"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மலக்குகளுக்கும் மறைவான ஞானம் இல்லை


ஆதம் நபியை முதன் முதலாக அல்லாஹ் படைக்கும் போது மலக்குமார்கள் அதற்கு அதிருப்தியைத் தெரிவிக்கிறார்கள்.

மறைவான விஷயங்கள் தெரிய வேண்டுமென்றால் முதலில் ஜின்களை விட, நபிமார்களை விட மலக்குமார்களுக்குத் தான் தெரிந்திருக்க வேண்டும். 

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைக்கும் போது மலக்குமார்கள், நீ அவர்களைப் படைக்க வேண்டாம் என்கிறார்கள். இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: 

"பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்'' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது, "அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே'' என்று கேட்டனர். "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்'' என்று (இறைவன்) கூறினான். அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி, "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான். "நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்."ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, "வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' என (இறைவன்) கேட்டான். அல்குர்ஆன் 2:30-32 

மேற்கண்ட வசனங்கள் சுட்டிக்காட்டக்கூடிய செய்தி என்ன? இந்த ஆதம் நமக்கெல்லாம் அறிவாளியாக இருப்பார். இறைவன் வைத்த இந்தப் பரீட்சையில் வெற்றி பெற்று விடுவார் என்பது மலக்குமார்களுக்கே தெரியவில்லை. 

ஏதோ இந்த மனிதர்கள் உலகில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக, ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டு இரத்தம் சிந்துபவர்களாகத் தான் இருப்பார்கள் என்றே நினைத்திருந்தார்கள். எத்தகைய சிறப்புமிக்க நபிமார்களாக இருந்தாலும், ஜின்களாக இருந்தாலும், எத்தகைய வலிமை மிக்க மலக்குமார்களாக இருந்தாலும் அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது. 

இறைவனும் பல சம்பவங்கள் வாயிலாக நமக்கு உணர்த்துகின்றான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு மலக்குமார்களுக்கென்று சில பணிகளை ஒதுக்கியிருக்கிறான். அவன் சொன்ன கட்டளையை ஏற்று அவர்கள் அந்தப் பணிகளை செவ்வனே செய்து வருவார்கள். அவனுடைய கட்டளைக்கு எந்த மலக்குமார்களும் மாறு செய்ய மாட்டார்கள். 

அவர்களுடைய பணிகளில் சில:

 1) வஹீயைக் கொண்டு வருதல். 

2) நன்மை, தீமையைப் பதிவு செய்தல்.

 3) உயிரைக் கைப்பற்றுதல். 

4) பாதுகாவல். 

5) இறைவனின் சிம்மாசனத்தை (அர்ஷை) சுமத்தல். 

6) நரகத்திற்கு காவலாளிகளாக இருத்தல். 

7) கருவறையில் விதியை எழுதுதல். 

8) கப்ரில் விசாரணை செய்தல் 

போன்ற பல பணிகளை - வேலைகளை மலக்குமார்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அத்தகைய பணிகளில் ஒன்றைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, 

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன் 5018) 

இந்த வசனத்தில் ஒவ்வொரு மனிதரும் இந்த உலகத்தில் செய்கின்ற நன்மை தீமையைப் பதிவு செய்வதற்கு ஒரு மலக்கு நியமிக்கப்பட்டிருப்பார். ஆனால் அந்த மலக்கு, பிறர் செய்கின்ற நன்மை தீமையை அறியமாட்டார். அவருக்கென்று நியமிக்கப்பட்ட மனிதரிடத்தில் ஏற்படுகின்ற நன்மை தீமையை அறிந்து அதைத் தான் பதிவு செய்வார். பிறரைப் பற்றிய மறைவான விஷயம் அவருக்கு தெரியாது. பிறரிடத்தில் ஏற்படுகின்ற நன்மை தீமையை அவர் அறிய மாட்டார். அவ்வாறு இறைவன் அவர்களைப் படைக்கவுமில்லை. மறைவானவற்றை அறிகின்ற ஆற்றலை அல்லாஹ் கொடுக்கவுமில்லை. எனவே மலக்குமார்களுக்கும் மறைவான ஞானம் இல்லை என்பது தெளிவாகிறது.  

 EGATHUVAM  APR 2014

மலக்குகளும் மறைவான ஞானமும்




 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்