ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள். இஸ்லாமிய உலகில் மற்ற எவரது பெயராலும் கட்டிவிடப்பட்டுள்ள கதைகளைவிட, இவர்கள் பெயரால்தான் அதிகமாக பொய்யான கதைகள் உலவுகின்றன. இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய தகாத சொற்களைக் கூட அவர்கள் சொன்னதாகத் துணிந்து பொய்ப் பிரச்சாரமும் செய்யப்படுகின்றது.
“என்னை ஆயிரம் முறை அழைத்தால் நான் ஓடோடி வருவேன்”என்றும்,
“எனது அனுமதியுடன் தான் சூரியன் சந்திரன் உதிக்கின்றன” என்றும்,
“உலகில் எது நடந்தாலும் எனக்குத் தெரியாமல் நடப்பதில்லை” என்றும்
அவர்கள் கூறியதாக நம்பப்பட்டும் வருகின்றது.
இவையும், இன்னும் பல இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானவைகளும் அவர்கள் பெயரால் ஓதப்பட்டு வருகின்ற மவ்லிதுகளிலும், யாகுத்பாவிலும் காணப்படுபவை.
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தனது எந்த நூலிலும் இவ்வாறு கூறியிருக்கவில்லை. அவர்கள் காலத்தில் எழுதப்பட்டுள்ள எந்த நூற்களிலும் அவர்கள் இப்படிச் சொன்னதாக ஒரு சிறு குறிப்பும் காணப்படவில்லை. மாறாக ஹிஜ்ரீ-ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெரியார் இந்த ஷிர்க்கான சொற்களைச் சொன்னதாக 1100-ல் எழுதப்பட்ட மவ்லிது கிதாபுகளில் தான் காணப்படுகின்றது. அவர்களின் காலத்திற்கு சுமார் 600 ஆண்டுகளுக்குப்பின் வந்தவர்கள்தான் இப்படிப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசியிருக்கின்றனர்.
அவர்கள் மரணமடைந்து 600 ஆண்டுகளாக, “அவர்கள் இப்படிச் சொன்னதாக” எவரும் எழுதி வைத்திருக்கவில்லை. இதுவே திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்டுக் கூறிய பொய்கள் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரமாகும்.
மாறாக இதுபோன்ற தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கின்ற விதத்தில் தான் அவர்களே எழுதிய “குன்யதுத்தாலிபீன்” என்ற நூலில் காணப்படுகின்றது. ஆதாரபூர்வமாக தொகுக்கப்பட்ட அவர்களின் சொற்பொழிவுகள் அடங்கிய “ஃபு தூஹுல் கைப்” “அல்ஃபத்ஹுர்ரப்பானி” ஆகிய நூல்களும், இந்தப் பொய்யான தகவல்களை மறுக்கும் விதமாகவே அமைந்துள்ளன.
அவர்கள் தனது கைப்பட எழுதிய உண்மைகளை ஏற்பதா? அல்லது அவர்கள் பெயரால் மிகவும் பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்களை ஏற்பதா? என்ற முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுகிறோம்.
அவர்களது நூலிலிருந்தும் ,அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும் ,அவர்களின் கருத்தைத் தக்க ஆதாரங்களுடன் தொகுத்துத் தந்துள்ளோம்.
இதன் பிறகாவது உண்மையை உணராதோர், தனது தவறான முடிவை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புவோம். அல்லாஹ் ,தான் நாடியவர்களுக்கே நேர்வழி காட்டுவான்.
இரண்டு போதுமே!
நாம் பின்பற்றிச் செல்ல, நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு நபி நமக்கு இல்லை. நாம் செயல்பட குர்ஆனைத் தவிர வேறு வேதம் எதுவுமில்லை. எனவே அவ்விரண்டை விட்டும் அப்பாற்பட்டு விடாதே! அவ்விரண்டையும் நீ விட்டுவிட்டால் நீ நாசமடைந்து விடுவாய்! ஷைத்தானும், உன் மனோ இச்சையும் உன்னை வழி கெடுத்து விடும். ஃபுதூஹுல்கைப், 36வது சொற்பொழிவு
திருக்குர்ஆனையும், நபி வழியையும் உனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, அவ்விரண்டிலும் ஆழமாகச் சிந்தனை செய்து, அவ்விரண்டின்படி நீ செயல்படு! அவர் அப்படி சொல்லி இருக்கிறார். இதில் இப்படி சொல்லப்பட்டுள்ளது போன்ற உளரல்களைக் கண்டு ஏமாந்து விடாதே! ஏனெனில் “ரசூல் எதைக்கொண்டு வந்தாரோ, அதை எடுத்துக்கொள்ளுங்கள்! அவர் எதைத் தடுக்கிறாரோ அதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான். குர்ஆனிலும், நபி வழியிலும் தான் (ஈமானுக்குப்) பாதுகாப்பு உண்டு. அந்த இரண்டைத் தவிர மற்றவைகளில் நாசம் தான் உண்டு. குர்ஆன், நபி வழி இவ்விரண்டின் மூலமாக மட்டும்தான் ஒரு அடியான் இறை நேசனாக முடியும். ஃபுதூஹுல்கைப், 36வது சொற்பொழிவு
குர் ஆனையும், நபி வழியையும் பின்பற்றாத வரை உனக்கு (மறுமையில்) வெற்றி கிட்டாது. ஃபத்ஹுர்ரப்பானி, 39வது மஜ்லிஸ்
பித்அத் செய்யாதீர்கள்!
நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றுங்கள்! ‘பித்அத்’களை உருவாக்கி விடாதீர்கள்! இறை உத்தரவுக்குக் கட்டுப்படுங்கள்! மனமுரண்டு பிடிக்காதீர்கள்! இறைவனை ஏகத்துவப்படுத்துங்கள்! அவனுக்கு இணை வைக்காதீர்கள்! ஃபுதூஹுல்கைப், பக்கம் 180
பித்அத்களை உருவாக்குபவனை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளனர். “எவன் பித்அத்தை உரு வாக்குகிறானோ, அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், நல்லடியார்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். குன்யதுத் தாலிபீன், பக்கம் 81
ஏகத்துவ முழக்கம்
எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத்தவிர எவருமில்லை; நல்லதும் கெட்டதும், துன்பமும் இன்பமும், கொடுப்பதும் கொடுக்க மறுப்பதும், திறப்பதும் திறந்ததை மூடுவதும், வாழ்வும் மரணமும், இழிவும் மதிப்பும், வறுமையும் செல்வமும் அல்லாஹ்வின் கையில் மட்டுமே உண்டு. ஃபுதூஹுல்கைப், 2வது சொற்பொழிவு
படைப்பினங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதை விட்டுவிடு! அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்து! அத்தனை பொருள்களையும் படைத்ததும் அவனே! அவன் அதிகாரத்திலேயே அத்தனையும் உண்டு. அல்லாஹ் அல்லாதவர்களிடம் தேடுபவனே! நீ அறிவுடையவன் அல்ல. அவன் கஜானாவில் இல்லாதது ஏதும் உண்டோ? ஃபத்ஹுர்ரப்பானி, முதலாவது மஜ்லிஸ்
மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காது மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா? படைப்பினங்களிடம் கேட்கத்தேவை எதுவும் ஏற்பட்டு விடாதபோது, படைப்பினங்களிடம் கேட்கின்றாயே! ஃபத்ஹுர்ரப்பானி, 38வது மஜ்லிஸ்
அனைத்தையும் படைத்தவனிடமே அனைத்தையும் கேள்! நான் அல்லாஹ்வின் பாதையில் தான் உங்களை அழைக்கிறேன். என் பக்கம் உங்களை நான் அழைக்கவில்லை. முனாஃபிக் தான் தன்பக்கம் மக்களை அழைப்பான். ஃபத்ஹுர்ரப்பானி, 8வது மஜ்லிஸ்
“உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவனைத் தவிர எவரும் அகற்ற முடியாது” என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே உன் துன்பத்தை அல்லாஹ் அல்லாதவரிடம் முறையிடாதே!
யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுவிட்டானோ அவன் தான் பலமான கயிற்றைப் பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்களின் மீது நம்பிக்கை வைக்கின்றானோ, அவன் தண்ணீரை இறுகப் பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான். ஃபத்ஹுர்ரப்பானி, 15வது மஜ்லிஸ்
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் இந்த போதனைகளின்படி செயல்பட்டு நடக்க அல்லாஹ் அருள்புரிவானாக!
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! என்று சொன்ன போது இப்லீஸித் தவிர மற்ற அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவன் மறுத்து அகந்தை பேசினான். நிராகரிப்பவர்களில் ஒருவனாக அவன் ஆனான். (அல்குர்ஆன்2:34)
இந்த வசனத்தில் கூறப்படும் செய்தி எல்லா முஸ்லிம்களுக்கும் தெரிந்த ஒன்றே. மலக்குகள் எனும் வானவர்கள் முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கும் ஸஜ்தா செய்ததாக இந்த வசனம் கூறுகின்றது. இந்தக் கருத்து திருகுரானிலும் இன்னும் அனேக இடங்களில் கூறப்படுகின்றது.
15:30, 37:73, 7:11, 17:61. 18:50, 20:11 ஆகிய வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த வசனங்கள் பற்றி ஏகத்துவவாதிகளுக்கு இடையே ஒரு குழப்பம். இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய வேண்டும் எனும் போது வானவர்களும் கூட இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய கடமைப்பட்டு இருக்கும் போது அவர்கள் ஏன் ஆதமுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும்? அவ்வாறு செய்யுமாறு இறைவன் ஏன் கட்டளையிட வேண்டும்? இந்தக் கேள்விகளால் அவர்களுக்கிடையே குழப்பம்.
ஏகத்துவத்துக்கு எதிரானவர்களுக்கோ இந்த வசனம் ஒரு வரப்பிரசாதம். ஆதம் அவர்களுக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததால் பெரியவர்களுக்கு மகான்களுக்கு சாதாரணமானவர்கள் ஸஜ்தா செய்யலாம் என வாதிடுவோருக்கு இந்த வசனமும் இந்தக் கருத்திலமைந்த ஏனைய வசனங்களும் மிகப் பெரும் சான்றுகளாகத் தெரிகின்றன.
இரண்டிலும் சேராதவர்களுக்கோ தடுமாற்றம்! எங்கே சாய்வது என்று தீர்மானிக்க முடியாதது அவர்களது நிலைமை. இஸ்லாத்திலேயே முரண்பாடுகள் உள்ளனவோ என்ற எண்ணத்தைக் கூட சிலர் இதனால் தங்கள் அடி மனதில் புதைத்து வைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக இந்த வசனம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகி விடுகின்றது.
“ஆதம்(அலை) அவர்களுக்கு வானவர்கள் ஸஜ்தா செய்தனர்” என இங்கே கூறப்படுகின்றது. ‘ஸஜ்தா’ என்றதும் நெற்றியைத் தரையில் வைத்து பணிவது தான் நமது நினைவுக்கு வரும். ஸஜ்தா என்பதை இந்த ஒரு பொருளில் தான் நாம் பயன்படுத்தி வருகின்றோம் என்பது தான் இதற்குக் காரணம்.
‘ஸஜ்தா’ என்பதற்கு நாம் நினைக்கின்றது போல் நெற்றி தரையில் படுமாறு பணிதல், என்று அர்த்தம் இருப்பது போலவே அதற்கு வேறு சில அர்த்தங்களும் உள்ளன. இதற்கான சான்றுகளும் திருக்குர் ஆனிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. முதலில் ‘ஸஜ்தா’வுக்குரிய ஏனைய அர்த்தங்களை அறிந்துவிட்டு இந்த இடத்தில் எது பொருத்தமான பொருள் என்பதையும் தக்க சான்றுகளுடன் விளங்குவோம்.
மூசா(அலை) அவர்களின் சமுதாயத்தை ஒரு நகருக்குள் பிரவேசிக்குமாறு இறைவன் கூறும் போது, “ஸஜ்தா செய்தவர்களாக இந்த வாசல் வழியாக நுழையுங்கள்” என்று இறைவன் கட்டளையிட்டான். இந்தக் கட்டளை 2:58,4:154,7:161 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது.
இந்த இடத்தில் பரவலாக நாம் விளங்கி வைத்திருக்கின்றவாறு பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இந்தப் பொருளின்படி ஸஜ்தா செய்தால் உள்ளே செல்லுங்கள் என்றே இதற்கு பொருள் கொள்ள முடியும். பணிவுக்கும், அடக்கத்துக்கும் ‘ஸஜ்தா’ எனும் பதத்தை இறைவன் இங்கே பயன்படுத்தியிருக்கிறான். ” மரங்களும், செடி கொடிகளும் (அவனுக்கு) ஸஜ்தா செய்கின்றன”. (அல்குர்ஆன் 55:6)
இந்த வசனத்தில் மரம் செடிகள் ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் கூறுகிறான். இந்த இடத்தில் முதலாவது அர்த்தமும் இரண்டாவது அர்த்தமும் கொள்ள முடியாது. ஏனெனில் மரம் செடிகளுக்கு நெற்றி கிடையாது அதை தரையில் வைப்பதென்பதும் கிடையாது.முதலாவது அர்த்தம் கொள்ள இந்த இடத்தில் வழியே இல்லை. இரண்டாம் அர்த்தம் செய்யவும் வழியில்லை. ஏனெனில் மரம் செடிகளிடம் பெருமையையும்,பணிவையும் கற்பனை செய்ய முடியாது, அவை எவ்வாறு இருக்க வேண்டுமென இறைவன் விதித்திருக்கின்றானோ அவ்வாறு அவை நடக்கின்றன என்பதே இதன் பொருளாக இருக்க முடியும். அவை ஸஜ்தா செய்கின்றன என்றால் இறைவன் என்ன நோக்கத்தில் அதை படைத்துள்ளானோ அதன்படி அவை இயங்குகின்றன என்பதே பொருள்.
அல்லாஹ் படைத்திருப்பவைகளை அவர்கள் உற்று நோக்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும்,இடமுமாக இறைவனுக்காக ஸஜ்தா செய்தவையாக சாய்கின்றன. மேலும் அவை அல்லாஹ்வுக்கு பணிகின்றன. (அல்குர் ஆன் 16:48) வலமும் இடமுமாக பொருள்களின் நிழல்கள் சாய்வதை இங்கே இறைவன் ஸஜ்தா என்று குறிப்பிடுகிறான்.அதை தொடர்ந்து
வானங்களிலிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும், ஜீவராசிகளூம் மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்கின்றனர். (அல்குர்ஆன் 16:49)
வானம், பூமியில் உள்ள யாவும்,சகல ஜீவராசிகளூம் இறைவனுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் இங்கே குறிப்பிடுகின்றான்.நெற்றியை நிலத்தில் வைத்துப் பணிவது என்ற அர்த்தத்தை இங்கே இடம் பெற்ற ஸஜ்தா எனும் சொல்லுக்கு கொடுக்க முடியாது.
பதினோரு நட்சத்திரங்களூம், சூரியனும் சந்திரனும் எனக்கு ஸஜ்தா செய்யக் கூடியவையாக நான் கனவு கண்டேன். (அல்குர்ஆன் 12:4)
யூசுப் நபியவர்கள் இவ்வாறு கனவு கண்டதாக அல்லாஹ் கூறுகிறான். சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களூம் நாம் நினைக்கின்ற அர்த்தத்தில் ஸஜ்தா செய்திருக்க முடியாது. எனெனில் ஸஜ்தாவுக்குரிய உறுப்புகள் அவற்றுக்குக் கிடையாது இந்தச் சான்றுகளிலிருந்து ஸஜ்தாவுக்குப் பல பொருள்கள் இருப்பதை நாம் அறிய முடிகின்றது.
அப்படியானால் இந்த இடத்தில் ஆதம் [அலை] அவர்களூக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததாகக் கூறப்படும் இடத்தில் ஸஜ்தாவுக்கு எந்தப் பொருள் கொள்ள வேண்டும்.தொழுகையில் நாம் செய்கின்ற இந்த ஸஜ்தாவையே அவர்கள் செய்தார்களா? அவ்வாறு பொருள் கொள்ள முடியுமா?
நிச்சயமாக அவ்வாறு பொருள் கொள்ள முடியாது. இந்த ஸஜ்தாவை மலக்குகள் இறைவனைத் தவிர வேறு எவருக்கும் செய்ய மாட்டார்கள் என்று திருக்குர்ஆனே தெளிவுபடுத்தி விடுகின்றது.
உம்முடைய இறைவனிடத்தில் இருப்பவர்கள் (வானவர்கள்) அவனை வணங்குவதைவிட்டும் பெருமையடிப்பதில்லை. அவனைத் துதிக்கின்றனர். மேலும் அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர். (அல்குர்ஆன் 7:206)
இந்த வசனத்தில் ‘லஹுயஸ்ஜுதூன்’ என்று இறைவன் குறிப்பிடுகிறான். ‘யஸ்ஜுதூன லஹு’ என்பதற்கும் ‘லஹுயஸ்ஜுதூன்’ என்பதற்க்கும் வித்தியாசம் உள்ளது. ‘யஸ்ஜுதூன லஹு’ என்று சொன்னால் ‘அவனுக்கு ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள் என்று சொன்னால் ‘அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள்.அதாவது வேறு எவருக்கும் ஸஜ்தா செய்ய மாட்டார்கள் என்பது இதன் கருத்து.
மலக்குகள் இறைவனுக்கு ஸஜ்தா செய்வதுடன் வேறு எவருக்கும் ஸஜ்தா செய்யாமலிருப்பார்கள் என்று அவர்களைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர்கள் இறைவனுக்குச் செய்யப்படும் ஸஜ்தாவை ஆதமுக்கு செய்திருக்க மாட்டார்கள் என்பதைத் தெளிவாக விளங்கலாம் இந்த வசனத்திற்கு முரண்படாத வகையிலேயே 2:34 வசனத்தையும் நாம் விளங்க வேண்டும்.
அப்படியானால் மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்ற அந்த வசனத்தின் பொருள் என்ன? ஆதம் (அலை)அவர்களைப் படைக்க இறைவன் விரும்பி மலக்குகளிடம் சொன்ன போது அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். அவரைவிட தாங்களே உயர்ந்தவர்கள் எனவும் கூறினார்கள்.அல்குர்ஆனின் 2:30 வசனத்திலிருந்து இதை அறியலாம். மனிதனைவிடத் தங்களை உயர்ந்தவர்கள் என்று அவர்கள் கருதியிருந்ததை தவறென்று காட்டுவதற்காக அவர்களைவிட ஆதம்(அலை) அவர்கள் தமது ஞானத்தை வெளிப்படுத்தியபின், அவருடைய உயர்வை அவருக்கு இருக்கும் சிறப்பை மலக்குகள் ஒப்புக் கொண்டனர்.
மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்றால் ஆதம்(அலை) தங்களை விட அறிவில் சிறந்தவர் என்று அவரது உயர்வை ஒப்புக் கொண்டார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் பொருள் கொள்ளக் காரணம் அல்குர்ஆன் 7:20ம் வசனத்தில் மலக்குகள் இறைவனைத்தவிர வேறு எவருக்கும் (சிரம்பணியும்)ஸஜ்தாவை செய்ய மாட்டார்கள் என்று இறைவன் குறிப்பிடுவதானாலேயே.
மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தார்கள் என்பதற்கு தவறான அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு போலி ஷைகுகள் தங்கள் முரீதுகளைக் காலடியில் விழச் செய்வதற்கும், ஸஜ்தா செய்ய வைப்பதற்கும் இந்த வசனத்தில் எந்தச் சான்றுமே கிடையாது.
ஸஜ்தா என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் கொள்ள வேண்டும் என்பது இப்போது தெளிவாகி விட்டது. ஒரு வாதத்துக்காக மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தது நாம் தொழுகையில் ஸஜ்தா செய்வது போன்றதே என்பதை எற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு சாதகமாக இதில் எந்தச் சான்றும் இல்லை என்பதை உணர வேண்டும். அவர்கள் செய்யும் அர்த்தம் சரி என்று வைத்துக் கொண்டாலும் அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
மலக்குகளும், மனிதர்களும் வெவ்வேறானவர்கள். மனிதர்களுக்கு இருப்பது போன்ற சட்டதிட்டங்கள் மலக்குகளுக்குக் கிடையாது. மலக்குகள் செயததை எல்லாம் மனிதர்களும் செய்ய முடியாது. இது முதலாவது வித்தியாசம்.
ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளை யிட்டதனாலேயே மலக்குகள் ஸஜ்தாச் செய்தனர். சுயமாக அவர்கள் செய்யவில்லை. ஆனால் அல்லாஹ், ஷைகுகளுக்கும், பெரியார்களுக்கும் ஸஜ்தாச் செய்யுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாக அவனது திருத்தூதர் மூலமாக இதற்கு இறைவன் தடையும் விதிக்கின்றான்.
“நான் ‘ஹியாரா’ எனும் பகுதிக்குச் சென்றேன். அங்குள்ள மக்கள் தங்கள் தலைவர்களுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன்”. நபி(ஸல்) அவர்கள்தாம் ஸஜ்தா செய்யப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் என்று (எனக்குள்) சொல்லிக் கொண்டேன். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஸஜ்தாச் செய்ய உங்களுக்கு மிகவும் தகுதி உண்டு என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் அடக்கஸ்தலத்தின் அருகே சென்றால் நீ அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று கேட்டார்கள். நான் ‘மாட்டேன்’ என்றேன். (அதே போல் உயிருடன் இருக்கும் போதும்) செய்யாதே! ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்; என்று நபி(ஸல்) கூறினார்கள்”. கைஸ் இப்னு ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபுதாவுத், தாரிமீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
இதே கருத்து முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிப்பதாக இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வின் தூதருக்கு கூட ஸஜ்தா செய்ய அனுமதியில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
ஆதம்(அலை) அவர்கள் மலக்குகளுக்கு கற்றுத்தரும் ஆசானாக ஆனதால் அவர்கள் ஸஜ்தாச் செய்தனர். எனவே இந்த அடிப்படையில் ஞானத்தை கற்றுத்தரும் ஷைகுகளுக்கு ஸஜ்தா செய்யலாம் என்ற இந்த ஷைகுகளில் வாதத்திற்கு இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளதை உணரலாம்.
நபி(ஸல்) அவர்கள் தாம் அஞ்ஞானத்தில் இருந்த மக்களுக்கு சரியான ஞானத்தைப் போதித்தவர்கள். அவர்களை விட சிறப்பாக உலகில் எவருமே போதிக்க அனுமதி கேட்ட நபித்தோழருக்கு அனுமதி மறுக்கின்றார்கள்.இந்த ஷைகுமார்கள் நபி(ஸல்) அவர்களை விடவும் தங்களை உயர்ந்தவர்களாக கருதுகின்றார்கள் என்பதைத்தான் இவர்களின் போக்கு காட்டுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் கைஸர், கிஸ்ரா,அலெக்ஸான்ரிய மன்னர் ஆகியோரிடம் தூதர்களை அனுப்பினார்கள். என்னை நஜ்ஜாஷி மன்னரிடம் அனுப்பினார்கள். நான் நஜ்ஜாஷி மன்னரிடம் வந்தபோது சிறிய வாசல் வழியாக குனிந்தவர்களாக மக்கள் உள்ளே செல்வதைக் கண்டேன். (அரசரைச் சந்திக்க செல்லும்) அந்த வாசல் குனிந்து செல்லும் அளவுக்கு உயரம் குறைந்ததாகவே அமைக்கப்பட்டிருந்தது.
“நான் உள்ளே நுழையும் போது முதுகுபக்கம் திரும்பிக் குனிந்தவனாக உள்ளே சென்று நிமிர்ந்தேன். அபீஸீனிய மக்கள் இதைக் கண்டு திடுக்குற்றனர். என்னைக் கொல்ல அவர்கள் நாடினார்கள். நாங்கள் நுழைந்தது போலவே நீரும் ஏன் நுழையவில்லை? என்று என்னிடம் கேட்டனர்” நாங்கள் எங்கள் நபிக்கே இவ்வாறு (மரியாதை) செய்ய மாட்டோம். இவ்வாறு செய்வது (கூடுமென்றால்) நபி(ஸல்) அவர்களுக்கே தகுமாகும் என்று நான் கூறினேன்” என்று அம்ரு இப்னு உமய்யா அள்ளமீர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தப்ரானியின் அவ்ஸத் நூலில் நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது
அரசரை நோக்கிச் செல்லும் வாசல் உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருந்தால் அதில் குனிந்து தான் செல்லவேண்டும். அரசருக்காக் குனிந்ததாக ஆகிவிடுமோ என்று அம்ரு அவர்கள் முதுகைக்காட்டிக் குனிந்து உள்ளே சென்று நிமிர்ந்தார் என்றால் நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தவர் எவ்வாறு சுயமரியாதை மிக்கவர்களாக உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதை விளங்கலாம்.
தனி மனிதனுக்காக குனிவதும் கூட கூடாது என்றால் ஒரு மனிதரின் காலில் விழுந்து ஸஜ்தா செய்வது எப்படி அனுமதிக்கப்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கே இவ்வாறு குனிந்து மரியாதை செய்யமாட்டோம் என்ற அம்ரு(ரலி) அவர்களின் கூற்றும் சிந்திக்கத்தக்கது.
ஆக ஆதம்(அலை) அவர்களுக்கு மலக்குகள் செய்த ஸஜ்தாவுக்கு நாம் சாதாரணமாக நினைக்கும் அர்த்தம் அல்ல. அதுதான் அர்த்தம் என்று வைத்து கொண்டாலும் மனிதர்களின் கால்களில் விழவோ அவர்களுக்காக குணிந்து மரியாதை செய்யவோ நமக்கு அனுமதி இல்லை என்பதையாவது சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும். இந்த வசனத்தை கொண்டு மக்களை ஏமாற்றி அடிமைப் படுத்த நினைக்கும் முரீது வியாபாரிகளிடம் ஜாக்கிரிதையாக நாம் இருக்க வேண்டும். --- readislam.net---- இதுபற்றிய மேலும் சில தலைப்புகள்
பெரியார் கால்களை முத்தமிட மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது என்று கூறி சில ஆதாரங்களை எடுத்துரைக்கின்றனர். இந்த ஆதாரங்கள் செயல்படுத்துவதற்கு ஏற்றவையா? அதன் தரம் என்ன?என்பதை காண --இங்கே கிளிக்-- செய்யவும்
அல்லாஹ்வுக்கென்று தனித் தோற்றம் உள்ளது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். புனிதத் தோற்றமுடைய அந்த அல்லாஹ்வை இவ்வுலகில் பார்க்கலாம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
தங்கள் வாதத்துக்கு திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து சில ஆதாரங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர். அவர்கள் முன் வைக்கும் ஆதாரங்கள் இதோ:
நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்க வில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். (அல்குர்ஆன் 53:1,2)
மேலே நாம் அடிக் கோடிட்டுக் காட்டியிருக்கும் வார்த்தைகள் ஹுவ என்ற சுட்டுப் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் அதற்கு அல்லாஹ் என்றும் பொருள் கொள்ளலாம். ஜிப்ரீல் என்றும் பொருள் கொள்ளலாம். "நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள்' என்ற கருத்துடையவர்கள், இந்த இடத்தில் "அவரை' என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக "அவனை' அதாவது அல்லாஹ்வை என்று மொழி பெயர்க்கின்றனர். "மற்றொரு முறையும் ஸித்ரத்துல் முன்(த்)தஹா அருகில் அவனைக் கண்டார்'' என்று இந்த வசனத்தில் கூறப்படுவதால் "முதல் தடவை பார்த்தது இந்த உலகத்தில் தான்; எனவே இதன் படி இந்த உலகத்தில் அல்லாஹ்வைப் பார்க்கலாம்'' என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த அடிப்படையில் இவ்வசனம் அவர்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கொண்டுள்ளார்கள். இந்த வசனத்திற்கு அவ்வாறு பொருள் கொள்ள இடமிருக்கின்றது என்பதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் இவ்வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்றால் தான் இவ்வாறு பொருள் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் அளித்து விட்டால் இவ்வாறு பொருள் செய்ய முடியாது. நபி (ஸல்) அவர்கள் "அவரை' என்ற பதத்திற்கு "ஜிப்ரீல்' என்று விளக்கம் அறித்துள்ளார்கள்.
நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) "அபூ ஆயிஷாவே! மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்'' என்று கூறினார்கள். அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்'' என்று சொன்னார்கள். சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் உடனே எழுந்து (நேராக) அமர்ந்து, "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கொள்ளுங்கள்! அவசரப்படாதீர்கள்! வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ், "திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்'' (81:23) என்றும் "அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்'' (53:13) என்றும் கூறவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.
இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப் பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது'' என்று கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (6:103) அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? "வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (42:51) (பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்) அறிவிப்பவர்: மஸ்ரூக் நூல்: முஸ்லிம் 287
இந்த ஹதீஸில், "அவரைக் கண்டார்' என்பது ஜிப்ரீலைக் கண்டதைத் தான் குறிக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கமளிக்கின்றார்கள். எனவே மேற்கண்ட வசனத்திற்கு அல்லாஹ்வைக் கண்டார்கள் என்று நாம் பொருள் கொள்ள முடியாது. அல்லாஹ்வை இந்த உலகத்தில் பார்க்க முடியும் என்று கூறுபவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம் திர்மிதீயில் இடம் பெறும் செய்தியாகும். "முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய போது "அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான் என்று அல்லாஹ் கூறவில்லையா?'' என்று நான் கேட்டேன். "நாசமாய்ப் போக! அ(வனைக் கண்கள் பார்க்காது என்ப)து அவன் தனது இயற்கையான ஒளியில் காட்சி தரும் போது தான்'' என்று கூறி விட்டு "இரண்டு முறை அவனை (அல்லாஹ்வை) அவர்களுக்குக் காட்டப்பட்டது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இக்ரிமா நூல்: திர்மிதீ 3201
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் இரண்டு தடவை என்பது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தான். ஆனால், தாம் இரண்டு தடவை பார்த்தது ஜிப்ரீலைத் தான் என்று நபி (ஸல்) அவர்களே தெளிவு படுத்திய பிறகு இந்த விளக்கம் முற்றிலும் வலுவிழந்து போகின்றது. அதனால் இந்த இரண்டாவது ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை. நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை உள்ளத்தால் பார்த்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 284 (நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை (53:11), நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:13) ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது உள்ளத்தால் பார்த்தார்கள் அறிவிப்பவர்: அபுல் ஆலியா நூல்: முஸ்லிம் 285, திர்மிதீ 3203
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என்ற கருத்து ஏற்கும் வகையில் இல்லை. பார்வை என்பது கண்கள் சம்பந்தப்பட்டதாகும். இதை உள்ளத்துடன் தொடர்பு படுத்துவது பொருத்தமான ஒன்றாகத் தோன்றவில்லை. மேலும் இக்கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாகத் தான் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 53:13 வசனத்தின் விளக்கமாகத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைக் கூறுகிறார்கள். ஆனால் அவ்வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.
"நபி (ஸல்) அவர்கள் கண்டதாகக் கூறப்படுவது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான்'' என நபி (ஸல்) அவர்களே விளக்கியுள்ளதால் இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் ஏற்புடையதல்ல. எனவே இந்த சாராரின் மூன்றாவது ஆதாரமும் அடிபட்டுப் போகின்றது.
தூதரிடம் தோழர் கண்ட பேட்டி நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்களா? என்ற பிரச்சனை நபித்தோழர்களுக்கு மத்தியிலும் சுற்றி வந்திருக்கின்றது. அதனால் இது குறித்து அபூதர் (ரலி) அவர்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமே பேட்டி கண்டு விடுகின்றார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு "அவன் ஒளியாயிற்றே நான் எப்படிப் பார்க்க முடியும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூற்கள்: முஸ்லிம் 291, திர்மிதீ 3204
அல்லாஹ்வைப் பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அவன் ஒளியாயிற்றே என்று காரணம் காட்டி மறுத்து விடுகின்றார்கள். இதே காரணத்தை நபி (ஸல்) அவர்கள் மற்றொரு இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை: 1. வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது. 2. அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான். 3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 4. (மனிதன்) பகலில் செய்த செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 5. ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில், நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: முஸ்லிம் 293
இவ்வுலகில் படைப்பினங்களால் அல்லாஹ்வை ஏன் பார்க்க முடியாது என்ற காரணத்தை நபி (ஸல்) அவர்கள் இங்கு விளக்குகின்றார்கள்.
மூஸா நபி அல்லாஹ்வைப் பார்த்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் கூறும் இந்தக் காரணத்தினால் தான் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைக் காண இயலாமல் ஆனார்கள்.
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார். (அல்குர்ஆன்7:143)
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் "உன்னை நான் பார்க்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்த போது "என்னை நீர் பார்க்கவே முடியாது'' என்று இறைவன் பதிலளித்துள்ளான். அல்லாஹ் மலைக்கு காட்சியளித்த போது நபி மூஸா (அலை) அவர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று அவனது பேரொளி மலைகளைத் தூள் தூளாக்கி விட்டது. ஒளி அலைகளைத் தாங்காத விழித்திரை உண்மையில் அத்தகைய ஒளி வெள்ளத்தைத் தாங்கும் ஆற்றல் கண்களுக்கு இல்லை என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது.
பூமியைத் தினம் தினம் எத்தனையோ துகள்களும், வெளிச்சங்களும், அலைகளும், கதிர்களும் தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள், எக்ஸ் ரேக்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலட், இன்ஃப்ரா ரெட், ரேடியோ அலைகள், டெலிவிஷன், ரேடார் போன்ற கதிர்கள் முதல் தூர, தூர நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வரும் கதிரியக்க வெள்ளங்கள் வரை அனைத்தும் நாம் தெருவில் செல்லும் போதும் வீட்டில் தூங்கும் போதும் எப்போதும் நம்மைத் தாக்குகின்றன. இத்தனை அலைகளில் நாம் பார்ப்பது ஒரு சிறிய, மிகச் சிறிய ஜன்னல் மட்டுமே. ஒளி என்பது 375லிருந்து 775 நானோ மீட்டர் அலை நீளம் மட்டுமே. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் நூறு கோடி பாகம். மற்றபடி நம்மைச் சுற்றியுள்ள அத்தனை அலைகளையும் நம் கண்களும் மூளையும் வடி கட்டி விடுகின்றன. அது மட்டுமில்லை. இந்த ஒளி அலைகளிலேயே மூளையும் நரம்புகளும் இன்னும் ஃபில்டர் செய்து விடுகின்றன. நமக்கு உயிர் வாழத் தேவைப்பட்ட காட்சிகளை மட்டுமே நாம் பார்க்கிறோம். பூமியின் மேல் விழும் மற்ற அலைகளை நாம் பார்க்க முடிந்தால் குழப்பத்தில் செத்துப் போய் விடுவோம். அதற்குத் தான் இந்த ஜன்னல். இது மனிதனின் பார்வைத் திறன் பற்றி அறிவியல் கூறும் ஆய்வாகும். இந்த உலகில் வல்ல அல்லாஹ்வை, அவனது பேரொளியைக் காண முடியாது என்பதை அறிவியல் உலகின் இந்த ஆய்வும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
வளரும் இன்ஷா அல்லாஹ் EGATHUVAM OCT 2005 எம். ஷம்சுல்லுஹா