நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின் உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜாஆ கோத்திரத்தின் தலைவனான அம்ரு இப்னு லுஹய் சமய சம்பந்தப்பட்ட செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தான். மக்களுக்கிடையில் நற்செயல்களை பரப்பி, தான தர்மங்கள் செய்து வந்தான். எனவே, மக்கள் பெரிதும் மதித்து அவனை ஓர் இறைநேசராகக் கருதினர்.
அவன் ஒருமுறை ஷாம் நாட்டுக்குச் சென்றான். அங்கு மக்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த சிலை வணக்க வழிபாடு அவனைப் பெரிதும் கவர்ந்தது. ஷாம் நாடு, நபிமார்கள் மற்றும் வேதங்கள் அருளப்பட்ட பகுதியாக இருந்ததால் அந்தச் சிலை வணக்கமும் உண்மையான ஒன்றாகத்தான் இருக்கும் என அவன் எண்ணினான். எனவே, அவன் மக்கா திரும்பியபோது ‘ஹுபுல்’ என்ற சிலையைக் கொண்டு வந்து கஅபாவின் நடுவில் அதை வைத்து விட்டான். அந்தச் சிலையைக் கடவுளாக ஏற்று அல்லாஹ்வுக்கு இணைவைக்குமாறு மக்காவாசிகளுக்கு அழைப்பு விடுத்தான். அவர்களும் அதை ஏற்று அல்லாஹ்வுக்கு இணை வைத்தனர். மக்காவாசிகள் இறை இல்லம் கஅபாவை நிர்வகிப்பவர்களாகவும், புனித நகரமான மக்காவில் வசிப்பவர்களாக இருப்பதாலும் அவர்களையே தங்களது முன்னோடிகளாக எடுத்துக் கொண்டு ஹி ஜாஸ் பகுதியின் ஏனைய மக்களும் சிலை வழிபாட்டில் அவர்களைப் பின்பற்றினர்.
‘ஹுபுல்’ என்பது செந்நிறக் கல்லில் மனித உருவாகச் செதுக்கப்பட்ட ஒரு சிலை! அதன் வலது கரம் உடைந்திருந்தது. அதற்கு குறைஷிகள் தங்கத்தினால் கை செய்து அணிவித்தனர். இதுதான் மக்கா இணைவைப்பாளர்களின் முதல் சிலையாகும். இதை மிகுந்த மகத்துவமிக்கதாகவும் புனிதமிக்கதாகவும் குறைஷிகள் கருதினர். (கிதாபுல் அஸ்னாம்)
ஹுபுல் மட்டுமின்றி, மனாத் என்பதும் அவர்களின் பழங்கால சிலைகளில் ஒன்றாகும். அது செங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள ‘குதைத்’ என்ற நகரின் அருகாமையிலுள்ள ‘முஷல்லல்’ என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. (முஷல்லல் என்பது ஒரு மலைமேடு அதன் அடிவாரத்தில் குதைத் உள்ளது - ஸஹீஹுல் புகாரி) இதை ஹுதைல் மற்றும் குஜாஆ கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.
தாயிஃப் நகரத்தில் ‘லாத்’ எனும் சிலையை ஸகீஃப் கோத்திரத்தினர் வணங்கி வந்தனர். (கிதாபுல் அஸ்னாம்)
‘தாத்த இர்க்’ என்ற நகரின் ‘நக்லா ஷாமிய்யா’ என்ற பள்ளத்தாக்கில் ‘உஜ்ஜா’ என்ற சிலை இருந்தது. இதை குறைஷி, கினானா மற்றும் பல கோத்திரத்தினர் வணங்கி வந்தனர். (கிதாபுல் அஸ்னாம்)
இம்மூன்று சிலைகளும் அரபியர்களிடம் மிகப் பெரிய மதிப்புமிக்க சிலைகளாக இருந்தன. இதுமட்டுமின்றி அவர்களிடையே ஷிர்க் (இணைவைத்தல்) அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு ஊரிலும் சிலைகளின் எண்ணிக்கையும் அதிகத்தன.
அம்ரு இப்னு லுஹய்ம்க்கு தகவல் கொடுக்கும் ஒரு ஜின் இருந்தது. அது அவனிடம் நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்து சிலைகளான வத், ஸுவாஃ, யகூஸ், நஸ்ர் போன்றவை ஜித்தா நகரத்தில் புதைந்திருக்கின்றன என்று கூறியது. அவன் ஜித்தா வந்து அந்த சிலைகளைத் தோண்டியெடுத்து மக்காவிற்குக் கொண்டு வந்தான். ஹஜ்ஜுடைய காலத்தில் கஅபாவை தரிசிக்க வந்திருந்த பல்வேறு கோத்திரத்தினருக்குப் பிரித்துக் கொடுத்தான். அவர்கள் அவற்றை தங்களது பகுதிகளுக்கு எடுத்துச் சென்று வணங்க ஆரம்பித்தனர் என்று சிலர் கூறுகின்றனர்.
‘வத்’ சிலையை இராக் நாட்டுக்கு அருகிலுள்ள ‘தவ்மதுல் ஜந்தல்’ என்ற பகுதியிலுள்ள ‘ஜர்ஷ்’ என்ற இடத்தில் கல்பு கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.
‘ஸுவாஃ’ சிலையை ஹிஜாஜ் பகுதியின் மக்கா நகரருகில் ‘ருஹாத்’ என்ற இடத்தில் ஹுதைல் இப்னு முத்கா என்ற கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.
‘யகூஸ்’ சிலையை ஸபா பகுதியில் ‘ஜுர்ஃப்’ என்ற இடத்தில் முராது வமிசத்தின் கூதைஃப் என்ற கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.
‘யஊக்’ சிலையை யமன் நாட்டில் ‘கய்வான்’ என்ற ஊரில் ஹம்தான் கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.
‘நஸ்ர்’ சிலையை தில் கிலா கோத்திரத்தைச் சேர்ந்த ஹிம்யர் குடும்பத்தினர் தங்களது ஊரில் வைத்து வணங்கி வந்தனர். (ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி, கிதாபுல் அஸ்னாம்)
இந்த சிலைகளுக்கென பிரமாண்டமான ஆலயங்களை அமைத்தனர். இறையில்லமான கஅபாவை கண்ணியப்படுத்தியதைப் போன்று அந்த ஆலயங்களையும் கண்ணியப்படுத்தினர். அந்த ஆலயங்களுக்கு பூசாரிகளும் பணியாளர்களும் இருந்தனர். கஅபாவிற்குக் காணிக்கை அளித்ததைப் போன்று அந்த ஆலயங்களுக்கும் காணிக்கை செலுத்தி வந்தனர். அத்துடன் அனைத்தையும் விட கஅபாவே மிக உயர்வானது என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்தனர். (இப்னு ஹிஷாம்)
இன்னும் பல கோத்திரத்தாரும் இதே வழியைப் பின்பற்றி சிலைகளைக் கடவுள்களாக ஏற்று அவற்றுக்கென ஆலயங்களை உருவாக்கினார்கள். அவற்றில் ‘துல் கலஸா’ என்ற சிலையை தவ்ஸ், கஷ்அம் மற்றும் புஜைலா கோத்திரத்தார் யமன் நாட்டில் உள்ள ‘தபாலா’ என்ற ஊரில் வணங்கி வந்தனர்.
‘ஃபில்ஸ்’ என்ற சிலையை ‘தய்’ கோத்திரத்தாரும் அவர்களை ஒட்டி ஸல்மா, அஜா என்ற இரு மலைகளுக்கிடையில் வசித்து வந்தவர்களும் வணங்கி வந்தனர். இதைத் தவிர்த்து அவர்களுக்கு மேலும் பல கோயில்கள் இருந்தன. யமன் மற்றும் ஹிம்யர்வாசிகள் ‘ரியாம்’ என்ற கோயிலையும் ரபிஆ கோத்திரத்தினர் ‘ரழா’ என்ற ஒரு கோயிலையும் வைத்திருந்தனர். மேலும் பக்ர், தக்லிப் கோத்திரத்தார் தங்களுக்கென சிறு கோயில்களையும் ‘ஸன்தாத்’ என்ற நகரில் இயாத் வமிசத்தவர்கள் தங்களுக்கென சிறு கோயில்களையும் ஏற்படுத்தியிருந்தனர். (இப்னு ஹிஷாம்)
மேலும் தவ்ஸ் கோத்திரத்தாருக்கு ‘துல் கஃப்ஃபைன்’ என்ற சிலை இருந்தது. கினானாவின் மக்களான மாலிக், மலிகான் மற்றும் பக்ருக்கு ‘ஸஃது’ எனும் சிலையும், உத்ராவுக்கு ‘ஷம்ஸ்’ என்ற சிலையும் கவ்லானுக்கு ‘உம்யானிஸ்’ எனும் சிலையும் குலதெய்வங்களாக விளங்கின. (இப்னு யிஷாம்)
இவ்வாறு அரபிய தீபகற்பத்தின் பல பகுதிகளுக்கும் சிலை வணக்கக் கலாச்சாரம் பரவியது. முதலில் ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் பிறகு ஒவ்வொரு வீட்டிற்குமென தனித்தனிச் சிலைகள் இருந்தன. சங்கைமிக்க கஅபாவையும் சிலைகளால் நிரப்பினர். நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோது கஅபாவைச் சுற்றிலும் 360 சிலைகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் தங்களது கரத்திலிருந்த தடியால் அவைகளைக் குத்தி கீழே தள்ளினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களின் உத்தரவின்படி அவைகள் கஅபாவிலிருந்து வெளியேற்றப்பட்டு எரிக்கப்பட்டன. மேலும், கஅபாவின் உட்புறத்தில் சிலைகளும் உருவப்படங்களும் இருந்தன. அவற்றில் நபி இப்றாஹீம் (அலை) மற்றும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்களது கரங்களில் அம்புகளைப் பற்றியவாறு இருப்பதுபோன்ற உருவப் படங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் புனித கஅபாவிலிருந்து நீக்கி அழிக்கப்பட்டன. (ஸஹீஹுல் புகாரி)
மக்கள் இதுபோன்ற வழிகேட்டில் நீடித்து வந்தார்கள். அதுபற்றி அபூ ரஜா உதாதீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் கற்களை வணங்கி வந்தோம். நாங்கள் வணங்கும் கல்லைவிட அழகிய கல்லைக் கண்டால் கையிலிருப்பதை தூக்கி எறிந்துவிட்டு புதியதை எடுத்து வணங்குவோம். எங்களுக்கு வணங்குவதற்கான கல் கிடைக்கவில்லையெனில் மண்ணைக் குவியலாக்கி அதன்மேல் ஆட்டின் பாலைக்கறந்து அதை வலம் வருவோம்.” (ஸஹீஹுல் புகாரி)
ஆக, இணை வைத்தலும், சிலை வணக்கமும் அந்த அறியாமைக் காலத்தில் மிக உயரிய நெறியாகப் பின்பற்றப்பட்டது. அத்துடன் அவர்கள் தாங்கள் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி நடப்பதாகவும் எண்ணிக்கொண்டனர்.
அவர்களிடையே சிலைவணக்கம் மற்றும் இணைவைத்தல் உருவானதற்கான அடிப்படை என்னவெனில் அவர்கள் மலக்குகளையும், ரஸூல்மார்களையும், நபிமார்களையும், அல்லாஹ்வின் நல்லடியார்களையும், இறைநேசர்களையும் அல்லாஹ்வுக்கு மிக நெருங்கியவர்கள்; அவனிடம் மிகுந்த அந்தஸ்தும் கௌரவமும் பெற்றவர்கள் எனக் கருதினர். அவர்களிடமிருந்து பல்வேறு அற்புதங்கள் வெளிப்பட்டதைக் கண்ட அம்மக்கள் தனக்கு மட்டுமே உரித்தான சில ஆற்றல்களை அல்லாஹ் அந்த சான்றோர்களுக்கும் அருளியுள்ளான் என்றும் நம்பினர். அச்சான்றோர்கள் இத்தகைய ஆற்றல்களாலும் தங்களுக்கு அல்லாஹ்விடமுள்ள கண்ணியத்தினாலும் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடுவர்களாக இருக்கத் தகுதி பெற்றவர்கள்; யாருக்கும் எதையும் அல்லாஹ்விடம் நேரடியாக கேட்டுப் பெறத் தகுதியில்லை இச்சான்றோர் மூலமாகவே அல்லாஹ்வை அணுக முடியும்; அவர்களே அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள்; அவர்களது அந்தஸ்தைக் கருத்திற்கொண்டு அல்லாஹ் அவர்களது சிபாரிசுகளைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வான்; அவர்கள் மூலமாகவே அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவர்கள்தான் அல்லாஹ்விடம் அடியார்களை மிக நெருக்கமாக்கிவைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும் எண்ணினார்கள்.
இந்த எண்ணம் நாளடைவில் உறுதியான நம்பிக்கையாக வலுப்பெற்றது. அவர்களைத் தங்களது பாதுகாவலர்களாகக் கருதி அல்லாஹ்வுக்கும் தங்களுக்கு மிடையே நடுவர்களாக்கிக் கொண்டனர். அவர்களது நேசத்தைப் பெற்றுத் தரும் வழிமுறைகளென தாங்கள் கருதிய அனைத்தையும் கொண்டு அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தனர். அச்சான்றோர்களுக்காக அவர்களின் உருவப்படங்களையும் சிலைகளையும் உருவாக்கினர். அவற்றுள் சில உண்மையாய் உருவப்படங்களாக இருந்தன. சில உருவப் படங்களை தங்களது கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்தனர். இந்த உருவப் படங்களுக்கும் சிலைகளுக்கும் அரபி மொழியில் ‘அஸ்னாம்’ என்று கூறப்படும்.
சிலர் சான்றோர்களுக்கென உருவப் படங்கள், சித்திரங்கள் எதையும் வரையாமல் அவர்களது அடக்கத்தலங்களையும் அவர்கள் வசித்த, ஓய்வெடுத்த, தங்கிய இடங்களையும் புனித ஸ்தலங்களாக ஏற்படுத்திக் கொண்டனர். அந்த ஸ்தலங்களுக்குக் காணிக்கைகளையும் நேர்ச்சைகளையும் சமர்ப்பித்தனர். மேலும், அவ்விடங்களில் பணிவுடனும் மரியாதையுடனும் நடந்து பல கிரியைகளைச் செய்தனர். இவ்வாறான இடங்களுக்கும் சமாதிகளுக்கும் அரபியில் ‘அவ்ஸான்’ என்று கூறப்படும்.
அவர்கள் அஸ்னாம் மற்றும் அவ்ஸான்களுக்குச் செய்து வந்த சடங்குகளில் பெரும்பாலானவற்றை அம்ரு இப்னு லுஹய்ம் தான் உருவாக்கித் தந்தான். அவன் உருவாக்கித் தந்த அனைத்தும் “அழகிய அனுஷ்டானங்கள் (பித்அத் ஹஸனா)” எனவும், அவை இப்றாஹீம் (அலை) அவர்களது மார்க்கத்திற்கு எவ்வகையிலும் முரணானதல்ல எனவும் அம்மக்கள் நம்பினர்.
அவர்கள் அவ்ஸான் மற்றும் அஸ்னாம் ஆகியவற்றை வணங்கிய முறைகளாவது:
1) அச்சிலைகளை வணங்கி வழிபாடுகள் செய்து அவற்றிடம் அபயம் தேடினர். தங்களது நெருக்கடியான காலக்கட்டத்தில் பாதுகாவலுக்காக அதனைப் பெயர் கூறி அழைத்தனர். அவை அல்லாஹ்விடம் சிபாரிசு செய்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு வேண்டி வந்தனர்.
2) அவற்றை நாடி பயணித்தனர்; வலம் சுற்றி வந்தனர்; பணிவை காட்டி அவற்றின் முன் சிரம் பணிந்தனர்.
3) அவற்றுக்கு தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றினர். அச்சிலைகளுக்கு முன் அமைக்கப்பட்ட பலி பீடங்களில் தங்களது பிராணிகளை அறுத்து பலி கொடுத்தனர். எங்கு பிராணிகளை அறுத்தாலும் அச்சிலைகளின் பெயர் கூறியே அறுத்தனர்.
அவர்களின் இந்த இருவகை உயிர்ப்பலிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்:
... (பூஜை செய்வதற்காக) நியமிக்கப்பட்டவைகளில் அறுக்கப்பட்டவைகளும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 5 : 3)
(நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (அல்குர்ஆன் 6 : 121)
4) அவர்கள் அச்சிலைகளுக்கு செலுத்திய வணக்க வழிபாடுகளில் ஒன்று “தங்களின் கற்பனைக்கு தகுந்தவாறு உணவு, குடிபானம் ஆகியவற்றில் சிலவற்றை அச்சிலைகளுக்காக ஒதுக்கி வைத்து விடுவார்கள். அவ்வாறே தங்களது வேளாண்மை மற்றும் கால்நடைகளில் சிலவற்றை அச்சிலைகளுக்காக ஒதுக்கி விடுவார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், அல்லாஹ்வுக்காகவும் சிலவற்றை ஒதுக்குவார்கள். பிறகு பல காரணங்களைக் கூறி அவை அனைத்தையும் சிலைகளுக்கே கொடுத்து விடுவார்கள். ஆனால், சிலைகளுக்காக ஒதுக்கியவற்றில் எதையும் அல்லாஹ்வுக்கென்று எடுக்க மாட்டார்கள். இதைப் பற்றியே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான்:
விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு “இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய தெய்வங்களுக்கு” என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாயிருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் 6 : 136)
5) தங்களின் விவசாயங்கள் மற்றும் கால்நடைகளில் சிலவற்றை அந்த சிலைகளுக்காக நேர்ச்சை செய்தனர். இதைப் பற்றி பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
(அன்றி அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) “இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர்கள், குருமார்கள் ஆகிய) வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக்கூடாது” என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளை இட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத் தக்க கூலியை (அல்லாஹ்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான். (அல்குர்ஆன் 6 : 138)
6) பஹீரா, ஸாம்பா, வஸீலா, ஹாம் என்ற பெயர்களில் தங்களின் கால்நடைகளை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டனர்.
இவற்றைப் பற்றி ஸயீது இப்னுல் முஸய்யப் அவர்கள் கூறுகிறார்கள்:
பஹீரா: இவை சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட பிராணிகள். அதன் பாலை கறக்க மாட்டார்கள்.
ஸாம்பா: இவை சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட பிராணிகள். அதன் மேல் சுமைகளை ஏற்ற மாட்டார்கள்.
வஸீலா: தொடர்ந்து இரண்டு பெண் குட்டிகள் ஈன்ற ஒட்டகங்களைத் தங்களின் சிலைகளுக்காக நேர்ந்து விடுவார்கள். இந்த ஒட்டகங்கள் வஸீலா எனப்படும்.
ஹாம்: பத்து பெண் ஒட்டகைகளுடன் உறவுகொண்ட ஆண் ஒட்டகையை சிலைகளுக்காக நேர்ந்து விடுவார்கள். அதில் எவ்வித சுமையையும் ஏற்றமாட்டார்கள். இத்தகைய ஆண் ஒட்டகத்திற்கு ஹாம் எனப்படும். (ஸஹீஹுல் புகாரி)
மேற்கூறப்பட்ட கூற்றுக்கு சற்று மாற்றமாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: தொடர்ந்து பத்து பெண் குட்டிகளை ஈன்ற ஒட்டகத்தை சிலைகளுக்காக விட்டு விடுவார்கள். அதன் மீது எவ்விதச் சுமையையும் ஏற்றமாட்டார்கள். எவரும் அதை வாகனமாக்கி பயணிக்கவும் மாட்டார்கள். அதன் முடிகளை வெட்ட மாட்டார்கள். அதன் பாலை விருந்தினருக்கு மட்டுமே அளிப்பார்கள். இத்தகைய ஒட்டகத்திற்கு ‘ஸாம்பா’ என்று கூறப்படும். அதன் பிறகு இந்த ஸாம்பா ஒட்டகம் ஒரு பெண் குட்டியை ஈன்றால் அந்தக் குட்டியின் காதுகளை வெட்டிவிட்டு அதை அதன் தாயுடன் விட்டுவிடுவார்கள். அதன் மீதும் எவரும் பயணிக்க மாட்டார்கள். அதன் பாலை விருந்தினரைத் தவிர வேறு எவரும் அருந்தமாட்டார்கள். இந்தக் குட்டிக்கு ‘பஹீரா’ எனப்படும்.
வஸீலா: தொடர்ச்சியாக ஐந்து பிரசவங்களில் இரண்டிரண்டாக பத்து பெண் குட்டிகளை ஈன்ற ஆட்டுக்குச் சொல்லப்படும். அதன் பிறகு அந்த ஆடு ஈனும் குட்டி உயிருள்ளதாகப் பிறந்தால் அதனை ஆண்கள் மட்டும் புசிப்பார்கள். இறந்த நிலையில் பிறந்தால் ஆண், பெண் இருவரும் புசிப்பார்கள்.
ஹாம்: இது ஓர் ஆண் ஒட்டகையின் பெயராகும். அதன் உறவின் மூலம் இடையில் ஆண் குட்டிகளின்றி தொடர்படியாக பத்து பெண் குட்டிகள் ஈன்றிருந்தால் அந்த ஆண் ஒட்டகையின் மீது எவரும் சவாரி செய்ய மாட்டார்கள். அதன் முடிகளை வெட்ட மாட்டார்கள். அதை ஒட்டக மந்தையினுள் பெண் ஒட்டகைகளுடன் இணைவதற்காக அதை சுதந்திரமாக விட்டுவிடுவார்கள். இதைத் தவிர வேறு எதற்காகவும் அதனை பயன்படுத்தமாட்டார்கள்.
இதுபற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:
பஹீரா. ஸாம்பா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தியவை அல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவைகள் அல்லாஹ் ஏற்படுத்தியவை என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 5 : 103)
அன்றி, அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) “இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்களுடைய ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்களுடைய பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு” (அப்போது பெண்களும் புசிக்கலாம்.) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 6 : 139)
இவையல்லாத வேறு பல விளக்கங்களும் இக்கால்நடைகளைப் பற்றி விவரிக்கப்படுகிறது. (இப்னு ஹிஷாம்)
இந்தக் கால்நடைகள் அனைத்தும் அவர்களின் தெய்வங்களுக்குரியது என்ற ஸயீது இப்னுல் முஸய்யப் அவர்களின் கருத்தை முன்னர் பார்த்தோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் அம்ரு இப்னு ஆமிர் இப்னு லுஹய் அல் குஜாயியைப் பார்த்தேன். அவன் தனது குடலை நரக நெருப்பில் இழுத்துக் கொண்டிருக்கின்றான்.” (ஸஹீஹுல் புகாரி)
ஏனெனில், நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய நேரான மார்க்கத்தை சீர்குலைத்த முதல் வழிகேடன் அவனே. அவன்தான் சிலைகளை நிறுவினான். ஸாயிபா, பஹீரா, வஸீலா, ஹாம் ஆகிய பெயர்களில் சிலைகளுக்குக் கால்நடைகளை நேர்ச்சை செய்யும் பழக்கங்களை உருவாக்கினான். (ஃபத்ஹுல் பாரி)
ஏனெனில், நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய நேரான மார்க்கத்தை சீர்குலைத்த முதல் வழிகேடன் அவனே. அவன்தான் சிலைகளை நிறுவினான். ஸாயிபா, பஹீரா, வஸீலா, ஹாம் ஆகிய பெயர்களில் சிலைகளுக்குக் கால்நடைகளை நேர்ச்சை செய்யும் பழக்கங்களை உருவாக்கினான். (ஃபத்ஹுல் பாரி)
அரபியர்கள் செய்த இவ்வாறான செயல்கள் அனைத்துக்கும் காரணம் என்னவெனில், அச்சிலைகள் தங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கிவைக்கும்; அவனிடத்தில் தங்களை சேர்த்து வைக்கும்; தங்களுக்காக அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்யும் என நம்பிக்கை கொண்டிருந்ததுதான்.
இதைப்பற்றியே அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பாதுகாவலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், “அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவற்றை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). (அல்குர்ஆன் 39 : 3)
(இணைவைப்பவர்கள்) தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் “இவை அல்லாஹ் விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை” என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 10 : 18)
மூடநம்பிக்கைகள்
அரபியர் அம்புகள் மூலம் குறிபார்ப்பவர்களாக இருந்தனர். அந்த அம்புகள் மூன்று வகையாக இருக்கும்.
முதல் வகை: இதில் மூன்று அம்புகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் ‘ஆம்!’ எனவும் மற்றொன்றில் ‘வேண்டாம்’ எனவும் எழுதப்பட்டு, மூன்றாவதில் எதுவும் எழுதப்படாமல் இருக்கும். திருமணம், பயணம் போன்ற முக்கியமானவற்றில் முடிவெடுப்பதற்காக அவற்றில் ஒன்றை எடுப்பார்கள். அவற்றில் ‘ஆம்!’ என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலைச் செய்வார்கள். ‘வேண்டாம்’ என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலை அவ்வருடம் தள்ளிப்போட்டு அடுத்த வருடம் செய்வார்கள். எதுவும் எழுதப்படாத அம்பு வந்தால் முந்திய இரண்டில் ஒன்று வரும்வரை திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
இரண்டாவது வகை: இந்த அம்புகளில் குற்றப் பரிகாரம் நஷ்டஈடு போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருக்கும்.
மூன்றாவது வகை: இந்த அம்புகளில் ‘மின்கும்’ (உங்களில் உள்ளவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும் ‘மின்கைகும்’ (உங்களில் உள்ளவர் அல்லர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும், ‘முல்ஸக்’ (இணைக்கப்பட்டவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும் என மூன்று அம்புகள் இருக்கும். அவர்களில் எவருக்கேனும் ஒருவரது வமிசம் பற்றி சந்தேகம் எழுந்தால் அவரை 100 திர்ஹம் 100 ஒட்டகைகளுடன் ‘ஹுபுல்’ என்ற சிலையிடம் அழைத்து வருவார்கள். தாங்கள் கொண்டு வந்த நாணயங்களையும் ஒட்டகங்களையும் அம்புகளுக்குப் பொறுப்பான பூசாரியிடம் கொடுத்து குறி கேட்பார்கள். பூசாரி அம்பை எடுப்பார். அப்போது ‘மின்கும்’ என எழுதப்பட்ட அம்பு வந்தால், அவரைத் தங்களது இனத்தைச் சேர்ந்தவராக ஒப்புக் கொள்வார்கள். ‘மின் ஙைகும்’ என்ற அம்பு வந்தால் அவரைத் தங்களுடன் நட்புகொண்ட கோத்திரத்தைச் சேர்ந்தவராகக் கருதுவார்கள். ‘முல்ஸக்’ என எழுதப்பட்ட அம்பு வந்தால் அவர் அதே நிலையில் நீடிப்பார். அதாவது அவருக்கு எந்த வமிசப் பரம்பரையும் கிடையாது. எந்த நட்பு கோத்திரத்தை சேர்ந்தவராகவும் அவரைக் கருத மாட்டார்கள். (இப்னு ஹிஷாம்)
இதுபோன்றே அம்புகள் மூலம் சூதாடும் ஒரு பழக்கமும் அவர்களது வழக்கத்தில் இருந்தது. அதாவது, அவர்கள் ஓர் ஒட்டகையை கடனாக வாங்கி வருவார்கள். பிறகு அதை அறுத்து 28 அல்லது 10 பங்குகளாகப் பிரிப்பார்கள். அவர்களிடம் இரண்டு அம்புகள் இருக்கும். ஒன்றில் ‘ராபிஹ்’ என்றும் இரண்டாவதில் ‘குஃப்ல்’ என்றும் அரபியில் எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொருவரின் பெயரையும் கூறி அம்புகளை உருவும்போது ‘ராபிஹ்’ என்ற அம்பு வந்தால் அவர் பணம் கொடுக்காமல் இறைச்சியில் அவருக்குரிய பங்கை மட்டும் எடுத்துக் கொள்வார். ‘குஃப்ல்’ என்ற அம்பு வந்தால் அவர் தோல்வியடைந்தவர் ஆவார். அவருக்கு இறைச்சியில் பங்கு எதுவும் கிடைக்காது. ஆனால், அந்த முழு ஒட்டகைக்கான விலையையும் அவரே கொடுக்க வேண்டும்.
மேலும் சோதிடன், குறிகாரன், நட்சத்திர ராசிபலன் கூறுபவன், காணாமல் போனதை கண்டுபிடித்துத் தருபவன் ஆகியோரின் பேச்சுகளிலும் ஆருடங்களிலும் அம்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.
கான்: உலகில் நடக்க இருக்கும் செய்திகள் மற்றும் இரகசியங்கள் தனக்குத் தெரியும் என்று வாதிடுபவன். அவர்களில் தங்களுக்கு ஜின் செய்தி கொண்டு வருகிறது என்று கூறுபவரும் தனது அறிவாற்றலின் மூலம் மறைவானவற்றை அறிவோம் என்று கூறுபவரும் உள்ளனர்.
அர்ராஃப்: தன்னிடம் வருபவர்களின் சொல், செயல் நிலைகளை ஆராய்ந்து செய்திகளைக் கூறுபவன். எடுத்துக்காட்டாக திருடுபோன பொருள்கள் எங்கிருக்கிறது? திருடியவன் யார்? காணாமல் போன பொருள் எங்கிருக்கிறது? போன்ற விபரங்கள் அனைத்தையும் தன்னால் அறிந்து கொள்ளமுடியும் என்று கூறுபவனைப் போல!
முநஜ்ஜிம்: நட்சத்திரம் மற்றும் கோள்களின் சுழற்சியைக் கவனித்து உலகின் நிலைமைகளையும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் தன்னால் அறியமுடியும் எனக் கூறுபவன்.
இந்த முநஜ்ஜிம்களின் கூற்றை அவர்கள் நம்புவது உண்மையில் நட்சத்திரத்தை நம்புவதாகும். அவர்கள் நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்ததின் காரணமாக, மழை பொழிந்தால் அம்மழை பருவ நட்சத்திரத்தின் காரணமாகவே பொழிந்தது என்று கூறுபவர்களாக இருந்தனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அவர்களிடையே துற்குறி மற்றும் சகுனம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. அவர்களுடைய வழக்கத்தில் ஒன்று, ஏதாவதொரு காரியத்தை செய்ய நினைத்தால் ஒரு பறவையை அல்லது மானை விரட்டுவார்கள். அது வலப்புறமாகச் சென்றால் அதை நற்சகுனமாகக் கருதி தான் விரும்பியிருந்த காரியத்தை செயல்படுத்துவார்கள். இடப்புறமாகச் சென்றால் அதை அபசகுணமாகக் கருதி செயல்படுத்த மாட்டார்கள். இவ்வாறே அவர்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் ஏதேனும் பிராணிகளோ, பறவைகளோ குறுக்கிட்டால் அதிலும் சகுனம் பார்ப்பார்கள்.
அவ்வாறே அவர்கள் முயலின் கெண்டைக்கால் பகுதியை தங்களது இல்லங்களில் தொங்க விடுவார்கள். (நம் நாட்டில் நரிப்பல், புலிப்பல் மயில் இறகு போன்றவற்றை பயன்படுத்துவதுபோல) சில நாள்கள், மாதங்கள், பிராணிகள், வீடுகள், பெண்கள் ஆகியவற்றிலும் அபசகுனம் பார்த்தனர். மேலும், தொற்று நோய் இருப்பதாகவும் நம்பினர். மேலும் ‘ஹாம்மா’ என்பதும் அவர்களது நம்பிக்கையாக இருந்தது. அதாவது, “ஒருவன் கொலை செய்யப்பட்டால் கொலையாளியிடம் பழி தீர்க்கப்படாதவரை அவனது ஆன்மா சாந்தியடையாமல் வீடுகளின் மேல் ஆந்தை உருவில் பறந்துகொண்டு “தாகம்! தாகம்! என் தாகத்தைத் தணியுங்கள்! என் தாகத்தைத் தணியுங்கள்” என கூச்சலிட்டுக் கொண்டிருக்கும். கொலையாளியை பழிவாங்கினால் மட்டுமே ஆன்மா சாந்தியடையும்” எனவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். (ஸஹீஹுல் புகாரி)
அறியாமைக்கால அரபியர்களிடம் இவ்வாறான மூட நம்பிக்கைகள் நிறைந்திருந்தபோதிலும் இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின் சில நெறிமுறைகளும் அவர்களிடையே எஞ்சியிருந்தன. அந்த மார்க்கத்தை அவர்கள் முற்றிலுமாக புறக்கணித்து விடவில்லை. எடுத்துக்காட்டாக, இறையில்லமான கஅபாவை கண்ணியப்படுத்துதல், அதனை வலம் வருவது, ஹஜ், உம்ரா செய்வது, அரஃபா முஜ்தலிஃபாவில் தங்குவது, அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுதல் போன்ற நற்செயல்கள் அவர்களிடம் நிலைபெற்றிருந்தன. எனினும், அந்த நற்செயல்களில் பல மூட நம்பிக்கைகளையும் புகுத்தியிருந்தனர்.
அந்த மூடநம்பிக்கைகளில் சில,
1) குறைஷிகள் இவ்வாறு கூறி வந்தனர்: நாங்கள் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததிகள்; புனித மக்காவின் பூர்வகுடிகள்; சங்கைமிகு கஅபாவின் நிர்வாகிகள். ஆகவே “எங்களைப் போன்ற அந்தஸ்தோ உரிமைகளோ வேறு அரபியர் எவருக்கும் கிடையாது” என்றனர். அவர்கள் தங்களுக்கு ‘ஹும்ஸ்’ எனப் பெயரிட்டுக் கொண்டனர். ஹஜ் காலங்களில் நாங்கள் ஹரமின் எல்லையை விட்டு வெளியேறி ஹில் (ஹரம் அல்லாத) பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என்று கூறி அவர்கள் ஹஜ் காலத்தில் அரஃபாவில் தங்க மாட்டார்கள். முஜ்தலிஃபாவில் இருந்தே திரும்பி விடுவார்கள். இதனைத் தடை செய்து அல்லாஹ் பின்வரும் குர்ஆன் வசனத்தை இறக்கினான்,
பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற இடத்திலிருந்தே நீங்களும் திரும்பிவிடுங்கள். (அல்குர்ஆன் 2 : 199) (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)
2) அவர்கள் கூறினார்கள்: ஹும்ஸ் ஆகிய எங்களுக்குப் பாலாடைக் கட்டி செய்வதும் நெய் உருக்குவதும் இஹ்ராமுடைய நிலையில் தடை செய்யப்பட்டது. மேலும், இஹ்ராமில் இருக்கும் போது கம்பளிக் கூடாரங்களில் நுழைய மாட்டோம். தோலினால் ஆன கூடாரங்களைத் தவிர மற்ற கூடாரங்களில் நிழலுக்காக ஒதுங்கமாட்டோம். (இப்னு ஹிஷாம்)
3) ஹரமுக்கு வெளியிலிருந்து ஹஜ் மற்றும் உம்ராவுக்கு வருபவர்கள் தங்களது பகுதியிலிருந்து கொண்டு வந்த உணவு மற்றும் பானங்களை ஹரமுக்குள் உண்ணவோ பருகவோ கூடாது. ஹரமின் பகுதியில் கிடைப்பதையே உண்ண வேண்டும். (இப்னு ஹிஷாம்)
4) ஹரமின் வெளிப் பகுதியிலிருந்து வருபவர்கள் கஅபாவை வலம் வரும்போது ‘ஹும்ஸ்“கள் கொடுக்கும் ஆடைகளை அணிந்தே வலம் வருவதை ஆரம்பிக்க வேண்டும். இதற்காக வெளியிலிருந்து வரும் ஆண்களுக்கு குறைஷி ஆண்களும், அதே போன்று பெண்களுக்குக் குறைஷிப் பெண்களும் ஆடைகளை நன்மையைக் கருதி இலவசமாகக் கொடுத்து வந்தனர். ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் ஆண்கள் நிர்வாணமாக வலம் வருவார்கள். பெண்கள் தங்களது அனைத்து ஆடைகளையும் களைந்துவிட்டு முன்பகுதி திறந்துள்ள ஒரு மேல் சட்டையை மட்டும் அணிந்துகொண்டு வலம் வருவார்கள். அப்போது அப்பெண்கள் இக்கவிதையைக் கூறுவார்கள்.
“இன்று (உடலின்) சில பகுதிகளோ அல்லது முழுப் பகுதியோ வெளிப்படுகிறது. அவற்றில் எது வெளிப்படுகிறதோ அதைக் காண்பது எவருக்கும் முறையற்றது.”
இச்செயலைக் கண்டித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்:
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 7 : 31)
அதேநேரத்தில் யாரேனும் ஓர்ஆண் அல்லது பெண் தங்களை மேன்மையானவர்களாக கருதி இரவல் ஆடை வாங்காமல் தாங்கள் கொண்டு வந்த ஆடையிலேயே வலம் வந்துவிட்டால் அது முடிந்தவுடன் அந்த ஆடையை எறிந்து விடுவார்கள். வேறு யாரும் அதனைப் பயன்படுத்த மாட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)
5) அவர்கள் இஹ்ராம் அணிந்த பிறகு தங்களது வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் வீட்டு தலைவாசல் வழியாக நுழையாமல் பின்பக்கச் சுவரை உடைத்து வழி ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியாகவே போவார்கள், வருவார்கள். இந்த மூடத்தனமான செயலை மிகவும் உயர்ந்த நற்செயல் என அவர்கள் கருதினார்கள். இதை கண்டித்து பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்:
(நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர். ஆதலால், நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம். (அல்குர்ஆன் 2 : 189) (ஸஹீஹுல் புகாரி)
இணைவைத்தல், சிலை வணக்கம், மூட நம்பிக்கைகள், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவையே அரபிய தீபகற்பத்தில் பரவி இருந்தன. இது தவிர யூத, கிருஸ்துவ, மஜூஸி, ஸாபி போன்ற மதங்கள் அரபிய தீபகற்பத்தில் ஆங்காங்கே காணப்பட்டன.
இரண்டு கட்டங்களில் யூதர்கள் அரபிய தீபகற்பத்தில் ஊடுருவினர்.
1) ஃபலஸ்தீனத்தை ‘புக்து நஸ்ரு’ என்ற மன்னன் கி.மு. 587 ஆம் ஆண்டு கைப்பற்றி அங்கு வாழ்ந்த யூதர்களை நெருக்கடிக்குள்ளாக்கினான். யூதர்களின் நகரங்களை அழித்து அவர்களது வசிப்பிடங்களை நாசமாக்கினான். மேலும், அவர்களில் அதிகமானோரை பாபில் நகருக்கு கைதிகளாக்கிக் கொண்டு சென்றான். இதனால் அவர்களில் ஒரு பிரிவினர் ஃபலஸ்தீனத்தை துறந்து ஹிஜாஸின் வட பகுதிகளில் குடியேறினர்.
2) கி.பி. 70 ஆம் ஆண்டில் ‘டைடஸ்’ என்ற ரோமானிய மன்னன் ஃபலஸ்தீனை கைப்பற்றினான். அவன் யூதர்களையும் அவர்களது வசிப்பிடங்களையும் அழித்தொழித்தான். அதன் விளைவாக ஏராளமான யூதர்கள் ஹி ஜாஸ் பகுதியிலுள்ள மதீனா, கைபர், தீமா ஆகிய நகரங்களில் குடியேறினர். அங்கு தங்களுக்கென சிறந்த வசிப்பிடங்களையும் கோட்டைக் கொத்தளங்களையும் ஏற்படுத்திக் கொண்டனர். இந்த யூதர்களால் அரபியர்களிடையே யூத மதம் பரவ ஆரம்பித்தது. இஸ்லாமின் வருகைக்கு முன்பும் இஸ்லாமுடைய வருகையின் ஆரம்ப காலக்கட்டத்திலும் நடந்த அரசியல் சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் யூத மதத்திற்குக் குறிப்பிடத் தகுந்த முக்கியத்துவம் இருந்தது. இஸ்லாம் தோன்றியபோது இருபதுக்கும் மேற்பட்ட யூத கோத்திரங்கள் அரபிய தீபகற்பத்தில் இருந்தன. அவற்றில் பிரபலமானவை கைபர், நழீர், முஸ்தலக், குரைளா, கைனுகாஃ ஆகிய கோத்திரங்களாகும். (ஸஹீஹுல் புகாரி, வஃபாவுல் வஃபா)
‘துப்பான் அஸ்அத் அபூ கரப்’ என்பவனால் யூதமதம் யமன் நாட்டிலும் நுழைந்தது. இவன் மதீனாவின் மீது போர் தொடுத்தான். பிறகு அங்கே, யூதர்கள் மூலம் யூத மதத்தைத் தழுவினான். குரைளா குடும்பத்தைச் சார்ந்த இரு யூத அறிஞர்களை அவன் தன்னுடன் யமன் நாட்டுக்கு அழைத்துச் சென்றான். அதிலிருந்து யமனில் யூதமதம் பரவியது. அபூ கரபுக்குப் பிறகு அவனது மகன் யூஸுப் தூ நுவாஸ் யமனின் அரசனானான். அவன் நஜ்ரான் பகுதியிலிருந்த கிறிஸ்துவர்கள் மீது படையெடுத்து அவர்களை யூத மதத்திற்கு மாறும்படி நிர்ப்பந்தித்தான். அவர்கள் மறுத்துவிடவே பெரும் அகழிகளைத் தோண்டி அதை நெருப்புக் குண்டமாக ஆக்கி அதில் ஆண், பெண், குழந்தைகள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைவரையும் தூ நவாஸ் வீசி எறிந்தான். அதில் ஏறத்தாழ இருபதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் கிறிஸ்துவர்கள் வரை கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி கி.பி. 523ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. (இப்னு ஹிஷாம்)
இதைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:
அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.) அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்.) அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில், நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். (அல்குர்ஆன் 85 : 4 - 7)
கிறிஸ்துவ மதம்: ஹபஷியர் மற்றும் சில ரோமானிய குழுக்களின் ஆக்கிரமிப்புகளால் அரபிய நாடுகளுக்குள் இம்மதம் புகுந்தது. ஹபஷிகள் யமன் நாட்டை முதன்முறையாக கி.பி. 340 ஆம் ஆண்டில் கைப்பற்றினர். அவர்களது ஆக்கிரமிப்பு நீண்ட காலம் நிலைத் திருக்கவில்லை. கி.பி. 370லிருந்து 378 வரையுள்ள காலத்தில் அவர்கள் யமனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். எனினும், கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் அவர்கள் வெறிகொண்டு அலைந்தனர். ஹபஷியர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ‘ஃபீம்யூன்’ எனும் ஓர் இறைநேசர் நஜ்ரான் வந்தடைந்தார். அங்கு வசிப்பவர்களை கிறிஸ்துவத்தைத் தழுவ அழைத்தார். அவன் வாய்மையையும் அவரது நேரிய மார்க்கத்தையும் கண்ட அம்மக்கள் ஆர்வத்துடன் கிறிஸ்துவத்தில் இணைந்தனர். (இப்னு ஹிஷாம்)
நஜ்ரானில் வசித்த கிறிஸ்துவர்களை மன்னன் தூ நுவாஸ் நெருப்பு அகழியில் எரித்துக் கொன்றானல்லவா! அதற்குப் பழிவாங்கும் முகமாக ஹபஷியர்கள் இரண்டாவது முறையாக கி.பி 525ஆம் ஆண்டில் யமனைக் கைப்பற்றினர். அப்போது ‘அப்ரஹா அல் அஷ்ரம்’ என்பவன் யமனை ஆட்சி செய்தான். அவன் கிறிஸ்துவத்தை தீவிரமாக பரப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டினான். அவன் யமனில் ஒரு கிறிஸ்துவ கோயிலைக் கட்டினான். கஅபாவை ஹஜ்ஜு செய்யச்செல்லும் அரபியர்கள் ஹஜ்ஜுக்காக கஅபா செல்வதைத் தடுத்து, தான் கட்டிய கோயிலைத் தரிசிக்க வரவேண்டும்; கஅபாவை இடித்துத் தகர்த்திட வேண்டுமென விரும்பினான். ஆனால் கடுந்தண்டனையால் அல்லாஹ் அவனை அழித்துவிட்டான்.
மற்றொரு புறம், ரோம் பகுதிகளை ஒட்டியிருந்த காரணத்தால் கஸ்ஸானிய அரபியர்கள், தங்லிப், தய்ம் வமிசத்தைச் சேர்ந்த அரபியர்களும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர். இதைத்தவிர ஹீராவின் சில அரசர்களும் கிறிஸ்துவத்தைத் தழுவினர்.
மஜூஸிய்யா: (நெருப்பை வணங்கும் மதம்) இது பெரும்பாலும் பாரசீகத்தை ஒட்டியிருந்த அரபியர்களிடம் காணப்பட்டது. இராக், பஹ்ரைன், அல் அஹ்ஸா, ஹஜர் மற்றும் அரபிய வளைகுடா பகுதிகளில் வசித்து வந்த அரபியர்களும் இதைப் பின்பற்றினர். இது மட்டுமின்றி யமன் நாட்டை பாரசீகர்கள் கைப்பற்றியிருந்த காலத்தில் யமனியர் பலர் மஜூஸி மதத்தில் இணைந்தனர்.
ஸாபியிய்யா: இது நட்சத்திரங்களை வணங்கும் மதம். அதாவது, கோள்களும் நட்சத்திரங்களும் தான் இவ்வுலகை இயக்கி வருகின்றன என்று நம்பிக்கை கொள்ளும் மதமாகும். இராக் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியும், தொல்பொருள் ஆராய்ச்சியும் இது இப்றாஹீம் (அலை) அவர்களின் கல்தானி இனத்தவர் மதமாக இருந்தது என தெவிக்கின்றன. முற்காலத்தில் ஷாம் மற்றும் யமன் நாடுகளில் அதிகமானவர்கள் இம்மதத்தையே பின்பற்றினர். எனினும், யூத மற்றும் கிறிஸ்துவ மதங்கள் தோன்றி வலிமை பெற்றபோது ஸாபியிய்யா மதத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்து, அதன் வளர்ச்சி பெரிதும் குன்றியது. எஞ்சியிருந்த இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் மஜூஸிகளுடன் கலந்து வாழ்ந்தனர். அல்லது அரபிய வளைகுடா பகுதிகளிலும் இராக்கிலும் வாழ்ந்து வந்தனர். யமன் நாட்டிலுள்ள ஹீரா பகுதியின் வழியாக இம்மதத்தை பின்பற்றியவர்களின் கலாச்சாரம் அரபியர்களிடமும் பரவியது. அவ்வாறே பாரசீகர்களுடன் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் மதக் கலாச்சாரம் குறைஷியர்களில் சிலரிடமும் காணப்பட்டது.
சமயங்களின் நிலைமைகள்
இஸ்லாமியப் பேரொளி பிரகாசிக்கத் தொடங்கியபோது இம்மதங்களையே அரபியர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக இம்மதங்கள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. ‘நாங்களே நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தில் நிலைத்திருக்கிறோம்’ என வாய்ப்பந்தல் கட்டியிருந்த முஷ்ரிக்குகள் உண்மையில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கச் சட்ட ஏவல்களையும் விலக்கல்களையும் பின்பற்றுவதிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தனர். அவர்கள் கற்றுத் தந்த நற்பண்புகளை முழுதும் புறக்கணித்து வாழ்ந்தனர். அவர்களிடையே குற்றங்கள் மலிந்து, சிலை வணங்கிகளிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளும் வழிகேடுகளும் கால ஓட்டத்தில் அவர்களின் மதச் சடங்குகளாக மாறின. இச்சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் அவர்களது சமய, சமூக, அரசியல் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.
யூத மதம் முற்றிலும் முகஸ்துதியாகவும், சர்வாதிகாரமாகவும் மாறியிருந்தது. அம்மதத் துறவிகளும் அதன் தலைவர்களும் கடவுளர்களாக விளங்கினர். மார்க்க சட்டங்கள் என்ற பெயரால் வாழ்க்கையை நெருக்கடியாக்கி தங்கள் விருப்பத்திற்கேற்ப மக்களைக் கசக்கிப் பிழிந்தனர். மக்களிடையே இறை நிராகரிப்பும், சமூகச் சீர்கேடுகளும் பரவிக் கிடந்தாலும், நேரிய மார்க்கம் சிதைக்கப்பட்டு சீர்கெட்டிருந்தாலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்வதிலும் செல்வங்களை சேகரிப்பதிலுமே கவனம் செலுத்தினார்கள். எத்தகைய உயர் போதனைகளைக் கற்று அதனைப் பின்பற்றி வாழ வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டிருந்தானோ அவையனைத்திற்கும் சமாதி கட்டினர்.
கிறிஸ்துவ மதம் சிலைவணங்கும் மதமாக மாறியது. அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்குமிடையே புதுமையானதொரு கலப்படத்தை கிறிஸ்துவ மதம் போதித்தது. அந்த மதத்தைப் பின்பற்றிய அரபியிடம் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அதன் போதனைகள் வாழ்க்கை நெறிக்கு ஏற்றதாக இருக்கவில்லை. அம்மக்களுக்கு அதிலிருந்து விலகுவதும் சிரமமாக இருந்தது.
அரபியர்களின் ஏனைய மதக்கோட்பாடுகள் சிலைவணங்கிகளின் மதக்கோட்பாடுகளுக்கு ஒத்திருந்தன. அவர்களின் இதயங்கள், கொள்கைகள், மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கூட ஒன்றுபட்டிருந்தன.
**********************************************************************************************************
**********************************************************************************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்