"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நம்பிக்கையில் ஊறுவிளைவிப்பவை

நூதன அனுஷ்ட்டானங்கள் (பித்அத்கள்) முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரியதோர் முஸீபத்தாகும். அவைகள் மூலம் அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை அடைந்து கொள்ள முடியும் என்று அதிக முஸ்லிம் மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் (மீலாது) விழா எடுத்தல், மௌலிது பாடல்கள் பாடுதல், அதற்கு மத்தியில் எழுந்து மரியாதை செய்தல், அவர்களுக்கு ஸலாம் சொல்லுதல், அவ்லியாக்கள் நல்லடியார்களின் பெயரில் விழாக்கள் எடுத்தல் இவைகள் அனைத்தும் மார்க்கத்தின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட வழிகெட்ட நூதனங்கள் ஆகும். நபியோ ஸஹாபாக்களோ செய்யாத ஒன்று.
'எவர் நமது விஷயத்தில் (மார்க்கத்தில்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துவாரோ அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'ஒவ்வொரு நூதனமும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அல்லாஹ் தனது திருமறையில், 'இன்றையத் தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்துவிட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாக்கிவிட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை நான் மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன்' (அல்மாயிதா 5:3)

இது போன்ற நூதன அனாச்சாரங்களை இவர்கள் நபி (ஸல்) பெயரில் அரங்கேற்றுவதன் மூலம் விளங்குவது யாதெனில் அல்லாஹ் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கவில்லை என்பதுதான்! பிற்காலத்தில் வந்தவர்கள் பல நூதன அனுஷ்டானங்களை ஏற்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற முடியுமென நினைக்கிறார்கள். இது அல்லாஹ்வையும், ரஸுலையும் புறக்கணிப்பதாகும். மௌலிதுகள், பிறந்த நாள் விழாக்கள் என்பதெல்லாம் மார்க்கத்தில் இருக்குமானால், மேலும் அல்லாஹ் அவைகளை பொருந்திக் கொள்வான் என்றால் இறைத்தூதர் அவர்கள் சமுதாயத்துக்கு அவற்றை அறிவித்துக் கொடுத்திருப்பார்கள். அறிஞர்கள் இந்த அனைத்து மௌலிதுகளையும் நிராகரித்திருக்கிறார்கள். ஏனென்றால் இவைகள் அனைத்தும் வழிகெட்ட நூதன வழிபாடுகள். குறிப்பாக நபியின் மீதுள்ள அன்பு, அளவு கடந்து சென்றதே இந்த நூதனங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தன. 

பெண்கள், ஆண்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்திருத்தல், இசைக்கருவிகளைப் பாவித்தல் போன்ற அனாச்சாரங்களும், நபியிடத்தில் உதவி தேடல், பிரார்த்தித்தல் பாதுகாப்புத் தேடல், இவை போன்ற பெரிய ஷிர்க்குகளும் நிகழ்வதற்கு வழிவகுக்கிறது. இது போன்ற எத்தனையோ நிராகரிப்புக்கு இட்டுச்செல்லும் விஷயங்கள் அங்கு நிகழ்கின்றன.

சிலர் மீண்டும் மீண்டும் புர்தா எனும் பெயரில் அரங்கேற்றும் பூஸரியின் பாடல்களில் நிறைந்து காணப்படும் ஷிர்க்கான வார்த்தைகளைப் பாருங்கள் .


يا أكرم الخلق مالي ألوذ به --- -- سواك عند حدوث الحادث العمم
إن لم تكن آخذا يوم المعاد يدي ---- - صفحا وإلا فقل يا زلة القدم
فإن من جودك الدنيا وضرتها ------ ومن علومك علم اللوح والقلم

இதன் அர்த்தத்தில் எத்தனை ஷிர்க்குகள் நிறைந்து கிடக்கின்றன என்று சற்று கவனியுங்கள். 

படைப்புகளில் சங்கை மிகுந்த நபியவர்களே.. (மறுமை நிகழ்ந்தவுடன்) திடுக்கமும், அச்சமும் சூழ்ந்து கொள்ளும் அந்த நேரத்தில் நான் அடைக்கலம் தேடுவதற்கு எனக்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கின்றார்...

அந்த மறுமை நாளன்று நீங்கள் எனது கரம் பிடித்து, எனக்கு உதவி செய்ய வில்லையென்றால் நான் கால் தடுக்கி நரகத்தில் விழுவதைத் தவிரவேறு வழியில்லை...

உங்கள் கருனை மிகுந்த அருட்கொடையினாலேயே இவ்வுலகமும், அதன் சக்களத்தியான வானங்களும் நிலை பெற்றிருக்கின்றன. இன்னும் லௌஹூல் மஹ்பூழ் எனும் பலகையிலும், கலம் எனும் எழுதுகோல் பற்றிய அறிவும் உம்மிடம் உள்ள அறிவின் ஒரு பகுதியே...

இது போன்ற இறைபண்புகள், மறைவான ஞானம், மறுமை நாளில் பாவங்களை மன்னிப்பது, இவ் உலகத்திலும் மறுமையிலும் காரியங்களைத் திட்டமிடுவது அனைத்துமே வானங்களையும் பூமியையும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் அல்லாஹ்விற்கு மாத்திரம் உரிய பண்புகளாகும். நபிக்காக நடைபெறும் மௌலிது விழாக்களில் அல்லது வேறு நல்லடியார்களின் பெயரில் நடைபெறும் மௌலிதுகளில் இது போன்ற பெரும் தவறுகள் நிகழ்வதைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். அவர்கள் நாம் இவ்வாறான மௌலிதுகளை கொண்டு ரஸுலை நினைவு கூர்வதற்காகவும், அவரது வரலாறை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவுமே செய்கின்றோம் என்று கூறுகின்றனர். சரி அப்படியானால் ஏன் அதைக் குறிப்பிட்ட ஒரு தினத்தில் நடத்துகின்றீர்கள்? ஏனைய காலங்களிலும் பொது மேடையைப் போட்டு அல்லது கூட்டங்களைக் கூட்டி அவர்களின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே...

சரி இதை ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் என்றே எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் கூறுகின்றான், 'நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் கருத்து வேற்றுமைப்பட்டால் அத(ன்தீர்வி)னை அல்லாஹ் ரஸூலின் பக்கம் விட்டு விடுங்கள்' என்று கூறுகின்றான் இதன் படி நாம் இந்த மௌலீது விவகாரத்தை, அல்குர்ஆனின் ஒளியில் தீர்வு தேடினால் அல்குர்ஆன், நபி (ஸல்) அவர்கள் கூறியபடி வாழுமாறும், மார்க்கம் முழுமை பெற்று விட்டது என்றும்தான் இருக்கின்றது.
சரி நபியவர்களிடம் எடுத்துக் கூறி இதற்குக் தீர்வு காண முற்பட்டால் அப்போதும் இவ்வாறான மௌலீதுகளை நபியவர்களோ, ஸஹாபாக்களோ செய்ய வில்லை என்பதே எமக்கு விடையாகக் கிடைக்கின்றது. எனவே இது ஒரு பித்அத் - நபியவர்கள் காட்டித்தராத நூதன அனுஷ்டானம் என்பது தெரிய வருகின்றது. அது மட்டுமல்ல எமது விரோதிகளான யூத கிருஸ்தவர்களிடம் இருந்து காப்பியடிக்கப்பட்ட இவ்வனுஷ்டானங்களை நாமும் புரிவதால் நாம் அவர்களது கலாச்சாரத்தைப் பின்பற்றியதாகவே கணிக்கப்படும்.
நாம் இப்படியான மௌலிது விழாக்களை மறுக்கிறோம். நபியை பின்பற்றுமாறு புனித இறைவேதம் நமக்குச் சொல்கிறது, இறைவேதம் நமக்கு மார்க்கம் பூர்த்தியாகி விட்டதாக அறிவிக்கின்றது. நபியோ ஸஹாபாக்களோ செய்யாத, நமக்கு கற்றுத்தராத இந்த மௌலிதுகளை விழாக்களை நாம் மறுக்கிறோம். இவைகள் மார்க்கத்தில் உள்ளவைகள் அல்ல. இவைகள் நிராகரிக்கப்பட வேண்டிய வழிகெட்ட பித்அத்துகள், இன்னும் யூதர்களின் கிருஸ்தவர்களின் கொண்டாட்டங்களுக்கு ஒப்பான செயல்கள், மனிதர்களில் அதிகமானவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதைப் பார்த்து மனிதனின் புத்தி ஏமாந்து விடக்கூடாது. 
அல்லாஹ் தனது திருமறையில், (நபியே) நீர் பூமியில் பெரும்பான்மையானவர்களைப் பின்பற்றினால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் வழியை விட்டு (திருப்பி) வழிகெடுத்து விடுவார்கள்'. (அல் அன்ஆம் 6:116). 

சில ஆச்சரிய நிகழ்வுகள்
இப்படி அனாச்சாரங்கள் நிறைந்த கொண்டாட்டங்களுக்கு வருகை தருவதில் கவனம் செலுத்தும் அதிகமானவர்கள் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ போன்ற தொழுகையில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். இன்னும் சிலர் மௌலிது நடக்கும் சபைக்கு நபிகளார் (ஸல்)அவர்கள் வருகை தருகிறார்கள் எனும் மூடத்தனமான நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதனால் தான் நபியை வரவேற்பதற்காக எழுந்து பாடல்களை பாடுகின்றனர் இது வழிகெட்டதும் அறியாமைத்தனமான ஒரு செயலாகும்.
நபி (ஸல்) அவர்கள் அடக்கப்பட்டு கப்ரில் இருப்பார்கள். மறுமை நாள் சம்பவிக்கும் வரை அங்கிருந்து வெளியேற மாட்டார்கள் அவர்களுடைய உயிரோ இல்லிய்யீன் எனும் உயர்ந்த நல்லடியார்களின் உயிர்கள் வைக்கப்படும் இடத்தில் ரப்பிடத்தில் இருக்கின்றது. இதனைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, 'மறுமை நாளில் கப்ரில் இருந்து முதலில் எழுப்பப்படுபவனாக நான் இருப்பேன்'. 
நபியின் மீது ஸலாவாத்தும் ஸலாமும் சொல்வதும் (அல்லாஹ்விடத்தில் அருளுக்காகவும் சாந்திக்காவும் பிறார்த்திப்பதுமே) சிறந்த முறையாகும். 

அல்லாஹ் தனது திருமறையில் 'நிச்சயமாக அல்லாஹ் நபியின் மீது அருள் புரிகிறான், அவனது வானவர்களும் நபிக்காக அருள்வேண்டி பிறார்த்திக்கின்றனர், முஃமின்களே நீங்களும் நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்'. (அஹ்ஸாப் 33:66).

ஒரு அடியான் நபியின் மீது முழுமையான அன்பு செலுத்தாத வரை அவன் பரிபூரண முஃமினாக மாட்டான் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

நபியவர்களுக்கே உரிய முறையில் அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும், பின்பற்றப்படும் வழிகாட்டியாக அவர்களை எடுத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாம் மார்க்கமாக்கிய வணக்க வழிபாடுளைத்தவிர அளவு கடந்து செல்லக்கூடாது. 
அல்லாஹ் தனது திருமறையில், '(நபியே மனிதர்களிடம்) நீர் கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக்கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (அப்போது) அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்களது பாவங்களையும் மன்னிப்பான் அல்லாஹ் மன்னித்து கிருபை செய்யக்கூடியவனாக இருக்கிறான்'. (ஆலு இம்ரான் 3:31).

---chittarkottai.com

முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஏராளம்..

முஸ்லிம்களின் செயல்பாடும், முஷ்ரிக்குகளின் செயல்பாடும் ஒருபோதும் ஒத்துபோகாது...


முஸ்லிம் என்றால் (தன் இறைவனுக்கு) முற்றிலும் கீழ்படிந்தவன்.

முஷ்ரிக் என்றால் இறைவனுக்கு கீழ்படிவது போல பிறருக்கும் பிறவற்றுக்கும் கீழ்படிபவன்.

முஸ்லிம்களின் செயல்பாடுகள் அனைத்தும் தன் இறைவனின் திருப்தியை நாடியே இருக்கும்..

முஷ்ரிக்குகளின் செயல்பாடுகள் அனைத்தும் தன் மன திருப்திக்காகவும், தன் முன்னோர்களின் சொல்லை மட்டுமே அடிப்படையாக கொண்டு இருக்கும்..



முஷ்ரிக்குகள் இறைவனை நம்பியிருப்பார்கள்..

முஸ்லீம்கள் இறைவனை நம்ப வேண்டிய விதத்தில் நம்பியிருப்பார்கள்..

முஷ்ரிக்குகள் இறைவனுக்கு ஆற்றல் இருப்பதாக நம்பி அவனை வணங்குவார்கள்..

முஸ்லீம்கள் இறைவனுக்கு மட்டுமே எல்லாம் வல்ல ஆற்றலும் இருப்பதாக நம்பி அவனை மட்டுமே வணங்குவார்கள்.



முஸ்லீம்கள் தனக்கு நேரும் பிரச்சனைகளை அதை தீர்க்கும் தகுதியும் ஆற்றலும் கொண்ட இறைவனிடம் மட்டுமே சிரம் தாழ்த்தி கேட்பார்கள்..

முஷ்ரிக்குகள் இறைவனோடு சேர்த்து (தன் முன்னோர்கள் கற்றுத்தந்த) அவ்லியாக்கள், தன் ஷெய்குமார்கள், நாதாக்கள், சமாதிகள் சமியார்கள் என பலவற்றை நம்பி அவர்களுக்கும் சிரம் தாழ்த்தி கேட்பார்கள்.


முஸ்லீம்கள் மறுமை வெற்றிக்காக தன்னுடைய அமல்களையும், இறைவனின் மன்னிப்பையும் இரக்கத்தையும் நம்பி இருப்பார்கள்..

முஷ்ரிக்குகள் தங்கள் ஷெய்குமார்கள் மற்றும் அவ்லியாக்களின் (இல்லாத) பரிந்துரையை நம்பியிருப்பார்கள்.


முஸ்லீம்களுக்கு இறைவனிடம் கிடைக்கும் அந்தஸ்து உயர்ந்தது..

முஷ்ரிக்குகளுக்கு இறைவனிடம் கிடைப்பது நிரந்தர நரகம்..


"தனக்கு இணை கற்பிக்கப் படுவதை இறைவன் மன்னிக்க மாட்டான்.இதற்கு கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோர்க்கு மன்னிப்பான்.இறைவனுக்கு இணை கற்பிப்பவர் தூரமான வழிகேட்டில் உள்ளார்." (அல்குர்ஆன் - 4:116)

பலவீனமான ஹதீஸ்களின் விடயத்தில்

 பேணுதலைக் கடைபிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அன்பின் இஸ்லாமிய அழைப்பாளர்களே!                          
ஒரு தாஇயின் மிக முக்கிய பண்பு மார்க்கத்தைப் பற்றிய தெளிவான ஞானம் ஆகும்.
·        "ஞானத்தைக் கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் (மக்களை) உம்முடைய இரட்சகனின் பக்கம் (நபியே!) நீர் அழைப்பீராக." (அல்-குர்ஆன் 16:125)

பிரச்சாரம் தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும்.
·        (நபியே!) நீர் கூறுவீராக! "நீங்கள் (உங்கள் சொல்லில்) உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்." (அல்-குர்ஆன் 2:111)

·        (நபியே!) நீர் கூறுவீராக! "இதுதான் எனது வழியாகும். நான் அல்லாஹ்வின் பக்கம் (உங்களை) தெளிவான (ஆதாரம் மற்றும்) அறிவின் அடிப்படையில் அழைக்கிறேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் (இவ்வாறு அழைக்கின்றோம்)." (அல்-குர்ஆன் 12:108)

ஆதாரம் என்பது தஃவா பணியின் ஆணி வேறாகும். மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்ற ஒரு தாஇ ஆதாரங்களைத் தெளிவாக எடுத்து முன் வைக்க வேண்டும் என மேற் கூறிய அல்-குர்ஆன் வசனங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

ஹதீஸ்களின் தராதரங்கள் எவை?
ஹதீஸ் கலை அறிஞர்கள் ஹதீஸ்களை அவற்றின் தராதரம் அடிப்படையில் சுருக்கமாக நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.

ஆதாரபூர்வமானவை:1)       ஸஹீஹ் - சரியானவை
2)       ஹசன் - அழகானவை
·       
ஆதாரபூர்வமற்றவை:

3)       ழஈப் - பலவீனமானவை
4)       மவ்ளூஃ - இட்டுக் கட்டப்பட்டவை/ பொய்யானவை

நபி மீது பொய்! நரகமே தங்குமிடம்!
இஸ்லாத்தின் எதிரிகளாலும், சுயநலவாதிகளாலும், பொய்யைக் கூறியாவது நல்ல விடயங்களைப் பரப்ப வேண்டும் என நினைத்த மடையர்களாலும் மார்க்கம் என்ற பெயரில் நபியவர்களின் பெயரால் நபியவர்கள் கூறாத பல ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டு பரப்பப் பட்டன. ஆனால் தூய இஸ்லாத்தினைப் பாதுகாப்பதற்காக வேண்டியே தமது வாழ்க்கையை அர்ப்பணித்த, பல ஹதீஸ் கலை அறிஞர்களினால் அவை சுட்டிக் காட்டப்பட்டு பல நூற்கள் எழுதப் பட்டுள்ளன. இருந்த போதிலும் இன்றளவிலும் இட்டுக் கட்டப்பட்ட பல ஹதீஸ்கள் நமது சமுதாயத்தில் உலாவருவது மிகவும் எச்சரிக்கைக்குரிய விடயமாகும்.

·        நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்." (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி-110, முஸ்லிம்)


·        நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்." (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம்-6)


·        நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மேலும் உங்களுக்கு பொய்யை எச்சரிக்கிறேன். ஏனெனில் பொய்யானது பாவத்தின் பக்கம் இட்டுச் செல்கிறது. பாவமோ நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லக் கூடியதாயிருக்கிறது." (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி); நூல்: புகாரி, முஸ்லிம்-4721)


நரகத்தைப் பற்றிய பயம் நம்மிடம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஹதீஸ்களின் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விட்டு, தன் மனம் போன போக்கில் ஹதீஸ்கள் என்ற பெயரில் பேசவோ, எழுதவோ கூடாது. மாறாக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஆள்வதில், மேற்கோள் காட்டுவதில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். மிகுந்த பேணுதலும், உள்ளச்சமும் வர வேண்டும். இது தாஇகளின் கடமையாகும்.

·        "முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். மேலும் (சொல்லிலும், செயலிலும்) உண்மையாளர்களுடன் சேர்ந்து இருங்கள்." (அல்-குர்ஆன் 9:119)

ழஈபான (பலவீனமான) ஹதீஸ்கள் என்றால் என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய ஹதீஸ்கள் "ழஈபான ஹதீஸ்கள்" எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். அறிவிப்பாளர்களில் எவரேனும் நன்னடத்தை அற்றவராகவோ, நினைவாற்றல் குறைந்தவராகவோ இரண்டு அறிவிப்பாளர்களுக்கிடையில் சந்திப்பு இல்லாமலிருந்தாலோ அத்தகைய ஹதீஸ்களை "ழஈபான ஹதீஸ்கள்" என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் நிர்ணயித்துள்ளனர். சில வேளைகளில் ஒரு குறிப்பிட்ட ஹதீஸ் ஆதாரபூர்வமானதா? அல்லது ழஈபானதா? எனத் தீர்மானிப்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடுகளைத் தெரிவிப்பதும் உண்டு.

ழஈபான (பலவீனமான) ஹதீஸ்களைப் பின்பற்றலாமா?
ஒரு ஹதீஸ் ஆதார பூர்வமானதாக (அதாவது ஸஹீஹானதாக அல்லது ஹசனானதாக) இருக்கும் பொழுது அவசியம் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் மவ்ளூஃவான (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களை எந்தக் காரணத்திற்காகவும் பின்பற்றக் கூடாது என்றும் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். ஆனால் இவ் இரு பிரிவுகளுக்கும் இடைப்பட்ட ழஈபான (பலவீனமான) ஹதீஸ்களைப் பின்பற்றலாமா? அல்லது கூடாதா? என்பதைப் பொறுத்தவரையில் அறிஞர்கள் மத்தியில் இரு விதமான கருத்துகள் நிலவுகின்றன:

1.  முதலாவது கருத்து: "அகீதா (கொள்கை), அஹ்காம் (சட்டதிட்டங்கள்), தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டல் மற்றும் எச்சரித்தல் அதாவது பழாயில்) ஆகிய எதுவாக இருந்தாலும் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றக் கூடாது."

2. இரண்டாவது கருத்து: "அகீதா (கொள்கை) மற்றும் அஹ்காம் (சட்டதிட்டங்கள்) ஆகியவற்றில் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றக் கூடாது. ஆனால் தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டல் மற்றும் எச்சரித்தல் அதாவது பழாயில்) விடயத்தில் ழஈபான ஹதீஸ்களை சில நிபந்தனைகளுடன் பின்பற்றலாம்."

தர்கீப் வத் தர்ஹீப் விடயத்தில் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றக் கூடாது எனக் கூறுவோரின் வாதம்
இமாம் முஸ்லிம் (ரஹ்), இமாம் அபு பக்ர் இப்னுல் அரபி அல்-மாலிகி (ரஹ்), இமாம் இப்னு ஹஸ்ம் அழ்-ழாஹிரி (ரஹ்), இமாம் இப்னு ரஜப் அல்-ஹன்பலி (ரஹ்), ஷைக் அஹ்மத் முஹம்மத் சாகிர் (ரஹ்), ஷைக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) போன்ற அறிஞர்கள் இக் கருத்தையே கொண்டிருந்தனர். இக் கருத்துடையவர்கள் தமது கருத்துக்கு சார்பாக பின்வரும் ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர்:

{وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا} [الإسراء: 36]

·        "எதைப் பற்றி உமக்கு(த் திட்டவட்டமான) அறிவு இல்லையோ அதை நீர் பின்பற்றாதீர்." (அல்குர்ஆன் 17:36)

{وَمَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا} [النجم: 28]

·        "நிச்சயமாக யூகமானது சத்தியத்திலிருந்து (விளங்கிக் கொள்ள) எந்தப் பயனையும் தராது." (அல்குர்ஆன் 53:28)

·        நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உனக்கு சந்தேகமானதை விட்டுவிட்டு சந்தேகமற்றதின்பால் சென்றுவிடு" (அறிவிப்பவர்: ஹஸன் (ரலி); நூல்: திர்மிதீ, அஹ்மத், ஹாகிம்)

·        நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது. இந்த இரண்டுக்கும் இடையில் தெளிவில்லாத சில விடயங்களும் இருக்கின்றன. அவற்றை அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள். யார் சந்தேகத்துக்கு இடமானவற்றை விட்டு விடுகிறாரோ அவர் தனது மானத்தையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொண்டார். யார் அதனைப் பேணவில்லையோ அவர் ஹராத்தில் விழுந்து விட்டார். அவருக்குரிய உதாரணம் வேலியோரத்தில் மந்தை மேய்ப்பவர் போல. மந்தை சில வேளை வேலியை தாண்டவும் முடியும். "(நூல்:புகாரி, முஸ்லிம்-3882)

இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தமது ஸஹீஹ் முஸ்லிமுடைய முன்னுரையில் ழஈபான ஹதீஸ்கள் பின்பற்றத் தகுதியானதல்ல என பல ஆதாரங்களின் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.

இமாம் இப்னு ரஜப் அல்-ஹன்பலி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
·        "இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தமது ஸஹீஹ் முஸ்லிமுடைய முன்னுரையில் கூறியிருப்பது என்னவென்றால்: ஆர்வமூட்டல், எச்சரித்தல் (அதாவது பழாயில்) பற்றிய விடயங்களிலும் கூட சட்டதிட்டங்கள் பற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர்களிலிருந்தே (அதாவது நம்பகரமான அறிவிப்பாளர்களிலிருந்தே) ஹதீஸ்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்பதாகும்." (பார்க்க: ஷர்ஹ் இல்லல் அத் திர்மிதீ vol.1/pf.74)(3)

இமாம் அபு பக்ர் இப்னுல் அரபி அல்-மாலிகி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
·        "ழஈபான ஹதீஸ்ளின் அடிப்படையில் செயற்படுவது அறவே அனுமதிக்கத் தக்கதல்ல. அது அமல்களின் சிறப்புகள் பற்றியதாக இருந்தாலும் சரி அல்லது வேறு வகையாக இருந்தாலும் சரி." (பார்க்க: தத்ரீபூர் ராவி 1/252)(1)

இமாம் இப்னு ஹஸ்ம் அழ்-ழாஹிரி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
·        "இந்த ஹதீஸ்கள் (அதாவது மவ்ளூவான அல்லது ழஈபான ஹதீஸ்கள்) கூறுகின்றன என நாங்கள் கூறுவதோ அல்லது அவற்றை நம்புவதோ அல்லது அவற்றைப் பின்பற்றுவதோ எங்களுக்கு அனுமதிக்கத் தக்கதல்ல." (பார்க்க: அல்-மிலல்)(2)

கடந்த நூற்றாண்டின் பிரபல ஹதீஸ் கலை அறிஞரான ஷைக் அஹ்மத் முஹம்மத் சாகிர் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
·        "சட்டதிட்டம் சம்பந்தப் பட்ட ஹதீஸ்களிலோ பழாயில் சம்பந்தப் பட்ட ஹதீஸ்களிலோ ழஈபான ஹதீஸ்களை எடுப்பதில் எந்த வேறுபாடும் இல்லை. உண்மையில் ஸஹீஹ் அல்லது ஹசன் என நிரூபிக்கப் பட்ட ஹதீஸ்களைத் தவிர வேறு ஹதீஸ்களை நபியவர்களிடமிருந்து வந்ததாக ஏற்றுக் கொள்ள எந்த ஆதாரமும் இல்லை." (பார்க்க: ஷர்ஹ் அல்பியாஹ் அல்-சுயூதி pg.84)(3)

கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஹதீஸ் கலை அறிஞரான ஷைக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
·        "உலகின் கிழக்கு தொடக்கம் மேற்கு வரையுள்ள அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் நாங்கள் கூறும் புத்திமதி என்னவென்றால், ழஈபான ஹதீஸ்களை முற்று முழுதாக விட்டு விட்டு, நபி (ஸல்) அவர்களின் ஸஹீஹானதும் ஆதாரமானதுமான ஹதீஸ்களின் பக்கம் திரும்புங்கள். ஏனெனில் ழஈபானவற்றின் பக்கம் தேவையற்றவர்களாக (நம்மை) ஆக்கி விடும் அளவுக்கு (ஆதாரமான ஹதீஸ்களான) அவை (போதுமானளவு) இருப்பதுடன் நபி (ஸல்) அவர்களின் மீது எந்தவொரு பொய்யை உரைப்பதிலிருந்தும் (நம்மைத்) தூரமாக்குகிறன." (பார்க்க: ஸஹீஹ் அல்-ஜாமிஉவின் முன்னுரை vol.1/pg.56)(1)(3)

தர்கீப் வத் தர்ஹீப் விடயத்தில் ழஈபான ஹதீஸ்களை சில நிபந்தனைகளுடன் பின்பற்றலாம் எனக் கூறுவோரின் கருத்துகள்
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்), இமாம் இப்னு தைமியா (ரஹ்), இமாம் அந்-நவவி (ரஹ்), இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்) போன்ற பல அறிஞர்கள் தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டல் மற்றும் எச்சரித்தல் அதாவது பழாயில்) விடயத்தில் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றலாம் என்கின்ற இக் கருத்தையே கொண்டிருந்தனர். மேலும் இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தும் ஆகும். ஆனால் இக் கருத்துள்ள அறிஞர்கள் சில நிபந்தனைகளை முன் வைக்கின்றனர்.

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
* "ஸஹீஹான அல்லது ஹசனான ஹதீஸ்கள் அல்லாமல் ழஈபான ஹதீஸ்களின் பக்கம் தங்கியிருப்பது மார்க்கத்தில் அனுமதிக்கத் தக்கதல்ல. ஆனால் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) மற்றும் பல அறிஞர்கள் அமல்களின் சிறப்புகள் பற்றிய ஆதாரபூர்வமற்ற அறிவிப்புகளை, அவை பொய்யாக இல்லாமல் இருட்கும் பட்சத்தில், அவற்றை அறிவிப்பதை அனுமதிக்கத் தக்கதாகக் கருதினர்.

* மேலும், மார்க்கத்தில் ஆதாரபூர்வமாக நிறுவப் பட்ட ஒரு அமலின் பக்கம் ஆர்வமூட்டுகின்ற ஒரு ஹதீஸ் பொய்யாக இல்லாமல் இருட்கும் பட்சத்தில் அந்த ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ள கூலியானது உண்மையாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறு இருக்கிறது.

* ஒரு ழஈபான ஹதீஸின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை (வாஜிப்) கடமையாகவோ அல்லது (முஸ்தஹப்) விரும்பத் தக்கதாகவோ கருதலாம் என எந்த ஒரு இமாமும் கூறவில்லை. அப்படி எவராவது கூறுவாரானால் அவர் அறிஞர்களின் ஏகோபித்த முடிவுக்கு மாற்றம் செய்கிறார்.

·* பொய் என அறியப் படாத அறிவிப்புகளை, ஆர்வமூட்டுதல் மற்றும் எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில் அறிவிப்பது அனுமதிக்கத் தக்கதாகும். ஆனால் அந்த விடயம் அல்லாஹ்வால் ஆர்வமூட்டப் பட்டு அல்லது எச்சரிக்கை செய்யப் பட்டிருக்கிறது என அறிவிப்பாளர்கள் அனைவரும் அறியப்பட்ட வேறு ஆதாரங்களின் மூலம் நிறுவப் பட்ட விடயமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே (அது அனுமதிக்கத் தக்கதாகும்)."
(பார்க்க: மஜ்மூஃ அல்-பதாவா 1/250; அல்-காஇதா அல்-ஜலீலா பித் தவஸ்ஸுல் வல்-வஸீலா pg.82)(1)(2)(4)

உலகம் போற்றும் மிகப் பெரும் ஹதீஸ் கலை அறிஞராகிய இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்) அவர்கள், தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டுதல் மற்றும் எச்சரித்தல்) சம்பந்தப் பட்ட ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றுவதற்கான நிபந்தனைகளப் பின்வருமாறு வகுத்துக் கூறுகிறார்கள். அவையாவன:

1- أن يكون الضعف غير شديد ، فلا يعمل بحديث انفرد به أحدٌ من الكذابين أو المتهمين بالكذب أو من فحش غلطه .
2- أن يندرج تحت أصل معمول به .
3- ألا يعتقد عند العمل به ثبوته ، بل يعتقد الاحتياط .

1.       அந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாக இருக்கக் கூடாது.
அறிவிப்பாளர் தொடரில் பொய்யர்களில் ஒருவர் அல்லது பொய்யர் எனக் குற்றம் சாட்டப் பட்ட ஒருவர் அல்லது மிகவும் கடுமையான தவறிழைக்கின்ற ஒருவர் சம்பந்தப்பட்டு மட்டும் வரும் ஹதீஸ்களைப் பின் பற்றக் கூடாது.

2.       மார்க்கத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு விடயம் சம்பந்தமானதாக அந்த ஹதீஸ் இருக்க வேண்டும். (மார்க்கத்தில் இல்லாத புதிய வகையான ஒரு விடயத்தை அது அறிமுகப் படுத்தக் கூடாது.)

3.       அந்த ஹதீஸின் படி செயல்படுபவர் அந்த ஹதீஸில் கூறப் பட்டுள்ள விடயம் (நபியவர்களால் கூறப்பட்ட) நிரூபணமான ஒரு விடயம்தான் (சந்தேகமே இல்லை) என நினைத்து விடக் கூடாது. மாறாக (நபியவர்கள் கூறாத ஒன்றை கூறியதாக நினைத்து அல்லது நபியவர்கள் செய்யாத ஒன்றை செய்ததாக நினைத்து தவறு செய்து விடுவேனோ என்ற) முன்னெச்சரிக்கையுடன் அவர் அந்த விடயத்தைப் பின்பற்ற வேண்டும். (பார்க்க: தைஸீரி முஸ்தலஹுல் ஹதீஸ் by Dr.மஹ்மூத் அத்-தஹ்ஹான்-pg.81)(1)(2)(4)(5)

பலவீனமான ஹதீஸ்களின் விடயத்தில் பேணுதல் அவசியம்
·        நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்." (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி-110, முஸ்லிம்)


"சமுதாயத்தில் நல்லமல்கள் உருவாக வேண்டும் என்கிற நோக்கத்தில்தானே ழஈபான ஹதீஸ்கள் கூறப் படுகின்றன. சமுதாயம் கெட்டுப் போவதற்காக அல்லவே" என சிலர் நினைக்கலாம். அது தவறு என்பதனையே இக் கூற்றுகள் தெளிவுபடுத்துகின்றன. கொடிய நரகத்தைப் பற்றிய பயம் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த ஹதீஸின் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விட்டு, தன் மனம் போன போக்கில் ஹதீஸ்கள் என்ற பெயரில் பேசவோ, எழுதவோ கூடாது. மாறாக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஆள்வதில், மேற்கோள் காட்டுவதில் மிகுந்த பேணுதலும், உள்ளச்சமும் வர வேண்டும். இது தாஇகளின் கடமையாகும். பழாயில் விடயத்தில் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றக் கூடாது எனக் கூறுவோர் இந்த எச்சரிக்கையிலிருந்தும் பாதுகாப்பு பெற்று விட்டனர்.

ஆனால் பழாயில் விடயத்தில் ழஈபான ஹதீஸ்களை சில நிபந்தனைகளுடன் பின்பற்றலாம் எனக் கூறும் பல அறிஞர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்) அவர்களின் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றுவதற்கான நிபந்தனைகளை ஏகோபித்து வழிமொழிந்துள்ளனர். ஹதீஸ் கலை பற்றிய பாடப் புத்தகங்களில் இந் நிபந்தனைகள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்) அவர்களின் மூன்றாவது நிபந்தனையான:
·        "அந்த ஹதீஸின் படி செயல்படுபவர் அந்த ஹதீஸில் கூறப் பட்டுள்ள விடயம் (நபியவர்களால் கூறப் பட்ட) நிரூபணமான ஒரு விடயம்தான் (சந்தேகமே இல்லை) என நினைத்து விடக் கூடாது. மாறாக (நபியவர்கள் கூறாத ஒன்றை கூறியதாக நினைத்து அல்லது நபியவர்கள் செய்யாத ஒன்றை செய்ததாக நினைத்து தவறு செய்து விடுவேனோ என்ற) முன்னெச்சரிக்கையுடன் அவர் அந்த விடயத்தைப் பின்பற்ற வேண்டும்."

என்கிற நிபந்தனையைச் செயற்படுத்த வேண்டுமானால் செயல்படுபவர் தான் கேட்கும் அல்லது படிக்கும் ஹதீஸ் ஆதாரபூர்வமானதா? அல்லது ழஈபானதா? எனத் தெளிவு பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பொது மக்கள் தெளிவு பெறுவதற்கு ஆலிம்கள் உதவி செய்ய வேண்டும். ஆலிம்கள் செய்யும் பயான்களிலும், எழுதும் புத்தகங்களிலும் தாம் அறிவிக்கும் ஹதீஸ்களின் தரம் பற்றி தெளிவு படுத்துவது ஆலிம்களின் கடமையாகும். குறைந்த பட்சம் ழஈபான ஹதீஸ்களைக் கூறும் பொழுது மட்டுமாவது இது ழஈபான ஹதீஸ் எனக் கூற வேண்டும். ஆனால் அப்படிச் செயல் படும் அறிஞர்கள் மிகச் சொற்பமே. அப்படிப் பட்ட ஆலிம்களை சமுதாயத்தில் போதுமானளவு உருவாக்குவது ஒரு சமூகப் பொறுப்பு (பர்ளு கிபாயா) ஆகும்.

எந்தவொரு முன் எச்சரிக்கையுமின்றி ஒரு ழஈபான ஹதீஸை அறிவிக்கும் பொழுது "ஒரு ஹதீஸில் வருவதாவது...." அல்லது "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...." எனக் கூறுவதாயின், ஒரு வேளை அந்த ழஈபான ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றாக அமைந்து விடுமானால், நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்த நரகத்தைப் பற்றிய எச்சரிக்கைக்கு நான் ஆளாகி விடுவேனோ என எந்தளவு பயப்பட வேண்டும்? எந்தளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? என்பதனை நாம் சற்று சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். இது பற்றிய பொறுப்பு பொது மக்களுக்கு இருப்பதை விட ஆலிம்களுக்கே அதிகம் இருக்கிறது.

"ஹதீஸ்களை தரம் பிரிப்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறதே. எந்த அறிஞருடைய கருத்தை எடுப்பது?" என்று ஒரு கேள்வி எழலாம். ஆனால் (அஹ்காம்) சட்டதிட்டம் விடயத்தில் கூடத்தான் இப்படிப் பட்ட கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதில் ஏதோ ஒரு தீர்ம்னானத்தை எடுக்கத்தானே செய்கிறோம். அப்படியாயின் பழாயில் விடயத்திலும் ஏன் நமக்கு ஒரு தீர்மானத்தினை எடுக்க முடியாது.

மேலும், "ழஈபான ஹதீஸ் மற்றும் அது போன்ற அடிப்படை ஹதீஸ் கலை பற்றிய அறிவு பொது மக்களுக்கு இல்லையே" என நீங்கள் நினைக்கலாம். உண்மையில் பொது மக்களுக்கு இது பற்றிய தெளிவை பயான் செய்து அல்லது புத்தகங்கள் எழுதி விழிப்புணர்வைக் கொண்டு வருவது மிகவும் அவசியமானதாகும். காலம் பூரா கியாம நாள் வரையில் பொது மக்களை அறியாமையிலேயே இருக்க அனுமதிக்க முடியாது.

மேலும், "ழஈபான ஹதீஸ் எனத் தெளிவுபடுத்தினால் இது ழஈபான ஹதீஸ்தானே என பொது மக்கள் அசட்டை செய்து விடுவார்களே" என நீங்கள் நினைக்கலாம். ஆனால், வெறுமனே ஏன் ழஈபான ஹதீஸ்களை மட்டும் ஆதாரமாக முன்வைக்க வேண்டும்? மார்க்கத்தில் போதுமானளவு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இருக்கின்றன என்கிற காரணத்தினால்தானே மேலே குறிப்பிடப்பட்ட அறிஞர்கள் தர்கீப் வத் தர்ஹீப் விடயத்தில் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றக் கூடாது என வாதிடுகின்றனர். மேலும் ஒரு ழஈபான ஹதீஸினை மட்டுமே ஆதாரமாக வைத்து ஒரு விடயத்தினை முஸ்தஹப் (விரும்பத் தக்கது) என்று கூறுவதற்கோ, வற்புறுத்துவதற்கோ நமக்கு அதிகாரம் இல்லை என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர் என்பதனை மேலே குறிப்பிடப்பட்ட ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களின் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது:

·        "ஒரு ழஈபான ஹதீஸின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை (வாஜிப்) கடமையாகவோ அல்லது (முஸ்தஹப்) விரும்பத் தக்கதாகவோ கருதலாம் என எந்த ஒரு இமாமும் கூறவில்லை. அப்படி எவராவது கூறுவாரானால் அவர் அறிஞர்களின் ஏகோபித்த முடிவுக்கு மாற்றம் செய்கிறார்." (பார்க்க: மஜ்மூஃ அல்-பதாவா 1/250; அல்-காஇதா அல்-ஜலீலா பித் தவஸ்ஸுல் வல்-வஸீலா pg.82)(1)(2)(4)

இன்னும் சிலர் "ஒரு ஹதீஸில் இந்தக் கருத்துப் பட வருவதாவது...." அல்லது "நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருத்துப் பட கூறினார்கள்...." எனக் கூறினால் நரகத்தைப் பற்றிய எச்சரிக்கையிலிருந்து தப்பித்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் இதுவெல்லாம் ஒரு நம்பிக்கைக்குரிய ஆலிமின் நேர்மையான பண்பாக இருக்க முடியாது. பொது மக்கள் ஒரு ஆலிமின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு ஹதீஸையும் ஹதீஸ் என்றே கருதுவர். எனவே நாங்கள் எங்கள் எழுத்திலும், பயானிலும் நேர்மையானவர்களாகவே இருக்க வேண்டும். அல்லாஹு தஆலா அல்-குர்ஆனிலே பின்வருமாறு கூறுகிறான்.

·        "முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். மேலும் நேர்மையான பேச்சையே பேசுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை சீராக்கி வைப்பான். உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான்." (அல்-குர்ஆன் 33:70-71)

மேலும் தஃவா செய்யும் தாஇகளின் மிக முக்கிய பண்புகளில் ஒன்று ழஈபான ஹதீஸ்களை சரியாக இணங்கண்டு, அதன் பின்னரே மக்களுக்கு தஃவா செய்ய வேண்டும். அது விடயத்தில் மிகுந்த பேணுதலைக் கடை பிடிப்பது அவசியமாகும். ஹதீஸ் எனக் கேள்விப் படுவதை எல்லாம் எத்தி வைத்து விடுவதனை ஒரு இலேசான விடயமாக எண்ணி விடாதீர்கள். மாறாக அதுவோ அல்லாஹ்விடத்தில் குற்றத்தால் கடுமையானதாகும். அல்லாஹு தஆலா அல்-குர்ஆனிலே பின்வருமாறு கூறுகிறான்.

 "முஃமின்களே! பாஸிக்கான ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டு வந்தால், (அதனை நன்கு விசாரித்து) தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; (ஏனெனில் அவ்வாறு தெளிவு படுத்திக் கொள்ளவில்லையானால்) அறியாமையினால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்து விடுவீர்கள்; அப்பொழுது நீங்கள் செய்தவற்றின் மீது வருத்தப் படுவோராகி விடுவீர்கள்." (அல்-குர்ஆன் 49:6)


·"இதனை உங்களுடைய நாவுகளைக் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டும், எது பற்றி உங்களுக்கு (உறுதியான) அறிவு இல்லையோ அந்த ஒன்றை உங்களுடைய வாய்களினால் நீங்கள் கூறிக் கொண்டிருந்த பொழுது (உங்களுக்கு வேதனை ஏற்பட்டிருக்கும்); அதனை இலேசாக நீங்கள் எண்ணிக் கொண்டீர்கள்; அதுவோ அல்லாஹ்விடத்தில் (குற்றத்தால்) கடுமையானதாகும்." (அல்-குர்ஆன் 24:15)
·        நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்." (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம்-6)


·        நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மேலும் உங்களுக்கு பொய்யை எச்சரிக்கின்றேன். ஏனெனில் பொய்யானது பாவத்தின் பக்கம் இட்டுச் செல்கிறது. பாவமோ நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லக் கூடியதாயிருக்கிறது." (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி); நூல்: புகாரி, முஸ்லிம்-4721)


கடந்த நூற்றாண்டின் பிரபல ஹதீஸ் கலை அறிஞரான ஷைக் அஹ்மத் முஹம்மத் சாகிர் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
·        "என்னைப் பொறுத்த வரையில், எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரு ழஈபான ஹதீஸின் பலவீனத்தை தெளிவு படுத்துவது கடமையாகும். ஏனெனில் அவ்வாறு தெளிவு படுத்தாமால் இருப்பது மற்றவர்களை அந்த ஹதீஸ் ஸஹீஹானது என நினைக்கச் செய்யலாம். முக்கியமாக நம்பிக்கைக்குரிய ஹதீஸ் கலை மேதைகளின் கிரந்தங்களிலிருந்து எடுத்துக் கூறும் பொழுது (இது மிக அவசியமாகும்)." (பார்க்க: ஷர்ஹ் அல்பியா அல்-சுயூதி pg.84)(3)

ஸஹீஹ் அல்-புகாரி, ஸஹீஹ் அல்-முஸ்லிம் தவிர ஏனைய எந்தக் கிரந்தங்களாக இருந்தாலும் அவை ழஈபான ஹதீஸ்களை உள்ளடக்கியே இருக்கின்றன. எனவே முடிந்த வரையில் ழஈபான ஹதீஸ்களில் பேணுதலை மேற்கொள்ள முயற்சிப்போமாக. முடியாதவற்றை கருணை மிக்க அல்லாஹு தஆலா மன்னிக்கப் போதுமானவன். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹு தஆலா எந்தவொரு ஆத்மாவிடமும் அதன் சக்திக்கு மீறியதை எதிர்பார்ப்பதில்லை. "அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவுக்கும் அதன் சக்திக்கு உட்பட்டதைத் தவிர சிரமம் கொடுப்பதில்லை" (அல்-குர்ஆன் 2:286). அல்லாஹு தஆலா நமது முயற்சிகளைக் கபூல் செய்து நம்மை ஏற்றுக் கொள்வானாக. வஸ்ஸலாம்.

http://aamaasir.blogspot.com/2014/10/blog-post_69.html