"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)
Showing posts with label மௌலூத். நோய் நிவாரணம். Show all posts
Showing posts with label மௌலூத். நோய் நிவாரணம். Show all posts

கொடியேற்றம்_எனும்_கொடி_வணக்கம்!


இஸ்லாத்தில் தோன்றிய வழிகேடுகளில் ஸூபிஸமும் ஒன்றாகும். இவர்களைப் பற்றி சுருங்கக் கூறின் இஸ்லாமிய சரியான அகீதாவை விட்டும் வெளியேரிய பிரிவினர் அல்லாஹ்வவை ஈமான்கொள்வதிலும் அவனது அஸ்மாக்கள் ஸிபாத்துகளுடைய விடையத்திலும் இன்னும் பல அகீதாவுடைய அம்சங்களிலும் வழிகெட்ட பிரிவினர்களாக அஹ்லுஸ்ஸுன்னாவுடைய இமாம்களால் எச்சரிக்கை செய்யப்பட்டவர்கள்.

இவர்களிடம் பொதிந்துள்ள ஓர் பொதுப்படை யாதெனில் இஸ்லாமிய சட்டவாக்கம் மற்றும் இபாதத்களில் (العلو) இஸ்லாம் வகுத்த எல்லையை தாண்டி இறைவனை நெருங்க முற்படுவதாகும்.

அதில் இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் அவ்லியாக்கள் இறை நேசர்களில் எல்லை கடந்து வஸீலா எனும் பெயரில் அவர்களை அல்லாஹ்வுடைய இடத்திற்கும் நபி ஸல் அவர்களுடைய இடத்திற்க்கும் கொண்டு செல்வதாகும்.
அவைகளாவன
01- அவர்கள் அவ்லியாக்கள் என நினைப்பவர்கள் உயிரோடு உள்ள பொழுது அவர்களிடம் பரகத்தை தேடுதல் அவர்களது உடலில் படுத்திய நீரைக் கொண்டு பரகத் மற்றும் நோய் நிவாரணம் தேடுதல்.

02- அந்த அவலியாக்கள் மரணித்துவிட்டால் அவர்களுடைய கப்ரை கட்டியெழுப்பி, குத்துவிளக்கேற்றி, எண்ணெய் ஊற்றி, பச்சை துணியால் அந்த கப்ரை மூடி அலங்கரித்து, அங்கு அடங்கப்பட்டிருக்கும் மரணித்தவரிடம் உதவி தேடி அந்த கப்ரை வணங்குவதாகும்.

03- அந்த கப்ரில் அடங்கப்பட்டிருக்கும் அவ்லியாவின் ஞாபகார்தமாக வருடா வருடம் கொடிகளை ஏற்றி அதனை வணங்கி விழாக் கொண்டாடுவதாகும்.

இப்படி பலதை சொல்லிக்கொண்டே போகலாம்....
மேலே குறிப்பிட்ட அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்பும், பித்அத்துக்களுமாகும்.

இதில் மிக முக்கியமான அம்சமாக ஷாகுல் ஹமீத் எனும் அவ்லியாவின் பெயரால் கல்முனை கொடியேற்ற பள்ளியில் அரங்கேறும் மடமைகள் மற்றும் இணைவைப்புகளைப் பற்றி சற்று விளக்கமாக கூறலாம் என நினைக்கின்றேன்.

முதலில் வருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிருப்பதனை காணலாம். ஆனால் அவர் அங்கு அடங்கப்படிருக்கிறாரா? என்றால் இல்லவே இல்லை அன்னார் இந்தியாவின் நாகூர் எனும் ஊரில் அடங்கப்பட்டிருக்கிறார் இன்றும் அவருடைய கப்ர் அங்கேதான் நாகூர் தர்ஹாவில் இருக்கின்றது.

விடையம் இப்படி இருக்க எப்படி இந்த ஆளில்லாத கப்ரை மக்களால் கல்முனையில் ஸியாரத்து செய்ய முடியும்?? இங்கு நடப்பது கப்ர் வணக்கமல்ல ஷாஹுல் ஹமீதின் பெயரில் கல் வணக்கம் என்பதே உண்மை. ஒருவருக்கு இரு கப்ர்கள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
எப்படி இது கப்ரானது தெரியுமா?

கல்முனையில் உள்ள கடற்கரைப் பள்ளி (கொடியேற்றப் பள்ளியை) பொருத்த வரை அது உருவான வரலாறு தெரிந்திருக்க அவசியமான ஒன்றாகும்.

"கல்முனையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட முஹம்மது தம்பி லெவ்வை என்பவரை அவரின் நோயின் காரணமாக தற்பொழுது கடற்கரைப் பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் ஒரு குடிசையை அமைத்து அவர் கடல் காற்றைப் பெற்று குணமடையும் பொருட்டு மக்கள் தங்க வைத்திருக்கிறார்கள். இவர் ஒரு நாள் வெள்ளிக்கிழமை இரவுத் தொழுகையை தொழுதுவிட்டு தூங்கிய பொழுது இவரது கனவில் பச்சை தலைப்பாகை அணிந்து வாட்டசாட்டமான உடலோடும் சந்திரனை ஒத்த முகத்தோடும் ஒருவர் தோன்றி உனது குடிசையின் கிழக்கே சுமார் 100 யார் தூரத்தில் கடற்கரை மண் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றது அந்த மண் முகட்டில் ஒரு அழகான தேசிப்பழமும் கான மயில் இறகும் வைத்திருக்கிறேன் நீ அவ்விடம் சென்று என் நினைவாக ஒரு இறையில்லத்தை அமைத்து விடு இன்றோடு உனது உடல் நோய் காணாமல் போய்விடும் எனது பெயர் ஸாஹுல் ஹமீத் எனக் கூறிவிட்டு மறைந்து விட்டாராம்."
இவர் கண்னை விழித்ததும் உடலில் நோய் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாதளவிற்கு நோய் குணமடைந்திருந்ததாம் குடிசையின் கிழக்கே 100 யார் தூரத்தில் சென்று பார்தாராம் மண்குவியலும் அதன் மேல் தேசிப்பழமும் மயிலிறகும் இரும்பதைக் கண்டு அங்குள்ள மரங்களை முறித்து அவ்விடம் ஒரு பந்தலை அமைத்துவிட்டு அன்று ஜும்ஆவிற்க்கு பிறகு மக்களிடம் போய் நடந்தவற்றை கூறி இருக்கிறார் மக்களும் வந்து பார்த்துவிட்டு அந்த பந்தலை அலங்கரித்து ஸாஹுல் ஹமீது நாயகத்தின் பெயரால் மவ்லிது ஓதவும் வருடா வருடம் ரபியுல் ஆகிர் முதல் பிறையோடு கொடியேற்றி கந்தூரி அன்னதானம் வழங்கவும் அரம்பித்தார்களாம்."
(வீரகேசரி பத்திரிகை நவம்பர்-07-1994)

இப்படி ஒரு நோயாளி அங்கு தங்கவைக்கப்பட்டது உண்மை வரலாறுதான் ஆனால் அவர் கண்ட கனவும், அதில் உள்ளடங்கயிருப்பவைகளும் இஸ்லாத்திற்க்கு நேரெதிரானதும் மகா மடமை பொய் கட்டுக்கதைகளுமாகும்.
கனவில் வந்தவர் எப்படி மண்குவியலையும், தேசிப்பழத்தையும், கான மயில் இறகையும் நிஞத்தில் கொண்டுவந்தார்?? இப்படி ஒரு அற்புதம் நடக்க இந்த ஷாஹுல் ஹமீத் யார் நபியா?? இதற்க்கு மார்கத்தில் ஒரு ஆதாரமேனும் உண்டா?? கிடையவே கிடையாது.
அடுத்து "கனவில் வந்தவர் பச்சை தலைப்பாகையோடு வந்தார்" அது ஏன் பச்சை?? மக்களை நம்ப வைக்கவா?? பச்சைக்கும் இஸ்லாத்திற்கும் ஏதும் சம்மந்தமுண்டா??

"நீ பள்ளிவாசல் ஒன்றை என் ஞாபகார்தமாக அமைத்தால் உன் தீரா நோய் நீங்கிவிடும்"
நோயை நீக்கும் அதிகாரம் பெற்றவன் ஒரே அல்லாஹ்வாக இருக்கும் பொழுது ஷாகூல் ஹமீது அந்த அதிகாரத்தை எப்பொழுது பெற்றார்?? இது தெளிவான இணைவைப்பு இல்லையா??
பள்ளியை அமைத்தால்தான் நோய் நீங்கும் என்றார் ஆனால் கனவிலிருந்து கண் விளித்த போதே நோய் குணமடைந்தது எப்படி?? இதுவொன்றே போதும் இது பொய்ப் பித்தலாட்ட சாமியார்களால் வயித்து பிழைப்புக்காக கட்டப்பட்ட கதையென்று.

இப்படித்தான் இந்த கலியாட்டம் இங்கு உறுவானது. இன்றும் இஸ்லாமிய அறிவற்ற ஒரு கூட்டம் இந்த இணைவைப்பு மடமையின் பின் அலைமோதுவது வேதனையான விடையமே!

உண்மையில் இந்த கொடியேற்ற விழாவில் நடப்பவைகள் இந்துக் கோயில்களில் நடப்பவைகளே! இதனை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் இக் கொடியேற்ற விழாவிற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை, இக்கொடியேற்ற உச்சவம் நடப்பது கோயில்களில்தான்.

இந்தக் கொடி இயற்றப்படுவதற்க்கு முன் மக்களால் வணங்கப்படுவதனை பின்வருமாறு அவதானிக்கலாம்.
கல்முனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமாகும் இக் கொடியேற்ற விழா முதலில் அந்தப் பள்ளிவாசலில் வைத்து கோயில்களில் நடப்பதைப் போல் வர்ணங்களாலும் மஞ்சள், சந்தனம், பன்னீர் பூசப்பட்டும் அலங்கரிக்கப்படும்.

பிறகு அக்கொடி எவ் வழிகளால் கடற்கரைப் பள்ளியை நோக்கி எடுத்துசெல்லப்படுமோ அவ் வீதிகளில் தண்ணீர் பவ்சர்களால் தண்ணீர் தெளிக்கப்பட்டு வீதிகள் சுத்தப்படுத்தப்படும்.

பின்னர் பக்தர்கள் அக்கொடிகளை தலையில் ஏந்தியவாறு காலில் செறுப்பணியாமல் பக்திப் பரவசத்தோடு கோயில்களில் இந்துக்கள் வழிபடுவது போலும் தேர் கொண்டு செல்வது போலும் அக்கொடியை வணங்கிய வண்னம் நடக்க ஆரம்பிப்பார்கள்.
அதன்முன்னும் பின்னும் வாள்கள் ஏந்திய பாதுகாவலர்களும் ஊத்தை பாவா மார்களும் சில அரபி பைத்துகளையும் ஸலவாத்துகளையும் ஓதிய வன்னம் ரபானம் கொட்டி நடமாடிச் செல்வார்கள்.

இன்னும் சில பக்தர்கள் இந்துக்கள் சவத்தை கொண்டு செல்வது போல் பட்டாசுகளை கொலுத்தி வீதி ஓரங்களில் போட்டு வெடிக்கவைத்து ஆண்களையும் பெண்களையும் வீதிக்கு வரவழைப்பார்கள்.

இப்படியே இக் கொடி கடற்கறை பள்ளியை அடைந்ததும் கஃபாவை தவாப் செய்வது போல் ஏழு முறை அப் பள்ளிவாசலை வளைத்து சுத்தப்படும் அப்போது அக் கொடியை முத்தமிடவும் தொட்டுக் கொஞ்சவும் அலைமோதும் ஆண்களையும் பெண்களையும் வார்தைகளால் வர்ணிக்க முடியாது. கொடியை தொடுபவர்களை விட அங்கு நெரிசலுண்டிருக்கும் பெண்களையும் குமருகளையும் தொட்டுக் கொஞ்சுவபவர்களே அதிகம் எனலாம்.

பிறகு அக்கொடி பறக்கவிடப்படும், தொடர்ந்து பன்னிரெண்டு நாட்களாக ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசி பகிரங்க விபச்சாரத்திலும் காதல் மற்றும் கூட்டிக்கொண்டு ஓடும் காரியங்களிலும் பக்தியோடு ஈடுபடுவார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள் இது ஒரு இபாதத்தா??? இந்த கலியாட்டத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதும் சம்மந்தமுண்டா??

இது தெளிவான வழிகேடு இணைவைப்பு என்பதனை உணர்ந்து கொள்ள குர்ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ தேவையில்லை நான் மேலே குறிப்பிட்ட அம்சங்களை ஆளப்புரிந்து கொண்டால் போதும்.

தெளிவான இக் கல் வணக்கத்தையும் கொடிவணக்கத்தையும் மனதளவில் கூட ஒரு முஃமினால் என்னிப்பார்க்க முடியாதளவிற்க்கு இக் கொடிய விழா அமைந்திருப்பதனை எவறும் மறுத்திட முடியாது. லைஸன் கொடுத்த விபச்சாரம் என்றாலும் மிகையாகாது.

எனவே அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! இந்த கொடிய விழாவை புரக்கணியுங்கள். அங்கு எந்த ஒரு தேவைக்காகவும் சென்று முழுப் பாவத்தையும் சுமந்த நரகவாதிகளாக உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள்! அல்லாஹ் எம்மை மரணம் வரை இணைவைப்பிலிருந்து பாதுகாப்பானாக!
இவர்களுக்கு வெகு சீக்கிரம் ஹிதாயத் கிடைக்க பிரார்திப்போம்.
!சொல்வது மட்டுமே எமது கடமை!

---மெளலவி - ஜே.எம். சாபித் ஷரயி


மௌலூதை கண்ணியப்படித்தியவர் இஸ்லாத்தை உயிர்பித்தவரா

1980 களுக்கு முன்னால் தமிழ்பேசும் முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி மவ்லிது எனும் இணைவைப்பு பாடலை பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.
அப்போது சுடர் விட்ட ஏகத்துவ தொடர் பிரச்சாரத்தின் விளைவால் இந்த பித்தலாட்டங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மவ்லிது என்பது அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் காட்டித்தந்த வணக்கம் அல்ல. அது இஸ்லாத்தை அழித்தொழிக்கும் இணைவைப்பு பாடல் என்பதை மக்கள் அறிந்துக் கொண்டனர். அதிலிருந்து விலகத் தொடங்கினர்
மவ்லிது வியாபாரம் சரிந்தது.

தற்போது, விழிப்புடன் இருக்கும் மக்களிடத்தில் மவ்லிதின் மகத்துவத்தை(?) கொண்டு சேர்க்க பல முயற்சிகளை கையாண்டு வருகின்றனர்.
அதில், ஒன்று ஸஹாபாக்களின் பெயராலும், முந்தைய அறிஞர்களின் பெயராலும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்களிடத்தில் உண்மை போல் கொண்டு செல்கின்றனர்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக யார் ஒரு திர்ஹத்தை செலவிடுகிறாரோ அவர் சுவனத்தில் எனது தோழராக இருப்பார் என்று அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

யார் நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை கன்னியப்படுத்துகிறாரோ அவரே இஸ்லாத்தை உயிர்ப்பித்தவர் ஆவார் என்று உமர்(ரலி) கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக
யார் ஒரு திர்ஹத்தை செலவிடுகிறாரோ அவர் பத்ரு மற்றும் ஹுனைன் யுத்தங்களில் கலந்துக் கொண்டவர் போலாவார் என உஸ்மான்(ரலி) கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை கன்னியப்படுத்தியவரும், அது ஒதப்படுவதற்கு காரணமாக திகழ்ந்தவரும் ஈமானுடனே மரணிப்பார். மேலும் விசாரணை எதுவுமின்றி சுவனத்தில் நுழைவார் என்று அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறு நான்கு கலீஃபாக்கள் மவ்லிதை பற்றி கூறிவிட்டார்கள் என்று தற்போது மவ்லிதை தூக்கி பிடிப்பவர்கள் பரப்பிவருகின்றனர்.

இந்த செய்திகளின் தரத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால், இமாம் கதீப் மற்றும் கஸ்ஸாலி காலத்தில் எழுதப்பட்டது என்று சொல்லப்படும் மவ்லிது எவ்வாறு ஸஹாபாக்கள் காலத்திற்கு சென்றது என்று கேட்க விரும்புகிறோம்.
மேலும், சுவனத்திற்கு நற்சான்று வழங்க நபித்தோழர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா?
அது அல்லாஹ்விற்கு மட்டும் இருக்ககூடிய அதிகாரம். அதில் ஸஹாபாக்களை கூட்டாக்குகின்றனர்.
ஒரு இணைவைப்பை நியாயப்படுத்த இன்னொரு இணைவைப்பை அறிமுகப்படுத்துகின்றனர்.

மேலும், இந்த செய்திகளை உண்மையில் ஸஹாபாக்கள்தான் கூறினார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

இப்னு ஹஜர் அல்ஹைதமீ (இவர் இப்னு ஹஜர் அஸ்கலானீ இல்லை) என்பவர் தனது அந்நிஃமத்துல் குப்ரா எனும் புத்தகத்தில் (பக்கம் 6 ல்) இந்த செய்திகளை கொண்டு வந்துள்ளார்.

இவர் ஹிஜ்ரி 909 ல் பிறந்து 974 ல் மரணித்தவர். எல்லா அனாச்சாரங்களையும் நியாயப்படுத்தி பரேலவிச கொள்கைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் இவரே.
பிற்காலத்தில் வாழ்ந்த் ஒருவர் முற்காலத்தில் வாழ்ந்தவர்களின் செய்தியை கொண்டு வருகிறார் எனில் அது எந்த மூல நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்று தெளிவுப்படுத்த வேண்டும். அல்லது அதற்கான அறிவிப்பாளர் தொடரை கொண்டு வர வேண்டும்.
அவ்வாறு எதுவும் செய்யாமல் வெறுமனே இந்த செய்திகளை மாத்திரம் கொண்டு வந்துள்ளார்.
இந்த நூல் அல்லாத வேறு எந்த மூல ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி இடம்பெறவில்லை.
ஸஹாபாக்கள் காலத்திற்கு பல நூறாண்டிற்கு பிறகு வந்தவருககு எப்படி இந்த செய்தி கிடைத்தது என்று எந்த சான்றும் இல்லை.

இவ்வாறு அறிவிப்பாளர் தொடரும், ஆதாரமும் இல்லாத முழுக்க முழுக்க புனையப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவே இவை உள்ளது.
ஸஹாபாக்களை நஜாத்காரர்கள் அவமதிக்கிறார்கள். நாங்கள்தான் அவர்களை பெரிதும் மதிக்கின்றோம் என்று மவ்லிது ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டு ஸஹாபாக்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை பிரச்சாரம் செய்து தங்களின் மதிப்பை(?) வெளிப்படுத்துகின்றனர்.

இமாம்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை பாருங்கள்.

உஹது மலை அளவுக்கு தங்கம் என்னிடம் இருந்தால் அதை நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக செலவிட ஆசைபடுகிறேன் என்று ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறினார்கள்.

யார் மவ்லிது ஓதி, அதை மகத்துவப்படுத்தவதற்காக உணவை தயார்செய்து, தன் சகாக்களை ஒன்றினைத்து, விளக்கேற்றி, புத்தாடை அணிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் முதல் பிரிவினரான நபிமார்களுடன் சேர்ப்பான். மேலும் உயர் பதவிகளிலும் அவர் இருப்பார் என்று மஃரூஃப் அல்கர்கீ அவர்கள் கூறினார்கள்.

யார் நபியவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக தன் சகாக்களை ஒன்றினைத்து, உணவை தயாரித்து, தனிமையில் நற்காரியம் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமைநாளில் உண்மையாளர்கள், உயிர்தியாகிகள், நல்லோர் ஆகியோருடன் எழுப்புவான். அவர் இன்பமயமான சுவனத்தில் இருப்பார் என்று இமாம் ஷாஃபீ கூறினார்கள்.

ஒருவர் மவ்லிது ஓதுவதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்கிறார் எனில் அவர் சுவனத்தின் தோட்டத்தின் தேர்வு செய்தவராவார். ஏனெனில், அவர் நபி மீதுள்ள பிரியத்தினாலே அந்த இடத்தை தேர்வு செய்தார் என்று ஸிர்ரியுஸ் ஸிக்த்தி என்பவர் கூறினார்.

மவ்லிது ஓதப்படும் இடத்தினை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவ்விடத்தில் உள்ளவர்கள் மீது ஸலாவாத் கூறுகின்றனர். அல்லாஹ் தனது திருப்பொருத்தம் மற்றும் அருளைக் கொண்டு அவ்விடத்தை சூழ்ந்துகொள்கின்றான். மேலும், எந்த முஸ்லிமின் இல்லத்தில் மௌலிது ஓதப்படுகிறதோ அந்த இல்லத்தை தீயால் எரிதல் மற்றும் அனைத்து வகை சோதனைகள் கஷ்டங்களை விட்டும் அல்லாஹ் பாதுகாக்கிறான். அவ்வீட்டில் உள்ளவர்கள் மரணமடைந்தால் கூட அவர்களின் கப்ரு விசாரணை லேசாக்கப்படும் என்று இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ கூறினார்.

ஒருவர் உணவு பதார்த்தங்களை வைத்து மவ்லிது ஒதுகிறார் எனில் அந்த உணவிலும் அனைத்து பொருளிலும் பரக்கத் ஏற்படும். அதை யார் உண்ணுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மன்னப்பு வழங்குகிறான். தண்ணீர் வைத்து மவ்லிது ஒதப்பட்டு யார் அந்த தண்ணீரை பருகிறாரோ அவரின் உள்ளத்தில் ஆயிரம் வகையான ஒளியும் அருளும் நுழைகிறது. மேலும் ஆயிரம் வகையான நோய் அவரைவிட்டு வெளியேறுகிறது. தங்கம் அல்லது வெள்ளியினாலான நாணயத்தின் மீது மவ்லிது ஒதி அந்நாணயத்தை மற்ற நாணங்களுடன் கலந்து வைத்தால் நபியினுடைய பரக்கத் அதில் இறங்குகிறது. வறுமை அவரை அணுகாது என்று இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ கூறினார்.

இவையும் அந்த அந்நிஃமத்துல் குப்ரா எனும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் செய்திகளாகும்.

நபி மீது இட்டுகட்டி நபித்தோழர்கள் மீது இட்டுக்கட்டியவர்கள் சாதாரண அறிஞர்கள் மீது இட்டுக்கட்ட தயங்குவார்களா என்ன?

இவை அனைத்தும் அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய்களாகவே உள்ளது.

ஏனெனில், இந்த செய்திகளை தனது புத்தகத்தில் கொண்டு வந்திருக்கும் இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ அவர்கள் மிகவும் பிற்காலத்தில் வாழ்ந்தவர்.
ஆனால் இவர் குறிப்பிட்டிருக்கும் இமாம்களில் நான்கு பேர் இவரை விட பல நூற்றாண்டுகள் முந்தி வாழ்ந்துள்ளனர்.

1. இமாம் ஹஸன் அல்பஸரீ ஹிஜ்ரி 110 ல் மரணித்தார்.
2. இமாம் மஃரூஃப் அல்கர்கீ ஹிஜ்ரி 200 ல் மரணித்தார்.
3. இமாம் ஷாஃபீ ஹிஜ்ரி 204 ல் மரணித்தார்.
4. இமாம் ஸிர்ரியுஸ் ஸிக்த்தீ ஹிஜ்ரி 251 ல் மரணித்தார்.
5. இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ ஹிஜ்ரி 606 ல் மரணித்தார்
6. இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ ஹிஜ்ரி 911 ல் மரணித்தார்

இவர் குறிப்பிட்ட அனைத்து இமாம்களுமே இவரை விட பல ஆண்டுகள் முந்தியவர்கள்.
இமாம் சுயூத்தீயினுடைய மரணம் இவருடைய வாழ்வுக்கு ஓரளவு நெருக்கமாக இருப்பது போன்று தெரிந்தாலும் இவர் இரண்டு வயதாக இருக்கும்போதே அவர் மரணித்துவிட்டார்.

இவர் அவர் சொன்ன கருத்தை குழந்தை பருவத்திலேயே கேட்டு புத்தகத்தில் பதிவு செய்துக்கொண்டார்(!) என்று சொன்னாலும் சொல்வார்கள் இந்த மவ்லிது பக்தர்கள்!

நாம் ஏற்கனவே கேட்டது போல் இவரை விட பல்லாண்டுகள் முந்தி வாழ்ந்த இமாம்களின் கருத்தை இவர் எங்கிருந்து பெற்றார்?
அதற்கான சான்று என்ன?
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பல நூல்கள் எழுதியுள்ளார்கள். அத்தகைய எந்த புத்தகத்திலும் அவர்கள் இந்த கருத்தினை பதிவுசெய்யவில்லையே!

அவர்கள் பதிவு செய்யாத கருத்து பல நூற்றாண்டுகள் கழித்து இவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

இப்படி எந்த குறிப்பும் இல்லாமல் இந்த செய்திகள் புனையப்பட்ட ஜோடிக்கப்பட்ட செய்திகளாகவே உள்ளது.
ஒரு கருத்தை பிந்திவந்தவர்கள் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். எனவே, மக்கள் பெரிதும் நேசிக்கும் ஸஹாபாக்களின் பெயராலும், மக்களுக்கு மத்தியில் அதிகம் பிரபல்யமாக இருக்கும் இமாம்களின் பெயராலும் சொன்னால் ஓரளவு மக்கள் கேட்பார்கள் என்பதற்காகவே இந்த செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்திகளின் தரம் என்னவென்று தெரிந்தும் மக்களை மடையர்களாக்கும் நோக்கில் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரால் இயங்குபவர்கள் பரப்பி வருகின்றனர்.

ஆதாரமற்ற தங்களின் கருத்தை மக்களுக்கு மத்தியில் திணிக்க வேண்டும் என்பதற்காக ஸஹாபாக்கள் மீதும், இமாம்களின் மீதும், ஏன் நபியின் மீதும் கூட இட்டுக்கட்ட இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கும் இட்டுகட்டபட்ட செய்திகளை பரப்பி அவர்களை அவமதிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதற்குமான பல சான்றுகளில் இதுவும் ஒரு சான்றாகும்
.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதல்ல. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்: மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்.
அறிவிப்பவர் முஃகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் புகாரி 1291


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் முஸ்லிம்

நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?



اَلسَّلاَمُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
'நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்'

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا
لَدَيْهِ بُرْءُ السَّقَامِ
'நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது'

وَمَرِيْضًا اَنْتَ عَائِدُهُ
قَدْ اَتَاهُ اللّهُ بِالْفَرَجِ

'(நபியே நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்கச் சென்றாலும் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் வழங்கி விடுவான்!' என்றெல்லாம் ஸுப்ஹான மவ்லிதில் கூறப்பட்டுள்ளது.

மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இதில் நபிமார்கள் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான சான்றுகளை ஏராளமாக நாம் காணலாம்.

இப்ராஹீம் (அலை அவர்கள் மிகச் சிறந்த இறைத்தூதராவார்கள். திருக்குர்ஆனில் அவர்களைப் பல இடங்களில் இறைவன் புகழ்ந்து பேசுகிறான். அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுவதிலிருந்து அவர்களின் மதிப்பு எத்தகையது என்று நாம் உணர முடியும்.

இப்ராஹீம் (அலை அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது இறைவனின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்கினார்கள்.

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26 :80)

நோய்களை நீக்கும் அதிகாரம் இறைவனுக்குரியது என இப்ராஹீம் (அலை அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

அய்யூப் நபியவர்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட போது தமது நோயை தாமே நீக்கிக் கொள்ளவில்லை. மாறாக இறைவனிடம் தான் அவர்கள் முறையிட்டனர். இறைவன் விரும்பிய போது அவர்களின் நோயைக் குணமாக்கினான்.

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை. (அல்குர்ஆன் 21:83)

துன்பங்களையும், நோய்களையும் நீக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கும் இல்லை. அது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 6:17)

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்  (அல்குர்ஆன் 10:49)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 39:38)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல போர்களைச் சந்தித்தார்கள். எதிரிகளைச் சந்திக்க வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில் பல நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டுப் போரில் பங்கெடுக்க முடியாத நிலையில் இருந்தார்கள். நபியவர்களுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் இருந்திருந்தால் இந்த நெருக்கடியான நேரத்தில் நோயுற்ற நபித்தோழர்களுக்கு நிவாரணம் அளித்திருப்பார்கள். அவர்களையும் போரில் பங்கெடுக்கச் செய்திருப்பார்கள். படை வீரர்கள் பற்றாக்குறையாக இருந்த இந்தக் கட்டத்தில் கூட அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பல ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள், 'நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம தரையையோ, பள்ளத்தாக்கையோ கடந்து சென்றால் அவர்களும் (கூலி பெறுவதில் உங்களுடன் உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களைத் தடுத்து விட்டது' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி நூல்: புகாரி 2839, 4423

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நோய்களுக்கு ஆளானதுண்டு. நோயிலிருந்து தாமே அவர்கள் நிவாரணம் பெற்றதில்லை. நோய் நீக்கும் ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்களே நோய்க்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது அவர்களிடம் சென்றேன். 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளீர்களா' என்று கூறினேன். அதற்கவர்கள் 'ஆம் உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் அளவுக்கு எனக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்கள்.அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி நூல்: புகாரி 5648, 5660, 5667

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் நோய் வாய்ப்பட்டனர். அவர்களில் யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நோய் நிவாரணம் தேடவில்லை. நான் குணப்படுத்துகிறேன் என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. இறைவன் மட்டுமே நோய் தீர்க்கும் அதிகாரம் படைத்தவன் என்பதை அவர்கள் அப்போது கூறிய வார்த்தை ஐயமற விளக்குகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றனர். தமது வலது கரத்தால் தடவிவிட்டு (அல்லாஹும்ம ரப்பன்னாஸ் அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபி அன்தஷ்ஷாஃபி, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபா அன் லா யுகாதிரு ஸகமன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி நூல்: புகாரி 5675, 5742, 5743, 5750

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள்:

'இறைவா! மனிதர்களின் இரட்சகனே! இந்நோயை நீக்குவாயாக! நீ நிவாரணம் அளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிப்பவன்! உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதுமில்லை. நோயை விட்டு வைக்காத வகையில் நிவாரணம் வழங்கு!'

நோய் தீர்ப்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தம் திருத்தமாக இதன் மூலம் அறிவித்து விட்டனர்.

ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற போது 'இறைவா! ஸஃதுக்கு நோய் நிவாரணம் வழங்கு' என்றே மும்முறை பிரார்த்தனை செய்தார்கள். இதை ஸஃது அவர்களே தெரிவிக்கிறார்கள். நூல்: புகாரி 5659

அல்லாஹ் ஒருவன் மட்டுமே நோய்களை நீக்கக் கூடியவன் என்பதையே அவர்கள் மக்களுக்குப் போதனை செய்தார்கள். அல்லாஹ் அனுமதிக்கும் போது மிக மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் அற்புதம் என்ற அடிப்படையில் அல்லாஹ்விடமே கோரி நிவாரணம் பெற்றுத் தந்துள்ளனர்.

அல்லாஹ் அனுமதிக்காத பல நூறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். தாமே நோய் தீர்க்க வல்லவர் என்று சொன்னதே இல்லை.

அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நேரில் சந்தித்து நோய் விலகிட இறைவனிடம் துஆச் செய்யுமாறு பல நபித்தோழர்கள் கேட்டதுண்டு. ஆனால் நீங்களே குணப்படுத்துங்கள் என்று கேட்டதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள், தமது மகன் மரணத்தை நெருங்கிவிட்டதாகவும் உடனே வரவேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை கொடுக்கப்பட்டது. அக்குழந்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மடியில் கிடத்தினார்கள். அதன் உயிர் மூச்சு தடுமாறியது. இதைக் கண்டு அவர்களின் கண்கள் கண்ணீர் சொரிந்தன. நூல்: புகாரி 1248

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்ட போது கண்ணீர் தான் விட முடிந்தது. நோயைத் நீக்க முடியவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணாக அமைந்த இந்த மவ்லிதைப் பாடுவது நன்மை தருமா? பாவத்தில் தள்ளுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!