'மிஃராஜ்' என்ற சம்பவம் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் நம்பவேண்டிய, அல்லாஹ்வின் வல்லமையை அடிப்படையாகக் கொண்ட உண்மையான ஒரு நிகழ்வு என்றாலும், அது எப்போது நடந்தது என்ற மாதமோ, பிறை(தேதி)யோ ஹதீஸ்களில் குறிப்பிடப்படவில்லை என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். தோராயமாக அனுமானித்து சொல்லக்கூடிய ஆதாரங்களைத் தவிர, அது இந்த நாளில்தான் நடந்தது என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சரியான ஆதாரம் எதுவும் கிடைக்காததால் அறிஞர்களிடம் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
- ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) இருவரும், யானை ஆண்டில் ரபீவுல் அவ்வல் பிறை 12 ல் மிஃராஜ் நடந்ததாக கூறுகிறார்கள். இதே கருத்தை இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் அறிவிக்கிறார்கள். இன்னொரு அறிவிப்பில், "நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது" என இமாம் ஜுஹ்ரி அறிவிக்கிறார்கள். (பைஹகீ)