"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?

முன்னோர்களைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றுவதைக் கண்டிக்கும் குர்ஆன் வசனங்கள் தங்களுக்குப் பொருந்தாது. அவை காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்கள். “காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, எங்களைப் போன்ற மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?” என்றும் கேட்கின்றனர். இந்தக் கேள்வி எவ்வளவு தவறானது? என்பதையும், அவர்களின் கேள்வியிலேயே அவர்களுக்கு பதிலும் அமைந்துள்ளது என்பதையும் பார்ப்போம்.
“அல்லாஹ் இறக்கியருளியவற்றின் பாலும் (அவன்) தூதரின் பாலும் வாருங்கள்!” என்று அவர்களுக்குச் சொல்லப்படும் போது, எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 5: 104)
“குர்ஆனையும், நபிவழியையும் பின்பற்றுங்கள்!” என்று சொல்லப்பட்ட போது “எங்கள் முன்னோர்களையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று காபிர்கள் சொன்னார்கள். அதில் சந்தேகமில்லை. இதுபோன்ற வசனங்கள் காபிர்கள் பற்றியே இறங்கியது என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் இப்படிச் சொன்னதால் தான் காபிர்கள் என்ற பெயரைப் பெற்றோர்களேயன்றி, காபிராகவே பிறக்கவில்லை. முஸ்லிம், காபிர் என்ற பேதம் பிறப்பால் உருவாவது அல்லவே! எந்த வாதத்தை எடுத்து வைத்ததினால் ஒரு சமுதாய மக்கள் காபிர்களானவர்களோ – அவர்கள் காபிர்களாக ஆனதற்கு எது காரணமாக இருந்ததோ -அதை முஸ்லிம்கள் (என்ற தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள்) எப்படி எடுத்து வைக்க முடியும்?
“ஒரு கருத்தை ஒரு சமுதாயம் சொன்னால் அது மாபாதகமாம்! அதே கருத்தை இன்னொரு சமுதாயம் சொன்னால் அதில் தவறு ஏதும் கிடையாதாம்!” இது எந்த வகையில் நியாயமாகும்? இறைவனின் தீாப்பு இந்த அடிப்படையில் தான் இருக்கும் என்று எண்ணுகிறார்களா?
முஸ்லிம்கள் என்றால் நபிமார்களும், அவர் தம் தோழர்களும் எந்த வாதங்களை எடுத்து வைத்தார்களோ அவற்றை மட்டும் எடுத்து வைக்க வேண்டும்! பிர்அவ்னும். நம்ரூதும், அபூஜஹ்லும் நபிமார்களின் எதிரிகளும் எடுத்து வைத்த வாதத்தை ஒரு முஸ்லிம் எப்படி எடுத்து வைப்பான்?
“நான் தான் உங்களின் மிகப் பெரும் கடவுள்” என்று பிர்அவ்ன் சொன்னான். அது குற்றம். “நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதால் நாங்கள் இதே வார்த்தையைப் பயன்படுத்துவோம். இது குற்றமாகாது” என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா?
“வேதங்களில் சிலவற்றை நாங்கள் நம்புவோம்! சிலவற்றை நிராகரிப்போம்!” என்று யூதர்கள் தான் சொல்லக் கூடாது! நாங்கள் இதே வார்த்தையைச் சொல்லலாம் என்று எண்ணுகிறார்களா?
ஈஸாவை அல்லாஹ்வின் குமாரர் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால் தான் தவறு. நாங்கள் முஸ்லிம்களாக உள்ளதால், அப்படிச் சொல்ல எங்களுக்கு அனுமதி உண்டு” என்று கருதுகிறார்களா?
“நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள்” என்று மக்கத்து காபிர்கள் சொன்னார்கள். அது தவறு. நாங்கள் தான் முஸ்லிம்களாயிற்றே! இதே வார்த்தையை நாங்கள் சொல்லலாம் என்று கூறப்போகிறார்களா? அப்படியானால் முஸ்லிம், காபிர், என்ற வேறுபாடு பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்று அவர்கள் காட்ட முற்படுகிறார்கள். முஸ்லிம் குடும்பத்தில் ஒருவன் பிறந்து விட்டால் அவன் இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லலாம்! அவன் காபிர் குடும்பத்தில் பிறந்து விட்டால் அவன் இப்படிச் சொல்லக் கூடாது என்று அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். நபிமார்களில் சிலரின் மக்கள் ஏன் காபிரானார்கள்? என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கட்டும்! இது போன்ற வாதங்களில் கடுகளவும் நியாயமே இல்லை. சிந்தனை உடையவர்களிடம் இது அறவே எடுபடக் கூடியதுமல்ல.
திருமறைக் குர்ஆனில், காபிர்கள், யூதர்கள், கிறித்துவர்கள் சில தனி நபர்களின் தவறான வாதங்களை அல்லாஹ் எடுத்துச் சொல்லியிருப்பது “நாம் அதனைச் சொல்லக் கூடாது” என்பதை உணர்த்திடத்தான். அறிவுடையோர் அப்படித்தான் புரிந்து கொள்வார்கள். ஏனென்றால் இந்தக் குர்ஆன் கியாமத் நாள் வரை மக்களுக்கு வழி காட்டக் கூடிய வகையில் அருளப்பட்டது. ஒரு காலத்தோடு அதன் போதனை, எச்சரிக்கை முடிந்து விடவில்லை.
ஒரு வாதத்திற்காக அவர்களின் இந்தத் தவறான கூற்றை ஏற்றுக் கொண்டால், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற இன்னபிற கடமைகள். கட்டளைகள் எல்லாம் ஸஹாபாக்களுக்கு இறங்கியது நமக்கு அல்ல. என்றும் கூற வேண்டி வருமே! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)
எனவே இது போன்ற பொருந்தாக் காரணங்களைக் கூறி தங்கள் நிலைமையை நியாயப் படுத்துவதைத் தவிர்த்து குர்ஆன், ஹதீஸ் கட்டளைகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ் அந்த மனப்பான்மையை நமக்குத் தந்தருள்வானாக!
annajaath.com

நபியின் கை நாயனின் கையா?

இந்தப் பரேலவிகள் வைக்கின்ற படுபயங்கரமான, அபாண்டமும் அபத்தமும் மிகுந்த மற்றொரு கூற்று, நபி (ஸல்) அவர்களது கை அல்லாஹ்வின் கை என்ற கூற்றாகும்.

எவ்வளவு துணிச்சலாக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றார்கள்? இதுபற்றி இவர்களுக்கு எந்த ஓர் உறுத்தலும் கடுகளவு பயமும் இல்லாமல் இப்படி ஒப்பிடுகின்றார்கள் என்று பாருங்கள். இதற்கு அவர்கள் காட்டுகின்ற ஆதாரம் என்ன?

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான். (அல்குர்ஆன் 48:10)

நபித்தோழர்களின் கை மீது நபியவர்களின் கை இல்லை, அல்லாஹ்வின் கை இருக்கின்றது என்று ஒரு பயங்கர இணை வைப்பை இந்த வசனத்திற்கு விளக்கமாகக் கூறுகின்றார்கள்.

நேரடியாகவும் மிகவும் எளிதாகவும் எடுக்க வேண்டிய விஷயத்தைக் கோணலாகவும் குதர்க்கமாகவும் எடுக்கின்றார்கள்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் அந்த நாட்டு அமைச்சருடன் ஒப்பந்தம் போடுகிறார் என்றால் அந்த ஒப்பந்தம், அந்தத் தூதருடன் போட்ட ஒப்பந்தமல்ல, இந்திய நாட்டுப் பிரதமருடன் போட்ட ஒப்பந்தமாகும்.

இதுபோல் நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடத்தில் செய்த ஒப்பந்தம், கொடுத்த வாக்குறுதி அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தம், அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதி என்று தான் சரியான மார்க்க அறிவுள்ளவர்கள் இதை விளங்குவார்கள். அவர்களின் கை மீது அல்லாஹ்வின் கை இருக்கின்றது என்று கூறப்படுவது அந்த அர்த்தத்தில் தான்.

இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வாக ஆக்கும் அநியாயத்தைச் செய்கின்றார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

எறிந்த கை யாருடைய கை?

தங்கள் அபாண்டத்திற்கும் அபத்தத்திற்கும் ஆதாரமாகக் காட்டுகின்ற மற்றொரு வசனம்:

அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். (முஹம்மதே!) நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.  (அல்குர்ஆன் 8:17)

நபி (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர்க்களம் "பத்ருப் போர்' என்பதை நாம் அறிவோம்.

இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.

* ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான்
(8:9)

* சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக சிறிய தூக்கத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் உள்ளங்களில் அமைதி ஏற்படுத்தினான்.
(8:11)

* அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின் பாதங்களையும் உறுதிப்படுத்தினான்
(8:11)

* வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர்
(8:12)

* எதிரிகளின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தினான்
(8:12)

இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத் தான் இவ்வசனத்தில் (8:17) அல்லாஹ் கூறுகிறான்.

"பொடிக் கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்து வா'' என்று நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலிலி) அவர்களிடம் கூறினார்கள். அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கி நபி (ஸல்) எறிந்தனர். எதிரிக் கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும் அவை பட்டன. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் "நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் எறிந்தான்'' என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.  (நூல்: தப்ரானி)

இதைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். மனிதர்கள் கற்களை வீசினால் என்ன விளைவு ஏற்படுமோ, அது போன்ற விளைவு ஏற்படாமல் இறைவனே வீசினால் எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ அத்தகைய விளைவுகள் ஏற்பட்டன.

இத்தகைய அற்புதங்களால் தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில் பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இறைவன் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான்.

இவ்வளவு தெளிவான வசனத்தை, பரேலவிகள் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக ஆக்கிக் கொள்கின்றனர்.

இதன் உச்சகட்டமாக "அல்லாஹ் வேறு, நபிகள் நாயகம் வேறு அல்ல; இருவரும் ஒருவர் தான்'' என்றெல்லாம் உளறுகின்றனர். ஏராளமான கட்டுக் கதைகளையும் இதற்கேற்ப இவர்கள் உருவாக்கியுள்ளனர். ஈஸா நபி விஷயத்தில் கிறித்தவர்கள் வரம்பு மீறியதையும் இவர்கள் மிஞ்சி விட்டார்கள்.

இஸ்லாத்துக்குத் தவறான வடிவம் கொடுத்த இவர்களின் தலைவனான இப்னு அரபி என்பவன் பிற மதங்களில் உள்ள "அத்வைதம்' என்ற கொள்கையைக் காப்பி அடித்து இஸ்லாத்துக்குள்ளேயும் திணிக்க முயன்றான். காணும் பொருள் அனைத்துமே அல்லாஹ் என்று இவன் கூறினான். இவனை மகான் என்று கூறும் மூடர்கள் தான் பரேலவிகள்.

இந்த இப்னு அரபி, திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள இரு கருத்து கொண்ட வாக்கியங்களுக்குத் தவறான பொருள் கொடுத்து இவன் மக்களை வழிகெடுக்க முயன்றான்.

குர்ஆன் வசனங்களையோ, ஹதீஸ்களையோ வளைத்து, தங்களின் உளறலை நியாயப்படுத்த முடியுமா? என்று தேடியவர்களுக்கு மேற்கண்ட வசனம் மிகப் பெரிய சான்றாகத் தென்பட்டது.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தால் ஒரு கைப்பிடி கற்களால் அனைத்து எதிரிகளின் கண்களிலும் படுமாறு வீச முடியுமா? முஹம்மது நபியே அல்லாஹ்வாக இருந்தால் தானே அப்படி வீச முடியும்? அவர்கள் எறிந்ததை, தான் எறிந்ததாக அல்லவா அல்லாஹ் கூறுகிறான்? எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அல்லாஹ்வும் ஒன்றே'' என்று இவர்கள் உளறுகின்றனர்.

இணை வைத்தலிலின் வாசலை இறுக்கமாக அடைத்த மார்க்கத்திலேயே இவர்கள் விளையாடுகின்றனர்.

ஆனால் இந்த வசனம் இவர்களது வாதத்துக்கு நேர் எதிரானதாகும்.

"நான் கல்லை வீசினால் போதும், எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக் கூடாது. மாறாக, குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசிய போது எனது வல்லமையால் அதைப் பரவச் செய்தேன்'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இது தான் இவ்வசனத்தின் கருத்து என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் போக வேண்டியதில்லை. இவ்வசனத்திலேயே இதற்கான காரணம் அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொடிக் கற்களை வீசியதைப் பற்றிக் கூறுவதற்கு முன், நபித் தோழர்கள் போரில் எதிரிகளை வெட்டி வீழ்த்தியதை அல்லாஹ் குறிப்பிடுகிறான். "நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான்'' என்று குறிப்பிடுகிறான்.

நபித் தோழர்கள் தமது வாள்களாலும், வேல்களாலும் தான் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள். நபித் தோழர்களின் கரத்தால் செய்யப்பட்ட இந்தத் தீரச் செயலுக்கு அல்லாஹ் சொந்தம் கொண்டாடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எறிந்தது பற்றிப் பேசும் போது பயன்படுத்தியது போன்ற வாசக அமைப்பையே இங்கேயும் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) மட்டுமல்ல, பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுமே அல்லாஹ்வாக இருந்தார்கள் என்று இவர்கள் வாதிட வேண்டுமல்லவா?

"அல்லாஹ் தான் நபி, நபி தான் அல்லாஹ்'' என்று இவர்கள் கூறியது போல் "அல்லாஹ் தான் நபித் தோழர்கள், நபித் தோழர்கள் தான் அல்லாஹ்'' எனவும் கூற வேண்டிய நிலை ஏற்படும்.

பத்ருப் போரில் பல நபித் தோழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் கிறுக்குத் தனமான வாதப்படி அல்லாஹ் தான் கொல்லப்பட்டான் என்ற கருத்து ஏற்படும்.

"எதிரிகளின் படை பலத்தில் மூன்றில் ஒரு பங்காக நீங்கள் இருந்தும் உங்களால் எதிரிகளை வெல்ல முடிந்தது என்றால் அத்ற்கேற்ப பல சூழ்நிலைகளை நான் தான் ஏற்படுத்தினேன்'' என்ற கருத்தைப் பதிவு செய்வதற்காகவே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்

இந்த வெற்றிக்கு நபிகள் நாயகமோ, அவர்களின் தோழர்களோ சொந்தம் கொண்டாடி விடக் கூடாது என்பதற்காகவே, தான் நடத்திய அற்புதங்களை இதற்கு முந்தைய வசனங்களில் அல்லாஹ் நினைவுபடுத்துகிறான்.

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!  (அல்குர்ஆன் 18:110)

நானும் உங்களைப் போன்ற மனிதனே என்று தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கூறச் சொல்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்டது, பருகியது, அவர்கள் மல ஜலம் கழித்தது, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டது, மற்றவர்களைப் போல் தாய், தந்தையருக்குப் பிறந்தது, மனைவி, மக்களை இழந்து கவலைப்பட்டது, சித்ரவதைக்கு ஆளானது, நாடு கடத்தப்பட்டது, தமது மனைவியின் மீது எதிரிகள் பழி கூறிய போது உண்மை நிலையை அறியாமல் இருந்தது, ஒரு கூட்டத்தாரின் அழைப்பை ஏற்று அனுப்பிய எழுபது நபித் தோழர்கள் அவர்களால் கொல்லப்படுவார்கள் என்பதை முன்பே அறியாமல் இருந்தது, வறுமையில் உழன்றது என ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் ஒரு மனிதர் என்பதை நிரூபித்துச் சென்ற பிறகும் இப்படி உளறுகின்றனர்.

நபிகள் நாயகத்துக்கும், நபித் தோழர்களுக்கும் மட்டுமல்ல, எல்லா மனிதர்கள் விஷயத்திலும் கூட இறைவன் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளான்.

நீங்கள் பயிரிடுவதைப் பற்றிக் கூறுங்கள்! நீங்கள் தான் அதை விவசாயம் செய்கிறீர்களா? அல்லது நாம் விவசாயம் செய்கிறோமா? (திருக்குர்ஆன் 56:63,64) என்று அல்லாஹ் கேட்கிறான்.

மனிதர்கள் விவசாயம் செய்வதைக் கூறி விட்டு உண்மையில் நீங்கள் விவசாயம் செய்யவில்லை. நாமே விவசாயம் செய்கிறோம் என்று அல்லாஹ் கூறுகிறானே! விவசாயிகள் அனைவரும் அல்லாஹ்வா? இவர்கள் சிந்திக்க வேண்டாமா?

நாம் தான் விதைகளை விதைக்கிறோம். ஆனாலும் விதைத்ததை முளைப்பிக்கச் செய்து ஒன்றுக்கு நூறாக இன்னும் அதிகமாக ஆக்குவது அவனது வல்லமையின் பாற்பட்டது என்று இதையும் விளங்கிக் கொள்கிறோம்.

அது போல் தான் மேற்கண்ட வசனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் இவர்களது வாதம் எந்த அளவுக்கு அபத்தமானது என்பது எளிதில் விளங்கும்.

* நீர் எறிந்த போது

* நீர் எறியவில்லை

என இரண்டு சொற்றொடர்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. நீர் எறிந்த போது எனக் கூறும் போது எறிந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) என்று அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான். எதை ஒப்புக் கொண்டானோ அதையே "நீர் எறியவில்லை' எனக் கூறி உடனே மறுக்கவும் செய்கிறான்.

அல்லாஹ்வின் வார்த்தையில் நிச்சயமாக முரண்பாடு இருக்கவே முடியாது. "நான் சாப்பிட்ட போது நான் சாப்பிடவில்லை'' என்று நாம் கூறினால் அதை நாம் அபத்தம் என்போம்.

ஆனால் இறைவன் எப்படி முரண்பட்டுப் பேசுவான் என்பதைச் சிந்திப்பார்களானால் இதன் சரியான பொருளை விளங்கிக் கொள்வார்கள். உளறிக் கொட்ட மாட்டார்கள்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகத்தை நேரடியான பொருளில் நாம் எடுத்துக் கொள்வது கிடையாது. முரண்பட்ட இரண்டுக்கும் இரு வேறு அர்த்தங்களையே நாம் கருத்தில் கொள்வோம்.

நாம் பயிரிடும் போது நாம் பயிரிடுவதில்லை; அல்லாஹ் தான் பயிரிடுகிறான் என்று கூறினால், பயிரிடுதல் என்பதற்கு இருவேறு இடங்களில் இரு வேறு அர்த்தங்களை நாம் கவனத்தில் கொள்கிறோம்.

அதாவது நாம் (பயிரிடும் போது) விதையைப் புதைக்கும் போது நாம் அதை (பயிரிடுவது இல்லை) முளைக்கச் செய்வதில்லை என்ற கருத்து வரும்.

இது போல் தான் மேற்கண்ட வசனத்திலும் பொருள் கொள்ள வேண்டும்.

நீர் எறிந்த போது

நீர் எறியவில்லை

என்று முரண்பட்ட இரண்டு சொற்றொடர்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீர் எறிந்த போது, அதாவது "பொடிக் கற்களை நீர் வீசிய போது''

நீர் எறியவில்லை, அதாவது "ஒவ்வொருவர் முகத்திலும் நீர் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை''

என்று பொருள் கொண்டால் தான் முரண்பாடில்லாத வாசகமாக அது அமையும்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகம் அனைத்து மொழி இலக்கியங்களிலும், மக்களின் உரையாடல்களிலும் காணக் கூடியது தான். குர்ஆனுக்கு மட்டும் உரிய இலக்கணம் இல்லை.

இந்த விதியின் அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்குப் பொருள் கொண்டால் எறிந்தது நபிகள் நாயகம்; அதைக் கொண்டு போய்ச் சேர்த்தது அல்லாஹ் என்ற கருத்து வரும். அல்லாஹ் செய்தது வேறு, அவன் தூதர் செய்தது வேறு. அல்லாஹ் வேறு, அவன் தூதர் வேறு என்பது இதன் மூலம் உறுதியாகும்.

"யார் உபரியான வணக்கத்தின் மூலம் என்னை நெருங்கி விட்டரோ அவரை நான் விரும்புவேன். நான் அவரை விரும்பிவிட்டால் அவன் கேட்கும் காதாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கையாக அவன் நடக்கும் காலாக நான் ஆவேன் (புகாரி 6502) என்பது போன்ற ஹதீஸ்களையும் இவர்கள் தமது வழிகேட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

"பார்த்தீர்களா? அவ்லியாக்கள் வேறு! அல்லாஹ் வேறு அல்ல. அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுத்துள்ளான்'' என்று கூறி மக்களை வழி கெடுக்க முயல்கின்றனர்.

அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறை நேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்திருந்தால் இப்படி உளற மாட்டார்கள்.

பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது சகஜமான ஒன்று தான். "இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்' என்று கூறினால் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம். "ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்' என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.

இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

"நான் பசியாக இருந்த போது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்த போது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்த போது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?'' என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் "நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?'' என்று கேட்பான், அதற்கு இறைவன் "ஒரு ஏழை பசி என்று கேட்ட போது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்'' என்று கூறுவான்.  (பார்க்க: முஸ்லிம் 4661)

அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லாம் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டலாமா?

இப்படிக் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் திரித்துப் பேசுவது தான் இவர்களின் வாடிக்கை! இந்த அசத்தியவாதிகளின் வாதங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் போலி வாதம் ஒருபோதும் எடுபடப் போவதில்லை.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன்21:18)

அல்லாஹ்வின் இந்த வசனத்தை இவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏகத்துவம் செப்டம்பர் 2012

இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு இறங்கியதாம்

இறை வசனங்களை காட்டி மக்கா காபிர்கள் சிலைகளை வணங்கியது போல  தர்ஹா சடங்குகளை செய்கிறீர்கள் இதை விட்டும் தவிர்த்து கொள்ளுமாறு   உபதேசம் செய்தால் என்ன சொல்லி முஸ்லிம்களை  ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு இறங்கியது; முஸ்லிம்களுக்கு அல்ல என்று லேசாகக்கூறி முஸ்லிம்களை ஏமாற்றிவிடுகிறார்கள். ஒரு குற்றத்தை முஸ்லிம் செய்தாலும் குற்றம் தான்; காஃபிர் செய்தாலும் குற்றம்தான் என்ற சாதரண உண்மை கூட தெரியாதவர்களாகவா இந்த முல்லாக்கள்  இருக்கிறார்கள்.

    காஃபிர் திருடினால் குற்றம்; முஸ்லிம் திருடினால் குற்றம் இல்லை. காஃபிர் சாராயம் குடித்தால்தான் குற்றம் முஸ்லிம் சாரயம் குடித்தால் குற்றம் இல்லை; காஃபிர் விபச்சாரம் செய்தால் குற்றம் முஸ்லிம் விபச்சாரம் செய்தால் குற்றம் இல்லை என்று  இவர்கள் கூறுவார்களா? இல்லயே!  குற்றங்களை யார் செய்தாலும் குற்றவாளிகள் தான்; தண்டனைக்குறியவர்கள் தான் என்ற சாதரண உண்மை கூட  இவர்களுக்கு தெரியாதா?

 
ஆதி மனிதர் ஆதம்(அலை)  ஒரு நபி அவர் பிறப்பால் முஸ்லிம் அவர்களின் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான். பின்னர் எப்படி காஃபிர்கள் முளைத்தார்கள் என்று சிந்திக்க மாட்டார்களா? முஸ்லிமாக பிறந்தவர்கள் தான் இறைவனுக்கு மாறு செய்வதன் மூலம் காஃபிர்கள் ஆனார்கள் என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாதா?
    அத்தியாம் 18: 102-106 ல் கூறப்படும் கண்டனங்கள் காஃபிர்களுக்காக இறங்கியது என்கிறார்களே அந்த காபிர்கள் யார்? அந்த குறைஷிகள் யார்? இப்றாஹீம்(அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் நேரடி வாரிசுகள் காஃபத்துல்லாஹ்வை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்துல்லாஹ், ஆமினா, அப்பாஸ், ஹம்ஸா என்று அழகிய இஸ்லாமிய பெயர்களை உடையவர்களாக இருந்தார்கள். சுன்னத் செய்யப்பட்டிருந்தது. குர்ஆன் இறங்கிய அரபு மொழி பேசினார்கள்.
    வருடா வருடம் ஹஜ் செய்தார்கள். தான தர்மம் செய்தார்கள். இப்றாஹீம்(அலை) அவர்களின் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொன்டார்கள். இவர்களின் அகராதிப்படி இன்றைய இந்திய இலங்கை  முஸ்லிம்களைவிட பன்மடங்கு உயர்வான முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட முஸ்லிகளைப் பார்த்தே அல்லாஹ் காஃபிர் என்று கூறி எச்சரிக்கிறான் என்பதை இந்த முல்லாக்கள் சிந்திக்க வேண்டாமா?
   அவர்கள் தங்களை இப்றாஹீம்(அலை) அவர்களின் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லாஹ் தடுத்துள்ளதற்கு மாறாக அவுலியாக்களிடம் தங்களின் வேண்டுதல்களை வைப்பவர்களாக இருந்தார்கள். அதாவது அல்லாஹ்வின் அடியார்களான அவுலியாக்களை தங்களின் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்காக  அல்லாஹ்விடம்  மன்றாடுவார்கள், சிபாரிசு செய்வார்கள் என்று நம்பியே தர்ஹா சடங்குகளைச் செய்து வந்தனர். அல்குர்ஆன் 18:10, 18:102-106, 39:3 ஆகிய இறை வசனங்களை ஓதினால் சிந்திப்பவர்களுக்கு உண்மை விளங்கும்.
   இஸ்லாத்திலிருந்து குஃப்ர் தோன்றுகிறதேயல்லாமல் குஃப்ரிலிருந்து இஸ்லாம் தோன்றவில்லை. என்பதை உணர்வார்களாக. இந்த அடிப்படையில்தான் இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான குறைஷிகள் உண்மையில் தாங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றுவதாக எண்ணிக்கொண்டுதான் அல்லாஹ்வின் அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக்கி அவர்களின் சமாதிகளில், சிலைகளுக்கு முன்னால் தங்களின் வேண்டுதல்களை வைத்து, அதன் காரணமாக அல்லாஹ்வால் காஃபிராக்கப்பட்டார்கள்.
    அதேபோல் இன்றைய முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாக நம்பிக்கொண்டு அல்லாஹ் தடுத்துள்ளதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் அடியார்களான அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக ஆக்கி அவர்களிடம் தங்களின் வேண்டுதல்களை வைத்தால், அவர்களை அல்லாஹ்விடம் சிபாரிசு, மன்றாட்டம் செய்பவர்களாக ஆக்கிக் கொண்டால், இப்றாஹீம்(அலை) அவர்களின் சந்ததிகள் காஃபிராக்கப்பட்டது போல் இவர்களும் காஃபிராக்கப்படுவார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?
    எனவே 18:102-106 வசனங்கள் காபிர்களுக்கு இறங்கியது; முஸ்லிம்களுக்கு என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களை நரகில் கொண்டு தள்ளவேண்டாம். முஸ்லிமான ஆண், பெண் அனைவரையும் “தர்ஹா மாயை”யை விட்டு விடுபட்டு படைத்த இறைவனை மட்டுமே பாதுகாவலனாக எடுத்து அவனிடமே தங்களின் வேண்டுதல்கள் கோரிக்கைகள் அனைத்தையும் வைக்கும்படி அவர்களுக்கு உபதேசிக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.