"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

இணை வைத்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா ?

கேள்வி :
வெளிப்படையில் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்தவர் அதே நிலையில் மரணித்து விட்டால் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா?

பதில் :
நம்முடைய வெளிப்படையான பார்வையில் ஒருவர் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்து அதே நிலையில் மரணித்து விட்டார் என்றால் அவருக்கு ஜனாஷா தொழுகை நடத்துவது கூடாது. அதே நேரத்தில் ஒருவர் மரணிப்பதற்கு முன்னால் இணைவைக்கின்ற காரியங்களிலிருந்து வெளியேறிவிட்டார் என்று சாட்சிகளின் மூலம் தெளிவாகிவிடுமென்றால் அவரை முஃமினாகத்தான் நாம் கருதவேண்டும். அது போன்று சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இணைவைத்தவர் என்று நாம் முடிவு செய்யக் கூடாது.
இறுதி வரை இணைகற்பிக்கும் காரியங்களை செய்து மரணித்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதும், பாவமன்னிப்பிற்காக பிரார்த்தனை செய்வதும் கூடாது என்பதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

ஆதாரம் : 1
مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ (113) وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ (114)} )التوبة(

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர் (அல்குர்ஆன் 9 : 113, 114)

மேற்கண்ட வசனத்தில் நபியும், இறைநம்பிக்கை கொண்டவர்களும் இணைகற்பிப்போருக்கு பாவமன்னிப்பு தேடுவது கூடாது என அல்லாஹ் தடுக்கின்றான்.
ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காக கேட்கின்ற பாவமன்னிப்பு பிரார்த்தனைதான். எனவே இணைகற்பித்த நிலையில் மரணித்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது கூடாது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
ஆதாரம் : 2
அப்துல்லாஹ் பின் உபைபின் சலூல் என்பவன் முனாஃபிக்கீன்களின் தலைவனாக இருந்தான். முனாஃபிக்கீன்கள் அனைவரும் காஃபிர்களாகத்தான் மரணிக்கின்றனர். அந்த அப்துல்லாஹ் மரணித்த நேரத்தில் அல்லாஹ் பின்வரும் வசனங்களை அருளினான்

اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (80) التوبة
(முஹம்மதே!) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 80)
{وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ (84)} [التوبة]
அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.
(அல்குர்ஆன் 9 : 84)
இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்து மரணித்தவர்களுக்கு பாவமன்னிப்பு தேடக்கூடாது எனவும், அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது கூடாது என்றும் மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
ஆதாரம் : 3
நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையான அபூதாலிப் இணைகற்பித்த நிலையில் மரணித்த காரணத்தினால் அவர்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதற்கு அல்லாஹ் தடைவிதித்து விட்டான்.
صحيح البخاري
4675حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِيهِ ، قَالَ : لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعِنْدَهُ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللهِ بْنُ أَبِي أُمَيَّةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَيْ عَمِّ قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللهِ فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ فَنَزَلَتْ {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيِّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ}.
முஸய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையான அபூதாலிபுக்கு மரணவேளை வந்த போது அவரருகில் அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் இருக்க, நபி (ஸல்) அவர்கள் வந்து, என் பெரிய தந்தையே! லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடம் தங்களுக்காக வாதாடுவேன் என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் உமய்யாவும், அபூதாலிபே! (உங்கள் தகப்பனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் மார்க்கத்தையா நீங்கள் வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், (பெரிய தந்தையே!) உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும்வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பேன் என்று சொன்னார்கள். அப்போது தான் , இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. எனும் (9:113 ஆவது) இறைவசனம் அருளப்பட்டது
நூல் : புகாரி (4675)
ஆதாரம் : 4
நபி (ஸல்) அவர்களின் தாயார் இணைகற்பித்தவர்களாக மரணித்த காரணத்தினால் அல்லாஹ் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதை நபியவர்களுக்கு தடைசெய்துவிட்டான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1776)
மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து இணைகற்பித்த நிலையில் மரணித்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது கூடாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

படைப்பினங்களில் மோசமானவர்கள்

கப்ருகளைக் கட்டி அதை வணங்கக்கூடாது என்பதற்கு நாம் ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக, நபியவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

அபூவாகித் அல்லைஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க் கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.) நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும். இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாளைத் தொங்க விட்டு எடுத்துச் செல்வர். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.) எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.

இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!)’’ எனக் கூறிப் பின்னர், “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.

‘‘அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தனர். ‘மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!’ என்று கேட்டனர்’’ (7:138)

என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர், ‘‘உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி 2180

மற்றுமொரு அறிவிப்பில் அபூஸைதுல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

“உங்களுக்கு முன்பிருந்தவர்களைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள்! அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தாலும், (அதிலும்) நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது (முன்பிருந்தவர்கள் என்றால்) “யூதர் களையும், கிறித்தவர்களையுமா குறிப்பிடுகின்றீர்கள்?” என நாம் கேட்ட போது, “வேறு யாரை?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
நூல்கள்: புகாரி 7320, முஸ்லிம் 2669

நாம் உயிருடன் இருக்கும் போதே மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்றால் நாம் இறந்த பிறகு நம்முடைய கபுரையும் வணக்கத் தலமாக ஆக்கிவிடுவார்களோ என்று பயந்துதான் நபியவர்கள் தம்முடைய இறுதி மரண வேளையிலும் இதைப் பற்றி எச்சரித்தார்கள்.

இறை சாபத்தைப் பெற்றுத் தரும் தர்கா வழிபாடு

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கி விட்டார்கள்’ எனக் கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி (ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் கப்ரும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  நூல்: புகாரி புகாரி 1390

மேலும் இதை விடக் கடுமையாகவும் நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களுடன் அல்லாஹ் போர் புரிகிறான்’’ என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 437

தர்ஹாக்கள் கட்ட கூடாது; விழா எடுக்கக் கூடாது என்பதற்கு நாம் இத்தனை ஆதாரங்களையும் காட்டிய பிறகு இவையெல்லாம் நபிமார்களுக்கு உரிய சட்டங்கள்; வலிமார்கள், நல்லடியார்கள். இறைநேசர்களுக்குப் பொருந்தாது; எனவே அவர்களுக்கு தர்ஹாக்கள் கட்டலாம்; விழா எடுக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். ஆனால் இதற்கும் நபியவர்கள் முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் நபிமார்கள் மற்றும் நல்லடியார்களுடைய கபுர்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள். நீங்களும் கபுர்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன்.         நூல்:  முஸ்லிம் 827

மேற்கண்ட செய்தியில், நபிமார்கள் மட்டுமல்ல; நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களுக்கும் கபுர்களைக் கட்டி அதை வணங்குமிடமாக - விழா கொண்டாடும் இடமாக ஆக்கக்கூடாது என்பது தெள்ளத் தெளிவாக இருக்கின்றது.

நபிமார்கள் அனைவருமே நல்லடியார்கள், இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை; சந்தேகமும் இருக்கக் கூடாது. அத்தகைய இறைநேசர்களுக்கே கப்ரு கட்டக்கூடாது என்றால் இன்றைக்கு வலிமார்கள் அவ்லியாக்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு, அவர்களுக்குக் கபுர்களைக் கட்டுவதென்பது வரம்பு மீறிய செயலாகத்தான் இருக்க முடியும்.

நாம் அவ்லியாக்கள் என்று நினைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றவர் களெல்லாம் இறைநேசர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த உலகத்தில் அவ்லியாக்கள் என்று நினைத்தவர்கள் ஒருவேளை நாளை மறுமையில் பாவிகளாக, ஷைத்தான்களாகக் கூட இருக்கலாம்.

நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்களையே அல்லாஹ் சபிக்கின்றான் என்றால் முகவரியற்ற இந்த அவ்லியாக்கள் எம்மாத்திரம்? எனவே, சபிக்கப் பட்டவர்கள் ஒன்று கூடுகின்ற இடத்திற்கு ஒரு இறைவிசுவாசி செல்லமாட்டான்.

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் ஒன்றுகூடும் தளமே தர்ஹா

மேலும் நபியவர்கள் தமது வாழ்நாளில் இறுதியாகச் செய்த எச்சரிக்கையும் இது குறித்து தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் படைப்பினங்களிலேயே மிக மோசமானவர்கள் யாரெனில், தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்கள் தான். நூல்: அஹ்மத் 1599

இறைவனின் படைப்புகளிலேயே மனிதப் படைப்பு தான் சிறந்த ஒரு படைப்பு. அந்த மனிதப் படைப்புகளில் ஃபிர்அவ்ன் என்பவன் ஒரு கொடியவன்; மோசமானவன். ஏனென்றால் அவன் தன்னையே கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்தவன். ஆனால் அவனை விட மோசமானவர்கள் தான், ஷிர்க்கை ஒழித்து தவ்ஹீதை நிலைநாட்ட வந்த நபிமார்களையே கடவுள்களாக ஆக்கிக் கொண்டவர்கள். இவர்களைப் பற்றித்தான் நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:
உம்மு ஹபீபா (ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர், தாங்கள் அபீஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத்தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்’ என்று கூறினார்கள். நூல்: புகாரி 427

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 434, 1341, 3873 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தன்மை அப்படியே நம்முடைய சமுதாய மக்களிடத்தில் இருக்கிறதா இல்லையா? இத்தகைய தன்மை பெற்றவர்கள் தான் படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் என நபிகளார் எச்சரிக்கின்றார்கள். நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டவர்களே படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் என்றால் முகவரியற்ற அவ்லியாக்களுக்குப் பின்னால் செல்பவர்கள் எத்தகையவர்கள் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வணக்கத்தலமாக்கப்படாத அடக்கத்தலம்

மேலும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு இதைப் பற்றி எச்சரிக்கை செய்தது மட்டுமல்லாமல் தன்னுடைய கபுரையும் வணக்கத்தலமாக ஆக்கிவிடக் கூடாது என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள்.

‘இறைவா! எனது அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே’ என்று  அல்லாஹ்வின் தூதர்   (ஸல்) அவர்கள்  பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்: அஹ்மத் 7054

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் தான் அவர்களது கப்ர் பாதுகாக்கப்படுகின்றது. இல்லையென்றிருந்தால் நமது தர்ஹா பக்தர்கள் அவர்களது கப்ரடியிலும்  உட்கார்ந்து 12 நாட்கள் மௌலீது வைபவம் நடத்தி ஊதுபத்தி,  பழம், தேங்காய் சகிதம் அபிசேகம் செய்திருப்பார்கள். அல்லாஹ் அதை விட்டும் காப்பாற்றிவிட்டான்.

தர்ஹா (கப்ர்) கட்டுவது கூடாது

மேலும் நபியவர்கள் கப்ருகளைக் கட்டுவது மட்டுமல்லாமல் அது சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள்.

கப்ரு பூசப்படுவதையும் அதன்மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் ரலி) நூல்: முஸ்லிம் 1610

தரைமட்டமாக்கப்பட வேண்டிய தர்ஹாக்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.

அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத் (ரலி) நூல்: அஹ்மத் 22834

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன்.  எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ நூல்: முஸ்லிம் 1609.

இன்னும் இதுபோன்று தர்ஹா வழிபாடு இணைவைப்பு சம்பந்தமான வரட்டு வாதங்களையும் அதற்குரிய நமது பதில்களையும் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய இதழ்களில் பார்ப்போம்.

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு கப்ரு வணங்கிகள், நபியவர்களே ஜியாரத் செய்யச் சொல்லியிருக்கிறார்கள், ஜியாரத் என்றால் சந்திப்பு என்று பொருள்! நபியவர்கள் சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் உயிரில்லாத ஒருவரையா சந்திக்கச் சொல்வார்கள்? உயிருடன் உள்ளவர்களைத்தானே சந்திக்க சொல்வார்கள்? எனவே கப்ரைச் சந்தியுங்கள் என்று நபியவர்கள் சொல்வதிலிருந்தே கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். நாம் சொல்வதைச் செவியேற்பார்கள். நமக்கு உதவியும் செய்வார்கள் என்று பைத்தியக்காரத்தனமான ஒரு வாதத்தை வைக்கின்றார்கள்.

ஜியாரத் என்ற சொல்லுக்கு மனிதரைச் சந்திப்பது என்ற குறுகிய அர்த்தம் கிடையாது. அதற்குப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக, திருநெல்வேலி சந்திப்பு, திருச்சி, எக்மோர் சந்திப்பு என்று சொல்கிறோம். இதிலும் சந்திப்பு என்று வந்திருக்கிறது. அதனால் இரயிலை போய் சந்தித்து விட்டு வர வேண்டும் என்று அர்த்தம் கொள்வோமா! ஆனால் இந்தச் சந்திப்புக்கும் அரபியில் ஜியாரத் என்று சொல்லப்படும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாகனத்திலும் நடந்தும் குபாவை சந்திக்கச் செல்வார்கள்.
நூல்: முஸ்லிம் 2705

 நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் (கஅபாவை) தவாபுஸ் ஸியாரத் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரி 1732

மேற்கண்ட ஹதீஸ்களில் நபியவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று குபாவைச் சந்திக்கச் செல்வார்கள் என்றும், மினாவில் தங்கும் நாட்களில் கஅபாவை ஸியாரத் செய்தார்கள் என்றும் வந்துள்ளது. இதை வைத்துக் கொண்டு இவர்கள் கொடுக்கின்ற அர்த்தத்தின் அடிப்படையில் நபியவர்கள் குபாவிற்கோ, அல்லது கஅபாவிற்கோ சென்று அங்குள்ள பள்ளிவாசலிடம் உரையாடுவதற்குச் சென்றார்கள். அதனிடம் துஆச் செய்தார்கள் என்று அர்த்தம் கொடுப்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு அறுந்து விட்டது. துண்டிக்கப்பட்டு விட்டது. இறந்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதற்கு நேரடியாகக் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கபுருக்குச் சென்று நாம் சலாம் சொல்வது அவர்களுக்குக் கேட்கும். நபியவர்கள் கப்ரை சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்யலாம். நமது கோரிக்கையை வைக்கலாம் என்று குருட்டுத் தனமான வாதங்களை வைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
யாரேனும் ஒருவர் என் மீது சலாம் சொல்வாரேயானால், அவருடைய ஸலாமுக்கு நான் பதில் சலாம் சொல்வதற்காக வேண்டி அல்லாஹ் எனக்கு என்னுடைய ரூஹை (உயிரை) திருப்பித் தருகிறான்.
நூல்: அபூதாவூத் 2043

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இது சரியான ஹதீஸா என்பது ஒருபுறமிருக்க. இதை சரி என வாதிடக்கூடியவர்கள் இந்த ஹதீஸை மக்களுக்கு உரையாற்றும் போது கூறுவார்கள். ஆனால் இந்த ஹதீஸில் ஆழமாகச் சென்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் விழிப்பார்கள்.

இந்த ஹதீஸ் அவர்களுக்கு எதிராகவே இருக்கின்றது. ஏனென்றால் அவர்கள் நம்பிக்கையின் பிரகாரம் நபியவர்கள் மரணிக்கவில்லை. இன்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பது தான். ஆனால் மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வருகின்றது.

நாம் சலாம் சொல்லும் போது மட்டும் அல்லாஹ் அவர்களுக்கு உயிர் கொடுக்கிறான் என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் நபியவர்கள் பதில் சலாம் சொன்னவுடன் மீண்டும் அல்லாஹ் அவர்களுடைய உயிரைக் கைப்பற்றிக் கொள்கிறான்.

இதில் அவர்கள் பாதியை மறைத்துக் கொண்டு அரையும் குறையுமாக மக்களுக்குச் சொல்வார்கள். பார்த்தீர்களா! நபியவர்கள் உலகில் உள்ள எல்லா மக்களுடைய சலாமிற்கும் பதில் சலாம் சொல்வார்கள். எனவே நபியவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள்.

இந்த ஹதீஸ் சம்பந்தமாக நம்முடைய நிலைபாடு என்னவென்றால், மேற்கண்ட ஹதீஸ் பல நம்பகமான சரியான ஹதீசுக்கு முரணாக உள்ளது. மேலும் இந்த ஹதீஸில் பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.

அதாவது வேறு ஹதீஸ்களில், நபியவர்களுக்குச் சொல்லப்படும் சலாமையும் சலவாத்தையும் மலக்குமார்கள் எடுத்துக் காட்டுவார்கள் என்று வருகின்றது. ஆனால் இந்த ஹதீஸில் சொல்லப்படும் அனைத்து சலாமிற்கும் இறைவனால் உயிர் கொடுக்கப்பட்டு பதில் சலாம் சொல்வார்கள் என்று வருகின்றது. அப்படியானால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வினாடியும் உலகத்தின் மூலை முடுக்கிலுள்ள ஒவ்வொருவரும் நபிகள் நாயகத்தின் மீது சலாமும், சலவாத்தும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நபியவர்கள் அனைவருக்கும் பதில் சலாம் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் என்றால் அவர்கள் மரணிக்காமல் இருக்கிறார்கள் என்ற அர்த்தம் வந்து விடும்.

அப்படி இருந்தால் நபியவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பும் நிலையே ஏற்படாது. எப்போதும் பதில் சலாம் சொல்லிக் கொண்டு உயிருடன் தான் இருந்திருப்பார்கள். எனவே இந்த ஹதீஸ் அர்த்தமற்றதாகி விடுகின்றது.

ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸ் சரி என்று வைத்துக் கொண்டாலும், ஸலாமுக்குப் பதில் சொல்வதற்காக உயிரைத் திருப்பித் தருகிறான் என்று சொல்வதிலிருந்தே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது உறுதியாகி விடுகின்றது.

இவர்கள் கூறும் அர்த்தத்தை  நாம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் நபிகளார் மரணிக்கவில்லை. மரணிக்கவும் மாட்டார்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகி மரணிக்காத நித்திய ஜீவனாகிய இறைவனுக்கு இணை வைக்கின்ற மாபாதக நிலை ஏற்பட்டு விடும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும வணங்கக் கூடாது. அவனைத் தவிர வேறு யாருக்கும்  மறைவான ஞானம் இல்லை. அற்புதம் செய்யும் ஆற்றலும் அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவன் மரணிக்காதவன். நித்திய ஜீவன். அவனைத்த தவிர மற்ற அனைவரும் மரணிப்பவர்களே. அவர்கள் இறைவனின் தூதர்களாக இருந்தாலும் சரியே! இறைநேசர்களாக இருந்தாலும் சரியே! அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விட்டது என்பதைப் பல்வேறு குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன்  பார்த்தோம்.

இறுதியாக, இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் ஒரு கண்டனத்தைப் பதிவு செய்தார்கள். நபியவர்கள் பொது மண்ணறைகளைச் சென்று சந்தியுங்கள் என்றார்கள். ஆனால் இவர்கள் இன்று ஒருவரை மகான் என்று தாங்களாகவே சொல்லிக் கொண்டு அவருடைய மண்ணறையைச் சுற்றி ஒரு கட்டடத்தைக் கட்டியிருக்கின்றார்கள்.

நபிமார்கள் மற்றும் நபித்தோழர்களுக்கே இல்லாத ஒரு கட்டடத்தை யாரென்று தெரியாத மனிதர்களுக்குக் கட்டி வைத்திருக்கின்றார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இழிசெயலைத் தான் நபியவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள். எந்த அளவிற்கென்றால் தான் மரணிக்கப் போகின்ற கடைசிக் கால கட்டத்தில் கூட இதை (இணை வைப்பை) பற்றித்தான் அதிகமாக எச்சரித்தார்கள். அந்த எச்சரிக்கைகளை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்,