சிலையும் மகான்கள் கபுரும் ஒன்றா ?
“மக்கத்து காபிர்கள் விக்கிரகங்களை தெய்வங்கள் என்று கொண்டாடினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் நேசர்கள் என்ற அடிப்படையில் தானே கொண்டாடுகிறோம்” என்று சமாதி வழிபாட்டினர் கூறுவர் .
“மக்கத்து காபிர்கள் விக்கிரகங்களை தெய்வங்கள் என்று கொண்டாடினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் நேசர்கள் என்ற அடிப்படையில் தானே கொண்டாடுகிறோம்” என்று சமாதி வழிபாட்டினர் கூறுவர் .
திருக்குர்ஆனை ஆராயும் போது, மக்கத்துக் காபிர்கள், அந்த விக்ரகங்களை அது உணர்த்துகின்ற பாத்திரங்களைக் கடவுள்கள் என்று கருதவே இல்லை. இவர்கள் எப்படிக் கருதிக்கொண்டு, எப்படிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களோ அப்படித்தான் மக்கத்துக் காபிர்களும் கருதினார்கள். இதை ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக்கும் அல்லாஹ்வின் வசனங்களைக் காண்போம்.
(நபியே! நீர் அவர்களை நோக்கி) மேகத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து
அதனைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீர் அவர்களைக்
கேட்பீராயின் “அல்லாஹ் தான்” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்.
அதற்கு நீர் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! என்று கூறுவீராக! எனினும்
அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.
(அல்குர்ஆன் 29 :63)
இன்றைக்கு நம்மவர்கள் நினைப்பது போலவே மக்கத்துக் காபிர்களும், மழையை
இறக்குவது அல்லாஹ்தான்” என்று நம்பியிருந்ததை இந்த வசனம்
தெளிவாக்குகின்றது.
(நபியே! நீர் அவர்களை நோக்கி) வானங்களையும், பூமியையும் படைத்து
சூரியனையும், சந்திரனையும் (தன் திட்டப் பிரகாரமே நடக்கும்படி) அடக்கி
வைத்தவன் யார்?” என்று நீர் அவர்களைக் கேட்பீராயின் “அல்லாஹ்தான்” என்று
அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் (நம்மைவிட்டு) எங்கும்
வெருண்டோடுகின்றனர்? (அல்குர்ஆன் 29 : 61)
வானங்களையும், பூமியையம் படைத்தவனும், சூரிய சந்திரனைத் தன்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனும், அல்லாஹ் தான் என்று மக்கத்துக்
காபிர்கள் (நம்மைப் போலவே) நம்பினார்கள் என்பதை இந்த வசனமும்
தெளிவாக்குகின்றது. இதே கருத்தை 31:25 வசனமும் தெரிவிக்கின்றது.
“வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவன் யார்?” என்று நீர் அவர்களிடம்
கேட்கும் பட்சத்தில் (யாவையும்) மிகைத்தோனும் ஞானமுடையோனும் (ஆகிய
அல்லாஹ்) தான் அவைகளை சிருஷ்டித்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்)
கூறுவார்கள் இதனை அறிந்திருந்தும் அவனுக்கு மாறு செய்கின்றனர். (அல்குர்ஆன் 43 : 9)
இந்தத் திருவசனத்தில் வானங்கள் பூமியை அல்லாஹ்தான் சிருஷ்டித்தான் என்று
கூறுவதோடு “யாவையும் மிகைத்தோன், ஞானமுடையவன்” என்று இறைபண்புகளையும்
கூட அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்று தெளிவாக்கப்படுகின்றது.
நம்மவர்கள் அல்லாஹ்வை அஸீஸ், அலீம் என்று கூறுவது போல் அவர்களும் அதே
வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வைத்தான் அவர்கள் கடவுளாகக்
கருதி இருந்தனர் என்பதற்கு இவை மறுக்க இயலாத சான்றுகளாகும்.
(நபியே!) அவர்களைச் சிருஷ்டித்தவன் யார் என்று நீர் அவர்களிடம்
கேட்பீராயின், “அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள், அவ்வாறாயின்
(அவனை விட்டு) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்?
(அல்குர்ஆன் 43 : 87)
இந்தத் திருவசனத்தில் “மக்கத்துக் காபிர்கள், தங்கைளப் படைத்தவனும்
அல்லாஹ் தான் என்று கூறுவார்கள்” என்று அல்லாஹ் தெளிவாகவே சொல்கிறான்.
(நபியே!) நீர் (அவர்களை நோக்கி) வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும்
உங்களுக்கு ஆகாரமளிப்பவன் யார்? (உங்களுடைய) கேள்விக்கும், பார்வைக்கும்
உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளதையும்,
உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? என்று
கேட்பீராக! அதற்கவர்கள் – அல்லாஹ தான்” என்று கூறுவார்கள். அவ்வாறாயின்
(அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா? என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 10 :
31)
(ஆகவே நபியே! நீர் அவர்களை நோக்கி) “பூமியும், அதிலுள்ளவைகளும்
யாருக்குடையன? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்! எனக் கேளும்.
அதற்கவர்கள் “அல்லாஹ்வுக்குடையனவே” என்று கூறுவார்கள். (அவ்வாறாயின்,
இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெற மாட்டீர்களா? என்று கூறும். (அல்குர்ஆன் 23 : 85, 86)
அன்றி ஏழுவானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார் எனக் கேட்பீராக! அதற்கவர்கள் (யாவும்) “அல்லாஹ்வுக்குடையனவே” என்று கூறுவார்கள். (அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு பயப்பட வேண்டாமா? என்று கூறும்! (அல்குர்ஆன் 23 : 86, 87)
(அன்றி) சகல பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது? யாராலும் இரட்சிக்கப்படாத (ஆனால் எல்லோரையும்) இரட்சிக்கக் கூடியவன் யார்? நீங்கள் அறிந்திருந்தால் (கூறுங்கள்) எனக்கேளும், அதற்கவர்கள் (கசல அதிகாரமும்) “அல்லாஹ்வுக்குடையது தான்” என்று கூறுவார்கள். (அவ்வாறாயின்) நீங்கள் உங்கள் அறிவை எங்கு இழந்து விட்டீர்கள்? என்று கூறும். (அல்குர்ஆன் 23 : 88, 89)
மேற்கூறிய திருவசனங்களில் மக்கத்துக் காபிர்களின் மனோ நிலையை ,
அவர்களின் கொள்கையை அல்லாஹ் தெளிவாக நமக்கு எடுத்துச் சொல்கிறான்.
அவர்கள் அல்லாஹ் தான் அனைத்து அதிகாரமும் படைத்தவன் என்பதை திட்டவட்டமாக
நம்பி இருந்தனர் என்பதை எவரும் விளங்கும் விதமாக அல்லாஹ் கூறுகிறான்.
இப்படியெல்லாம் அல்லாஹ்வை நம்பியவர்கள் ஏன் காபிரானார்கள்? இப்படி
நம்பிக்கை கொண்ட அவர்கள் ஒரு சில வணக்க வழிபாடுகளை தங்கள்
கற்சிலைகளுக்கும், அச்சிலைகளின் மூலம் எண்ணங்களால் உருவகப்படுத்தப்படுகின்ற
பாத்திரங்களுக்கும் செய்து வந்தார்கள். நம்மவர்களில் சிலர் இன்று நேர்ச்சை
போன்ற வணக்கங்களை பெரியார்களுக்குச் செலுத்தி வருவதைப் போல் அவர்களும்
செலுத்தி வந்தனர். கடவுள்கள் என்ற நம்பிக்கையில் அல்ல. மாறாக கடவுள் என்று
அவர்கள் பூரணமாக நம்பிய அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்ற
நம்பிக்கையில்.
தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை
வணங்குவதுடன், “இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்யக்
கூடியவை” என்றும் கூறுகின்றனர்.
(நபியே!) நீர் அவர்களை நோக்கி) வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் வுக்கு
தெரியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவித்துக் கொடுக்கின்றீர்களா? அவன் மிக
பரிசுத்தமானவன். அவர்கள் இணை வைப்பவைகளை விட்டும் மிக்க உயர்ந்தவன் என்று
கூறும். (அல்குர்ஆன் 10 : 18)
இந்தத் திருவசனத்தில் சில வணக்க வழிபாடுகளை காபிர்கள், தங்கள்
பெரியார்களுக்கு செய்து வந்த போது அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்கு
இவர்கள் பரிந்துரை செய்வார்கள்” என்று பதில் சொல்வார்கள் என்ற இடத்தை
வாசகர்கள் கவனியுங்கள்! அவர்கள் எங்களை அல்லாஹ்விடம் அவர்கள் சமீபமாக்கி
வைப்பார்கள்” என்பதற்காகவேயன்றி நாங்கள் வணங்கவில்லை, (என்று கூறுகின்றனர்) (அல்குர்ஆன் 39 : 3)
மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை கடவுள்களாகக்
கருதி-இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்குவார்கள்
என்பதற்காகவே வணங்கியுள்ளனர்” என்பதை மேற்கூறிய குர்ஆன் வசனம்
விளக்குகின்றது. மேற்கண்ட இறை வசனங்களிலிருந்து பெறப்படுகின்ற மக்கத்துக்
காபிர்களின் கொள்கை இது தான்.
“பெரியார்களை நேசிக்கிறோம்! அவர்களுக்கு சில வணக்கங்களையும்
செய்கிறோம்! அதுவும் அவர்கள் கடவுள் என்பதற்காக அல்ல. கடவுள்களிடம்
எங்களுக்குப் பரிந்துரை செய்து, கடவுள்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தித்
தருவதற்காக ! எல்லா ஆற்றலும் பொருந்தியவன் அல்லாஹ் ஒருவன் தான்! இதுதான்
அவர்களின் கொள்கையின் சாரம்.
இந்தக் கொள்கைக்கும் இக்காலத்தில் சமாதி வழிபாடு செய்யும் கொள்கைக்கும் என்ன வேறுபாடு?
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்