"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ஈஸா நபியின் வருகை ஓர் அதிசயம்

'அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்'. (அல்குர்ஆன் 73:4-5)
    நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களை நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.
. ஈஸா (அலை) அவர்கள் இவ்வுலகுக்கு வருகை தருவதும் அந்தப் பத்து அடையாளங்களில் ஒன்றாகும்.
    இந்த அடையாளத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர் அடிப்படை விஷயத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் ஈஸா (அலை) அவர்களின் வருகை விஷயத்தில் சிலர் சந்தேகம் கொள்கின்றனர். தர்க்கரீதியான சில விவாதங்களை முன் வைத்து ஈஸா (அலை) அவர்களின் வருகையை மறுக்கின்றனர்.
    அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு செய்து விட்டால் - அந்த முடிவு நமக்கு விருப்பமில்லாததாக இருந்தாலும் நமது அறிவு அதை ஏற்கத் தயக்கம் காட்டினாலும் இதை நம்ப வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். ஏனெனில் நமக்கு விருப்பமில்லாதவற்றை முடிவு செய்யும் அதிகாரம் இறைவனுக்கு உண்டு. நமது அறிவு ஏற்க மறுப்பதையும் செய்து காட்டும் வல்லமையும் அவனுக்கு இருக்கின்றது.
    இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவர் எப்படி உயிருடனிருக்க முடியும்? அவர் எதை உண்கிறார்? அவர் எப்படி மலஜலம் கழிக்கிறார்? என்பது போன்ற கேள்விகளை இத்தகையோர் கேட்கின்றனர்.சாதாரண நிலையில் இவ்வாறு நடப்பதில்லை என்பது உண்மைதான். அல்லாஹ் நாடினால் இவ்வாறு நடத்திக் காட்டுவது சந்தேகப்படக் கூடியதன்று. அதிசயமான ஒரு விஷயத்தை சாதாரண நிலையில் வைத்துப் பார்க்கக் கூடாது என்பதை உணர்ந்தால் இவ்வாறு கேட்க மாட்டார்கள்.
    ஈஸா (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக இருந்த போது பேசியதாக அல்லாஹ் கூறுகிறான். (3:45, 5:110) இதுவும் சாதாரணமாக நடப்பது கிடையாது. ஆயினும் இறைவன் அவ்வாறு கூறுவதால் அதில் குதர்க்கம் செய்வதில் நியாயம் இல்லை.
இறந்தவர்களை உயர்ப்பித்தல் சாதாரணமாக நடக்கக் கூடியதன்று. ஆயினும் ஈஸா (அலை) அவ்வாறு செய்ததாக அல்லாஹ் கூறுவதால் அதை நம்பித்தான் ஆக வேண்டும். இறைவனின் வல்லமைக்கு முன்னே இது பெரிய விஷயமன்று. களிமண்ணால் பறவை செய்து அதை நிஜப்பறவையாக மாற்றுவதும் நடைமுறையில் சாத்தியமற்றவைதான் அதை அல்லாஹ் கூறுவதால் (3:49) அதையும் நம்பித்தான் ஆக வேண்டும். இது போல் பலநூறு விஷயங்களில் குதர்க்கமான கேள்விகள் கேட்க வழியுண்டு. ஆயினும் அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து அல்லாஹ்வின் வேதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை நம்பத் தயங்க மாட்டார்கள். நம்பத் தயங்கினால் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் நம்பியவர்களாக முடியாது.
    இறைவல்லமையை மறந்து அதைக் கேலி செய்யும் போக்குடையவர்களின் குதர்க்க வாதங்களுக்கு நாம் இதையே பதிலாக்குவோம்.
    இதைத் தவிர குர்ஆனின் சில வசனங்களைக் கொண்டு ஈஸா (அலை) அவர்களின் வருகையை மறுப்பவர்களும் உள்ளனர். அவற்றுக்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
    நான் உயிரோடிருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் அல்லாஹ் எனக்கு போதித்துள்ளான். (19:31) என்று ஈஸா (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.
    ஈஸா (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடனிருந்தால் அவர்கள் இன்று வரை தொழ வேண்டும், ஸகாத் கொடுக்க வேண்டும். மக்களுடன் தொடர்பில்லாத அவர்கள் யாருக்கு எப்படி ஸகாத் கொடுப்பார்கள்? அவர்கள் ஸகாத் கொடுக்க வில்லை என்பது உறுதியானால் அவர்கள் உயிருடன் இப்போது இல்லை என்பதும் உறுதியாகின்றது என்பது காதியானி காபிர்களின்   வாதம்.
    மேலோட்டமாகக் கேட்கும் போது இது நியாயமான வாதமாகவே படுகின்றது. சிந்திக்கும் போது இது அர்த்தமற்ற வாதம் என்பது புலனாகும்.
    அல்லாஹ்வின் எந்தக் கட்டளையானாலும் அதற்குரிய சூழ்நிலை இருக்கும் போது தான் நிறைவேற்ற வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் அல்லாஹ் அதைக் கூறாவிட்டாலும் கூட அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
    மூமின்களே! உங்கள் குரலை நபியின் குரலைவிட உயர்த்தாதீர்கள் (49:2) என்று அல்லாஹ் கூறுகிறான். மூமின்களே என்று அழைத்து இறைவன் கூறுவதால் இதை நாம் செயல்படுத்த வேண்டும். இதை எப்படி செயல்படுத்த இயலும்? நபியின் குரலைக் கேட்கும் காலத்தில் உள்ளவர்கள் மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும். மற்றவர்களுக்கு இது இயலாது. இதற்கான சூழ்நிலை இல்லை என்பதால் இதைச் செயல்படுத்தும் கடமை நமக்கு இல்லை என்று புரிந்து கொள்கிறோம். இங்கே வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதில்லை. அல்லாஹ் 'அதற்கான சூழ்நிலை இருக்கும் போது' என்று கூறாவிட்டாலும் அதுதான் பொருள் என விளங்குகிறோம்.
    ஈஸா (அலை) அவர்கள் இப்பூமியில் வாழக்கூடிய காலத்தில் பொருள் வசதி பெற்றவராக இல்லாமலிருந்தால் அப்போதும் அவர்களால் ஸகாத் கொடுக்க முடியாது. அதனால் அவர்கள் இப்பூமியில் வாழ்ந்ததையே மறுத்து விடமுடியுமா? உயிருடன் உள்ளவரை ஸகாத் கொடுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான் என்றால் அதற்குரிய வசதி வாய்ப்பு இருந்தால் என்றே புரிந்து கொள்ள வேண்டும். எனவே மேற்கண்ட வசனத்தை வைத்து ஈஸா (அலை) மரணித்து விட்டார்கள் என்று முடிவு செய்ய முடியாது.
    ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும் என்று அல்லாஹ் கூறுகிறான். (3:185, 21:35, 29:57) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும் என்பதற்கு முரணாக ஈஸா (அலை) உயிருடன் உள்ளனர் என்பது அமைந்துள்ளது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
    ஈஸா (அலை) அவர்கள் ஒருபோதும் மரணிக்கவே மாட்டார்கள் என்று கூறினால் இவர்கள் கூறக்கூடிய முரண்பாடு ஏற்படும். ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் உள்ளனர் என்று கூறக்கூடியவர்கள் ஈஸா (அலை) மரணிக்க மாட்டார்கள் என்று கூறுவதில்லை. அவர்கள் இவ்வுலகுக்கு வந்து வாழ்ந்து மரணத்தைத் தழுவுவார்கள் என்றே நம்புகின்றனர். மரணம் தாமதமாக வருகின்றது என்று தான் நம்புகின்றனரே தவிர மரணமே அவருக்கு வராது என நம்புவதில்லை. எனவே அந்த வசனத்தினடிப்படையில் ஈஸா (அலை) மரணித்து விட்டனர் என வாதிக்க முடியாது.
    'முஹம்மது அல்லாஹ்வின் தூதரைத் தவிர வேறில்லை, அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்' என்று அல்லாஹ் கூறுகிறான். (3:144)

ஈஸா (அலை) அவர்கள் உட்பட எல்லாத் தூதர்களும் சென்று விட்டனர் என்பதையே இது காட்டுகிறது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
   
மேலும் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த போது சில நபித்தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள். உடனே அந்த நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டதாக ஏற்றுக் கொண்டனர் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.
    எல்லா நபிமார்களும் மரணித்து விட்டதாக இந்த வசனத்தை நபித்தோழர்கள் புரிந்து கொண்டிருந்தால் தான் நபியவர்களின் மரணத்தை நம்பியிருக்க இயலும். ஈஸா (அலை) மட்டும் மரணிக்கவில்லை என்று அம்மக்கள் நம்பியிருந்தால் இந்த வசனம் அவர்களின் தவறான நம்பிக்கையைப் போக்கியிருக்க முடியாது. ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பினால் அதே போல நபி (ஸல்) அவர்களும் உயிருடன் இருக்க முடியும் என்று நம்புவதற்கு தடை ஏதுமில்லை. எனவே இந்த வசனமும், இந்த நிகழ்ச்சியும் ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
    ஈஸா (அலை) அவர்களின் வருகை பற்றிய ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் இவர்களின் வாதம் வலுவானதுதான். ஆனால் ஈஸா (அலை) அவர்களின் வருகை பற்றிய பலமான ஆதாரங்கள் இருக்கின்றன. (அதைப் பின்னர் காணவுள்ளோம்)
    அவர்களின் வருகை பற்றி ஏனைய ஆதாரங்கள் உள்ளதால் மேற்கண்ட வசனங்களிலிருந்து ஈஸா (அலை) மட்டும் விதிவிலக்குப் பெற்றுள்ளனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில், அவர்கள் வருவார்கள் என்று கூறக்கூடிய ஆதாரங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.
    ஈஸா (அலை) மரணிக்கவில்லை என நபித்தோழர்கள் நம்பியிருந்தால் நபி (ஸல்) அவர்களின் மரணத்தையும் அவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள் என்ற வாதமும் ஏற்கக் கூடியதன்று. ஈஸா (அலை) அவர்களின் வருகையை நம்பக் கூடியவர்கள் அவர்கள் உயிருடனும் உடலுடனும் உயர்த்தப்பட்டார்கள் என்றே நம்புகின்றனர். உடல் இங்கே கிடக்க உயிர் மட்டும் உயர்த்தப்பட்டது என நம்புவதில்லை. நபித்தோழர்களும் இவ்வாறு நம்பியிருந்தால் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மரணத்தை நம்புவதற்கு தடை ஏதுமில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் உடல் கண் முன்னால் இருந்தது. அந்த உடலில் எந்த இயக்கமும் இல்லாமலிருந்ததும் அவர்களுக்குத் தெரிந்தது. ஈஸா (அலை) அவர்கள் உடலுடன் காணாமல் போனது போல் நபி (ஸல்) அவர்களும் உடலுடன் காணாமல் போயிருந்தால் ஈஸா (அலை) அவர்களைப் போலவே நபி (ஸல்) அவர்களும் உயிருடன் உள்ளதாக நம்பலாம். இரண்டுக்குமுள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரியும் போது ஈஸா நபியைப் போல் நபியவர்களையும் அவர்கள் கருத வேண்டியதில்லை.
    ஈஸா நபி இன்றளவும் உயிருடன் இருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இல்லை. எனவே எங்கள் ஈஸா நபியே உங்கள் நபியைவிடச் சிறந்தவர் என்று கிறித்தவர்கள் வாதம் செய்வதற்கு இந்த நம்பிக்கை உதவி செய்கிறது. எனவே கிறித்தவர்களின் வாயை அடைக்க ஈஸா நபியின் மரணத்தை நம்பியே ஆக வேண்டும் என்பதும் அவர்களின் வாதம்.
    இது முட்டாள்தனமான வாதமாகும். ஒரு நபிக்குக் கொடுக்காத சில சிறப்பை வேறொரு நபிக்கு அல்லாஹ் கொடுக்கலாம். கொடுத்திருக்கிறான். ஓரிரு சிறப்பு உள்ளதால் எல்லா வகையிலும் ஒருவர் சிறந்தவராக முடியாது.
ஈஸா நபி தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள். நபி (ஸல்) அவர்களோ தந்தையின் விந்துத்துளி மூலம் பிறந்தார்கள். அதனால் ஈஸா நபியே சிறந்தவர் என்று கூட கிறித்தவர்கள் வாதிடலாம். இதனால் ஈஸா நபி தந்தைக்குத் தான் பிறந்தார் என்று கூற வேண்டுமா?
    இவர்கள் கூறியது போல் கிறித்தவர்கள் வாதம் செய்தால் அந்த வாதத்தை அறிவுப்பூர்வமாக சந்திக்க இயலும்.
    எவ்வளவு காலம் ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் சிறப்பு ஏதுமில்லை. என்ன செய்திருக்கிறார் என்பதிலேயே சிறப்பு உள்ளது. இது பகுத்தறிவுள்ள அனைவரும் ஏற்கக்கூடிய வாதம் தான். இதை விளக்கமாக எடுத்துச் சொல்லி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும்.
    கர்த்தர் ஏசுவுக்கு அருளிய வேதம் இன்று வரை பாதுகாக்கப்பட வில்லை. தீமைக்கு எதிராக ஏசு போர் புரிந்ததாக வீர வரலாறு இல்லை. வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் சரியான தீர்வை ஏசு கூறியதாக பைபிள் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கோ இந்தச் சிறப்புக்கள் உள்ளன. இப்படி ஆயிரமாயிரம் சிறப்புக்களைக் கூறி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும். அவர்களின் தவறான வாதத்திற்காக சரியான உண்மையை மறுக்கத் தேவையில்லை.
    ஆக இது போன்ற வாதங்களை அலட்சியம் செய்து விட்டு ஈஸா (அலை)அவர்களின் வருகை சம்பந்தமான ஆதாரங்களைக் காண்போம்.
    இன்னும் மரியமின் குமாரரும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் சபிக்கப்பட்டார்கள்.
அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை, அவரை சிலுவையில் அறையவுமில்லை எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்குக் குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இது பற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர (சரியான) ஞானம் அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:157,158)
    இவ்விரு வசனங்களையும் அல்லாஹ்வின் வல்லமையையும் உணர்ந்து, விதண்டாவாதமும் வார்த்தை ஜாலமும் செய்யாமல் சிந்தித்தால் இது கூறக்கூடிய உண்மையை யாரும் தெளிவாக அறியலாம்.
    'அவர்கள் அவரைக் கொல்லவில்லை' என்பது அவர் மரணிக்கவில்லை என்பதை அறிவிக்காது. யூதர்கள் கொல்லவில்லை என்பதைத் தான் குறிக்கும். வேறுவழியில் அவர் மரணித்திருக்கலாம் என்பதை இவ்வசனம் மறுக்காது என்று இவர்கள் சமாதானம் கூறுகின்றனர். அத்துடன் அல்லாஹ் நிறுத்திக் கொண்டால் இவர்களது சமாதானம் பொருத்தமானதே. 'மாறாக அவரைத் தன்னளவில் அல்லாஹ் உயர்த்திக் கொண்டான்' என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்களும் கொல்லவுமில்லை. அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதையும் சேர்த்து சிந்தித்தால் அவர் மரணிக்கவில்லை என்பது தெளிவாகும்.
    அவரை உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டான் என்று அவர்கள் விளக்கம் கூறி சமாளிக்கிறன்றனர்.
    அவருடைய உடல் சம்பந்தமாகப் பேசி வரும் போது திடீரென்று அந்தஸ்து என்று தாவுவது ஏற்புடையதாக இல்லை. அந்தஸ்து உயர்வு பற்றி இங்கே கூற வேண்டியதில்லை.
    அவரைக் கொல்லவில்லை. (கொல்லாத வகையில்) உயர்த்திக் கொண்டான் என்பது பொருத்தமாக அமைகின்றது.
    ஒரு வாதத்துக்காக அந்தஸ்து உயர்வு என்றே வைத்துக் கொள்வோம் வேறு பல சான்றுகள் இந்த வாதத்தை உடைத்து எரிகின்றன.
    நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61)
    ஈஸா (அலை) அவர்கள் இறுதிக்காலத்தின் அத்தாட்சியாவார் என்ற வாசகம் பலமுறை சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. இது ஈஸா (அலை) அவர்களுக்கு முந்தைய வேதங்களில் சொல்லப்பட்டிருந்தால் எதையாவது கூறி சமாளிக்கலாம். இது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரை நோக்கி அல்லாஹ்வால் கூறப்படுகின்றது. கியாமத் நாளின் அடையாளம் என்றால் இனி மேல் அந்த அடையாளம் எற்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது. எப்போதோ இறந்து விட்ட ஒருவரைப் பற்றி இவ்வாறு கூற முடியாது.
    கியாமத் நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார் என்ற குர்ஆன் வசனத்தை மனதிலிருத்திக் கொண்டு அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதைச் சிந்தித்தால் அந்தஸ்து உயர்வு என்ற அர்த்தத்துக்கு வருவது பொருத்தமாக இராது. அந்தஸ்து உயர்வு என்று சாதித்தால் கூட 'மறுமை நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார்' என்பது மிகத் தெளிவாக இந்த உண்மையைக் கூறி விடுகின்றது. ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று கூறுவோர் இந்த வசனத்துக்கு ஏற்கத்தக்க எந்த விளக்கமும் கூறமுடியவில்லை. இப்படி ஒரு வசனம் இருப்பதைக் கண்டு கொண்டதாகவே அவர்கள் காட்டிக் கொள்வதில்லை.
    கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்கியுள்ளனர்.
    'எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
    நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். சிலுவை, பன்றி, ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாக கதையளந்தனர். 'யாரும் வாங்காத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்பதற்கு எந்த சமாதானமும் அவர்களிடம் இல்லை. இந்தப் பொய்யர்களின் காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை.
    முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் 'போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்' என்று நபி (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது. இந்தப் பொய்யர்கள் வந்த போது இந்தத் தீய பண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை.
    'அவர் இறங்கக் கூடிய காலத்தில் இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்' என்று அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் கூறுகிறது. அந்தப் பொய்யர்களின் காலத்தில் அப்படி நடக்கவில்லை.
    தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள்.
    தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மனாரா(கோபுரம்)வுக்கருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது நன்மைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் சொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வையில் எட்டும் தூரம் வரை செல்லும். மூச்சுக் காற்று படுகின்ற எந்தக் காபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். 'லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம் ஆன் (ரலி) நூல்: திர்மிதி)
    இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை.
    (ஈஸா (அலை) அவர்கள் தஜ்ஜாலைக் கொன்ற பின் ஏற்படக்கூடிய நிகழ்ச்சிகளை யஃஜுஜ் மஃஜுஜ் பற்றிக் கூறும் போது குறிப்பிட்டுள்ளோம். அதையும் பார்த்துக் கொள்க)
    ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுகமுடிவு நாள் வந்து விடும் எனவும் நபி (ஸல்) கூறியுள்ளனர்.
யுகமுடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்களில் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக் கண்டு அதன் நீரைப் பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும் போது (தண்ணீர் இராது என்பதால்) அந்த இடத்தில் ஒரு சமயத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள். பின்னர் பைத்துல் முகத்தஸில் உள்ள மலையை அடைவார்கள். 'பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள்! வானில் உள்ளவர்களைக் கொல்வோம் எனக் கூறுவார்கள். தங்கள் அம்புகளை வானை நோக்கி எய்துவார்கள். அவர்களின் அம்புகளில் இரத்தம் பூசப்பட்டதாக இறைவன் திருப்பியனுப்புவான். ஈஸா நபியையும் அவரது தோழர்களையும் முற்றுகையிடுவார்கள். ஒரு மாட்டின் தலை இன்றைக்கு நூறு தங்கக் காசுகள் உங்களுக்கு எவ்வளவு மதிப்பு மிக்கதோ அதைவிட மதிப்பு நிறைந்ததாக இருக்கும். பின்னர் ஈஸா (அலை) அவர்களும் அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். அல்லாஹ் அவர்களிடம் புழுக்களை அனுப்புவான். அந்தப் பழுக்களின் தாக்குதலால் அனைவரும் ஒரேயடியாக செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா (அலை) அவர்களும் அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்குவார்கள். அவர்களின் (பிணங்களின்) நாற்றமும் நெருக்கடியும் அப்பகுதியின் ஒரு சாண் இடத்தைக்கூட விடாது பிடித்துக் கொள்ளும். பின்னர் ஈஸா (அலை) அவர்களும் அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். உடனே அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துக்கள் போன்ற வடிவில் சில பறவைகளை அனுப்புவான். அப்பிணங்களை அவை சுமந்து சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் போட்டு விடும் என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூல், முஸ்லிம்)
    (யஃஜுஜ், மஃஜுஜ் மடிந்தபின்) அவர்களின் அம்புகளையும், விற்களையும், அம்பராத் துணிகளையும் ஏழு ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் விறகாகப் பயன்படுத்துவார்கள். பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான். அனைத்து இல்லங்களையும் அம்மழை அடையும். பூமியை கண்ணாடி போல கழுவிவிடும். பின்னர் பூமியை நோக்கி 'உன் கனிகளை முளைக்கச் செய்! உன்னிடமிருந்த பரக்கத்தையும் திரும்ப வழங்கு' எனக் கூறப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு கூட்டத்தினர் உண்பார்கள். அதன் தோலில் நிழல் பெறுவார்கள். (அந்த அளவு பெரியதாக இருக்கும்). பாலிலும் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் ஒரு முறை கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்தினருக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் ஒரு முறை கறக்கும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு ஆட்டில் ஒரு முறை கறக்கும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக இருக்கும். மக்கள் இவ்வாறு இருக்கும் நிலையில் அல்லாஹ் சுகமான காற்றை அனுப்புவான். அக்காற்று அக்குள் வரை செல்லும். அனைத்து முஃமின்கள், அனைத்து முஸ்லிம்களின் உயிர்களும் கைப்பற்றப்படும். கழுதைகள் வெருண்டோடுவது போல் வெருண்டோடும் கெட்ட மனிதர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் மட்டும் இருக்கும் போது தான் கியாமத் நாள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூல்: திர்மிதி)
    ஈஸா (அலை) அவர்களின் வருகைக்குப் பின்னரே அக்கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் அழிந்த ஏழு ஆண்டுகளில் உலகமும் அழியும் என்ற விபரங்களையும் யஃஜுஜ், மஃஜுஜ் சம்பந்தமான போதுமான விபரங்களையும் இந்த ஹதீஸ்களில் அறியலாம்.

அங்கு என்ன நடைபெறுகிறது?

சமாதி வழிப்பாட்டில் ஈடுபடக்கூடியவர்கள், அவர்களுடன் ஆடு, மாடு, கோழி, உப்பு, சீனி, தேயிலை என பல வகையான உணவுகள், பணம் போன்றவைகளை கொண்டு போய் அவருடைய நெருக்கத்தை பெறவேண்டும் என்பதற்காக அங்கு அடங்கப்பட்டிருப்பவருக்கு பூஜிக்கின்றனர். ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அடங்கப்பட்டிருப்பவர்களுக்காக அறுத்து அவர்களின் நெருக்கத்தைத் தேட முயல்கின்றனர். அக் கப்றுகளை வலம் வருகின்றனர், அந்த மண்ணில் விழுந்து புரளுகின்றனர், அதை தேய்த்துக் கொள்கின்றனர், அதை தங்களோடு எடுத்து வருகின்றனர், தங்களது தேவைகளை நிறைவேற்றித் தறுமாரும், துன்பங்களை நீக்குமாறும் வேண்டுகின்றனர்.

இன்னும் இப்படியான வழி தவறியவர்கள் 'மௌத்தாக்கள்' மீதும் அடக்கப்பட்டவர்கள் மீதும் சத்தியம் செய்வதையும் காணலாம். ஏதாவது ஒரு விஷயத்துக்காக சத்தியம் செய்யும் போது அல்லாஹ்வின பெயரில் சத்தியம் செய்யும் போது அதை ஏற்றுக்கொள்ளாத, உண்மைபடுத்தாத ஒரு நிலையும், அவர்களின் வலியின் பெயரில் அவ்லியாக்களின் பெயரில் செய்யும் போது அதை ஏற்றுக்கொள்வதையும் உண்மைப்படுத்துவதையும் காணலாம்.

சில இடங்களில் இவ்விஷயம் எல்லை மீறிச் சென்று அக்கப்ருகளில், தர்ஹாக்களை ஹஜ்ஜுச் செய்தல் எனும் ஒரு வணக்கத்தையும் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றனர், அதற்கென சில குறிப்பிட்ட வணக்க வழிபாடுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இன்னும் அதற்கென தனி நூல்களையும் இவ்வரம்பு மீறியவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வழிகேட்டின் புத்தகத்திற்கு 'தர்ஹாக்களை ஹஜ் செய்யும் வழி முறைகள்' என பெயரும் இட்டுள்ளனர். அக்கப்ருகளை புனித ஆலயமான கஃபாவுக்கு ஒப்பாக்கியுமுள்ளனர் (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஷிர்கிலும், நூதன வழிபாடுகளிலும் வரம்பு மீறிய இவர்கள் தர்ஹாக்களைத் தரிசிப்பதற்கு சில வழி முறைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள், தர்ஹாக்களை தரிசிக்கும் போது அங்கு அடங்கப்பட்டிருப்பவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாதணிகளைக் கழட்ட வேண்டும், வாயிற்காவலாளியின் அனுமதியைப் பெற்றே குப்பாவுக்குள் நுழைய வேண்டும்.

இவ்வாறான தர்ஹாகளில் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளார்கள், தர்ஹாவிற்கு வருகைதரும் முஸ்லிம்களை, மக்காவிலுள்ள 'புனித கஃபாவை வலம் வருவது போல' இவர்கள் இக் கப்ருகளை வலம் வருவதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்வார்கள். தரிசிக்கக்கூடிய பக்தர்கள் அந்த தர்ஹாவில் இருந்து பரக்கத் பெறுவதற்கு, பல வழிகளைக் கடைப்பிடிப்பர்கள். அவர்களிற் சிலர் கப்ரின் மண்ணை எடுத்து வைத்துக் கொண்டு அதன் மூலம் பரக்கத் தேடுவர். வேறு சிலர் கப்ரில் உள்ள 'வலீ'ய்யின் பெயர் பொறிக்கப்பட்ட உலோகத் தகட்டை முத்தமிட்டு கைகளால் தடவி அதனைத் தனது உடையிலும் உடலிலும் பூசிக் கொள்வர். தர்ஹாவுக்குள் நுழைந்த ஒருவருக்கு அந்த கப்ரிடம் பிரார்த்திப்பது மனஒருமையோடு அதனிடம் உதவி தேடுவது, மேலும் இதைப்போன்று அங்கு அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செலுத்தப்படக்கூடிய ஆச்சரியமான பல்வேறு விதமான வினோத வழிபாடுளையும் காணமுடியும்.

இதைவிட ஒரு படி மேலாக பெண்கள் தங்கள் குழந்தைகளை தூக்கி குலுக்கியவர்களாக கப்ரிலே போட்டு உறுட்டி ஷைகிடம் - குழந்தையின் பரக்கத்துக்காக பிரார்த்திப்பதையும் காணலாம். இதே போல் கப்ருகளை முன்னோக்கி சுஜுதில் விழுபவர்கள் எத்தனை எத்தனையோ.. இவைகளுக்காக வைக்கப்படக்கூடிய நேர்ச்சைகள் கணக்கில் அடங்கா! இன்னும் எத்தனையோ பேர் தங்களது நோய்கள் குணமடைவதற்கும், தேவைகள் நிறைவேறுவதற்கும் பல மாதங்களாக, நாட்களாக அங்கு தவம் இருக்கக்கூடிய பரிதாப காட்சிகள் எத்தனை எத்தனையோ. சில தர்ஹாக்களோடு இணைத்து யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியாக அறைகளையும் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்.

அங்கு தரிசிக்க வருவோர் தங்களின் உள்ளச்சத்தையும், அமைதியான போக்கையும் ஒரு விதமான மாற்றத்தையும் அழுகையின் மூலம் வெளிப்படுத்துவர். இவர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு சமாதிகளை, கடவுளாக்கி விட்டனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவனுடன் ஒரு நபியையோ, மலக்கையோ இணைத்து வணங்குவதையே பொருந்திக் கொள்ளாத, அதை மாபெரும் குற்றமாக கருதக்கூடிய நாயன், வேறு யாரையாவது இணையாக்கி வணங்கினால் எப்படிப் பொருந்திக் கொள்வான்? என்பதனை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

------------------------------------------------------------------------------------------------------
குழம்பிவிட்ட உள்ளங்கள் எனும் பகுதியை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் 

நெகிழ்வூட்டும் ஓர் உண்மைச் சம்பவம்

பைஹகீ எனும் கிரந்தத்தில் ஹஸன் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸ்: அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் அழைப்புப் பணி செய்த போது நபியை விட்டு மக்களை தூரப்படுத்த வேண்டும் என காபிர்கள் பல சதிகளை மேற்கொண்டனர் 

அதாவது, அவர்கள் முஹம்மத்; ஒரு சூனியக்காரர், ஜோஷியக்காரர், பைத்தியக்காரர், என்றெல்லாம் மக்கள் மத்தியில் கூறித்திரிந்தார்கள். என்ற போதிலும் நபி (ஸல்) அவர்களை நபி என ஏற்றுக்கொண்டு பின்பற்றிய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை. உலகத்துடைய இன்பங்களைக் காட்டியாவது நபியை மயக்கவேண்டும், திசைதிருப்பவேண்டும் என ஆலோசனை செய்த காபிர்கள், அவர்களில்; பேச்சில் தலை சிறந்தவனான ஹுஸைன் இப்னுல் முன்திர் அல் குஸாஈ என்பவனை நபியிடம் அனுப்பி வைத்தனர். 

நபியிடம் வந்த அவன் முஹம்மதே! நீர் கூறி வரும் புதிய கொள்கையின் மூலம் நமது கூட்டமைப்பைப் பிரித்துவிட்டீர்! நமக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தி விட்டீர், இவ்வாறு செய்தீர் அவ்வாறு செய்தீர் என அடுக்கிக் கொண்டே சென்றான். பின்னர் கூறினான். நீர் சொத்து செல்வத்தை விரும்புவதாக இருந்தால் நாம் உமக்கு சொத்து செல்வத்தை சேகரித்துத் தருகிறோம் நம்மிடத்திலேயே மிகப்பெரிய செல்வந்தராக உம்மை ஆக்குகின்றோம். அல்லது அழகிய பெண்களை அனுபவிப்பது உமது விருப்பமாக இருந்தால், நாம் உமக்கு அழகிய பெண்களை மணமுடித்து தருகிறோம், நீர் பதவியை விரும்புவதாக இருந்தால், நாம் உமக்கு பதவியை தருகிறோம் எதை விரும்புகின்றீர்? உமது ஆசை என்ன? உடனே நிறைவேற்றுகின்றோம் என்று கூறினான்.

இந்த ஆசை வார்தைகளையெல்லாம் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவன் பேசி முடித்த பின், இம்ரானின் தந்தையே நீர் பேசி முடித்துவிட்டீரா? எனக் கேட்டார்கள் ஆம் என்று அவன் சொன்ன பொழுது நான் கேட்கக்கூடியவைகளுக்கு முதலில் பதில் அளிப்பீராக! என்று கூறினார்கள். அதற்கு அவன், கேளும் என்று சொன்னான். இம்ரானின் தந்தையே! நீர் எத்தனை கடவுள்களை வணங்குகிறீர்? என்றார்கள். அதற்கு அவன் நான் ஏழு கடவுள்களை வணங்குகிறேன், ஆறு பூமியிலும்! ஓன்று( அல்லாஹ்வாகிய) வானத்திலிருக்கும் கடவுளுமாகும் என்று பதிலளித்தான். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செல்வங்கள் அழிந்து விட்டால் எந்தக் கடவுளை அழைப்பீர்? என்றார்கள், அவன் வானத்தில் உள்ளவனை(அல்லாஹ்வை) அழைப்பேன் என்றான். மழை பொழிய வில்லையானால் எந்தக் கடவுளை அழைப்பீர்? என்று கேட்க அவன் வானத்தில் உள்ளவனையே அழைப்பேன் என்றான். குடும்பத்தினர் பசியால் பட்டினியால் வாடும் பொழுது எந்தக் கடவுளை அழைப்பீர்? என்று கேட்க அதற்கும் அவன் வானத்தில் உள்ளவனையே அழைப்பேன் என்று பதிலளித்தான். தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனிடம் நீ உன் தேவைகளைக் கூறிப் பிரார்த்திக்கும் போது உமக்கு அனைத்து கடவுள்களும் பதிலளிக்கின்றனரா? அல்லது ஒருவன்(அல்லாஹ்) மாத்திரம் பதிலளிக்கின்றானா? என்று வினவினார்கள். அதற்கு அவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரம் தான் பதிலளிக்கிறான் என சொன்னான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமக்கு ஒருவன் தான் பதிலளிக்கிறான், ஒருவன் தான் அருள் புரிகிறான் என்று தெரிந்து கொண்டே அவனுக்கு நன்றி செலுத்துவதில் ஏன் அவனல்லாத வேறு போலிக் கடவுள்களைக் கூட்டாக்குகிறீர்? அந்தக் கடவுளர்கள் உன் விடயத்தில் ஒரே கடவுளாகிய அல்லாஹ்வை மிகைத்துவிடும் சக்தியுள்ளவர்கள் என அச்சம் கொள்கிறீரா? என்று ஒரு போடு போட்டார்கள். அதற்கு ஹுஸைன்; அவர்கள் அதற்கு எப்படி சக்தி பெற முடியும் ஒரு போதும் சக்தி பெற முடியாது என்று கூறினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுஸைனே! பல தெய்வக் கொள்கையை விட்டு விடுவீராக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வீராக. அல்லாஹ்விடத்தில் உமக்குப் பயன் தரக்கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன் என்று கூறினார்கள்.

வெற்றிக் கப்பல்
எத்தனை மனிதர்கள் அழிந்தவர்களோடு சேர்ந்து அழிந்து மறுமை சம்பவிக்கும் வரை இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் இலக்காகி மரணித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு சாபம் உறுதியாகி விட்டது, காரணம் அவர்கள் தௌஹீத் எனும் ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதது தான்.

அல்லாஹ்தான்; ஏக இறைவன்,

ஒவ்வொரு அடியானும் அவனிடம் அன்றி வேறுயாரிடமும் தனது காரியங்களை பொறுப்பு சாட்டக் கூடாது.

அல்லாஹ்வைத்தவிர வேறு எவரிடமும் அவன் நம்பிக்கை வைத்தவனாக இருக்கக் கூடாது.

அவனை விடுத்து வேறு யாருக்கும் பயப்படக் கூடாது

அவனுடைய பெயரைத்தவிர வேறு எவர் பெயரிலும் சத்தியம் செய்யக் கூடாது.

அவனை விடுத்து வேறு எவர் பெயரிலும் நேர்ச்சை செய்யக் கூடாது.

அவனிடத்தில் மாத்திரமே பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வாறு நடந்தால் மாத்திரமே வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று அவன் கொடுத்த உறுதி மொழியை சரியாக நிறைவேற்றியவனாகக் கருதப்படுவான். இவ்உறுதி மொழியை சரியாகச் செய்து அதற்குரிய கடமைகளை முழுமையாக நிறைவேற்றும் போதுதான் அல்லாஹ் அவனுக்கு நரகத்தை ஹராமாக்கி விடுகிறான்.

ஒருமுறை முஆத் (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்து சென்ற வேளையில் அன்னவர்கள் திடீரென பின்னால் திரும்பி 
முஆதே! அடியார்கள் அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகள்; என்னவென்று அறிவீரா? அல்லாஹ் தனது அடியார்கள் மீது செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று அறிவீரா? எனக் கேட்க அல்லாஹ்வும் அவனதும் ரஸுலும் மிக அறிந்தவர்கள் என முஆத் (ரலி) சொல்கிறார். 'அடியார்கள் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டியது அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காமல் அவனை வணங்குவதாகும், அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டியது அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காமல் இருந்தவர்களை தண்டிக்காமல் இருப்பதாகும்' என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)

ஒரு முறை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபிகளார் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக கருதப்படுவது எது? எனக் கேட்டார்கள் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வே உன்னைப் படைத்திருக்கும் போது அவனை விட்டுவிட்டு வேறொரு கடவுளை அவனுக்கு இணையாக்குவதாகும் என்று கூறினார்கள்.

உண்மைதான். ஏகத்துவத்தை நிலை நிறுத்துவதற்காகவும், எடுத்துச் சொல்வதற்காகவும் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்படுகின்றனர்.

அல்லாஹ் சொல்கிறான், 'ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம் (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் விலகிக்கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்)' (அந்நஹ்ல் 16: 36)

தாகூத் என்பது: அல்லாஹ் அல்லாது வணங்கப்படக்கூடிய சிலைகள், கப்றுகள், கற்கள், மரங்கள் அனைத்தையும் குறிக்கும். ஏகத்துவம் என்பது தூதர்களின் அழைப்புப் பணியின் மணி மகுடமாகும். 

'(நபியே) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களிடம் நாம்; அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை ஆக்கியிருந்தோமா? என்று நீர் கேட்பீராக!'என்று அல்லாஹ் கூறுகின்றான்.(ஸுஹ்ருப் 43: 45).

அல்லாஹ்வின் ஏகத்துவத்தை பறை சாற்றுவதற்காக அன்றி எந்த ஒரு படைப்பினமும் படைக்கப்படவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: 'நான் மனித ஜின் இனங்களை என்னை வணங்குவதற்காகவே அன்றிப் படைக்கவில்லை'. (அத்தாரியாத் 51: 56).

எந்த நற்கிரிகைகளும் தவ்ஹீத் கொள்கையில் உறுதியான நம்பிக்கை இல்லாத பட்சத்தில் அவை மறுக்கப்பட்டு விடும். அல்லாஹ் தனது திருமறையில்: 'அவர்கள் (அல்லாஹ்விற்கு) இணை வைத்திருந்தால் அவர்களது நல்லறங்கள் அழிந்துவிடும்' (அல்அன்ஆம் 6:88).

எவன் ஓரிறைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கின்றானோ அவன் வெற்றி பெற்றுவிட்டான். திர்மிதியில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஸுல் குத்ஸியில் வருவதாவது, 'ஆதமுடைய மகனே எனக்கு எந்த ஒரு இணையையும் கற்பிக்காத நிலையில் பூமியைப் போன்றளவுக்கு அதிக பாவங்களுடன் நீ என்னைச் சந்தித்தாலும் உனது பாவங்கள் அனைத்தையும் நான் மன்னித் விடுவேன்'. 

ஏகத்துவத்தின் மகத்துவம் தெளிவானதாகும் அதனால்தான் நபிமார்கள் கூட அது இழக்கப்பட்டுவிடுமோ என பயந்தார்கள். ஏகத்துவவாதிகளின் தந்தையும், சிலைகளை உடைத்தவரும், புனித இறை ஆலயத்தை நிர்மானித்தவருமான, அல்லாஹ்வின் நேசத்திற்குரிய இப்ராஹீம் (அலை) அவர்களே அரசர்களுக்கெல்லாம் அரசனான அல்லாஹ்விடம் 
'என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதை விட்டு தூரப்படுத்திவிடுவாயாக' எனப் பிரார்த்தித்தார்கள். (இப்றாஹீம் 14:35). 

இப்றாஹீம் நபியே, இந்தச் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடினாரென்றால் அவருக்கு பின்னுள்ளவர்கள் எப்படி இதை விட்டு அச்சமற்றிருக்க முடியும்?

இன்ஷா அல்லாஹ் தொடரும்...