"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நபிமார்கள், அவ்லியாக்கள் அல்லாஹ்வின் சின்னங்களா?

//// நபிமார்கள், நல்லடியார்கள், மகான்கள் என்போர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களாவர். அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை முஸ்லிம்கள் கண்ணியப்படுத்துவது இறையச்சத்தின் வெளிப்பாடாகும் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.
எனவே அவ்லியாக்களை, மகான்களை நாம் கண்ணியப்படுத்துவது நமது மார்க்கக் கடமை. இதனடிப்படையில் நபிமார்கள், இறந்து விட்ட நல்லடியார்களின் கப்ருகளை அழகாகக் கட்டுவதுதான் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயலாகும். 
////
இவ்வாறு கப்ர் வணங்கிகள் சமாதி வழிபாட்டை சரிகாண துடியாய்த் துடிக்கின்றனர்.

பதில்

இதைப் படிக்கும்போதே இது எவ்வளவு அபத்தமான வாதம் என்பதை அறிவுடையோர் அறிந்து கொள்வார்கள்.
அல்லாஹ்வின் சின்னம் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
ஆனால் அல்லாஹ்வின் சின்னம் எது? என்பதையும் அதை எவ்வாறு கண்ணியப்படுத்தப்பட வேண்டும்? என்பதையும் அல்லாஹ்வும் அவனது தூதரும்தான் கற்றுத்தர வேண்டும்.

ஸபா, மர்வா அல்லாஹ்வின் சின்னங்கள் என்றும் அதை கண்ணியப்படுத்தும் முறையையும் அல்லாஹ்வும் தூதரும் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன். அல்குர்ஆன் 2:158

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னங்கள் எனவும் அது எவ்வாறு கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் மார்க்கம் கற்றுத் தந்துள்ளது.

(பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான். அல்குர்ஆன் 22:36

எது அல்லாஹ்வின் சின்னம் என்பதை அல்லாஹ்தான் கூற வேண்டுமே தவிர கற்பனையின் அடிப்படையில் முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

ஸபா, மர்வா அல்லாஹ்வின் சின்னங்கள் என்று கூறிய இறைவன், ஸயீ செய்வதே அதைக் கண்ணியம் செய்யும் முறை எனவும் கற்றுத் தந்துள்ளான்.
ஸபா, மர்வா இரண்டும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்பதால் அதை வழிபாடு செய்யலாம், அதனிடத்தில் தேவைகளை முறையிடலாம் என்பதற்கு ஒரு போதும் இது ஆதாரமாகாது.

அதுபோல பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னம் என்று கூறிய அல்லாஹ் அதை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும் என்கிறான். இதுதான் அதைக் கண்ணியப்படுத்துவதாகும். பிராணிகளுக்கு தர்கா கட்டுவது அல்ல.

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னம் என்பதால் அதைக் கண்ணியம் செய்ய வேண்டும். எனவே யாரும் அதை அறுக்கக் கூடாது என்று அறிவுடையோர் வாதிப்பார்களா?

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னம் என்பதால் அது இறந்த பின் அதை அடக்கம் செய்து அங்கே கட்டடம் கட்டியெழுப்பலாம், வண்ண விளக்குகளால் அதை அலங்கரிக்கலாம், நம் தேவைகளை அந்த பலிப்பிராணியிடம் முறையிடலாம் என்று வாதம் வைத்தால் அது சரியா?

அவர்களை மூளையுள்ளவர்கள் என்று யாரும் கருதுவார்களா?
அல்லாஹ்வின் சின்னம் என்பதால் அங்கே கட்டடம் எழுப்பலாம், அங்கே நம் தேவைகளை முறையிடலாம் என்று வாதிடுபவர்களை எந்தப் பட்டியலில் இணைப்போமோ அந்தப் பட்டியலில் தான் இந்த கப்ர் வணங்கிகளைச் சேர்க்க வேண்டும்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதில் கைதேர்ந்தவர்கள் இந்தக் கப்ர் வணங்கிகள்.

ஸபா, மர்வா அல்லாஹ்வின் சின்னங்கள் என்பதற்கும், நபிமார்களுக்கு கப்ர் கட்டலாம் என்பதற்கும் என்ன சம்பந்தம்?

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்பதற்கும் அவ்லியாக்களின் கப்ர்களின் மேல் கட்டடம் எழுப்பலாம், அவர்களிடம் தங்கள் தேவைகளை முறையிடலாம், தலை சாய்த்து சஜ்தா செய்யலாம் என்பதற்கும் என்ன சம்பந்தம்?

இதிலிருந்தே தங்கள் மனோ இச்சையை மார்க்கமாக்க இவர்கள் எத்தகைய தில்லுமுல்லு வேலைகளையும் செய்யத் துணிந்தவர்கள் என்பதைக் காணலாம்.
மேலும் ஒன்றை அல்லாஹ்வின் சின்னம் என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த நேரடிச் சான்று இருக்க வேண்டும்.

நபிமார்களோ, இறைநேசர்களோ அல்லாஹ்வின் சின்னங்கள் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
அல்லாஹ்வோ, நபிகள் நாயகமோ அவ்வாறு நமக்குச் சொல்லவுமில்லை. அவ்வாறிருக்க இறைவனின் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் விதமாக நாமாக முடிவு செய்வது அல்லாஹ்விற்கே அவனது மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் அதிகப் பிரசங்கித்தனமாகும்.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 49:16

ஒரு வாதத்திற்கு நபிமார்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று இருந்தால் கூட அத்தகைய தூதர்களில் ஒருவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் கப்ருகள் கட்டுவது கூடாது என்று வன்மையாகத் தடை செய்துள்ளார்கள். கப்ரின் மேல் கட்டடம் எழுப்புவது அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல் என்று எச்சரித்துள்ளார்கள்.

நபிமார்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று நம்பினால் அவர்கள் சொன்னதைப் பின்பற்றுவதுதான் உண்மையில் அவர்களைக் கண்ணியப்படுத்தும் முறையாகும். இதனடிப்படையில் கப்ர்கள் இடிக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நடைமுறைப்படுத்துவது தான் அல்லாஹ்வின் சின்னமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகும்.

இறைத்தூதர்களுக்கும், நல்லடியார்களுக்கும் கப்ர் கட்டுவது, அலங்கரிப்பது அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயல்களாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் அதைச் செய்திருப்பார்கள்.

இந்த கப்ர் வணங்கிகளின் வாதப்பிரகாரம் நபிமார்களின் கப்ர்களுக்கு கட்டடம் எழுப்பி, அல்லாஹ்வின் சின்னத்தைக் கண்ணியப்படுத்திய யூதக் கிறித்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்திருக்கமாட்டார்கள்.

நபிமார்களின் கப்ரில் கட்டடம் எழுப்பி, அதை அழகுபடுத்துவது இந்தக் குருடர்களின் பார்வையில் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயலாக இருந்திருந்தால், நபிமார்களுக்கு சிலை வடிப்பது கப்ர் கட்டுவதையும் விட மேலான கண்ணியம் இல்லையா?

இப்றாீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோருக்கு சிலைகளை வடித்து கண்ணியம் செய்த மக்கத்து இணைவைப்பாளர்களை நபிகள் நாயகம் ஏன் கண்டிக்க வேண்டும்? அந்தச் சிலைகளை ஏன் தகர்க்க வேண்டும்?

இதிலிருந்தே கப்ர் கட்டி வழிபாடு செய்வது அல்லாஹ்வின் சாபத்திற்குரிய யூதக்கிறித்தவ கலாச்சாரம் தான். அது இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல என்பதைத் தெளிவாக புரியலாம்.

அல்லாஹ்வின் சின்னம், அதைக் கண்ணியப்படுத்த வேண்டும் என்றெல்லாம் இந்த கப்ர் வணங்கிகள் பிதற்றுவது இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படையிலானது அல்ல. முழுக்க முழுக்க தங்கள் மனோஇச்சையை மார்க்கமாக்குவதற்காகத்தான் என்பதை மறந்து விடக்கூடாது.



✍ தீன்குலபெண்மணி/ 2015 ✍


நல்ல பித்அத்தும் இருக்கிறதுதானே

நல்ல பித்அத்தும் இருக்கிறதுதானே” என்ற ஒரு வசனத்தில் அவ்வளவு ஆதாரங்களையும் சில உலமாக்கள் மழுங்கடித்துவிட முயல்கின்றனர்.
பித்அத் கூடாது என்று எவ்வளவுதான் கூறினாலும் “
பொதுமக்களும் பித்அதுல் ஹஸனா பற்றி அறியாமல் இவர்கள் உளறுகின்றனர் என எண்ணிவிடுகின்றனர். எனவே பித்அதுல் ஹஸனா (நல்ல பித்அத்) குறித்து விரிவாக விளக்குவது அவசியமாகின்றது.
“எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது நல்ல பித்அத்துக்கள் எனப் பேச முற்படுவது ஆச்சரியமாக உள்ளது. எல்லா பித்அத்துக்களும் வழிகேடு என நபி (ஸல்) அவர்கள் கூறும் போது இல்லை இல்லை நல்ல பித்அத்துக்களும் இருக்கின்றன என நபி (ஸல்) அவர்களுக்கே இவர்கள் பாடம் நடத்த முற்படுகின்றனரா?
பித்அத்துக்கள் பார்ப்பதற்கு நல்லதாகத்தான் இருக்கும். குடி, களவு, விபச்சாரம் போன்று கெட்டதாக இருக்காது. மார்க்கம் விதித்த நல்ல அம்சங்களில் தான் பித்அத் உருவாகும். எனவே “நல்ல பித்அத்” அதாவது “நன்மையின் பெயரில் மக்களை வழிகெடுக்கக்கூடியது” என்று வேண்டுமானால் இதற்கு அர்த்தம் செய்யலாம்.
மற்றும் சில மெத்தப் படித்த மேதாவிகள் உள்ளனர். இவர்கள் “குல்லு” என்ற அரபுச் சொல்லுக்கு “எல்லாம்” என்று அர்த்தம் இருப்பது போன்றே சிலது என்றும் அர்த்தம் இருக்கிறது. எனவே எல்லா பித்அத்தும் வழிகேடு என்று இதற்கு அர்த்தம் செய்வது தவறு “குல்லு பித்அதின் ழழாலா” என்பதற்கு சில பித்அத்துக்கள் வழிகேடு என்று தான் அர்த்தம் செய்ய வேண்டும். என்று கூறுவர். இவர்கள் கூறுவதை ஒரு வாதத்திற்காக நாம் ஏற்றுக் கொண்டு அவர்கள் கூறுவது போன்று அர்த்தம் செய்து பார்ப்போம்.
“எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே! எல்லா வழிகேடுகளும் நரகத்திற்கே இட்டுச் செல்லும்” இது ஹதீஸாகும். இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு எல்லாம் என்று பொருள் செய்யாமல் சிலது என்று பொருள் செய்ய வேண்டும் என்பது இவர்களது வாதம். அதன்படி,
சில பித்அத்துக்கள் வழிகேடுகளே! இவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்வர். ஹதீஸின் அடுத்த பகுதியை இவர்கள் கூறுவது போன்று “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு “சிலது” என்று அர்த்தம் செய்து மொழிபெயர்த்தால்,
“சில வழிகேடுகள் நரகத்திற்கு இட்டுச் செல்லும்” என்று அர்த்தம் செய்ய நேரிடும்.
சில வழிகேடுகள் நரகத்திற்;;கு இட்டுச் செல்லும் என்றால் சில வழிகேடுகள் சுவனத்திற்கு இட்டுச் செல்லும் என்று அர்த்தமாகிவிடும். அதாவது தாம் செய்யும் பித்அத்தை நியாயப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதையே இவர்களது இந்த வாதம் எடுத்துக்காட்டுகிறது.
எனவே “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு “எல்லாம்” என்றுதான் அர்த்தம் செய்ய முடியும். “சிலது” என்று அர்த்தம் செய்ய முடியாது. எனவே, நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே! என்று கூறியிருக்கும் போது சில பித்அத்துக்கள் வழிகேடுகள் என அர்த்தம் செய்ய எவருக்கும் எள்ளளவும் எள்ளின் முனையளவும் அருகதையோ அதிகாரமோ கிடையாது.

யார் இந்த பக்கீர்ஷாக்கள்?

பச்சக்குழந்தை பாதம் பட்டதும்
பரிசளித்தாய் ஜம் ஜம் நீரை
பாவிகள் நாங்கள் பதறுகிறோம்
போக்கிடு எங்கள் கண்ணீரை

நாயனே யா அல்லாஹ்…
நாயனே யா அல்லாஹ்…

என்று மக்களின் மனம் கவர பாட்டு பாடும் இவர்கள்

ஒட்டிய கன்னம்.
குழி விழுந்த கண்.
பச்சை தலைப்பாகை. காதில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கும் பீடி. கழுத்தில் பெரிய பாசி மாலை.
கையில தப்ஸ்
விரலுல கலர் கலராக பெரிய கல் பதிச்ச மோதிரம்.

நம் ஊரில் கூட இன்றும் இரண்டொருவர் உளாவுகிறார்கள்....

இந்த கெட்டப்பும் பாத்ரூமில் நிண்ணாக் கூட காதுல கேட்கிற மாதிரி புரியாத பாஷையில

(காபாலி இசை அதாங்க
A.R ரஹ்மான் பாடுவாறுல வந்தே..தே..தே..தே..

இல்லாட்டி யாதும் ஊரே...ரே...ரே...ரே... அப்புடியின்னு இழுப்பாறுல்ல

அதுதான் காபாலி ராகம்

ரஹ்மான் பாடினா மட்டும் புரியுமே)

சத்தமாக பாடிக்கிட்டு அம்மா முஸாபர் வந்துருக்கம்மா அப்படியின்னு கூவுகிற குரலும் உங்கள் மனக்கண் முன் வந்து மறைகிறதா?

ஆமா யார் இவர்கள் ?

எங்கிருந்து வருகிறார்கள்? இப்படி ஒரு கூட்டம் எப்படி உருவானார்கள்?