"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு இறங்கியதாம்

இறை வசனங்களை காட்டி மக்கா காபிர்கள் சிலைகளை வணங்கியது போல  தர்ஹா சடங்குகளை செய்கிறீர்கள் இதை விட்டும் தவிர்த்து கொள்ளுமாறு   உபதேசம் செய்தால் என்ன சொல்லி முஸ்லிம்களை  ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு இறங்கியது; முஸ்லிம்களுக்கு அல்ல என்று லேசாகக்கூறி முஸ்லிம்களை ஏமாற்றிவிடுகிறார்கள். ஒரு குற்றத்தை முஸ்லிம் செய்தாலும் குற்றம் தான்; காஃபிர் செய்தாலும் குற்றம்தான் என்ற சாதரண உண்மை கூட தெரியாதவர்களாகவா இந்த முல்லாக்கள்  இருக்கிறார்கள்.

    காஃபிர் திருடினால் குற்றம்; முஸ்லிம் திருடினால் குற்றம் இல்லை. காஃபிர் சாராயம் குடித்தால்தான் குற்றம் முஸ்லிம் சாரயம் குடித்தால் குற்றம் இல்லை; காஃபிர் விபச்சாரம் செய்தால் குற்றம் முஸ்லிம் விபச்சாரம் செய்தால் குற்றம் இல்லை என்று  இவர்கள் கூறுவார்களா? இல்லயே!  குற்றங்களை யார் செய்தாலும் குற்றவாளிகள் தான்; தண்டனைக்குறியவர்கள் தான் என்ற சாதரண உண்மை கூட  இவர்களுக்கு தெரியாதா?

 
ஆதி மனிதர் ஆதம்(அலை)  ஒரு நபி அவர் பிறப்பால் முஸ்லிம் அவர்களின் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான். பின்னர் எப்படி காஃபிர்கள் முளைத்தார்கள் என்று சிந்திக்க மாட்டார்களா? முஸ்லிமாக பிறந்தவர்கள் தான் இறைவனுக்கு மாறு செய்வதன் மூலம் காஃபிர்கள் ஆனார்கள் என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாதா?
    அத்தியாம் 18: 102-106 ல் கூறப்படும் கண்டனங்கள் காஃபிர்களுக்காக இறங்கியது என்கிறார்களே அந்த காபிர்கள் யார்? அந்த குறைஷிகள் யார்? இப்றாஹீம்(அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் நேரடி வாரிசுகள் காஃபத்துல்லாஹ்வை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்துல்லாஹ், ஆமினா, அப்பாஸ், ஹம்ஸா என்று அழகிய இஸ்லாமிய பெயர்களை உடையவர்களாக இருந்தார்கள். சுன்னத் செய்யப்பட்டிருந்தது. குர்ஆன் இறங்கிய அரபு மொழி பேசினார்கள்.
    வருடா வருடம் ஹஜ் செய்தார்கள். தான தர்மம் செய்தார்கள். இப்றாஹீம்(அலை) அவர்களின் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொன்டார்கள். இவர்களின் அகராதிப்படி இன்றைய இந்திய இலங்கை  முஸ்லிம்களைவிட பன்மடங்கு உயர்வான முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட முஸ்லிகளைப் பார்த்தே அல்லாஹ் காஃபிர் என்று கூறி எச்சரிக்கிறான் என்பதை இந்த முல்லாக்கள் சிந்திக்க வேண்டாமா?
   அவர்கள் தங்களை இப்றாஹீம்(அலை) அவர்களின் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லாஹ் தடுத்துள்ளதற்கு மாறாக அவுலியாக்களிடம் தங்களின் வேண்டுதல்களை வைப்பவர்களாக இருந்தார்கள். அதாவது அல்லாஹ்வின் அடியார்களான அவுலியாக்களை தங்களின் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்காக  அல்லாஹ்விடம்  மன்றாடுவார்கள், சிபாரிசு செய்வார்கள் என்று நம்பியே தர்ஹா சடங்குகளைச் செய்து வந்தனர். அல்குர்ஆன் 18:10, 18:102-106, 39:3 ஆகிய இறை வசனங்களை ஓதினால் சிந்திப்பவர்களுக்கு உண்மை விளங்கும்.
   இஸ்லாத்திலிருந்து குஃப்ர் தோன்றுகிறதேயல்லாமல் குஃப்ரிலிருந்து இஸ்லாம் தோன்றவில்லை. என்பதை உணர்வார்களாக. இந்த அடிப்படையில்தான் இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான குறைஷிகள் உண்மையில் தாங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றுவதாக எண்ணிக்கொண்டுதான் அல்லாஹ்வின் அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக்கி அவர்களின் சமாதிகளில், சிலைகளுக்கு முன்னால் தங்களின் வேண்டுதல்களை வைத்து, அதன் காரணமாக அல்லாஹ்வால் காஃபிராக்கப்பட்டார்கள்.
    அதேபோல் இன்றைய முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாக நம்பிக்கொண்டு அல்லாஹ் தடுத்துள்ளதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் அடியார்களான அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக ஆக்கி அவர்களிடம் தங்களின் வேண்டுதல்களை வைத்தால், அவர்களை அல்லாஹ்விடம் சிபாரிசு, மன்றாட்டம் செய்பவர்களாக ஆக்கிக் கொண்டால், இப்றாஹீம்(அலை) அவர்களின் சந்ததிகள் காஃபிராக்கப்பட்டது போல் இவர்களும் காஃபிராக்கப்படுவார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?
    எனவே 18:102-106 வசனங்கள் காபிர்களுக்கு இறங்கியது; முஸ்லிம்களுக்கு என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களை நரகில் கொண்டு தள்ளவேண்டாம். முஸ்லிமான ஆண், பெண் அனைவரையும் “தர்ஹா மாயை”யை விட்டு விடுபட்டு படைத்த இறைவனை மட்டுமே பாதுகாவலனாக எடுத்து அவனிடமே தங்களின் வேண்டுதல்கள் கோரிக்கைகள் அனைத்தையும் வைக்கும்படி அவர்களுக்கு உபதேசிக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இணை வைத்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா ?

கேள்வி :
வெளிப்படையில் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்தவர் அதே நிலையில் மரணித்து விட்டால் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா?

பதில் :
நம்முடைய வெளிப்படையான பார்வையில் ஒருவர் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்து அதே நிலையில் மரணித்து விட்டார் என்றால் அவருக்கு ஜனாஷா தொழுகை நடத்துவது கூடாது. அதே நேரத்தில் ஒருவர் மரணிப்பதற்கு முன்னால் இணைவைக்கின்ற காரியங்களிலிருந்து வெளியேறிவிட்டார் என்று சாட்சிகளின் மூலம் தெளிவாகிவிடுமென்றால் அவரை முஃமினாகத்தான் நாம் கருதவேண்டும். அது போன்று சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இணைவைத்தவர் என்று நாம் முடிவு செய்யக் கூடாது.
இறுதி வரை இணைகற்பிக்கும் காரியங்களை செய்து மரணித்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதும், பாவமன்னிப்பிற்காக பிரார்த்தனை செய்வதும் கூடாது என்பதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

ஆதாரம் : 1
مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ (113) وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ (114)} )التوبة(

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர் (அல்குர்ஆன் 9 : 113, 114)

மேற்கண்ட வசனத்தில் நபியும், இறைநம்பிக்கை கொண்டவர்களும் இணைகற்பிப்போருக்கு பாவமன்னிப்பு தேடுவது கூடாது என அல்லாஹ் தடுக்கின்றான்.
ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காக கேட்கின்ற பாவமன்னிப்பு பிரார்த்தனைதான். எனவே இணைகற்பித்த நிலையில் மரணித்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது கூடாது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
ஆதாரம் : 2
அப்துல்லாஹ் பின் உபைபின் சலூல் என்பவன் முனாஃபிக்கீன்களின் தலைவனாக இருந்தான். முனாஃபிக்கீன்கள் அனைவரும் காஃபிர்களாகத்தான் மரணிக்கின்றனர். அந்த அப்துல்லாஹ் மரணித்த நேரத்தில் அல்லாஹ் பின்வரும் வசனங்களை அருளினான்

اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (80) التوبة
(முஹம்மதே!) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 80)
{وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ (84)} [التوبة]
அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.
(அல்குர்ஆன் 9 : 84)
இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்து மரணித்தவர்களுக்கு பாவமன்னிப்பு தேடக்கூடாது எனவும், அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது கூடாது என்றும் மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
ஆதாரம் : 3
நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையான அபூதாலிப் இணைகற்பித்த நிலையில் மரணித்த காரணத்தினால் அவர்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதற்கு அல்லாஹ் தடைவிதித்து விட்டான்.
صحيح البخاري
4675حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِيهِ ، قَالَ : لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعِنْدَهُ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللهِ بْنُ أَبِي أُمَيَّةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَيْ عَمِّ قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللهِ فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ فَنَزَلَتْ {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيِّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ}.
முஸய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையான அபூதாலிபுக்கு மரணவேளை வந்த போது அவரருகில் அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் இருக்க, நபி (ஸல்) அவர்கள் வந்து, என் பெரிய தந்தையே! லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடம் தங்களுக்காக வாதாடுவேன் என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் உமய்யாவும், அபூதாலிபே! (உங்கள் தகப்பனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் மார்க்கத்தையா நீங்கள் வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், (பெரிய தந்தையே!) உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும்வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பேன் என்று சொன்னார்கள். அப்போது தான் , இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. எனும் (9:113 ஆவது) இறைவசனம் அருளப்பட்டது
நூல் : புகாரி (4675)
ஆதாரம் : 4
நபி (ஸல்) அவர்களின் தாயார் இணைகற்பித்தவர்களாக மரணித்த காரணத்தினால் அல்லாஹ் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதை நபியவர்களுக்கு தடைசெய்துவிட்டான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1776)
மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து இணைகற்பித்த நிலையில் மரணித்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது கூடாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

படைப்பினங்களில் மோசமானவர்கள்

கப்ருகளைக் கட்டி அதை வணங்கக்கூடாது என்பதற்கு நாம் ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக, நபியவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

அபூவாகித் அல்லைஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க் கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.) நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும். இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாளைத் தொங்க விட்டு எடுத்துச் செல்வர். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.) எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.

இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!)’’ எனக் கூறிப் பின்னர், “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.

‘‘அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தனர். ‘மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!’ என்று கேட்டனர்’’ (7:138)

என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர், ‘‘உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி 2180

மற்றுமொரு அறிவிப்பில் அபூஸைதுல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

“உங்களுக்கு முன்பிருந்தவர்களைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள்! அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தாலும், (அதிலும்) நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது (முன்பிருந்தவர்கள் என்றால்) “யூதர் களையும், கிறித்தவர்களையுமா குறிப்பிடுகின்றீர்கள்?” என நாம் கேட்ட போது, “வேறு யாரை?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
நூல்கள்: புகாரி 7320, முஸ்லிம் 2669

நாம் உயிருடன் இருக்கும் போதே மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்றால் நாம் இறந்த பிறகு நம்முடைய கபுரையும் வணக்கத் தலமாக ஆக்கிவிடுவார்களோ என்று பயந்துதான் நபியவர்கள் தம்முடைய இறுதி மரண வேளையிலும் இதைப் பற்றி எச்சரித்தார்கள்.

இறை சாபத்தைப் பெற்றுத் தரும் தர்கா வழிபாடு

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கி விட்டார்கள்’ எனக் கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி (ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் கப்ரும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  நூல்: புகாரி புகாரி 1390

மேலும் இதை விடக் கடுமையாகவும் நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களுடன் அல்லாஹ் போர் புரிகிறான்’’ என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 437

தர்ஹாக்கள் கட்ட கூடாது; விழா எடுக்கக் கூடாது என்பதற்கு நாம் இத்தனை ஆதாரங்களையும் காட்டிய பிறகு இவையெல்லாம் நபிமார்களுக்கு உரிய சட்டங்கள்; வலிமார்கள், நல்லடியார்கள். இறைநேசர்களுக்குப் பொருந்தாது; எனவே அவர்களுக்கு தர்ஹாக்கள் கட்டலாம்; விழா எடுக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். ஆனால் இதற்கும் நபியவர்கள் முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் நபிமார்கள் மற்றும் நல்லடியார்களுடைய கபுர்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள். நீங்களும் கபுர்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன்.         நூல்:  முஸ்லிம் 827

மேற்கண்ட செய்தியில், நபிமார்கள் மட்டுமல்ல; நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களுக்கும் கபுர்களைக் கட்டி அதை வணங்குமிடமாக - விழா கொண்டாடும் இடமாக ஆக்கக்கூடாது என்பது தெள்ளத் தெளிவாக இருக்கின்றது.

நபிமார்கள் அனைவருமே நல்லடியார்கள், இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை; சந்தேகமும் இருக்கக் கூடாது. அத்தகைய இறைநேசர்களுக்கே கப்ரு கட்டக்கூடாது என்றால் இன்றைக்கு வலிமார்கள் அவ்லியாக்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு, அவர்களுக்குக் கபுர்களைக் கட்டுவதென்பது வரம்பு மீறிய செயலாகத்தான் இருக்க முடியும்.

நாம் அவ்லியாக்கள் என்று நினைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றவர் களெல்லாம் இறைநேசர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த உலகத்தில் அவ்லியாக்கள் என்று நினைத்தவர்கள் ஒருவேளை நாளை மறுமையில் பாவிகளாக, ஷைத்தான்களாகக் கூட இருக்கலாம்.

நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்களையே அல்லாஹ் சபிக்கின்றான் என்றால் முகவரியற்ற இந்த அவ்லியாக்கள் எம்மாத்திரம்? எனவே, சபிக்கப் பட்டவர்கள் ஒன்று கூடுகின்ற இடத்திற்கு ஒரு இறைவிசுவாசி செல்லமாட்டான்.

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் ஒன்றுகூடும் தளமே தர்ஹா

மேலும் நபியவர்கள் தமது வாழ்நாளில் இறுதியாகச் செய்த எச்சரிக்கையும் இது குறித்து தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் படைப்பினங்களிலேயே மிக மோசமானவர்கள் யாரெனில், தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்கள் தான். நூல்: அஹ்மத் 1599

இறைவனின் படைப்புகளிலேயே மனிதப் படைப்பு தான் சிறந்த ஒரு படைப்பு. அந்த மனிதப் படைப்புகளில் ஃபிர்அவ்ன் என்பவன் ஒரு கொடியவன்; மோசமானவன். ஏனென்றால் அவன் தன்னையே கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்தவன். ஆனால் அவனை விட மோசமானவர்கள் தான், ஷிர்க்கை ஒழித்து தவ்ஹீதை நிலைநாட்ட வந்த நபிமார்களையே கடவுள்களாக ஆக்கிக் கொண்டவர்கள். இவர்களைப் பற்றித்தான் நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:
உம்மு ஹபீபா (ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர், தாங்கள் அபீஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத்தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்’ என்று கூறினார்கள். நூல்: புகாரி 427

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 434, 1341, 3873 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தன்மை அப்படியே நம்முடைய சமுதாய மக்களிடத்தில் இருக்கிறதா இல்லையா? இத்தகைய தன்மை பெற்றவர்கள் தான் படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் என நபிகளார் எச்சரிக்கின்றார்கள். நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டவர்களே படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் என்றால் முகவரியற்ற அவ்லியாக்களுக்குப் பின்னால் செல்பவர்கள் எத்தகையவர்கள் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வணக்கத்தலமாக்கப்படாத அடக்கத்தலம்

மேலும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு இதைப் பற்றி எச்சரிக்கை செய்தது மட்டுமல்லாமல் தன்னுடைய கபுரையும் வணக்கத்தலமாக ஆக்கிவிடக் கூடாது என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள்.

‘இறைவா! எனது அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே’ என்று  அல்லாஹ்வின் தூதர்   (ஸல்) அவர்கள்  பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்: அஹ்மத் 7054

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் தான் அவர்களது கப்ர் பாதுகாக்கப்படுகின்றது. இல்லையென்றிருந்தால் நமது தர்ஹா பக்தர்கள் அவர்களது கப்ரடியிலும்  உட்கார்ந்து 12 நாட்கள் மௌலீது வைபவம் நடத்தி ஊதுபத்தி,  பழம், தேங்காய் சகிதம் அபிசேகம் செய்திருப்பார்கள். அல்லாஹ் அதை விட்டும் காப்பாற்றிவிட்டான்.

தர்ஹா (கப்ர்) கட்டுவது கூடாது

மேலும் நபியவர்கள் கப்ருகளைக் கட்டுவது மட்டுமல்லாமல் அது சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள்.

கப்ரு பூசப்படுவதையும் அதன்மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் ரலி) நூல்: முஸ்லிம் 1610

தரைமட்டமாக்கப்பட வேண்டிய தர்ஹாக்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.

அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத் (ரலி) நூல்: அஹ்மத் 22834

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன்.  எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ நூல்: முஸ்லிம் 1609.

இன்னும் இதுபோன்று தர்ஹா வழிபாடு இணைவைப்பு சம்பந்தமான வரட்டு வாதங்களையும் அதற்குரிய நமது பதில்களையும் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய இதழ்களில் பார்ப்போம்.

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.