பைஹகீ
எனும் கிரந்தத்தில் ஹஸன் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸ்:
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் அழைப்புப் பணி செய்த போது
நபியை விட்டு மக்களை தூரப்படுத்த வேண்டும் என காபிர்கள் பல சதிகளை
மேற்கொண்டனர்
அதாவது,
அவர்கள் முஹம்மத்; ஒரு சூனியக்காரர், ஜோஷியக்காரர், பைத்தியக்காரர்,
என்றெல்லாம் மக்கள் மத்தியில் கூறித்திரிந்தார்கள். என்ற போதிலும் நபி
(ஸல்) அவர்களை நபி என ஏற்றுக்கொண்டு பின்பற்றிய மக்களின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை. உலகத்துடைய இன்பங்களைக்
காட்டியாவது நபியை மயக்கவேண்டும், திசைதிருப்பவேண்டும் என ஆலோசனை செய்த
காபிர்கள், அவர்களில்; பேச்சில் தலை சிறந்தவனான ஹுஸைன் இப்னுல் முன்திர்
அல் குஸாஈ என்பவனை நபியிடம் அனுப்பி வைத்தனர்.
நபியிடம்
வந்த அவன் முஹம்மதே! நீர் கூறி வரும் புதிய கொள்கையின் மூலம் நமது
கூட்டமைப்பைப் பிரித்துவிட்டீர்! நமக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தி
விட்டீர், இவ்வாறு செய்தீர் அவ்வாறு செய்தீர் என அடுக்கிக் கொண்டே
சென்றான். பின்னர் கூறினான். நீர் சொத்து செல்வத்தை விரும்புவதாக இருந்தால்
நாம் உமக்கு சொத்து செல்வத்தை சேகரித்துத் தருகிறோம் நம்மிடத்திலேயே
மிகப்பெரிய செல்வந்தராக உம்மை ஆக்குகின்றோம். அல்லது அழகிய பெண்களை
அனுபவிப்பது உமது விருப்பமாக இருந்தால், நாம் உமக்கு அழகிய பெண்களை
மணமுடித்து தருகிறோம், நீர் பதவியை விரும்புவதாக இருந்தால், நாம் உமக்கு
பதவியை தருகிறோம் எதை விரும்புகின்றீர்? உமது ஆசை என்ன? உடனே
நிறைவேற்றுகின்றோம் என்று கூறினான்.
இந்த
ஆசை வார்தைகளையெல்லாம் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள், அவன் பேசி முடித்த பின், இம்ரானின் தந்தையே நீர் பேசி
முடித்துவிட்டீரா? எனக் கேட்டார்கள் ஆம் என்று அவன் சொன்ன பொழுது நான்
கேட்கக்கூடியவைகளுக்கு முதலில் பதில் அளிப்பீராக! என்று கூறினார்கள்.
அதற்கு அவன், கேளும் என்று சொன்னான். இம்ரானின் தந்தையே! நீர் எத்தனை
கடவுள்களை வணங்குகிறீர்? என்றார்கள். அதற்கு அவன் நான் ஏழு கடவுள்களை
வணங்குகிறேன், ஆறு பூமியிலும்! ஓன்று( அல்லாஹ்வாகிய) வானத்திலிருக்கும்
கடவுளுமாகும் என்று பதிலளித்தான். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
செல்வங்கள் அழிந்து விட்டால் எந்தக் கடவுளை அழைப்பீர்? என்றார்கள், அவன்
வானத்தில் உள்ளவனை(அல்லாஹ்வை) அழைப்பேன் என்றான். மழை பொழிய வில்லையானால்
எந்தக் கடவுளை அழைப்பீர்? என்று கேட்க அவன் வானத்தில் உள்ளவனையே அழைப்பேன்
என்றான். குடும்பத்தினர் பசியால் பட்டினியால் வாடும் பொழுது எந்தக் கடவுளை
அழைப்பீர்? என்று கேட்க அதற்கும் அவன் வானத்தில் உள்ளவனையே அழைப்பேன் என்று
பதிலளித்தான். தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனிடம் நீ உன்
தேவைகளைக் கூறிப் பிரார்த்திக்கும் போது உமக்கு அனைத்து கடவுள்களும்
பதிலளிக்கின்றனரா? அல்லது ஒருவன்(அல்லாஹ்) மாத்திரம் பதிலளிக்கின்றானா?
என்று வினவினார்கள். அதற்கு அவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரம் தான்
பதிலளிக்கிறான் என சொன்னான்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள், உமக்கு ஒருவன் தான் பதிலளிக்கிறான், ஒருவன் தான்
அருள் புரிகிறான் என்று தெரிந்து கொண்டே அவனுக்கு நன்றி செலுத்துவதில் ஏன்
அவனல்லாத வேறு போலிக் கடவுள்களைக் கூட்டாக்குகிறீர்? அந்தக் கடவுளர்கள் உன்
விடயத்தில் ஒரே கடவுளாகிய அல்லாஹ்வை மிகைத்துவிடும் சக்தியுள்ளவர்கள் என
அச்சம் கொள்கிறீரா? என்று ஒரு போடு போட்டார்கள். அதற்கு ஹுஸைன்; அவர்கள்
அதற்கு எப்படி சக்தி பெற முடியும் ஒரு போதும் சக்தி பெற முடியாது என்று
கூறினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுஸைனே! பல தெய்வக் கொள்கையை விட்டு
விடுவீராக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வீராக. அல்லாஹ்விடத்தில் உமக்குப் பயன்
தரக்கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன் என்று கூறினார்கள்.
வெற்றிக் கப்பல்
எத்தனை
மனிதர்கள் அழிந்தவர்களோடு சேர்ந்து அழிந்து மறுமை சம்பவிக்கும் வரை
இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் இலக்காகி மரணித்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கு சாபம் உறுதியாகி விட்டது, காரணம் அவர்கள் தௌஹீத் எனும் ஓரிறைக்
கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதது தான்.
அல்லாஹ்தான்; ஏக இறைவன்,
ஒவ்வொரு அடியானும் அவனிடம் அன்றி வேறுயாரிடமும் தனது காரியங்களை பொறுப்பு சாட்டக் கூடாது.
அல்லாஹ்வைத்தவிர வேறு எவரிடமும் அவன் நம்பிக்கை வைத்தவனாக இருக்கக் கூடாது.
அவனை விடுத்து வேறு யாருக்கும் பயப்படக் கூடாது
அவனுடைய பெயரைத்தவிர வேறு எவர் பெயரிலும் சத்தியம் செய்யக் கூடாது.
அவனை விடுத்து வேறு எவர் பெயரிலும் நேர்ச்சை செய்யக் கூடாது.
அவனிடத்தில் மாத்திரமே பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.
இவ்வாறு
நடந்தால் மாத்திரமே வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு
யாருமில்லை என்று அவன் கொடுத்த உறுதி மொழியை சரியாக நிறைவேற்றியவனாகக்
கருதப்படுவான். இவ்உறுதி மொழியை சரியாகச் செய்து அதற்குரிய கடமைகளை
முழுமையாக நிறைவேற்றும் போதுதான் அல்லாஹ் அவனுக்கு நரகத்தை ஹராமாக்கி
விடுகிறான்.
ஒருமுறை
முஆத் (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்து
சென்ற வேளையில் அன்னவர்கள் திடீரென பின்னால் திரும்பி
முஆதே!
அடியார்கள் அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகள்; என்னவென்று அறிவீரா?
அல்லாஹ் தனது அடியார்கள் மீது செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று அறிவீரா?
எனக் கேட்க அல்லாஹ்வும் அவனதும் ரஸுலும் மிக அறிந்தவர்கள் என முஆத் (ரலி)
சொல்கிறார். 'அடியார்கள் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டியது அவனுக்கு எந்த
ஒன்றையும் இணையாக்காமல் அவனை வணங்குவதாகும், அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய
வேண்டியது அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காமல் இருந்தவர்களை தண்டிக்காமல்
இருப்பதாகும்' என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)
ஒரு
முறை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபிகளார் (ஸல்) அவர்களிடம்
அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக கருதப்படுவது எது? எனக்
கேட்டார்கள் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வே உன்னைப்
படைத்திருக்கும் போது அவனை விட்டுவிட்டு வேறொரு கடவுளை அவனுக்கு
இணையாக்குவதாகும் என்று கூறினார்கள்.
உண்மைதான். ஏகத்துவத்தை நிலை நிறுத்துவதற்காகவும், எடுத்துச் சொல்வதற்காகவும் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்படுகின்றனர்.
அல்லாஹ்
சொல்கிறான், 'ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை
அனுப்பியிருக்கிறோம் (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே
வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து)
தாகூத்திலிருந்தும் விலகிக்கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்)' (அந்நஹ்ல் 16:
36)
தாகூத்
என்பது: அல்லாஹ் அல்லாது வணங்கப்படக்கூடிய சிலைகள், கப்றுகள், கற்கள்,
மரங்கள் அனைத்தையும் குறிக்கும். ஏகத்துவம் என்பது தூதர்களின் அழைப்புப்
பணியின் மணி மகுடமாகும்.
'(நபியே)
உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களிடம் நாம்;
அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை ஆக்கியிருந்தோமா? என்று நீர்
கேட்பீராக!'என்று அல்லாஹ் கூறுகின்றான்.(ஸுஹ்ருப் 43: 45).
அல்லாஹ்வின்
ஏகத்துவத்தை பறை சாற்றுவதற்காக அன்றி எந்த ஒரு படைப்பினமும்
படைக்கப்படவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: 'நான் மனித ஜின் இனங்களை என்னை
வணங்குவதற்காகவே அன்றிப் படைக்கவில்லை'. (அத்தாரியாத் 51: 56).
எந்த
நற்கிரிகைகளும் தவ்ஹீத் கொள்கையில் உறுதியான நம்பிக்கை இல்லாத பட்சத்தில்
அவை மறுக்கப்பட்டு விடும். அல்லாஹ் தனது திருமறையில்: 'அவர்கள்
(அல்லாஹ்விற்கு) இணை வைத்திருந்தால் அவர்களது நல்லறங்கள் அழிந்துவிடும்'
(அல்அன்ஆம் 6:88).
எவன்
ஓரிறைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கின்றானோ அவன் வெற்றி
பெற்றுவிட்டான். திர்மிதியில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஸுல் குத்ஸியில்
வருவதாவது, 'ஆதமுடைய மகனே எனக்கு எந்த ஒரு இணையையும் கற்பிக்காத நிலையில்
பூமியைப் போன்றளவுக்கு அதிக பாவங்களுடன் நீ என்னைச் சந்தித்தாலும் உனது
பாவங்கள் அனைத்தையும் நான் மன்னித் விடுவேன்'.
ஏகத்துவத்தின்
மகத்துவம் தெளிவானதாகும் அதனால்தான் நபிமார்கள் கூட அது
இழக்கப்பட்டுவிடுமோ என பயந்தார்கள். ஏகத்துவவாதிகளின் தந்தையும், சிலைகளை
உடைத்தவரும், புனித இறை ஆலயத்தை நிர்மானித்தவருமான, அல்லாஹ்வின்
நேசத்திற்குரிய இப்ராஹீம் (அலை) அவர்களே அரசர்களுக்கெல்லாம் அரசனான
அல்லாஹ்விடம்
'என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதை விட்டு தூரப்படுத்திவிடுவாயாக' எனப் பிரார்த்தித்தார்கள். (இப்றாஹீம் 14:35).
இப்றாஹீம்
நபியே, இந்தச் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடினாரென்றால் அவருக்கு
பின்னுள்ளவர்கள் எப்படி இதை விட்டு அச்சமற்றிருக்க முடியும்?
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்