"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

அல்லாஹ்வை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா?

 அல்லாஹ்வுக்கென்று தனித் தோற்றம் உள்ளது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். புனிதத் தோற்றமுடைய அந்த அல்லாஹ்வை இவ்வுலகில் பார்க்கலாம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

 
தங்கள் வாதத்துக்கு திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து சில ஆதாரங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர். அவர்கள் முன் வைக்கும் ஆதாரங்கள் இதோ:

நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்க வில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். (அல்குர்ஆன் 53:1,2)

மேலே நாம் அடிக் கோடிட்டுக் காட்டியிருக்கும் வார்த்தைகள் ஹுவ என்ற சுட்டுப் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் அதற்கு அல்லாஹ் என்றும் பொருள் கொள்ளலாம். ஜிப்ரீல் என்றும் பொருள் கொள்ளலாம்.
"நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள்' என்ற கருத்துடையவர்கள், இந்த இடத்தில் "அவரை' என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக "அவனை' அதாவது அல்லாஹ்வை என்று மொழி பெயர்க்கின்றனர்.
 "மற்றொரு  முறையும் ஸித்ரத்துல் முன்(த்)தஹா அருகில் அவனைக் கண்டார்'' என்று இந்த வசனத்தில் கூறப்படுவதால் "முதல் தடவை பார்த்தது இந்த உலகத்தில் தான்; எனவே இதன் படி இந்த உலகத்தில் அல்லாஹ்வைப் பார்க்கலாம்'' என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த அடிப்படையில் இவ்வசனம் அவர்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
 இந்த வசனத்திற்கு அவ்வாறு பொருள் கொள்ள இடமிருக்கின்றது என்பதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் இவ்வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்றால் தான் இவ்வாறு பொருள் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் அளித்து விட்டால் இவ்வாறு பொருள் செய்ய முடியாது. நபி (ஸல்) அவர்கள் "அவரை' என்ற பதத்திற்கு "ஜிப்ரீல்' என்று விளக்கம் அறித்துள்ளார்கள்.

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) "அபூ ஆயிஷாவே! மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்'' என்று கூறினார்கள். அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்'' என்று சொன்னார்கள். சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் உடனே எழுந்து (நேராக) அமர்ந்து, "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கொள்ளுங்கள்! அவசரப்படாதீர்கள்! வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ், "திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்'' (81:23) என்றும் "அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்'' (53:13) என்றும் கூறவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப் பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது'' என்று கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (6:103) அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? "வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (42:51) (பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்)
அறிவிப்பவர்: மஸ்ரூக் நூல்: முஸ்லிம் 287

இந்த ஹதீஸில்,  "அவரைக் கண்டார்' என்பது ஜிப்ரீலைக் கண்டதைத் தான் குறிக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கமளிக்கின்றார்கள். எனவே மேற்கண்ட வசனத்திற்கு அல்லாஹ்வைக் கண்டார்கள் என்று நாம் பொருள் கொள்ள முடியாது.
அல்லாஹ்வை இந்த உலகத்தில் பார்க்க முடியும் என்று கூறுபவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம் திர்மிதீயில் இடம் பெறும் செய்தியாகும்.
"முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய போது "அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான் என்று அல்லாஹ் கூறவில்லையா?'' என்று நான் கேட்டேன். "நாசமாய்ப் போக! அ(வனைக் கண்கள் பார்க்காது என்ப)து அவன் தனது இயற்கையான ஒளியில் காட்சி தரும் போது தான்'' என்று கூறி விட்டு "இரண்டு முறை அவனை (அல்லாஹ்வை) அவர்களுக்குக் காட்டப்பட்டது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இக்ரிமா நூல்: திர்மிதீ 3201

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் இரண்டு தடவை என்பது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தான். ஆனால், தாம் இரண்டு தடவை பார்த்தது ஜிப்ரீலைத் தான் என்று நபி (ஸல்) அவர்களே தெளிவு படுத்திய பிறகு இந்த விளக்கம் முற்றிலும் வலுவிழந்து போகின்றது. அதனால் இந்த இரண்டாவது ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை.
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை உள்ளத்தால் பார்த்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 284
(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை (53:11), நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:13) ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்

நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது உள்ளத்தால் பார்த்தார்கள் அறிவிப்பவர்: அபுல் ஆலியா நூல்: முஸ்லிம் 285, திர்மிதீ 3203

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என்ற கருத்து ஏற்கும் வகையில் இல்லை. பார்வை என்பது கண்கள் சம்பந்தப்பட்டதாகும். இதை உள்ளத்துடன் தொடர்பு படுத்துவது பொருத்தமான ஒன்றாகத் தோன்றவில்லை.
மேலும் இக்கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாகத் தான் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 53:13 வசனத்தின் விளக்கமாகத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைக் கூறுகிறார்கள். ஆனால் அவ்வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.

"நபி (ஸல்) அவர்கள் கண்டதாகக் கூறப்படுவது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான்'' என நபி (ஸல்) அவர்களே விளக்கியுள்ளதால் இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் ஏற்புடையதல்ல. எனவே இந்த சாராரின் மூன்றாவது ஆதாரமும் அடிபட்டுப் போகின்றது.

தூதரிடம் தோழர் கண்ட பேட்டி நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்களா? என்ற பிரச்சனை நபித்தோழர்களுக்கு மத்தியிலும் சுற்றி வந்திருக்கின்றது. அதனால் இது குறித்து அபூதர் (ரலி) அவர்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமே பேட்டி கண்டு விடுகின்றார்கள்.

 நான் நபி (ஸல்) அவர்களிடம்  நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு "அவன் ஒளியாயிற்றே நான் எப்படிப் பார்க்க முடியும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூற்கள்: முஸ்லிம் 291, திர்மிதீ 3204

அல்லாஹ்வைப் பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அவன் ஒளியாயிற்றே என்று காரணம் காட்டி மறுத்து விடுகின்றார்கள். இதே காரணத்தை நபி (ஸல்) அவர்கள் மற்றொரு இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

 நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை:
1. வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.
2. அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.
3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது.
4. (மனிதன்) பகலில் செய்த செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது.
 5. ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில், நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்
. அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: முஸ்லிம் 293

இவ்வுலகில் படைப்பினங்களால் அல்லாஹ்வை ஏன் பார்க்க முடியாது என்ற காரணத்தை நபி (ஸல்) அவர்கள் இங்கு விளக்குகின்றார்கள்.

மூஸா நபி அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நபி (ஸல்) அவர்கள் கூறும் இந்தக் காரணத்தினால் தான் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைக் காண இயலாமல் ஆனார்கள்.

 நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார். (அல்குர்ஆன்7:143)

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் "உன்னை நான் பார்க்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்த போது "என்னை நீர் பார்க்கவே முடியாது'' என்று இறைவன் பதிலளித்துள்ளான். அல்லாஹ் மலைக்கு காட்சியளித்த போது நபி மூஸா (அலை) அவர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று அவனது பேரொளி மலைகளைத் தூள் தூளாக்கி விட்டது. ஒளி அலைகளைத் தாங்காத விழித்திரை உண்மையில் அத்தகைய ஒளி வெள்ளத்தைத் தாங்கும் ஆற்றல் கண்களுக்கு இல்லை என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது.

பூமியைத் தினம் தினம் எத்தனையோ துகள்களும், வெளிச்சங்களும், அலைகளும், கதிர்களும் தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள், எக்ஸ் ரேக்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலட், இன்ஃப்ரா ரெட், ரேடியோ அலைகள், டெலிவிஷன், ரேடார் போன்ற கதிர்கள் முதல் தூர, தூர நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வரும் கதிரியக்க வெள்ளங்கள் வரை அனைத்தும் நாம் தெருவில் செல்லும் போதும் வீட்டில் தூங்கும் போதும் எப்போதும் நம்மைத் தாக்குகின்றன.
இத்தனை அலைகளில் நாம் பார்ப்பது ஒரு சிறிய, மிகச் சிறிய ஜன்னல் மட்டுமே. ஒளி என்பது 375லிருந்து 775 நானோ மீட்டர் அலை நீளம் மட்டுமே. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் நூறு கோடி பாகம். மற்றபடி நம்மைச் சுற்றியுள்ள அத்தனை அலைகளையும் நம் கண்களும் மூளையும் வடி கட்டி விடுகின்றன. அது மட்டுமில்லை. இந்த ஒளி அலைகளிலேயே மூளையும் நரம்புகளும் இன்னும் ஃபில்டர் செய்து விடுகின்றன. நமக்கு உயிர் வாழத் தேவைப்பட்ட காட்சிகளை மட்டுமே நாம் பார்க்கிறோம். பூமியின் மேல் விழும் மற்ற அலைகளை நாம் பார்க்க முடிந்தால் குழப்பத்தில் செத்துப் போய் விடுவோம். அதற்குத் தான் இந்த ஜன்னல். இது மனிதனின் பார்வைத் திறன் பற்றி அறிவியல் கூறும் ஆய்வாகும். இந்த உலகில் வல்ல அல்லாஹ்வை, அவனது பேரொளியைக் காண முடியாது என்பதை அறிவியல் உலகின் இந்த ஆய்வும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM OCT 2005 
 எம். ஷம்சுல்லுஹா 



அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்

அருள்மிகு ரமலான் மாதம் இது! இந்த மாதம் முழுவதும் நோன்பு


நோற்பதன் மூலம் மக்கள் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர்.  இது உலகம் முழுவதும் இறைவன் செய்திருக்கின்ற சிறந்த ஏற்பாடாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரு மாத காலம் அல்லாஹ் நடத்துகின்ற அகில உலக திருக்குர்ஆன் மாநாடாகும்.

அப்படிப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் மார்க்கத்தின் காவலர்கள், மாநபியின் வாரிசுகள், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் என்று பறை சாற்றுகின்ற, ஆலிம்கள் என்று மார்தட்டுகின்ற இந்த மவ்லானா மவ்லவிகள் குர்ஆனுக்கு நேர் முரணான பாதையில் பயணம் செய்கின்றார்கள்.  இதைப் படம் பிடித்துக் காட்டுவ தற்காக இந்த ஆக்கம் ஏகத்துவ இதழில் அளிக்கப்படுகின்றது.

இவர்கள் தங்களை தீனைக் காக்கின்ற தூண்களாக சித்தரிக் கின்றார்கள். அதோடு நின்றால் பரவாயில்லை. கடவுள் கொள்கை முதல் இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்க வழிபாடு வரை உள்ள அனைத்து விஷயங்களிலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடக்கின்ற தவ்ஹீது ஜமாஅத்தினர் மீது  வழி கெட்டவர்கள் என்ற முத்திரையைக் குத்தி, சத்தியத்தின் பக்கம் மக்கள் வருவதைத் தடுக்கலாம் என்று கருதுகின்றனர்.

அதனால் இவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்டுவது காலத்தின் கட்டாயமாகின்றது. அதிலும் குறிப்பாக குர்ஆன் பெயரைச் சொல்லி ஏமாற்றும் இவர்களை அந்தக் குர்ஆன் இறங்கிய இம்மாதத்தில் அடையாளம் காட்டுவது பொருத்தமாக அமையும் என்ற அடிப்படையில் இக்கட்டுரையை இடம் பெறச் செய்கிறோம்.

மத்ஹபுவாதிகள் ஒரு புறம் நம்மை ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று பொய்யாக விமர்சித்துக் கொண்டே பகிரங்கமாக எண்ணற்ற ஹதீஸ்களை அவர்கள் மறுத்துக் கொண்டிருக் கிறார்கள். அவற்றை நமது முந்தைய இதழ்களில் தனிக்கட்டுரையாக விளக்கி உள்ளோம். அதுமட்டுமின்றி அவர்கள் திருமறைக் குர்ஆனின் பல்வேறு வசனங்களையும் மறுக்கிறார்கள்.

வணக்க வழிபாடு மற்றும் கொள்கை தொடர்பாகக் குர்ஆன் கூறும் கணக்கற்ற போதனைகளைத் தெரிந்து கொண்டே, அதற்கு மாற்றமாக நடப்பதன் மூலம் குர்ஆனிய வசனங்களை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் என்னென்ன இறை வசனங்களை மறுக்கின்றார்கள் என்ற விபரத்தை முழுமையாகக் காண்போம்.

உரத்த சப்தமின்றி திக்ர்

திக்ர் எனும் இறைவனை நினைவு கூர்வது, மிகச் சிறந்த வணக்கமாகும். அவ்வணக்கத்தை அதிகமாகச் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துவதுடன் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தருகிறது.

உரத்த சப்தமின்றி, மெதுவாக, இரகசியமாக,  பணிவுடன் இறைவனை திக்ர் செய்ய வேண்டும் என்பதே இறைவனை நினைவு கூரும் முறையாகும். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

உமது இறைவனைக் காலை யிலும்மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும்அச்சத்துடனும்சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 7:205

இந்த இறை வசனத்தை மறுக்கும் வகையில் மத்ஹபுவாதிகள் திக்ர் (?) செய்கிறார்களா? இல்லையா?

ராத்திபு என்றும் ஹல்கா என்றும் பல பெயர்கள் இட்டுக் கொண்டு திக்ர் மஜ்லிஸ் நடத்துகின்றார்கள். அதில் இறைவன் கூறும் இந்த ஒழுங்கைப் பேணுவதில்லை. மைக் செட் போட்டு, கூட்டமாக சப்தமிட்டு கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பணிவுடன் திக்ர் செய்யுமாறு இறைவசனம் கூறியிருக்க, இவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திக்ர் (?) செய்கிறார்கள்.

இவர்களது இந்தச் செயல் இறைவசனத்திற்கு எதிரானது என்பதை அறிந்து கொண்டும் தங்கள் முன்னோர்களைப் பின்பற்றும் விதமாகவும் மனோ இச்சையைப் பின்பற்றும் விதமாகவும் மேற்கண்ட இறை வசனத்தைப் பகிரங்கமாக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் அழகான பெயர்கள்

அவ்வாறு திக்ர் செய்யும் போது இன்னுமொரு பாவத்தையும் செய்கிறார்கள்.

இறைவனைப் போற்றிப் புகழ்வதாக இருந்தால் அல்லாஹ் தன்னை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள் ளானோ, என்னென்ன பெயர்களைச் சூட்டியுள்ளானோ அவற்றைச் சொல்லி இறைவனின் புகழ்பாடலாம்.

இறைத்தூதர் கற்றுத்தந்த பிரகாரம் இறைவனது பெருமைகளை எடுத்துக் கூறி இறைவனைப் பெருமைப் படுத்தலாம். அதை விடுத்து இவர்கள் செய்யும் ஈனச் செயல் என்ன தெரியுமா?

இறைவனை திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வின் அழகான பெயர்களைச் சுருக்கி, திரித்துக் கொண்டு இறைவனின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.

அல்லாஹூ என்பதை “ஹூஹூ’ “ஹூஹூ’ என்றும் “அஹ்’ என்றும் இறைவனின் பெயரைச் சிதைத்துக் கூறுகிறார்கள். இதுமட்டுமின்றி ஹக் தூ ஹக் என்றும் இன்னும் பல்வேறு அர்த்தம் இல்லா புது வார்த்தைகளை இவர்களாக உருவாக்கி திக்ர் என்ற பெயரில் செய்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இறையருள் நிறைந்த இந்த ரமலான் மாதத்திலும் கூட இறை சாபத்தைப் பெற்றுத்தரும் இக்காரியத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்களது இந்தச் செயல் பின்வரும் வசனத்தை நேரடியாக மறுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். 

திருக்குர்ஆன் 7:180

அல்லாஹ்வின் அழகான பெயர்களை சுருக்கிக் கூறி இந்த வசனத்தை மறுப்பதோடு இறைவனின் கடும் தண்டனைக்கும் ஆளாகிறார்கள் என்பதையும் தெளிவாக அறியலாம்.

எக்ஸ்பிரஸ் கிராஅத்

திருக்குர்ஆன் அருளப்பட்ட, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமலான் மாதத்திலும் கூட இவர்களது குர்ஆன் வசனங்களை மறுக்கும் போக்கு மாறுவதில்லை. மாறாக தொடரவே செய்கிறது.

குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக!

திருக்குர்ஆன் 73:4

திருக்குர்ஆன் வசனங்களை நிறுத்தி, நிதானமாக, திருத்தமாக ஓத வேண்டும் என்று இவ்வசனத்தின் வாயிலாக அல்லாஹ் கட்டளை இடுகிறான்.

எல்லா நிலையிலும் குர்ஆன் என்பது திருத்தமாக ஓதப்பட வேண்டும். குறிப்பாக தொழுகையில் மிக அழகான முறையில் ஓதப்பட வேண்டும்.

ஆனால் இவர்கள் ரமலானில் இரவுத் தொழுகையின் போது குர்ஆன் வசனங்களை என்ன பாடு படுத்துகிறார்கள்?

ரமலான் மாத இரவுத் தொழுகை யின் போது முழுக்குர்ஆனையும் ஓதி முடிக்க  வேண்டும் என்று மார்க்கம் கூறாத சட்டத்தை இவர்களாக இயற்றிக் கொண்டு அதற்காக இவர்கள் செய்யும் காரியம் என்ன?

பிஸ்மில்லாஹிர் ,,,,,,, மாலிகி யவ்மி ,,,,,,,, வலழ் ழாள்ளீன்,,,,,

இவ்வாறு பாத்திஹா அத்தியா யத்தை ஓதும் போது மூன்றே மூன்று வார்த்தைகள் மட்டுமே மக்களுக்குப் புரியும். எவ்வளவு தான் கவனத்தைக் குவித்து கேட்டாலும் ஏனைய வார்த்தைகள் புரியாத வகையில் படுவேகமாகக் குர்ஆன் வசனங்களை ஓதுகிறார்கள்.

வேகம் என்றால் அப்படியொரு வேகம். ஒரு எழுத்துக்கூட தெளிவாக உச்சரிப்பதில்லை. 23 ரக்அத்களை 30 நிமிடத்தில் முடிக்கிறார்கள் என்றால் என்னவொரு வேகம் என்பதை கணித்துக் கொள்ளுங்கள்.

இதுதான் குர்ஆனைக் கண்ணியப் படுத்தும் செயலா?

குர்ஆனுக்கு போலியான மதிப்பளிப்பதில் இவர்களை விஞ்ச ஆளில்லை. குர்ஆனைத் தொட்டு முத்தமிடுவதென்ன? அதைத் தரையில் வைக்கக் கூடாது என்று கூறி உயரமான இடத்தில் வைப்பதென்ன?  கால் படக்கூடாது, கை படக்கூடாது என இவ்வாறெல்லாம் வெற்று மரியாதைகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

ஆனால் உண்மையில் குர்ஆனை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிப்பதில்லை.

குர்ஆனை மதிப்பது என்பது அதை அல்லாஹ் சொன்ன விதத்தில் நிறுத்தி நிதானமாக ஒதுவதிலும் குர்ஆன் கூறும் போதனைகளின் படி நடந்து கொள்வதிலும் தான் இருக்கின்றது. அந்த வகையில் இவர்கள் குர்ஆனை அவமதிக்கவே செய்கிறார்கள். நிதானமாக ஓத வேண்டும் என்று கூறும் வசனங்களை மறுக்கவே செய்கிறார்கள்.

 ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி
egathuvam/july-2015



இறைநேசர் ஆகிட எளிய வழிகள்


அவ்லியா என்ற வார்த்தை வலீ என்பதன் பன்மையாகும். வலீ என்றால் பொறுப்பாளன், அதிகாரி, எஜமான், நேசன் என்று பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. நாம் இங்கே பார்ப்பது, அல்லாஹ்வின் நேசன் என்ற பொருளில் அமைந்த வலியுல்லாஹ்வைத் தான்.

இறைநேசராவதற்கு என்ன வழி? சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் இதற்குப் பின்வரும் வழிகளைக் கூறுகின்றனர்.

ஒருவர், அல்லாஹ்வின் நேசர் ஆக வேண்டுமென்றால் அதற்காக அவர் தன்னை ஆன்மீகப் பாதையில் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஒரு நான்கு வழிச் சாலை. ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிபத் என்பது அந்த நான்கு வழிச் சாலைகளுக்குப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

ஷரீஅத் என்றால் பாதை. தரீக்கத் என்றால் பாதை. ஹகீகத் என்றால் உண்மை. மஃரிபத் என்றால் அறிதல்.
பொதுவாகப் பாதை தெரிந்த பின் பயணிப்பது புத்திசாலித்தனம். பாதையைக் கடந்த பின் அறிதல் என்பது பைத்தியக்காரத்தனம் என்பதை இந்த அகமியப் பெயர்கள் அழகாகவே அம்பலப்படுத்தி விடுகின்றன. இதிலிருந்து இதன் இலட்சணத்தையும் இலக்கணத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆன்மீக உலகத்தில் நுழைந்தவர் ஐம்புலன்களை அடக்கி ஆள வேண்டும். அவர் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் பட்டை தீட்டிக் கொள்ளவும் இறைநேசராகப் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் ஓர் ஆன்மீக ஆசானிடம் பாடம் கற்க வேண்டும். தனது ஆசான் சொல்கின்ற கட்டளைக்கு மறு வார்த்தை பேசாமல் அப்படியே கட்டுப்படவேண்டும். அதற்காக ஒரு பைஅத், அதாவது ஓர் உடன்படிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பைஅத்திற்கு பின் ஷைகு என்ற அந்த ஆசானிடம் அப்படியே ஒர் மய்யித்தாக ஆகி விடவேண்டும். அதாவது குளிப்பாட்டப்படும் ஒரு மய்யித் ஏன், எதற்கு என்று கேட்காதோ அது போன்று அவர் தன்னை ஒரு செத்த சவமாக்கி அவரிடம் சரணாகதியாகி விடவேண்டும்.

இன்ன வீட்டில், இன்ன பெண்ணிடம் போய் நீ விபச்சாரம் செய் என்று ஷரீஅத்திற்கு மாற்றமாகச் சொன்னாலும் அவருக்குக் கட்டுப்பட்டு, அந்த கட்டளையை நிறைவேற்ற வேண்டும். ஷைக் விபச்சாரமும் செய்யச் சொல்வாரா? என்று விழிப்புருவங்கள் வியப்புக்குறியில் விசாலமாக விரியலாம். வியக்காதீர்கள். மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்.

ஷைக் அனுப்பி வைத்த சீடர் விபச்சாரத்திற்கு என்று சென்றாலும் வீட்டில் சீடர் கண்டதும் கட்டியணைத்ததும் அனுபவித்ததும் கொண்ட மனைவி தான் என்ற விபரம் பின்னர் தான் தெரிய வந்தது. இதற்குத் தான் ஷைகின் சொல்லுக்கு வினா எழுப்பாது, ஷரீஅத்திற்கு மாற்றமாயிற்றே என்று சிந்திக்காமல் விழுந்தடித்து நம்ப வேண்டும்.

ஷரீஅத்திற்கு மாற்றமாக ஷைக் சொன்ன விஷயத்தைச் சரி தான் என்று நிறுவவும் நிரூபிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

இதுதான் அவ்லியா ஆவதற்கு வழி என்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூறும் பாதைகளாகும்.
ஷைகுக்கு எல்லாம் தெரியும். எனவே அவர் சொன்னதை அப்படியே நம்ப வேண்டும் என்று கதை விடுவார்கள். ஆனால் விபச்சாரம் செய்வதற்குச் சென்ற சீடர் எந்த நோக்கத்தில் சென்றார்? என்பதை இந்த ஆன்மீகப் பேர்வழிகள் என்பதை வசதியாகவே மறந்து விடுவார்கள்.

‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப்(ரலி)
நூல்: புகாரி 1

அல்லாஹ்விடம் மரியாதை எண்ணங் களுக்குத் தான் என்பதை மறந்து விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5011

இந்த ஹதீஸையும் வசதியாக மறந்து விடுகின்றார்கள். இது போன்ற அறியாமையின் காரணமாக அவ்லியா ஆவதற்கு அகமியம் என்ற போர்வையில் இவர்கள் மக்களை வழிகேட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
அடுத்து, வலியுல்லாஹ் ஆக, அதாவது இறை நேசனாக ஆக வேண்டுமென்றால் இவர்களாக உருவாக்கிக் கொண்ட அவ்லியாக்களின் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். அதாவது இந்த ஆன்மீகப் படையில் சேரவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் அவ்லியாக ஆவதை தனியுடைமையாக ஆக்கி வைத்திருக்கின்றார்கள். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் இறைநேசர் ஆவதை பொதுவுடைமையாக்கியிருக்கின்றான். இதோ அல்லாஹ் சொல்கின்றான்.

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். அல்குர்ஆன் 10:62,63

இறைநேசனாக ஆவதற்கு அல்லாஹ் இரண்டே இரண்டே அளவுகோல்களை மட்டுமே சொல்கின்றான். ஒன்று ஈமான் கொள்ள வேண்டும். இன்னொன்று அவனை அஞ்ச வேண்டும். இந்த இரண்டுமிருந்தால் அவர் இறைநேசராக ஆகிவிடலாம்.

ஒவ்வொருவரும் ஈமான் கொண்டு அல்லாஹ்வை அஞ்சி நடக்க ஆரம்பித்து விட்டால் அவர் இறைநேசராகி விடுவார். ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஈமான் கொண்டு அவனை அஞ்சியும் நடக்கின்றார்கள். அதனால் அவர்கள் இறைநேசர்களாகி விடுகின்றார்கள்.
வலியுல்லாஹ்வுக்குரிய அளவுகோள் இது தான். அல்லாஹ் இந்த வசனத்தின் வாயிலாக இறைநேசத்திற்கு ஒளிமயமான ஓர் எளிய வழியைக் காட்டுகின்றான். ஆனால் இவர்களோ ஆன்மீக உலகம் என்ற பெயரில் ஓர் இருள் மயமான உலகத்தைக் காட்டுகின்றார்கள்.

அவ்லியா ஆவதற்குக் கடமையான வணக்கங்களை தாண்டி உபரியான அமல்களை தனக்காகச் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் இந்த ஹதீஸ் குதூஸிய்யில் சொல்கின்றான்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 6502

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அல்குர்ஆன் 2:165

ஈமான் கொண்டவர்கள் தன்னை அதிகம் நேசிப்பார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுவதற்கு ஏற்ப நாம் அல்லாஹ்வை அதிகம் நேசிக்கும் விதமாக, அதிகமான அளவில் கடமையான வணக்கங்களைத் தாண்டி உபரியான வணக்கங்களைச் செய்ய ஆயத்தமாக வேண்டும். இதன் மூலம் அல்லாஹ்வை நேசிப்பதற்கு ஒரு தனிவழி, ஓர் இருட்டு வழி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்று கடமையான வணக்கங்களின் பட்டியல் உள்ளது. அதில் நாம் முதலில் தொழுகையிலிருந்து உபரியான வணக்கங்களை துவக்குவோம். அதிலும் குறிப்பாக, கடமையான தொழுகைகளை பள்ளிவாசல் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

அபு உஸாமா

ஏகத்துவம்-ஜூன்-2019/