515. மூமின்களின் வழியைப் பின்பற்றலாமா?
இவ்வசனத்தில் (4:115) மூமின்களின் (நம்பிக்கை கொண்டோரின்) வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் கூறுகிறான்.
குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவது போல் மூமின்களின் வழியையும் பின்பற்ற வேண்டும் எனக் கூறி இஸ்லாத்தில் மூன்றாவது ஆதாரத்தை சிலர் உருவாக்கப் பார்க்கின்றனர்.
ஆனால் இந்த வாதத்துக்கு இவ்வசனத்தில் அறவே இடமில்லை.
இரண்டு அர்த்தங்கள் கொடுக்க மூமின்களின் வழி என்ற சொல் இடம் தருகின்றது.
மூமின்களைக் கண்டறிந்து அவர்கள் சென்ற வழியில் செல்லுதல் என்பது ஒரு அர்த்தம்.
மூமின்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளானோ அந்த வழியில் செல்லுதல் என்பது இன்னொரு அர்த்தம்.
முமின்கள் சென்ற வழி என்று பொருள் கொள்ளவும்
மூமின்கள் செல்ல வேண்டிய வழி என்று பொருள் கொள்ளவும்
இச்சொல் இடம் தந்தாலும் முதலாவது பொருள் கொள்ள இஸ்லாத்தின் அடிப்படை தடையாக உள்ளது.
மூமின்களின் வழியைப் பின்பற்றலாம் என்று சொன்னால் மூமின்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் நமக்கு இருக்க வேண்டும்.
அந்த ஆற்றல் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஏனெனில் ஈமான் எனும் நம்பிக்கை உள்ளம் சார்ந்த விஷயமாகும். ஒருவரது உள்ளத்தில் ஈமான் உள்ளதா என்று மற்றவரால் கண்டுபிடிக்கவே முடியாது. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும். மூமின்களைக் கண்டுபிடிக்க முடியாது எனும் போது மூமின்களை எப்படி பின்பற்ற முடியும்?
உலகின் தேவைகளுக்காக ஒருவரது வெளிப்படையான செயல்களை வைத்து மூமின்கள் என்று நாம் சொல்லலாம். ஆனால் அல்லாஹ்விடம் மூமின் என்ற அர்த்த்தில் சொல்லக் கூடாது.
மூஃமின்கள் என்றால் யார்?
நாம் வாழும் உலகில், சில உலகியல் தேவைக்காக ஒருவரை மூமின் என்று நம்புவோம். மூமின் என்று நம்பி கடன் கொடுப்போம், மூமின் என்று நம்பி பெண் கொடுப்போம். ஆனால் நிஜத்தில் அவர் முமினாகவும் இருக்கலாம், அல்லது முனாஃபிக்காகவும் இருக்கலாம். அதை அறிந்து கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இல்லை.
இவ்வுலகில் மூமின் என்பது வேறு, அல்லாஹ்விடத்தில் மூமின்கள் என்பது வேறு.
யார் யாரெல்லாம் மூமீன்கள் என்று தேடிப்பார்த்து பின்பற்றுவதை அல்லாஹ் இதில் சொல்லவில்லை. அது யாராலும் ஆகாது என்பது தெளிவாகத் தெரிகிறது
மூமின்களின் வழி என்று சொன்னால், மூமிமின்கள் செல்ல வேண்டிய பாதை என்பதே பொருளாகும்., எந்த வழியில் சென்றால் அல்லாஹ் சொல்கிற மூமின் எனும் இலக்கணத்தை நாம் பூர்த்தி செய்ததாக ஆகுமோ அந்த வழி. இதை நாம் கண்டுபிடிக்க முடியும்.
கீழ்க்காணும் இரு வசனங்களைப் பாருங்கள்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். திருக்குர்ஆன் 33:36
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் மூமின்கள் அதில் சுய விருப்பம் கொள்ளாமல் அப்படியே கட்டுப்பட்டு விடுவார்கள். இது தான் மூமின்கள் செல்ல வேண்டிய வழி.
இன்னொரு வசனத்தைப் பாருங்கள்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது 'செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 24:51
அல்லாஹ்வின் வசனங்கள் போதிக்கப்படும் போது செவியுற்றோம், கட்டுப்பட்டோம் என்பதே அவர்களது நிலையாக இருக்கும். இது தான் மூமின்கள் செல்ல வேண்டிய வழி.
மூமின்களின் வழியைத் தேர்வு செய்யுங்கள் என்பதை வைத்து, மூமின்கள் இஜ்மா செய்வார்கள், அதைப் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வது மடமையாகும்.
-- P.JAINUL ABIDEEN
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்