முன்னோர்களைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றுவதைக் கண்டிக்கும் குர்ஆன் வசனங்கள் தங்களுக்குப் பொருந்தாது. அவை காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்கள். “காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, எங்களைப் போன்ற மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?” என்றும் கேட்கின்றனர். இந்தக் கேள்வி எவ்வளவு தவறானது? என்பதையும், அவர்களின் கேள்வியிலேயே அவர்களுக்கு பதிலும் அமைந்துள்ளது என்பதையும் பார்ப்போம்.
“அல்லாஹ் இறக்கியருளியவற்றின் பாலும் (அவன்) தூதரின் பாலும் வாருங்கள்!” என்று அவர்களுக்குச் சொல்லப்படும் போது, எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 5: 104)
“குர்ஆனையும், நபிவழியையும் பின்பற்றுங்கள்!” என்று சொல்லப்பட்ட போது “எங்கள் முன்னோர்களையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று காபிர்கள் சொன்னார்கள். அதில் சந்தேகமில்லை. இதுபோன்ற வசனங்கள் காபிர்கள் பற்றியே இறங்கியது என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் இப்படிச் சொன்னதால் தான் காபிர்கள் என்ற பெயரைப் பெற்றோர்களேயன்றி, காபிராகவே பிறக்கவில்லை. முஸ்லிம், காபிர் என்ற பேதம் பிறப்பால் உருவாவது அல்லவே! எந்த வாதத்தை எடுத்து வைத்ததினால் ஒரு சமுதாய மக்கள் காபிர்களானவர்களோ – அவர்கள் காபிர்களாக ஆனதற்கு எது காரணமாக இருந்ததோ -அதை முஸ்லிம்கள் (என்ற தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள்) எப்படி எடுத்து வைக்க முடியும்?
“ஒரு கருத்தை ஒரு சமுதாயம் சொன்னால் அது மாபாதகமாம்! அதே கருத்தை இன்னொரு சமுதாயம் சொன்னால் அதில் தவறு ஏதும் கிடையாதாம்!” இது எந்த வகையில் நியாயமாகும்? இறைவனின் தீாப்பு இந்த அடிப்படையில் தான் இருக்கும் என்று எண்ணுகிறார்களா?
முஸ்லிம்கள் என்றால் நபிமார்களும், அவர் தம் தோழர்களும் எந்த வாதங்களை எடுத்து வைத்தார்களோ அவற்றை மட்டும் எடுத்து வைக்க வேண்டும்! பிர்அவ்னும். நம்ரூதும், அபூஜஹ்லும் நபிமார்களின் எதிரிகளும் எடுத்து வைத்த வாதத்தை ஒரு முஸ்லிம் எப்படி எடுத்து வைப்பான்?
“நான் தான் உங்களின் மிகப் பெரும் கடவுள்” என்று பிர்அவ்ன் சொன்னான். அது குற்றம். “நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதால் நாங்கள் இதே வார்த்தையைப் பயன்படுத்துவோம். இது குற்றமாகாது” என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா?
“வேதங்களில் சிலவற்றை நாங்கள் நம்புவோம்! சிலவற்றை நிராகரிப்போம்!” என்று யூதர்கள் தான் சொல்லக் கூடாது! நாங்கள் இதே வார்த்தையைச் சொல்லலாம் என்று எண்ணுகிறார்களா?
ஈஸாவை அல்லாஹ்வின் குமாரர் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால் தான் தவறு. நாங்கள் முஸ்லிம்களாக உள்ளதால், அப்படிச் சொல்ல எங்களுக்கு அனுமதி உண்டு” என்று கருதுகிறார்களா?
“நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள்” என்று மக்கத்து காபிர்கள் சொன்னார்கள். அது தவறு. நாங்கள் தான் முஸ்லிம்களாயிற்றே! இதே வார்த்தையை நாங்கள் சொல்லலாம் என்று கூறப்போகிறார்களா? அப்படியானால் முஸ்லிம், காபிர், என்ற வேறுபாடு பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்று அவர்கள் காட்ட முற்படுகிறார்கள். முஸ்லிம் குடும்பத்தில் ஒருவன் பிறந்து விட்டால் அவன் இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லலாம்! அவன் காபிர் குடும்பத்தில் பிறந்து விட்டால் அவன் இப்படிச் சொல்லக் கூடாது என்று அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். நபிமார்களில் சிலரின் மக்கள் ஏன் காபிரானார்கள்? என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கட்டும்! இது போன்ற வாதங்களில் கடுகளவும் நியாயமே இல்லை. சிந்தனை உடையவர்களிடம் இது அறவே எடுபடக் கூடியதுமல்ல.
திருமறைக் குர்ஆனில், காபிர்கள், யூதர்கள், கிறித்துவர்கள் சில தனி நபர்களின் தவறான வாதங்களை அல்லாஹ் எடுத்துச் சொல்லியிருப்பது “நாம் அதனைச் சொல்லக் கூடாது” என்பதை உணர்த்திடத்தான். அறிவுடையோர் அப்படித்தான் புரிந்து கொள்வார்கள். ஏனென்றால் இந்தக் குர்ஆன் கியாமத் நாள் வரை மக்களுக்கு வழி காட்டக் கூடிய வகையில் அருளப்பட்டது. ஒரு காலத்தோடு அதன் போதனை, எச்சரிக்கை முடிந்து விடவில்லை.
ஒரு வாதத்திற்காக அவர்களின் இந்தத் தவறான கூற்றை ஏற்றுக் கொண்டால், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற இன்னபிற கடமைகள். கட்டளைகள் எல்லாம் ஸஹாபாக்களுக்கு இறங்கியது நமக்கு அல்ல. என்றும் கூற வேண்டி வருமே! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)
எனவே இது போன்ற பொருந்தாக் காரணங்களைக் கூறி தங்கள் நிலைமையை நியாயப் படுத்துவதைத் தவிர்த்து குர்ஆன், ஹதீஸ் கட்டளைகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ் அந்த மனப்பான்மையை நமக்குத் தந்தருள்வானாக!
annajaath.com
annajaath.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்