"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ஹுனைஃப் ரலி)  நபிகளாரின் பொருட்டால்  துஆ செய்தார்களா ?


அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும். தவ்ஹீத் ஜமாஅத் இதைத் தான் பிரச்சாரம் செய்து வருகின்றது.

பரேலவிகள் அல்குர்ஆனின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிரான, பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள். இறந்து விட்ட மகான்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பது அவர்களின் குருட்டு நம்பிக்கையாகும்.

இறந்து
போன நபிமார்கள், நல்லடியார்களை வைத்து அல்லாஹ்விடம் வஸீலா தேடலாம் என்பது பரேலவிகளின் நிலைப்பாடு.

முஹம்மது நபியின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை நிறைவேற்று, முஹ்யித்தீனின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை வழங்கு என்று ஆளை வைத்து வஸீலா தேடலாம் என்பது இவர்களது வாதம்.
ஆளை வைத்து வஸீலா தேடலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

/////  நபித்தோழர் உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(
நான் மஸ்ஜிதுந்நபவியில் அமர்ந்திருக்கும் சமயம் பார்வையற்ற ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு சுகம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆச் செய்யும்படி வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் துஆச் செய்கிறேன். நீ விரும்பினால் பொறுத்துக் கொள்ளலாம். பொறுத்துக் கொள்வது சிறந்தது'' என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் துஆச் செய்யும்படி வேண்டினார். அப்பொழுது அம்மனிதரை முழுமையாக உளூச் செய்து விட்டு வந்து கீழ்வரும் துஆவை ஓதப் பணித்தார்கள்.
பொருள்: யா அல்லாஹ்!! அருள் நிறைந்த அண்ணல் முஹம்மது நபி பொருட்டால் உன்னிடம் மன்றாடுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்களே! என் ரப்பிடம் என் தேவை நிறைவேற உங்களின் பொருட்டு முறையிடுகிறேன். இறைவனே! என் காரியத்தில் அவர்களின் பரிந்துரையை நீ அங்கீகரிப்பாயாக!
பின் அவர் சுகம் பெற்று, பார்வையுடன் திரும்பினார்.
நூல்: திர்மிதீ, நஸாயீ, பைஹகீ, தப்ரானி

இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்ற உஸ்மான் பின் ஹுனைஃப் ரலி) அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை அகற்ற, தேவை நிறைவேற இந்த துஆவையே ஓதுவார்கள். இந்த துஆவிற்கு அப்படி என்ன மகத்துவம் என்றால் வஸீலா தான். அதுவும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் திருவாயினால் கற்றுக் கொடுக்கப்பட்ட வஸீலா
.///

இவ்வாறு வஸீலா குறித்து எழுதியுள்ளனர்

பொதுவாக பரேலவிகள் குர்ஆன் வசனத்தின் அல்லது ஹதீஸின் ஒரு பகுதியை மட்டும் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு ஆதாரமாகச் சமர்ப்பிப்பார்கள்.

இந்தப் பாணியில் தான் இந்த ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
இவர்கள் வளைத்திருக்கின்ற - தங்களுக்குச் சாதகமாக மொழிபெயர்த் திருக்கின்ற இந்த ஹதீஸைச் சரியான மொழிபெயர்ப்பின் அடிப்படையில் பார்ப்போம்.

பார்வை தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்விடம் எனக்குச் சுகமளிக்கும் படி பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று கேட்டார். "நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கிறேன். நீ விரும்பினால் பொறுமையாக இரு! அது உனக்கு (மறுமையில்) சிறந்தது'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர், "அவனிடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று சொன்னார்.

உளூவை நிறைவாகச் செய்து இந்த துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள்.

யா அல்லாஹ்! உன்னிடத்தில் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத் (அவர்களின் பிரார்த்தனை)யை முன்வைத்து உன்னிடம் நான் முன்னோக்குகிறேன். எனது தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக வேண்டி இது தொடர்பாக உங்கள் (பிரார்த்தனை)யை முன்வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!
அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி)  நூல்: திர்மிதீ
3502

இதே ஹதீஸ் இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.

பார்வை தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்விடம் எனக்கு சுகமளிக்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று தெரிவித்தார். "நீ விரும்பினால் (இந்தச் சோதனைக்குரிய கூலியை) உனக்குப் பின்னால் (மறுமையில்) கிடைக்குமாறு நான் விட்டு விடுகிறேன். நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

உளூவை நிறைவாகச் செய்து, இரண்டு ரக்அத்துகள் தொழுது (பின்வரும்) துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள்.

யா அல்லாஹ்! உன்னிடத்தில் நான் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத் (அவர்களின் பிரார்த்தனை)யை முன்வைத்து உன்னிடம் முன்னோக்குகின்றேன். முஹம்மதே! என்னுடைய தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக, இது தொடர்பாக உங்கள் (பிரார்த்தனை)யை முன்வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!
அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி)
நூல்: இப்னுமாஜா 1375, முஸ்னத் அஹ்மத்
16604

முதலில் திர்மிதியில் இடம்பெற்ற ஹதீஸின் மொழியாக்கத்தைப் பார்த்தோம். இரண்டாவதாக இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் மொழியாக்கத்தைப் பார்த்தோம்.
இரண்டாவது ஹதீஸில் கூடுதலாக இரண்டு விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

1.
இரண்டு ரக்அத்கள் தொழுவது.
2.
பார்வை தெரியாத அந்த நபித்தோழர், முஹம்மதே என்று அழைப்பது.

இவ்விரண்டு விஷயங்கள் தவிர மற்ற செய்திகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை தான்.

இந்த ஹதீஸைத் தான், நபியின் பொருட்டால் என்று மொழிபெயர்ப்பு செய்து, மனிதர்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, இறந்து போன ஆட்களை வைத்து வஸீலா தேடலாம் என்ற தங்களின் இணைவைப்புச் சிந்தனைக்கு இதைத் திருப்புகின்றனர்
வஸீலா என்பது ஆளை வைத்துத் தான் என்று கூறும் தில்லுமுல்லுகளுக்கும், திருகுதாளங்களுக்கும் சரியான விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
சான்று
: 1
பார்வை
தெரியாத நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பரேலவிகள் சொல்வது போன்று, "முஹம்மது நபி பொருட்டால் உன்னிடம் மன்றாடுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்களே! என் ரப்பிடம் என் தேவை நிறைவேற உங்களின் பொருட்டு முறையிடுகிறேன்'' என்று கூறவில்லை. அப்படிச் சொல்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் நேரில் வர வேண்டிய அவசியமும் இல்லை. அவர் வீட்டில் இருந்து கொண்டே இந்தப் பிரார்த்தனையைச் செய்திருக்கலாம். ஆனால் அந்த நபித்தோழர் அவ்வாறு செய்யவில்லை. ஏன்? அவர், தவஸ்ஸுல் - வஸீலா தேடுதல் என்ற வார்த்தையில் பொருள் அறிந்த, அரபி மொழி தெரிந்த ஓர் அரபியர். ஓர் ஆளை வைத்து வஸீலா தேட வேண்டுமானால் அவர் தனது வஸீலாவில் அவரது பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி பிரார்த்திக்க வேண்டும். அப்படிப் பெயரைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, தன் மீது அக்கரை காட்டுபவர், மார்க்க ஞானம் உள்ளவர் என்று யாரை அந்த நபித்தோழர் நம்புகிறாரோ அவரிடம், அந்த நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எனக்காகப் பிரார்த்தியுங்கள் என்று கூறுகிறார். அதில் தான் முழுப் பயன் இருக்கின்றது என்று அவர் தெளிவாக விளங்கி வைத்திருந்தார். அதனால் தான் நபி (ஸல்) அவர்களிடம் நேரில் வந்து பிரார்த்திக்கச் சொல்கிறார். நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படுவதற்கு அல்லாஹ்விடம் மிக மிகத் தகுதியானது என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
சான்று
: 2 நபி (ஸல்) அவர்கள், உஸ்மான் பின் ஹுனைபுக்காகப் பிரார்த்திக்கின்றார்கள். அதே சமயம் அவரிடம் சிறந்ததைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரையும் செய்கிறார்கள். "நீ விரும்பினால் இந்தச் சோதனைக்குரிய கூலியை மறுமையில் கிடைப்பதற்காக விட்டு விடுகின்றேன்; நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கிறேன்' என்பது தான் அந்த அறிவுரையாகும். பொதுவாக இவ்வாறு பிரார்த்தனை செய்யக் கோருபவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை மறுமையை முன்னிறுத்தியே அமைந்திருக்கும் என்பதைப் புகாரியில் இடம்பெறும் ஹதீஸ் விளக்குகின்றது. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்'' என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, "நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல்கள்: புகாரி 5652, முஸ்லிம் 4673 இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பிரார்த்தனை செய்யக் கோரும்போது மறுமை நன்மையைத் தான் நபியவர்கள் முன்னிலைப்படுத்துவார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் எடுத்துக்காட்டாகும். மிக முக்கியமாக, இந்த உரையாடலில் நமக்கு நிரூபணமாவது, கண் தெரியாத அந்த நபித்தோழரின் கோரிக்கை முஹம்மது (ஸல்) என்ற ஆள் அல்ல, அவர்கள் செய்கின்ற பிரார்த்தனை என்ற அமல் தான்.

சான்று
: 3 பார்வை தெரியாத தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று வலியுத்துகின்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கின்றார்கள். நபியவர்கள் பிரார்த்தித்த விபரம் இந்த ஹதீஸில் இடம் பெறாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள், அந்த நபித்தோழருக்கு அளித்த வாக்குறுதியைக் கண்டிப்பாக நிறைவேற்றி யிருப்பார்கள். அவருக்காக நபி (ஸல்) அவர்கள், தாம் பிரார்த்திக்கின்ற அதே வேளையில், அவர் மீதுள்ள அன்பின் மேலீட்டால் அவரையும் பிரார்த்திக்குமாறு சொல்கின்றார்கள். தான் செய்கின்ற பிரார்த்தனையை ஏற்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபித்தோழரிடம் நபியவர்கள் கூறுகின்றார்கள். அதிலும் குறிப்பாக, உளூச் செய்து விட்டு இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு துஆச் செய்யுமாறு கூறுகின்றார்கள். அதாவது தொழுகை, துஆ என்ற அமலை வைத்து வஸீலா தேடச் சொல்கின்றார்கள். இது தான் அல்லாஹ்வின் வசனத்தில் உள்ள கட்டளையாகும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். அல்குர்ஆன் 5:35

சான்று
: 4


நபி
(ஸல்) அவர்கள் அவருக்குக் கற்றுக் கொடுத்த துஆவில், "அல்லாஹும்ம ஃபஷஃப்பிஃஹு ஃபிய்ய- யா அல்லாஹ் என் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக'' என்ற வார்த்தை இடம்பெறுகின்றது. இவ்வார்த்தை இடம்பெறும் ஹதீஸ் அஹ்மதில் (16604) பதிவாகியுள்ளது. இதில் ஃபிய என்ற வார்த்தை இல்லாமல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரகாசமான வார்த்தை பிரகடனப்படுத்துவதென்ன? வஸீலா தேடுதல் என்பது நபி (ஸல்) அவர்களின் பொருட்டால்... என்ற ஆளை, அந்தஸ்தை, தகுதியை வைத்தல்ல. அவர்களது துஆவை வைத்துத் தான். ஆளை வைத்து, அந்தஸ்தை வைத்து வஸீலா தேடலாம் என்று பொருள் கொள்வது அசாத்தியம் என்பதை இது தெளிவாக உணர்த்துகின்றது. ஏனெனில், "யா அல்லாஹ், என் விஷயத்தில் - அதாவது எனக்குப் பார்வையை எனக்குத் திரும்பத் தருவதில் அவர்களின் பரிந்துரையை (ஷஃபாஅத்தை) ஏற்றுக் கொள்வாயாக!'' என்ற வாசகத்தின் பொருள், "நபி (ஸல்) அவர்களின் துஆவை ஏற்றுக் கொள்வாயாக' என்பது தான். இந்தச் செய்தியில் ஷஃபாஅத் என்ற வார்த்தைக்கு, பரிந்துரை என்று மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. உண்மையில் ஷஃபாஅத் என்பதற்கு அரபியில், "துஆ - பிரார்த்தனை' என்பதே பொருளாகும். நபிமார்களுக்கும் நல்லவர்களுக்கும் நாளை மறுமையில் ஷஃபாஅத் என்று சொல்வது இந்தப் பொருளில் தான்.
இந்த
அடிப்படையில் ஷஃபாஅத் என்பது குறுகிய பொருள் கொண்டதாகவும் துஆ என்பது விரிந்த பொருள் கொண்டதாகவும் அமைகின்றது. துஆ என்றால் ஒருவர் தனக்காகச் செய்வதையும், பிறருக்காகச் செய்வதையும் எடுத்துக் கொள்ளும். ஷஃபாஅத் என்பது ஒருவர் மற்றவருக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை மட்டும் குறிக்கும்.

இதன்படி
ஷஃபாஅத் என்பது துஆவையே குறிக்கின்றது. உஸ்மான் பின் ஹுனைபுக்கு நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்வதிலிருந்து, அமலை வைத்துத் தான் வஸீலா தேட வேண்டுமே தவிர ஆளை வைத்து அல்ல என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

சான்று
: 5

நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த துஆவில் மிக முக்கியமானது, ஷஃப்பிஃனீ ஃபீஹி என்ற வார்த்தை யாகும். என் பார்வை திரும்பக் கிடைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்கின்றார்கள். அந்தப் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் செய்கின்ற பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக இந்தக் கருத்தைக் கொண்ட செய்தி மேற்கண்ட வார்த்தைகளுடன் அஹ்மதில் (17280) இடம்பெறுகின்றது. இதே செய்தி ஹாகிமிலும் பதிவாகியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தையே, ஒரு ஆள் மூலம் வஸீலா தேடுதல் என்பதற்கு மரண அடி கொடுக்கின்றது. இதில் வேதனை என்னவென்றால் இந்த ஹதீஸின் பிற்பகுதியை பரேலவிகள் திட்டமிட்டு மறைப்பது தான். ஏனெனில் ஹதீஸின் இந்தப் பகுதிக்கு, அமல்கள் மூலமே வஸீலா தேட வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறு எந்தப் பொருளும் கொடுக்க முடியாது என்பதால் தான் இதை அவர்கள் அப்பட்டமாக மறைக்கின்றனர். ஆளைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதற்கு அவர்கள் எழுப்பியிருக்கின்ற போலியான வாதங்கள், நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தைகள் மூலம் தகர்ந்து, தரையில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கிப் போய்விடுகின்றது. நபி (ஸல்) அவர்கள் இந்தக் கண் தெரியாத நபித்தோழருக்குப் பரிந்துரை செய்வது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் நபி (ஸல்) அவர்களின் துஆவிற்கு அந்த நபித்தோழர் எப்படிப் பரிந்துரைக்க முடியும் என்ற கேள்விக்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. இந்த ஹதீஸின் முற்பகுதியை வைத்துக் கொண்டு, இவ்வாறு வஸீலா தேடலாம் என்று வாதிடும் இவர்கள், "யா அல்லாஹ் என் விஷயத்தில் உன்னுடைய நபியின் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் கேட்கும் துஆவையும் ஏற்பாயாக'' என்று தான் கூற வேண்டும். ஆனால் பரேலவிகள் அவ்வாறு சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் அவர்களின் விளக்கங்கள் அனைத்து அபத்தமாகவும் அர்த்தமற்றதாகவும் ஆகி விடும். அதனால் அவர்கள் அப்படிச் சொல்வதில்லை.

சான்று
: 6 அறிஞர்கள் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களிலும், ஒப்புக் கொள்ளப்பட்ட துஆ தொடர்பானவற்றிலும் பதிவு செய்துள்ளார்கள். உண்மையில் இயற்கைக்கு மாற்றமான அதி அற்புத நிகழ்வாகும். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாகவே அவரது குருட்டுத்தன்மை நீங்கியது, பார்வை திரும்பியது. இதனால் தான் இமாம் பைஹகீ போன்றவர்கள், தலாயிலுன் நுபுவ்வா - நபித்துவத்தின் அடையாளங்களில் இதைப் பதிவு செய்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் துஆவின்றி, தனது துஆவைக் கொண்டு மட்டும் அந்த நபித்தோழர் நிவாரணத்தைப் பெற்றிருந்தால் உலகிலுள்ள கண் தெரியாதவர்கள் அனைவருக்கும் இது பொதுவானதாகி விடும். உலகில் உள்ள கண் தெரியாதவர்கள் ஒவ்வொருவரும் அல்லது ஒரு சிலராவது, இதுபோன்று உருக்கமாகவும், உளத்தூய்மையாகவும் பிரார்த்தனை செய்து குணம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. இது இவ்விஷயத்தில் ஒளிந்து கிடக்கின்ற நுணுக்கமாகும். இதுபோல் இன்னொரு நுணுக்கத்தையும் நாம் காணத் தவறிவிடக் கூடாது. பரேலவிகள் இந்த ஹதீஸை விளங்குவது போல், கண் தெரியாத நபித்தோழர், நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்து, தகுதி, மரியாதை மற்றும் அவர்களது பொருட்டைக் கொண்டு கேட்டதால் தான் இந்தக் குணம் கிடைத்தது என்று விளங்கினால், இதே நிவாரணம், அதாவது உலகிலுள்ள ஒவ்வொரு குருடருக்கும் பார்வை கிடைக்க வேண்டுமல்லவா? இந்தக் கொள்கையில் உள்ளவர்கள் நபி (ஸல்) அவர்களை மட்டும் வைத்து வஸீலா தேடுவதில்லை. நபிமார்கள், அவ்லியாக்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள், மலக்குகள், ஜின்கள் அனைவரின் பொருட்டாலும், தனித்தனியாகவோ, அனைவரையும் சேர்த்தோ கேட்கின்றனர். அவர்களுக்குக் குணம் கிடைத்ததா என்று பார்த்தால் நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு இத்தனை நூற்றாண்டுகளில் யாருக்கும் பார்வை திரும்பக் கிடைத்ததாக வரலாறு இல்லை. இதுவரை உள்ள இந்த விபரங்களின்படி ஒரு விஷயம் தெளிவாகப் புரிகின்றது. கண் தெரியாத நபித்தோழரின் வஸீலா என்ற சக்கரம் சுழல்வது துஆ என்ற அச்சாணியில் தான். அதாவது துஆ என்ற அமல் மூலம் தான். ஆளைக் கொண்டு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இத்தனைக்குப் பிறகும் இங்கு இன்னொரு கேள்வி எழுகின்றது. ஒரு அறிவிப்பில், "யா அல்லாஹ், உன்னிடத்தில் கேட்கின்றேன்; இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மதை வஸீலாவாக்கி (சாதனமாக்கி) கேட்கின்றேன்'' என்று பார்வை தெரியாத நபித்தோழர் சொல்கின்றாரே! அது ஏன்? என்பது தான் அந்தக் கேள்வி. இந்த இடத்தில், "உன்னுடைய நபியின் துஆவைக் கொண்டு'' என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு அர்த்தம் கொள்வதற்கு மொழி இலக்கணத்தில் இடம் உண்டு. "நாங்கள் இருந்த ஊர்வாசிகளிடமும், எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தாரிடமும் விசாரியுங்கள்! நாங்கள் உண்மை கூறுபவர்களே'' (என்று தந்தையிடம் கூறினார்கள்.) அல்குர்ஆன் 12:82 இந்த வசனத்தில், ஊர்வாசிகள், ஒட்டகக் கூட்டத்தார் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள இடத்தில், "ஊரைக் கேள், ஒட்டகத்திடம் கேள்' என்று தான் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் ஊரையும், ஒட்டகத்தையும் கேட்பதல்ல. ஊர்வாசிகளையும், ஒட்டகக் கூட்டத்தாரையும் என்று பொருள் கொள்கிறோம். இந்த வசனத்தில் ஊர் என்பதற்குப் பின்னால் "வாசிகள்' என்ற இணைப்புச் சொல்லும், ஒட்டகம் என்ற வார்த்தைக்குப் பின்னால் "உரிமையாளர்கள்' என்ற இணைப்புச் சொல்லும் போக்கப்பட்டுள்ளது. அதுபோன்றே மேற்கண்ட ஹதீஸில் முஹம்மது நபி என்ற வார்த்தைக்குப் பின்னால் ஓர் இணைப்புச் சொல் போக்கப்பட்டுள்ளது. இதைப் பரேலவிகளும் ஒப்புக் கொள்கின்றார்கள். அந்த இணைப்புச் சொல், முஹம்மது நபியின் அந்தஸ்து, மரியாதை, பதவி, பொருட்டு என்ற பொருளை அவர்கள் கொடுக்கிறார்கள். நாம் இந்த இடத்தில் முஹம்மது நபியின் துஆ என்ற பொருளைப் பயன்படுத்துகிறோம். இந்த ஹதீஸில் அந்தஸ்து, பதவி, பொருட்டு என்ற இணைப்புச் சொல்லை இங்கு சேர்ப்பதற்கு இந்த ஹதீஸிலோ, வேறு ஹதீஸ்களிலோ இவர்களுக்கு ஆதாரம் இல்லை. இந்த ஹதீஸின் முன்பின் வாசக அமைப்பும் இதற்கு இடம் தரவில்லை. ஆனால் துஆ என்ற இணைப்புச் சொல்லைச் சேர்க்கும் போது அழகாகப் பொருந்திப் போகின்றது. வேறு நூற்களில் இடம் பெறும் இதே ஹதீஸின் வாசகங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. ஒரு பேச்சுக்கு இவர்கள் வாதிடுவது போன்று ஹதீஸின் வெளிப்படையான வாசக அமைப்பைக் கொண்டு, "ஆளை வைத்து' என்று பொருள் கொண்டாலும் அந்த வாதம் மேலே நாம் காட்டிய அஹ்மத் ஹதீஸ் மூலம் உடைந்து போகின்றது. "யா அல்லாஹ் என் விஷயத்தில் உன்னுடைய நபியின் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் கேட்கும் துஆவையும் ஏற்பாயாக'' (அஹ்மத் 17280) என்ற வார்த்தைகள் மூலம் "ஆளைக் கொண்டு வஸீலா தேடுதல்' என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. இதையும் தாண்டி இந்த ஹதீஸ் அந்தப் பொருளைத் தான் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டாலும் இது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில், அவர்களுக்கு மட்டும் உரிய தனி உரிமையாகும். இதில் மற்ற யாருக்கும் அறவே பங்கு கிடையாது என்று தான் விளங்க வேண்டும்.

Article Copied From: www.onlinepj.com ,  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்