டார்கள் என்று தற்போது மவ்லிதை தூக்கி பிடிப்பவர்கள் பரப்பிவருகின்றனர்.

இந்த செய்திகளின் தரத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால், இமாம் கதீப் மற்றும் கஸ்ஸாலி காலத்தில் எழுதப்பட்டது என்று சொல்லப்படும் மவ்லிது எவ்வாறு ஸஹாபாக்கள் காலத்திற்கு சென்றது என்று கேட்க விரும்புகிறோம்.
மேலும், சுவனத்திற்கு நற்சான்று வழங்க நபித்தோழர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா?
அது அல்லாஹ்விற்கு மட்டும் இருக்ககூடிய அதிகாரம். அதில் ஸஹாபாக்களை கூட்டாக்குகின்றனர்.
ஒரு இணைவைப்பை நியாயப்படுத்த இன்னொரு இணைவைப்பை அறிமுகப்படுத்துகின்றனர்.

மேலும், இந்த செய்திகளை உண்மையில் ஸஹாபாக்கள்தான் கூறினார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

இப்னு ஹஜர் அல்ஹைதமீ (இவர் இப்னு ஹஜர் அஸ்கலானீ இல்லை) என்பவர் தனது அந்நிஃமத்துல் குப்ரா எனும் புத்தகத்தில் (பக்கம் 6 ல்) இந்த செய்திகளை கொண்டு வந்துள்ளார்.

இவர் ஹிஜ்ரி 909 ல் பிறந்து 974 ல் மரணித்தவர். எல்லா அனாச்சாரங்களையும் நியாயப்படுத்தி பரேலவிச கொள்கைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் இவரே.
பிற்காலத்தில் வாழ்ந்த் ஒருவர் முற்காலத்தில் வாழ்ந்தவர்களின் செய்தியை கொண்டு வருகிறார் எனில் அது எந்த மூல நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்று தெளிவுப்படுத்த வேண்டும். அல்லது அதற்கான அறிவிப்பாளர் தொடரை கொண்டு வர வேண்டும்.
அவ்வாறு எதுவும் செய்யாமல் வெறுமனே இந்த செய்திகளை மாத்திரம் கொண்டு வந்துள்ளார்.
இந்த நூல் அல்லாத வேறு எந்த மூல ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி இடம்பெறவில்லை.
ஸஹாபாக்கள் காலத்திற்கு பல நூறாண்டிற்கு பிறகு வந்தவருககு எப்படி இந்த செய்தி கிடைத்தது என்று எந்த சான்றும் இல்லை.

இவ்வாறு அறிவிப்பாளர் தொடரும், ஆதாரமும் இல்லாத முழுக்க முழுக்க புனையப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவே இவை உள்ளது.
ஸஹாபாக்களை நஜாத்காரர்கள் அவமதிக்கிறார்கள். நாங்கள்தான் அவர்களை பெரிதும் மதிக்கின்றோம் என்று மவ்லிது ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டு ஸஹாபாக்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை பிரச்சாரம் செய்து தங்களின் மதிப்பை(?) வெளிப்படுத்துகின்றனர்.

இமாம்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை பாருங்கள்.

உஹது மலை அளவுக்கு தங்கம் என்னிடம் இருந்தால் அதை நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக செலவிட ஆசைபடுகிறேன் என்று ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறினார்கள்.

யார் மவ்லிது ஓதி, அதை மகத்துவப்படுத்தவதற்காக உணவை தயார்செய்து, தன் சகாக்களை ஒன்றினைத்து, விளக்கேற்றி, புத்தாடை அணிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் முதல் பிரிவினரான நபிமார்களுடன் சேர்ப்பான். மேலும் உயர் பதவிகளிலும் அவர் இருப்பார் என்று மஃரூஃப் அல்கர்கீ அவர்கள் கூறினார்கள்.

யார் நபியவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக தன் சகாக்களை ஒன்றினைத்து, உணவை தயாரித்து, தனிமையில் நற்காரியம் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமைநாளில் உண்மையாளர்கள், உயிர்தியாகிகள், நல்லோர் ஆகியோருடன் எழுப்புவான். அவர் இன்பமயமான சுவனத்தில் இருப்பார் என்று இமாம் ஷாஃபீ கூறினார்கள்.

ஒருவர் மவ்லிது ஓதுவதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்கிறார் எனில் அவர் சுவனத்தின் தோட்டத்தின் தேர்வு செய்தவராவார். ஏனெனில், அவர் நபி மீதுள்ள பிரியத்தினாலே அந்த இடத்தை தேர்வு செய்தார் என்று ஸிர்ரியுஸ் ஸிக்த்தி என்பவர் கூறினார்.

மவ்லிது ஓதப்படும் இடத்தினை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவ்விடத்தில் உள்ளவர்கள் மீது ஸலாவாத் கூறுகின்றனர். அல்லாஹ் தனது திருப்பொருத்தம் மற்றும் அருளைக் கொண்டு அவ்விடத்தை சூழ்ந்துகொள்கின்றான். மேலும், எந்த முஸ்லிமின் இல்லத்தில் மௌலிது ஓதப்படுகிறதோ அந்த இல்லத்தை தீயால் எரிதல் மற்றும் அனைத்து வகை சோதனைகள் கஷ்டங்களை விட்டும் அல்லாஹ் பாதுகாக்கிறான். அவ்வீட்டில் உள்ளவர்கள் மரணமடைந்தால் கூட அவர்களின் கப்ரு விசாரணை லேசாக்கப்படும் என்று இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ கூறினார்.

ஒருவர் உணவு பதார்த்தங்களை வைத்து மவ்லிது ஒதுகிறார் எனில் அந்த உணவிலும் அனைத்து பொருளிலும் பரக்கத் ஏற்படும். அதை யார் உண்ணுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மன்னப்பு வழங்குகிறான். தண்ணீர் வைத்து மவ்லிது ஒதப்பட்டு யார் அந்த தண்ணீரை பருகிறாரோ அவரின் உள்ளத்தில் ஆயிரம் வகையான ஒளியும் அருளும் நுழைகிறது. மேலும் ஆயிரம் வகையான நோய் அவரைவிட்டு வெளியேறுகிறது. தங்கம் அல்லது வெள்ளியினாலான நாணயத்தின் மீது மவ்லிது ஒதி அந்நாணயத்தை மற்ற நாணங்களுடன் கலந்து வைத்தால் நபியினுடைய பரக்கத் அதில் இறங்குகிறது. வறுமை அவரை அணுகாது என்று இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ கூறினார்.

இவையும் அந்த அந்நிஃமத்துல் குப்ரா எனும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் செய்திகளாகும்.

நபி மீது இட்டுகட்டி நபித்தோழர்கள் மீது இட்டுக்கட்டியவர்கள் சாதாரண அறிஞர்கள் மீது இட்டுக்கட்ட தயங்குவார்களா என்ன?

இவை அனைத்தும் அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய்களாகவே உள்ளது.

ஏனெனில், இந்த செய்திகளை தனது புத்தகத்தில் கொண்டு வந்திருக்கும் இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ அவர்கள் மிகவும் பிற்காலத்தில் வாழ்ந்தவர்.
ஆனால் இவர் குறிப்பிட்டிருக்கும் இமாம்களில் நான்கு பேர் இவரை விட பல நூற்றாண்டுகள் முந்தி வாழ்ந்துள்ளனர்.

1. இமாம் ஹஸன் அல்பஸரீ ஹிஜ்ரி 110 ல் மரணித்தார்.
2. இமாம் மஃரூஃப் அல்கர்கீ ஹிஜ்ரி 200 ல் மரணித்தார்.
3. இமாம் ஷாஃபீ ஹிஜ்ரி 204 ல் மரணித்தார்.
4. இமாம் ஸிர்ரியுஸ் ஸிக்த்தீ ஹிஜ்ரி 251 ல் மரணித்தார்.
5. இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ ஹிஜ்ரி 606 ல் மரணித்தார்
6. இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ ஹிஜ்ரி 911 ல் மரணித்தார்

இவர் குறிப்பிட்ட அனைத்து இமாம்களுமே இவரை விட பல ஆண்டுகள் முந்தியவர்கள்.
இமாம் சுயூத்தீயினுடைய மரணம் இவருடைய வாழ்வுக்கு ஓரளவு நெருக்கமாக இருப்பது போன்று தெரிந்தாலும் இவர் இரண்டு வயதாக இருக்கும்போதே அவர் மரணித்துவிட்டார்.

இவர் அவர் சொன்ன கருத்தை குழந்தை பருவத்திலேயே கேட்டு புத்தகத்தில் பதிவு செய்துக்கொண்டார்(!) என்று சொன்னாலும் சொல்வார்கள் இந்த மவ்லிது பக்தர்கள்!

நாம் ஏற்கனவே கேட்டது போல் இவரை விட பல்லாண்டுகள் முந்தி வாழ்ந்த இமாம்களின் கருத்தை இவர் எங்கிருந்து பெற்றார்?
அதற்கான சான்று என்ன?
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பல நூல்கள் எழுதியுள்ளார்கள். அத்தகைய எந்த புத்தகத்திலும் அவர்கள் இந்த கருத்தினை பதிவுசெய்யவில்லையே!

அவர்கள் பதிவு செய்யாத கருத்து பல நூற்றாண்டுகள் கழித்து இவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

இப்படி எந்த குறிப்பும் இல்லாமல் இந்த செய்திகள் புனையப்பட்ட ஜோடிக்கப்பட்ட செய்திகளாகவே உள்ளது.
ஒரு கருத்தை பிந்திவந்தவர்கள் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். எனவே, மக்கள் பெரிதும் நேசிக்கும் ஸஹாபாக்களின் பெயராலும், மக்களுக்கு மத்தியில் அதிகம் பிரபல்யமாக இருக்கும் இமாம்களின் பெயராலும் சொன்னால் ஓரளவு மக்கள் கேட்பார்கள் என்பதற்காகவே இந்த செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்திகளின் தரம் என்னவென்று தெரிந்தும் மக்களை மடையர்களாக்கும் நோக்கில் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரால் இயங்குபவர்கள் பரப்பி வருகின்றனர்.

ஆதாரமற்ற தங்களின் கருத்தை மக்களுக்கு மத்தியில் திணிக்க வேண்டும் என்பதற்காக ஸஹாபாக்கள் மீதும், இமாம்களின் மீதும், ஏன் நபியின் மீதும் கூட இட்டுக்கட்ட இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கும் இட்டுகட்டபட்ட செய்திகளை பரப்பி அவர்களை அவமதிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதற்குமான பல சான்றுகளில் இதுவும் ஒரு சான்றாகும்
.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதல்ல. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்: மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்.
அறிவிப்பவர் முஃகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் புகாரி 1291


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் முஸ்லிம்