கடிதங்களைப் பாதுகாக்கும் நாய்?
குகைவாசிகள் பற்றி அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கூறியதற்கு மேல் எதையும் கற்பனை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது என்றாலும் அறிஞர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என்ற போர்வையில் பலர் ஏராளமான கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துள்ளனர்.
குகைவாசிகளின் காவலுக்கு
நிறுத்தப்பட்ட நாயைப் பற்றிக் கூட பல கட்டுக் கதைகள் உள்ளன.
குகைவாசிகளுக்கு காவலாக
குகையின் வாசலில் அவர்களது நாய் நிறுத்தப்பட்டதாகக் குர்ஆன் கூறுகிறது. அந்த நாய்
பல வருடங்களாக குகைவாசிகள் குகையில் தூங்கிக் கொண்டிருக்கும் காலமெல்லாம்
பார்ப்போரைப் பயமுறுத்தும் தோற்றத்தில் நின்று கொண்டிருந்தது எனவும் திருக்குர்ஆன்
கூறுகிறது.
இதைத் தவிர அந்த நாய் பற்றி
வேறு விபரம் எதுவும் திருக்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் கூறப்படவில்லை.
ஆனால் போலி
விரிவுரையாளர்கள் பலர் அந்த நாயின் பெயர் கித்மீர் என்று எழுதி
வைத்துள்ளனர். அந்த நாயின் பெயர் பற்றி திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை.
நபிமொழிகளிலும் கூறப்படவில்லை. அல்லது கல்வெட்டு ஆதாரமும் இல்லை. ஒரு ஆதாரமும்
இல்லாமல் அந்த நாயின் பெயர் 'கித்மீர்' என்பதை இவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தனர்?
எவ்வித ஆதாரமுமின்றி நாயின்
பெயர் கித்மீர் என்று கூறுவதையாவது அலட்சியம் செய்து விடலாம். ஆனால் அந்தப் பெயரை
மிகப் பெரிய பாதுகாப்புக் கேடயமாக ஆக்கிய கொடுமையை அலட்சியப்படுத்த முடியாது.
இந்தக் கொடுமையை சாதாரண
மக்கள் மட்டுமின்றி மிகப் பெரிய உலமாக்கள் என அறியப்பட்டவர்களும் செய்து
வருகின்றனர்.
அந்தக் கொடுமை என்னவென்றால்
தாங்கள் மற்றவர்களுக்கு எழுதும் கடிதங்களின் உரை மீது ''கித்மீர்'' என எழுதுவதாகும்.
இவ்வாறு அந்த நாயின் பெயரை எழுதினால் கடிதம் பத்திரமாக உரிய இடத்தைச் சேரும் என
தமிழக உலமாக்கள் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
குகைவாசிகளை அந்த நாய்
எவ்வாறு பாதுகாத்ததோ அது போல் கடிதங்களையும் பாதுகாக்கும் என்பது இவர்களின்
நம்பிக்கை.
குகைவாசிகளுக்குச் சொந்தமான
அந்த நாய் குகைவாசிகளுக்குக் காவலாக நின்றதாகத் தான் குர்ஆன் கூறுகிறது. அது யுக
முடிவு நாள் வரை சாகா வரம் பெற்றது என்றோ, தபால் இலாகா அந்த நாய்க்கு
ஒதுக்கப்பட்டது என்றோ திருக்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் கூறப்படவில்லை.
இறைவன் வழங்காத ஆற்றலை
நாய்க்கு வழங்குவது இறைவனின் மீது இட்டுக் கட்டுவதாகும். மேலும் இறைவன் தனது
கைவசத்தில் எல்லா அதிகாரத்தையும் - கடிதங்களைப் பாதுகாப்பது உட்பட - வைத்திருக்கும்
போது அதை நாய்க்கு வழங்குவது இணை வைக்கும் குற்றமாகவும் அமையும் என்பதை இவர்கள் உணர
வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அண்டை நாட்டின் சிற்றரசர்களுக்கும் பேரரசர்களுக்கும் கடிதங்கள்
எழுதினார்கள். இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுத்தார்கள். அந்தக் கடிதங்கள் யாவும்
இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கித்மீர் என்று எழுதினால்
கடிதங்கள் பத்திரமாகச் சேரும் என்றிருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
அவ்வாறு பயன்படுத்தியிருப்பார்கள்.
இன்றைய காலத்தில் கடிதங்கள்
பாதுகாப்பாகச் சென்றடையும் நிலையும் உத்தரவாதமும் உள்ளது. அன்றைய காலத்தில்
கடிதங்கள் உரிய இடத்தை அடைவது சிரம சாத்தியமாக இருந்தது. தூதர்கள் தாம் பல
மைல்களைக் கடந்து சென்று கடிதங்களைக் கொடுத்து வந்தனர். அந்தப் பயணத்தின் இடையே
என்ன வேண்டுமானாலும் நேரலாம். இதனால் கடிதம் உரிய இடத்தைச் சென்றடைய முடியாமல்
போகலாம்.
இந்த அளவு பாதுகாப்புக்
குறைவான கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதிய எந்தக் கடிதத்திலும்
கித்மீர் என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை.
அல்லாஹ்வின் தூதருக்குத்
தெரியாத ஒன்றை இவர்கள் கண்டு பிடித்து விட்டார்களா? என்பதையும் இவர்கள்
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதை விட முக்கியமாக
'கித்மீர்' என்ற பெயரே கற்பனை என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
இது போன்ற கிறுக்குத்தனமான
செயல்கள் ஈமானுக்கே உலை வைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
போலி விரிவுரையாளர்களின்
கற்பனை இத்துடன் நிற்கவில்லை. அந்த நாய் சொர்க்கத்துக்குச் செல்லும் பிராணிகளில்
ஒன்றாகும் எனவும் புளுகி வைத்துள்ளனர்.
சொர்க்கமும் நரகமும்
மனிதர்களுக்காகவும் ஜின் இனத்திற்காகவும் தான் படைக்கப்பட்டுள்ளன. வேறு எந்த
உயிரினத்துக்கும் சொர்க்கமோ நரகமோ கிடையாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை.
பகுத்தறிவு வழங்கப்பட்ட இனத்திற்கு மட்டும் தான் சட்ட திட்டங்கள் போட முடியும்.
பரிசோ தண்டனையோ அளிக்க முடியும்.
மனித ஜின் இனத்தைத் தவிர
மற்ற பிராணிகளுக்கு சொர்க்கமோ நரகமோ உண்டு என்றால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும்
தான் கூற அதிகாரம் படைத்தவர்கள்.
குகைவாசிகளின் நாய்
சொர்க்கம் செல்லும் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. நபிமொழிகளிலும்
அவ்வாறு கூறப்படவில்லை.
அல்லாஹ்வும் அவனது தூதரும்
கூறாத விஷயத்தை இவர்கள் எப்படிக் கண்டு பிடித்தனர்? இவர்களுக்கு சிறப்பாக வஹீ ஏதும்
வந்ததா?
குகைவாசிகளின் எண்ணிக்கை பற்றியே பேசக் கூடாது என்று அல்லாஹ் தடை செய்திருக்கும் போது போலி விரிவுரையாளர்கள் எண்ணிக்கையை முடிவு செய்ததோடு நில்லாமல் அவர்களுக்குப் பெயரும் சூட்டியுள்ளனர்.
குகைவாசிகளுக்கு பெயர்
சூட்டியது மட்டுமின்றி அந்தப் பெயர்கள் பவர் ஃபுல்லான மந்திரம் எனவும்
ஏமாற்றுகின்றனர்.
ஒரு வீட்டில் அவர்களின்
பெயர்ப் பட்டியல் இருந்தால் அவ்வீடு தீப்பிடிக்காது.
தீப்பிடித்து எரியும்
வீட்டின் மேல் அந்தப் பெயர்களை எழுதிப் போட்டால் உடனே தீ அணைந்து விடும். நோய் தீரும். பைத்தியம்
விலகும்.
என்றெல்லாம் கண்டபடி புளுகி
வைத்துள்ளனர். இதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.
மக்களை ஏமாற்றி மந்திர வேலை
செய்வோரின் பித்தலாட்டமே தவிர இவர்கள் கூறுவது உண்மையில்லை. வேண்டுமானல் அவர்கள்
வீட்டில் இப்பெயர்களை எழுதி வைக்கட்டும். நாம் அதை கொளுத்திக் காட்டுவோம். இதை
மந்திரவாதிகள் (?) ஏற்கத் தயாரா? என்று அறைகூவல் விடுகிறோம்.
அல்லாஹ்வும் அவனது தூதரும்
கூறாத இந்தக் கட்டுக்கதைகளைக் குப்பையில் போட வேண்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்