"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நம்மை விட சஹாபாக்கள் நன்றாக புரிவார்களா?

சஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்று நாம் பிரச்சாரம் செய்யும் போது, நம்மை எதிர்க்கும் சிலர், சஹாபாக்களை விடவும் நீங்கள் நன்றாக புரிந்து விடுவீர்களோ?
நபி (சல்) அவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் சஹாபாக்கள் மார்க்கத்தை சரியாக புரிவார்களா அல்லது பல நூற்றாண்டுக்கு பிறகு வந்த நீங்கள் புரிவீர்களா?
என்று நம்மை நோக்கி கேள்வியெழுப்புகின்றனர்.
ஆனால், இவர்களுக்கு நாம் பதில் சொல்வதை விட நபி (ஸல்) அவர்களே பதில் சொல்லி விட்டார்கள்.
``எனது செய்திகளை வந்தவர்கள் வராதவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். எடுத்துச் சொல்பவரை விட யாரிடம் எடுத்துச் சொல்லப்படுகிறதோ அவர்கள் அதனை நன்கு பேணிப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்று முன்னறிவிப்பு செய்தனர்.
புகாரி : 1741, 7074
உலகம் அழியும் வரை என்ன நடக்கும் என்பதையெல்லாம் அறிந்து வைத்துள்ள இறைவனால் தரப்பட்டதே இஸ்லாம். உலகம் அழியும் வரை தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய வகையில் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
அந்தந்த காலத்தை அடைபவர்களால் தான் அதன் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியும்.
எனவே இது போன்ற விஷயங்களில் நபித்தோழர்கள் புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இன்று நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.
சந்திர மண்டலத்தில் கிப்லாவை எவ்வாறு நோக்குவது? செயற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா? குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளை அன்றைக்கு அவர்களிடம் கேட்டால் இதெல்லாம் நடக்குமா என்ன? என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும்.
மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும் எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும்.
ஆதாரங்கள் சிதறிக் கிடந்தால், முழுமையாகத் திரட்டப் படாமல் இருந்தால், எளிதில் கிடைக்காமல் இருந்தால் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப் படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.
நபித் தோழர்களின் கடைசி காலத்தில் தான் குர்ஆன் முழுமைப்படுத்தப்பட்டது. ஆனாலும் அச்சிட்டு பரவலாக அனைவருக்கும் கிடைக்கும் நிலை இருக்கவில்லை.
மனனம் செய்தவர்களும், ஏடுகளில் எழுதி வைத்துக் கொண்டவர்களுமான மிகச் சில நபித் தோழர்கள் தவிர பெரும்பாலான நபித் தோழர்களுக்கு முழுக் குர்ஆனும் கிடைக்கவில்லை.
சந்தேகம் வந்தால் புரட்டிப் பார்க்கும் வகையில் ஏடுகளாகவும் அனைவரிடமும் இருக்கவில்லை.
அது போல் நபிமொழியை எடுத்துக் கொண்டால் இதற்கு அடுத்த நிலையில் தான் இருந்தது.
முழு ஹதீஸ்களையும் எழுதி வைத்த ஒரு நபித் தோழரும் இருக்கவில்லை.
முழு ஹதீஸையும் மனனம் செய்த ஒரு நபித் தோழரும் இருக்கவில்லை.
ஆனால், இன்றைய நமது நிலை அப்படியா?
புஹாரி ஹதீஸ் நுலின் எல்லா பாகங்களையும் நாம் நமது வீட்டில் வைத்திருக்கிறோம்.
குர் ஆன் மொழியாக்கம் இல்லாத வீடுகளே இல்லை.
இதுவெல்லாம் சஹாபாக்கள் காலத்தில் சாத்தியமாக இருந்ததா என்று பார்த்தால் இல்லை.
எனவே, நம்மை விட சஹாபாக்கள் தான் சரியாக புரிவார்கள் என்பது மிகவும் தவறான பொருளாக்கமாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்