"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)
Showing posts with label மிஃராஜ். Show all posts
Showing posts with label மிஃராஜ். Show all posts

மிஃராஜ் இரவு' ரஜப் பிறை 27 ல் தானா?

 'மிஃராஜ் இரவு' ரஜப் பிறை 27 ல் தானா?

'மிஃராஜ்' என்ற சம்பவம் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் நம்பவேண்டிய, அல்லாஹ்வின் வல்லமையை அடிப்படையாகக் கொண்ட உண்மையான ஒரு நிகழ்வு என்றாலும், அது எப்போது நடந்தது என்ற மாதமோ, பிறை(தேதி)யோ ஹதீஸ்களில் குறிப்பிடப்படவில்லை என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். தோராயமாக அனுமானித்து சொல்லக்கூடிய‌ ஆதாரங்களைத் தவிர, அது இந்த நாளில்தான் நடந்தது என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சரியான ஆதாரம் எதுவும் கிடைக்காததால் அறிஞர்களிடம் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன‌.

- ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) இருவரும், யானை ஆண்டில் ரபீவுல் அவ்வல் பிறை 12 ல் மிஃராஜ் நடந்த‌தாக கூறுகிறார்கள். இதே கருத்தை இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் அறிவிக்கிறார்கள். இன்னொரு அறிவிப்பில், "நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது" என இமாம் ஜுஹ்ரி அறிவிக்கிறார்கள். (பைஹகீ)

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும்.
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன்  திருக்குர்ஆன் 17:1

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் இறைவனுக்கு இது சாத்தியமானதே!

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை இறைவன் ஏன் ஏற்படுத்திக் கொடுத்தான் என்பதைப் பின்வரும் வசனத்தில் இருந்து அறியலாம்.

(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை மனிதர்களுக்குச் சோதனையாகவே ஆக்கியுள்ளோம்  திருக்குர்ஆன் 17:60

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.

இந்த நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் கூறிய பொழுது சிலர் நம்ப மறுத்து மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று அல்லாஹ்  குறிப்பிடுகிறான்.

மிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன.

அல்லாஹ் நாடினால் மிகச் சிறிய அளவு நேரத்தில் விண்ணகம் அழைத்துச் செல்ல முடியும்; அவனது ஆற்றல் அளப்பரியது என்று நம்புவதுதான் மிஃராஜ் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதை நம்ப மறுப்பவர் அல்லாஹ்வின் ஆற்றலில் ஐயம் கொண்டவராவார். அவரது ஈமான் சந்தேகத்துக்கு உரியதாகும்.

மிஃராஜ் நடந்தது எப்போது?

மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எந்தக் குறிப்பும் இல்லை.

எந்த ஆண்டில், எந்த மாதத்தில், எந்தத் தேதியில் நடந்தது என்பதில் அறிஞர்கள் சொந்தக் கருத்தாக பலவாறாக கூறியுள்ளனர். இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.

ரஜப் மாதம் 27 ல் தான் மிஃராஜ் நடந்தது என்று பரவலாக மக்கள் நம்புவது ஆதாரமற்றதாகும்.

அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஒரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை.

மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்
ரஜப் 27 ஆம் இரவு தான் மிஃராஜ் நடைபெற்றது என்று நம்பி அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல பித்அத்தான காரியங்களைச் செய்கின்றனர்.

மிஃராஜ் இரவில் வானத்திலிருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர் என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.

இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்லிகள், மவ்லித் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிக்கின்றனர்.

6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும்; அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3 ஆம் கலிமாவை 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.

3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.

இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃப, லிஈலாஃபி குறைஷ் ஆகிய அத்தியாயங்களை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி எழுதி வைத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.

இவை நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?

صحيح البخاري
2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ

யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரீ 2697

صحيح مسلم
4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

நமது கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல் : முஸ்லிம் 3243

தாமாக புதிய வணக்கங்களை உருவாக்கிக் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கும் கேள்வியைக் காணுங்கள்!

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?திருக்குர்ஆன் 49:16

அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதாகக் கருதப்படும்.

அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்குத்தான் எந்த வணக்கத்தையும் நாம் செய்ய வேண்டும். ஆனால் நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் அன்பை யாரும் பெற முடியாது என்று அல்லாஹ் கற்றுத்தருகிறான்.

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 3:31,32

இன்னும் சிலர் இந்த இரவில் பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! திருக்குர்ஆன் 7:205

உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். திருக்குர்ஆன் 7:55

அல்லாஹ்வின் இந்த அறிவுரையை எதிர்த்து பணிவில்லாமல் எழுந்து, குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

سنن النسائي
1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : நஸாயீ

எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்சிப்போமாக!


மிஃராஜின் போது இறந்தவர்களைப் பார்த்தது எப்படி?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட நபிமார்கள் உயிருடன் தான் உள்ளனர் என்று வாதிடுகின்றனர்.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். மரணித்து விட்ட நபிமார்கள் மட்டுமின்றி இதர நல்லடியார்களும், கெட்டவர்களும் கூட ஆன்மாக்களின் உலகில் உயிருடன் உள்ளனர் என்பதை நாம் மறுக்கவில்லை.

அவர்களால் இவ்வுலகுக்கு வரமுடியுமா? இவ்வுலகில் தொடர்பு கொள்ள முடியுமா என்பது தான் பிரச்சனை.

மிஃராஜில் பல நபிமார்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தது தீய கொள்கையுடையவர்களுக்கு ஆதாரமாக ஆகாது. இவ்வுலகை விட்டு வேறு உலகத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அழைத்துச் சென்றதாலேயே அவர்களால் பல நபிமார்களைக் காண முடிந்தது. நபிகள் நாயகத்துக்குப் பின்னர் எந்த முஸ்லிமும் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட மாட்டார். எனவே அவர் எந்த நபியையும் காண மாட்டார் என்பதற்குத் தான் இது ஆதாரமாக உள்ளது.

அடுத்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் விண்ணுலகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தவை அனைத்தும் அல்லாஹ்வால் எடுத்துக் காட்டப்பட்டவையாகும்.

நேரடிச் சந்திப்புக்கும், எடுத்துக் காட்டப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நமது வீட்டில் நம்மோடு வசிக்கும் உறவினரை நாம் கனவில் காண்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவரைக் கனவில் நாம் காண்பதால் அவர் நம்மைக் கண்டார் என்று ஆகாது. காலையில் எழுந்து அவரை நாம் சந்தித்தால் உங்கள் கனவில் நான் நேற்று வந்தேனே என்று அவர் கூற மாட்டார். உங்களைக் கனவில் நான் கண்டேன் என்று நாம் கூறினால் தான் அவருக்கே அது தெரியும். ஏனெனில் கனவில் அவர் நமக்கு எடுத்துக் காட்டப்பட்டாரே தவிர  அவரையே நாம் சந்திக்கவில்லை.

மிஃராஜ் என்பது கனவல்ல என்றாலும் அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டவை அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டவை தான் என்பதை மிஃராஜ் சம்மந்தமான ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.

சொர்க்கவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தல்!

நல்லோர்கள் சொர்க்கத்தில் இருப்பதையும், தீயோர்கள் நரகத்தில் இருப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள் என்று மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரி 3241

(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்து கொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!’’ என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், “இவர் யார்?’’ எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும், இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர், வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்; இடப் பக்கம் (நரகவாசிகளைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் அபூதர் (ரலி)
நூல்: புகாரி 349

இந்த இரு ஹதீஸ்களும் சொல்வது என்ன? மனிதர்கள் சொர்க்கத்துக்குச் செல்வதும், நரகத்துக்குச் செல்வதும் இனிமேல் நடக்கக் கூடியவை. மரணித்தவர்கள் இதுவரை சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ செல்லவில்லை. நியாயத் தீர்ப்பு நாளுக்குப் பிறகு தான் இது நடக்கும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் சிலரையும், நரகத்தில் சிலரையும் பார்த்ததாக முதல் ஹதீஸ் கூறுகிறது.

யாருமே சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இன்னும் செல்லாத போது எப்படி அவர்களை சொர்க்கத்திலோ, நரகத்திலோ பார்த்திருக்க முடியும்? இனிமேல் நடக்க உள்ளதை அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான் என்பதுதான் இதன் பொருளாக இருக்க முடியும். நேரடியாகவே பார்த்தார்கள் என்று பொருள் வைத்தால் நியாயத் தீர்ப்பு நாளில்தான் இதற்கான தீர்ப்பு அளிக்கப்படும் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களையும், நபிமொழிகளையும் மறுக்கும் நிலை ஏற்படும்.

இரண்டாம் ஹதீஸில் சொர்க்கத்தில் உள்ளவர்களைத் தமது வலப்பக்கமும், நரகத்தில் உள்ளவர்களைத் தமது இடப்பக்கமும் ஆதம் நபி பார்த்தார்கள் என்று கூறப்படுகிறது. அதில் மறுமை நாள் வரும் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரும் உள்ளடங்குவர். நாமும் அடங்குவோம். நபிகள் நாயகம் மிஃராஜ் சென்ற போது நாம் தான் பிறக்கவே இல்லையே? பிறகு எப்படி நம்மைக் கண்டார்கள்?

இவை யாவும் இறைவனது வல்லமையால் நபிகளாருக்கு எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்ச்சி தான் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

இனிமேல் படைக்கவுள்ளதை எடுத்துக் காட்டுவது இறைவனின் வழிமுறைகளில் ஒன்றாகும் என்பதைப் பின் வரும் வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். “நான் உங்கள் இறைவன் அல்லவா?’’ (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்‘’ என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்‘’ என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?’’ என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)திருக்குர்ஆன் 7:172

மறுமை நாள் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரையும் ஆதம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் எடுத்துக் காட்டியதாக இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் அனைவரையும் ஆதம் நபி பார்த்தார்கள் என்றால் நேரடியாகப் பார்த்தார்கள் என்ற பொருளில் அல்ல. இறைவன் எடுத்துக் காட்டிய விதத்தில் பார்த்தார்கள் என்பதாகும்.

இது போலவே மிஃராஜிலும் நபிகள் நாயகம் அவர்களுக்குப் பல காட்சிகளை அல்லாஹ் எடுத்துக் காட்டினான்.

எதிர்காலத்தில் பிறக்கவுள்ள மக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிரத்தியேகமான முறையில் எடுத்துக் காட்டினான். கடந்த காலத்தில் மரணித்தவர்களையும் எடுத்துக் காட்டினான். எதிர்காலத்தில் பிறக்கவுள்ள மக்களை அல்லாஹ் எடுத்துக் காட்டியதால் அவர்கள் பிறந்து உயிருடன் உள்ளார்கள் என்று கருதுவது எந்த அளவு அபத்தமோ, மரணித்தவர்கள் நம்மைப் போல் உயிருடன் உள்ளனர் என்று கருதுவதும் அதே அளவு அபத்தமாகும்.

மிஃராஜில் காட்டப்பட்டவை அனைத்தும் எடுத்துக் காட்டுதல் தான் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களும் உள்ளன.

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில்  சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்’’ என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருந்ததில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1149

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் பிலாலைப் பார்த்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் பிலால் பூமியில் தான் அந்த நேரத்தில் இருந்தார். அவர் சொர்க்கத்தில் நடந்து சென்றது மெய்யான காட்சி என்றால் அது பிலால் அவர்களுக்குத் தான் முதலில் தெரிந்திருக்கும். அல்லாஹ்வின் தூதர் சொன்ன பிறகுதான் அவருக்கே தெரிந்தது என்றால் அவர் சொர்க்கத்தில் நடந்து செல்லவில்லை. இனிமேல் அவர் சொர்க்கம் செல்வார் என்பதைச் சொல்வதற்காக அவர் நடந்து செல்வது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ளான் என்பதைத் தவிர இதற்கு வேறு விளக்கம் கிடையாது.

“நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, ‘யார் அவர்?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), ‘இவர் பிலால்’ என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், ‘இது யாருக்குரியது?’ என்று கேட்டேன். அவர், (வானவர்), ‘இது உமருடையது’ என்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)’’ என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்’’ என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 3679

பிலால் (ரலி) அவர்களும், ருமைஸா அவர்களும் உலகில் உயிருடன் இருக்கும் போது அவர்களை அல்லாஹ் சொர்க்கத்தில் இருப்பதாகக் காட்டினான்.

நடக்காத ஒன்றை எடுத்துக் காட்டுவதாக இது அமைந்துள்ளது போல், மரணித்தவர்களை உயிருடன் உள்ளவர்களைப் போல் அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான் என்றே பொருள் கொள்ள  வேண்டும்.

ஒருவரையே பல இடங்களில் பார்த்ததாக வருவதும் இது எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வுதான் என்பதை மேலும் தெளிவாக்குகிறது.

மூஸா நபியை முதலில் கப்ரில் பார்த்தார்கள் என்று முஸ்லிம் 4736 கூறுகின்றது.

கப்ரில் தொழும் நிலையில் மூஸா நபியைப் பார்த்தது போலவே வானத்திலும் மூஸா நபியைச் சந்தித்தார்கள்.
(பார்க்க: புகாரி 349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர்.
(முஸ்லிம் 3410)

நேரடியாகப் பார்ப்பதாக இருந்தால் ஒருவரை ஒரு இடத்தில் தான் பார்க்க இயலும். ஒருவரை ஒரே நேரத்தில் பல இடங்களில் பார்த்ததாக வருவதிலிருந்து இது இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட காட்சி என்பதை அறியலாம்.

உலகம் அழிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு நாளில் தீர்ப்பும் வழங்கப்பட்ட பின்னரே நல்லோர்கள் சொர்க்கத்திற்கும், தீயோர்கள் நரகத்திற்கும் செல்வார்கள்.

அதுவரை நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் சொர்க்கம் செல்ல இயலாது.

பிர்அவ்ன், அபூஜஹ்ல்களாகவே இருந்தாலும் நரகத்திற்குச் செல்ல முடியாது. ஆன்மாக்களின் உலகில் தான் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில் பல தண்டனைகளை அனுபவிக்கும் நபர்களைப் பார்த்ததாக மிஃராஜ் பற்றிய ஹதீஸ்களில் வருகிறது.

விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும், மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். “ஜிப்ரயீலே! இவர்கள் யார்?’’ என்று நான் கேட்டேன். “இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: அபூதாவூத் 4255

உலகம் இனிமேல் தான் அழிக்கப்படும்.  அதன் பின்னர் அனைவரும் எழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். அதன் பிறகே நரகவாசிகள் நரகிற்குச் சென்று தண்டனையை அனுபவிப்பார்கள். அதற்குள் இந்தத் தண்டனைகளைப் பெறுபவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிப் பார்த்தார்கள்? நரகத்தின் தண்டனை எவ்வாறு இருக்கும் என்று எடுத்துக் காட்டுவதுதான் இதன் கருத்தாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4736

மூஸா நபி அவர்களை பைத்துல் முகத்தஸிலும், விண்ணுலகிலும் பார்த்தது போல் மண்ணறையில் தொழுது கொண்டு இருந்ததையும் பார்த்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் மூஸா நபியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துள்ளதால் இவ்வாறு எடுத்துக் காட்டப்பட்டது என்றே புரிந்து கொள்ள வேண்டும்.