"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மெஞ்ஞானமும் பொய் ஞானமும்

 மெஞ்ஞானமும் பொய் ஞானமும்

உலகத்தில் மனிதன், மனிதனைக் கடவுளாக்குவதற்குப் பல அடிப்படை விஷயங்கள் காரணமாக அமைகின்றன. அவற்றில் ஒன்று புரோகிதம், இடைத்தரகு!

அல்லாஹ்வை அடைவதற்கு ஓர் இடைத் தரகர் வேண்டும்; புரோகிதர் வேண்டும் என்ற நம்பிக்கை இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து மதங்களிலும் இருக்கின்றது. இதை உலகத்தில் உடைத்தெறிந்தது இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான்.

கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு “உங்களில் ஒருவர் தொழுகையில் நின்று கொண்டிருக்கும் போது “அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்‘ அல்லது “அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்‘. ஆகவே, எவரும் தமது கிப்லா திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்து கொள்ளட்டும்” என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, “அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.   அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 405

இவ்வாறு தொழுகை மூலம் இறைவனுடன் ஒருவரை உரையாட வைத்து இடைத் தரகுகளை இஸ்லாம் தகர்த்தெறிகின்றது. இந்த உரையாடலை ஒருவழிப் பேச்சாக, அதாவது அடியான் மட்டும் பேசுவான்; இறைவன் பதில் பேச மாட்டான் என்று ஒரு தரப்பு உரையாக ஆக்கி வைக்கவில்லை. மாறாக இருவழிப் பேச்சாக, இரு தரப்பு உரையாடலாக இஸ்லாம் ஆக்கி வைத்துள்ளது.

அதற்குக் கீழ்க்காணும் ஹதீஸ் சிறந்த சான்றாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல், பிரார்த்தித்தல் ஆகிய)  இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும் (என அல்லாஹ் கூறுகிறான்.)

அடியான் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான்‘ என்று கூறுவான். அடியான் “அர்ரஹ்மானிர் ரஹீம்‘ (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைத் துதித்து விட்டான்‘ என்று கூறுவான். அடியான் “மாலிலிக்கி யவ்மித்தீன்‘ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், “என் அடியான் என்னைக் கண்ணியப் படுத்தி விட்டான்‘ என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் “என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்து விட்டான்‘ என்றும்  கூறியுள்ளார்கள்.)

மேலும், அடியான் “இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்‘ (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால்,  அல்லாஹ், “இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்‘ என்று கூறுவான். அடியான் “இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்‘ (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் “இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்‘  என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் 598

படைத்த இறைவனிடம், நினைத்த நேரத்தில், நினைத்த மாத்திரத்தில்  பேச வேண்டுமாயின் தொழுகை என்ற ஒரு வழி இருக்கும் போது இடைத் தரகு தேவையா? ஒரு போதும் தேவையில்லை.

நாட்டின் முதலமைச்சரை முன் அனுமதியில்லாமலேயே சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பவர், யாரையாவது பரிந்துரைக்குத் தேடியலைவாரா? இது போல் அகில உலகத்தில், எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றொரு அழகிய வாய்ப்பு இருக்கையில் எவரது துணையும் தேவையில்லை.

மெஞ்ஞானம்

இப்படி ஓர் அறிவுப்பூர்வமான மார்க்கத்தில் திட்டமிட்டு ஓர் இடைத்தரகை யூதச் சிந்தனை கொண்டு, ஷியாக்களின் திட்டப்படி, ஷரீஅத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பாதை – இரகசியப் பாதை – அந்தரங்கப் பாதை – ஆன்மீகப் பாதை என்றெல்லாம் புது சித்தாந்தத்தை, பொய் சித்தாந்தத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.

அதற்கு தரீகத் (பாதை), ஹகீகத், (உண்மை), மஃரிபத் (அறிதல்) பெயரிட்டுள்ளனர். இந்த அகமிய ஞானப் பாட்டை வழிவழியாகக் கொண்டு போய் அலீ (ரலி) அவர்களிடமிருந்து வந்ததாகக் கூறுவர். ஆனால் இது உண்மையா? நிச்சயமாகக் கடைந்தெடுத்த பொய்! இது அலீ (ரலி) அவர்களின் காலத்திலேயே தலை தூக்கியது. இந்தப் பிரச்சனை அலீ (ரலி) அவர்களின் காதுகளுக்கு, கவனத்திற்கு வந்த மாத்திரத்திலேயே அதைக் களையெடுத்து விடுகின்றார்கள்.

அலீ (ரலி) அவர்களிடம், “உங்களிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்பதைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து (வேறு) ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்டேன். அவர்கள், “இல்லை; விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; ஒரு மனிதருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனில் அளிக்கின்ற விளக்கத்தையும் இந்தத் தாளில் இருப்பதையும் தவிர” என்று பதிலளித்தார்கள். நான், “இந்தத் தாளில் என்ன இருக்கிறது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (பணம் கொடுத்தோ, கைதிகள் பரிவர்த்தனை செய்தோ எதிரிகளிடமிருந்து) விடுவிப்பது, மற்றும் நிராகரிப்பாளன் ஒருவனைக் கொன்றதற்காக எந்த முஸ்லிமையும் கொல்லக் கூடாது (என்பது)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)  நூல்: புகாரி 3047

இதன்படி அகமிய ஞானம் என்று பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த கிளை அறுந்து விடுகின்றது. இன்னும் போனால் இதற்கு அலீ (ரலி) அவர்களிடமிருந்தே செருப்படி விழுகின்றது. இந்தக் கிளை அறுந்தவுடன், அடுத்த கிளைக்கு இந்தக் குரங்குச் சிந்தனையாளர்கள் தாவுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு பைகளை மனனமிட்டேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடையே) பரப்பி விட்டேன்; மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் (என்) அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும். (அவையனைத்தும் அரசியல் குழப்பங்கள் தொடர்பானவை.)   அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 120

இதில் இரண்டாவது செய்தி அந்த அகமிய ஞானம் தான் என்று கதையளந்தனர். இதிலும் இவர்களது அறியாமைத்தனம் பகிரங்கமாக வெளிப்படுகின்றது.

ஏனெனில், “மற்றொன்றை வெளியிட்டால் எனது குரல்வளை துண்டிக்கப்படும்’ என்று கூறி அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல மறுக்கிறார்கள். அபூஹுரைரா (ரலி) சொல்லாமல் விட்டுச் சென்ற அந்தக் கருத்து இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.

அபூஹுரைரா (ரலி) வாழ்ந்த காலத்தில், ஒருவரையொருவர் மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. அந்தச் சமயத்தில் உள்ள அரசியல் குழப்பத்தைப் பற்றித் தான் அபூஹுரைரா (ரலி) குறிப்பிடுகிறார்கள்.

அராஜக ஆட்சியாளர்கள் பற்றிய விபரம் அபூஹுரைராவிடம் இருந்தது என்று அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். இது ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலும் அமைந்திருக்கின்றது. ஏனென்றால், அதை வெளியிட்டால் கழுத்து துண்டிக்கப்படும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவதால் நிச்சயமாக இது ஆட்சியாளர்கள் குறித்த செய்தியாகத் தான் இருக்க வேண்டும். இதை விட்டு விட்டு ஏதோ ஒரு மறைமுக ஞானம், ரகசிய ஞானம் என்று இந்த ஹதீஸிலிருந்து நிறுவும் முயற்சி படுதோல்வியைச் சந்திக்கின்றது. இதன்படி இவர்கள் தாவிய இந்த இரண்டாவது கிளையும் முறிந்து விடுகின்றது.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில், மாநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவராக இருந்த எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்களைச் சந்தித்து, தரீகத் பற்றிய ஆதாரத்தைக் கேட்கையில் ஷம்சுல்ஹுதா அவர்கள் ஒரு ஹதீஸைக் கூறினார்.

“குர்ஆன் ஏழு எழுத்துக்களில் அருளப்பட்டுள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் வெளிப்படையும் உண்டு. அந்தரங்கமும் உண்டு. ஒவ்வொரு எல்லைக்கும் ஓர் உதயம் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)   நூல்கள்: ஜாமிவுஸ்ஸகீர், தப்ரானி

இந்த ஹதீலைச் சான்றாகக் காட்டிய போது உடனே “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ இதற்கு வெளிப்படை என்ன? அந்தரங்கம் என்ன?” என்று கேட்டதும் அவர் வாயடைத்துப் போனார்.

இதையடுத்து அவரிடம் விளக்கமும் கூறப்பட்டது. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – அனைத்துப் புகழும் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே என்பது தான் அதன் அர்த்தம். அது தான் வெளிப்படை! அல்லாஹ்விடமிருந்து நமக்குக் கிடைக்கும் அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்தும் வகையில் அவனைப் புகழ வேண்டும். இது அந்தரங்கம்.

இந்த விளக்கத்தை ஷம்சுல் ஹுதாவிடம் தெரிவித்தார். இந்த ஹதீஸில் உள்ள அந்தரங்கத்திற்கும் வெளிரங்கத்திற்கும் உரிய விளக்கம் தெரியாமலேயே இதை அகமிய ஞானம் என்று கூறியுள்ளனர். இப்படியொரு கானலை, ஞானம் என்று சொல்லி நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது அந்த உரையாடலின் போது வெளிச்சத்திற்கு வந்தது.

(அத்துடன் ஜாமிவுஸ்ஸகீர், தப்ரானி போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸ் பலவீனமானது. தற்கால அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள், பலவீனமான ஹதீஸ்கள் பட்டியலில் இதைப் பதிவு செய்து விளக்குகிறார்கள்.)

ஷம்சுல்ஹுதா அவர்களிடம் பேசும் போது இந்த ஹதீஸ் பலவீனமானது என்ற விபரம் தெரியாது. இல்லையெனில் அப்போதே இது பலவீனம் என்பதைச் சுட்டிக் காட்டி நெற்றியடியாக அடித்திருக்கலாம்.

எனவே இந்த ஹதீஸிலும் இவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஹில்று நபி – கிஸ்ஸாவும் கப்ஸாவும்

அகமிய ஞானம் என்பதெல்லாம் வெறும் மாய்மாலம் என்றாகி விட்டது. இருப்பினும் இவர்களுக்குக் கை கொடுக்கக்கூடிய இன்னொரு கிளையும் உள்ளது. அந்தக் கிளை தான் ஹில்று நபி!

இந்த ஹில்று நபியவர்கள் இரண்டு விதத்தில் தங்களுக்குக் கை கொடுப்பதாக இவர்கள் நம்புகின்றனர்.

ஒன்று ஹில்று நபி இன்னும் உயிருடன் உலா வருகின்றார்; கடல் ராஜா போல் கடலில் உலா வருகிறார் என்பது இவர்களின் நம்பிக்கை.

“ஐனுல் ஹயாத்” என்று ஒரு நீருற்று உண்டு. அதில் சிறிதளவு நீர் அருந்தியவர் கியாமத் நாள் வரை உயிருடன் இருப்பார். அதை ஹில்று (அலை) அவர்கள் அருந்தும் பேறு பெற்றார்கள். அதனால் இன்றளவும் உயிருடன் உள்ளார்கள்.

ஆண்டு தோறும் ஹில்று (அலை) அவர்கள் ஹஜ்ஜுச் செய்ய வருகின்றார்கள். எவருடைய ஹஜ்ஜு அங்கீகரிக்கப்படுமோ அவருடன் முஸாபஹா (கைலாகு) கொடுக்கிறார்கள். ஹில்று (அலை) அவர்கள் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். கடலில் ஏற்படுகின்ற துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அவரிடம் விடப்பட்டுள்ளது.

வலி என்ற பட்டத்தை அல்லாஹ் ஒருவருக்கு வழங்க நாடினால், ஹில்று (அலை) அவர்கள் மூலமாகவே அதனை அளிக்கின்றான்.

மேற்கூறிய கதைகள் உலமாக்களில் பலரால் கூறப்படுபவை. மக்களிடம் மிகவும் ஆழமாக வேரூன்றியவை. இது போல் இன்னும் ஏராளமான கதைகளும் ஹில்று (அலை) அவர்கள் பெயரால் உலா வருகின்றன. இப்படிக் கூறப்படும் எல்லாக் கதைகளும், “ஹில்று (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடன் உள்ளனர்” என்ற நம்பிக்கையில் தோற்றுவிக்கப் பட்டவைகளாகும்.

ஹில்று (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடன் இருக்கின்றார்களா? என்று குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நாம் ஆராய முற்படும் போது குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும் கிடையாது. அவர்கள் இன்றளவும் உயிருடனிருக்க முடியாது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக் கூடியவர்களா?  அல்குர்ஆன் 21:34

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவருக்கும் நிரந்தரமாக இந்த உலகில் வாழ்கின்ற உரிமையைத் தரவில்லை என்று மனிதனைப் படைத்த அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இருக்க முடியாது என்று தெளிவாகின்றது.

இந்தப் பொது விதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஈஸா (அலை) மட்டுமே குர்ஆன், ஹதீஸ் மூலம் இந்த விதியில் இருந்து தற்காலிகமாக விலக்குப் பெறுகின்றார்கள். “ஹில்று (அலை) இன்னும் உயிருடனே வாழ்ந்து வருகின்றனர்” என்பது மேற்கூறிய குர்ஆன் வசனத்துக்கு முரணானது.

“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.  அல்குர்ஆன் 3:81

“ஹில்று’ நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப் படுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதி மொழியின் படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

நபிகள் நாயகத்தைத் தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும். பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இவ்வசனத்திலி-ருந்தும் “ஹில்று’ நபி உயிருடன் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹில்று (அலை) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால், கட்டாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து ஈமான் கொண்டிருக்க வேண்டும்.

இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு எண்ணற்ற சோதனைகள் வந்த போதும், பல போர்க்களங்களில் உயிரைப் பணயம் வைத்து சஹாபாக்கள் போராடிய போதும், ஹில்று (அலை) அவர்கள் அந்தப் போராட்டங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

இந்தச் சோதனையான காலங்களில் அவர் ஏன் சத்தியத்திற்குத் துணை செய்யவில்லை? உயிருடன் வாழ்ந்தும் அவர் இதனைச் செய்யத் தவறி இருந்தால் அவர் கடமை தவறியவராக ஆகின்றார். (அல்லாஹ் அப்படி நினைப்பதை விட்டும் காப்பானாக!)

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே “ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை” என்றால் “நமது காலத்தில் நிச்சயம் உயிருடன் இருக்க முடியாது” என்ற முடிவுக்கு நாம் உறுதியாக வர முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இஸ்லாமியச் சமூகத்தில் உட்பூசல்கள், கருத்து மோதல்கள் தோன்ற ஆரம்பித்தன. இன்றளவும் அந்த நிலை தொடர்கிறது. உண்மையான இஸ்லாம் பெரும்பாலும் மறைக்கப்பட்டு உள்ளது.

ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இன்றளவும் இருந்தால், இந்த நிலையை மாற்ற அவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? சரியான நபி வழியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஏன் ஓரணியில் மக்களைத் திரட்டவில்லை? எல்லா உலமாக்களையும் சந்தித்து அவர்களிடம் உண்மையைக் கூறி ஏன் ஒன்று படுத்தவில்லை? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நேரடியாக அவர்களுக்கு அவர் பக்க பலமாக இல்லாவிட்டாலும் அவர்களின் தீனுக்காவது துணை நின்றிருக்க வேண்டாமா?

தன்னை ஒரு நபி என்று வாதாடிக் கொண்டு மிர்ஸா குலாம் தோன்றி பல முஸ்லிம்களை வழி கெடுத்த போது ஏன் அவனிடம் வந்து வாதாடவில்லை? இதில் எதனையும் ஹில்று (அலை) அவர்கள் செய்யவில்லை. உயிருடன் அவர் இந்த மண்ணுலகில் இருந்தால் இத்தனை காரியங்களையும் அவர் செய்வது அவர் மீது கட்டாயக் கடமை அல்லவா?

ஈஸா நபி அவர்கள் என்று இந்த மண்ணுக்கு வருவார்களோ அன்றே நபிகள் நாயகத்தின் உம்மத்தாகச் செயல்பட்டு எல்லாத் தீமைகளையும் களைவார்கள். ஒரு கொடியின் கீழ் அத்தனை மக்களையும் ஒன்று திரட்டுவார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து விளங்கும் போது, இந்த மண்ணில் வாழ்ந்து வரும் ஹில்று (அலை) அவர்கள் இவற்றில் எந்த ஒன்றையும் செய்யவில்லையே! ஏன்? எனவே அவர்கள் நபிகள் நாயகம் காலத்திலேயே உயிருடன் இல்லை என்று தெரிகின்றது.

ஒரு நாள் இஷா தொழுகைக்குப் பின் சஹாபாக்களை நோக்கி “இன்று உயிருடன் உள்ள எவரும் இந்த பூமியில் நூறு ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் இருக்க மாட்டார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)  நூல்: புகாரி 116, 564, 601

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) உயிருடன் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் “100 ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கு இந்த மண்ணுலகில் வாழும் எவரும் இருக்க மாட்டார்கள்” என்ற நபி மொழி மூலம் நூறு ஆண்டுகளுக்குப் பின் ஹில்று (அலை) நிச்சயம் மரணித்தே இருக்க வேண்டும். இன்றளவும் நிச்சயம் அவர் உயிருடன் இருக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று ஒரு போதும் பொய்யாகாது. ஹில்று (அலை) உயிருடன் இருப்பதாகக் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையேயன்றி வேறில்லை.

பல பெரியவர்களை ஹில்று (அலை) அவர்கள் சந்தித்துள்ளதாகக் கூறப்படுவதும், பல கப்ருகளை ஜியாரத் செய்ய வருவதாகக் கூறப்படுவதும் மேற்கூறிய அல்லாஹ்வின் திருவசனங்களுக்கும், நபிகள் நாயகத்தின் அமுத மொழிகளுக்கும் முரண்படுவதால், அவை யாவும் பச்சைப் பொய்களே.

எவன் இது போன்ற கதைகளைச் சொல்பவன், அதனை நம்புபவன் அல்லாஹ்வின் திருவேதத்தையும், அவனது தூதரின் பொன் மொழிகளையும் நம்ப மறுத்தவனாகவே கருதப்படுவான்.

ஹில்று நபியைப் பற்றி இவர்களின் அடுத்த நம்பிக்கை, அவர் தான் அந்தரங்க ஞான பீடத்தின் அசையாத ஆன்மீகச் சக்கரவர்த்தி, மூஸா நபியின் தரீக்கா ஞான பாட்டை, அகமிய ஆசிரியர் என்பதாகும்.

ஹில்று நபி உயிருடன் உலா வரும் செய்தி கப்ஸா என்றால், இரண்டாவது செய்தி உண்மை கிஸ்ஸாவிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

மவ்லவி எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்களிடம் தரீகத், ஹகீகத், மஃரிபத் பற்றிக் கேட்கும்போது அவர், ஹில்று நபி சம்பவத்தைத் தான் முன்வைத்தார். அகமிய ஞானம் என்ற பெயரிலேயே சுற்றுகின்ற இந்தக் குருட்டுச் சிந்தனைக்கு ஹில்று நபியின் கிஸ்ஸாவைத் தான் ஆதாரமாகத் தூக்கி நிறுத்துகின்றனர்

எனவே அந்த ஆதாரத்தை இங்கு ஆய்வு செய்வோம்.

“இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும் வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது என் பயணத்தை நீண்ட காலம் தொடர்வேன்” என்று மூஸா தமது ஊழியரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

இரண்டு கடல்கள் சங்கமம் ஆகும் இடத்தை அவ்விருவரும் அடைந்த போது தமது மீனை மறந்தனர். அது கடலைப் பிளந்து தனது பாதையை அமைத்துக் கொண்டது.

அவ்விருவரும் கடந்து சென்ற போது “காலை உணவைக் கொண்டு வாரும்! இந்தப் பயணத்தில் பெரும் சிரமத்தை அடைந்து விட்டோம்” என்று தமது ஊழியரிடம் (மூஸா) கூறினார்.

“நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது” என்று (ஊழியர்) கூறினார்.

“அதுவே நாம் தேடிய இடம்” என்று (மூஸா) கூறினார். இருவரும் பேசிக் கொண்டே வந்த வழியே திரும்பினார்கள்.

(அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம்.

“உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா?” என்று அவரிடம் மூஸா கேட்டார்.

“என்னிடம் பொறுமையாக இருக்க உமக்கு இயலாது; உமக்குத் தெரியாத விஷயத்தில் உம்மால் எவ்வாறு பொறுமையாக இருக்க இயலும்?” என்று (அந்த அடியார்) கூறினார்.

“அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்! உமது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்ய மாட்டேன்”என்று (மூஸா) கூறினார்.

“நீர் என்னைப் பின்பற்றினால் நானாக உமக்கு இது பற்றிய விளக்கத்தைக் கூறும் முன் என்னிடம் கேட்கக் கூடாது” என்று (அந்த அடியார்) கூறினார்.

இருவரும் நடந்தனர். இருவரும் ஒரு கப்பலில் ஏறியவுடன் (அந்த அடியார்) அதில் ஓட்டை போட்டார். “இதில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காக நீர் ஓட்டை போடுகிறீரா? மிகப் பெரிய காரியத்தைச் செய்து விட்டீரே” என்று (மூஸா) கூறினார்.

“என்னுடன் உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என நான் உமக்குக் கூறவில்லையா?” என்று (அந்த அடியார்) கேட்டார்.

“நான் மறந்ததற்காக என்னைப் பிடித்து விடாதீர்! என் விஷயத்தில் சிரமத்தை ஏற்படுத்தி விடாதீர்!” என்று (மூஸா) கூறினார்.

இருவரும் நடந்தனர். ஓர் இளைஞனைக் கண்ட போது (அந்த அடியார்) அவனைக் கொன்றார். “எந்த உயிரையும் கொல்லாத ஒரு தூய உயிரைக் கொன்று விட்டீரே! தகாத காரியத்தைச் செய்து விட்டீரே” என்று (மூஸா) கூறினார்.

“நீர் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என உம்மிடம் நான் கூறவில்லையா?” என்று (அந்த அடியார்) கேட்டார்.

“இதன் பிறகு எதைப் பற்றியேனும் நான் உம்மிடம் கேட்டால் என்னுடன் நீர் உறவு வைக்க வேண்டாம். என்னிடமிருந்து (போதுமான) சமாதானத்தைப் பெற்று விட்டீர்” என்று (மூஸா) கூறினார்.

அவ்விருவரும் நடந்தனர். முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அங்கே விழுவதற்குத் தயாரான நிலையில் ஒரு சுவரைக் கண்டனர். உடனே (அந்த அடியார்) அதை (தூக்கி) நிறுத்தினார். “நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.

“இதுவே எனக்கும் உமக்குமிடையே பிரிவாகும். உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன்.

அந்தக் கப்பல் கடல் தொழில் செய்யும் சில ஏழைகளுக்குரியது. அவர்களுக்குப் பின்னே ஓர் அரசன் இருக்கிறான். அவன் (பழுதில்லாத) ஒவ்வொரு கப்பலையும் அபகரித்து எடுத்துக் கொள்வான். எனவே அதைப் பழுதாக்க நினைத்தேன்.

அந்த இளைஞனின் பெற்றோர் நம்பிக்கை கொண்டிருந்தனர். “அவன் அவ்விருவரையும் (இறை) மறுப்பிலும் வழி கேட்டிலும் தள்ளி விடுவான்” என்று அஞ்சினோம்.

“அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனை விடச் சிறந்த தூய்மையான நெருங்கி உறவாடக் கூடியவனைப் பகரமாகக் கொடுப்பான்” என நினைத்தோம்.

அந்தச் சுவர் அந்நகரத்தில் உள்ள இரண்டு அனாதைச் சிறுவர்களுக்கு உரியது. அதன் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்லவராக இருந்தார். “எனவே அவ்விருவரும் பருவமடைந்து அவர்களுக்குரிய புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று உமது இறைவன் நாடினான். இது உனது இறைவனின் அருள். இதை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கம் இதுவே. (என்றார்)   அல்குர்ஆன் 18:60-82

இந்த வசனங்களில் மூஸா நபியவர்கள் கிழ்று நபியைச் சந்தித்து, பாடம் கற்ற வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியின் பின்னணியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரிவாக விளக்கியுள்ளனர்.

மூஸா நபியவர்கள் இஸ்ரவேலர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்காக எழுந்தார்கள். “மனிதர்களில் மிகவும் அறிந்தவர் யார்?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. “இது பற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவன்” எனக் கூறாமல், “நானே மிக அறிந்தவன்” எனக் கூறி விட்டார்கள். இதனால் அல்லாஹ் அவர்கள் மீது கோபமடைந்தான். “இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் எனது அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகம் அறிந்தவர்” என்று அல்லாஹ் அறிவித்தான். அதற்கு மூஸா நபியவர்கள், “அவரை நான் எப்படி அடைவது?” என்று கேட்டார்கள். “ஒரு பாத்திரத்தில் ஒரு மீனைப் போட்டுக் கொள்! அந்த மீனை எங்கே தவற விடுகிறாயோ அந்த இடத்தில் தான் அவர் இருக்கிறார்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.

மூஸா நபியவர்களும், யூஷஃ பின் நூன் அவர்களும் பாத்திரத்தில் மீனை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். ஒரு பாறையைக் கண்டு அங்கே தலை சாய்த்து தூங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் பாத்திரத்திலிருந்த மீன் நழுவி கடலில் சென்று விட்டது.

……இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

(புகாரி 122, 3401, 4725, 4726)

இதைத் தொடர்ந்து நடந்தது தான் மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகிறது.

இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்து குறிப்பிடும் போது….

குறிப்பிட்ட இடத்தில் ஹில்று அவர்களை மூஸா நபியவர்கள் கண்டு பிடித்தனர். அவருக்கு மூஸா நபியவர்கள் ஸலாம் கூறினார்கள். அப்போது ஹில்று, “உங்கள் பகுதியில் ஸலாம் கூறும் வழக்கம் எப்படி?” என்று கேட்டார். அதற்கு மூஸா நபியவர்கள், “நான் தான் மூஸா” என்று கூறினார்கள். அதற்கு ஹில்று அவர்கள், “இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட மூஸாவா?” என்று கேட்டார்கள். அதற்கு மூஸா நபியவர்கள், ஆம் என்றனர்.  (புகாரி 122, 3401, 4725, 4727)

…..நீர் எதற்காக இங்கே வந்துள்ளீர்? என்று ஹில்று கேட்டார். அதற்கு மூஸா நபியவர்கள், “உமக்குத் தெரிந்ததை எனக்கு நீர் கற்றுத் தர வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு ஹில்று அவர்கள், “உமக்குத் தான் இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருகின்றதே? உமது கையில் தவராத் வேதமும் உள்ளதே?” என்று கேட்டார்கள்.  (புகாரி 4726)

இதன் பின்னர் தான் மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்ட மூன்று நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

மூஸா நபிக்குத் தெரியாத மூன்று விஷயங்கள் ஹில்று நபிக்குத் தெரிந்ததாக இங்கே கூறப்படுவதை சிலர் தமது தவறான கொள்கைக்கு ஆதாரமாகக் கருதுகின்றனர்.

மூஸா நபியவர்கள் என்ன தான் பெரிய இறைத் தூதராக இருந்தாலும், எவ்வளவு தான் அற்புதங்களை அவர்கள் நிகழ்த்தினாலும் அவர்களுக்குத் தெரியாத இரகசிய ஞானம் ஹில்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஹில்று அவர்கள் தமது தவ வலிமை மூலம் பெற்ற ஞானம், மூஸா நபியவர்கள் வஹீ மூலம் பெற்ற ஞானத்தை விடச் சிறந்தது என்று அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த ஞானத்தில் மூலம் கண்ணுக்குத் தெரியாத மறைவான விஷயங்கள் யாவும் புலப்படும். இறைவனின் வஹீயை எதிர்பார்க்காமலேயே அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தான் மெஞ்ஞானம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் கவனமாக மேற்கண்ட வசனங்களையும், மேலே நாம் சுட்டிக் காட்டிய நபிமொழிகளையும் சிந்திக்கும் போது இவர்களின் வாதத்துக்கு மேற்கண்ட நிகழ்ச்சிகளில் எந்தச் சான்றும் இல்லை என்பதை அறியலாம்.

மூஸா நபிக்குத் தெரியாத மூன்று விஷயங்கள் ஹில்று அவர்களுக்குத் தெரிந்ததால் இவர்கள் இவ்வாறு வாதிடுகின்றனர். ஆனால் இதே நிகழ்ச்சியில் மிகச் சாதாரணமான பல விஷயங்கள் ஹில்று அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளதை இவர்கள் கவனிக்க மறந்து விட்டனர்.

மூஸா நபியவர்கள் ஹில்றைச் சந்தித்து ஸலாம் கூறிய போது, “உமது ஊரில் ஸலாம் கூறும் வழக்கம் எப்படி?” என்று ஹில்று கேட்கின்றார்.

வந்தவர் ஓர் இறைத் தூதர் என்பதோ, தன்னைப் போலவே முஸ்லிம் என்பதோ ஹில்றுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதை இது நிரூபிக்கிறது.

இதன் பின்னர் மூஸா நிபயவர்கள், “நான் தான் மூஸா” என்றனர். இப்படிச் சொன்ன பிறகு கூட வந்தவர் மூஸா என்று இறைத் தூதர் என்பது ஹில்றுக்குத் தெரியவில்லை. இதனால் தான் இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட மூஸாவா? என்று கேட்கிறார்.

எதற்காக இங்கே வந்துள்ளீர்? என்று ஹில்று கேட்கிறார். மூஸா நபியவர்களிடம் கேட்காமலேயே, “என்னிடம் சில விஷயங்களை அறிந்து கொள்ளத் தான் நீர் வந்துள்ளீர்” என்று அவர் அறியவில்லை.

மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளில் கீழே விழ இருந்த சுவரைத் தூக்கி நிறுத்திய சம்பவமும் ஒன்றாகும்.

அந்த ஊருக்குச் சென்ற மூஸா நபியும் ஹில்று நபியும் அவ்வூராரிடம் உணவு கேட்டனர். அவ்வூரார் உணவளிக்க மறுத்து விட்டனர் என்று மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளது. அவ்வூரார் உணவு தர மாட்டார்கள் என்ற உண்மை முன்பே ஹில்றுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் உணவை ஏற்பாடு செய்து கொண்டு அவ்வூருக்குச் சென்றிருப்பார். அவ்வூராரிடம் உணவளிக்குமாறு கோரியிருக்க மாட்டார்.

மூஸா நபியவர்கள், இனிமேல் எதிர்க் கேள்வி கேட்ட மாட்டேன் என்று கூறி விட்டு மூன்று தடவை அதை மீறி விட்டார்கள். மூஸா நபியவர்கள் வாக்கு மீறுவார்கள் என்ற உண்மை ஹில்ருக்கு முன்பே தெரிந்திருந்தால் முதல் தடவையிலேயே அவரை அனுப்பி வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மூஸா நபி கூறிய சமாதானத்தை அப்படியே ஏற்று ஏமாந்திருக்கிறார். எனவே இவர்கள் வாதிடுவது போன்ற மறைவானதை அறிந்து கொள்ளும் எந்த மெஞ்ஞானமும் கிடையாது என்பதற்குத் தான் மேற்கண்ட சம்பவம் ஆதாரமாக அமைந்துள்ளது.

அப்படியானால் மேற்கண்ட மூன்று மறைவான நிகழ்ச்சிகள் ஹில்றுக்கு மட்டும் தெரிந்தது ஏன்? மூஸா நபிக்குத் தெரியாமல் போனது ஏன்?

இவ்வசனங்களைச் சிந்தித்தாலே இக்கேள்விக்கான விடையை அறிந்து கொள்ள முடியும்.

மூன்று நிகழ்ச்சிகள் நடந்த பின்னர், “இதை நானாகச் செய்யவில்லை. அல்லாஹ் அறிவித்துத் தந்ததையே செய்தேன்” என்று ஹில்று கூறியதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

மூஸா நபியவர்கள், “நான் தான் மிகவும் அறிந்தவன்” என்று கூறியதற்குப் பாடம் கற்பிக்க அவர்களுக்குத் தெரியாத மூன்று விஷயங்களை ஹில்றுக்கு இறைவன் கற்றுக் கொடுத்தான் என்பதை ஹில்று அவர்களின் மேற்கண்ட பதிலிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

நல்ல கப்பலை அபகரிக்கும் மன்னரின் ஆட்கள் வரவுள்ளனர் என்பதை இறைவன் அறிவித்துக் கொடுத்ததால் கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.

கீழே விழவிருந்த சுவற்றுக்கு அடியில் புதையல் இருப்பதையும், இரண்டு சிறுவர்களுக்கு அது உரியது என்பதையும் இறைவன் அறிவித்துக் கொடுத்ததால் சுவற்றை நிமிர்த்தினார்கள். அவ்வூரார் உணவளிக்க மாட்டார்கள் என்பதை இறைவன் அறிவித்துக் கொடுக்காததால் அதை அவர்களால் அறிய இயலவில்லை.

ஓர் இளைஞன் தானும் வழி கெட்டு, தனது பெற்றோரையும் வழி கெடுக்க முயற்சிப்பதால் அவனைக் கொலை செய்கின்றார்கள். இறைவனின் கட்டளைப்படி இதையும் செய்கின்றார்கள். எனவே மூஸா நபிக்கு அறிவிக்காமல் ஹில்றுக்கு மட்டும் இறைவன் இம்மூன்று விஷயங்களையும் அறிவித்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிவித்துக் கொடுத்ததால் அவ்வாறு செய்து முடித்தார்கள்.

இதில் மெஞ்ஞானம் என்று ஏதும் இல்லை.

மேலே நாம் சுட்டிக் காட்டிய புகாரியில் இடம் பெற்ற ஹதீஸ்களில், “எனக்கு இறைவன் அறிவித்துத் தந்ததை நான் அறிவேன். உமக்கு இறைவன் அறிவித்துத் தந்ததை நீர் அறிவீர்” என்று மூஸா நபியிடம் ஹில்று கூறியதாகக் கூறப்பட்டுள்ளதே போதுமான சான்றாக அமைந்துள்ளது.

சில விரிவுரையாளர்களும் மொழி பெயர்ப்பாளர்களும், ஹில்று அவர்களால் கொல்லப்பட்டவன் பாலகன் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் இதில் பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

அவன் வளர்ந்து பெரியவனானால் தனது பெற்றோரை வழி கெடுத்து விடுவான் என்பதால் ஹில்று அவர்கள் அவனைக் கொன்றதாகக் கூறுகின்றனர்.

எதிர் காலத்தில் ஒருவன் பெரிய குற்றம் செய்வான் என்பதற்காக அக்குற்றத்தைச் செய்யும் முன் அவனைக் கொல்வது இறை நியதிக்கு ஏற்றது தானா? பச்சிளம் பாலகனைக் கொல்வது என்ன நியாயம்? என்ற கேள்வி இதனால் எழுகின்றது. இக்கேள்விக்கு ஏற்கத்தக்க எந்த விடையையும் அவர்களால் கூற முடியவில்லை.

எனவே சிறுவன் என்று மொழி பெயர்க்காமல் இளைஞன் என்று மொழி பெயர்த்தால் இந்தக் கேள்வி எழாது. இளைஞனாக அவன் இருந்து அன்றாடம் தனது பெற்றோரைத் துன்புறுத்தி வந்தான் எனக் கூறினல் அதற்காக அவனைத் தண்டிப்பது இறை நியதிக்கு ஏற்றதாக அமையும்.

“சிறுவன்’ என்று மற்றவர்களும், “இளைஞன்’ என்று நாமும் தமிழாக்கம் செய்துள்ள இடத்தில் (18:74) குலாம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பல அர்த்தங்களைக் கொண்ட சொல்லாகும்.

அடிமை, சேவகன், சிறுவன், இளைஞன் என இதற்குப் பல பொருள் உண்டு.

சிறுவன் என்று பொருள் கொண்டு செய்யாத குற்றத்துக்காக ஒருவன் தண்டிக்கப்பட்டான் எனக் கூறுவதை விட, இளைஞன் எனப் பொருள் கொண்டு செய்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டான் என்று கூறுவது இறை நியதிக்கு ஏற்றதாகும்.

இவ்வாறு பொருள் கொள்வதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

நான் திரு7மணமாகாத குலாமாக (இளைஞனாக) இருந்தேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி 7031, 3739)

நான் இளைஞனான, குலாமாக இருந்தேன் என்று இப்னு உமர் கூறியது புகாரி 6122வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூபக்ரின் மகன் இளைஞனாகவும், குலாமாகவும் இருந்தார். (புகாரி 5807)

இந்த குலாமுக்கு இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 3472)

ஹாரிஸா அவர்கள் குலாமாக இருந்த போது போரில் கொல்லப்பட்டார்கள். (புகாரி 3982, 6550)

நபிகள் நாயகத்திடம் பணியாற்றிய யூத குலாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். (புகாரி 1356, 5657)

இங்கெல்லாம் சிறுவன் என்று பொருள் செய்தால் அறவே பொருந்தாது.

இந்த ஹதீஸ்களில் குலாம் என்ற சொல்லுக்கு இளைஞன் என்று பொருள் கொள்வது போல் மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்ற சொல்லுக்கும் பொருள் கொண்டால் குழப்பம் ஏதும் இல்லை.

ஹில்று நபிக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த மூன்று செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அகமிய ஞானம், ரகசிய ஞானம் என்று புரோகிதர்கள் வாதிடுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

மெஞ்ஞானத்தை நிரூபிக்க இவர்கள் பிடித்துத் தொங்கிய இந்தக் கிளையும் உடைந்து விட்டது. மெஞ்ஞானம், ஆன்மீக ஞானம், ரகசிய ஞானம், அகமிய ஞானம் இவை அனைத்தும் பொய் ஞானமே என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

--ஷம்ஷுல்லுஹா 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்