"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நெகிழ்வூட்டும் ஓர் உண்மைச் சம்பவம்

பைஹகீ எனும் கிரந்தத்தில் ஹஸன் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸ்: அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் அழைப்புப் பணி செய்த போது நபியை விட்டு மக்களை தூரப்படுத்த வேண்டும் என காபிர்கள் பல சதிகளை மேற்கொண்டனர் 

அதாவது, அவர்கள் முஹம்மத்; ஒரு சூனியக்காரர், ஜோஷியக்காரர், பைத்தியக்காரர், என்றெல்லாம் மக்கள் மத்தியில் கூறித்திரிந்தார்கள். என்ற போதிலும் நபி (ஸல்) அவர்களை நபி என ஏற்றுக்கொண்டு பின்பற்றிய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை. உலகத்துடைய இன்பங்களைக் காட்டியாவது நபியை மயக்கவேண்டும், திசைதிருப்பவேண்டும் என ஆலோசனை செய்த காபிர்கள், அவர்களில்; பேச்சில் தலை சிறந்தவனான ஹுஸைன் இப்னுல் முன்திர் அல் குஸாஈ என்பவனை நபியிடம் அனுப்பி வைத்தனர். 

நபியிடம் வந்த அவன் முஹம்மதே! நீர் கூறி வரும் புதிய கொள்கையின் மூலம் நமது கூட்டமைப்பைப் பிரித்துவிட்டீர்! நமக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தி விட்டீர், இவ்வாறு செய்தீர் அவ்வாறு செய்தீர் என அடுக்கிக் கொண்டே சென்றான். பின்னர் கூறினான். நீர் சொத்து செல்வத்தை விரும்புவதாக இருந்தால் நாம் உமக்கு சொத்து செல்வத்தை சேகரித்துத் தருகிறோம் நம்மிடத்திலேயே மிகப்பெரிய செல்வந்தராக உம்மை ஆக்குகின்றோம். அல்லது அழகிய பெண்களை அனுபவிப்பது உமது விருப்பமாக இருந்தால், நாம் உமக்கு அழகிய பெண்களை மணமுடித்து தருகிறோம், நீர் பதவியை விரும்புவதாக இருந்தால், நாம் உமக்கு பதவியை தருகிறோம் எதை விரும்புகின்றீர்? உமது ஆசை என்ன? உடனே நிறைவேற்றுகின்றோம் என்று கூறினான்.

இந்த ஆசை வார்தைகளையெல்லாம் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவன் பேசி முடித்த பின், இம்ரானின் தந்தையே நீர் பேசி முடித்துவிட்டீரா? எனக் கேட்டார்கள் ஆம் என்று அவன் சொன்ன பொழுது நான் கேட்கக்கூடியவைகளுக்கு முதலில் பதில் அளிப்பீராக! என்று கூறினார்கள். அதற்கு அவன், கேளும் என்று சொன்னான். இம்ரானின் தந்தையே! நீர் எத்தனை கடவுள்களை வணங்குகிறீர்? என்றார்கள். அதற்கு அவன் நான் ஏழு கடவுள்களை வணங்குகிறேன், ஆறு பூமியிலும்! ஓன்று( அல்லாஹ்வாகிய) வானத்திலிருக்கும் கடவுளுமாகும் என்று பதிலளித்தான். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செல்வங்கள் அழிந்து விட்டால் எந்தக் கடவுளை அழைப்பீர்? என்றார்கள், அவன் வானத்தில் உள்ளவனை(அல்லாஹ்வை) அழைப்பேன் என்றான். மழை பொழிய வில்லையானால் எந்தக் கடவுளை அழைப்பீர்? என்று கேட்க அவன் வானத்தில் உள்ளவனையே அழைப்பேன் என்றான். குடும்பத்தினர் பசியால் பட்டினியால் வாடும் பொழுது எந்தக் கடவுளை அழைப்பீர்? என்று கேட்க அதற்கும் அவன் வானத்தில் உள்ளவனையே அழைப்பேன் என்று பதிலளித்தான். தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனிடம் நீ உன் தேவைகளைக் கூறிப் பிரார்த்திக்கும் போது உமக்கு அனைத்து கடவுள்களும் பதிலளிக்கின்றனரா? அல்லது ஒருவன்(அல்லாஹ்) மாத்திரம் பதிலளிக்கின்றானா? என்று வினவினார்கள். அதற்கு அவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரம் தான் பதிலளிக்கிறான் என சொன்னான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமக்கு ஒருவன் தான் பதிலளிக்கிறான், ஒருவன் தான் அருள் புரிகிறான் என்று தெரிந்து கொண்டே அவனுக்கு நன்றி செலுத்துவதில் ஏன் அவனல்லாத வேறு போலிக் கடவுள்களைக் கூட்டாக்குகிறீர்? அந்தக் கடவுளர்கள் உன் விடயத்தில் ஒரே கடவுளாகிய அல்லாஹ்வை மிகைத்துவிடும் சக்தியுள்ளவர்கள் என அச்சம் கொள்கிறீரா? என்று ஒரு போடு போட்டார்கள். அதற்கு ஹுஸைன்; அவர்கள் அதற்கு எப்படி சக்தி பெற முடியும் ஒரு போதும் சக்தி பெற முடியாது என்று கூறினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுஸைனே! பல தெய்வக் கொள்கையை விட்டு விடுவீராக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வீராக. அல்லாஹ்விடத்தில் உமக்குப் பயன் தரக்கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன் என்று கூறினார்கள்.

வெற்றிக் கப்பல்
எத்தனை மனிதர்கள் அழிந்தவர்களோடு சேர்ந்து அழிந்து மறுமை சம்பவிக்கும் வரை இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் இலக்காகி மரணித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு சாபம் உறுதியாகி விட்டது, காரணம் அவர்கள் தௌஹீத் எனும் ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதது தான்.

அல்லாஹ்தான்; ஏக இறைவன்,

ஒவ்வொரு அடியானும் அவனிடம் அன்றி வேறுயாரிடமும் தனது காரியங்களை பொறுப்பு சாட்டக் கூடாது.

அல்லாஹ்வைத்தவிர வேறு எவரிடமும் அவன் நம்பிக்கை வைத்தவனாக இருக்கக் கூடாது.

அவனை விடுத்து வேறு யாருக்கும் பயப்படக் கூடாது

அவனுடைய பெயரைத்தவிர வேறு எவர் பெயரிலும் சத்தியம் செய்யக் கூடாது.

அவனை விடுத்து வேறு எவர் பெயரிலும் நேர்ச்சை செய்யக் கூடாது.

அவனிடத்தில் மாத்திரமே பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வாறு நடந்தால் மாத்திரமே வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று அவன் கொடுத்த உறுதி மொழியை சரியாக நிறைவேற்றியவனாகக் கருதப்படுவான். இவ்உறுதி மொழியை சரியாகச் செய்து அதற்குரிய கடமைகளை முழுமையாக நிறைவேற்றும் போதுதான் அல்லாஹ் அவனுக்கு நரகத்தை ஹராமாக்கி விடுகிறான்.

ஒருமுறை முஆத் (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்து சென்ற வேளையில் அன்னவர்கள் திடீரென பின்னால் திரும்பி 
முஆதே! அடியார்கள் அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகள்; என்னவென்று அறிவீரா? அல்லாஹ் தனது அடியார்கள் மீது செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று அறிவீரா? எனக் கேட்க அல்லாஹ்வும் அவனதும் ரஸுலும் மிக அறிந்தவர்கள் என முஆத் (ரலி) சொல்கிறார். 'அடியார்கள் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டியது அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காமல் அவனை வணங்குவதாகும், அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டியது அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காமல் இருந்தவர்களை தண்டிக்காமல் இருப்பதாகும்' என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)

ஒரு முறை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபிகளார் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக கருதப்படுவது எது? எனக் கேட்டார்கள் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வே உன்னைப் படைத்திருக்கும் போது அவனை விட்டுவிட்டு வேறொரு கடவுளை அவனுக்கு இணையாக்குவதாகும் என்று கூறினார்கள்.

உண்மைதான். ஏகத்துவத்தை நிலை நிறுத்துவதற்காகவும், எடுத்துச் சொல்வதற்காகவும் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்படுகின்றனர்.

அல்லாஹ் சொல்கிறான், 'ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம் (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் விலகிக்கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்)' (அந்நஹ்ல் 16: 36)

தாகூத் என்பது: அல்லாஹ் அல்லாது வணங்கப்படக்கூடிய சிலைகள், கப்றுகள், கற்கள், மரங்கள் அனைத்தையும் குறிக்கும். ஏகத்துவம் என்பது தூதர்களின் அழைப்புப் பணியின் மணி மகுடமாகும். 

'(நபியே) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களிடம் நாம்; அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை ஆக்கியிருந்தோமா? என்று நீர் கேட்பீராக!'என்று அல்லாஹ் கூறுகின்றான்.(ஸுஹ்ருப் 43: 45).

அல்லாஹ்வின் ஏகத்துவத்தை பறை சாற்றுவதற்காக அன்றி எந்த ஒரு படைப்பினமும் படைக்கப்படவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: 'நான் மனித ஜின் இனங்களை என்னை வணங்குவதற்காகவே அன்றிப் படைக்கவில்லை'. (அத்தாரியாத் 51: 56).

எந்த நற்கிரிகைகளும் தவ்ஹீத் கொள்கையில் உறுதியான நம்பிக்கை இல்லாத பட்சத்தில் அவை மறுக்கப்பட்டு விடும். அல்லாஹ் தனது திருமறையில்: 'அவர்கள் (அல்லாஹ்விற்கு) இணை வைத்திருந்தால் அவர்களது நல்லறங்கள் அழிந்துவிடும்' (அல்அன்ஆம் 6:88).

எவன் ஓரிறைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கின்றானோ அவன் வெற்றி பெற்றுவிட்டான். திர்மிதியில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஸுல் குத்ஸியில் வருவதாவது, 'ஆதமுடைய மகனே எனக்கு எந்த ஒரு இணையையும் கற்பிக்காத நிலையில் பூமியைப் போன்றளவுக்கு அதிக பாவங்களுடன் நீ என்னைச் சந்தித்தாலும் உனது பாவங்கள் அனைத்தையும் நான் மன்னித் விடுவேன்'. 

ஏகத்துவத்தின் மகத்துவம் தெளிவானதாகும் அதனால்தான் நபிமார்கள் கூட அது இழக்கப்பட்டுவிடுமோ என பயந்தார்கள். ஏகத்துவவாதிகளின் தந்தையும், சிலைகளை உடைத்தவரும், புனித இறை ஆலயத்தை நிர்மானித்தவருமான, அல்லாஹ்வின் நேசத்திற்குரிய இப்ராஹீம் (அலை) அவர்களே அரசர்களுக்கெல்லாம் அரசனான அல்லாஹ்விடம் 
'என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதை விட்டு தூரப்படுத்திவிடுவாயாக' எனப் பிரார்த்தித்தார்கள். (இப்றாஹீம் 14:35). 

இப்றாஹீம் நபியே, இந்தச் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடினாரென்றால் அவருக்கு பின்னுள்ளவர்கள் எப்படி இதை விட்டு அச்சமற்றிருக்க முடியும்?

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

குகைவாசிகளின் நாய் சுவர்க்கம் செல்லுமா

கடிதங்களைப் பாதுகாக்கும் நாய்?    
 
குகைவாசிகள் பற்றி அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கூறியதற்கு மேல் எதையும் கற்பனை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது என்றாலும் அறிஞர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என்ற போர்வையில் பலர் ஏராளமான கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துள்ளனர்.
  குகைவாசிகளின் காவலுக்கு நிறுத்தப்பட்ட நாயைப் பற்றிக் கூட பல கட்டுக் கதைகள் உள்ளன.
  குகைவாசிகளுக்கு காவலாக குகையின் வாசலில் அவர்களது நாய் நிறுத்தப்பட்டதாகக் குர்ஆன் கூறுகிறது. அந்த நாய் பல வருடங்களாக குகைவாசிகள் குகையில் தூங்கிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் பார்ப்போரைப் பயமுறுத்தும் தோற்றத்தில் நின்று கொண்டிருந்தது எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது.
  இதைத் தவிர அந்த நாய் பற்றி வேறு விபரம் எதுவும் திருக்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் கூறப்படவில்லை.
  ஆனால் போலி விரிவுரையாளர்கள் பலர் அந்த நாயின் பெயர் கித்மீர் என்று எழுதி வைத்துள்ளனர். அந்த நாயின் பெயர் பற்றி திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை. நபிமொழிகளிலும் கூறப்படவில்லை. அல்லது கல்வெட்டு ஆதாரமும் இல்லை. ஒரு ஆதாரமும் இல்லாமல் அந்த நாயின் பெயர் 'கித்மீர்' என்பதை இவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தனர்?
    எவ்வித ஆதாரமுமின்றி நாயின் பெயர் கித்மீர் என்று கூறுவதையாவது அலட்சியம் செய்து விடலாம். ஆனால் அந்தப் பெயரை மிகப் பெரிய பாதுகாப்புக் கேடயமாக ஆக்கிய கொடுமையை அலட்சியப்படுத்த முடியாது.
  இந்தக் கொடுமையை சாதாரண மக்கள் மட்டுமின்றி மிகப் பெரிய உலமாக்கள் என அறியப்பட்டவர்களும் செய்து வருகின்றனர்.
  அந்தக் கொடுமை என்னவென்றால் தாங்கள் மற்றவர்களுக்கு எழுதும் கடிதங்களின் உரை மீது ''கித்மீர்'' என எழுதுவதாகும். இவ்வாறு அந்த நாயின் பெயரை எழுதினால் கடிதம் பத்திரமாக உரிய இடத்தைச் சேரும் என தமிழக உலமாக்கள் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 குகைவாசிகளை அந்த நாய் எவ்வாறு பாதுகாத்ததோ அது போல் கடிதங்களையும் பாதுகாக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.
 குகைவாசிகளுக்குச் சொந்தமான அந்த நாய் குகைவாசிகளுக்குக் காவலாக நின்றதாகத் தான் குர்ஆன் கூறுகிறது. அது யுக முடிவு நாள் வரை சாகா வரம் பெற்றது என்றோ, தபால் இலாகா அந்த நாய்க்கு ஒதுக்கப்பட்டது என்றோ திருக்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் கூறப்படவில்லை.
    இறைவன் வழங்காத ஆற்றலை நாய்க்கு வழங்குவது இறைவனின் மீது இட்டுக் கட்டுவதாகும். மேலும் இறைவன் தனது கைவசத்தில் எல்லா அதிகாரத்தையும் - கடிதங்களைப் பாதுகாப்பது உட்பட - வைத்திருக்கும் போது அதை நாய்க்கு வழங்குவது இணை வைக்கும் குற்றமாகவும் அமையும் என்பதை இவர்கள் உணர வேண்டும்.
   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அண்டை நாட்டின் சிற்றரசர்களுக்கும் பேரரசர்களுக்கும் கடிதங்கள் எழுதினார்கள். இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுத்தார்கள். அந்தக் கடிதங்கள் யாவும் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
 கித்மீர் என்று எழுதினால் கடிதங்கள் பத்திரமாகச் சேரும் என்றிருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு பயன்படுத்தியிருப்பார்கள்.
  இன்றைய காலத்தில் கடிதங்கள் பாதுகாப்பாகச் சென்றடையும் நிலையும் உத்தரவாதமும் உள்ளது. அன்றைய காலத்தில் கடிதங்கள் உரிய இடத்தை அடைவது சிரம சாத்தியமாக இருந்தது. தூதர்கள் தாம் பல மைல்களைக் கடந்து சென்று கடிதங்களைக் கொடுத்து வந்தனர். அந்தப் பயணத்தின் இடையே என்ன வேண்டுமானாலும் நேரலாம். இதனால் கடிதம் உரிய இடத்தைச் சென்றடைய முடியாமல் போகலாம்.
    இந்த அளவு பாதுகாப்புக் குறைவான கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதிய எந்தக் கடிதத்திலும் கித்மீர் என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை.
   அல்லாஹ்வின் தூதருக்குத் தெரியாத ஒன்றை இவர்கள் கண்டு பிடித்து விட்டார்களா? என்பதையும் இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
  அதை விட முக்கியமாக 'கித்மீர்' என்ற பெயரே கற்பனை என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
    இது போன்ற கிறுக்குத்தனமான செயல்கள் ஈமானுக்கே உலை வைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
  போலி விரிவுரையாளர்களின் கற்பனை இத்துடன் நிற்கவில்லை. அந்த நாய் சொர்க்கத்துக்குச் செல்லும் பிராணிகளில் ஒன்றாகும் எனவும் புளுகி வைத்துள்ளனர்.
  சொர்க்கமும் நரகமும் மனிதர்களுக்காகவும் ஜின் இனத்திற்காகவும் தான் படைக்கப்பட்டுள்ளன. வேறு எந்த உயிரினத்துக்கும் சொர்க்கமோ நரகமோ கிடையாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. பகுத்தறிவு வழங்கப்பட்ட இனத்திற்கு மட்டும் தான் சட்ட திட்டங்கள் போட முடியும். பரிசோ தண்டனையோ அளிக்க முடியும்.
 மனித ஜின் இனத்தைத் தவிர மற்ற பிராணிகளுக்கு சொர்க்கமோ நரகமோ உண்டு என்றால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூற அதிகாரம் படைத்தவர்கள்.
 குகைவாசிகளின் நாய் சொர்க்கம் செல்லும் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. நபிமொழிகளிலும் அவ்வாறு கூறப்படவில்லை.
    அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறாத விஷயத்தை இவர்கள் எப்படிக் கண்டு பிடித்தனர்? இவர்களுக்கு சிறப்பாக வஹீ ஏதும் வந்ததா?
  
குகைவாசிகளின் எண்ணிக்கை பற்றியே பேசக் கூடாது என்று அல்லாஹ் தடை செய்திருக்கும் போது போலி விரிவுரையாளர்கள் எண்ணிக்கையை முடிவு செய்ததோடு நில்லாமல் அவர்களுக்குப் பெயரும் சூட்டியுள்ளனர்.
    குகைவாசிகளுக்கு பெயர் சூட்டியது மட்டுமின்றி அந்தப் பெயர்கள் பவர் ஃபுல்லான மந்திரம் எனவும் ஏமாற்றுகின்றனர்.
  ஒரு வீட்டில் அவர்களின் பெயர்ப் பட்டியல் இருந்தால் அவ்வீடு தீப்பிடிக்காது.
    தீப்பிடித்து எரியும் வீட்டின் மேல் அந்தப் பெயர்களை எழுதிப் போட்டால் உடனே தீ அணைந்து விடும்.    நோய் தீரும். பைத்தியம் விலகும்.
 என்றெல்லாம் கண்டபடி புளுகி வைத்துள்ளனர். இதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.
   மக்களை ஏமாற்றி மந்திர வேலை செய்வோரின் பித்தலாட்டமே தவிர இவர்கள் கூறுவது உண்மையில்லை. வேண்டுமானல் அவர்கள் வீட்டில் இப்பெயர்களை எழுதி வைக்கட்டும். நாம் அதை கொளுத்திக் காட்டுவோம். இதை மந்திரவாதிகள் (?) ஏற்கத் தயாரா? என்று அறைகூவல் விடுகிறோம்.
  அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறாத இந்தக் கட்டுக்கதைகளைக் குப்பையில் போட வேண்டும்.

கப்று வணங்கிகள் என்போர் யார்?

சாதராண இந்திரியத்துளியில் இருந்து மனிதைனைப் படைத்து, பின்னர் அவனை மரணிக்கச் செய்து, அதன்பின்பும் அவனது விரல்ரேகைளில் கூட எவ்வித மாற்றமும் இல்லாது அதே அமைப்பில் அவனை எழுப்புவற்கு சக்தி பெற்ற அகலங்களின அதிபதியாகிய அல்லாஹ்வைவிட்டுவிட்டு, மரணித்த சிலருக்கு தாமாக சில சிறப்புக்களையும், கராமத்துக்களையும் வழங்கி அவர்கள் பேரில் கப்றுகளை கட்டி அவர்களின் மகிமைகளை எடுத்துக் கூறி அல்லாஹ்விடம் நேரடியாகப் பிரார்த்திப்பதை விட்டும் முஸ்லிம்களை தடுக்கின்ற கூட்டத்தினரை கப்று வணங்கிகள் என அழைக்கலாம்.


''அடையாளங்கள்''
ஒருவர் கப்று வணங்கிதான் என்பதன் அளவு கோலாக நாம் மேலே சொன்ன அமசங்களுடன் அவர்களுக்காக நேர்ச்சை செய்தல், அவர்களின் மண்ணறையில் அறுத்துப்பலியிடுதல், அவர்கள் பொருட்டால் அல்லாஹ்விடம் தேவைகளை வேண்டுதல், அவர்களின் பெயரால் விழா எடுத்தல், கந்தூரி கொடுத்தல், அவர்களின் மண்ணறைகளுக்கு பயனம் செய்தல், அவற்றைப் புனிதமாக்குதல், அங்கு தலையைத் தாழ்த்தி மரியாதை செய்தல், அல்லது சுஜுத் செய்தல், போன்ற மார்க்கம் அனுமதிக்காத காரியங்களை அரங்கேற்றுவோரை கப்று வணங்கிகள் என நாம் அடையாளப்படுத்த முடியும்.
மரணித்தவர்கள் செவிமடுப்பார்களா?
மரணித்தவர்கள் செவிமடுப்பதாக நம்பிக்கை கொள்ளும் இவர்கள் தமது தேவைகளை அந்த மாகான்கள் நிறைவேற்றி வைப்பதாகவும் நம்புகின்றனர். இது இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணான இறை நிராகரிப்பாளர்களின் நம்பிக்கையாகும். மரணித்தவர்களுக்கும் இவ்வுலகிற்கும் இடையில் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையே காணப்படும், அவர்கள் இவ்வுலகில் நடப்பதை அறியமாட்டார்கள்.

وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

அவர்களுக்கு முன்னால் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை ஒரு திரை இருக்கும்’. (அத்தியாயம்: 25. வச: 100).

إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ

(மரணித்த) அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்கள் அழைப்பை செவியேற்கமாட்டார்கள், அப்படித்தான் செவியேற்றாலும் அவர்கள் உங்களுக்கு பதில்தரமாட்டார்கள், இன்னும் மறுமைநாளில் உங்களின் இணைவைப்பைக் கொண்டு அவர்கள் நிராகரிப்பார்கள், அறிந்தவனை (அல்லாஹ்வை)ப்போல் உமக்கு யாரும் (இது பற்றி) உணர்த்தமாட்டார்கள். (அத்தியாயம் : பாதிர். வச: 14)

إِنَّمَا يَسْتَجِيبُ الَّذِينَ يَسْمَعُونَ

செவியேற்பவர்கள்தாம் பதில் தருவார்கள். (அத்:அல்அன்ஆம். வச: 36)
மரணித்தவர்களிடம் கேள்விகேட்டும் இரு வானவர்களிடமும் நல்லமுறையில் பதில் கூற வாய்ப்பளிக்கப்பட்ட மனிதன் தனது மகிழ்ச்சியான இந்தச் செய்தியை தனது குடும்பத்தவர்களிடம் சொல்லிவிட்டு வருவதற்கு அனுமதி வேண்டுகின்ற போது அந்த வானவர்கள்

نَمْ كَنَوْمَةِ الْعَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ -سنن الترمذي

புதியமாப்பிள்ளையை அவனுக்கு நெருக்கமான அவனது குடும்பத்தவர்கள்தாம் அவனை எழுப்புவார்கள். அவன் உறங்குவது போன்று நீயும் அந்தப்படுக்ககையில் இருந்து அல்லாஹ் எழுப்புகின்றவரை உறங்கிக்கொள் எனக் கூறுவார்கள் என்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு மாற்றமான விளக்கங்களைக் கூறி மக்களை மரணித்தவர்களிடம் தமது தேவையை வேண்டலாம் என கூப்பாடு போடுகின்றனர் சில கோமாளிகள்.

كُلُّ ابْنِ آدَمَ يَأْكُلُهُ التُّرَابُ إِلَّا عَجْبَ الذَّنَبِ مِنْهُ خُلِقَ وَفِيهِ يُرَكَّبُ

ஆதமின் மகனை (மனிதனை) முழுமையாக மண் அரித்துவிடும், அவனில் இருக்கும் ‘அஜ்புஸ்ஸஜப்’ என்ற முள்ளம் தண்டைத்தவிர. அதிலிருந்துதான் அவன் (ஆரம்பமாக) படைக்கப்பட்டான், (மறுமைக்காக) அதிலிருந்துதான் (மீண்டும்) அவன் உருவாக்கப்படுவான். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ فَاللَّهُ هُوَ الْوَلِيُّ وَهُوَ يُحْيِي الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
அவனை (அல்லாஹ்வை) அன்றி அவ்லியாக்களை எடுத்துக் கொண்டனரா? அல்லாஹ்வாகிய அவனே (உண்மையான) வலி. மரணித்தவர்களை அவனே உயிர்ப்பிக்கின்றான். அவன் யாவற்றின் மீது ஆற்றல் உடையவன். (அஷ்ஷுரா. வச:09)

رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا

(அவன்) கிழக்கு, மற்றும் மேற்குத் திசைகளின் இரட்சகன். அவனை அன்றி வணங்கி வழிபடத்தகுதியானவர் யாருமில்லை. அவனைப் பொறுப்பாளனாக எடுத்துக் கொள். (அல்முஸ்ஸம்மில். வச: 09).

இவர்கள் குறிப்பிடுகின்ற அவ்லியாக்கள், நாதாக்கள், ஷேக்குகள், சாதாத்துக்கள் அனைவரும் மண்ணில் மக்கிப்போவார்கள் என்பதையே இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது. அவ்வாறு மக்கிப்போன பின்னால் இவர்கள் பிரார்த்திப்பது யாரிடம்?
மண்ணிடமா?
இவர்களின் நம்பிக்கையில் சாகாவரம் பெற்ற மகான்களிடமா?
--------------------------------------------------------
 
அல்லாஹ் மிக அறிந்தவன்
                                                                                          இன்ஷா அல்லாஹ் தொடரும்