"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

இறந்தவர்கள் செவியேற்பார்களா?


ஒரு மனிதர் உயிரோடு வாழ்கின்ற நேரத்தில் கூட அவருடைய விருப்பத்தின் படி அவரால் எந்த ஒரு அற்புதத்தையும் செய்ய முடியாது என்பதையும், நபிமார்கள் உட்பட யாராக இருந்தாலும் மரணத்திற்குப் பிறகு இந்த உலகத்தில் எந்தவிதமான செயல்பாடும் அவர்களுக்கு கிடையாது என்பதையும் நாம் இதுவரை பார்த்து வந்தோம்.

ஒருவர் மரணித்து விட்டார் என்று சொன்னால் அவருக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் அல்லாஹ் கண்ணுக்குத் தெரியாத பர்ஸக் எனும் ஒரு திரையைப் போட்டு விடுகிறான். அவர்களால் இந்தப் பூமிக்கு வர முடியாது. இங்குள்ள விஷயங்கள் அங்கு செல்லாது என்பதையும் நாம் பார்த்தோம்.

அதற்குச் சான்றாக நபிகளாரின் செய்தி ஆதாரமாக இருப்பதை நாம் காணலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில்
 தூக்கிச் செல்லும் போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின், “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும். அது நல்லறங்கள்
புரியாததாகஇருப்பின்,“கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?”
என்று கூறும்.                        இவ்வாறுகூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும்.
மனிதன்  அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்துவிடுவான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி 1316

நாம் நம்முடைய தோளில் வைத்து சுமந்து செல்லக்கூடிய இறந்து போன ஜனாஸா மேற்கண்டாவறு சொல்வதை நம்மால் செவியுற முடிகிறதா? அந்த ஜனாஸா பேசுவதாக அல்லாஹ்வின் தூதர்  வஹீ மூலமாக அறிந்து நமக்குச் சொல்லித் தருகிறார்கள். அந்த ஜனாஸா நம்முடைய தோளில் இருந்தாலும் அது பேசுவதை நம்மால் ஏன் அறிய முடியவில்லை என்றால் அந்த ஜனாஸாவிற்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் அல்லாஹ் ஒரு தடுப்பை ஏற்படுத்தி விட்டான். அது பேசுவதை நம்மால் அறிய முடியாது. அவர்களின் பேச்சு உயிரோடு இருக்கின்ற நமக்கு வந்து சேராது. இது நமக்குத் தேவையுள்ள விஷயமாக இருப்பதின் காரணத்தினால் அல்லாஹ்வின் தூதர் நமக்கு இதனைச் சொல்லிக் காட்டுகிறார்கள்.

மேலும் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு மனிதன் இறந்த பிறகு மூன்று விஷயங்களைத் தவிர மற்ற அனைத்தும்
துண்டிக்கப்படும். 1) பயனளிக்கும் கல்வி
 2) நிரந்தர தர்மம்
 3) அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும்
நல்ல குழந்தை.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)  நூல் : முஸ்லிம் 3083

இந்தச் செய்தி, மனிதன் இறந்து விட்டான் என்றால் அவனுக்கும் அவனுடைய செயலுக்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது என்பதையும், அவனுடைய செயலை அவனால் தொடர்ந்து செய்யவும் முடியாது என்பதையும் தெரிவிக்கிறது. மேற்கண்ட 3 காரியங்களைத் தவிர மனிதனுக்கு இந்த உலகத்தோடு இருக்கின்ற உறவு முறிந்து விடுகிறது.

ஆனால் இதற்கு மாற்றமாக நம் சமுதாய மக்கள்,  உயிரோடு இருந்ததை விட இறந்த பிறகுதான் அவரிடமிருந்து பல செயல்கள் வெளிப்படுவதாக நம்புகிறார்கள். உயிரோடு உள்ளவர்களை வைத்து பல தெய்வ வணக்கம் எங்காவது நடக்கிறதா? கிடையாது. இறந்து போனவர்களைத்தான் சிலையாக வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இறந்து போனவர்களைத்தான் கப்ருகளாக வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உயிரோடு உள்ளவர்களைக் கடவுள்களாக வைத்து வணங்கினால் யாரும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவரும் நம்மைப் போன்று மலம் ஜலம் கழிக்கிறார், சாப்பிடுகிறார் என்பதை அவன் நேரில் பார்க்கும் போது அவனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். ஆனால் அதே மனிதன் இறந்த பிறகு, உயிரோடு இருக்கும் போது ஒரு மனிதனுக்கு என்ன ஆற்றல் இருக்குமோ அதை விட சக்தி வாய்ந்த ஆற்றல் இருப்பதாக நம்புகிறான்.

அதற்குத் தான் மேற்கண்ட ஹதீஸ், ஒருவன் இறந்துவிட்டால் அவனால் எந்தச் செயலும் செய்ய முடியாது என்பதற்குத் தெளிவான ஆதாரமாக இருக்கிறது.

மேற்கண்ட இந்த ஹதீஸைச் சுட்டிக்காட்டி நாம் இவ்வாறு தெளிவுபடுத்தும் போது, ஒரு சிலர் இதற்கு எதிர்வாதத்தை வைப்பார்கள்.

அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்ட தியாகிளை அல்லாஹ் அதிகமாகவே புகழ்ந்து சொல்கிறான். வேறு யாருக்கும் கொடுக்காத சிறப்பை அல்லாஹ் இந்த ஷஹீத்களுக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறான்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்!
மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 2:154

இதே கருத்தில் அமைந்த இன்னொரு வசனத்தையும் ஆதாரமாகக் காட்டுவார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்!
மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படு
கின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர்.
தம்முடன்(இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்
போருக்கு எந்தப்பயமும் இல்லை. அவர்கள்  கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை  எண்ணி  மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

அல்குர்ஆன் 3:169,170

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் சுட்டிக்காட்டி, அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று சொல்லக்கூடாது. மாறாக அவர்கள் உயிருடன் தான் இருக்கின்றார்கள். உயிருடன் இருக்கும் போது மனிதன் செவியேற்பதைப் போன்று அடக்கம் செய்யப்பட்டவர்களும் செவியேற்பார்கள். உயிருடன் உள்ளவர்கள் பார்ப்பதைப் போன்று இறந்தவர்களும் பார்ப்பார்கள். எனவே அவ்லியாக்கள் என்பவர்கள் அல்லாஹ்வின் இறைநேசர்களாவர். அதனால் அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்யலாம். உதவி தேடலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

மரணித்த பின்பும் நல்லடியார்கள் வாழ்கிறார்கள் என்று இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிபடலாம் என்பது இவர்களின் வாதம்.

பல நியாயமான காரணங்களால் இவர்களின் வாதம் முற்றிலும் தவறாகும்.

இதில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், மேற்கண்ட இரு வசனங்களும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்ளுக்குத்தான் குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. இதை வைத்துக் கொண்டு முகவரி இல்லாதவர்களையெல்லாம், யாரென்று தெரியாதவர்களையெல்லாம் இறைநேசர்கள் என்று சொல்லி அவர்களை வணங்குவது அறிவற்ற வாதம்.

அப்படியே நாம் அவ்வாறு சொல்வதாக இருந்தால் நபிகளார் காலத்தில் பத்ரு மற்றும் உஹதுப் போன்ற போர்க்களங்களில் எதிரிகளுடன் போர் செய்து அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களைத்தான் நாம் சொல்ல வேண்டுமே தவிர இப்போது யாராவது இறந்தார்கள் என்றால் அவர்களை நாம் அப்படி சொல்லக்கூடாது.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் இன்று தமிழகம் முழுவதும் அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர் அனைவரும் ஏதாவது போர்க்களத்தில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களா? ஷஹீதானவர்களா? அவர்களில் யாராவது ஒருவரை அவ்வாறு சொல்ல முடியுமா? அவர் சாதாரணமான முறையில் இறந்தவராகத்தான் இருப்பார்.

மேலும்,  அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் நாம் முகம் சுளிக்கக்கூடிய அளவிற்குத்தான் அவர்களுடைய வரலாறுகள் இருக்கின்றன. பீடி குடித்து இறந்து போனவர்கள் அல்லாஹ்வின் இறைநேசராம்! கஞ்சா குடித்து இறந்து போனவர்கள் இறைநேசராம்! இவ்வாறு யாரென்று தெரியாதவர்களைத்தான் இவர்கள் இறைநேசர்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும்,
முதலாவது வசனத்தில் உயிருடன் உள்ளனர், எனினும் (அதை) நீங்கள்
உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இதை நீங்கள் உணர முடியாது என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு விதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்கிறான். நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் பேசுவதைக் கேட்கவோ, பதிலளிக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாகத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை.

அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன விளக்கத்தையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், "(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர்
எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்;  தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர் உணவளிக்கப் பெறுகின்றனர்'' (3:169) எனும் இந்த வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள்
கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்)
கேட்டுவிட்டோம்.


அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை
 நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென
அர்ஷின் கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை
சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக்
 கூண்டுக்குள் வந்து அடையும். அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம்
ஒரு முறை தோன்றி, "நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?'' என்று
கேட்பான்.அதற்குஅவர்கள், "நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன  உள்ளது?
நாங்கள்தாம் சொர்க்கத்தில்  விரும்பியவாறு  உண்டு     களித்துக் கொண்டிருக்கிறோமே!'' என்று கூறுவர்.


இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும்
 கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, "இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்து
வாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்''
என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லை
யென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்)
விடப்படுவார்கள்
.   நூல் : முஸ்லிம் 3834

உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கிய பின் அதற்கு மாற்றமாக இவர்கள் தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும்.

இந்த நிலை கூட எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும். மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.

மற்ற நல்லடியார்களின் நிலை என்ன என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும்.
அவர் சரியாக பதில் கூறுவர். அதன் பின்னர் 'புது மணமகனைப் போல் நீ உறங்கு!
அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு!' எனக்
கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.

உயிருடன் இருந்தாலும் கூட கியாம நாள் வரை எழாமல் உறங்கிக் கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம்? உயிருடன் இருப்பதற்காக ஒருவரை அழைத்துப் பிரார்த்திக்க முடியுமா என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் பார்ப்போம்.

இணை கற்பித்தல்    தொடர்: 39 
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நம்பிக்கையில் ஊறுவிளைவிப்பவை

நூதன அனுஷ்ட்டானங்கள் (பித்அத்கள்) முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரியதோர் முஸீபத்தாகும். அவைகள் மூலம் அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை அடைந்து கொள்ள முடியும் என்று அதிக முஸ்லிம் மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் (மீலாது) விழா எடுத்தல், மௌலிது பாடல்கள் பாடுதல், அதற்கு மத்தியில் எழுந்து மரியாதை செய்தல், அவர்களுக்கு ஸலாம் சொல்லுதல், அவ்லியாக்கள் நல்லடியார்களின் பெயரில் விழாக்கள் எடுத்தல் இவைகள் அனைத்தும் மார்க்கத்தின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட வழிகெட்ட நூதனங்கள் ஆகும். நபியோ ஸஹாபாக்களோ செய்யாத ஒன்று.
'எவர் நமது விஷயத்தில் (மார்க்கத்தில்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துவாரோ அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'ஒவ்வொரு நூதனமும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அல்லாஹ் தனது திருமறையில், 'இன்றையத் தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்துவிட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாக்கிவிட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை நான் மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன்' (அல்மாயிதா 5:3)

இது போன்ற நூதன அனாச்சாரங்களை இவர்கள் நபி (ஸல்) பெயரில் அரங்கேற்றுவதன் மூலம் விளங்குவது யாதெனில் அல்லாஹ் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கவில்லை என்பதுதான்! பிற்காலத்தில் வந்தவர்கள் பல நூதன அனுஷ்டானங்களை ஏற்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற முடியுமென நினைக்கிறார்கள். இது அல்லாஹ்வையும், ரஸுலையும் புறக்கணிப்பதாகும். மௌலிதுகள், பிறந்த நாள் விழாக்கள் என்பதெல்லாம் மார்க்கத்தில் இருக்குமானால், மேலும் அல்லாஹ் அவைகளை பொருந்திக் கொள்வான் என்றால் இறைத்தூதர் அவர்கள் சமுதாயத்துக்கு அவற்றை அறிவித்துக் கொடுத்திருப்பார்கள். அறிஞர்கள் இந்த அனைத்து மௌலிதுகளையும் நிராகரித்திருக்கிறார்கள். ஏனென்றால் இவைகள் அனைத்தும் வழிகெட்ட நூதன வழிபாடுகள். குறிப்பாக நபியின் மீதுள்ள அன்பு, அளவு கடந்து சென்றதே இந்த நூதனங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தன. 

பெண்கள், ஆண்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்திருத்தல், இசைக்கருவிகளைப் பாவித்தல் போன்ற அனாச்சாரங்களும், நபியிடத்தில் உதவி தேடல், பிரார்த்தித்தல் பாதுகாப்புத் தேடல், இவை போன்ற பெரிய ஷிர்க்குகளும் நிகழ்வதற்கு வழிவகுக்கிறது. இது போன்ற எத்தனையோ நிராகரிப்புக்கு இட்டுச்செல்லும் விஷயங்கள் அங்கு நிகழ்கின்றன.

சிலர் மீண்டும் மீண்டும் புர்தா எனும் பெயரில் அரங்கேற்றும் பூஸரியின் பாடல்களில் நிறைந்து காணப்படும் ஷிர்க்கான வார்த்தைகளைப் பாருங்கள் .


يا أكرم الخلق مالي ألوذ به --- -- سواك عند حدوث الحادث العمم
إن لم تكن آخذا يوم المعاد يدي ---- - صفحا وإلا فقل يا زلة القدم
فإن من جودك الدنيا وضرتها ------ ومن علومك علم اللوح والقلم

இதன் அர்த்தத்தில் எத்தனை ஷிர்க்குகள் நிறைந்து கிடக்கின்றன என்று சற்று கவனியுங்கள். 

படைப்புகளில் சங்கை மிகுந்த நபியவர்களே.. (மறுமை நிகழ்ந்தவுடன்) திடுக்கமும், அச்சமும் சூழ்ந்து கொள்ளும் அந்த நேரத்தில் நான் அடைக்கலம் தேடுவதற்கு எனக்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கின்றார்...

அந்த மறுமை நாளன்று நீங்கள் எனது கரம் பிடித்து, எனக்கு உதவி செய்ய வில்லையென்றால் நான் கால் தடுக்கி நரகத்தில் விழுவதைத் தவிரவேறு வழியில்லை...

உங்கள் கருனை மிகுந்த அருட்கொடையினாலேயே இவ்வுலகமும், அதன் சக்களத்தியான வானங்களும் நிலை பெற்றிருக்கின்றன. இன்னும் லௌஹூல் மஹ்பூழ் எனும் பலகையிலும், கலம் எனும் எழுதுகோல் பற்றிய அறிவும் உம்மிடம் உள்ள அறிவின் ஒரு பகுதியே...

இது போன்ற இறைபண்புகள், மறைவான ஞானம், மறுமை நாளில் பாவங்களை மன்னிப்பது, இவ் உலகத்திலும் மறுமையிலும் காரியங்களைத் திட்டமிடுவது அனைத்துமே வானங்களையும் பூமியையும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் அல்லாஹ்விற்கு மாத்திரம் உரிய பண்புகளாகும். நபிக்காக நடைபெறும் மௌலிது விழாக்களில் அல்லது வேறு நல்லடியார்களின் பெயரில் நடைபெறும் மௌலிதுகளில் இது போன்ற பெரும் தவறுகள் நிகழ்வதைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். அவர்கள் நாம் இவ்வாறான மௌலிதுகளை கொண்டு ரஸுலை நினைவு கூர்வதற்காகவும், அவரது வரலாறை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவுமே செய்கின்றோம் என்று கூறுகின்றனர். சரி அப்படியானால் ஏன் அதைக் குறிப்பிட்ட ஒரு தினத்தில் நடத்துகின்றீர்கள்? ஏனைய காலங்களிலும் பொது மேடையைப் போட்டு அல்லது கூட்டங்களைக் கூட்டி அவர்களின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே...

சரி இதை ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் என்றே எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் கூறுகின்றான், 'நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் கருத்து வேற்றுமைப்பட்டால் அத(ன்தீர்வி)னை அல்லாஹ் ரஸூலின் பக்கம் விட்டு விடுங்கள்' என்று கூறுகின்றான் இதன் படி நாம் இந்த மௌலீது விவகாரத்தை, அல்குர்ஆனின் ஒளியில் தீர்வு தேடினால் அல்குர்ஆன், நபி (ஸல்) அவர்கள் கூறியபடி வாழுமாறும், மார்க்கம் முழுமை பெற்று விட்டது என்றும்தான் இருக்கின்றது.
சரி நபியவர்களிடம் எடுத்துக் கூறி இதற்குக் தீர்வு காண முற்பட்டால் அப்போதும் இவ்வாறான மௌலீதுகளை நபியவர்களோ, ஸஹாபாக்களோ செய்ய வில்லை என்பதே எமக்கு விடையாகக் கிடைக்கின்றது. எனவே இது ஒரு பித்அத் - நபியவர்கள் காட்டித்தராத நூதன அனுஷ்டானம் என்பது தெரிய வருகின்றது. அது மட்டுமல்ல எமது விரோதிகளான யூத கிருஸ்தவர்களிடம் இருந்து காப்பியடிக்கப்பட்ட இவ்வனுஷ்டானங்களை நாமும் புரிவதால் நாம் அவர்களது கலாச்சாரத்தைப் பின்பற்றியதாகவே கணிக்கப்படும்.
நாம் இப்படியான மௌலிது விழாக்களை மறுக்கிறோம். நபியை பின்பற்றுமாறு புனித இறைவேதம் நமக்குச் சொல்கிறது, இறைவேதம் நமக்கு மார்க்கம் பூர்த்தியாகி விட்டதாக அறிவிக்கின்றது. நபியோ ஸஹாபாக்களோ செய்யாத, நமக்கு கற்றுத்தராத இந்த மௌலிதுகளை விழாக்களை நாம் மறுக்கிறோம். இவைகள் மார்க்கத்தில் உள்ளவைகள் அல்ல. இவைகள் நிராகரிக்கப்பட வேண்டிய வழிகெட்ட பித்அத்துகள், இன்னும் யூதர்களின் கிருஸ்தவர்களின் கொண்டாட்டங்களுக்கு ஒப்பான செயல்கள், மனிதர்களில் அதிகமானவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதைப் பார்த்து மனிதனின் புத்தி ஏமாந்து விடக்கூடாது. 
அல்லாஹ் தனது திருமறையில், (நபியே) நீர் பூமியில் பெரும்பான்மையானவர்களைப் பின்பற்றினால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் வழியை விட்டு (திருப்பி) வழிகெடுத்து விடுவார்கள்'. (அல் அன்ஆம் 6:116). 

சில ஆச்சரிய நிகழ்வுகள்
இப்படி அனாச்சாரங்கள் நிறைந்த கொண்டாட்டங்களுக்கு வருகை தருவதில் கவனம் செலுத்தும் அதிகமானவர்கள் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ போன்ற தொழுகையில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். இன்னும் சிலர் மௌலிது நடக்கும் சபைக்கு நபிகளார் (ஸல்)அவர்கள் வருகை தருகிறார்கள் எனும் மூடத்தனமான நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதனால் தான் நபியை வரவேற்பதற்காக எழுந்து பாடல்களை பாடுகின்றனர் இது வழிகெட்டதும் அறியாமைத்தனமான ஒரு செயலாகும்.
நபி (ஸல்) அவர்கள் அடக்கப்பட்டு கப்ரில் இருப்பார்கள். மறுமை நாள் சம்பவிக்கும் வரை அங்கிருந்து வெளியேற மாட்டார்கள் அவர்களுடைய உயிரோ இல்லிய்யீன் எனும் உயர்ந்த நல்லடியார்களின் உயிர்கள் வைக்கப்படும் இடத்தில் ரப்பிடத்தில் இருக்கின்றது. இதனைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, 'மறுமை நாளில் கப்ரில் இருந்து முதலில் எழுப்பப்படுபவனாக நான் இருப்பேன்'. 
நபியின் மீது ஸலாவாத்தும் ஸலாமும் சொல்வதும் (அல்லாஹ்விடத்தில் அருளுக்காகவும் சாந்திக்காவும் பிறார்த்திப்பதுமே) சிறந்த முறையாகும். 

அல்லாஹ் தனது திருமறையில் 'நிச்சயமாக அல்லாஹ் நபியின் மீது அருள் புரிகிறான், அவனது வானவர்களும் நபிக்காக அருள்வேண்டி பிறார்த்திக்கின்றனர், முஃமின்களே நீங்களும் நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்'. (அஹ்ஸாப் 33:66).

ஒரு அடியான் நபியின் மீது முழுமையான அன்பு செலுத்தாத வரை அவன் பரிபூரண முஃமினாக மாட்டான் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

நபியவர்களுக்கே உரிய முறையில் அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும், பின்பற்றப்படும் வழிகாட்டியாக அவர்களை எடுத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாம் மார்க்கமாக்கிய வணக்க வழிபாடுளைத்தவிர அளவு கடந்து செல்லக்கூடாது. 
அல்லாஹ் தனது திருமறையில், '(நபியே மனிதர்களிடம்) நீர் கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக்கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (அப்போது) அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்களது பாவங்களையும் மன்னிப்பான் அல்லாஹ் மன்னித்து கிருபை செய்யக்கூடியவனாக இருக்கிறான்'. (ஆலு இம்ரான் 3:31).

---chittarkottai.com

முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஏராளம்..

முஸ்லிம்களின் செயல்பாடும், முஷ்ரிக்குகளின் செயல்பாடும் ஒருபோதும் ஒத்துபோகாது...


முஸ்லிம் என்றால் (தன் இறைவனுக்கு) முற்றிலும் கீழ்படிந்தவன்.

முஷ்ரிக் என்றால் இறைவனுக்கு கீழ்படிவது போல பிறருக்கும் பிறவற்றுக்கும் கீழ்படிபவன்.

முஸ்லிம்களின் செயல்பாடுகள் அனைத்தும் தன் இறைவனின் திருப்தியை நாடியே இருக்கும்..

முஷ்ரிக்குகளின் செயல்பாடுகள் அனைத்தும் தன் மன திருப்திக்காகவும், தன் முன்னோர்களின் சொல்லை மட்டுமே அடிப்படையாக கொண்டு இருக்கும்..



முஷ்ரிக்குகள் இறைவனை நம்பியிருப்பார்கள்..

முஸ்லீம்கள் இறைவனை நம்ப வேண்டிய விதத்தில் நம்பியிருப்பார்கள்..

முஷ்ரிக்குகள் இறைவனுக்கு ஆற்றல் இருப்பதாக நம்பி அவனை வணங்குவார்கள்..

முஸ்லீம்கள் இறைவனுக்கு மட்டுமே எல்லாம் வல்ல ஆற்றலும் இருப்பதாக நம்பி அவனை மட்டுமே வணங்குவார்கள்.



முஸ்லீம்கள் தனக்கு நேரும் பிரச்சனைகளை அதை தீர்க்கும் தகுதியும் ஆற்றலும் கொண்ட இறைவனிடம் மட்டுமே சிரம் தாழ்த்தி கேட்பார்கள்..

முஷ்ரிக்குகள் இறைவனோடு சேர்த்து (தன் முன்னோர்கள் கற்றுத்தந்த) அவ்லியாக்கள், தன் ஷெய்குமார்கள், நாதாக்கள், சமாதிகள் சமியார்கள் என பலவற்றை நம்பி அவர்களுக்கும் சிரம் தாழ்த்தி கேட்பார்கள்.


முஸ்லீம்கள் மறுமை வெற்றிக்காக தன்னுடைய அமல்களையும், இறைவனின் மன்னிப்பையும் இரக்கத்தையும் நம்பி இருப்பார்கள்..

முஷ்ரிக்குகள் தங்கள் ஷெய்குமார்கள் மற்றும் அவ்லியாக்களின் (இல்லாத) பரிந்துரையை நம்பியிருப்பார்கள்.


முஸ்லீம்களுக்கு இறைவனிடம் கிடைக்கும் அந்தஸ்து உயர்ந்தது..

முஷ்ரிக்குகளுக்கு இறைவனிடம் கிடைப்பது நிரந்தர நரகம்..


"தனக்கு இணை கற்பிக்கப் படுவதை இறைவன் மன்னிக்க மாட்டான்.இதற்கு கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோர்க்கு மன்னிப்பான்.இறைவனுக்கு இணை கற்பிப்பவர் தூரமான வழிகேட்டில் உள்ளார்." (அல்குர்ஆன் - 4:116)