மறுமையில் பரிந்துரை
நல்லடியார்களும், நபிமார்களும்
மறுமையில் பரிந்துரை செய்வார்களே என்ற காரணத்தைக் கூறி தங்கள் நடவடிக்கைகளை
நியாயப்படுத்துவோர் உள்ளனர். இதன் காரணமாகவே அவ்லியாக்களின் ஷபாஅத்தை
வேண்டுகிறோம் என்றும் கூறுகின்றனர்.
பரிந்துரை பற்றி சரியான விளக்கம் இல்லாதது தான் இந்த வாதத்தின் அடிப்படை.
எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும்
எதனையும் செய்து விட முடியாத, எந்த ஆத்மாவிடமிருந்தும் எந்தப்
பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 2:48)
அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? (அல்குர்ஆன் 2:255)
அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா? (அல்குர்ஆன் 10:3)
அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு
அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது
பரிந்துரையும் பயனளிக்காது.(அல்குர்ஆன் 20:109)
யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது. (அல்குர்ஆன் 34:23)
இந்த வசனங்களையும் இந்தக் கருத்தில்
அமைந்த ஏனைய வசனங்களையும் நாம் ஆராயும் போது பரிந்துரை செய்வதற்காக இறைவன்
சிலருக்கு அனுமதி வழங்குவான். அதை ஏற்றுக் கொள்ளவும் செய்வான் என்ற
கருத்தைப் பெற முடிகின்றது.
ஒரு நபியோ, அல்லது மற்றவர்களோ தாங்கள்
எப்போது விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் பரிந்துரைக்க முடியாது. அப்படியே
அவர்கள் பரிந்துரைத்தாலும் அவர்களின் அனைத்துப் பரிந்துரைகளும் இறைவனால்
ஏற்றுக் கொள்ளப்படாது.
நான் ஹவ்லு (அல்கவ்ஸர்) எனும்
தடாகத்தினருகே இருப்பேன். யார் என்னைக் கடந்து செல்கிறாரோ அவர்
அருந்துவார். அதை அருந்தியவர் ஒரு போதும் தாகிக்க மாட்டார். அப்போது
என்னருகே சில சமூகத்தினர் (நீரருந்த) வருவார்கள். அவர்களை நானும் அறிவேன்.
அவர்களும் என்னை அறிவார்கள். அப்போது எனக்கும் அவர்களுக்குமிடையே தடை
ஏற்படுத்தப்படும். ‘அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களாயிற்றே’ என்று நான்
கூறுவேன். உமக்குப் பின்னால் அவர்கள் புதிதாக உருவாக்கியவற்றை நிச்சயம்
நீர் அறிய மாட்டீர் என்று என்னிடம் கூறப்படும். எனக்குப் பின்னால்
(மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களுக்குக் கேடு உண்டாகட்டும் என்று நான்
கூறுவேன் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி)
நூல்: புகாரி 4635, 4740, 6526, 6576, 6585, 6586, 7949
மற்றொரு அறிவிப்பில் ‘இவர்கள் என்
தோழர்கள் என் தோழர்கள் என்று நான் கூறுவேன். முஹம்மதே உமக்குப் பின்னால்
இவர்கள் உருவாக்கியதை நீர் அறிய மாட்டீர் என்று கூறப்படும்’ என வந்துள்ளது.
மக்களெல்லாம் தங்களுக்காகப் பரிந்துரை
செய்யுமாறு ஆதம் (அலை), இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகியோரிடம்
சென்று விட்டு அவர்களெல்லாம் மறுத்து விட முடிவில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் வருவார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது
‘நான் ஸஜ்தாவில் விழுவேன். எவ்வளவு நேரம் என்னை (அந்த நிலையில் கிடக்க)
அல்லாஹ் நாடினானோ அவ்வளவு நேரம் விட்டு விடுவான். பிறகு ‘முஹம்மதே! (தலையை)
உயர்த்துவீராக! கூறு! அது கேட்கப்படும். பரிந்துரை செய்! அது ஏற்கப்படும்!
கேள்! கொடுக்கப்படுவாய்’ என்று இறைவன் கூறுவான். நான் தலையை உயர்த்தி என்
இறைவன் கற்றுத் தந்த விதமாகப் புகழ்ந்துரைத்து விட்டுப் பரிந்துரை
செய்வேன். அந்த பரிந்துரைக்கும் இறைவன் சில வரம்புகளை ஏற்படுத்துவான்.
(அதாவது குறிப்பிட்ட சில தகுதியுடையவர்கள் விஷயத்தில் மட்டும் பரிந்துரைக்க
அனுமதிப்பான்) நான் அந்தத் தகுதி உள்ளவர்களை நரகிலிருந்து வெளியேற்றி
சுவர்க்கத்தில் சேர்ப்பிப்பேன். இப்படியே பலமுறை நடக்கும். ஒவ்வொரு
தடவையும் ஸஜ்தாவிலிருந்து எழுந்த பின் பரிந்துரைக்க வரம்பு ஏற்படுத்துவான்.
யாரைக் குர்ஆன் தடுத்து விட்டதோ அவர்களைத் தவிர. அதாவது யாருக்கு நிரந்தர
நரகம் என்று ஆகி விட்டதோ அவர்களைத் தவிர மற்றவர்களை நரகிலிருந்து
வெளியேற்றுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மிகவும்
நீண்ட ஹதீஸின் சுருக்கம் இது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம்
இந்த ஹதீஸிலிருந்து பரிந்துரை செய்தல்
மறுமையில் உண்டு என்பதையும் இறைவன் அனுமதி வழங்கும் போது மட்டும் தான்
பரிந்துரை செய்ய முடியும் என்பதையும் அறியலாம்.
மேலும் யார் இறைவனுக்கு இணை வைத்து
விட்டார்களோ அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்ய
மாட்டார்கள் என்பதையும் பின் வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது.
‘எனது உம்மத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காதவர்களுக்கே என் பரிந்துரை, என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி) நூல்: முஸ்லிம் 296
நபிமார்கள் மற்றும் பெரியார்களின்
பரிந்துரையை எதிர்பார்த்து அவர்களை அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களுக்கு
அதுவே பரிந்துரைக்குத் தடையாகிப் போகும். இதை சமாதி வழிபாட்டுக்காரர்கள்
உணர வேண்டும். பரிந்துரை செய்ய ஒருவருக்கு அனுமதியளிப்பது இறைவனது
தனிப்பட்ட அதிகாரத்தின் பாற்பட்டது என்பதை உணர்ந்தால் இத்தகைய இணை
வைத்தலில் இறங்க மாட்டார்கள்.
வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர்.
தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர
(மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது. (அல்குர்ஆன் 53:26)
அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை
அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள்
பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள். (அல்குர்ஆன் 21:28)
அறவே பரிந்துரை கிடையாது என்பவர்களின் கூற்றும் தவறானது.
பரிந்துரை செய்யும் அதிகாரம்
நல்லடியார்களின் கையிலே இருக்கிறது; அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை
நரகிலிருந்து வெளியேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையும் தவறானது. யாரை,
எப்போது, யாருக்காகப் பரிந்துரை செய்ய அனுமதிப்பது என்ற அதிகாரம்
இறைவனுக்கேயுரியது என்ற காரணத்தினால் தான் – மக்கத்து காஃபிர்கள் இறைவனை
மறுக்காதவர்களாக இருந்தும் இறைவனின் வல்லமையை ஏற்றுக் கொண்டவர்களாக
இருந்தும், பெரியோர்கள் சுயமாகப் பரிந்துரை செய்வார்கள் என்று கருதி
அவர்களைத் திருப்திபடுத்த முயன்ற போது அவர்களைக் காஃபிர்கள் என்று இறைவன்
பிரகடனம் செய்தான்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்