"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ஒரு நல்லடியாருக்கு பல கபுருகள்?

இன்று உள்ள கவலையான நிலையை எடுத்துக் கொள்ளுங்கள், எகிப்தில், நல்லடியார்களின் கப்றுகள் எனும் போர்வையில் பிரதான நகரங்கள், கிராமங்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் ஆறாயிரம் தர்ஹாக்கள் இருக்கின்றன. அங்கு மௌலிதுகளுக்கென்றும், முரீதீன்களுக்கென்றும், முஹிப்பீன்களுக்கென்றும் மையங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன.
எவராவது ஒரு வலியின் பெயரில் மௌலிது விழாக்கள் இல்லாத எந்த ஒரு நாளையும் வருடத்தில் தேடுவது என்பது சிரமமான காரியமாக இருக்கும். அங்கு ஏதாவது ஒரு கிராமத்தில் தர்ஹாக்கள் இல்லையானால் பரக்கத் அற்ற ஊராக அதை நினைப்பர். தர்ஹாக்களை பெரியது சிறியது என்று இரு வகையாக அங்கு வகுத்திருக்கின்றார்கள். பெரிய தர்ஹாக்களில் உயர்ந்த கட்டிடங்களும் அதன் விசாலமும் அதில் அடக்கப்பட்டிருப்பவரின் பிரபல்யத்திற்கேற்ப தரிசிப்பவர்களும் அதிகமாக இருப்பார்கள்.


மிஸ்ரில் (எகிப்தில்) உள்ள பிரபல்யமான சில தர்ஹாக்கள்: ஹுஸைன் (ரலி) அவர்களின் கப்று, ஸைனப் (ரலி) அவர்களின் கப்று, ஆயிஷா (ரலி) அவர்களின் கப்று, ஸகீனா (ரலி) அவர்களின் தர்ஹா, நபீஸா (ரலி) அவர்களின் தர்ஹா, இமாம் ஷாபியின் (ரஹ்) பெயரில் தர்ஹா, லைஸ் இப்னு ஸஃதின் தர்ஹா, இது தவிற தன்தா என்று ஊரில் ஃபதவியின் தர்ஹா, தஸ்ஸுக் எனும் ஊரில் தஸ்ஸுக் என்பவரின் தர்ஹா, ஹுமைஸரா எனும் ஊரில் ஷாதுலி என்பவரின் தர்ஹா, ஹுஸைனுடையது என்று அவர்கள் நம்பக்கூடிய கப்று அதற்கு மக்கள் ஹஜ்ஜும் செய்வார்கள். நேர்ச்சை மற்றும் வழிபாடுகளைக் கொண்டு அதன் நெருக்கத்தைத் தேடுவர்கள். அதை சுற்றி வலம் வருவர் நோய்களில் இருந்து ஆரோக்கியம் தேடுவர், துன்பமான நேரங்களில் பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டிக் கொள்வர்கள்.

ஸைய்யிதுல் பதவியுடைய தர்காவில் வருடத்தில் கூடக்கூடிய நாட்கள் இருக்கின்றன அதை ஹஜ்ஜுல் அக்பர் - பெரிய ஹஜ் என்று அதற்கொப்பாக்கி அழைப்பர், உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஷியாக்கள், ஸுன்னிகள் என்ற பேதமின்றி கூட்டம் அங்கு அலை மோதகூடிய துர்பாக்கிய நிலையை காணலாம்.


ஜலாலுத்தீன் ரூமி என்பவருடைய தர்ஹா... அந்த கப்ரின் மீது எழுதப்பட்டிருக்கும் வாசகங்களாவன: 'இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம் ஆகிய முன்று மதத்தவர்களும் வந்து தரிசித்துச் செல்லும் மகான்', இச்சிலையை குதுப்மார்களில் தலை சிறந்தவர்களுடையது என அவர்கள் போற்றுகின்றனர்.


சிரியாவில்: சிரியாவின் தலைநகரான டமஸ்கஸிலுள்ள நம்பத்தகுந்த ஆய்வாளர்களின் கணிப்பீட்டின் படி அங்கு 194 தர்ஹாக்கள் இருப்பதாகவும், அதில் 44 பிரசித்தி பெற்றவைகள் என்றும் குறிப்பிடுகின்றனர். அதில் இருபத்தேழு கப்றுகளை ஸஹாபாக்களுடையது எனச் சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். திமஷ்கில் ஸகரிய்யா (அலை) மகன் யஹ்யா (அலை) பெயரில் ஒரு தர்ஹாவை எழுப்பி இருக்கின்றனர், இது அங்கு ஆட்சி செய்த உமையாக்களின் காலத்தில் கட்டப்பட்டதாகும். இம்மஸ்ஜிதுக்கு பக்கத்தில் ஸலாஹுத்தீன், மற்றும் இமாதுத்தீன் ஸன்கி பெயரிலும் தர்ஹாக்கள் உள்ளன. இவை தவிர இன்னும் அங்கு பல தர்ஹாக்கள் இருக்கின்றன. அவைகளைத் தரிசிக்க வருவோர், அவைகளிடம் உதவி தேடுவர். இன்னும் ஸிரியாவில் 'புஸுஸுல் ஹிகம'; எனும் நூலை எழுதிய வழிகேடன் முஹ்யத்தீன் பின் அரபிக்கும் ஒரு தர்ஹா உள்ளது.


துருக்கியில்: 481 க்கு மேற்பட்ட ஜும்ஆ மஸ்ஜித்கள் தர்ஹாக்களோடு அமைந்திருக்கின்றன. அதில் பிரபலமான ஒரு மஸ்ஜிதில் அபூ அய்யூபுல் அன்ஸாரி என்பவரின் பெயரில் ஒரு தர்ஹாவை அமைத்திருக்கிறார்கள் அது குஸ்தன்தீனியாவில் உள்ளது.


இந்தியாவில்: 150க்கும் மேற்பட்ட பிரபல்யமான தர்ஹாக்கள் இருக்கின்றன ஆயிரக்கனக்கான மக்கள் அங்கே கூடிய வண்ணமே இருப்பர். இன்னும் அங்கு ஷைகு 'பஹாஉத்தீன் ஸகரீயா முல்தானி' என்பவருடைய தர்ஹா மிக பிரபல்யமாக இருக்கிறது. அதனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் அதற்கு நேர்ச்சை, ஸுஜுத் போன்ற அனைத்து அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய வணக்கங்களையும் இந்த கப்ருக்கு செய்கின்றனர்.


ஈராகில்: இதன் தலைநகரான பக்தாதில் 150க்கும் மேற்பட்ட ஜும்ஆ மஸ்ஜிதுகள் இருக்கின்றன அவைகளில் தர்ஹாக்கள் இன்றி இருப்பவைகள் மிகக்குறைவானதே. 'மூஸில'; எனும் ஊரில் எழுபதத்தி ஆறுக்கும் மேற்பட்ட தர்ஹாக்கள் இருக்கின்றன இவை அனைத்தும் பெரும் பெரும் மஸ்ஜிதுகளுக்குள் அமைந்திருக்கின்றன என்பது வேதனைக்குரியதாகும். இவைகள் சிறிய மஸ்ஜித்களில், மற்றும் தனியாக உள்ள தர்ஹாக்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட கணக்காகும்.


பாகிஸ்தானில்: ஷைக் அலீ அல்ஹஜுரிய் என்பவரின் தர்ஹா லாஹுரில் அமைந்திருக்கிறது. அது அவர்களிடம் அதிகமான புனிதத்துக்குரியதாகக் கருதப்படுகிறது.


இதில் ஆச்சரியம் யாதெனில், மனிதர்கள் பக்திப் பரவசத்துடன் அருள்தேடி வழிபடும் இந்த தர்ஹாக்களில் அதிகமானவை போலியானதாகும் எந்த ஒரு உண்மையான வரலாற்றுப் பின்னனியும் இன்றி வேண்டுமென்றே சில புல்லுருவிகளால் வருமானம் தேடும் சுயநல நோக்கோடு உருவாக்கப்பட்டவைகளாகும்.


ஹுஸைன் (ரலி) அவர்களுக்கு கெய்ரோவில் ஒரு கப்று இருக்கிறது அதற்கு பல வழிபாடுகளைச் செய்வார்கள். அதனிடம் பிரார்த்தித்தல், அதற்கு அறுத்துப் பலியிடுதல், அதை வலம் வருதல் போன்ற வழிபாடுகளைச் செய்வார்கள். அதேபோல் அஸ்கலான் எனும் இடத்திலும் ஹுஸைன் (ரலி) க்கு மற்றுமொறு கப்று இருக்கிறது.


சிரியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஹலப் எனும் நகரத்தில்; ஹுஸைன் (ரலி) பெயரில் ஒரு தர்ஹா இருக்கிறது. இது அல்லாமல் நான்கு இடங்களில் ஹுஸைன் (ரலி) பெயரில் தர்ஹாக்கள் இருக்கின்றன அங்கே அவர்களின் தலை அடக்கப்பட்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர். டமஸ்கஸில், ஹனானாவில் (நஜ்புக்கும் கூபாவுக்கும் மத்தியில் அமைந்துள்ள ஒரு இடம்), மதீனாவில் அவரது தாயார் பாதிமா (ரலி) அவர்களின் கப்ருக்கு அருகில், நஜ்பில் அவரது தந்தையின் கப்ருக்கு அன்மையில். கர்பலாவில் ஹுஸைன் அவர்களின் உடல் அடக்கப்பட்டதாகவும் அங்கே அவர்களது துண்டிக்கப்பட்ட தலையும் பின்னர் அதே இடத்தில் அடக்கப்பட்டதாகவும் இவர்கள் நம்புகின்றனர்.


அலி (ரலி) மகள் ஜைனப் (ரலி) அவர்கள் மதீனாவில் மரணித்து அங்குள்ள 'பகீ-பொதுமையவாடியில்' நல்லடக்கம் செய்யப்பட்டார்கள், ஷியாக்கள் டமஸ்கஸிலும் அவர்களுக்கு ஒரு தர்ஹாவை நிறுவியிருக்கிறார்கள்.


கைரோவில் கூட ஜைனப் (ரலி) பெயரில் பல தர்ஹாக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக அமைந்திருக்கும் பல தர்ஹாக்கள் பற்றி எந்த வரலாற்றுக்குறிப்பும் இல்லை, ஜைனப் (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்த காலத்தில் மிஸ்ருக்கு வருகை தந்ததாகவோ, அல்லது அவர்களின் ஜனாஸாக்கூட மிஸ்ருக்கு கொண்டுவந்ததாக எந்தவிதமான நம்பத்தகுந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை என்று இருக்கும்போது அங்கு அவர்களுக்கு எவ்வாறு தர்ஹா இருக்க முடியும்?


எகிப்தில் உள்ள இஸ்கந்தர் நகரவாசிகள் அபூ தர்தா (ரலி) அங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக உறுதியாக நம்புகின்றனர். எனினும் மார்க்க அறிஞர்கள், அவர் அங்கு அடக்கம் செய்யப்படவில்லை எனச் சொல்கின்றனர். நபிகளாரின் மகள் ருகையா (ரலி)யின் பெயரில் கைரோவில் ஒரு தர்ஹா இருக்கிறது. 'பாதிமிக்களுடைய' ஆட்சியாளர் ஆமிர் பின் அஹ்காமில்லாஹ் என்பவரின் மனைவி ஏற்படுத்திய ஒரு தர்ஹா, அதே போன்று ஹுஸைன் (ரலி) மகள் ஸகீனா பெயரிலும் ஒரு தர்ஹா அங்குள்ளது.


இன்னும் பிரபல்யமான தர்ஹாக்களில் ஒன்றுதான் இராக்கின் நஜ்பில் அமைந்துள்ள அலி (ரலி)அவர்களுடைய தர்ஹா. இது போலியான ஒன்றாகும், ஏனெனில் அவர் அடக்கம் செய்யப்பட்டது கூபாவில் அமைந்துள்ள அவர்களது அரச மாளிகையிலாகும் .
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) யின் பெயரில் ஒரு கப்ரை பஸராவில் அமைத்து வைத்துள்ளார்கள், ஆனால் அவர்கள் மதீனாவில் மரணித்து 'பகீ' பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.


ஹல்ப் எனும் இடத்தில் ஜாபிர் (ரலி) அவர்களுக்கு ஒரு கப்ரை ஏற்படுத்தியிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் மரணித்ததோ மதீனாவில்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புதல்விகளான உம்மு குல்ஸும், ருகையா இவர்கள் இருவருக்கும் ஷாமில் கப்ருகளை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் உஸ்மான் (ரலி) யின் மனைவிமார்கள். இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்து விட்டார்கள், பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்;.


மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஒருமித்து கூறிய இன்னும் போலியான ஒரு தர்ஹாதான் டமஸ்கஸில் ஒரு பெரும் மஸ்ஜிதுல் அமைந்துள்ள ஹுத் நபியின் கப்ரு. அவர்கள் ஷாமுக்குச் செல்லவே இல்லை எப்படி அங்கு அவருக்கு கப்ரு உருவாகும்? ஹல்ரமவ்த்திலும் அவருக்கு ஒரு கப்று இருக்கிறது. ஹல்ரமவ்த்தில் இருக்கும் மற்றொரு கப்ரை மக்கள் ஸாலிஹ் (அலை) யுடையது என நம்பி வருகின்றனர், ஆனால் அவர்கள் மரணித்தது ஹிஜாஸில் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பலஸ்தீனில் யாபா எனும் ஊரிலும் அவர் பெயரில் ஒரு தர்ஹா இருக்கிறது. அதே போன்று அய்யூப் (அலை) பெயரிலும் ஒரு தர்ஹா பலஸ்தீனத்தில் இருக்கிறது.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

-------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்