"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா?

  511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா?

இவ்வசனங்களில் (7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4) அல்லாஹ் அர்ஷின் மீது ஆட்சியை அமைத்தான் என்ற கருத்தில் மற்றவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் போது அர்ஷின் மீது அமர்ந்தான் என்று ஏன் நாம் தமிழாக்கம் செய்துள்ளோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட வசனங்களில் இஸ்தவா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதே சொல் குர்ஆனில் வேறு இடங்களிலும் அமர்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

11:44 வசனத்தில் கப்பல் மலை மீது அமர்ந்தது என்று அனைவரும் மொழி பெயர்த்துள்ள இடத்தில் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

23:38 வசனத்திலும் கப்பல் மீது அமர்வீராக என்று சொல்லப்படும் இடத்தில் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்தவா என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்குப் பயன்படுத்தப்படாது. உயரமான ஒரு பொருளின் மீது அமர்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

உதாரணமாக கப்பலின் மீது அமர்தல், மலையின் மீது அமர்தல், வாகனத்தின் மீது அமர்தல், மிம்பரின் மீது அமர்தல் ஆகிய அர்த்தங்களில் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இவ்வார்த்தை கூறப்பட்டுள்ளது.

வாகனத்தின் மீது அமர்தல் என்ற பொருளில் 43:13 வசனத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹதீஸ்களிலும் இந்தச் சொல் அமர்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குதிரை மீது அமர்ந்து கொண்டேன் என்று அபூகதாதா (ரலி) கூறும் போது இஸ்தவா என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். (பார்க்க : புகாரீ 2914)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் நன்கு அமர்ந்து கொண்டார்கள் என்று குறிப்பிடும் போது இஸ்தவா என்ற சொல்லையே இப்னு அப்பாஸ் (ரலி) பயன்படுத்தியுள்ளார்கள். (பார்க்க புகாரீ 4277)

மேடை மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள் என்று அனஸ் கூறும் போது இஸ்தவா என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். (பார்க்க : புகாரீ 72:69)

லிசானுல் அரப் என்ற பிரபல அரபு அகராதி நூலில் இவ்வார்த்தைக்கு இப்பொருள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு பொருளின் மேற்பகுதியில் இருத்தல் என்று இதற்கு அர்த்தம் எனக் கூறப்பட்டுள்ளது.

இஸ்தவா என்றால் மேல் இருத்தல் என்பது பொருள். வாகனத்தின் மேல் இருத்தல், வீட்டினுடைய முகட்டின் மீது இருத்தல் என்று கூறப்படும்.

எனவே இறைவன் அர்ஷ் மீது அமர்ந்து உயர்வாக இருக்கின்றான் என்று பொருள் கொள்வதே சரியானது.

இவ்வாறு அர்த்தம் செய்யக் கூடாது என்று கூறுபவர்கள் இவ்வார்த்தைக்கு வேறு விளக்கங்களைத் தருகின்றார்கள். அந்த விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணத்தின் படி பார்த்தாலும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன.

---P.JAINUL ABIDEEN 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்